குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-11
குன்றக்குடி அடிகளார்
குன்றக்குடி அடிகளார்
நூல்வரிசை
15 தொகுதிகள்
6000 பக்கங்கள்
தொகுதி - 11
சமயம்
முதன்மைப் பதிப்பாசிரியர்
தவத்திரு பொன்னம்பல அடிகளார்
விற்பனை உரிமை :
மணிவாசகர் பதிப்பகம்
31, சிங்கர் தெரு, பாரிமுனை,
சென்னை-600108.
முதல் பதிப்பு : செப்டம்பர், 2001
திருவள்ளுவர் ஆண்டு : 2032
உரிமை : திருவண்ணாமலை ஆதீனம்
மணிவாசகர் வெளியீட்டு எண்: 894
விலை : ரூ. 100-00
பதிப்பாசிரியர் குழு
தமிழாகரர் தெ. முருகசாமி
நா. சுப்பிரமணியம்
குன்றக்குடி பெரியபெருமாள்
க. கதிரேசன்
மரு. பரமகுரு
செயலர் :
பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்
கிடைக்குமிடம் :
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001.
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.
110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001.
28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002.
தொலைபேசி :
சிதம்பரம் : 30069
சென்னை : 5361039
மதுரை : 622853
கோயமுத்துார் : 397155
திருச்சி : 706450
* * *
அச்சிட்டோர் : மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை-1.
தொலைபேசி: 5954528
தமிழ் மாமுனிவர்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
1925 - 1995
தமிழ்மாமுனிவர் அருள்நெறித் தந்தை
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வாழ்க்கைக் குறிப்புகள்
ஆண்டு நிகழ்வுகள்
1925 • தோற்றம்
• பூர்வாசிரமம் : தந்தையார் : திரு. சீனிவாசம் பிள்ளை
தாயார் : திருமதி. சொர்ணத்தாச்சி
• பிள்ளைத் திருநாமம் : அரங்கநாதன்
• தோற்றம் பெற்ற ஊர் : தஞ்சை மாவட்டம், திருவாளப்புத்தூர் அருகேயுள்ள நடுத்திட்டுக் கிராமம்.
1931- • சிதம்பரம் அண்ணாமலை நகரில் வாசம்.
1936 • சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் நாட்டார், சுவாமி விபுலானந்தர் ஆகியோர் தொடர்பு.
1937- • தமையனார் திரு. கோபாலகிருஷ்ன பிள்ளை வீட்டில்
1942 • கடியாபட்டியில் வாழ்தல்.
• பள்ளியிறுதித் தேர்வு எழுதுதல்.
• 1942 விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு.
• வினோபா பாவே படிப்பகம் தொடங்கி நடத்துதல்.
1945 • தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம் கயிலைக் குருமணி அவர்களிடம் கந்தசாமித் தம்பிரான் என தீட்சாநாமத்துடன் தம்பிரானாதல்.
• தருமபுரம் தமிழ்க் கல்லூரியில் பயிலுதல்.
1947-
1948 • சீர்காழிக் கட்டளைத் தம்பிரான் - திருஞான சம்பந்தர் திருமடம் தூய்மைப் பணி; திருமுறை வகுப்பு, விழா நடத்துதல்.
1949 • குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் இளவரசு பட்டம் ஏற்பு. திருநாமம் ஶ்ரீலஶ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
1951 • காரைக்குடிக் கம்பன் விழாவில் 'புதரிடைமலர்' என்ற தலைப்பில், அறிஞர்களின் நெஞ்சம் கவர்ந்த சொற்பொழிவு.
1952 • குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆவது குருமகா சந்நிதான்மாக எழுந்தருளல்.
• அருள்நெறித் திருக்கூட்டம் தோற்றம்.
• ‘மணிமொழி’ என்னும் பெயரில் இயக்கப் பத்திரிகை வெளியிடல்.
1953 • ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள பிரான்மலைத் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின்போது (சங்க கால வள்ளல் பாரி வாழ்ந்திருந்த மலையில்) வள்ளல் பாரி விழாத் தொடங்குதல்.
• பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வருதலைத் தவிர்த்தல்.
• இலங்கைப் பயணம் - இரண்டு வாரம் சுற்றுப் பயணம்.
1954 • இராசாசி தலைமையில் தேவகோட்டையில் அருள்நெறித் திருக்கூட்ட மாநாடு.
• திராவிடர் கழகத் தலைவர் பெரியார் சந்திப்பு.
• தாய்லாந்து, இந்தோசீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் (3 திங்கள்)
1955 • அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்குதல்.
• ‘தமிழ்நாடு’ நாளிதழ் தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரை அறிமுகப்படுத்துதல்.
1956 • அறிஞர் அண்ணா குன்றக்குடி திருமடத்திற்கு வருகை
• ஆச்சார்ய வினோபா பாவே திருமடத்திற்கு வருகை.
1958 • குன்றக்குடியில் உயர்நிலைப்பள்ளி தொடங்குதல்.
1959 • ஆ தெக்கூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்துதல்.
பாரதப் பிரதமர் நேரு மாநாட்டிற்கு வருகை.
1960 • மத்திய அரசு சேமநலக் குழு உறுப்பினராதல்.
1962 • சீனப்போரின்போது தங்க உருத்திராட்ச மாலையைத் திருவொற்றியூர்க் கூட்டத்தில் ஏலம் விட்டு ரூ. 4000 தருதல்
• மதுரை அருளமிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருமுறைத் தமிழ் அருச்சனை தொடங்குதல்.
1965 • இந்தி எதிர்ப்புப் போராட்டம்; அரசு வழக்கு தொடர்தல்.
1966 • தமிழ்நாடு தெய்வீகப் பேரவைத் தோற்றம்.
1967 • திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கம் தோற்றம்.
• திருக்கோயில் கருவறைக்குள் சீலமுடைய அனைவரும் சாதி வேறுபாடின்றி திருமுறை நெறிப்படி - போதொடு நீர் சுமந்தேத்தி வழிபாடு செய்வதெனத் திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றுதல்.
1968 • இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு - திருக்குறள் உரைக்கோவை நிகழ்ச்சி தொடக்கவுரை நிகழ்த்தல்
• - திருக்குறள் இந்திய நாட்டின் தேசிய நூலாக வேண்டுமென்று இம்மாநாட்டில் வலியுறுத்தல்.
• இலங்கைப் பயணம். இரண்டு வாரங்கள், இலங்கை யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருக்கோயில் நுழைவுக்காக உண்ணா நோன்பிருத்தல்.
• கீழ வெண்மணித் தீவைப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல்; புத்தாடை வழங்குதல்.
1969 • பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி ஏற்பு;
• கலைஞர் மு. கருணாநிதி பாரி விழாவிற்கு வருகை
• கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் விருப்பத்தின் வழி தமிழ்நாடு சட்டமன்ற மேலவை பொறுப்பேற்றல்
• தமிழ்நாடு தெய்விகப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெறல்.
1970 • சட்டமன்ற மேலவையில் இந்து அறநிலையத் திருத்த மசோதா - சாதி வேறுபாடின்றி அனைவரையும் அர்ச்சகராக நியமனம் செய்தல் பற்றிப் பேசுதல்.
1971 • தமிழ்நாடு சமாதானக் குழுத் தலைவராதல்.
• சோவியத் பயணம்; 22 நாள் சுற்றுப் பயணம்.
1972 • பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி, திருவள்ளுவர் கலைக் கல்லூரியாக உருவாதல்.
• சென்னை, மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணிக்குழுத் தலைவராக நியமனம். வள்ளுவர் கோட்டம் திருப்பணித் தலைவராக நியமனம்.
• குன்றக்குடித் தருமைக் கயிலைக் குருமணி உயர்நிலைப் பள்ளிக்குப் புதிய இடத்தில் கட்டடம் கட்டித் திறத்தல்.
1973 • திருக்குறள் பேரவைத் தோற்றம்.
• திருச்சியில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை இரண்டாவது மாநில மாநாடு நடத்துதல்.
• “கோயிலைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய கோயிலும்” என்ற முழக்கம் நாட்டளவில் வைக்கப்பெற்றது.
• குன்றக்குடி கிராமத்தைத் தன்னிறைவுக் கிராமமாக ஆக்கும் திட்டம் உருவானது.
1975 • நாகர்கோவிலில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை மூன்றாவது மாநில மாநாடு நடைபெறல்.
• சென்னைப் பல்கலைக் கழகத்தில் சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு.
• மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஏ.பி.சி. வீரபாகு சைவசித்தாந்த அறக்கட்டளைச் சொற்பொழிவு.
• அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சொர்னம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு.
• இராமநாதபுரம் இனக் கலவரம் - அமைதிப்பணி.
1982 • குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரம் - அமைதிப் பணியாற்றல்.
• மண்டைக்காடு அமைதிப்பணி பற்றிச் சட்ட மன்றத்தில் முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். பாராட்டுதல்.
• திருவருட்பேரவை தொடங்குதல்.
• மலேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான், செஞ்சீனா முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம்.
• புளியங்குடி இனக்கலவரம் - அமைதிப்பணி.
1984 • பாரதத் தலைமை அமைச்சர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் குன்றக்குடிக் கிராமத் திட்டக்குழுவின் பணிகளைப் பாராட்டல்.
1985 • நடுவணரசு திட்ட ஆணைக்குழுப் பிரதிநிதிகள் குன்றக்குடி வருகை, கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல்.
• பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் வளர்ச்சிப் பணிக்குத் திட்டக்குழு அமைத்தல்.
• மணிவிழா
1986 • தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது பெறுதல்
• இந்திய அரசு திட்டக்குழு குன்றக்குடித் திட்டப்பணியைப் பாராட்டி “Kundrakudi Pattern” என்று அறிவித்தது.
1989 • இவர் எழுதிய ‘ஆலயங்கள் சமுதாய மையங்கள்’ என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது.
• அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் (D.Litt) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
1991 • இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு, தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது.
• இலண்டன், அமெரிக்கா சுற்றுப்பயணம்.
• அரபு நாடுகள் பயணம்.
1993 • மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் விருது வழங்கிச் சிறப்பித்தது.
1995 • இறைநிலையடைதல்.
அடிகளாரின் சமயப் பணிகள்
பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்
நிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம்
தமிழ்மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழ்கூறு நல்லுலகில் சமய மறுமலர்ச்சிக்கு வழிகண்டவர். அடிகளார் பூர்வாசிரமத்தில் செட்டிநாட்டில் எங்கள் ஊராகிய இராமச்சந்திரபுரத்தில் உயர்நிலைக் கல்வி பயின்றார்கள். எங்கள் தந்தையார் குங்கிலியம் பழ. சண்முகனார் அவர்களும், அடிகளாரின் அண்ணன் அவர்களும் விநோபா பாவே வாசகசாலையைத் தொடங்கினர். அடிநாள் தொட்டு அடிகளாரை நான் நன்கறிவேன். அடிகளார் திருவண்ணாமலை ஆதீனத்தில் பொறுப்பேற்ற பின்னர் சிறந்த சொற்பொழிவாளராக விளங்கினார்கள். முதன்முதலில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் அடிகளார் அவர்களும் நாங்கள் நடத்திய தமிழர் திருநாள் திருக்குறள் விழாவில் ஒரே மேடையில் பேசினர். அப்பொழுது ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் சந்திக்கின்றன என்ற செய்தியை வியப்புடன் நாளிதழ்கள் வெளியிட்டன.
50, 60களில் அடிகளார் தமிழ்மேடைக்குத் தம் பேச்சால் புதிய வலிமை சேர்த்தார்கள். தமிழகம் முழுவதும் அடிக்கடிபயணம் செய்யும் நான் அடிகளாரின் நூற்றுக்கு மேற்பட்ட பொழிவுகளைச் செவிமடுக்கும் நல்வாய்ப்பைப் பெற்றேன். அடிகளார்நூல் பலவற்றைப்படிக்கும் பேறும் பெற்றேன். அப்பொழுதெல்லாம் அடிகளார் சிந்தனைகள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்துப் பார்க்க வேண்டும் என்ற வேணவா என்னுள்ளத்தில் முகிழ்த்தது. அது இன்று கைகூடுகிறது.
தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழ்நாடு செய்த தவப்பயனால் 1925இல் தோன்றி 70 ஆண்டு காலம் தமிழகத்திற்குப் பல்வேறு பணிகள் வாயிலாகக் கடமை ஆற்றிய நாட்டுத் துறவியாவார்.
தவத்திரு அடிகளாரைப் புரட்சித்துறவி என்றும், மிகச் சிறந்த சொற்பொழிவாளர் என்றும் நாடு கருதும்.
அடிகளார் எழுத்துக்கள் அனைத்தையும் நூல்வரிசையாகத் தொகுக்கும் போது ஒவ்வொரு தொகுதியிலும் 400 பக்கங்களுக்குக் குறையாமல் 15 தொகுதிகளாக மொத்தம் சற்றொப்ப 6000 பக்கங்கள் அளவில் விரிந்தன. தம் 50 ஆண்டுப் பொது வாழ்வில் அடிகளார் எழுதிய 60 நூல்களையும் பதிப்பாசிரியர் குழு 5 தலைப்புக்களில் வகைப்படுத்தியது. நூற்றொகுதி அனைத்தையும் ஒருசேர வைத்து நோக்கும்போது அடிகளார் மிகச்சிறந்த நூலாசிரியராகச் சிறப்பதை நாம் உணர்கிறோம்.
1999 டிசம்பர் திங்களில் முதல் தொகுதி முகிழ்த்தது. 2001 நவம்பரில் தொகுதிகளின் அச்சுப் பணி முடிந்தது. திருக்குறள் பற்றி மட்டும் அடிகளார் கட்டுரைகள் 4 தொகுதிகளாகச் சற்றொப்ப 1600 பக்க அளவில் விரிந்துள்ளது.
தருமபுரம் ஆதீனம், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகள் ஆகியோர் அளித்துள்ள அணிந்துரைகளில் அடிகளாரின் இறையுணர்வையும், பக்திவழி நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பையும், சைவத்திற்கும், தமிழுக்கும் அடிகள் ஆற்றிய அளவிடற்கரிய பணிகளையும் போற்றியுள்ளனர்.
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த திறனாய்வாளர்களான சிலம்பொலி செல்லப்பர். வா. செ. குழந்தைசாமி, தமிழண்ணல், வை. இரத்தினசபாபதி, ஒளவை நடராஜன், சிற்பி பாலசுப்பிரமணியன், ச. வே. சுப்பிரமணியம், கு. சுந்தரமூர்த்தி முதலியோர் அடிகளார் நூல்வரிசையை ஆராய்ந்து, தேர்ந்து, தெளிந்து அடிகளாரின் சிந்தனை வளத்தையும், சமூக உணர்வினையும், பல்துறை அறிவினையும், மனித நேயத்தையும், தமிழாற்றலையும், அழுத்தமாக எடுத்துக் கூறும் பெற்றியினையும் தங்கள் அணிந்துரைகளில் சான்றுகளுடன் விளக்கி உள்ளனர்.
பொதுவாக 15 தொகுதிகளிலும் அடிகளாரின் ஆளுமை வெளிப்பட்டாலும், மூல இழையாகச் செல்வது தமிழ்ச் சமூகத்திற்குரிய விழுமங்கள். உன்னதங்கள், உயர்வுகள். சிறப்புக்களே. பழந்தமிழ் இலக்கியமாகிய பத்துப்பாட்டு, எட்டுத் தொகையில் தொடங்கி பாரதி பாடல்வரை தமிழரின் தனி அடையாளங்களின் வேர்களை அவை இனங்காட்டுவன. அயல் வழக்கினைத் தமிழ்வழக்கு வென்ற திறத்தினை அடிகளார் அழுத்தம் திருத்தமாக ஆவணமாக்கி விடுவார்.
சமயக் கட்டுரைகள் பொதிந்துள்ள இத்தொகுதிகள் வாழ்முதலாகிய இறைவனைப் பற்றிய அடிகளாரின் சிந்தனைப் பதிவுகளைக் கொண்டன. இந்தப்புலம் அடிகளாரின் ஆன்மா விரும்பும் விருப்பமான நிலம், அவர்கள் நாளும் பயணம் செய்யும் ஞானபூமி. ஆதலால் சமயம்பற்றி அடிகள் கொண்ட அனைத்துக் கருத்துக்களின் கருவூலமாக இத்தொகுதிகள் திகழ்கின்றன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, கோயிலைத் தழுவிய குடிகளும், குடிகளைத் தழுவிய கோயிலும் என்னும் கொள்கை உருவாக்கம் அடிகளாரின் தனிக்கொடை.
தமிழ் இலக்கியம் சமயம் சார்ந்த இலக்கியம். சமணமும் தமிழும். பெளத்தமும் தமிழும் எனப் பகுத்தாலும் இலக்கிய நிலப்பரப்பில், பங்களிப்பில் சைவமும் தமிழும்தான் தனிச்சிறப்பு பெறுகிறது.
அடிகளார் சிவநெறியினைச் சிரத்திலும் சிந்தையிலும் வைத்துப் போற்றிக் கூறிய, எழுதிய கருத்துக்கள் சைவ சமயத்திற்குப் புத்துணர்வையும், புத்தொளியையும் நல்குவன. புரட்சித் துறவியாகிய அடிகளாரின் புதிய பார்வை திருமுறைகளை மறுமைக்கு மட்டுமின்றி இம்மைக்கும் வழிகாட்டும் என நிறுவுவன. மனிதனை மேம்படுத்தும் எண்ணங்களை, சீரிய செவ்வறங்களைக் கூறுவன திருமுறைகள்.
அடிகளார் அப்பரடிகளிடம் கொண்ட அன்பு அளவிடற்கரியது. நாவுக்கரசர் காட்டிய நல்லறங்களை நாளும் சொல்லி மகிழ்பவர். எட்டாந் திருமுறை ஆகிய திருவாசகத்தை எண்ணி எண்ணி எப்போதும் இறும்பூது எய்துபவர். சேக்கிழார் இயற்றிய 12ஆம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணத்தை நிகழ்கால சமூக வாழ்க்கையோடு இயைத்துக்காட்டி, சைவ சமயம் என்பது தமிழர் வாழ்க்கை நெறி என்பதை ஒல்லும் வகையெலாம் உணர்த்தியவர்.
கோயிற் பண்பாடு என்னும் கோட்பாட்டை விளக்குவதில் அடிகளார் முதல் வரிசையர். சைவ சமய, தோத்திர, சாத்திர சரித்திரக் கருத்துக்களில் ஆழங்கால் பட்டவர். பரந்துபட்ட தமிழ்நூற் பயிற்சியும் வாழ்வியல் அனுபவங்களும் இத் தொகுதிகளில் ஒளி வீசுகின்றன.
இறைவன், பிறவித்துன்பம், வினைக் கொள்கை,ஊழ் உண்மை, ஓதி உணர்தல், புலனடக்கம். மெய்ப்பொருளை உணர்தல், விண்ணும் மண்ணும், வீட்டுலகம் முதலியன பற்றி அடிகளார் கூறிச் செல்லும் கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனைகளின் வெளிப்பாடு.
அடிகளார் தெளிவுற அறிந்திடுதல், தெளிவுற மொழிந்திடுதல் என்ற இரு நிலையிலும் சிறப்பாக விளங்கியவர் என்பதனை இத்தொகுதிகள் பறைசாற்றுகின்றன. இலக்கியக் கட்டுரைகளாயினும் சரி. சமயக் கட்டுரைகளாயினும் சரி அடிகள் மனித குல மேம்பாடு ஒன்றிற்கே உயர்வளிப்பவர் என்பது விளங்கும்.
இந்நூல் வரிசையால் அடிகளாரிடம் தமிழ் முனிவர் திரு.வி.க.வின் சமுதாயப்பார்வையும், சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்களின் சமுதாய அரசியற் பார்வையும் இலங்கியதை அறியலாம். தமிழ் தேசியம் வேர்கொள்ள அடிகளார் ஆற்றிய பணி தமிழர் வரலாற்றில் பதிவுசெய்யப் பெற்று விட்டது.
அருள் நெறித் திருக்கூட்டம், தெய்வீகப் பேரவை, திருக்குறட் பேரவை, திருவருட்பேரவை முதலிய அமைப்புக்களைத் தோற்றுவித்து, தமிழ் இனம், நாடு முன்னேறப் பல்லாற்றானும் பணிசெய்தவர்.
உலகின் பெரும் பகுதியினைப் பலமுறை வலம் வந்தவராதலால் இவர் தம் எழுத்தும் பேச்சும் சமூக உணர்வுடன் சிறந்து விளங்கின. பயணத்திற்குப் பயணம் இவரது அனுபவ அறிவு செழுமை பெற்றதை இந்நூல் வரிசை பரிணாம முறைப்படி உணர்த்துகிறது. சமுதாய உய்வுக்கு அடிகள் உரைத்த பொன்மொழிகளின் படிமுறை வளர்ச்சியை. வாழ்வியல் அறங்கள் பற்றிய அடிகளாரின் நோக்கும் போக்கும் மாற்றம் பெற்ற திறத்தினை இவ்வரிசை நூல்கள் உயிரோவிய மாக்குகின்றன. தமிழகத் துறவிகள் வரலாற்றில் அடிகளாரைப்போல அனைத்துலகையும் வலம் வந்தவர் வேறு எவரும் இலர்.
பரிபாடலின் பக்திநெறி பற்றிப் பேசினாலும், பாரதியின் பக்திமைபற்றிப் பேசினாலும் பக்திநெறியில் அடிகளின் பார்வை புதியது. ‘பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம், பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்’ என்கிற கோட்பாட்டை. ‘நாமார்க்கும் குடி அல்லோம்’ என்னும் நாவுக்கரசரின் குரலோடு இணைத்து சுதந்திரக் குரலாக எடுத்துரைப்பார். விடுதலை வேள்விக்கு வித்திட்டவர் என வீறார்ந்த மரபை விளக்கிக் கூறுவார்.
கடவுட் பற்றும், கவிதைப் பற்றும், கட்சிசாரா நாட்டுப் பற்றும் அடிகளார் எழுத்துக்களில் எங்கும் பரக்கக் காணலாம்.
பாரதியாரை ப. ஜீவானந்தம் ஆரவாரமாக, உணர்ச்சி பொங்கச் சொல்லிக் கூத்தாடுவார். அடிகளாரோ ஆரவாரமின்றி ஆழ்ந்த அமைதியோடு அழகு தமிழில் ஆற்றொழுக்காக எடுத்துரைப்பார்.இவர் எழுத்து நடை திரு.வி.க.வைப் போல, பேச்சு நடை தழுவியது. சிறிய தொடர்கள் சிந்தனையைத் தூண்டுபவை.
ஒட்டுமொத்தமாக எழுத்துக்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்துப்பார்க்கிறபோது அடிகளாரின் அறிவாற்றலும், எழுத்தாற்றலும், தமிழாற்றலும் நம்மை வியப்படையச் செய்கின்றன. ஒரு நொடியும் வீணாக்காது தமிழினம் உய்ய அடிகள் ஆற்றிய அரும் பணிகளின் ஆழத்தையும், அகலத்தையும் விரிவையும் இந்நூல் வரிசைகள் விளக்குகின்றன. உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.
அணிந்துரை
பேராசிரியர் முனைவர் கு. சுந்தரமூர்த்தி,
அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம்,
தருமபுரம் - மயிலாடுதுறை.
பழமையும் பண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் உடைய சைவத் திருமடங்களுள், திருவண்ணாமலை ஆதீனமும் ஒன்றாகும். அத்திருமடத்தில் எழுந்தருளியிருந்து அருட் செங்கோல் ஓச்சி வந்த திருப்பெருந்திரு. குருமகா சந்நிதானம், தமிழ் மாமுனிவர், தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களாவர். 1949 முதல் 1995 வரையிலான 46 ஆண்டுகள் குருமூர்த்திகளாய் இருந்தருளியவர்கள்.
நாளும் இன்தமிழால் தமிழ்பரப்பியருளிய குருமூர்த்திகள், ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய பெருமை உடையவர்கள் ஆவர். அவ்வகையில் அமைந்த நூல்களை அன்பிற்குரிய பதிப்புச்செம்மல் திருமிகு. ச. மெய்யப்பன் அவர்கள். திருவண்ணாமலை ஆதீனத்தில் தற்பொழுது குருமூர்த்திகளாக எழுந்தருளியிருக்கும் அருள்மிகு அடிகளார் அவர்களின் திருவுளப்பாங்கின் வண்ணம், ஐவகையில் அந்நூல்களை அமைத்து வெளிப்படுத்த உளங்கொண்ட வகையில், சமயம் குறித்து இதுபொழுது வெளியிட்டுள்ளார்கள். இந்நன்முயற்சி பெரிதும் பாராட்டுதற்குரியதாகும். இவ்வகையில் தவத்திரு குருமூர்த்திகளும் பதிப்புச்செம்மல் அவர்களும் போற்றுதற்கும் பாராட்டுதற்கும் உரியவர்கள் ஆவர்.
திருக்குறள், இலக்கியம், சமயம், சமுதாயம், பொது என அமைத்துக்கொண்ட பாங்கில் திருக்குறள் பற்றிய குருமூர்த்திகளின் சிந்தனைகள் நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவை 1647 பக்கங்களைக் கொண்டவையாகும்.
அருட்தந்தையாக விளங்கிய திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். இவ்வாய்வின்வழி வழங்கியிருக்கும் - கருத்துக்கள் மிகப் பலவாம். அவை ஆழ்ந்து அகன்ற அரிய சிந்தனைக் கருவூலங்களாக அமைந்துள்ளன.
அவற்றுட் சில:
“மானுட வாழ்க்கை சிறப்புறப் பல நலங்கள் தேவை. அவற்றுள் சிறப்பானவை உடல் நலனும் ஆன்ம நலனுமாம். காற்று, தண்ணீர், உணவு, உழைப்பு. குடியிருப்பு மருந்து ஆகியவற்றால் உடல் நலம் சிறக்கும். கல்வி, கேள்வி, அறிவு, மணவாழ்க்கை, பிரார்த்தனை ஆகியவற்றால் - ஆன்ம நலம் சிறக்கும்.”
“தாய்மொழி, நாட்டுமொழி, உலகப்பொதுமொழி ஆகிய மும்மொழிகளையும் கற்றல் நலம்.”
“அழுக்காறு தோன்றுதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, சமுதாய அமைப்பு முறையில் உடையார், இல்லாதார் என்ற முறையில் வாழ்வியல் அமைந்திருப்பது. இரண்டு, உரிய வாய்ப்புக்கள் அனைவர்க்கும் உரிமையாக்கப்படாமல் சிலருக்கே உரிமையாக்கப்பட்டிருப்பது.”
“உண்டலில் வாய்க்கினிதென்று உண்ணாது உடற்கினிதாயவற்றையே உண்டல் வேண்டும்.”
“தமிழைக் கற்போர்; திருக்குறள், திருமுறைகள், சங்க இலக்கியங்கள் ஆகிய இவற்றை முழுமையாகவும் முறைமையாகவும் படித்தல் நன்று.”
“வேலை வாய்ப்புக்கள், இடஒதுக்கீடுகள், சாதிகளை மட்டும் அடிப்படையில் வைத்துக் கொண்டு அமைவது தக்கதன்று. குடும்ப வருவாய் அடிப்படையில் அமைதல் வேண்டும். அவையும் ஒரு கால எல்லைக்குட்பட்டிருத்தல் வேண்டும்.”
“திருக்குறள் குடியாட்சி முறை தழுவிய முடியாட்சியையே கூறுகிறது. இதனை,
“குடிதழிஇக் கோலோச்சம் மாநில மன்னன்
அடிதழிஇ நிற்கும் உலகு ”
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்”
என வரும் திருக்குறள்களால் அறியலாம்.”
“மக்கள் வாழ்வுக்கும் அரசுக்கும் பொருளே அடிப்படை. திருக்குறள் காட்டும் பொருளியல் நுட்பமானது. திருக்குறள் தனியுடைமைச் சமுதாயத்தை மறுப்பதன்று. ஆயினும் தனி உடைமைக்குச் சில அறநெறிகளை - விதிகளை விதிக்கிறது.
1. வெஃகாமை வேண்டும் பிறன் கைப்பொருள்
2. பழி மலைந்து எய்திய ஆக்கம்
3. தாழ்விலாச் செல்வர்
4. தீதின்றி வந்த பொருள்
இத்தொடர்கள் உணர்தற்குரியன.”
“சமயவாழ்வு இருவகையில் சிறத்தல் வேண்டும் என்பர் திருவள்ளுவர். 1. இறைவழிபாடு 2. பொய்தீர் ஒழுக்க நெறி நிற்றல்.”
“மெய்ப்பொருளார் பொறுத்தாற்றும் பண்பினராய் வாழ்ந்தார். சண்டிகேசுவரர் ஒறுத்தாற்றும் பண்பினராய் வாழ்ந்தார். இருவரும் போற்றத் தக்கவரே. காரணம், முன்னையவர் தன் சார்பில் நேர்ந்த கேட்டைப் பொறுத்தார். பின்னையவர், ஓர் இனத்தினுடைய பண்பாட்டு நாகரிகத்தைக் கெடுக்கின்ற கேட்டை ஒறுத்தார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வழிபாட்டுக்கென்று பயன்படுகின்ற மூர்த்தியை, அந்த வழிபாட்டுச் சடங்கைக் கீழ்ப்படுத்தியதால் சண்டிகேசுவரர் வெகுண்டார்” என்பது அடிகளாரின் திருவுள்ளமாகும்.
நாவரசர் பொறுத்தாற்றியதும், ஞானசம்பந்தர் ஒறுத் தாற்றியதும் அடிகளாரின் சிந்தனையோடு ஒப்பிட்டு மகிழ்தற்குரியன அன்றோ?
“கூற்றம் குதித்தலும் கைகூடும்” என்ற திருக்குறளுக்கு, மார்க்கண்டேயர் வரலாற்றை அடிகளார் நினைவு கூர்ந்த சிந்தனை அரியதாகும்.
இனைய பல அரிய சிந்தனைகளையும், திருக்குறள் அமைப்பு முறைகளையும் விளக்கி இருக்கும் குருமூர்த்திகள்; பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சாணக்கியர் போன்ற பல அறிஞர் பெருமக்களின் கருத்துக்களையும் ஆங்காங்கு ஒப்பிட்டுக் காட்டியிருக்கும் திறம் அரியதாம்.
இக்குருமூர்த்திகள் தம் அரிய கருத்துக்களை, ‘யாதானும் நாடாமால் ஊராமால்’ எனக் கூறுதற்கு ஏற்ப, உலகெங்கும் சென்று வழங்கி வந்தவர்கள். அவை என்றும் நிலைபெறுதற்கென நூல் வகையானும் வரவேண்டுமெனத் திருவுளம் கொண்டு, அருள் பாலித்திருக்கும் குருமூர்த்திகள் தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். அவர்களின் திருக்கருணையையும், பதிப்புச்செம்மலாய் விளங்கிவரும் அரிய இனிய அன்பராய ச. மெய்யப்பனார் அவர்களையும் போற்றியும் வாழ்த்தியும் மகிழ்கின்றேன்.
முன்னுரை
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகள், காவி உடுத்திய கார்ல் மார்க்ஸ், அருள்நெறித் தந்தை என அனைவராலும் அன்பொழுகப் பாராட்டப்பெற்ற குருமகாசந்நிதானம் ஆற்றிய அற்புதச் சொற்பொழிவுகள் சமய இலக்கியம் என்று முகிழ்த்திருப்பது மிகுந்த மனநிறைவைத் தருகின்றது. சமயம் மனிதனைச் சமைப்பதற்கே; பண்படுத்துவதற்கே! சமயம் வாழ்க்கை நெறி; வாழ்வாங்கு_வாழ வழிகாட்டும் நெறி, சமய உலகம் சமூகத்தை விட்டு விலகிச் சென்ற பொழுதுதான் - ஏழாம் நூற்றாண்டில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தப் பெருமானாலும், நாவுக்கரசர் பெருமானாலும் ஏற்றப்பட்ட ஞானவேள்வி சுடர்விட்டுப் பிரகாசித்து, பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் காலத்தில் உச்சக் கட்டமாகப் பொங்கிப் பரிணமித்தது. இடையில் சமய உலகில் ஒரு தொய்வு ஏற்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சமய உலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கியவர்கள் அருள்நெறித் தந்தை குருமகாசந்நிதானம் தவத்திரு அடிகளார் பெருமான். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் “அடிகளார்” என்ற சொல் அவர்கள் ஒருவரைத்தான் குறித்தது. சமயத்தையும் சமுதாயத்தையும் ஒருங்கிணைக்கின்ற உறவுப் பாலமாக விளங்கினார்கள். சமூகத்தை விட்டுச் சமயம் விலகிச் சென்ற பொழுது சடங்கும் ஆரவாரத் தன்மையும் நிறைந்திருந்த சமயத்தை மக்களுக்குரியதாக மாற்றிக் காட்டினார்கள்.
சமய இலக்கியத்தை ஓதி உணர்வதோடு அல்லாமல் வாழ்வில் நடைமுறைப்படுத்தினார்கள். நாட்குறிப்பேடு போல் சமய இலக்கிய நாட்குறிப்பேடு ஒன்று பேணப்பட்டது. அதில் அறுபத்து மூன்று நாயன்மார் ஒவ்வொருவரின் நாள் குறிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, கண்ணப்பநாயனாரின் நாளன்று கண்ணொளி வழங்க உதவி செய்தல் என்ற திட்டங்கள் செயற்படுத்தப்படும். நாயன்மார்களின் அடிச்சுவட்டில் அவர்களின் தொண்டு வாழ்வியல் மீண்டும் நடைமுறைக்குக் கொணரத் திட்டம் செயற்பட்டது. சமயத்தை இயக்கமாக, வாழ்வியலாக மாற்றுகின்ற முயற்சியில் சிறப்பாகச் செயற்படுத்தினார்கள். உழவாரக் கருவி ஏந்தித் தமிழகம் உலாவந்தார்கள். உழவாரக் கருவி திருக்கோயில்களில் முளைத்த முட்புதர்களை மட்டும் களையவில்லை. சமுதாயத்தில் முளைத்திருந்த முட்புதர்களையும் களைந்தது.
சமய இலக்கியம் வெறும் தத்துவ நூல் அல்ல. அனுதினமும் சமயத்தை வாழ்வில் நடைமுறைப் படுத்திய அனுபவசாரம், ‘அப்பர் விருந்து’ என்ற நூலில் முழங்காலுக்கு மேல் வேட்டி உடுத்தி, உருத்திராக்க மாலை அணிந்த பழைமையான தோற்றத்திற்குரிய அப்பர் பெருமானின் புதுமைச் சிந்தனையைப் புதிய கோணத்தில் சமய அடையாளம் காட்டியுள்ளார்கள்! என்னே புதுமை. இதோ, பானைச் சோற்றுக்குப் பதச் சோறுபோல், அப்பர் பெருமான் பாடலுக்குப் புதிய விளக்கம்.
“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் விங்கிள வேனிலும்
(Upload an image to replace this placeholder.)
தவத்திரு
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே”
என்று அப்பர் பெருமான் பாடுகின்றார்! இந்தப் பாடலுக்குப் புதிய விளக்கம் குற்றமற்ற வீணையின் இனிய கீதத்தை எல்லோரும் கேட்டு மகிழலாம்! தேவையான நிபந்தனை நம் காதுகளுக்குக் கேட்கின்ற சக்தி வேண்டும், மாலைக் காலத்து அழகிய நிலவை எல்லோரும் பார்த்து மகிழலாம். அதற்குத் தேவையான நிபந்தனை நம் பார்வையில் குறைபாடு இல்லாது இருக்க வேண்டும். வீசுகின்ற தென்றல் காற்று எல்லோருக்கும் பொதுவானது, ஆண்டவனுக்கும் பொதுவானது; அடிமைக்கும் பொதுவானது, அதைப் போலவே பரம்பொருள் எல்லோருக்கும் பொதுவானது, வல்லார்க்கும் மாட்டார்க்கும் வாய்ப்பளிக்கும் வாய்ப்பாக, எல்லோருக்கும் பொதுமைப் பொருளாக இறையின்பத்தை அடையாளம் காட்டினார்.
அருள்நெறித் தந்தையின் சமயம் பற்றிய புதிய சிந்தனை எந்நாளும் எண்ணி இன்புறத்தக்கது. உடல் வாழ்வு தன்னலம் பற்றியது; உயிர் வாழ்வு பொது நலம் பற்றியது. சராசரி மனித வாழ்க்கையை உயிர்ப்புள்ளதாக்கி முழுமையாக்கும் உணர்வின் தேவையிலே தோன்றியது சமயம், இதனை மகாசந்நிதானம் “பொதுவில் ஆடுபவன் நிழலின் பொதுமையைக் காணாமல், தீமையை அகற்றாமல் நன்மையைச் சாதிக்காமல், துன்பத்தைத் துடைக்காமல், இன்பத்தைப் படைக்காமல் கிழடுதட்டிச் செயலிழந்துபோன நமது சமய அமைப்புகள் குறையுடைய நடைமுறைகளே!” என்று சமய உலகை மாபெரும் புனருத்தாரணம் செய்ய வேண்டும் என்று அறைகூவுகின்றார்கள். சமயம் மனிதத்தை மேம்படுத்த! சமயம் மனித வாழ்வுக்கே! சமயம் மனிதத்தைப் புனிதமாக்க என்ற உயர்நிலையில் சமய உலகப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் அருள்நெறித் தந்தையின் பாதையில் பயணம் செய்ய, ‘‘சமய இலக்கியம்’’ வாழும் மானிடத்திற்கு அற்புத வழிகாட்டியாகும்.
இவ் அரிய நூல் ஆக்கத்தைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குத் தொகுப்பு நூலாக வெளியிடும் மணிவாசகர் பதிப்பக ச. மெய்யப்பன் அவர்களுக்கு நெஞ்சு நிறை நன்றிகள்! இந்நூல் தொகுப்புக்குப் பெரிதும் பாடுபட்ட நம் ஆதீனக் கவிஞர் மரு. பரமகுரு, பலவகைகளில் இந்நூல் தொகுக்கும் களத்தில் கடமையாற்றிய இராமசாமி தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் தெ. முருகசாமி ஆகியோருக்குப் பெரும் நன்றியறிதலுடன் கூடிய பாராட்டுக்கள்! இந்நூலுக்கு அரியதொரு அணிந்துரை வழங்கியுள்ள முனைவர் கு. சுந்தரமூர்த்தி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நமது சமய உலகப் பாதையில் பயணம் செய்ய “சமய இலக்கியம்” வழிகாட்டும் என்று நம்புகின்றோம். ‘சமய இலக்கியம்’ இயக்கமாக மாறினால் அதுவே சமய உலகத்தின் மாபெரும் புனருத் தாரணம் ஆகும். ‘சமய இலக்கியம்’ புதிய மறுமலர்ச்சிக்கு வழிகாட்டும் என்று இறையருளைப் போற்றிப் பிரார்த்திப்போம்!
உள்ளுறை
பக்கம்
1. நமது நிலையில் சமயம் சமுதாயம் .... 17
2. சைவசித்தாந்தமும் சமுதாய மேம்பாடும் .... 138
3. சித்தாந்தச் செந்நெறி .... 238
4. கொடியா, கொம்பா? .... 269
5. அருளியலும் அறிவியலும் .... 292
6. தமிழும் சமயமும் சமுதாயமும் .... 317
7. ஈழத்துச் சொற்பொழிவுகள் .... 388
உள்ளடக்கம்
1. நமது நிலையில் சமயம் சமுதாயம்
சமயம் சமுதாயம்
சமய மறுமலர்ச்சி
சமய சமுதாய மறை
2. சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்
சைவ சித்தாந்த வரலாறு
சைவ சித்தாந்தத் தத்துவம்
சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்
3. சித்தாந்தச் செந்நெறி
4. கொடியா? கொம்பா?
5. அருளியலும் அறிவியலும்
6. தமிழும் சமயமும் சமுதாயமும்
(மலேசியச் சொற்பொழிவுகள்)
சமயமும் வழிபாடும்
தமிழும், சமயமும், சமுதாயமும்
7. ஈழத்துச் சொற்பொழிவுகள்
மாத்தளையில்
நாவலப்பிட்டியில் - 1
நாவலப்பிட்டியில் - 2
பதுளையில்
பொகந்தலாவையில்
அட்டனில்
கொழும்பிலே!
குனுகலோயாவில்
மணிபல்லவத்தில் (நயினாதீவு)
நீர் கொழும்பில்
யாழ்ப்பாணத்தில்
1
நமது நிலையில் சமயம் சமுதாயம்
* * *
1. சமயம் சமுதாயம்
முன்னுரை
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டில் திசையனைத்தும் புகழும் திருநெல்வேலியில் தோன்றி, தாளாண்மையும் வேளாண்மையும் பெற்றுப் பெருந்தகையாளராய் விளங்கிய சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களை ஈன்று புறந்தந்த அன்னை சொர்ணாம்பாள் அறக்கட்டளைச் சொற்பொழிவினை நிகழ்த்தும் வாய்ப்பு நமக்கு ஊழின்வழி அமைந்தது. சொல்லின் செல்வர் பிள்ளை அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிக் கடப்பாடும் உண்டு. பிள்ளை அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராய் அமர்ந்து பணி செய்தபோது நாம் ஓடி விளையாடும் சிறு வயதினேம். அதுபோழ்து பழையசோறும் தயிரும் கூட்டி நம்மை உண்பித்த கரங்கள் பிள்ளை அவர்களின் கரங்கள். பிள்ளை அவர்கள் நம்மைத் திருக்குறள் - தேவாரம் ஒப்பிக்கச் சொல்லிக் காசுகள் வழங்குவார்கள். பிள்ளையவர்களின் கொடையால் விளக்கேற்றி வைக்கப் பெற்ற குடும்பங்கள் பல. அத்தகைய வள்ளன்மை மிக்குடைய பிள்ளை அவர்கள் நிறுவிய அறக்கட்டளையின் சார்பில் நாம் பேசுவது ஒரு சொற்பொழிவு மட்டுமன்று நன்றிக் கடப்பாடும் ஆகும்.
பிள்ளை அவர்கள் சிவநெறியிலும் செந்தமிழிலும் தோய்ந்த நெஞ்சினர். பிள்ளை அவர்களின் எழுத்தும் பேச்சும் செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் ஆக்கம் தந்தன. அத்தகு பிள்ளையவர்கள் ஏற்படுத்திய அறக்கட்டளைச் சொற்பொழிவை, நமது மொழி, சமயம், சமூகம் ஆகியனவற்றிற்குப் பயன்தரத்தக்க வகையில் நிகழ்த்துதல் நல்லது என்று கருதுகிறோம்.
மனித வாழ்க்கை
மனிதன் விலங்கு மல்லன்; கடவுளு மல்லன்: விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையை யடைந்து கடவுள் தன்மையை அடைய முயலும் ஒரு தோற்றம் ஆவான் அவன், மனித வடிவத்தில் பிறக்கின்றான். ஆனால், அவன் முயன்றே மனிதத் தன்மையை அடைந்து அவ்வழி இறைமைநிலை எய்துகின்றான். இயல்பாக மனித வாழ்க்கை குறையுடையது. குறையினின்றும் நீங்கி நிறை பெறலே வாழ்க்கை. குறை நீக்கத்திற்கும் நிறைநலம் பெறுதற்கும் சமயம் இன்றியமையாதது. சமயம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதாவது, மனிதனை நெறிப்படுத்தி அவன் உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் சாதனம்.
சமயத்தின் தேவையும் பயனும்
குறையுடைய மனிதனை நிறையுடையவனாக்க ஓரளவு கல்வி துணைசெய்யும். ஆனால், முழுமையாகத் துணை செய்யக் கல்வியால் இயலாது. “எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை”[1] என்பார் தாயுமானார். “கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்[2] என்பார் மாணிக்கவாசகர். இதனால் கல்வி தீது என்றும் கற்றலில் பயனில்லை என்றும் பொருள் கொள்ளற்க, “கல்லார் நெஞ்சின் நில்லான் ஈசன்”[3] என்றார் திருஞானசம்பந்தர். கல்வியின் பயன் அறிவு: அறிவின் ஆக்கம் அருள். கல்வியின் பயனாகிய அறிவை நாடாமல், அருளைப் பெறாமல் “கற்றுள்ளோம்” என்று தருக்குதல் கூடாது. கற்ற நூற்கருத்தினை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் பொழுது அறிவு தோன்றுகிறது. அந்த அறிவு குறை நீக்கத்திற்குத் துணை செய்யும். ஆனால் அதுவும் முழுமையாகத் துணை செய்ய இயலாது. என்? அறிவு, வளரும் தன்மையது. “அறிதோறு அறியாமை”[4] என்பார் திருவள்ளுவர். ஒரு குறை நிறையைத் தர இயலாது. நிறைநலம் சான்ற ஒன்றுதான் குறை நீக்கத்திற்குத் துணை செய்ய முடியும்; நிறை நலத்தைத் தரமுடியும். குறைவிலா நிறைவாகக் கோதிலா அமுதாக இருந்தருளும் இறைவன்தான் உயிர்களின் குறை நீக்கத்திற்கும் நிறைநலப் பேற்றுக்கும் துணை செய்ய முடியும். குறை நீங்காத வரையில் துன்பம் நீங்காது; இன்பம் சேராது. இன்ப விழைவுடைய உயிரின் குறை நீக்கத்திற்கு நிறைநலப் பேற்றுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது சமயம்.
சமயம் மனிதரை நெறிப்படுத்துவது முறைப்படுத்துவது. சமயம் ஒரு தூய்மையான வாழ்க்கை முறை சமய வாழ்க்கையில் புலன்கள் தூய்மையடையும்; பொறிகள் இன்ப வைப்புக்களாக மாறும்; இதயம் விரியும்; ஈர அன்பு பெருகி வளரும்; வேறுபாடுகள் மறையும் ஒருமை தோன்றும்; ஓருலகம் மலரும்; இதுவே சமயத்தின் பயன்.
வேறுபடு சமயங்கள்
இங்ஙனம் உயர்ந்த வாழ்க்கை முறையைக் காட்டும் சமயங்கள் தம்முள் மாறுபடுவது ஏன்? மாறுபாடு மட்டுமன்றி முரண்பாடுகளும் ஏன்? எல்லை கடந்த நிலையில் சமயப் பூசல்கள் வளர்ந்து, மனித உலகத்திற்குத் தீமை செய்வானேன்? நியாயமான கேள்விகள்! சமயப் பூசல்கள் சமயத்திற்காக நிகழ்ந்தன அல்ல; நிகழ்வன அல்ல. உலகியல் நலன்களைக் காத்துக் கொள்ள விரும்பும் ஆடையில்லாச் சுயநலப் பிறவிகள், மனித உருவில் நடமாடிய காட்டு விலங்குகள், சமயத்தின் பெயரால் பூசல்களை வளர்த்தன; வளர்த்துக் கொண்டிருக்கின்றன. இச்சமயப் பூசல்கள் நிகழ்த்துவோருக்கும் உண்மையான சமய நெறிக்கும் உண்மையில் தொடர்பே இல்லை; இருத்தலும் இயலாது. சமய வேறுபாடுகள் இயல்பானவை. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில், வாழ்ந்த மானிட சாதியின் அனுபவத்தில், ஞானிகளின் உணர்வில் சமய நெறிகள் முகிழ்ந்தன. நிலத்தின் காரணமாகவும், காலத்தின் காரணமாகவும் உற்ற அனுபவங்களின் வாயிலாகவும் அவை தம்முள் மாறுபடுகின்றன. ஏன்? பல சமய நெறிகள் அடிப்படைக் கொள்கையில் முரண்படுவதில்லை. நடைமுறைகளில்தான் மாறுபாடு. இஃது இன்றைய உலகத்தின் பெரும்பான்மையான சமயங்களுக்குப் பொருந்தும். உண்மையான உள்ளுணர்வுடன் நோக்கினால் வேறுபாடு தெரியாது; இல்லை! வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதுதான் விழுமிய பண்பு.
வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குயரம் பொருளேநின் விளையாட் டல்லால்
மாறுபடும் கருத்தில்லை; முடிவில் மோன
வாரிதியின் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா[5]
என்றார் தாயுமானார்.
வணங்கும்துறைகள் பலபல வாக்கி”[6]
என்றார் நம்மாழ்வார்.
தென்னா டுடைய சிவனே போற்றி!
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி![7]
என்றார் மாணிக்கவாசகர். ஆதலால் சமய வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. உலகம் முழுதும் உலாவிய சான்றோர்களின் மெய்யுணர்வுக் காட்சிக்கேற்ப வேறுபாடு இருத்தல் இயற்கை. ஆனால், இந்த வேறுபாடு ஒருமை நோக்கிய வேறுபாடேயாம். மனித குலத்தை வேறுபடுத்தும் வேறுபாடன்று. அதனால்தான் வள்ளற்பெருமான், சமய நெறிகளையும் கடந்த பொதுநெறி வேண்டுமென்றார். மனித குலத்தை நெறிப்படுத்தத் தோன்றிய சமயநெறிகள் ஆன்மநேய ஒருமைப் பாட்டில் உயிர்க்குலத்தை நிறுத்தி நன்னெறியில் செலுத்தத் தவறி விட்டதால் சமய நெறிகளையும் கடந்த பொதுநெறி வேண்டுமென்றார்; அவரவர் மேற்கொண்டொழுகும் சமய நெறியில் “ஆழங்கால்பட்டு நிற்றல்” வாழ்க்கை முறை. இது நிகழ வேண்டுமாயின் யாதொன்றின்பாலும் வெறுப்புக் கூடாது. தமிழர் சமயம்
தமிழினம் காலத்தால் முந்தித்தோன்றிய மூத்த இனம்; இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பேசும் மொழிக்கு இலக்கணம் கண்ட இனம்; உலகில் எல்லா மொழிகளுக்கும் இலக்கணம் உண்டு. ஆனால் தமிழினம் மக்களின் வாழ்க்கை நெறிக்கும் இலக்கணம் கண்டது. தமிழினத்தின் சிந்தனை உயர்வுக்கு, பண்பாட்டு ஆர்வத்திற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகள். தமிழினத்தின் வாழ்வியற் செப்பம் காலங்கடந்தது. வரலாற்றாசிரியர்களின் வரையறைகளைக் கடந்தது. இப்படித்தான் வாழ வேண்டுமென்ற வாழ்க்கை நியதியைத் தமிழினம் ஆட்சிகளின் மூலம் பெறவில்லை; அச்சுறுத்தல் மூலம் பெறவில்லை. அந்தப் பண்பாடு இயல்பான படிமுறை வளர்ச்சியாகும். பழந்தமிழ் இலக்கணங்களும் சங்க இலக்கியங்களும் வாழ்க்கையில் தோன்றியவை வாழ்க்கை அனுபவத்தில் முகிழ்த்தவை. அவை சுற்றிச்சுற்றி வந்து வாழ்க்கையையே நெறிமுறைப்படுத்துகின்றன. நெறி நின்றோர் புகழப்படுகின்றனர். வாழ்வியலின் வாய்மைகள் இலக்கியச் சுவையுடன் எடுத்துக்காட்டப் பெறுகின்றன. ஆயினும், வாழ்வியலை விஞ்சிய சுவையில்லை. தமிழர் அறம் தழிஇய சமயநெறி நிற்றலை இயல்பாகவே மேற்கொண்டனர். அது யாரிடமிருந்தும் கற்றுக்கொண்டதில்லை. ஏன் ? ஐம்பூதங்களை வணங்கியவர்களை அவைகளுக்கு அப்பாலும் இறைவனுண்டு என்று நெறிப்படுத்தியவர்களே தமிழர்கள்தாம்.
சங்க காலத்தில் தமிழினத்தின் வாழ்வில் சமயம் ஒரு பகுதியாக இருந்ததில்லை, சமயம் வாழ்க்கை முழுவதும் படர்ந்து கால் கொண்டிருந்தது. அதனால், பக்தி இயக்கங்கள் இல்லை; பக்தியில் தோன்றிய இலக்கியங்கள் மிகுதியாக இல்லை. சிலர் சங்ககாலத்தில் சமயம் முதன்மைப் படுத்தப்பட்டதாக இல்லை என்பர்; அது தவறு. பக்தி இலக்கியக் காலத்தைவிடச் சங்க இலக்கியக் காலத்தில்தான் உண்மையான சமயமிருந்தது என்று சொல்லவேண்டும்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா [8]
ஆருயிர் முறைவழிப் படுஉம்[9]
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்[10]
என்ற சொற்றொடர்கள் சங்க காலத்துச் சமய உணர்வை வெளிப்படுத்துவன. தமிழர் சமயம் வாழ்க்கையில் முகிழ்த்தது. ஆதலால் அதில் கற்பனை இல்லை; அதிசயங்கள் இல்லை; அற்புதங்கள் இல்லை. நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரியதாக அமைந்திருக்கும் பெருமை நமது சமயத்திற்கு உண்டு.
தமிழர் சமயத்தைச் சிறப்பித்தோர்
தமிழகத்தில் நிலவும் அறுவகைச் சமயங்களின் வளர்ச்சியிலும் தமிழர்க்குப் பங்குண்டு. தமிழர்கள் முறையே சிவபெருமானை, திருமாலை, முருகனை வழிபடும் பேற்றினைப் பெற்றவர்கள். ஆயினும், தத்துவ அடிப்படையில் அவர்கள் சமயம் “சித்தாந்தம்” என்று அழைக்கப்பெறும். டாக்டர் ஜி.யூ போப், “தமிழரின் அறிவில் முகிழ்த்த ஒப்பற்ற சமயநெறி சித்தாந்தம்” என்று பாராட்டுவார். அதுபோலவே கெளடி என்னும் பாதிரித் துரைமகனாரும் “தமிழரின் பேரறிவில் தோன்றிய நெறியே சித்தாந்தச் செந்நெறி” என்பார்.
வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன்
என்று வடநூல் மரபு பாராட்டும்.
தமிழர் சமயத்தின் கொள்கைச் சிறப்புகள்
தமிழர் சமய நெறியாகிய சித்தாந்தச் சமயம் அறிவாராய்ச்சிகளுக்கு இடம் கொடுக்கத்தக்கது. முற்றாக அது நம்பிக்கையின் வழிபட்டதன்று. ‘சித்தாந்தம்’ என்ற சொல்லுக்கே பொருள் ‘முடிந்த முடிபு’ என்பது. அறிவாராய்ச்சியில் வினாக்களைக் கேட்டுக்கேட்டு மெய்யுணர்வில் வளர்ந்துவளர்ந்து செம்பொருள் கண்டார் உணர்த்திய செந்நெறி-அது. அப்பாடிகள்,
............. ஆறு சமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன.....[11]
என்பார். தமிழர் சமயம் அறிவார்ந்த உண்மைகளுக்கு மாறுபட்டதன்று. ஆனாலும் அறிவு எல்லையில் மட்டும் நின்று ஆராயத்தக்கதுமன்று. ஆழ்ந்த உண்மைகள் அனுபவத்திற்கே யுரியன. சித்தாந்தச் சமயம் ஞான நெறியாகும்.
சித்தாந்தச் சமயத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் விரும்பி ஏற்றுக் கொள்ளத்தக்கன. சித்தாந்தச் சமயம் உணர்த்தும் உண்மையில் அல்லது நெறிகளில் யாதொன்றும் அறியத்தக்கது அன்று; அல்லது உணரத்தக்கது அன்று என்று கூறி ஒதுக்க இயலாது. சித்தாந்தச் சமயம் தோன்றிய காலத்தில் உண்மையை உணர்த்தும் நூல்கள் பொதுவாக அமைந்திருந்தன. பின், சித்தாந்தச் சமய அனுபவத்தின் விளைவுகளாகவே திருமுறைகள் தோன்றின. அதன்பின், தமிழகத்தில் பல்வேறு சமயங்கள் உலாவத் தொடங்கிய பொழுது சித்தாந்தச் செந்நெறியின் உண்மைகளை அரண்செய்து பாதுகாக்கும் வகையில் மெய்கண்ட நூல்கள் தோன்றின. இச் சமயத்திற்கு இருக்கும் சிறப்பான கொள்கை முப்பொருள் உண்மை. அதாவது இறை, உயிர், தளை என்ற மூன்று பொருள்கள். அவை என்றும் உள்ளவை எனபது ஒரு சிறந்த கொள்கை, உலகத்தில் கடவுளை ஒத்துக்கொள்ளும் எல்லாச் சமயங்களும் கடவுள் படைக்கப்படாத பொருள் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றன; ஆனால், கடவுளைப் “படைப்பாளி"யாக்குகின்றன.
நமது சமயம், கடவுளைப் போலவே உயிர்களும் தோன்றுவனவுமல்ல அழிவனவுமல்ல என்று கூறும். உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டன என்றால் உயிர்களின் குறைகளுக்குப் பொறுப்பு யார்? என்பது சிக்கலான கேள்வி. மேலும் குறையிலிருந்துதான் நிறைதோன்றலாம். இது படிமுறை வளர்ச்சி. ஆனால், நிறையிலிருந்து குறை தோன்றும் என்பதும் அல்லது நிறையின் படைப்பு குறையுடையதா யிருக்கும் என்பதும் அறிவாராய்ச்சிக்கு இசைந்து வராத ஒன்று. “உயிர்களைக் கடவுள் படைக்கவில்லை; அவை என்றும் உள்ளவை” என்பது அறிவாராய்ச்சிக்கு இசைந்த கருத்து. பிறப்புக்குப் பொருள் தரும் கருத்து. அதுபோலவே “இறைவனுடைய பிரதிபிம்பமே உயிர்கள்” என்ற கொள்கையும் நம்பிகைக்குரியதன்று. அந்தக் கொள்கையிலும் விடையளிக்க முடியாத வினாக்கள் அடுக்கடுக்காகத் தோன்றுகின்றன. ஆற்றுத் தண்ணீருக்கும் குளத்துத் தண்ணீருக்கும் சுவையில் வேறுபாடு ஏது? அண்ட வெளிக் காற்றுக்கும் குடத்துள் காற்றுக்கும் குணத்தில் வேறுபாடு ஏது? இக்கொள்கையும் அறிவாராய்ச்சிக்கு இசைந்து வராததே, உயிர்கள் என்றும் உள்ளவை; அவை அறியும் இயல்பின; அறிவு மயமாக மாறும் தகுதியுடையன. ஆயினும் இயற்கையாக உயிர்களின் அறியும் முயற்சியைத் தடுத்து அறியாமைப் படுத்தும் ஆணவத்தோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. “உயிர்கள் அறியாமையினின்றும் விலகி அறிவைப்பெற, ஞானத்தைப்பெறத் துணை செய்யும் ஆசிரியன் கடவுள்” என்பது சித்தாந்தச் செந்நெறியின் முழுநிறைக் கொள்கை. இக்கொள்கை அனேகமாக மாமுனிவர் மார்க்ஸ் போன்றவர் விவாதங்களோடு ஒத்து நிற்கும் தகுதியுடையது. பழமைக்கும் புதுமைக்கும் ஏற்ற நெறி.
தமிழர் தம்முடைய மெய்யுணர்வை இயற்கையோடிசைந்த வாழ்க்கையில் வளர்த்துக் கொண்டனர். நம்முடைய வாழ்வியல் முறை, இயற்கைக்கு முரண்படுவதுமன்று; இயற்கைக்கு அடிமையாதலும் அன்று. இஃது ஒரு தெளிவான வாழ்வியல் முறை. மேலும், நமது சமய சமுதாய வாழ்வியல் ஊற்றுப் பெருக்கைப்போல் உள்ளுணர்வில் தேக்கமடையாமல் அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பெற்று வந்திருக்கிறது. காலத்திற்கிசைந்த வளர்ச்சியில்லாத சமுதாய அமைப்பிலேயே தேக்கம் ஏற்படும். அப்பொழுதுதான் பழைமை என்ற ஒன்று உருவாகும். பின் தேக்கத்தின் புழுக்கத்தால் சமுதாயம் துன்புறும்பொழுது புதுமைவேட்கை தோன்றும், ஆனால் தமிழ்ச் சமுதாய அமைப்பில் தேக்கம் ஏற்படச் சிந்தனையாளர்கள் அனுமதித்ததில்லை. நம்முடைய சமய நெறியிலும் சமுதாய அமைப்பிலும் பழங்காலத்திலிருந்து உயிர்ப்புள்ள சிந்தனை செயற்பட்டு வந்திருக்கிறது. அதனாலன்றோ மாணிக்கவாசகர்,
முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே[12]
என்றார். பழமை-புதுமைப் பிணக்கு பழங்காலத்தில் தமிழகத்தில் இருந்ததில்லை. வாழ்க்கை வேறு, சமயம் வேறு என்ற வேறுபட்ட நிலையும் இருந்ததில்லை. கலை, வாழ்க்கை இவ்விரண்டுக்குமிடையே இன்றுள்ள முரண்பாடுகளும் அன்று இருந்ததில்லை. முரண்பாடுகள் அனுபவமின்மையின் விளைவுகளே; பழங்காலத் தமிழர் வாழ்வியல் அறிவாராய்ந்த அனுபவத்தின் வழிப்பட்டதாயிருந்ததால் அன்று முரண்பாடுகள் இருந்ததில்லை. அதுமட்டுமன்று, வாழ்க்கை வாழ்வதற்கே மரணத்திற்கு அன்று என்பது பழந்தமிழர் கொள்கை.
வாழ்வாங்கு வாழ்க
என்று திருக்குறள் வழி நடத்தும்.
வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்[13]
என்று அப்பரடிகளின் அருள்நூல் ஆற்றுப்படுத்தும்.
இயற்கையோடிசைந்த வாழ்வியல் நெறி
தமிழர் சமயம் வாழ்க்கையைப் புறக்கணிப்பதன்று. ஆனாலும் வாழ்க்கையில் ஆழ்ந்து கிடப்பதுமன்று. தமிழர் சமய வாழ்க்கை இன்பியல் வாழ்க்கையே. ‘வாழ்க்கை துன்பமானது’ என்ற கருத்து, பழங்காலத்தில் இருந்ததில்லை. ஒரோவழி உலகில் துன்பமாக இருந்தாலும் அதை இன்பமாக மாற்றவேண்டுமென்பதே பழந்தமிழர் கோட்பாடு.
ஓரில் நெய்தல் கறங்க வோரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
இன்னா தம்மஇவ் வுலகம்
இனிய காண்கிதன் இயல்புணர்ந் தோரே,[14]
என்ற பக்குடுக்கை நன்கணியார் பாடல் ஓர்ந்துணரத்தக்கது.
வாழ்க்கையை இன்பமயப்படுத்தும் பொருள்களைத் திருவருளாகவே நினைத்து பாராட்டுதல் நமது நூன்மரபு. “வாசமலரெலாம் ஆனாய் நீயே”[15] என்று இயற்கையையும், “பண்ணிடைத் தமிழொப்பாய்”[16] என்று கலையையும், “பழத்தினிற் சுவையொப்பாய்”[17] என்று சுவையையும், “ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ”[18] என்று மனை வாழ்க்கையையும் பாராட்டுவது அறிந்து ஓர்க.
சைவ-சமணப் போராட்டம்
பழங்காலத்தில், தமிழகச் சமய நெறியாளர்கள் பிறநெறியாளர்களோடு காழ்ப்புக்கொண்டு மோதியதில்லை. ஆயினும், பண்ணோடு தமிழும், இயற்கையோடிசைந்த வாழ்க்கையும், அகனைந்திணை ஒழுக்கமும் மாறுபடுமோ என்ற அச்சம் வந்தபொழுது இவற்றுக்கு எதிராகத் தமிழ் வழக்கிற்கு மாறாகப் புகுந்த அயல்வழக்கை எதிர்த்துத் தமிழ் வழக்கை நிலைநிறுத்த வேண்டியதாயிற்று. இந்தப் பணி சமயக்களத்திற் செய்யப்பெற்றாலும் அது முற்றாகச் சமயப் பணிமட்டுமன்று. அஃதொரு சிறந்த சமுதாயப் பணி, வழிவழி வந்த தமிழ் நாகரிகத்தை அாண்செய்து காப்பாற்றிய அருந்திறற் பணி,
இடையிற்புகுந்த தீண்டாமை
சமய வழிப்பட்ட தமிழர் சமுதாயத்தில் பிறப்பினால் அமைந்த சாதி வேறுபாடுகள் இருந்ததில்லை. தொழிலினால் அமைந்த வேறுபாடுகள் இருந்தன. ஆயினும் தமிழகத்தில் அயல் வழக்கு நுழைவதற்கு முன் தீண்டாமை இருந்ததில்லை. தீண்டாமை தமிழ்க்குடியில் இருந்த தீமையன்று இடையில் வந்தது. தீண்டாமை தமிழ்ச் சமுதாயத்தில் ஊடுருவிய காலந்தொட்டு அதனை அகற்ற அவ்வப்போது போராட்டம் நிகழ்ந்து வந்திருக்கிறது. ஆயினும் நலன்களின் அடிப்படையில் தீண்டாமை முற்றாக அகலவில்லை; முன்பு, உயர் சாதி மனப்பான்மையுடையவர்கள் மட்டுமே தீண்டாமை விலக்குக்கு எதிராக இருந்தார்கள். அண்மைக் காலத்தில் நல்லூழின்மையின் காராணமாக அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அரசியற் கட்சியினரும் தீண்டாமை நிலையாக இருக்கத்தக்க வகையில் செயற்பட்டு வருகின்றனர். தீண்டாமை நமது சமயத்திற்கு ஒரு கறை, நமது சமுதாயத்திற்கு ஒரு சாபக்கேடு. தீண்டாமையை ஆசாரம் காட்டி நிலைநிறுத்த விரும்புவாரை அப்பரடிகள்,
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்தர் அல்லா ராகில்
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே[19]
என்ற பாடலால் இடித்துக் கூறுவார்.
சேக்கிழார், நந்தனார் வரலாற்றில் நந்தனாரைச் சிந்தை குளிரச் செவி குளிர ‘ஐயர்’ என்று பல தடவை போற்றுவது எண்ணத்தக்கது. அதுபோலவே வைணவத்தில் ‘உடையவர்’ என்றும் ‘எம்பிரானார்’ என்றும் போற்றப் பெறுபவராகிய இராமானுசர், இறைவனுடைய திருநாமத்தைக் குலம் கோத்திரம் நோக்காது எல்லோருக்கும் எடுத்துச் சொன்னார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரிய புராணத்தில் திருஞான சம்பந்தர் - திருநீலகண்ட யாழ்ப்பாணர் உறவும், திருநீலநக்கர் - திருநீலகண்ட யாழ்ப்பாணர் உறவும் தீண்டாமை விலக்குக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். நிகழ்ந்தது என்ன? இன்னமும் தீண்டாமை முற்றாக விலகவில்லை. தீண்டாமை விலக்குப் பணியைப் பாராளுமன்றத்தின் ஆணைகள் செய்த அளவுக்குக்கூட நமது வழிபடு கடவுளின் ஆணைகள் சமய உலகத்தில் செயற்படுத்தவில்லை. தீண்டாமை விலக்குப்பணியில் புகைவண்டி கண்ட அளவுக்குக்கூட வெற்றியை நமது சமய நிறுவனங்கள் அடையவில்லை; அடைய முயலவுமில்லை இது வேதனைக்குரிய செய்தி. தீண்டாமையை நமது சமயத்திலிருந்து அறவே அகற்றிக் கோடானுகோடி மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றத் தவறி விடுவோமானால் நமது கடமையை நாம் செய்யத் தவறியவர்களாவோம். அவ்வழி நாம் அன்பையும் அருளையும் இழப்பதோடன்றி உலகியலையும் இழக்கின்றோம். இந்த இழப்புகளுக்கு ஆளாக்கப்படும் அடுத்த தலைமுறை நம்மைப் பழிதூற்றும். ஆதலால், நமது சமய வழிப்பட்ட சமுதாய அமைப்பில் அகத்திலும் புறத்திலும் ஒட்டிக்கொண்டிருக்கும் தீண்டாமையை அறவே அகற்றுவதையே தலையாய பணியாக மேற்கொள்ள வேண்டும். தீண்டாமை விலக்குப் பணிகளை இன்றைய மேட்டுக் குடியினரே எடுத்துக்கொள்ள வேண்டும். தீண்டாமை அரிசனங்களிடத்தில் இல்லை. அந்த மனப்பான்மை உயர்சாதியினரிடத்தில்தான் உள்ளது. அவர்கள் மனம்மாறி அரிசனச்சேரிகளுக்குச் சென்று தொண்டு புரிவதோடு நில்லாது அவர்களைத் தமது இல்லங்களுக்கு அழைத்து உடனிருந்து உண்டு கலந்து பேசிப் பழகுவதின் மூலம்தான் தீண்டாமை அகலும். இங்ஙனம் அரிசனச் சகோதரர்களும் உயர்சாதியினரொடு ஒன்றாகக் கலத்தற்குத் தங்களை வளர்த்துப் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஒன்றே குலம்
நமது சமய வழிப்பட்ட சமுதாயத்தில் முன்னர்க் குறிப்பிட்டபடி பழங்காலத்தில் தொழில்வகைப்பட்ட பிரிவுகள் இருந்தன. ஆனால் அவைகளுக்கிடையில் வேற்றுமை யிருந்ததில்லை. தெளிவாகச் சொன்னால் பழங்காலத்தில் சாதிகள் இருந்ததில்லை. குல அமைப்பு முறைகளே இருந்துள்ளன. அவை வழிவழி அமைந்த குணச்சிறப்பு வழி அமைந்தவை. திருவள்ளுவர் ‘சாதி’ என்ற சொல்லை வழங்கினாரில்லை. ஆனால், குலத்தின் பெருமையைப் பலபடப் பேசுகின்றார். இன்று நம்முடைய சமய வழிப்பட்ட சமுதாயத்தை ஆட்சி செய்வது சாதிமுறையேயாம். மேலும், சமய வழிப்பட்ட சமுதாயத்தை ஊடுருவி அழித்து வருவது சாதி வேற்றுமையும் அவ்வழிப்பட்ட பகைமை உணர்ச்சியுமேயாம். ஒருவர் தம்மை இந்துவாகவோ சைவாாகவோ வைணவராகவோ இன்று எண்ணிப் பழகவில்லை. சாதி வழியில்தான் அவர் சிந்தனை வளர்கிறது; பற்று வளர்கிறது; பாசம் வளர்கிறது. இங்ஙனம் சாதி வேற்றுமை பாராட்டுகிறவர்களைக் கடிந்து கூறாத அறநூல் எதுவுமில்லை.
“சாதி குலம்பிறப்பெனும் சுழி”[20] என்று திருவாசகம் கூறும். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”[21] என்று திருமந்திரம் கூறும். இங்குக் குலம் என்பது வழிபடும் தெய்வத்தை மையமாகக் கொண்டமைவது. எல்லோரும் அந்த உயர்ந்த குலத்தில் பிறவாமற் போனாலும் எல்லோரும் அந்தக் குலத்திற்குரிய வராக்கப்படவேண்டும் என்பதே உண்மை. அத்தகைய உயர்ந்த பணிகளைச் செய்யத்தானே சமய நிறுவனங்கள் தோன்றின? சாதி வேற்றுமையை அகற்றி நமது சமுதாயத்தை ஒன்றுபடுத்த வேண்டுமென்பது இறைவனின் திருவுள்ளம். ஆதலால்தான் இறைவன் தானே முன்னின்று சுந்தரர் வரலாற்றில் கலப்புத் திருமணங்களைச் செய்து வைக்கிறான். சுந்தரர் வரலாறு திட்டமிட்ட வரலாறு. அந்த வரலாறு கயிலையில் தோன்றி மண்ணில் நிகழ்கிறது. ஆதலால் சுந்தரர் வரலாற்றில் நிகழ்வன அனைத்தும் தற்செயலாக அமைந்தனவல்ல; சுந்தரர் மட்டும் விரும்பி மேற்கொண்டதும் அல்ல. நமையாளும் சிவபெருமான் விரும்பித் திட்டமிட்டு நிகழ்த்திய அருள் விளையாட்டே. ஆலால சுந்தரரை ஆதிசைவர் குலத்தில் பிறக்கவைத்து, ஆதிசைவரல்லாத குலத்தில் வளரவைத்து, கமலினி, அநிந்திதை எனும் மங்கையரை முறையே கணிகையர், வேளாளர் குலங்களில் பிறக்கவைத்துத் திருமணங்களை நிகழ்த்தி வைத்த திருவுள்ளக் குறிப்புத்தான் என்னே! அது மட்டுமன்று, பிறப்பின் வழிச் செய்யப் பெற்ற திருமணத்தை ஏற்பாடு செய்யும்வரை தடுத்து நிறுத்தாதிருந்து தக்க நேரத்தில் அத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதேன்? சாதி வேற்றுமை பாராட்டக்கூடாது என்ற உண்மையினை உலகுக்கு உணர்த்தத்தானே! அப்பூதியடிகள்-அப்பரடிகள் உறவு சாதி வேற்றுமையை அகற்றும் திருப்பணிக்கோர் எடுத்துக்காட்டு. ஆனால், யார் எதைச் செய்தாலென்ன? நம்மிடையேயுள்ள சாதி வேற்றுமை அகலாது போலத் தெரிகிறது. நம்முடைய சமய வழிப்பட்ட சமுதாயத்தில் சாதி வேற்றுமை அகன்றால்தான் அதற்கு எதிர்காலம் உண்டு. அப்பொழுதுதான் இந்து சமுதாயம் கடலெனச் சூழ்ந்து வாழும்; வளரும்.
செல்வத்துப்பயன்
நம் சமயம், செல்வமுடைமையை, அதன் பயனைக் கணித்து நோக்கிய பாங்கு மிக உயர்ந்த பாங்கு. அந்த வகையில் உலகத்தின் எந்தக் கருத்துக்கும் நம் சமயக்கருத்து தாழ்ந்ததன்று. மார்க்சின் சிந்தனைக்கும் நம் சமயச் சிந்தனைக்கும் கூட அடிப்படையில் முரண் இல்லை. ஆனால் கோட்பாடுகளில் மாறுபாடு உண்டு.
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே[22]
என்று புறநானூறு காட்டிய அறநெறி நினைந்து நினைந்து மகிழத்தக்கது. செல்வத்தைப் பெற்றவரே அச்செல்வத்தின் பயனைத் துய்த்தல் என்பது தமிழ் வழக்கன்று செல்வம், மற்றவர் துய்ப்பதற்கு வழங்கப்படவேண்டும் என்பது மரபு. அதுவே சைவத்தின் சீலம்; வைணவத்தின் வாழ்வியல் முறை. அதனாலன்றோ இறைவனுக்குரிய திருப்பெயர்களில் 'நீலகண்டம்’ என்ற திருப்பெயர் புகழுடையதாயிற்று. அமிழ்தத்தை மற்றவர் உண்ணத் தந்து, யாரும் உண்ண முடியாத நஞ்சினை உண்ட கருணையின் சீலமல்லவா நீலகண்டம்! ஒப்புரவு நெறியும் அதுவே. அதனலன்றோ இளங்கோவடிகள்,
விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்[23]
என்று குறிப்பிடுகின்றார். உண்பித்து உண்பவனே வாழ்பவன், இங்ஙனம் உழைப்பினாலாய பொருளை மற்றவர்கள் ஆரத்துய்க்குமாறு வழங்குவது தவமேயனையது என்பதைப் பெரியபுராணம் உணர்த்துகிறது. இத்தகு தவத்தினைச் செய்வோர் நெஞ்சத்தில் இறைவன் எழுந்தருள்வான். இறைவன் ஓங்கி உயர்த்திப் பிடித்துள்ள கொடி ஆனேற்றுக் கொடி அவன் உவந்து எழுந்தருளி வருவதும் எருதேயாம். ஏன்? இந்த உலகில் கடுமையாக உழைக்கும் உயிர்க்குலத்தில் எருதே சிறப்புடையது. எருதுகளின் அயராத உழைப்பில் செந்நெல் விளைகிறது; செங்கரும்பு விளைகிறது. ஆனால் விளையும் சுவைமிக்க உணவுப் பொருள்களை எருதுகள் மனித குலத்திற்குக் கொடுத்துவிடுகின்றன. மாறாக அவை பெற்றுத் தின்பது சுவையற்ற வைக்கோலேயாம். இங்ஙனம், முறையாக உழைத்து, அந்த உழைப்பில் விளைந்த பயனை மற்றவர்க்குத் துய்க்க வழங்கும் பொருளே தவம். அத்தகு தவமுடையார் நெஞ்சிலே இறைவன் என்றும் எழுந்தருளியிருப்பான் என்பது இடபவாகனத்தின் தத்துவம். இந்த உயர்ந்த தத்துவம் கொள்கை, சமய வாழ்க்கையில் இன்று அமையவில்லை. மாறாக, வெள்ளியில், தங்கத்தில் இடப வாகனங்கள் வந்துவிட்டன. செல்வத்தை வழங்கி வாழும் வாழ்வியலைச் சார்ந்த பொருளாதாரக் கொள்கையில் ‘தர்மகர்த்தா’ கொள்கை என்பது ஒன்று. அண்ணல் காந்தியடிகளுக்கு இது பிடித்தமான கொள்கை, இந்தத் தர்மகர்த்தா கொள்கை பிறநாடுகளில் கருக்கொண்டது பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளிலேயாம். ஆனால் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரடிகள் இந்தத் தர்மகர்த்தா கொள்கையை ஏற்று நடைமுறைப்படுத்த அன்பு வழியிலும் அச்சுறுத்தியும் நம்மை வழி நடத்துகின்றார். அப்பரடிகள் கொள்கைப்படி செல்வத்தை உடைமையாகப் பெற்றவனுக்குத் தான் மட்டுமே துய்க்கும் உரிமை இல்லை; ஏரிகளுக்குத் தண்ணீரைத் துய்க்கும் உரிமை இல்லை; தன்னிடத்தில் உள்ள தண்ணீரைக் காத்து கழனிகளுக்கு வழங்கும் உரிமையே உண்டு. அதனால் இறைவன் “ஏரி நிறைந்தனைய செல்வ”னாகக் காட்சியளிக்கின்றான். செல்வத்தை ஒருவனிடத்தில் இறைவன் இட்டு வைத்திருப்பது இல்லாதவர்களுக்குக் கொடுக்கத்தான். தமிழ் வழக்கில் செல்வத்திற்கு “மருந்து” என்று ஒரு பெயருண்டு. செல்வம் வறுமைப் பிணிக்கு மருந்து. மருந்தை வைத்திருப்பவரே மருந்தை உண்பதில்லை; உண்ணவும் கூடாது; நோயுடையாரே மருந்தை உண்ண வேண்டும்.
இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்
பரப்நீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன்ஐ யாற னாரே[24]
என்ற பாடலால் அப்பரடிகள் உணர்த்தும் அழகான தத்துவமே, பொருளியல் நெறியே, நமது ஆன்றோர் நெறி செல்வத்தைத் திரட்ட எண்ணும் நோக்கத்திற்கு அடிப்படை தாம் வாழ்வதற்காக மட்டுமல்ல; வழங்கி வாழ்விப்பதற்காகவே!
இல்லோர்க் கில்லென் றியைவது கரத்தல்
வல்லா நெஞ்சும் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்....[25]
என்று இந்த அருட்டன்மையை அகநானூறு சிறப்பிக்கும். ஆதலால் நம்முடைய சமுதாயத்தில் ஏழை எளியரென்ற செல்வக் குறியீட்டுமுறை பண்டு இருந்ததில்லை. நமது சமய வழிப்பட்ட சமுதாயப் பணிகள் அறநெறியாகவே கருதப்பெற்றன. சிலர் இந்த உயர்ந்த கொள்கைக்கு மாறாக ஏழ்மையென்பது தீவினையின்பாற் பட்டது; அதை அவர் துய்த்துத்தான் ஆகவேண்டுமென்பர். அது தத்துவ இயலுக்கு ஒவ்வாத நெறிமுறைக்கு மாறுபட்ட சிந்தனை. ஒருவர் தீவினையால் அல்லலுறுவதைக் கண்டும் அதை அப்போதே மாற்ற முனையும் நல்லெண்ணம் பெறாததும் ஒருவகையில் தீயூழே. உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டும் அதனை மாற்றாது செல்வத்தைத் தானே துய்த்து இன்பமுடன் வாழ்தல் தீவினைக்கும் ஆளாக்கும் என்பதை மறந்துவிடுதல் கூடாது. ஆதலால், நமது சமய வழிப்பட்ட சமுதாய அமைப்பு ஒப்புரவை உயிர்நாடியாகக் கொண்டது: ஒப்புரவை ஒழுக்க நெறியாகக் கொண்டது. ஒப்புரவே உயர் தவமுமாகும். அந்த ஒப்புரவு நெறி-உயர் வேளாண்மை நெறி நமது வாழ்க்கையில் படரவேண்டும்; அவ்வழி நமது சமுதாயம் வளரவேண்டும்.
வாழ்க்கையே சமயம்
மீனுக்குத் தண்ணீர் இன்றியமையாதது. மீனுக்கும் தண்ணீருக்கும் உள்ள உறவு ஒரோவழி அமைந்ததன்று: பிரிக்க முடியாதது; நிலையானது. அதுபோலத்தான் மனிதனுக்குச் சமயமும் அமையவேண்டும். இன்று நமது வாழ்க்கையில் சமயம் ஒரு பகுதியாக அமைந்துவிட்டது. சமய வாழ்க்கையைப் பெறுதற்குரியதாகிய வழிபாடு, பிரார்த்தனை முறை போன்றவைகள் கடவுளுக்கு மனிதன் வழங்கும் பயன் நோக்கிய கைமாறு (பிரதிப் பிரயோசனம்) போல வளர்ந்து விட்டது. முன்னர்க் குறிப்பிட்டதுபோலச் சமயம் ஒரு தத்துவம் மட்டுமன்று கொள்கை மட்டுமன்று: அதுவே ஒரு வாழ்க்கைமுறை. வாழ்க்கையின் அனைத்துத் துறையிலும் சமயம் தழுவிக் கலக்கவேண்டும். அன்றே அறியாமை அகலும்; வேற்றுமை விலகும்; அன்பியல் தோன்றும்; அருள் மணம் கமழும். வாழ்க்கை முழுவதும் சமய உணர்வு மயமாக்கிக் கொள்ளாமல் தன்னல உணர்வுடன் வழி பாட்டினை மட்டும் செய்யும் மனிதரைப் “பொக்க மிக்கவர்” என்று அப்பரடிகள் வெறுத்துப் பேசுகிறார். “பொக்க மிக்கவர்” என்பதற்கு உள்ளீடு இல்லாத மனிதர் என்பது பொருள்.
நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவும் நீருங் கண்டு
நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே[26]
என்பது அப்பரடிகள் வாக்கு.
துய்ப்பில் துறவே தூய்மை நெறி
தமிழர் சமய வழிப்பட்ட சமுதாய வாழ்க்கையில், ‘இல்லறம்’, ‘துறவறம்’ என்ற பெரிய வேறுபாடு இருந்ததில்லை. அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டனர். இவற்றில் எது உயர்ந்தது; எது தாழ்ந்தது என்ற விவாதத்திற்கிடமில்லை. அதுமட்டுமன்று. வலிந்து மேற்கொள்ளும் துறவைத் தமிழர் நெறி ஏற்றுக் கொண்டதில்லை. நமது சமயம் துறவின் மூலம்தான் திருவருளைப் பெறமுடியும் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் துய்ப்பு நெறியில் தூய்மையை வற்புறுத்துகிறது. பச்சைத் தன்னலத்தோடு எதனை எவ்வழித் துய்த்தாலும் பாவமே அது தூய்மையில்லாத் துய்ப்பு. அங்ஙனம் துய்ப்பார் அமரரே யானாலும் “தக்கன் வேள்வித் தகர்தின்று” என்பது போல ஏசப்படுவர். நால்வரில் சுந்தரர் துய்ப்பு நெறியில் நின்றவர். ஆனால், அவர் வாழ்ந்து காட்டிய நெறி மிகச் சிறந்த அருள்நெறி. சுந்தரர் தாம் சங்கிலியாரோடு கூடி வாழ்ந்தபோதும் இறைவன் திருவடியை மறக்காமலிருந்ததாகப் பாடுகின்றார்:
கட்ட னேன்பிறந் தேனுனக் காளாய்க்
காதற் சங்கிலி காரண மாக
எட்டி வால்திக முந்திரு மூர்த்தி
என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்
பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்
பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை
ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே[27]
என்பது சுந்தரர் திருவாக்கு சேக்கிழார் சுந்தரர் வாழ்க்கையினைப் போற்றிப் பாராட்டும்வகை சிந்திக்கத்தக்கது மட்டுமன்று; வையகத்தோர் வாழ்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு முறையும் ஆகும்.
தென்னாவ லுரர்மன்னன் தேவர்பிரான் திருவருளால்
மின்னாருங் கொடிமருங்குல் பரவையெனும் மெல்லியல்தன்
பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோக பரம்பரையின் விரும்பினார்[28]
என்பது சேக்கிழார் வாக்கு.
பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற
முளையாது மாயையென் முந்தீபற[29]
என்று திருவுந்தியார் கூறும்.
ஆதலால் வாழ்க்கை மாயம் என்பதும் வாழ்க்கை துன்பம் என்பதும் நம் சமயக் கொள்கையன்று. வாழ்க்கையே தவமாக்கி இன்ப அன்பில் கலத்தலே நமது சமயநெறி காட்டும் வாழ்க்கைமுறை.
கடவுள் உண்டா? இல்லையா?
நம் சமயநெறி “கடவுள் உண்டு” என்ற கொள்கையில் திண்மையுடையது. நம் சமயக் கொள்கைக்கு நல்ல சாத்திர வடிவம் கொடுத்த மெய்கண்டார் கடவுளுண்மையைத் தெளிவாக விளக்குகின்றார். பொதுவாகக் கடவுள் உண்டா? இல்லையா? என்ற விவாதம் விரும்பத்தக்கதன்று. “கடவுள் உண்டு” என்ற நம்பிக்கையில் கால் கொண்ட கொள்கையினர் வழிபாட்டு அனுபவத்தில் ஈடுபடுதல் வேண்டும். “கடவுள் இல்லை” யென்னும் கொள்கையினர் அவர்கள் நம்புகின்ற அறிவில் வளர்ந்து, புதிய அனுபவங்களைப் படைக்க வேண்டும். அதை விட்டு விட்டுக் ‘கடவுள் இல்லை’ என்று சொல்வதினால் மட்டும் ஆகக்கூடிய தொன்றுமில்லை. கடவுள் உண்மையை அறிந்து அனுபவிப்பதற்கு வளர்ந்த அறிவும் அனுபவமும் தேவை. மனித குலத்தின் அறிவோ இன்னமும் பிள்ளைமைப் பருவத்திலேயே யிருக்கிறது. அது முழுமை அடைந்து விடவில்லை. வளர்ந்துள்ள இந்த அறிவு இன்னும் பொருள்களை ஆராய்ந்தே முடிந்தபாடில்லை. இறைவன் பொருளுக்குப் பொருளாக இருப்பவன். அணுக்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலேயே ஆயிரம் முரண்பட்ட கருத்துக்கள்! இறைவன் அணுவில் அணுவாக இருக்கிறான் என்பது நமது ஆன்றோர் கண்ட உண்மை.
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்ததேய்த் தொன்றாந்
திருப்பெருந் துறையுறை சிவனே[30]
என்றும்,
அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க
இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க.[31]
என்றும்,
நூலுனர் வுணரா துண்ணியோன் காண்க[32]
என்றும் திருவாசகம் பேசும். எனவே அறிவு வளர்ந்து கொண்டிருக்கிறது; அது வளரட்டும். அப்படி வளர்ந்து வரும் அறிவை நமது சமயநெறி என்றும் மறப்பதில்லை. இனிமேலும் மறுக்காது. மிகஉயர்ந்த சார்பற்ற அறிவு, நோக்கமற்ற அன்பில் ஒன்றாகிக் கலக்கும்பொழுதே கடவுளுண்மை காட்சிக்கு வரும் அனுபவத்திற்கு வரும். அது நம்மிலிருந்து வெகு தொலைவிலிருக்கிற இலட்சியம்; சில தகவல்களைத் தெரிந்து கொள்வதற்குப் பயன்படுகிற கல்வியறிவும், இயற்கையின் நுட்பங்களை அறிந்து கொள்ளப் பயன்படுகிற விஞ்ஞான அறிவும் அறிவின் தொடக்க நிலை வாயில்கள். இந்த எல்லையிலேயே நின்று கொண்டு இதேதான் அறிவு என்று கடவுளை மறுத்தலிற் பயனில்லை. ஆதலால் கடவுள் உண்டு என்று நம்பி வழிபாடு செய்வது முறையான அறிவு வளர்ச்சிக்கு, நிறைவான அறிவு என்று பாராட்டப்படுகின்ற ஞானத்தைப் பெறுவதற்குத் துணை செய்யும். உயிர், குறைவற்ற-நிறைவான-நன்மை வழிப்பட்ட அன்பின் மயமாதல் முழுமையான அறிவுநிலை; அதற்கே “ஞானநிலை” என்று பெயர். இந்த ஞானம் வந்தாலன்றி உயிர்கள் குறை நீங்கப் பெறா; இன்ப அன்பு எய்த இயலா. 'ஞானத்தினாலன்றி வீடில்லை' என்பது அனுபவ வாக்கு.
எண்ணி எண்ணி அழுவதே வழிபாடு
கடவுள் வழிபாடு என்பது ஒரு பயிற்சி முறை. உண்மையான வழிபாடு என்பது சடங்குகள் மட்டுமன்று. கடவுள் நெறியில் தம்மை வழிப்படுத்திக் கொள்ளுதல் என்பதாகும். அதாவது குற்றங்களினின்றும் விலகி நிறைபெற முயற்சி செய்தல்; தீமை செய்யாது விலகி நன்மை செய்தல்; துன்பத்திற்குரிய காரணத்திலிருந்து விலகி இன்பத்தின் களங்களை அடைதல், மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து அன்பு செய்தல் ஆகியன கடவுள் வழிபாட்டின் உயிர்க் கொள்கைகள். இந்தச் சிலங்களை எளிதில் பெற இயலாது. இவற்றைப் பெறுதற்கு நாம் செய்யும் முயற்சிகளே வழிபாட்டுச் சடங்குகள். பிரார்த்தனை அல்லது வழிபாடு என்பது இறைவனை மகிழ்விப்பதன்று; அவனுக்குக் கொடுக்கக்கூடிய கைம்மாறுமன்று. நமது நாடு மழையின்மையால் வறட்சியடைந்து வாடுவதைக் கண்டு மழைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி நாம் கேட்டுக் கொண்டோம். தமிழகத்தின் திருக்கோயில்களில் பிரார்த்தனைகள் நிகழ்ந்தன. தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பேரவை உறுப்பினர்கள் ஊனுருக, உளமுருகப் பிரார்த்தனை செய்தனர். மழையும் பெய்தது. ஆனால், பகுத்தறிவாளர் ஒருவர், “பிரார்த்தனை செய்தால்தான் இறைவன் மழை பெய்விப்பான் என்றால், அவன் அவ்வளவு தன்னல வாதியா?” என்ற வினாவை எழுப்பியிருந்தார். வினா எழுப்புவதற்கும், வினா எழுப்பப்படும் துறையில் ஆழ்ந்த அனுபவம் வேண்டும். கடல்கள், நீர் நிலைகள் முதலியவற்றில் உள்ள தண்ணீர் கதிரவன் வெப்பத்தால் நீராவியாக மாறி மேகமாக உருவாகி வானவீதியில் உலாவந்து குளிர்ந்த காற்று மோதுவதால் நீர்த்துளிகளாக மாறி மழை பொழிகிறது. இதுவே மழைப் பொழிவைப்பற்றி அறிவியல் தரும் பாடம். மழைப் பொழிவிற்குரிய காரணங்களுள் கடைசித் தேவையாகிய குளிர்ந்த காற்றைத் தவிர மற்றவையெல்லாம் இருக்கின்றன; நிகழ்கின்றன. ஆனால் குளிர்ந்த காற்றில்லை. காற்று குளிர்ந்த காற்றாக மாறுவதற்கு மக்கள் மன வளம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். அன்பிலும் அறத்திலும் தோய்ந்த நெஞ்சுடையவர்களாக இருக்கவேண்டும். அறவுணர்வு இல்லாதார் வையகத்தில் மிகும்பொழுது வளம்மிக்க மலையும்கூட வறுமையடையும் என்று கற்றோர் போற்றும் கலித்தொகை பேசுகிறது.[33]
உயிர்கள் தம் குறைகளை - குற்றங்களை யறிந்து அவற்றினின்றும் விடுதலை பெற நிறைநலம் பெற எண்ணி எண்ணி அழுவதே பிரார்த்தனை. “எண்ணத்தின் வழியே மனிதன் வாழ்வு” என்று உளநூல் தத்துவமும் உடன்படுகிறது. மாணிக்கவாசகர் உயிரின் குறை நிலையினையும் கடவுளின் நிறை நிலையினையும் ஒப்புநோக்கிப் பாடுகின்றார். அவ்வழி நம்மை ஒப்புநோக்கிச் சிந்தனை செய்யத் தாண்டுகின்றார். குற்றங்களினின்று நீங்கி நிறை நலம் பெற வழி நடத்துகின்றார்:
ஆயநான் மறையவனும் நீயே யாதல்
அறிந்துயான் யாவரினுங் கடைய னாய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு
நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன்[34]
யானே பொய் என்நெஞ்சம் பொய், என் அன்பும் பெ
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே?[35]
என்ற பாடலில் பொய்ம்மையை நினைந்து அழத்தூண்டுகின்றார். மகாகவி டென்னிசனும், “பரம்பொருளை நோக்கி உயிர்கள் அழும் அழுகையே பிரார்த்தனை” என்கிறார். ஆக பிரார்த்தனையால் உயிர்கள் குற்றங்களினின்று விடுதலை பெறுகின்றன; பகைமை அகல்கிறது; அன்பு சூழ்கிறது: அவ்வழி மனம் குளிர்கிறது. அதனால் காற்று மண்டலம் குளிர்ச்சியடைகிறது. வான் புயலை நீர்த்திவலைகளாக மாற்றும் குளிர்ந்த காற்றுக்கிடைக்கிறது; மழை பொய்கிறது: இதுவே தத்துவம். ஆகவே பிரார்த்தனை என்பது உயிரை வளர்க்கும் நெறி; உயிரைத் தூய்மைப்படுத்தும் நெறி.
பக்தி-திருத்தொண்டு-தொண்டு
பிரார்த்தனை கங்குகரையற்ற - எல்லைக்கோடுகளற்ற அன்பில் கலக்கும் பொழுது பக்தியாக உருப்பெறுகிறது. பக்தியென்பது உறுப்புக்களில் தொடங்குவதன்று. உணர்வில் முகிழ்த்து, உறுப்புக்களில் பரவி அன்பு மயமாக்குவது. கண்ணப்பர் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அன்புக்குக் கண்ணப்பர் உவமையன்று, கண்ணப்பருக்கு அன்பு உவமை. கண்ணப்பரின் அன்பினை அறிந்து அனுபவித்தற்குரிய கண் யாரிடமும் இல்லாது போயிற்று. ஏன்? காளத்தியப்பனுக்கும்கூட இல்லைபோலும்! கண்ணப்பரின் கண்ணையே ஏற்று அணிந்து கொள்வதன் மூலம், அன்பினைக்கான, அனுபவிக்க, காளத்தியப்பன் ஆர்வம் கொண்டான். ஆக, பக்தி என்பது சடங்கு மட்டுமன்று. அஃது ஓர் உயிர்ப்புள்ள ஊற்று உணர்வின் வெள்ளம், அருளின் ஆற்றுப் பெருக்கு. அந்தப் பக்திப் புனல் மனித நெஞ்சங்களில் ஊற்றெடுத்துப் பெருகுமானால் வஞ்சனையென்ற காட்டாறு வற்றும். பக்திப் புனலை வற்றாது காப்பது திருத்தொண்டு. அந்தப் பக்தி, புனலின் விளைவு தொண்டு. பக்தி, திருத்தொண்டினால் காப்பாற்றப்படுகிறது; வளர்க்கப்படுகிறது. பக்தியின் பயன் தொண்டு. திருத்தொண்டும், தொண்டும் இல்லையானால் பக்தியில்லை என்பதே பொருள். முடிவில்லாத தொடக்கம் இருந்து என்ன பயன்? இலக்கு இல்லாத பயணத்தால் யாது பயன்? பொருள் குறிக்காத சொல்லால் யாது பயன்? உயிர்ப்பில்லாத உடம்பினால் யாது பயன்: திருத்தொண்டும் தொண்டும் இல்லாத பக்தி இருத்தற்கில்லை; இருத்தல் இயலாது. அங்ஙனம் திருத்தொண்டும் தொண்டுமில்லாத பக்தி இருப்பதாகக் கூறுவது ஒரு பொய். நமது சமயம், அறிவிற் பழுத்துப் பக்தியில் கனிந்து திருத்தொண்டாகதொண்டாகப் பரிணமித்துப் பயன் தருவது. வாழும் உயிரின் இலட்சியம் திருத்தொண்டராதலே; பக்தி அதற்கொரு வாயில்.
திருத்தொண்டு என்பது எது? இறை பணி திருத் தொண்டு. இறை பணி என்பது இறைவனுக்காகச் செய்வதன்று. கற்பது அறிவுக்குச் செய்யும் பணியன்று நாம் அறிவைப் பெறுவதற்குரிய பணி. உண்பது உணவுக்குச் செய்யும் பணியன்று; நாம் உயிர் வாழச் செய்யும் பணி. ஆறுகளையும் குளங்களையும் பாதுகாப்பது அவற்றுக்குச் செய்யும் பணியன்று; நாம் வாழச் செய்து கொள்ளும் பணி. அவற்றைப் போலத்தான் இறைபணி என்பதும். திருத்தொண்டு என்பது இறைநலத்தை உயிர்கள் பெறச்செய்யும் பணி; சிறப்பாகத் திருக்கோயிலைத் தூய்மை செய்தல், மலர் தொடுத்தல், உழவாரப் பணி செய்தல், பாடுதல் ஆகிய பணிகளாகும். பழங்காலத்தில் நம்முடைய திருக்கோயிற் பணிகள் திருத்தொண்டுகளாக இருந்தன. அன்று அவை உயிர்நலம் கருதிச் செய்யப்பெற்றன. ஆதலால் அன்று, திருக்கோயில்களில் திருவருள் திருவோலக்கம் இருந்தது. காலப்போக்கில் அவை தொழில் மயமாகிவிட்டன. இன்று அர்ச்சிப்பதிலிருந்து ஆலயத்தைத் தூய்மை செய்யும் பணிவரை அறங்காவல் வரை தொழில் முத்திரைகள் பெற்றுவிட்டன. அதனால் உலகியல் கட்டுக்கோப்பு ஆதிக்கத்திற்குரிய பதிவுகள் அனைத்தும் அங்கு வந்து விட்டன. உயர்ந்தோர் - தாழ்ந்தோர். பெரியோர் - சிறியோர், களவு-காவல், ஏவல் செய்வோர்-ஏவல்கேட்போர் ஆகிய உலகியல் முத்திரைகள் அனைத்தும் அங்குப் பதிந்துவிட்டன. ஆதலால் திருக்கோயில் வட்டாரத்தில் இன்றைக்குத் திருத்தொண்டர்கள் இல்லை. திருமடங்களின் வட்டாரங்களும் அப்படியேதான். அப்பரடிகள்,
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நீத்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
ஆருரா என்றென்றே அலறா நில்லே[36]
என்ற பாடலில் திருத்தொண்டின் முறைமைகளைக் குறிப்பிடுகின்றார். இந்த உணர்வில் திருத்தொண்டு செய்வார் இன்று யார்? இந்த அவல நிலை வந்ததற்குக் காரணம் திருக்கோயில்கள் அப்பட்டமான நிறுவனங்களாக உருமாறி வளர்ந்ததுதான்; அவை, உலகியல் பொருட்செல்வத்தின் குவியலாக மாறியதுதான். ஆற்று நீர் ஓடிக்கொண்டே இருக்குமானால் தூய்மைப் பாதுகாப்புச் செய்யவேண்டியதில்லை. ஆற்றிற்கும் இன்னாருடைய ஆறு என்று எல்லை குறித்த பெயர் கிடையாது; ஊற்று வளமும் ஓட்டமும் இல்லாத குளமாக, குட்டையாகத் தண்ணீர் தேங்கிவிடின் தூய்மைப் பாதுகாப்புத் தேவை. திருக்கோயில்களில் சமய நிறுவனங்களில் பொருள் வரும்; வரவேண்டும். அவை எல்லை குறியாமல் மக்கள் மன்றத்திற்குச் சென்று கொண்டே இருக்கவேண்டும். அங்குச் செல்வம் தேங்கி அஃது உடைமையாக மாறி விடின், துய்ப்புக்கும் எல்லை வந்துவிடும்; துய்ப்புக்கு எல்லைவரும் பொழுது மனித குலத்தில் தீமைகளும் வந்தே தீரும்; அடிப்படை ஆட்டம் கொடுக்கும். இந்த இடத்தில்தான் தொண்டு கால் கொள்கிறது. பக்தியில் பெற்ற உணர்வினால், திருத்தொண்டின்வழிப் பெற்ற பயனால் மனித குலம் வளர, வாழச் செய்வது தொண்டு. ஆக பக்தி, திருத்தொண்டு, தொண்டு ஆகியன ஒன்றையொன்று தழுவி நிற்பன. இதுவே நமது ஆன்றோர் காட்டிய சமய வாழ்க்கை அவ்வழியில் நாம் பயணம் தொடங்கும் பொழுதே நமக்கும் சமய அனுபவம் கிடைக்கும்.
உருவ வழிபாடு ஏன்?
எல்லா உயிரும் உயர்ந்த பக்திமையைப் பெறவேண்டு மென்றால் அவை வழிபாட்டில் ஈடுபடவேண்டும். வழிபாடு என்பது காட்சியினால் மட்டும் நிகழ்த்துவதன்று. வழிபாடு உண்மையான - நிறைவான பயனைத் தரவேண்டுமென்றால் பொறிகளும்-புலன்களும், ஊனும்-உயிரும், உணர்வும், ஒன்றாகக் கலந்து செய்தல் வேண்டும். அந்த அடிப்படையிலேயே நம்முடைய சமயம் திருவுருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறது; வற்புறுத்துகிறது. இன்றும் சிலர், கடவுளுண்மையை ஒத்துக் கொள்கிறார்கள். திருவுருவ வழிபாட்டைக் குறிப்பாகச் சிலைகளை வழிபடுவதை உடன்பட மறுக்கிறார்கள். ஆனால், நமது சமயம் திருவுருவ வழிபாட்டை வற்புறுத்துகிறது. மெய்கண்ட தேவர் சீவன் முத்தர்களுக்குக் கூட ஆலய வழிபாட்டை வற்புறுத்துகிறார்:
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரனெனத் தொழுமே.[37]
என்பது அவர் வாக்கு காற்றோட்டம் இல்லாமல் வெப்பத்தால் புழுக்கம் ஏற்படுகிறபொழுது விசிறியைக் கொண்டு விசிறிக் கொள்கின்றோம். காற்றோட்டம் வந்த பொழுது விசிறியை எறிந்துவிடுகின்றோம். அதுபோல ஞானம் வராதபொழுது திருவுருவ வழிபாட்டைச் செய்ய வேண்டும். ஞானம் வந்துழி விட்டுவிடலாம் என்றும் சிலர் கூறுவர். காற்றோட்டம் இல்லாமல் புழுக்கம் வந்தது என்றால் காற்று ஒருபொழுது வீசுதலும் வீசாமையும் பெறப்படுகிறது. காற்றோட்டம் வந்துழி விசிறியை எறிந்துவிட்டால் மீண்டும் காற்றோட்டம் இல்லாதபொழுது என்ன செய்வது? ஆதலால் உயிர் முற்றாக முழுமைநலம் எய்தும்வரை எந்தச் சாதனங்களையும் இழத்தல் நன்றன்று. இறைவன் உருவ மற்றவன்; அருவ நிலையினன் என்பதும் நமது கோட்பாடே. ஆனால் எல்லாம் வல்ல இறைவன் உருவங்களை ஏற்க முடியும் என்பதில் என்ன தவறு? ஆட்கொள்ளும் வழி ஆட்கொள்ளப்படும் உயிர்களின் தரத்தைப் பொறுத்ததேயன்றி, ஆண்டவன் தகுதியைப் பொறுத்ததாக அமையாது.
உயிர்கள் ஓர் உருவத்தைப் பற்றி நின்றுதான் சிந்திக்க முடிகிறது. அதனால் உருவமற்ற இறைவனும் உருவம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உருவத்தைப் பெறாத ஒன்று அனுபவத்திற்கு வராது. மணம் உருவமற்றது. ஆனால் மலரின் வடிவத்தில் மணம் பொருந்தும் பொழுதும், மணம் நுகரும் மூக்கின் வடிவத்தில் உறவு கொள்ளும் பொழுதும்தான் மணம் அனுபவத்திற்கு வருகிறது. ஒலிக்கு வடிவம் இல்லை. ஆனால் ஒலி, சொல் வடிவம் பெற்று, உருவடிவம் பெற்று செவியொன்றில் உறவு கொள்ளும் பொழுதுதான் அனுபவத்திற்கு வருகிறது. மின்னாற்றலும், உருவங்களின் வாயிலாகத்தான் அனுபவத்திற்கு வருகின்றது. நாம் உருவத்தை வணங்கவில்லை. உருவத்தின் வாயிலாக, இல்லை, உருவத்தில் இறை நிலையைக் கருதியே வழிபடுகின்றோம். நாம் தொழுவது சிலையையன்று. சிலையை மையமாகக் கொண்ட சிந்தனையைத்தான். நம்மீது உள்ள கருணையினாலே இறைவன் உருவங்களில் எழுந்தருளி ஆட்கொள்கிறான் என்பதுதான் நமது கொள்கை, உருவங்களாக எண்ணித் தொழுதல் நமது வழிபாட்டு முறையன்று. உலகியலில்கூட சில பொருள்கள் உருமாறின பிறகு, உருமாறிவிட்டிருக்கும் நிலையிலுள்ள பெயரைத்தான் குறிப்பிடுவோமே தவிர பழைய நிலைப்பெயரைக் குறிப்பிடுவதில்லை. இரும்பு அறிவியல் முறையில் ஒலிபெருக்கியாக்கப் படுகிறது. அதற்கு ஒலிபெருக்கி என்றுதான் பெயர். அது செய்யப்பெற்ற இரும்பை எண்ணி ஒலிபெருக்கியை இரும்பு என்றுகூற இயலாது; கூறக்கூடாது. அரிசி வெந்து சோறான பிறகு, அது சோறே தவிர அரிசி அன்று. எழுத்துகள் உணர்ச்சி வெள்ளம் படைத்த கவிஞனால் முறையாகக் கோக்கப்பெற்றுக் காவியம் ஆக்கப் பெற்றால் அது காவியமே. எழுத்துகள் உண்மையினால், அது அகர நெடுங்கணக்கு ஆகாது. அதுபோலத் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற திருமேனிகள் கற்களாலோ, உலோகத்தாலோ ஆக்கப் பட்டிருக்கலாம். ஆனால் வழிபடுவோர் கல்லையோ உலோகத்தையோ உள்ளத்தில் நினைந்து வழிபடவில்லை. இறைவனையே எண்ணி வழிபடுகின்றனர். அதுதான் திருவுருவ வழிபாட்டின் தத்துவம். இதனை மாணிக்கவாசகர்,
அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறுஅது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே[38]
என்று கூறி விளக்குகிறார். எனவே, திருக்கோயில் வழிபாடு பிள்ளைமை வழிபாடன்று. அது, வழிபாட்டின் முதிர்ந்த நிலை.
வழிபாட்டின் பயன்
வழிபாடு என்பது ஒரு நுண்ணிய கலை நிரம்பிய அருளார்ந்த உயிர்க்கு உதவும் உணர்வுப் பயிற்சி, சிந்தனை யாலன்றி அறிவில்லை. மனம் வளர்வதற்குரிய இந்த உயர் வழிபாட்டு நெறி உலகில் உண்மையில் வளர்ந்தால் மனித குலத்தினிடையில் அன்பு பெருகி வளரும், அமைதி தழுவிய வாழ்க்கை மலரும்; போர் ஒடுங்கும்; புண்ணியம் பெருகும்; சிறைச்சாலைகள் குறையும், அறச்சாலைகள் வளரும். இத்தகு உயர்ந்த வழிபாட்டினை ஒருமை உணர்வுடன் நிகழ்த்துதல் வேண்டும். மனம் இயல்பில் அலையும் தன்மையது. “சென்றவிடத்தாற் செலவிடாஅது”[39] என்பார் திருவள்ளுவர் அலைகின்ற மனத்தை ஒருமைப்படுத்துதல் வழிபாட்டின் முதற்படி “ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை”[40] என்பார் திருநாவுக்கரசர், “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்”[41] என்பார் வள்ளலார், அண்ணல் நாமத்தை ஐந்தெழுத்தை வைத்த மாநிதி என்று எண்ணுதல் இன்ப உணர்வை நல்கும். அண்ணல் திருநாமத்தை எண்ணி மலரிட்டுப் போற்றுதல், உலகம் முழுவதையும் பால் பொழிந்து வளர்த்துக் காப்பாற்றும் பசுவிற்கு வாயுறை அளித்தல், உண்ண வேண்டியவர்களுக்கு உணவளித்தல், இனிய வார்த்தைகளைக் கூறுதல் இவையனைத்துமே சமய வாழ்க்கையின் படிகள் என்று திருமந்திரம் நமக்கு வழி காட்டுகிறது.
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்.உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே?[42]
என்பது திருமந்திரம்.
திருமூலர் காட்டும் சமய வாழ்க்கையில் கடவுட் பணியும் கடவுட் பணியின்றி உயிர் நலங்காக்கும் பணியும் இருப்பதறிந்து வாழ்க்கையில் மேற்கொள்ளத்தக்கது.
சமய வாழ்க்கை-வழிபாட்டுணர்வில் வளர்ந்த வாழ்க்கை அது பணிமயமானது. பணி என்பது ஓர் உயர்ந்த சொல். ஆனால், இன்று அந்தச் சொல் மிகச் சாதாரணமாக உலகியலில் சொல்லப்படுகிறது பணியாள், பணிமனை என்று. பணி, தன்முனைப்பு இன்றிச் செய்யப் பெறுவது: உயர்வு தாழ்வு நோக்கின்றிச் செய்யப் பெறுவது; யாரிடமும் பணிந்து செய்வது. பயன் கருதாது செய்வது. பணி செய்கின்றோம் என்ற செருக்கு உணர்வின்றிச் செய்வது பணி. அங்ஙனம் செய்யப்பெறுபவையே பணிகள். சமய வாழ்க்கையின் நிறைவு, பணியில் தெரியும்; அத்தகு பணிகள் செய்யும் பண்பில் நாம் ஒவ்வொருவரும் வளர வேண்டும்; நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தொகுப்புரை
இளமையில் திருமுறை உணர்வை ஊட்டி வளர்த்த சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை அவர்களின் கொடையில் மலர்ந்த சொர்ணாம்பாள் அறக்கட்டளையின் சார்பில் இன்று பேசிய பேச்சின் உட்கிடை வருமாறு: மனிதன் விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையைப் பெற்று இறைநிலையை எய்த வேண்டும்; உயிர்கள் இயல்பாய குறையினின்றும் நீங்கி நிறைநலம் பெறச் சமயம் துணை செய்கிறது; கல்வியிலும் அறிவு சிறந்தது: அறிவிலும் ஞானம் சிறந்தது; ஞானத்தை நல்கும் சமயம் ஒரு வாழ்க்கை முறை; சமயங்கள் அனைத்தும் மனித குலத்தின் ஈடேற்றத்திற்காகவே தோன்றின. சமயப் பூசல்கள் உலகியல் நலன்களுக்காகச் சமயத்தின் பேரால் நிகழ்ந்தன - நிகழ்வன. சமய நெறி உணர்த்துவது வேறுபாடுகளுக்குள்ளும் விழுமிய ஒருமைப் பாட்டைக் காண்பதுதான். ‘வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டே’ என்று தாயுமானார் அருளியமை நினைவு கூர்ந்து சமய நெறிகளைக் கடந்த பொதுமை நெறி நிற்கவேண்டும். அதுவே மனித உலகத்தை ஈடேற்றுவதற்குரிய உயர்ந்த நெறி. அந்நெறியே தமிழர் சமய நெறி.
தமிழினம் மிகத் தொன்மையான காலத்திலேயே சமய வாழ்க்கையை மேற்கொண்டது. சங்க கால வாழ்க்கை ஒரு முழுமையான சமய வாழ்க்கை. ஆதலால் பக்திக்குத் தணி இயக்கங்களும், இலக்கியங்களும் இருந்ததில்லை. சங்க காலத்துக்குப் பின் நமது சமய நெறியில் பண்பாட்டில் ஏற்பட்ட வீழ்ச்சியை எடுத்துக்காட்டி நிறைவு செய்யப் பக்தி இயக்கமும், பக்தி இலக்கியங்களும் தோன்றி வளர்ந்தன.
தமிழர் சமயம் நம்பிக்கைக்குரியது. நல்லெண்ணத் திற்குரியது, அறிவாராய்ச்சியில் அமைந்தது. சிந்தனையின் எல்லைவரை வினா எழுப்பி வளர்ந்த நெறி. அதனால் அதற்குச் ‘சித்தாந்தம்’ என்று பெயர். நமது சமயத்தில் முப்பொருள் கொள்கை விழுமிய கொள்கை இறை, உயிர், தளை என்பன என்றும் உள.
கடவுள் உண்டா? இல்லையா? என்று விவாதம் நிகழ்த்த இது உரிய காலமன்று. அறியாமையே தோன்றாத அறிவு உலகத்தில் தோன்றிவிடுமானால், இனி ஆராய வேண்டிய பொருள்கள் இல்லையென்ற நிலை தோன்றி விடுமானால் அதைப் பற்றி ஆராயலாம். கடவுள் இல்லை என்பவர்கள் மீது நமக்கு வருத்தம் இல்லை. அவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவும் நாம் தயாராக இல்லை. நம்முடைய கொள்கையே கடவுள் எல்லாமாக இருக்கிறார் என்பதுதான். கடவுள் உண்டு என்போர் கடவுளை வழிபட வேண்டும். கடவுள் தன்மையெனப் பாராட்டப் பெறும் அன்பு, அருள், ஒப்புரவுக் கொள்கை நாட்டில் தழைக்கும்படி கடவுள் நம்பிக்கை யுடையோர் வாழ்ந்து காட்டவேண்டும். சின்னங்களும் சடங்குகளும்தான் கடவுள் நெறி என்று மக்களை நம்ப வைக்கக்கூடாது. மழை பொழிந்ததன் விளைவை மண் காட்டுவதைபோல், சமய நெறி நின்று வாழ்வோரின் சால்பினை வையகம் காட்டவேண்டும்; விளைவுகள் காட்டவேண்டும். அதாவது துன்ப நீக்கமும் இன்ப நிறைவுமாகும்.
பழமை, புதுமை இவை உண்மையில் வாழ்க்கையில் ஈடுபடாதவர்களுடைய கற்பனை; பட்டி மன்றங்களுக்குப் பயன்படும் பொய்ம்மை; பழமை புதுமைக்குத் தாய். புதுமை பழமையின் சேய், வாழ்க்கை வாழ்வதற்கென்பது நம்முடைய நெறி. உலகம் துன்பமன்று வாழ்க்கையும் துன்பமன்று. ஒரோவழி துன்பமாக இருந்தாலும் இன்பமாக மாற்ற வேண்டும். இன்னாதம்ம உலகம் இனிய காண்க என்பது பக்குடுக்கை நன்கணியார் காட்டிய நன்னெறி.
சைவ நாயன்மார்கள் சமணத்தை எதிர்த்துப் போராடியது, வழிவழி வளர்ந்து வந்த தமிழினத்தின் நாகரிகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கேயாம். அதுவும் கூடத் தனித்துச் சமணர்கள் வளர்ந்த பொழுது நாயன்மார்கள் எதிர்க்கவில்லை. மருணீக்கியார் சைவ சமயத்திலிருந்து சமணத்திற்குச் சென்றபொழுது சைவர்கள் பதற்றமடையவில்லை. அதுதான் நமது சமய நெறியாளர்கள் கண்ட உயர்ந்த பண்பாடு. ஆனால், மருணீக்கியார் திரும்பவும் சைவத்திற்கு வந்தபொழுது சமணர்கள் ஆத்திரப்பட்டனர். அரசினைக் கையகப்படுத்திக்கொண்டு கொடிய தண்டனைகளைச் செய்வித்தனர். ஐரோப்பிய வரலாறுகளில் கிறித்தவ சமயத் தலைவர்கள் அரசைக் கைப்பற்றிக் கொண்டு மற்றச் சமயத்தினர்க்குத் துன்பம் செய்ததை வரலாற்றில் படித்திருக்கிறோம். அதே தவற்றை, நெறியல்லா முறையை இங்கே சமண முனிவர்கள் மேற்கொண்டனர். இஃது ஒரு தற்காப்புப் பணி.
நமது சமயத்தில் தீண்டாமை இல்லை, தீண்டாமையை அறவே அகற்றவேண்டும். ஒன்றே குலம் என்ற திருமூலர் ஆணையின் வழி ஒரு குலம் அமைக்கவேண்டும். அருளின் விளக்கமாகிய ஒப்புரவுக் கொள்கையால் வறுமையை மாற்றவேண்டும். வளம் படைத்திடுதல் வேண்டும். வாழ்க்கை முழுவதும் சமயச் சீலம் இடம் பெறுமாறு வாழ்ந்துகாட்ட வேண்டும். துய்த்தல் தவறன்று; ஆனால் துய்த்தலில் அன்பு தேவை; துறவின் தொடக்கம் தேவை. துறவின்வழித் துய்த்தலே இன்ப அன்பினை விளைவிக்கும் துய்ப்பு.
வழிபாடு ஒரு சடங்குமட்டுமன்று. புலன்களைத் துய்மை செய்வது; பொறிகளை இன்பமயமாக்குவது. பக்தி ஓர் உணர்வு; பக்தி திருத்தொண்டுக்கு ஊற்று; தொண்டு அதன் விளைவு. இப்பண்புகள் பல்கிவளர நாள்தோறும் இறைவனை வழிபடவேண்டும்.
இறைவன் அருஉருவினன். ஆயினும் உயிர்கள் எளிதில் நினைத்திட அவன் உருவமேற்றுக் கொள்கின்றான். நாம் வணங்குவது உருவங்களையன்று; உருவங்களை மையமாகக் கொண்ட கடவுள் தன்மையையே. எல்லாமாக இருக்கும் கடவுள் ஏன் உருவங்களாக இருக்கமுடியாது? சின்னங்கள் சடங்குகள் இல்லாத சமயம் உலகில் எதுவுமில்லை; உலகில் எந்த இயக்கமும் இல்லை. திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன் தன்னைச் சிவனெனவே தேறி வழிபாடு செய்வோம். ஒன்றியிருந்து வழிபாடு செய்வோம். அவன் திருவடிப் போதுகளில் மலர்களை இடுவோம். உயிர்க் குலத்தை வாழ்விப்போம்; பணிகளைச் செய்வோம்; இத்தகு சிந்தனைகளை இன்று நினைவிற்குக் கொண்டு வந்தோம்.
ஊர்களைச் சாலைகள் இணைத்து வெற்றி பெற்று விட்டன. அண்டங்களை வானவெளிச்சாலைகள் இணைத்து வெற்றி பெற்று விட்டன. ஆனால், மனித உள்ளங்களை இணைக்கக் கண்ட நன்மை பெருகு அருள்நெறி, நாட்டில் வளரவில்லை; நாட்டு மக்களின் நெஞ்சங்கள் அருள்நெறி வழி இணைக்கப் பெறவில்லை. மனித உள்ளங்கள் அருள் நெறி வழி இணைக்கப்பெறும்பொழுது மண்ணகம் விண்ணக மாகும்; அப்போது வான்முகில் வழாது பெய்யும்; மலிவளம் சுரக்கும்; குறைவிலாது உயிர்கள் வாழும். நாட்டில் நல்லாசு நிலவும், அறநெறிகள் வளரும்; தவநெறி தழைக்கும்; நீதி நிலைபெறும்; சைவம் நின்று நிலவும். அந்த நன்னாளை எண்ணிப் பிரார்த்தனை செய்வோம்.
மேற்கோள் விளக்கம்
↑ தாயுமானவடிகள் திருப்பாடல்கள், ஆனந்தமானபரம், 9,
↑ திருவாசகம், திருப்புலம்பல், 3.
↑ திருஞானசம்பந்தர், 340 தனித்திருவிருக்குக்குறள், 3.
↑ திருக்குறள், 1110.
↑ தாயுமானவடிகள் திருப்பாடல்கள், கல்லாலின், 25
↑ திவ்வியப் பிரபந்தம். 2573.
↑ திருவாசகம், போற்றித்திருவகவல் அடி, 164-165.
↑ புறம். 192.
↑ புறம். 192.
↑ புறம். 134.
↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 972.
↑ திருவாசகம், திருவெம்பாவை, 9
↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 784
↑ புறம், 194.
↑ திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 380,
↑ சுந்தரர், 294.
↑ சுந்தரர், 294.
↑ திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 929.
↑ திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 938.
↑ திருவாசகம், கண்டபத்து, 5
↑ திருமந்திரம், 2066.
↑ புறம். 189
↑ சிலப்பதிகாரம் வேட்டுவ வரி, 21,
↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 383.
↑ அகம், 53.
↑ திருநாவுக்கரசர், ஐந்தாம் திருமுறை, 892
↑ சுந்தரர், 551.
↑ திருத்தொண்டர் புராணம், தடுத்தாட்கொண்ட புராணம், 181.
↑ திருவுந்தியார்; 33.
↑ திருவாசகம், கோயில் திருப்பதிகம், 7.
↑ திருவாசகம், திருவண்டப் பகுதி, அடி, 45-46.
↑ திருவாசகம், திருவண்டப் பகுதி, அடி, 49
↑ "வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்தொடா
கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர்
அல்ல புரிந்தொழுக லான்.கலி, குறிஞ்சி, 3
↑ திருவாசகம், திருச்சதகம், 23
↑ திருவாசகம், திருச்சதகம், 90.
↑ திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 312.
↑ சிவஞானபோதம் சூத்திரம், 12.
↑ திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி, 7.
↑ குறள், 422.
↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 781.
↑ திருவருட்பா, தெய்வமணி மாலை, 8.
↑ திருமந்திரம், 109
2. சமய மறுமலர்ச்சி
இன்றைய நமது சமயநிலை
நமது சமயம் சிவநெறி, திருமால் நெறி, திருமுருகன் நெறி என்றிவ்வாறு அறுவகைச் சமயநெறிகளாயிற்று. ஆயினும் இந்த அறுவகைச் சமயங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் மிகக் குறைவு. சிவநெறி, திருமால்நெறி இவற்றினிடையே தத்துவங்களின் வழியிலும் இறைநிலையிலும் வேறுபாடுகள் உண்டு. ஆயினும் இன்று வைணவ சமயத் தலைவர்கள் காட்டும் அளவு, சைவ-வைணவத்துக்கிடையே வேறுபாடுகளில்லை. வைணவர்கள், அவர்களின் நெறியில் தோன்றிய வடகலை, தென்கலை வேறுபாட்டைக் கூடப் பெரிதுபடுத்தி வருகின்றனர். உண்மையிற் சொன்னால் அவர்கள் வைணவத்துக்குச் செய்யும் பணியை விட வேற்றுமைகளுக்கே அதிகப்பணி செய்து வருகின்றனர். இல்லையானால், இந்த இருபதாம் நூற்றாண்டில் “யானைக்கு எந்த நாமம் போடுவது” என்று வழக்கு மன்றம் ஏறுவார்களா? நினைத்தாலே நெஞ்சைச் சுடும் செய்தி.
சிவநெறிக்கும் மற்ற சமயங்களுக்குமிடையே உள்ள வேறுபாடு, வழிபடு கடவுளின்வழி அமைவதேயாம். இடையில் புறச் சமய நெருக்கடிகளிலிருந்து நமது சமுதாயத்தைக் காப்பாற்ற நினைத்தபோது, இந்த அறுவகைச் சமயங்களையும் இணைத்து ஒரு சமயமாக்கினர். அதனால்தான் நம் சமயத்தில் பல மூர்த்திகளை வழிபடும் நிலை உருவாயிற்று. அதனால் சிலர், பல கடவுள்கள் நம் சமயத்தில் இருப்பதைக் குறைவாக நினைக்கின்றனர். அது தவறு. கடவுள் ஒருவர்தான்; அவரைக் கண்டவர்கள் பல வகையினர். அதனால் அவரவர்தம் அனுபவத்தின் வழி பெயர்கள் மாறுபட்டன; அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டவழி அனைத்து மூர்த்திகளும் ஏற்றுக்கொள்ளப்பெற்றன. ஆனாலும் வழிபடுவோர் ஒரு கடவுளை வழிபட வேண்டு மென்பதுதான் நெறி. நமது தொன்மைக் காலச் சமயநெறி, சிவநெறியே! இந்தியத் துணைக் கண்டம் முழுவதும், மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் முழுவதும் பரவி வளர்ந்த நெறி சிவநெறி.
இந்து என்னும் பெயர்
நமது சமயம் சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்து சமயம் என்று பெயர் பெற்றது. இந்து சமயம் என்ற பெயரமைப்பு இன்று விவாதத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்து சமயம் என்றால் அஃதொரு பச்சைப் பார்ப்பனீயம் என்ற கருத்து வளர்ந்திருக்கிறது. அதிலும் உண்மையில்லாமற் போகவில்லை. ஆனால், களர் என்பதற்காகக் கழனியை விடுவார் யார்? களர் நீக்கப்படுதல் வேண்டும் என்பதே உண்மை. அதுபோல மனித குலத்துக்கு வேண்டாதனவற்றை விலக்கி, நாம் இந்து சமயம் என்ற பெயரை அதன் பொதுத் தன்மையை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஏன்? இமயத்தின் முடியிலிருந்து குமரிமுனை வரை நமது மக்கள் வழிபடும் கடவுளின் பெயர்கள் மாறுபடவில்லை; வடிவங்கள் மாறுபடவில்லை, சமயச் சின்னங்கள் மாறுபடவில்லை. இந்த அளவு பரந்து வளர்ந்துள்ள ஒருமைப்பாட்டை இழத்தல் கூடாது.
இந்து சமயம் என்ற பெயரில் பல கடவுள்களை வழிபடும் வழக்கம் வராமல் பாதுகாப்பது அவசியம். சிறு தெய்வ வழிபாட்டை அறவே விலக்கல் வேண்டும். திருக்கோயில் வழிபாட்டில் தொழில் முறை கால்கொண்டவுடன் அருச்சகர்கள் தமது போட்டா போட்டிகளைக் கடவுள்களின் போட்டிகளாக்கி விட்டனர். அதன் காரணமாக “இந்தக் கடவுளை வழிபட்டால், அது கிடைக்கும்; இது கிடைக்கும்” என்ற பிரசாரங்கள்-விளம்பரங்கள் பெருகின, ஏன் ? புராணங்களே கூடத்தோன்றின. கடவுள் வழிபாட்டில் ஈடுபடுகின்றவர்கள் பல நலன்களை அடைகின்றனர் என்பது உண்மை. ஆயினும், அதனைக் காரணமாகக் கொண்டு வழிபாட்டை வணிக முறையாக்கக் கூடாது. இந்த மனப்போக்கு, சமயநெறியின் விழுமிய குறிக்கோளாகிய நிறைநலத்தைப்பெறத் துணை செய்யாது. கடவுளின் கருணை, காரணங்களாக அமையுமே தவிரக் காரியங்களாக அமையாது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். ஆதலால் மக்களின் இச்சைகளை-ஆசைகளைத் தூண்டி அவ்வழி நிகழ்த்தும் வழிபாடுகள் நெறியுடையனவல்ல; முற்றாகத் தவிர்க்கப்படவேண்டியவை; வெறுக்கத்தக்கவை. எந்த ஒரு தத்துவத்தில் - மூர்த்தியிடத்தில் நமக்கு ஈடுபாடு தோன்றுகிறதோ அந்த மூர்த்தியையே உயிர்க்கு நாயகனாகக் கொண்டு, நினைந்து நினைந்து, உள்ளக்கிழியில் உருவெழுதி, உணர்ந்து உணர்ந்து வழிபடுதல் வேண்டும். அப்போதுதான் வழிபாட்டின் பயனாகிய இன்ப அன்பு நிலையை எய்த முடியும்.
உயிர் - பெயர் விளக்கம்
மனிதன் ஒரு விந்தையான பிறவி, மானுடப் பிறப்பு உரிமைகளின் களம்: அனுபவங்களின் மையம், நெடிய வரலாற்றுக்கு மின்விசை. இந்த விந்தையான மானுடச் சாதி இல்லாது போனால், இயற்கைக்குப் பொருளேது? கடவுளுக்குத்தான் வழிபாடு ஏது?
உயிர், நுண் பொருள்; உருவமில்லாதது; அறிவு உருவானது; (அறிவில்) வளரும் தன்மையது; சார்ந்ததன் வண்ணமாவது. அனுபவம் அதன் பிறப்புரிமை! இத்தனை மாட்சிமையுடைய உயிரின் அறிவு எல்லைக்குட்பட்டதே! அதன் ஆற்றலும் எல்லைக்குட்பட்டதே! எல்லை, சிறுமையின் சின்னம் தானே! எல்லை கடந்தது தானே பெருமைக்குரியது! அதனால், அறிவிலும் ஆற்றலிலும் எல்லைக்குட்பட்டு, அனுபவம் முழுமையுறாமல் அல்லற்படும் ஆருயிர்க்குத் துணையாய் அமையத்தக்கது பேரறிவே! பேராற்றலே! எல்லைகளைக் கடந்த ஒன்றே! சுருங்கக் கூறின் உயிர், அறிவு விளக்கத்தைப் பெறுவதற்குரியதே யானாலும், அறியாமையைச் சார்ந்திருக்கிறது. அஃது ஆற்றல் மிக்குடையதானாலும், அந்த ஆற்றல் முடக்கப்பட்டு, ஆற்றல் உண்டோ இல்லையோ என்ற நிலையில் அவலத்தில் ஆழ்ந்துள்ளது. இன்பத் துய்ப்பிற்குரிய உயிர், நெறிமுறைப் பிறழ்வின் காரணமாகத் துன்பத்தில் துயருறுகிறது. உயிர், உய்தலுக்குரியது; உய்தி பெறும் தன்மையது. அது உய்தி பெறவேண்டும். உய்தலே உயிரின் உயரிய குறிக்கோள்.
சமய நெறி
உயிர்கள் உய்தி பெறவே ஒரு பெருங்கடவுள். உயிர்கள் உய்திபெறப் பயிலும் சாலையே வாழ்க்கை உயிர்கள் உய்யும் நெறியே சமய நெறி. உயிர்கள் உய்யும் நெறியில் தலைப்படின் சிந்தையில் தெளிவு, அறிவில் ஆக்கம், ஆற்றலின் கொள்கலம், அயரா அன்பு, எங்கும் இன்பம் என்ற சூழல் உருவாகும். இதுவே சமய வழிப்பட்ட சமுதாயம், களவு-காவல், உயர்ந்தோர்-தாழ்ந்தோர், உடையார்-இல்லாதார் என்ற அமைப்பு சமயநெறி சாராதார் அமைப்பு. ஆனால், இன்றைய சமுதாயத்தில் நிலை தடுமாற்றம். சமயம் இயக்க நியதிகளினின்றும் விலகி நிறுவனங்களாகி அதுவே களவுக்கும்-காவலுக்கும் ஆளாகி, உயர்ந்தோர்-தாழ்ந்தோர் என்ற போராட்டத்தின் களமாகி, உடையாரை உவந்தாக்கியும், இல்லாரை எள்ளி ஒதுக்கியும் பேயாட்டம் ஆடுகிறது. பேயாட்டம், பிரானாட்டம் ஆக முடியுமா? ஆதலால் உய்யும் நெறி அறிந்து உய்தலே சமய நெறி.
இறை வழிபாடு
உயிர், உய்தற்குக் கடவுளை நாடுகிறது. இங்கு உயிரும் உருவமற்றது; உயிர் அடையத் துடிக்கும் ஒரு பெருங் கடவுளும் உருவமற்றதே! இங்குக் கலத்தல் உருவங்கள் அல்ல; உணர்வுகளேயாம். உயிர், உணர்வினால் அவாவி, அவாவி, பேரறிவாகவும் பேராற்றலாகவும் விளங்கும் இறையினை நினைத்தல் மூலம், அந்த அறிவையும் ஆற்றலையும் தன்பால் ஈர்த்துத் தன்னை நிறைவுபடுத்திக் கொள்ளும் சாதனையே வழிபாடு. இஃதோர் அறிவுப் பயிற்தி!! உணர்வுப் பழக்கம்! இஃது எளிதில் கைவருவதன்று; அரிதில் முயன்று அடையக்கூடிய சாதனை. பன்னாள் அரன்தனை அர்ச்சிக்கில் சற்றே மெய்ஞ்ஞானம் மிகும். உணர்வுப் பயிற்சி எளிதில் அமையாத தொன்று. அதனால், உணர்வுப் பயிற்சியினை நோக்கமாகக் கொண்டு தொடக்க நிலையில் உருவப் பயிற்சி வழங்கப் பெறுகிறது.
உருவமற்ற ஒன்று, அனுபவத்தைப் பெறவேண்டு மானாலும், அனுபவத்தைத் தரவேண்டுமானாலும் உருவம் பெறுதலைத் தவிர வேறுவழியில்லை. காதல், உருவமற்றது. ஆனால் உருவமைதியில் காதல் நிகழும் பொழுதுதான் இன்பம் கிடைக்கிறது. இதனால் காதலுக்கு உருவமில்லை என்பதும், காதலிப்பவர்க்கு உருவம் வேண்டும் என்பதும் பெறப்படுகின்றன. அதனாலன்றோ வள்ளுவம், காதலர் இருவர் பிணைப்பிற்கு உடம்பு-உயிர்ப் பிணைப்பை உவமை ஆக்கிற்று!... உடல் இன்றேல் உயிர்க்கும் துய்ப்பில்லை; உயிர் இன்றேல் உடலுக்கும் துய்ப்பில்லை என்பது தானே பொருள். உருவ வழிபாட்டுக்கு இஃதொரு தத்துவம். உயிர், உருவ அமைதியுடைய உடலினைப் பெற்றே துய்ப்பினைப் பெறுகிறது. அஃது உருவத்தை இழக்குமானால் துய்ப்பில்லை. அதுபோலவே கடவுளும். அருவப் பொருள் உயிர்களின் துய்ப்பிற்குத் துணையாயிருக்கும் பொழுது உருவம் பெறுகிறது. விஞ்ஞான அடிப்படையில்கூட ஒலியலை உருவமில்லாதது. அந்த ஒலியலை வானொலி உருவ வடிவத்தின் வழி இயங்கும்பொழுது செவிப்புலன் அனுபவத்திற்கு வருகிறது. மின்னாற்றலும் அப்படியே! ஆக, உய்தி பெற வேண்டிய உயிர், மானுட வடிவத்திலும் உய்திக்குத் துணை நிற்கும் வழிபாட்டுக்குரிய திருமேனி வடிவத்திலும் கொண்ட உறவே திருக்கோயில் வழிபாடாக மலர்ந்தது. திருக்கோயில் வழிபாடு, மனிதன் கடவுளைத் தோழமை கொள்ளும் களமாகவே அமைந்தது.
வழிபாடு - விளக்கம்
வழிபாடு என்பது, ஓர் உயிர், தன் உயர்வுக்காகத் தானே செய்யும் ஒருவகை அறிவுப் பயிற்சி உணர்வுப் பயிற்சி. ஒருவர் அறிவுபெறப் பிறிதொருவர் படிக்க முடியாது. ஒருவர் பசிக்காகப் பிறிதொருவர் உண்ண முடியாது. ஆனால் விந்தை! இன்று மக்களுக்காகச் சிலர் வழிபாடு செய்கிறார்களாம். இஃது எங்கனம் சாத்தியம்: தண்ணீரைக் குடித்துச் செரித்த விதையால்தான் முளைக்க முடியுமே தவிர, அண்டாவில் தண்ணி இருப்பதினால் பக்கத்தில் உள்ள விதை முளைத்துவிடாது. தண்ணீரைக் குடிக்கும் இயல்பில்லாத விதை தண்ணில் கிடந்தாலும் முளைக்காது. “ஆண்டாண்டு அழுதாலும் அவளே பெறவேண்டும்” என்ற பழமொழி போல, ஒவ்வோருயிரும் தத்தம் உய்திக்குத் தாமே அழுது வழிபாடாற்ற வேண்டும். இதுவே, சமயத் தத்துவத்தின் அடிப்படை, கடவுள் வழிபாட்டின் நோக்கம்.
வழிபாட்டு வரலாறு
பழங்காலத்தில் உய்யுமாறறிந்த அனைவரும், அவரவர்களே வழிபாடு ஆற்றியிருக்கின்றனர். ஒருவருக்காக இன்னொருவர் வழிபாடு செய்யும் வழக்கம் பழங்காலத்தில் இருந்ததில்லை. அதனால்தான் எளிதில் எல்லோரும் வழிபடத் தக்கவாறு மணலில், சாணத்தில் இறைவனை எழுந்தருளச் செய்து வழிபாடு நிகழ்த்தும் வழக்கம் இருந்திருக்கிறது. சண்டீசர் மணலில்தானே திருமேனி செய்து வழிபட்டார்! காலம் செல்லச் செல்ல, காலத்தில் கரையாதவாறு நிலையான திருமேனிகள் அமைத்து வழிபாடு செய்யும் உணர்வு மேலிடக் கற்களால் ஆன திருமேனிகள் தோன்றின. வழிபாட்டில் ஆர்வம் பெருகப் பெருகத் தாம் வழிபடும் திருமேனிக்குத் திருக்கோயில் அமைக்கும் ஆர்வம் மக்கள் மன்றத்தில் வளர்ந்தது. மக்கள் மன்றத்தின் ஆர்வத்தை அறிந்த தமிழக மன்னர்கள் திருக்கோயில்கள் பலவற்றை எழுப்பினார்கள். திருக்கோயில்கள் தோன்றிய பிறகும் கூட மக்கள் தாமே சென்று இறைவனுக்குப் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்து வந்தனர்.
இங்ஙனம், பக்தி நெறியில் வளர்ந்த சமயம், பாதுகாப்பு என்ற பெயரில் தத்துவ, சாத்திரச் சூழலுக்குள் அடி வைத்தது. ஆகமங்கள் தோன்றுகின்றன. அன்பிற்குத் தடை விதித்து அறிவுக்கும் ஆட்சிக்கும் வழி வகுக்கப்படுகிறது; பொதுமை மறைகிறது! திருக்கோயில் வழிபாட்டை என்றென்றும் செய்வோரென்று தம் குடியில் மூத்தோர் சிலரை நியமிக்கின்றனர். அவர்கள் வல்லுடும்பாகப் பற்றிக்கொண்டு மேட்டுக் குடியினராயினர்; கடவுளுக்கு உரிமைச் சுற்றம் பூண்டனர்; மற்றவர்களை ஒதுக்கினர்; எளியோரை எட்ட நிறுத்தினர்; உடையோரை உவந்து வாழ்த்தி மடி நிறையப் பெற்றனர். இது கோயில் முறை தெரிக்கும் வரலாறு!
திருக்கோயில்கள் தோன்றிய காலக்கட்டத்தில் கூட - ஏன்? அவை தோன்றிப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூடத் தாமே பூவும் புனலும் சொரிந்து வழிபடும் உரிமை மக்களுக்கு இருந்தது. அதனாலன்றோ, தமிழகத் திருத்தல வரலாறுகள் அனைத்தும் வாலி பூசித்தது, தருமன் பூசித்தது, இராமன் பூசித்தது, இராவணன் பூசித்தது, நளன் பூசித்தது, என்றும் - இவை மட்டுந்தானா? யானை பூசித்தது, குரங்கு பூசித்தது, எறும்பு பூசித்தது. நண்டு பூசித்தது என்றெல்லாம் கூட் திருக்கோயிற் புராணங்கள் உள்ளன. இதுவே, பண்டைய திருக்கோயில்களின் நிலை.
இடைக் காலத்தில் திருக்கோயிலைத் தொழிற் கூடமாக்க நினைத்தவர்கள், மற்றவர்கள் வழிபடும் உரிமையை மறுத்தனர். அதற்குப் “பரார்த்த பூசை” என்று ஒரு பெயரைச் சூட்டினர். பெயர், நல்ல பெயர்தான்! ஆனால் வைதிகர்கள் அதற்குச் சொல்லும் பொருள்தான் பொருத்தமாக இல்லை. பரார்த்தம் என்னும் சொல்லுக்குப் பொருள், மற்றவர்களுக்காகச் செய்வது என்பதுதான். அதாவது, நாள்தோறும் ஒரு சின்னத்தில் இறைவனை எழுந்தருளச் செய்யும் பயிற்சி அல்லது செயல்முறை. இது எளிதன்று. அதன் காரணமாகப் பலர் வந்து வழிபட்டுப் பயன்பெறத்தக்க வகையில் ஒருவர் ஒரு திருமேனியில் இறைவனை எழுந்தருள்வித்து, மற்றவர்கள் வழிபாடு செய்து கொள்ளத் தருதல் என்பதே பரார்த்த பூசை என்பதன் பொருள். ஆனால் நம்மில், மூத்த குடியினராய் அமர்த்தப் பட்டவர்கள் நம்மில் உயர்ந்தோராகி என்றென்றும் திருக்கோயிலில் நிலையான உரிமை பெறவும், பெரும்பான்மையான சமூகத்தாரை விலக்கி வைக்கவும் ஆசாரம், ஆகமம் என்ற பெயரால் தடை விதித்தனர். அதனாலேயே நமது நாட்டில் சமயம் அனுபவத்திற்கு வராது போயிற்று.
வழிபாட்டின் பழைய முறை
நமது முன்னோர்கள் திருக்கோவிலுக்குச் சென்று பூவும் புனலுமிட்டு வழிபட்டனர் என்பதற்கு முன்னர் எடுத்துக் காட்டிய தல புராணங்கள் சான்று கூறும். நமது திருமுறைகள் தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம், மக்கள் தாமே வழிபாடு செய்து கொண்டனர் என்றே பேசுகின்றன.
திருஞான சம்பந்தர் வேத நெறி தழைத்தோங்கத் தோன்றியவர்: சைவ நெறி விளங்கத் தோன்றிய ஞாயிறு. அவர் பாடிய திரு இராமேச்சுரத் திருப்பதிகத்தில்,
தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை விடுமே[1]
என்ற திருப்பாடலில் வில்லினைத் தாங்கிய அரச (க்ஷத்திரிய) மரபைச் சார்ந்த இராமன் பூசித்த வரலாறு கூறப்படுகிறது.
அப்பரடிகள் திருவையாற்றுத் திருப்பதிகத்தில் பக்தர்கள் வழிபாட்டுக்காகப் பூவும், நீரும் சுமந்துகொண்டு ஒழுங்கு வரிசையில் நிற்பதையும், தாம் அவர்கள் பின்னே நிற்பதையும் குறிப்பிடுகின்றார்.
மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவார் அவர்பின் புகுவேன்[2]
என்பது அவர் திருப்பாடல்.
திருப்பனந்தாளில் தாடகை என்னும் பெண் நாள் தோறும் மலர் சாத்தி வழிபட்டதாக வரலாறு இருக்கிறது.
சேக்கிழாரின் பெரிய புராணத்தில், கண்ணப்ப நாயனார் வரலாறு குறிப்பிடத்தக்கது. அநேகமாகக் கண்ணப்பநாயனாரின் வரலாற்றுக் காலம், திருக்கோயில்கள் தோன்றி நாட்பூசனைக்காக ஆசாரியர்கள் நியமிக்கப் பெற்றிருந்தும் பொதுமக்கள் வந்து வழிபாடு செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்த காலமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், திருக்கோயிலில் நாட்பூசனைக்காக நியமிக்கப்பெற்ற சிவகோசரியாரும் முறையே ஆகம வழியில் பூசிப்பவர் என்பதைச் சேக்கிழார்,
எய்தியசீர் ஆகமத்தில் இயம்பியபூ சனைக்கேற்பக்
கொய்தமல ரும்புனலும் முதலான கொண்டணைந்தார்[3]
என்றும்,
சிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திருமுன்பு[4]
என்றும் கூறுவதால் அறியக்கிடக்கிறது. இதே திருக்கோயிலில் கண்ணப்ப நாயனார் பத்திமை நெறியில் அன்பு மேலிடத் தாமே வழிபாடு செய்கிறார். ஆகத் தாமே வழிபாடு செய்து கொள்ளும் உரிமை இருந்தமை பெறப்படுகிறது. சிவகோசரி யாருக்கு எழுந்த ஐயம் கூட யார் பூசித்தார்? என்பது அல்ல; கண்ணப்பர் பூசனையில் புலால் சிந்திக் கிடந்தமையால் “நெறியல்லா நெறியில் (சிவகோசரியார் பார்வையில்) பூசனை செய்தது யார்? என்பதே சிவகோசரியாருக்கு இறைவனே பதில் சொல்லித் தேற்றிக் கண்ணப்பர் பூசனையே தனக்கு உவப்பாக இருந்தது என்பதனை,
அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமைஅறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம்என்றும்
அவனுடைய நிலை இவ்வா றறிநீ[5]
என்று அருள் செய்து விளக்கியுள்ளார். ஆதலால், திருக்கோயிலில் உள்ள இறைவனை எல்லோரும் சென்று வழிபடுவது தான் சிறந்த சமயநெறி. அதன் மூலம்தான் உயிர்கள் இன்ப அன்பினையும் ஞான அனுபவத்தினையும் பெறமுடியும். அருச்சகர்கள் நாள்தோறும் இறைவன் திருமேனியைப் பூசனைக்குரியவாறு அமைத்து வைப்பார்கள். இஃது, இந்த நூற்றாண்டின் புரட்சியுமல்ல; புதுமையுமல்ல.
திருக்கோயில் நாட்பூசை வரலாறு
திருக்கோயில் நாட்பூசனைக்கு நியமிக்கப் பெற்றவர்கள் ஆதியிற்பெற்ற பெயர் சிவாசாரியார் என்பதே உலகியற் கல்விக்குரியவர் ஆசிரியர். ஆசாரியர் என்ற சொல்லுக்குப் பொருள் ஆசிரியர் என்பது. ஆசாரியர் வழிபாட்டு முறையைக் கற்றுத் தருபவரே தவிர, வழிபாட்டைத் தாமே செய்பவரல்லர். இந்த நிலையிலிருந்து உயர்மனப்பான்மையிலும், தொழிலடிப்படையிலும், இலாப நோக்கிலும் சிவாசாரியார்கள் நிலை திரிந்த பிறகு அருச்சகர்கள் ஆயினர். அருச்சனை என்பதே அப்பொழுதுதான் தோன்றுகிறது. அதாவது ஒருவருக்காகப் பிறரொருவர் கூலி பெற்றுக் கொண்டு வழிபாடு செய்யும் முறை உலகியற் பொருளாதாரத்திலேயே இலாப நோக்கம் தவறு என்று விமர்சிக்கப்படும் காலம் இது. இந்த இலாப நோக்கம் முறுகி வளரவளரத் திருக்கோயிலில் உள்ள இறைவனைக் காண்பதற்கும் வழிபடுவதற்கும்கூடக் கட்டணங்கள் வசூலிக்கும் நிறுவனங்களாகத் திருக்கோயில்கள் உருமாறி விட்டன. உலகம் துய்த்து மகிழ ஆண்டியாக நிற்கும் பழனி ஆண்டவனைக்கூட ரூ. 50/ கொடுக்கும் வசதியுடையோர் மட்டுமே அவன் அருகில் நின்று உபசரணையோடு வழிபடலாம். அதனைத் தர இயலாத ஏழை, எட்ட நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. இங்ஙனம், சிவாசாரியார்கள் பெருவாரியான மக்களை ஒதுக்கித் தொழில் மயப்படுத்த முனைந்ததில் அவர்கள் அடைந்தது உயர்சாதி என்ற இலாபமே. பிறிதொரு முனையில் குருக்களுக்கு நிறைய இலாபம் வருகிறது என்று தெரிந்தவுடன் இலாப நோக்குடைய பலர், அதில் ஈடுபடத் தொடங்கித் திருக்கோயில் ஆட்சிப் பொறுப்பையடைந்து, இன்று அவர்கள் சிவாசாரியர்களைப் பணியாளர்களாக்கி மேலாதிக்கம் செய்கின்றனர். “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பதற்கு இஃதொரு சிறந்த எடுத்துக்காட்டு. சிவாசாரியார்கள் தம் மரபிற்கேற்பப் பழுத்த மனத்து அடியாராகப் பற்றற்றுத் தம்மை நாடி வரும் சீடர்களுக்கு - பக்தர்களுக்கு இறைவனைக் கண்டு காட்டி வழிபாடு செய்து கொள்ளக் கற்றுத்தந்து, அவர்களுடைய அரவணைப்பில் வாழ்ந்திருப்பார்களானால், திருக்கோயில்கள் தூய்மையாக விளங்கியிருக்கும். திருக்கோயில்கள் அன்பின் களனாகவும், அருளின் பெட்டகமாகவும் விளங்கியிருக்கும். இன்றைய நிலையில் திருக்கோயில் காவலையே நம்பிக் கிடக்கிறது. பொதுமக்கள் வழக்கத்தின் காரணமாகவும், மன அமைதிக்காகவும் வழிபாட்டுக்கு வருகிறார்கள்; ஏதோ செய்து கொண்டு போகிறார்கள். ஆனால், ஞானானுபவம் அவர்களுக்குச் சித்திக்கவில்லை. பழுத்த அனுபவத்தில் தோன்றிய வழிபாடு, இன்று முதிராப் பிள்ளைகளின் சிறு விளையாட்டுப் போல் அமைந்துவிட்ட கொடுமையை நினைந்து உட்கி வெட்கமுறாதார் நெஞ்சம் என்ன நெஞ்சம்?
ஏன்? நால்வர்களும், ஆழ்வார்களும் அவதரிக்காத வடபுலத்தில் இன்றும் பொது மக்களுக்கு வழிபாட்டுரிமை இருக்கிறது. காசித்திருக்கோயிலுக்குள் பக்தர்கள் சென்று, அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனைக் கங்கை நீர் கொண்டு திருமுழுக்குச் செய்து வழிபாடு செய்து கொள்ளலாம். இங்ஙனம் நிகழ்வதால் எந்தப் பண்டாவும் அங்குத் தம் வழிவழி உரிமையை இழக்கவில்லை. சாதி வேற்றுமைகளை எதிர்த்துப் போராடி ஒரு குலம் அமைக்க முயன்ற ஞானிகள் தோன்றிய மண்ணில் பக்தர்களுக்குத் திருக்கோயில் வழிபாட்டுரிமையை மறுப்பது நியாயமும் அன்று; நெறியுமன்று முறையுமன்று.
எல்லோரும் வழிபடுவோம்
எல்லோருக்கும் திருக்கோயில் கருவறைக்குள் சென்று புனலும் பூவுமிட்டு வழிபாடு செய்யும் உரிமை வேண்டுமென்பதால் ஏதோ தான்தோன்றித்தனமாகத் திருக்கோயிலைத் திறந்து விடுதல் என்பது பொருளன்று. எத்தகைய உரிமையையும் சில கடமைகள் வழியே தான் பெற முடியும். பிறப்பின் காரணமாகத் தடையிருக்கக் கூடாது என்பதுதான் நோக்கமே தவிர, சீலத்தின்வழி தடையிருக்கக் கூடாது என்பதன்று. கொள்கைகளைக் கோட்பாடுகளின் வழிதான் அடையலாம். கோட்பாடுகள் கட்டுப்பாடுகளுக்கு இசைந்து இயங்கும் பொழுதுதான் நன்மை தரும். ஆதலால் திருக்கோயில் கருவறைக்குள் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் திருமேனிக்கு மலரிட்டு வழிபாடு செய்யும் உரிமையைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்கள் அடியிற்கண்ட ஒழுக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.
1. தகுதியுடையாரிடத்துத் திருவாளன் திருநீறு பெற்றுத் திருமுறைவழிச் சமயச் சார்பினராய் இருத்தல் வேண்டும்.
2. திருக்கோயில் வழிபாட்டுரிமையுடையவர் என்ற உரிமையைப்பெற அவர்கள் வாழும் ஊரிலுள்ள திருக்கோயிலில் ரூ. 5/- செலுத்தித் தம்மைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
3. ஆசாரியர்களின் வழிநடத்தலின் பேரில் பக்தர்கள் மலரிட்டு வழிபாடு செய்து கொள்ளவேண்டும்.
4. கருவறைக்குள் செல்வோர் உடலாலும் உயிராலும் உணர்வாலும் சமயக்கோலம் கொள்ளுதல் வேண்டும்.
ஆக, நமது சமூகத்தில் மிக அகலமாக விரிந்திருக்கும் சாதி வேற்றுமைகளை அகற்றவும், எல்லோரும் பத்திமை உணர்வில் பழுத்து ஞானானுபவத்தைப் பெறவும், திருக்கோயில் கருவறைக்குட் சென்று, எம்பெருமானுக்குப் பூவும் புனலுமிட்டு வழிபாடு செய்யவும் உரிமை பக்தர்களுக்கு வேண்டும். இந்த உரிமை நமது பிறப்புரிமை. திருமுறைகள் உணர்வூட்டிப் பாதுகாத்துத்தந்த உரிமையாகும். இந்த முறை செயற்படும் பொழுது நமது சமயமும் ஒழுங்குபடுத்தப் பெறும்.
எது அருச்சனை?
சமயச் சீர்திருத்தங்களுள் ஒன்று தாய்மொழியில் அருச்சனை என்பது. பொதுவாக அருச்சனை முறையே, ஒருவருக்காக மற்றொருவர் செய்யும் முறை தோன்றிய பொழுது செல்வாக்குப் பெற்ற ஒன்று. அஃது அவ்வளவு சிறப்புடையதன்று. இறைவனை மலரிட்டுப் போற்றித் துதித்து வழிபடுதல்தான் நம்முடைய வழிபாட்டு முறை. தேவாரத் திருமுறைகளில் தற்கால அருச்சனை முறை இருந்ததில்லை. சங்ககால இலக்கியங்களிலும் இல்லை. அருச்சனை என்ற சொல்லும் வடமொழிச் சொல்லே. சேக்கிழார் அர்ச்சனை என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். ஆனால் அவர் குறிப்பிடுவது இன்றுள்ள அருச்சனை முறையையன்று. “அருச்சனை பாட்டேயாகும்” என்பது சேக்கிழார் வாக்கு. “பாட்டேயாகும்” என்ற சொல்லில் உள்ள தேற்றேகாரம் எண்ணத்தக்கது. சுந்தரர் காலத்தில் இன்றுள்ள அருச்சனை முறை பெருவழக்காக வந்திருக்க வேண்டும். இது அருச்சனை முறையன்று. நீ பாடிப் பரவுதலே அருச்சனையென்று பெருமான் சுந்தரருக்கு ஆணையிடுகின்றார்.
அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுக............. [6]
என்பதுதான் தூமறை பாடும் வாயனாகிய பெருமானின் கட்டளை. ஆதலால் தேவாரத் திருமுறைகளைப் பாடித் துதித்தல் சிறந்த வழிபாட்டுமுறை. ஆயினும் இன்று கால் கொண்டுள்ள அருச்சனைமுறை அவ்வளவு எளிதில் போகாது; அது மட்டுமன்றி, விரும்புபவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் இந்த முறை இருப்பதனால் ஓரளவு பயனுண்டு. இந்த அருச்சனை முறை தாய் மொழியில் அமைய வேண்டும்.
மொழி எல்லை ஏன்?
சமய நெறிகளுக்கு - பிரார்த்தனைக்கு மொழி எல்லை ஏன்? இசுலாமியர் எந்த மொழியினத்தைச் சேர்ந்திருந்தாலும் அராபிய மொழியில்தானே பிரார்த்தனை செய்கிறார்கள். ஆம்! அஃது உண்மையே. இசுலாமிய சமயம் அராபிய மொழி வழிப்பட்ட சமுதாயத்தில் தோன்றிற்று. பிற மொழி வழிப்பட்ட இனங்களிலும் அது பரவியது. ஆதலால் இசுலாமியர் தமது சமயம் தோன்றிய மொழியையே விரும்பி மேற்கொண்டிருக்கின்றனர். அப்படி விரும்பி மேற்கொள்வது மரபுவழி வழக்கமுமாகிவிட்டது; அதற்குத் தடையுமில்லை. நம்முடைய சமயம் நம்முடைய தாய்மொழியில் தோன்றி வளர்ந்ததே தவிரப் பிறமொழியில் தோன்றி வளர்ந்ததில்லை. சேக்கிழார் “தமிழ் வழக்கு“[7] என்றே நமது சமயத்தைக் குறிப்பிடுகின்றார். ஆதலால் நம்முடைய சமயம் தோன்றி வளர்ந்த முறையிலேயே நமது பிரார்த்தனைமொழி இருப்பது தான் நியாயம். மேலும், இன்று அர்ச்சனை மொழியாக இருக்கும் சமஸ்கிருதம், உண்மையில் நமது சமய மொழியாக இருந்திருக்குமானால் அதை எல்லோரும் கற்றுத்தெளிவதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அங்ஙனம் வழங்கப்படாததோடு மட்டுமன்றித் தடையும் விதிக்கப்பட்டு வந்திருக்கிறது. இடையில் வந்த மொழி ஆதிக்கமும், சாதி ஆதிக்கமுமே நம்முடைய சமயம் உலகச் சமயமாவதைத் தடுத்து விட்டன. அதுபோல, கிறித்தவ சமயம் லத்தீன் மொழியில் தோன்றி வளர்ந்தது. கிறித்தவர்கள் லத்தின் மொழியில் பிரார்த்திக்கின்றனர். அங்கே லத்தீன் மொழியைப் பயில எல்லோருக்கும் வாய்ப்புண்டு; தடையில்லை. ஆனாலும் மார்ட்டின் லூதர் தோற்றத்திற்குப் பிறகு கிறித்தவ சமயம் பரவியிருக்கும நாடுகளில் அவரவர் மொழியில் வழிபாடு செய்யும் பழக்கம் வந்துவிட்டது.
மொழி வழிப்பட்ட இயக்கமன்று
தாய்மொழியில் அருச்சனை என்ற இயக்கம் மொழி வழிப்பட்ட இயக்கமன்று. பிரார்த்தனை, பக்தி என்பன உயிரின் வளர்ச்சிக்குத் துணை செய்வன. உயிரின் வளர்ச்சி நெஞ்சத்துடன் தொடர்புடையது. ஆதலால் நெஞ்சினைத் தொட்டு உணர்வினைத் துண்டும் மொழிதான் வழிபாட்டு மொழியாக அமைதல் வேண்டும். அந்த வாய்ப்புத். தாய்மொழிக்கே மிகுதியும் உண்டு. இது பொதுவான கொள்கை.
தமிழ் மந்திரங்கள்
நமது நாட்டில் தமிழில் வழிபாடு என்று கேட்கும் கோரிக்கை பொது வகையால் மட்டுமன்று; உரிமை வகையினாலும் எழுந்தது. உலக மொழிகளிலே பக்திக்குரிய மொழி. தமிழ்தான் என்பது அறிஞர் முடிபு. பக்திக்குரிய அருமையும் எளிமையும் தமிழுக்கு இயல்பாகவே உண்டு. தமிழ், வழிபாட்டு மொழியாகவே வளர்ந்து வந்துள்ளமொழி. அது மட்டுமன்று. மந்திரங்களுக்கு மொழி வரையறையில்லை. நிறைமொழி மாந்தர் அருளிச் செய்பவை மந்திரங்கள்.
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திர மென்ப[8]
என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் “தானே என்று பிரித்தார். இவை தமிழ் மந்திரமென்றற்கு”[9] என்று எழுதுகின்றார். மாதவச் சிவஞான முனிவர் சமஸ்கிருதத்தின்பாலும் மிகப் பற்றுடையவர்: சமஸ்கிருதம் தேவ மொழி என்ற கருத்துடையவரே. ஆயினும் தாம் இயற்றிய காஞ்சிப் புராணத்தில் இறைவனை அகத்தியர் பூசித்த பொழுது தமிழ் மந்திரங்கள் கூறிப் பூசித்ததாகக் கூறுகிறார்.
மன்னியஇத் தமிழ்க்கிளவி மந்திரங்கள் கணித்தடியேன்
செந்நெறியின் வழுவாஇத் திருக்காஞ்சி நகர்வரைப்பின்
உன்னணுக்க னாகிஇனி துறைந்திடவும் பெறவேண்டும்
இன்னவரம் எனக்கருளாய் எம்பெருமான் என்றிரந்தான்[10]
என்பது காஞ்சிப்புராணப் பாடல்.
... எனதுரை தனதுரையாக
நீறணிந்தேறுகந் தேறிய நிமலன் ...
என்பது திருஞானசம்பந்தர் வாக்கு திருமுறைப் பாடல்கள் ஆற்றல் மிக்க மந்திரங்களாக ஐந்தொழில்களையும் நிகழ்த்தியுள்ளன.
உரிமைபெற உழைப்போம்!
ஆதலால், தமிழில் வழிபாடு என்பது வரலாற்றடிப் படையிலும் நியாயமானது; உளவியலடிப்படையிலும் நியாயமானது. மரபு வழியிலும் அது நமது பிறப்புரிமை. நமது திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு நிகழ்த்தும் முயற்சிக்கு நமது தமிழக அரசு அளித்துவரும் ஆதரவு பாராட்டுதலுக்குரியது. ஆனால், அரசு முறையில் இயக்கப்படும்பொழுது தமிழ் வழிபாட்டுமுறையை விரும்பாதார் வழக்கு மன்றங்களுக்குச் செல்லலாம். அதனால் தடைகள் ஏற்படலாம். ஆனால், தமிழ் மக்கள் தங்களுடைய உயிரினுமினிய திருமுறைகளால் வழிபாடு நிகழ்த்த வேண்டும் அருச்சனை செய்யவேண்டுமென்று கிளர்ந்தெழுவதே தமிழ் வழிபாட்டினைப் பெற ஒரே வழி. நமது மக்கள் உயிரனைய பிரச்சினைகளில் அலட்சியம் காட்டுகிறார்கள். “ஏனோ தானோ” என்று வாழ்கிறார்கள். இந்த அவலநிலையை மாற்றியமைக்கத் தமிழறிஞர்கள் ஓயாது உழைத்திடுதல் வேண்டும்.
சமய நிறுவனங்களும் திருக்கோயில்களும்
சமய - சமுதாயப்பணி மன்றங்களே
பழங்காலத் திருக்கோயில்கள் இறைவன் திருவோலக்கம் கொண்டருளும் திருவருள் நிலையங்களாக விளங்கின; அது மட்டுமன்றி நமது சமுதாயத்தின் பொது இடங்களாகவும் விளங்கின; மக்கட் பணி மன்றங்கள் ஆகவும் விளங்கின. பழங்காலத் திருக்கோயில்களில் தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. தமிழறிஞர்களிருந்து தமிழாராய்ந்தனர்; கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள் இருந்தன; கலைபயில் கழகங்களிருந்தன; நாடக அரங்குகளிருந்தன; மருத்துவ மனைகள் இருந்தன என்பதைத் தமிழகத்திருக்கோயில்களின் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். ஏன்? பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் “முறை மன்றங்களும்” இருந்தன. கிராமச் சமுதாயத்தை வழி நடத்தும் கிராம சபைகள் - ஊர்ச் சபைகள் திருக்கோயில்களில் அமைந்திருந்தன. இன்றைய நம்முடைய திருக்கோயில்கள் அந்த அமைப்பில் இல்லை. அவை முற்றாகச் சமுதாயத்தினின்றும் விலகி விட்டன. சமுதாயப் பணிகளை அவை மறந்துவிட்டன. நமது சமய நிறுவனங்களாகிய திருக்கோயில்கள் - திருமடங்கள் இந்த வகையான பணி செய்வதில் இடைக்காலத்தில் நெடுந்தொலைவு விலகிவிட்டன. அண்மைக் காலமாக ஓரளவு மாறுதல் ஏற்பட்டு வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இந்த வகையில் தருமபுர ஆதீனமும், குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனமும், பேரூர் சாந்தலிங்கர் திருமடமும், சிரவணபுரம் - கெளமார மடாலயமும், மயிலம் பொம்மபுரம் ஆதீனமும், திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடமும் செய்துவரும் பணிகள் பாராட்டுதலுக்குரியன. இந்தப் பணியை ஏற்றுக் கொண்ட நிறுவனங்கள் மேற்சொன்ன சிலவேயாம். இன்னும் பல நிறுவனங்கள் இந்த நினைவிற்குக்கூட வராதது வருந்தத்தக்கது. தமிழகத் திருக்கோயில்களில் பல இன்றைக்கு இந்தத் திசையில் திரும்பிப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
அருள்நெறித் திருக்கூட்டம்
1952-ல் தமிழகத்தில் தோன்றிய சமய மறுமலர்ச்சி இயக்கமாகிய அருள்நெறித் திருக்கூட்டத்தின் தத்துவங்கள் - கொள்கைகள் இன்று எங்கும் எதிரொலித்து வருகின்றன. இன்று தமிழகத்தின் திருக்கோயில்கள், பள்ளிகளை நடத்துகின்றன; கல்லூரிகளை நடத்துகின்றன. சிறப்பாக மாண்புமிகு டாக்டர் கலைஞர் தலைமையில் அமைந்துள்ள தமிழக அரசு இந்த வகையில் முனைப்புக் காட்டி வருகிறது. இத்துறை அமைச்சுப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மு. கண்ணப்பன் இந்தப் பணிகளில் காட்டும் ஆர்வம் பாராட்டுதலுக்குரியது. ஆயினும் நம்முடைய சமுதாயத் தேவைக்குரிய அளவுக்குப் பணிகள் வளரவில்லை. இந்து சமய நிறுவனங்களின் வளத்திற்கேற்றவாறு வளரவில்லை. ஒரு புறம் நிறுவனங்கள் தங்கத்தில் தவழ்கின்றன. பிறிதொருபுறம் அச்சமய நிறுவனங்களைச் சார்ந்த மக்கள் புழுதியிற் கிடந்து புரளுகின்றனர். இந்த இடைவெளி நீக்கப் பட்டாலொழிய சமயத்தின் கொள்கை நிறைவேறாது. இந்துவாகப் பிறந்த ஒருவன் அனாதையாக விடப்படும் அவல நிலையிலிருக்கும் வரை நமது சமயம் ஏற்றம் பெற இயலாது. மனிதன் பெற்ற உணர்வினைப் பாதுகாப்பதே அவனுடைய செயல். தொண்டு இல்லாத வழி, பக்திக்கு ஏது பாதுகாப்பு? மக்கள் இல்லாதபோது ஏது சமயம்? மக்களைத் தழுவியவையாகச் சமய நிறுவனங்கள் இல்லாது போனால் அந்த நிறுவனங்களுக்கு ஏது உயிர்ப்பு? நடமாடும் கோயில்களைப் பேண வேண்டும்; அங்கும் கடவுளை எழுந்தருளச் செய்யவேண்டும். இது திருமூலர் இட்ட பணி.
படமாடுங் கோயிற் பகவற்கொன் றீயில்
நடமாடுங் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடுங் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடுங் கோயில் பகவற்கஃ தாமே[11]
என்னும் திருமந்திரம் அறிந்து உணரத்தக்கது.
திருமடங்களின் தோற்றமும் நோக்கமும்
நமது சமய அமைப்பில் திருமடங்களுக்குத் தனியிடம் உண்டு. பழங்காலச் சமுதாய அமைப்பில் திருமடங்கள் இருந்ததில்லை. திருமடங்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டனவேயாம். நமது சமயநெறி வாழ்க்கையோடிசைந்திருந்த காலத்தில் திருமடங்களின் தோற்றம் அவசியமில்லாம லிருக்கிறது. பின்னர், கால வளர்ச்சியின் காரணமாகவும் அயல் சமய நெறிகளின் ஊடுருவல் காரணமாகவும் சமயப் பாதுகாப்புப் பணிகளைச் செய்ய வேண்டியது அவசியம் என்று உணர்ந்த ஞானிகள்-சமுதாய வளர்ச்சியில் சிந்தனை செலுத்திய ஞானிகள்-திருமடங்களைக் கண்டனர். தமிழகத்தின் தலைசிறந்த தாளாளர்களும் மன்னர்களும் சமயப் பாதுகாப்புப் பணி கருதி நிறையப் பொருள்களைத் திருமடங்களுக்கு அளித்தனர். திருமடங்களின் தலையாய பணி, சமயப் பாதுகாப்பேயாம். சமயப் பாதுகாப்பு என்பது சமயத்தை, தத்துவங்களை மட்டும் பாதுகாப்பதன்று. கோவிலையே பாதுகாப்பது என்பதுமன்று. நமது சமய நெறியில் நின்றொழுக வேண்டிய மக்களை அறியாமையினின்று விலக்கி, அறிவு நெறியில் ஆற்றுப்படுத்தி அருளார்ந்த சமய அனுபவத்தில் கொண்டு வந்து நிலை நிற்கும்படி செய்தலேயாம். மக்கள் மன்றத்தில் சமய உணர்வைப் பாதுகாப்பதே.
திருமடங்களின் இன்றைய நிலை
சாதாரண சராசரி மக்களிடம் சமய வாழ்க்கையின் தேவையை உணர்த்துவதும், சமய உணர்வைப் பெற்றவர்களுக்குத் 'தீக்கை' முதலியன செய்வித்து, அவர்களை அனுபவ நிலைக்கு அழைத்துச் செல்வதும் திருமடங்கள் செய்யவேண்டிய பணிகள். இன்று அந்தப் பணிகளைத் திருமடங்கள் செய்யவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. திருமடங்கள் 'தீக்கை' செய்விப்பதையே நிறுத்தி விட்டன. அண்மையில் கரூரைச் சார்ந்த அன்பர் ஒருவர் ‘தீக்கை' பெற்றுச் சிவபூசை செய்யவேண்டும் என்ற விருப்பத்துடன் ஒரு திருமடத்திற்குச் சென்றாராம். அத் திருமடத்தின் படைபரிவாரங்கள் திருமடத்தின் தலைவரைக் கண்டு கொள்ள அனுமதிக்காமலேயே, “இங்கே உங்களுக்கெல்லாம் தீக்கை செய்ய மாட்டார்கள்” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். இஃது என்ன கொடுமை? மக்களைச் சந்திக்க - மக்களுக்கு அறிவூட்ட, பக்தியுணர்வை வழங்கத் தோன்றிய திருமடங்கள் இன்று திசைமாறி இருக்கின்றன. ஒரு சில மடங்களில் ஓரளவு மாறுதல் ஏற்பட்டு இருக்கிறதென்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த மாறுதலும் கூட வளர்ந்த சமுதாயத்தினருக்குப் பயன்படும் அளவே தவிர, வளர வேண்டிய சமுதாயத்திற்குப் பயன்படத்தக்க வகையில் அமையவில்லை. இந்து சமூகத்தில் எண்பது விழுக்காடு மக்கள் பள்ளத்தில், படுகுழியில் கிடக்கின்றனர். அவர்களுடைய பொறிகளுக்குப் பொருளில்லாமல் போய்விட்டது; புலன்கள் செயலற்றுக் கிடக்கின்றன. வெற்று மனிதர்களாக அரசை நம்பி, ஒரு சில செல்வர்களுடைய தாராள மனப்பான்மையை நம்பி, ஏழைகளாக அவர்கள் செத்துக் கொண்டிருப்பதை நினைத்தாலே நெஞ்சம் வேதனையடைகிறது! ஒருபுறம் வாழ்வாரோடு கூடிக்குலாவிப் பொன்னாடைகளை வழங்கிக்கொள்ளும் இவர்கள் ஏன், புழுதியில் கிடக்கும் மனிதர்களைப் பார்க்க மறுக்கிறார்கள்? ஒரு சமயத்தைச் சார்ந்த மக்கள் அறியாமைப்படுகுழியில் கிடக்கும்பொழுது, அந்த மக்கள் ஞானசூனியர்களாக இருக்கும்பொழுது திருமடங்கள் ஏன் என்ற வினா எழுவது இயற்கைதானே.
தமிழ்நாட்டுத் தெய்வீகப் பேரவை
இந்த வேதனை தரத்தக்க சூழ்நிலைக்கு நடுவே 1965-ல் ஒரு சிறு ஒளிக்கீற்று பிறந்தது; இந்து சமுதாயத்திற்கு நம்பிக்கையைத் தந்தது. அதுதான் முன்னாள் முதலமைச்சர் பாராட்டுதலுக்குரிய மாண்புமிகு பக்தவத்சலம் அவர்களின் அரிய முயற்சியில், திருமுறைக்காவலர் பாராட்டுதலுக்குரிய முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் திருமிகு சாரங்க பாணி முதலியார் அவர்கள் இனிய முயற்சியில் தொடங்கிய தமிழ்நாட்டுத் தெய்வீகப் பேரவை, அது இன்று தமிழகத்தின் ஒளிமிக்க-ஆற்றல் படைத்த இயக்கமாக வளர்ந்து வருகிறது. ஆனாலும் “உழுத சாலில் உழும்” இயல்பு நம்மை விட்டு நீங்கவில்லை. ஆதலால், பேரவையின் பணிகளில் நமது சமயத் தலைவர்கள் தேவைக்குரிய ஆர்வம் காட்டவில்லை. ஏன்? தமிழக அரசு காட்டும் ஆர்வத்தைக்கூட காட்டவில்லை. பாராட்டுதலுக்குரிய அறநிலைய ஆணையர் திருமிகு கே.எஸ். நரசிம்மன் அவர்கள் காட்டுகிற அளவுக்கூட ஆர்வத்தைக் காட்டவில்லை. தொடக்கக் காலத்திலிருந்தே வேறுபாடுகளே விழுமிய கொள்கையாகக் கொண்டிருக்கும் சமயத்தினர் இசைந்து வரவில்லை. சைவ சமயத் தலைவர்கள் ஓரிருவர் தமிழக அரசு கொணர்ந்த அருச்சகர் வைணவ மசோதாவின் வாயிலாக விலகியும் விலகாமலும் நிற்கின்றனர். அருச்சகர் மசோதாவை நாம் எதிர்க்க வேண்டு மென்பது அவர்கள் விருப்பம். ஆனால் அவர்கள் வெளிப்படையாக எதிர்க்கவில்லை. ஏன்? பேரவையிலேயே கூட இது போன்ற சமய சமுதாயத் தொடர்பான செய்திகளை விவாதித்து முடிவு எடுக்கும் அளவுக்குக்கூட அவர்கள் முன் வருவதில்லை. கடந்த கால் நூற்றாண்டாகச் சாதிவேறுபாடற்ற சமுதாயத்தை நமது சமயத்தின் பெயரால் அமைத்திட வேண்டும் என்று ஓயாது பேசிவந்த நாம் அந்த மசோதாவை எதிர்ப்பது எங்ஙனம்? வேறு சிலருக்கு அக்கறையில்லை. இந்த நிலையில் பேரவை வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், சமயத்தலைவர்களின் நிறுவன நிறுவனமாகத் தோன்றிய பேரவை இன்று இலட்சோபலட்சம் மக்களின் இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேரவையைக் கட்டிக் காப்பாற்றுவார்கள்; அவர்களுடைய மாநாடுகள் சமயச் சீர்திருத்தங்களைப் பற்றி எண்ணும்; முடிவெடுக்கும்; செய்து முடிக்குமென்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
சமயத் தலைவர்களின் அவலநிலை
திருமடங்கள் இன்னும் சிறப்பாகப் பேரவைப் பணிகளுக்கு ஒத்திசைந்து அதன் பணிகளைச் செய்ய வேண்டும். சமயத் தலைவர்கள் தங்களுக்குள் ஒருவரை யொருவர் வழி நடத்திக் கொள்ளவும், சமயப்பணிகளை மேற்கொள்ளவும் மேலாண்மை செய்து கொள்ளவும் தக்காங்கு பேரவை உருப்பெறுதல் வேண்டும். அங்ஙனம் தனித்தன்மை யிழவாத ஒரு பொதுத் தன்மைக்கு இசைவித்துக் கொள்ள முன்வராது போனால், அவர்கள் புறநெறியாளர்களின் மேலாண்மைக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் வந்து சேரும். அது வருந்தத்தக்க விளைவுகளைத் தரும். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாகவே பொதுத் தன்மையிலிருந்து விலகியதன் விளைவுகளை அவர்கள் இன்று அனுபவித்து வருகின்றனர். அரசோடொத்த அருளாளர்களாக இருக்க வேண்டியவர்கள் - அரசினையும் ஆற்றுப்படுத்த வேண்டிய அருளார்ந்த நிலையிலிருக்க வேண்டியவர்கள் இன்று அரசின் கட்டுப்பாட்டுக்காளாகியிருக்கின்றனர். இன்று அரசின் தணிக்கைகளுக்கு ஆட்படுகின்றனர். ஏன்? அரசின் ஒழுங்கு முறைகளுக்கு ஆட்படுகின்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். அதன் காரணமாக அவர்கள், தங்கள் தங்கள் நிலையில் சுதந்திரத்தை இழந்திருக்கின்றனர்; அதனால் சமயத்தைச் சீர்திருத்தும் முயற்சிகளைக்கூட அவர்கள் சிந்தித்துச் செயற்படுத்துவதில்லை. அரசு செயற்படுகிறது- அவர்கள் கட்டுப் படுகின்றனர். நம்முடைய நாட்டுத் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலய நுழைவுரிமையைச் சிவபெருமான் வாயிலாகப் பெறவில்லை. தமிழ்நாட்டுச் சட்டசபையின் வாயிலாகப் பெற்றார்கள் என்றால் என்ன பொருள்? அறவுணர்வில் செய்யப்படாத ஒன்றினைச் செய்யும்படி கட்டுப்படுத்துவது சட்டம். சமயத் தலைவர்கள் அறநெறிப்படி செய்யத்தவறிய ஒன்றினைச் சட்டம் செய்யும்படி வற்புறுத்தியது. சட்டம் தோன்றிய பிறகு தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து அமைச்சர்களாக வந்தவர்களுக்குப் பொன்னாடை போர்த்தத் தவறினார்களல்லர். இந்த முரண்பாடுகள் ஏன்?
உடனடித் தேவை
சமய நிறுவனங்கள் சமயத்தைப் பாதுகாத்து, சமய நெறி வழிப்பட்ட சமுதாயத்தை அந்த நெறியில் நிறுத்துதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளாததால் சமுதாயத்தின் அடிமட்டத்தில் கிடக்கும் நம்முடைய சமயத்தைச் சார்ந்த மக்கள் இன்னமும் மத மாற்றங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக மக்கள்தொகை வளர்ச்சிக் குறியீட்டு எண்களைக் காணின், நமது சமய வழிப்பட்ட சமுதாயத்தின் வீழ்ச்சியை உய்த்துணரமுடியும். ஏன் இந்த வீழ்ச்சி? மக்களைத் தழுவி நின்று பேணிப் பாதுகாக்கும் பணியைச் சமய நிறுவனங்கள் மேற்கொள்ளாததால்தானே; ஆதலால், சமய நெறியை உயிர்ப்புடன் பாதுகாக்கவும் சமய வழிப்பட்ட சமுதாயத்தைப் பாதுகாக்கவும் சமய நிறுவனங்களின் இன்றைய நடைமுறையும் ஆட்சி முறையும் துணை செய்யா. துணை செய்யவும் இயலா அவை சாதி வழிப்பட்ட அமைப்புகளாகவும் இயங்கிவிட்டன. அரசும் அவற்றை நேரிய வழியில் நெறி முறைப்படுத்த இயலாத நிலையில் இருக்கிறது. காரணம் அரசு, சமயச் சார்பற்ற அரசு. ஆதலால், அரசு ஏதாவது சமயச் சீர்திருத்தங்கள் - நடைமுறை மாறுதல்கள் உண்டாக்க முயன்றால் முறையீட்டு மன்றங்கள் தலையிடும். ஆதலால் நமது சமயத் தலைவர்களும், சமய நெறியில் நிற்கும் பெரியோர்களும் அறிஞர்களும் உளமார நினைந்து பார்த்து ஒரு மாற்றத்தைக் காண முன் வரவேண்டும். இந்த வகையில் நமது எண்ணத்தில் தோன்றும் சிந்தனைகளைக் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
நமது சமயமும் சமுதாயமும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் பேரவை பல்கலைக் கழக வடிவத்தில், திருமடங்களின் தனித்தன்மைக்கு ஊறு இல்லாத வகையில் அதே பொழுது பொதுத் தன்மைக்கு இசைந்த வகையில் அமைக்கப்படுதல் வேண்டும். திருமடங்களிடையே பொதுத் தன்மைக்கு மாறாக வளர்ந்துள்ள தனித்தன்மை முற்றாக அகற்றப்பட வேண்டும். தன்னுரிமை உணர்வு சாய்க்கப்பட்டுப் பொதுமையுணர்வு மலர வேண்டும். திருமடங்களின் நிதியங்கள் முறையாக மையப்படுத்தப் பெறவேண்டும். அந்த நிதியங்களைக் கொண்டு சமயத்தைச் சார்ந்த மக்களிடையில் வாழ்வுப் பணியும் சமயப் பாதுகாப்புப் பணியும் முறைப்படுத்தப் பெற்றுச் செய்யப்பெறவேண்டும். இன்று, திருமடங்களைச் சார்ந்து மக்கள் மன்றத்தில் உலாவரும் தொண்டர்கள் இல்லை. அங்கேயே தொண்டர்களுக்குப் பஞ்சம்; தக்க இளைஞர்களைத் தவமும் சீலமுமுடையவர்களாக வளர்க்கும் பணிமனைகள் பல தேவை. திருஞானசம்பந்தருடன் பதினாயிரம் தொண்டர்கள் மதுரைக்கு வந்ததாகக் கூறுவர். இன்று நாட்டில் சமய உணர்வுடன் மக்கட் பணியை ஏற்றிருக்கும் துறவிகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அதுவும் வழி வழி நிறுவனங்கள் சார்பில் இல்லையென்று கூறலாம். பலரிருக்க வேண்டிய இடத்தில் ஓரிருவர் இருப்பது, உளது போலக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இந்த நல்ல அமைப்பைத் தோற்றுவிக்க நம்முடைய திருமடங்களின் தலைவர்களே முன்வந்து ஏற்றருள வேண்டுமென்பது நம்முடைய பிரார்த்தனை. அவர்கள் அதை ஏற்றுச் செய்யத் தவறினால் நம்முடைய இளைஞர்கள், நம்முடைய அறிஞர்கள் விவிலியத்தின் மார்ட்டின் லூதர் போலப் புரட்சியைச் செய்தாவது அந்த நிலையை உருவாக்க வேண்டும். இது நமது விருப்பம், வேண்டுகோள்.
நம் திருக்கோயில்களும் உதிரித் தன்மையுடையனவாக விளங்குகின்றன. அவற்றையும் ஒருமைப்பாடுடையனவாக ஆக்கவேண்டும். காலத்தின் எல்லைகளில் செய்த தவறுகளின் காரணமாக இன்று நமது சமய நிறுவனங்கள் சமயச் சார்பற்ற அரசின் ஒரு பகுதியாகப் போய்விட்டன. இதனால், நமது சமயப் பாதுகாப்புப் பணிகளுக்கு உரிய வாய்ப்பு அருகியிருக்கிறது. அறநிலைய அமைச்சர் சமய நிறுவனங்களின் உடைமைகளைப் பாதுகாப்பார்; ஆனால் உணர்வுகளைப் பாதுகாக்க முடியாது. அறநிலைய ஆட்சித்துறை சமய நிறுவனங்களைக் கண்காணிக்கும்; ஆனால் சமயத்தை வளர்க்காது. இது இன்றுள்ள உண்மையான நிலை. நிறுவனங்கள்-உடைமைகள் சமய வழிப்பட்ட சமுதாயத்தைச் சமய வழியில் பாதுகாக்கவும், சமய உணர்வில் பாதுகாக்கவும் உரிய கருவிகளேயாம். உடல் பாதுகாக்கப்படும், உயிர் பாதுகாக்கப்படாது என்று சொன்னால் என்ன பயன்? ஆதலால், திருமடங்கள் திருக்கோயில்களின் இணைப்பு மையமாகப் பல்கலைக் கழக வடிவமைப்பில் ஒரு தன்னாதிக்கமுள்ள பொதுவான அரசின் மேலாண்மைக்கு இசைந்தவாறமையும் வகையில் பேரவைக்கு உருவம் கொடுக்க வேண்டும். அந்த அமைப்பு சமய நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த அமைப்பே அவ்வப்போது நமது சமயநெறியில் காணவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் சமுதாய மற்றங்கள் குறித்தும் சிந்தனைசெய்து தக்கவாறு வழிநடத்த வேண்டும். நம்முடைய மூவேந்தர் காலத்திற்குப் பிறகு நம்முடைய சமய நெறியையும் சமுதாய அமைப்பினையும் பற்றி எண்ணிச் சிந்தித்துத் தக்க மாற்றங்களைச் செய்யும் முயற்சி மேற்கொள்ளப் பெறவில்லை. இங்கொருவர் அங்கொருவராகச் சிந்திப்பவர்கள் சிலர் தோன்றினர். அவர்களில் வடபுலத்தில் இராமகிருட்டினரைத் தொடர்ந்து விவேகானந்தரும், தென் புலத்தில் வள்ளலாரும் குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்கள். இவர்களுடைய சிந்தனையை வழி வழி வந்த சமய நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஏன்? அவர்கள் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளக்கூட அவைகள் மறுத்தன; மறுத்துக் கொண்டிருக்கின்றன. ஆதலால் சமயத் தலைவர்கள் தம்முள் கலந்து முடிவெடுத்துச் சமுதாயத்தை வழி நடத்த முன் வரவேண்டும். அதுபோலவே தமிழகத்தில் நமது சமுதாய அமைப்பில் தோன்றும் திருக்கோயில்களையும் ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும். நம்முடைய வழிபடும் திருமேனிகளை, திருக்கோயில்களைச் சந்து பொந்துகளிலும் சாலை ஓரங்களிலும் சிலர் தம் பிழைப்புக்கருதி, மற்றவர் அலட்சியப்படுத்துமளவுக்கு அமைத்து விடுகிறார்கள். இதற்கு ஒரு நியதி இல்லை. அவற்றை முறைப்படுத்துவதற்குரிய நியதிகளையும் உருவாக்க வேண்டும். புதிய கோயில்களை எழுப்பச் சமய நிறுவனங்களின் தலைமையிடமாகிய பேரவையின் ஒப்புதல் பெறவேண்டும் என்ற வரன்முறை தேவை. சமுதாயப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். சமயப் பணிகளைச் செய்து சமயத்தைக் காக்கவேண்டும். அவ்வப்பொழுது சமுதாயத்தை உரியவாறு வழிநடத்த வேண்டும். இது இன்றைய உடனடியான தேவை. குடிகளைத் தழுவிய கோயில்; கோயிலைத் தழுவிய குடிகள்.
மீண்டும் நமது திருக்கோயில்களில் ஊர்ச் சபைகள் அமைய வேண்டும். அச்சபை சாதி, குல, இன, அரசியலுக்கு அப்பாற்பட்டதாக அமையவேண்டும். தன்னியல்பாகத் “தெரிதல் முறை”யில் அமையவேண்டும். அச்சபை திருக்கோயில் பணிகளையும் சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டு செய்யவேண்டும். ஒவ்வொரு திருக்கோயிலிலும் வழிபடுவோர் பட்டியல் இருக்கவேண்டும். அந்தப்பட்டியலில் இடம் பெற்றவர்கள் அந்தந்தத் திருக்கோயில்களில் இறைவனை வழிபாடு செய்யவும், வழிவழித் திருத்தொண்டு செய்யவும்வேண்டும். நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஏதாவதொரு திருக்கோயிலில் தொண்டுரிமை கொண்டவர்களாக நலன்களை நாடிப்பெறும் உரிமையுடையவர்களாக இணைக்கப்பெற வேண்டும். வேறொரு பெயரில் சொன்னால் நம்முடைய சமுதாய மக்கட் கணக்குப் பட்டியலாக அந்த வழிபடுவோர் பட்டியல் அமையவேண்டும். திருக்கோயிலின் ஊர்ச்சபை ஒவ்வொருவரிடத்தும் தொண்டு கொள்ளவேண்டும்; நிதியும் பெறவேண்டும். ஊர்ச்சபையின் தொண்டின் மூலம் கோயிலுக்கும் குடிகளுக்குமிடையேயுள்ள இடைவெளி குறையவேண்டும்; பிரிக்கமுடியாதவாறு நல்றுறவால், பிணைக்கப்படவேண்டும். இந்தத் தொண்டு முறை சிவபெருமானே செய்துகாட்டிய தொண்டுமுறை. இறைவன் உயிர்களைத் தொடர்ந்து சென்று அவற்றைப்பின் தொடர்ந்து நின்று பாதுகாக்கிறான் என்பதைத் திருவாசகம்,
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே[12]
என்ற பாடலில் சிறப்பித்துக் கூறுகின்றது.
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி, நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை, அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்[13]
என்பதும் திருவாசகம். எனவே நமது சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரையும் திருக்கோவில் வழிபாட்டில் கலந்து கொள்ளும்படி செய்யவேண்டும். அங்கு நிகழ வேண்டிய தொண்டுகளில் அவரவர் தகுதிக்கேற்பப் பங்கேற்கும்படி செய்யவேண்டும். அங்ஙனம் பங்கு கொள்ளத் தவறுபவர்கள் திருத்தி வழி நடத்தப்பெற வேண்டும். திருக்கோயில் திருப்பணிக்கு ‘யார் யார்’ வந்தார் என்று கணக்கெடுக்கும் முறை இருந்தது. ‘யார் யார் வந்தார்’ என்ற திருவிசைப் பாவினால் அறியலாம். முன்னர்க் கூறப்பட்ட முறையின் வழி சமய வழிப்பட்ட சமுதாயப் பணியைச் செய்யப் பயிற்சி பெற்ற துறவிகள் ஊர்ச்சபையின் இயக்குநர்களாக அமைவார்கள். ஊர்ச்சபை, அந்தக் கிராமத்திலுள்ள அனைத்து மக்களின் கல்வி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, பிணி நீக்கம், நல்வாழ்க்கை அமைத்துத் தருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும், கூட்டுறவு முறையில் தொழிலமைப்புகளைத் தோற்றுவித்து வாழ்க்கையில் வளம் காணச் செய்யும். கிராம சமுதாயத்தின் வளத்தைப் பெருக்கும்; சில வழக்குகளைத் தவிர்க்கும். ஒரோவழி மன மாறுபாடு தோன்றி விட்டால் தாமே தீர்வுகண்டு சமாதானம் செய்து வைக்கும் பணியையும் ஊர்ச்சபைகள் செய்யும், இந்த ஊர்ச்சபைகள் மாவட்டச் சபைகளோடு உறவு கொள்ளும். மாவட்டச் சபைகள் மாநில சபைகளோடு உறவு கொள்ளும். இந்தப் படிமுறையில் வளர்ந்தவுடன் எந்த ஓர் இந்துவும் அனாதையாக இருக்க மாட்டான் ஏழையாக இருக்கமாட்டான். அவனுடைய வாழ்க்கைக்குப் பாதுகாப்பு இருக்கும். எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். அவர்கள் திருக்கோயிலை மையமாகக் கொண்டு கலந்து மகிழ்ந்து வாழ்வார்கள். மத மாற்றங்களுக்கு ஆளாக மாட்டார்கள். நமது மரபுகள் காப்பாற்றப்படும். நமது சமயத் தலைவர்கள் இடத்தினால் மட்டுமன்றி இதயத்தினாலும் தலைவர்களாயிருப்பார்கள். ஞானாசிரியர்களாக இருப்பார்கள். திருத்தொண்டர்களாக இருப்பார்கள். உடைமைகளுக்கு உரியவர்களாக இல்லாமல் உயிரினத்துக்கு உரிமையுடையவர்களாக இருப்பார்கள். அந்தப் பொற்காலம் மலர்க. நாயன்மார் அடிச்சுவட்டில்
நமது சமய வழிப்பட்ட தனி மனித வாழ்க்கைமுறை, சமுதாய வாழ்க்கை முறை ஆகியன எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கும் ஒரு சிறந்த காப்பியம் பெரியபுராணம். சங்க காலத்தில் நிலவிய விழுமிய வாழ்க்கையை, நீண்ட இடைவெளிக்குப் பிறகும் தலைதடுமாறிப் போகாமல் பாதுகாத்தவர்கள் பெரியபுராணத்தில் இடம் பெற்றிருக்கும் சான்றோர்களே!
திருமருகலில் திருஞானசம்பந்தர் இள வணிகனுக்கும் வணிகப் பெண்ணுக்கும் நிகழ்த்திவைத்த திருமணத்திற்கும், அகனைந்திணை ஒழுக்கத்தின் வழி சங்க காலத்தில் நிகழ்ந்த திருமணத்திற்கும் என்ன வேறுபாடு?
சங்ககாலத்துக் கொடைமடம்பட்ட புரவலர்களுக்கும் விதைக்கப்பட்ட வித்தை அமுதாக்கி விருந்தளித்துக் கொடை மடம்பட்ட இளையான்குடி மாறனார்க்கும் யாதொரு வேறுபாட்டையும் காண முடியவில்லை.
அவிநாசியில் ஆரூரர் கண்டு வேதனைப்பட்ட காட்சிக்கும் பக்குடுக்கை நன்கணியார் கண்ட காட்சிக்குமிடையே வேறுபாடே இல்லை.
பெரியபுராணத்திற்குப் புராணம் என்பது பெரிய புராணத்தில் வரும் பாத்திரங்கள் வாழ்வாங்கு வாழ்ந்தவை: வரலாற்றுப் புகழ்ச் சிறப்புடையவை. திருத்தொண்டர் வரலாறு படித்தற்குரியது மட்டுமன்று ஓதுதலுக்கும் உரியது: ஓதுதலுக்குரியது மட்டுமன்று வாழ்ந்து காட்டுதற்குரியது. ஆனால் வழக்கம்போல நமது நாட்டில் பெரிய புராணம் படிக்கத்தான் பயன்படுகிறது. வயிற்றுப் பசியுடையவர்களில் கெளரவமானவர்கள் பெரியபுராண நாயன்மார்களைக் குருபூசை விழாக் கொண்டாடும் பாத்திரங்களாக்கி உண்டி நாலு விதத்தால், அறுசுவையால் ஆர்ந்து மகிழ்கின்றனர். திருத்தொண்டர் புராணத்தின் பயனாகிய அன்பு வளர வில்லை; பக்தி வளரவில்லை; திருத்தொண்டு வளரவே இல்லை. நமது இனம் உயிர்ப்புள்ள இனமாக வளர்ந்திருக்கு மேயானால் அறுபான்மும்மை நாயன்மார்கள் செய்த திருத்தொண்டுகளையொட்டிய திருப்பணி இயக்கங்கள் தோன்றியிருக்க வேண்டும். கண்ணப்பர் காலத்திலேயே கண்ணொளி வழங்கும் இயக்கம் தோன்றியிருக்க வேண்டும்.
கண்ணப்பர் காலத்திலேயே நாயன்மார்கள் வரலாற்றில் பலமுனைச் செயற்பாடுகள் அமைந்திருந்தன; அறிவியல் நுணுக்கங்கள் அமைந்திருந்தன. ஆனால் அவற்றை எல்லாம் நாம் மறந்துவிட்டோம்; ஆதலால் நாடு பயனொன்றும் பெறவில்லை. கண்ணப்பர் வரலாற்றில் சிவபெருமானே வலியுறுத்திக் காட்டிய “எல்லாரும் வழிபாடு செய்து கொள்ளும் உரிமை”யைப் பெற்றோமில்லை. திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன்தன்னைச் சிவனெனவே தேறி உயிர்ப்புடன் வழிபடும் உணர்வும் வளரவில்லை. அங்ஙனம் வளர்ந்திருப்பின் இன்று திருவுருவச் சிலைகள் திருடு போகா. வருவாய் தரும் திருக் கோயில்களின் திருவுருச் சிலைகளைப்போன்று வருவாய் இல்லாத திருக்கோயில்களின் திருவுருவச் சிலைகளைக் கவனிப்பதில்லை. அங்கு அர்ச்சகர்களும் பணியாற்ற வேண்டிப் போட்டிபோட மறுக்கின்றனர். ஆதலால் உண்மையில் அவரவர் ஆவல்கள் தொழப்படுகின்றனவே தவிர ஆண்டவன் தொழப்படவில்லை; அகநிலை அன்பிலும் வளரவில்லை. “பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றும்” பண்பிலும் வளரவில்லை, சரி, பக்திதான் வளரவில்லை; அறிவியலாவது வளரக்கூடாதா? கண்ணப்பர் காலம் சற்றேறக்குறைய கி.மு. 42-க்கு முற்பட்டது என்று கூறு கின்றனர். அக்காலத்தில் ஒருவர் கண்ணைப் பிறர் ஒருவர்க்கு எடுத்து வைத்துக் கண்ணோய் தீர்க்கும் முறை உலகில் வேறு எந்த நாட்டிலும் இருந்ததில்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பிற நாட்டறிஞர்கள், விலங்குகளிடையே இந்த மருத்துவச் சோதனையைச் செய்யத் தொடங்கினர். பின்னர்ப் படிமுறையில் வளர்ந்து இன்று ஒருவர் கண்ணை மற்றொருவருக்குப் பொருத்திக்கண்ணொளி பெறச் செய்யும் மருத்துவமுறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இன்று இந்த வெற்றி தமிழின் பெயரால் இல்லை; தமிழர் பெயரால் இல்லை; தமிழர் சமயத்தின் பெயரால் இல்லை; கண்ணப்பர் திருப்பெயராலும் இல்லை. ஏன், இந்த மருத்துவ முறையை முதன் முதலில் காளத்தியப்பனிடம் சோதனைப்படுத்தி வெற்றிகண்ட கண்ணப்பர் பெயர், கண் மருத்துவத் துறையில் ஒப்புநோக்கிற்குக் கூட வரவில்லை. வராததற்குக் காரணம் நம்மவர் உறக்கமே நாயன்மார்களைப் போற்றுவது என்பது அவர்களுக்குச் சிலை எடுப்பது மட்டுமன்று; விழா எடுப்பதுமட்டுமன்று; அவர்கள் வரலாறுகளைப் பட்டிமன்றங்களாக்கிவிடுவது மட்டுமன்று; இவையெல்லாம் முயற்சியில் முனைந்து ஈடுபடவும், உள்ளக் கிளர்ச்சி பெறவும் துணை செய்யலாம். ஆனால் உண்மையாக நாயன்மார்களைப் போற்றும் வழி, அவர்கள் வழி நிற்றலேயாம். கண்ணப்பர் அடிச்சுவட்டில் கண் மருத்துவத் துறையை நாம் மேற்கொண்டிருக்க வேண்டும். கண்ணப்பர் பெயரால் நூற்றுக்கணக்கான கண் மருத்துவ மனைகள் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் அவை நிகழவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கண்ணொளித் திட்டத்தைக் கொண்டுவந்த டாக்டர் கலைஞர் தலைமையில் அமைந்துள்ள தமிழக அரசை நன்றியுணர்வுப் பெருக்கோடு பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம். இன்று கண் மருத்துவத்துறை நிபுணராக விளங்கும் மதுரை டாக்டர் திருமிகு வேங்கடசாமி அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். ஏன்? மதுரை அரசினர் எர்ஸ்கின் மருத்துவ மனையில் கண் மருத்துவத் துறையின் விரிவாக்கம் பெற்ற புதுப்பகுதிக்குக் கண்ணப்ப நாயனாரைப் போற்றும் வகையில் “கண்ணப்ப நாயனார் கண் மருத்துவமனை” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
தண்டியடிகள் அடிச்சுவட்டில் அவரை அடியொற்றியே திருக்குளங்களைத் துய்மை செய்யும் பணியை மேற்கொண்டிருந்தால் தமிழ்நாட்டில் உள்ள திருக்குளங்கள் தூர்ந்து போயிருக்குமா? வழுக்கும் பாசிதான் வருமா?
திருவிழிமிழலையில் நிகழ்ந்த பஞ்சம் நீக்கும் பணியை அடியொற்றி மேற்கொண்டிருந்தால் நமது நாட்டில் பஞ்சம் வருமா? ஒரு சிலர் “இன்றும் இறைவன் படிக்காசு கொடுத்தால் அந்தப் பணியைச் செய்யலாம்” என்பர். ஆனால் நாம் உறுதியாகக் கூறுகிறோம், “இன்று இறைவன் படிக்காசு தரமாட்டான்” என்று! ஏன்? தரக்கூடாது என்பதன்று. அன்று அப்பரடிகள் மேற்கொண்டிருந்த வாழ்க்கை, ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கிய வாழ்க்கை, பழுதிலாத்துறவு வாழ்க்கை! அவர் மடாதிபதியில்லை. அவரிடத்தில் காசுகள் இல்லை. அதனால் இறைவன் படிக்காசு தந்தான். இன்றைய மடாதிபதிகளிடமோ நிறையச் செல்வம் இருக்கிறது. அதற்கு என்ன செலவு என்றே புரியாதபொழுது இறைவன் எப்படி மேலும் தருவான்? இன்றைய சமய நிறுவனங்களின் வரவு-செலவு, தணிக்கைக்குரியனவாக இருக்கின்றனவே யன்றித் தகுதிக்குரியனவாக இல்லை. ஆட்சிக்குரியனவாக இருக்கின்றனவேயன்றி அறநெறிக்கு இசைந்தனவாக இல்லை. ஆதலால், இறைவன் வழங்கிய பேறுகள் முழுமையாகப் பயன்படுத்தப்பெற்று மேலும் நியாயமான தேவை ஏற்படுமானால் இன்றும் தருவான். ஆதலால் உண்மையில் நம்முடைய சமயநெறி வளரவும், சமுதாயம் மேம்பாடடையவும் நாம் மேற்கொள்ள வேண்டியன திருத்தொண்டர் வரலாற்றின் வழி வாழ்தலும், அவர்களின் நெறி வழிப்பட்ட பணிகளை மேற்கொள்ளுதலுமேயாம்.
தொகுப்புரை
நமது சமயம் இந்தியத் துணைக்கண்டத்தின் தனிச் சமயம். கோட்பாடுகளில் வேறுபாடுகளிருந்தாலும் உயர்ந்த ஒருமை நலம் கருதி இந்து சமயம் என்ற அமைப்பை ஏற்றுக் கொள்ளலாம். அவ்வழி நமது வாழ்வியலுக்கு ஒவ்வாத முரண்பாடுகளை அறவே அகற்றவும் வேண்டும்.
நமது சமயத்தில் சாதி வேறுபாடுகளின்றி அனைவரும் திருக்கோயிலில் வழிபாடு செய்துகொள்ளும் உரிமை இருந்தது. அன்று சிறுமையின் சின்னங்களாகிய எல்லைக் கோடுகள் இருந்ததில்லை. பழங்காலத் திருக்கோயில்களில் எல்லோரும் சென்று வழிபாடு செய்துகொள்ளும் உரிமையிருந்தது. ஒரு சிலர் இலாபம் கருதி இடையில் அந்த உரிமைகளைப் பறித்திருக்கிறார்கள். சிவாசாரியர்களின் கடமை திருக்கோயில் உள்ள இறைவடிவை வழிபாட்டுக் குரியதாகச் செய்துவைப்பதே! வடபுலத்திலுள்ளது போல அனைவரும் திருக்கோயில் கருவறைக்குள் சென்று புனலும் பூவுமிட்டு வழிபடும் உரிமையைக் கண்ணப்பர் பெயரால் அடைந்தே தீரவேண்டும். அவரவர் வழிபாடு செய்யும் பொழுதுதான் மெய்யுணர்வு அரும்ப முடியும்.
வழிபாட்டிற்குத் தமிழ் உரிய மொழி. இறைவனைத் தமிழால் பாடித் துதி செய்தல் நூறுகோடி அருச்சனைக்கு ஒப்பானது. அதனாலன்றோ இறைவன் சுந்தரரிடம் “அருச்சனை பாட்டே யாகும்” என்று அருளிச்செய்து பாடச் சொன்னான். தமிழோடு இசை கேட்கும் இச்சையால் நாளும் காசுகள் கொடுத்து அப்பர், சம்பந்தர் ஆகியோரின் தமிழைக் கேட்டிருக்கிறான். அங்ஙனம் இறைவன் விரும்பிக் கேட்ட தமிழைக் கேளாது தடை செய்ததனால்தான் போலும் திருக்கோயில்களில் திருவருள் விளக்கம் சிறப்பாக அமையவில்லை. இறைவனைத் தமிழில் வழிபாடு செய்து கொள்ளும் உரிமை நமது பிறப்புரிமை. அதை நாம் அடைந்தே தீரவேண்டும். தமிழ் வழிபாட்டு இயக்கம் மொழியியக்க மன்று. அதன் நோக்கம் பக்தியை வளர்ப்பதேயாகும். தமிழ் வழிபாட்டு இயக்கத்தை மாதவச் சிவஞான முனிவர் முதலிய சான்றோர்களும் ஆதரித்துள்ளனர்.
பழங்காலத் திருக்கோயில்கள் சமுதாயத்தின் கேந்திரங்கள். சமுதாயத்தைக் கண்ணின் இமைபோல் பாது காக்கும் நிறுவனங்களாக அவை விளங்கின. அதனால்தான் கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி பிறந்தது. இடைக்காலத்தில் நமது சமய நிறுவனங்களாகிய திருக்கோயில்களும் திருமடங்களும் இந்தப் பணிகளைச் செய்வதிலிருந்து விலகிவிட்டன. அண்மைக் காலத்தில் ஓரளவு மாறுதல் ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் தருமபுரம் ஆதீனம் செய்துவரும் பணி பாராட்டுதலுக்குரியது. மேலும் திருப்பனந்தாள் காசிமடமும், பேரூர் சாந்தலிங்கர் திருமடமும், சிரவணபுரம் கெளமார மடமும், மயிலம் பொம்மபுரம் ஆதீனமும் செய்துவரும் பணிகள் நினைவுகூரத்தக்கன. ஆயினும், பணி செய்ய வேண்டிய வளம்பெற்ற திருமடங்கள் பல இன்னும் வாளா உறங்குகின்றன. இங்ஙனம் வளர்ந்துள்ள மாறுதல்கூட பணிகளின் தேவை அளவுக்குரிய மாறுதலன்று; வளத்தின் அளவுக்குரிய மாறுதலுமன்று.
நமது சமுதாயத்தில் சமய நிறுவனங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறை-படாடோபமான திருவிழாக்கள் நடத்துகின்றன. அதேபோழ்து நமது சமுதாயத்தைச் சேர்ந்த பலகோடி மக்கள் ஊமையராய்ச்-செவிடராய்ப் பாழ்பட்டுப் புழுதியில் கிடப்பதைச் சமயத் தலைவர்கள் உணரத் தவறுகின்றனர். மக்களைத் தழுவி வளர்க்காத சமய நிறுவனங்கள் எதற்காக? நடமாடும் கோயில்களை நாடிப் போற்றாத நிறுவனங்கள் எதற்காக? என்ற வினாக்களை வரலாறு எழுப்பத்தான் செய்யும். இனி வரலாறு எழுப்ப இருக்கும் வினாக்கள் சொற்களாகத் தோன்றா; அருளியல் வழிப்பட்ட புரட்சியாகத்தான் தோன்றும். அது சீரமைப்பைச் செய்தே தீரும்.
வல்லாண்மையுடையவர்களுக்கும் அஃதில்லாதவர் களுக்குமிடையே நடுவாக நின்று நீதியைக் காப்பாற்ற வேண்டிய சமயத் தலைவர்கள் வல்லாண்மையுடையவர் களோடு கூட்டுச் சேர்ந்துவிட்டனர். நடுவாக இருக்க வேண்டிய சமயத் தலைவர்கள் நடுவிகந்து வாழ்வோரிடையே கூடிக் குலவுகின்றனர். தொழுத கை துன்பம் துடைக்கும் தூயநெறியில்லை.
இந்த இடுக்கண் நிறைந்த சூழ்நிலையில் பேரவை தோன்றிற்று. பேரவை முறையாக வளர்ந்து வருகிறது. மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது. ஆயினும், சமயத் தலைவர்கள் காட்டும் ஆர்வம் போதாது. மேலும் நிறைந்த ஆர்வம் காட்ட வேண்டும்.
சமயச் சார்பற்ற அரசு உடைமைகளைத்தான் காப்பாற்றும், உணர்வுகளைக் காப்பாற்ற முடியாது. ஆதலால், இந்து அறநிலையச் சட்டத்தின் ஆட்சிமுறை உடைமைகளைக் காப்பாற்றுகிறது. உணர்வுகளைக் காப்பாற்றவில்லை. ஆதலால் சமய உணர்வுகளையும் சமுதாயத்தையும் ஒருசேரக் காப்பாற்றும் அளவுக்குப் பேரவை பல்கலைக்கழக வடிவத்தில் தன்னாதிக்கமுள்ள நிறுவனமாக அமைய வேண்டும். அந்த அமைப்பு சமயச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். சமுதாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். திருமடங்களின் தலைவர்கள் காலத்திற்குத் தேவையான பொதுமைக்கு இசைந்து வரவேண்டும். இது தவிர்க்க முடியாத பணி.
ஒவ்வொரு திருக்கோயிலும் குடிகளைத் தழுவியதாக விளங்கவேண்டும். குடிகள் கோயிலைத் தழுவி வாழ வேண்டும். இந்தப் பொற்காலத்தை நாம் படைத்திட வேண்டுமாயின் நாயன்மார்கள் அடிச்சுவட்டில் பணிகளைத் தொடங்கவேண்டும்; திருத்தொண்டுகளைத் தொடங்க வேண்டும். அதுவே இன்று செய்யவேண்டிய பணி; முதற்பணி.
மேற்கோள் விளக்கம்
↑ திருஞானசம்பந்தர், திருவிராமேச்சுரப்பதிகம், 2.
↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 31.
↑ திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 135
↑ திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 136.
↑ திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 157.
↑ திருத்தொண்டர் புராணம், தடுத்தாட்கொண்ட புராணம், 70.
↑ திருத்தொண்டர் புராணம், திருஞான சம்பந்தர் புராணம், 24,
↑ தொல். செய்யுள். 178.
↑ தொல். செய்யுள். 178. நச்சினார்க்கினியர் உரை.
↑ காஞ்சிப்புராணம், தழுவக், 245,
↑ திருமந்திரம், 1821.
↑ திருவாசகம், பிடித்தயத்து-9
↑ திருவாசகம், திருவெம்பாவை, 17
3. சமய சமுதாய மறை
முன்னுரை
திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் ஒரு சிறந்த அறநூல்; முழுதுறழ் அறநூல் மறைநூல்; பொதுமறை நூல்: மனிதராகப் பிறந்தோர் பேசும் எம் மொழியிலும் இது போன்றதொரு இலக்கியம்-அறநூல் தோன்றியதில்லை. புறநானூறு ‘அறம்பாடிற்றே’[1] என்று திருக்குறளைச் சிறப்பித்துக் கூறுகிறது. உமாபதி சிவம் ‘மெய் வைத்த சொல்’[2] என்று பாராட்டுவார். இருபதாம் நூற்றாண்டில் மனித இதயம் படைத்த மாமனிதர் ஆல்பர்ட் சுவைட்சர், “திருக்குறளுக்கு ஒப்பான நீதி நூல் எதுவுமில்லை” என்று புகழ்ந்துள்ளார். திருக்குறள் கற்பனையில் தோன்றியதன்று. திருக்குறளில் அதிசயம் கிடையாது; அற்புதம் கிடையாது; புனைந்துரையில்லை. மனித உலகத்தை வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் நூல். “இது” என்றும் “அது” என்றும் இரண்டாட்டுகின்ற சமயக் கணக்கர் வழியினின்றும் விலகிய பொது நூல். ஓருலகம் படைக்க வேண்டுமானால் அதற்குரிய நூல் திருக்குறளேயாம். திருக்குறள் நெறி, வையகத்தில் வாழ்க்கையாக மலருமானால், வீட்டுக்கு வீடு இடையில் இருக்கும் சுவர்கள் இடிபடும். நாட்டுக்கு நாடு இடையில் உள்ள எல்லைக் கோடுகள் மறையும். உலகம் ஒன்றாகும். மானிடச் சாதி ஒரு சாதியாக உருவெடுக்கும். எங்கும் பொதுமை நிலவும்! எல்லோரும் வாழ்வர்; இத்தகு பெரு நூலை- அரிய நூலைத் தந்த திருவள்ளுவர் திருவடிகளைப் போற்றுவோமாக அவர் காட்டிய வழி வாழ்வோமாக.
மறை நூல்
ஒரு சமுதாயத்தை வழிநடத்தி வாழ்விக்கும் சமய நெறிக்கு மறைநூல் வேண்டும். மறை என்பது தமிழ்ச் சொல். அதனையே வேதம் என்றும் கூறுவர். நமது சமயத்திற்கு எது மறை? இந்து சமயத்திற்கு எது மறை? மற்ற சமய நெறிகளுக்கு இருப்பதுபோல நமக்கென்று ஒரு மறை இல்லை; பலர் பலவிதமாகக் கூறுகின்றனர் என்ற குறை தொடர்ந்து இருக்கிறது. இந்த நிலைநோக்கி அறிஞர்களும் கவல்கின்றனர். மறை நூல் இல்லாது போனால் எங்ஙனம் சமுதாயத்தை ஒருமைப்பாடுடைய தாக்க முடியும்? என்பது அவர்கள் கவலை. ஆனால் உண்மையில் நமக்கொரு மறை இல்லாமலா போய்விட்டது? நமக்கென்று ஒரு மறை உண்டு. ஆனால், அதைத் துணிந்து மறை நூலாக ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றோம். தொல்காப்பியத்திலேயே மறை நூல் என்ற வழக்கு பேசப் பெறுகிறது. “அறங்கரை நாவின் நான்மறை முற்றிய”[3] என்பது தொல்காப்பியப் பாயிரம். இந்நூற்பாவுக்கு உரை கண்ட உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர், “இருக்கும் யசுரும் சமமும் அதர்வணமும் என்பாருமுளர், இது - பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேத வியாதர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாகச் செய்தார் ஆகலின்”[4] என்று எழுதும் உரை எண்ணுதலுக்குரியது. புறநானூற்றில் மிகத் தொன்மைக் காலத்துப் பாடல்களும் உள்ளன. வேத வியாதர் காலத்துக்கு முற்பட்ட பாடல்களும் உள்ளன. “நான்மறை முனிவர்”, “நால்வேத நெறி” எனவும் வரும் சொற்றொடர்கள், பழங்காலத்திய தமிழில் தமிழ் மறைகளிருந்தன என்பதை அறிவிப்பன. நமது திருமுறைகளில் மறையென்று கூறப்படுவன தமிழ் மறைகளேயாம். இது “பண்பொலி நான்மறை” என்றும் “முத்தமிழ் நான்மறை” என்றும் வரும் தமிழ் வழக்கினை ஒட்டிக் குறிப்பிடும் வகையால் அறியக் கிடக்கிறது. மாதவச் சிவஞான முனிவரும் “கொழிதமிழ் மறைப்பாடல்” என்று தமிழ் மறை உண்மையை எடுத்துக் காட்டுகின்றார். இந்தத் தமிழ் மறைகள் ஆலமர் செல்வனால் அருளிச்செய்யப் பெற்றவை என்றுதான் திருமுறைகள் பேசுகின்றன. இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் முதலிய வேதங்கள் இறைவனால் அருளிச்செய்யப் பெற்றன அல்ல. பல்வேறு முனிவர்களால் பல்வேறு காலங்களில் அருளிச் செய்யப் பெற்றவை. நமது சமய வரலாற்று அடிப்படையில் நமது சிவபெருமானும் உமையம்மையும் பேசுவது தமிழே தான்; அதனால்தான் வேதநெறி தழைத்தோங்கப் பிறந்த திருஞானசம்பந்தர், நமையாளும் உமையம்மையின் ஞானப் பாலுண்டவுடன் ‘தோடுடைய செவியன்’ என்று தூய தமிழிற் கவிதை பொழிந்தார். ஆதலால் நமது சமயத்திற்குப் பண்டு, தமிழ் மறைகளிருந்தன என்பது தெளிவு மறுக்க முடியாத உண்மை. ஆயினும், அந்த மறைகள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. அவை கடற்கோள் பட்டிருக்கவேண்டும். அம்மறைகளை நாம் இழந்துவிட்டோம் என்று துயருறா வண்ணம் நமக்கொரு புதுமறை கிடைத்திருக்கிறது.
திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த திருக்குறள், மறைகளை ஒத்தது இல்லை, மறைகளை விஞ்சிய சிறப்புடையது; மறை நூலின் விழுமிய நோக்கமாகிய அறநெறி உணர்த்துகிறது; பொருள் நெறி காட்டுகிறது; இன்ப நிலை எய்த வழி நடத்துகிறது; திருவடிப்பேற்றினை வழங்குவிக்கிறது; கடவுளை வாழ்த்துகிறது; உயிரின் நிலையை உய்த்துணரச் செய்கிறது; அறியாமையை அடையாளம் காட்டுகிறது; ஆன்ற அறிவை வழங்குகிறது; ஆதலால், திருக்குறள் ஒரு மறை நூலே, மறந்தும் வேறுபாடுகளைக் குறிக்காத மறை நூல் அது! அதனாலன்றோ ஒளவையார்,
தேவர் குறளும் திருநான் மறைமுடியும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என் றுணர்[5]
என்று பாடினார்.
திருக்குறள் நமது சமுதாயத்தின் தனிமறை, பொது மறை. இம்மறை வழி நின்று விதித்தன செய்து, விலக்கியன ஒழித்து வாழ்தல் நமது சமய வாழ்க்கை.
உயிர்களின் வளர்ச்சி
மனிதன் ஓர் அற்புதமான தோற்றம். உலகத்தில் கோடானுகோடி உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் சிலவற்றுக்கே பெயர்கள் காணப்பெற்றுள்ளன. இன்னும் சில, பெயர்கள் பெறவில்லை. உயிர்க்குலத்தின் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகள் அது நடைபெறும் என்றே தெரிகிறது. உயிர்க்குலத் தொகுதியினை,
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்[6]
என்று முறைப்படுத்திக் கூறுவார் மாணிக்கவாசகர். இத்தகைய ஒரு கொள்கையினையேதான் உயிரியல் விஞ்ஞானி டார்வினும் கண்டு உலகத்திற்குத் தந்தார். ஆனால், நமது சமயநெறி படிப்படியாகப் பல பிறப்புகளில் உயிர் வளர்ந்து வளர்ந்து மனிதப் பிறப்பையடைகிறது என்று வகுத்துரைக்கும். இதனைத் தொல்காப்பியர் வாயிலாக நாம் எளிதில் உணரமுடிகிறது. அவர் உயிரினத்தை அறுவகையாகப் பிரிக்கிறார்.
புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
என்பது தொல்காப்பியம்[7] ஓரறிவுடைய உயிர்கள் அந்த ஓரறிவில் முழுமையாக வளர்ந்து, உருமாறி (இறப்பு, பிறப்பின் மூலம்) ஈரறிவுயிர் உருவத்தை அடைந்து, அதில் முழுமையாகி மரணமடைந்து, வேற்றுருப் பெற்று, மூவறிவுயிராகி, அதில் முழுமையாகி மரணம் அடைந்து வேறுருப்பெற்று நாலறிவுயிராகி, அதில் முழுமையுற்று இறந்து-பிறிதோருருப் பெற்று ஐயறிவுயிராகி அதில் முழுமையடைந்து இறந்து ஆறறிவுயிராகிய மானிடப் பிறப்பை வந்தடைகின்றன.
மானிடப் பிறப்பின் உயர்வு
உயிர் பிறப்பு முறையில் வளர்ச்சியடைந்த-சிறப்புடைய பிறப்பு, மானிடப் பிறப்பே. அதனை அடுத்தது தேவர்நிலை. “அரிதரிது மானிடராய்ப் பிறத்தலரிது”[8] என நூல்கள் பாராட்டும். “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்”[9] என்று அப்பரடிகளின் அருள் நூல் கூறும்.
பகுத்தறிவின் பயன்
மனிதன் ஆறாவது அறிவையுடையவன். அதாவது பகுத்தறிவுடையவன். பகுத்தறிவு என்பது ஒரு சிறந்த கருவி. பகுத்தறிவாவது “நல்லதன் நலனும் தீயதன் தீமையும்”[10] அறிந்து, ஏற்றும் விலக்கியும் ஒழுகுதல். உலகியல், குப்பை கூளங்கள் நிறைந்ததே. ஆயினும், முத்துக்கள் இல்லையென்று கூற முடியாது. குப்பை கூளங்களை விலக்கி முத்துக்களை ஏற்பதே பகுத்தறிவின் பயன். பகுத்தறிவு முறையாகத் தொழிற்பட வேண்டுமாயின் சிந்தனைக்குத் தளைகள் பூட்டக்கூடாது. அதாவது, “இது முன்னோர் வழக்கம்; இது அந்த ஞானி கூறியது; இது இந்த ஞானி கூறியது; இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் பாவம், நரகம் கிடைக்கும்; இதை ஏற்றுக் கொண்டால் மோட்சம் கிடைக்கும்; இதனை ஏற்றுக் கொள்ளத் தவறினால் பலர் ஏசுவர்” என்பன போன்ற இன்னோரன்ன ஆசைகளுக்கும் அவலங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் அடிமைப்படுதல் கூடாது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு[11]
என்ற குறளுக்கேற்ப யார்க்கும் அடிமைப்படாது மெய்ப்பொருள் காணத் தலைப்படல் வேண்டும். அங்ஙனம் அடிமைப்பட்டால், சிந்தனை செக்குமாடு போலத்தான் சுற்றும். அதற்குப் பகுத்தறிவு முறையாகத் தொழிற்படின் பழமையினின்றும் விலகாது. ஆனால், அங்கேயே கழித்துக் கொண்டு வட்டமிட்டுத் தேங்காது; விரிவடையும், வளரும்; பழமை மறையும்; புதுமை தோன்றும் விதை மறைந்து செடி தோன்றுவதில்லையா? அதுபோல! ஆதலால் பகுத்தறிவினால் பழமை அழியும் என்று அச்சம் கொள்ளுதல் தவறு. பகுத்தறிவினால் மனித உலகம் முதுமையடையாமல் உயிர்ப்புள்ள இளமையோடு வளரும்; வாழும், பகுத்தறிவு வளர வளர நியாயங்கள் தோன்றும்; அவ்வழி நெறிகள் தோன்றும்; மனம் தொழிற்படும். மனமுடையவன்தானே மனிதன். மனமுடைய மனிதன் மானிட உலகத்திற்கு வான்மழையை ஒத்தவன். அந்த மானிடச் சாதியை வளர்க்கும் உத்தம மனிதன் வளர்க! வாழ்க!
சிந்தனையாளர்கள் இயக்கம்
இந்த மனித குலம் தோன்றிக் கோடானுகோடி ஆண்டுகளாகிவிட்டன. வரலாற்றில் சென்று போன கோடிக் கணக்கான ஆண்டுகளில் மனித உலகத்தின் வரலாறு சிந்தனைக்குரியது. பல நூறு ஆயிரம் பக்கங்களில் விரிந்துள்ள இந்த வரலாற்றில் பல பக்கங்கள் கொடியோர்களின் செய்திகளைக் கூறும்; ஓரிரண்டு பக்கங்கள் உலகத்தை வாழ்விக்கத் தோன்றிய உத்தமர்களின் வரலாற்றினைக் கூறும். ஆனாலும் அந்த உத்தமர்கள் தொடங்கிவைத்த இயக்கமே பின்னால் மனிதரை வாழ்விக்கத் தவறுவதையும் காண்கின்றோம். மனித குலத்தின் வரலாறு நெடிய நேர்க்கோடாக வளரவில்லை. ஏராளமான வளைவுகள் அதில் உள்ளன. வளைவுகளின் காரணமாக நிகழ்ந்த விபத்துக்களும் அதிகம். ஒட்டுமொத்தமாக வரலாற்றுப் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு நாம் பெறும் ஒரே உணர்வு, இன்னமும் மனிதன் மனித வடிவத்தில் உலாவருகிறானே தவிர, அவன் இன்னமும் மனிதனாகவில்லை என்பதே! இந்தச் சிந்தனை திருவள்ளுவருக்கு இருந்திருக்கிறது. அதனால்,
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்”[12] என்றும்
மக்களே போல்வர் கயவர்”[13] என்றும்
வேதனையுடன் கூறிய குறள்கள் சிந்தனைக்குரியன.
இங்ஙனம், பகுத்தறிவைப் பெற்றிருந்தும் அவற்றை உபயோகப்படுத்தாமல் நெறிமுறை தவறிச் சென்று இன்னல் பட்ட மனிதகுலத்திற்கு வழிகாட்ட அவ்வப்பொழுது தக்க ஞானிகள்-பேரறிஞர்கள் பலர் தோன்றியுள்ளனர். அவர்களின் பட்டியலை இங்குத் தருவது இயலாத ஒன்று. ஆனாலும், குறிப்பிடத்தக்கவர்கள் சிலரையாவது நினைவிற் கொண்டுவருவது நம் கடன். திருவள்ளுவரை ஒட்டி வருகின்ற சிந்தனையாளர்கள் சிலரை நினைந்து பார்ப்போம்.
கன்பூசியஸ்
திருவள்ளுவர் காலத்துக்கு முந்தியவர்களில் சீன நாட்டில் தோன்றிய கன்பூசியஸும், கிரேக்க நாட்டில் தோன்றிய சாக்ரட்டிஸும், குறிப்பிடத் தகுந்தவர்கள். கன்பூசியஸ் ஒரு சிறந்த மாமேதை. மனித சமுதாயத்தை அறவே பழமையிலிருந்து விலக்கிச் செல்ல முடியாதென்ற எண்ணத்தின் காரணமாகச் சீன நாட்டில் வழங்கிய பழைய கருத்துகளுக்குப் புதுப்பொருள் கண்டவர். அவர் கண்ட புதுப்பொருள் அவருடைய சிந்தனையில் தோன்றியது. அவர், ஒழுக்கத்தையே முதல்நிலைப்படுத்தினார். அது மட்டுமன்று ஒழுக்கத்தை ஒழுக்கத்திற்காகவே கடைப்பிடிக்க வேண்டுமென்று வழி நடத்தினார். கன்பூசியஸ் கடவுளைப் போற்றுதல் மூலமே உயர்ந்துவிட முடியும் என்பதுபோல மறைநூல் செய்தாரில்லை. அவர், மனித இயற்கையைப் பெரிதாகப் பாராட்டினார். அந்த மனித இயற்கையை முழுமையுறச் செய்து கொள்ள வேண்டும்; அங்ஙனம் முழுமையுறத் துணை செய்வதே அறநெறிச் சட்டமென்றார். அறநெறிச் சட்டத்தின் வழியில் நின்று வாழ்ந்து பண்புடையோராக வாழ்வோரை உலகு பாராட்டுமென்றார். இதனையே திருவள்ளுவர்
நயனொடு நன்றி பயனுடையார்
பண்புபா ராட்டு முலகு[14]
என்றார். “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”[15] என்றார் திருவள்ளுவர். சிந்தனை ஒப்பு நோக்கத்தக்கது. “மனித உள்ளம் என்பது பிறரை நேசித்தல்” என்பது கன்பூசியஸின் தத்துவம். இதனைத் திருவள்ளுவர் “அன்பின் வழியது உயிர்நிலை”[16] என்றார். கன்பூசியஸின் சிந்தனைகள் சீனநாட்டு மக்களுக்கு இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாக மழைகளைப் போல விளங்கி வந்துள்ளன.
சாக்ரட்டிஸ்
திருவள்ளுவருக்குச் சற்றேறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவன் கிரேக்க நாட்டுச் சிந்தனையாளன் சாக்ரட்டீஸ், அவன் மனித குலத்திற்கு அறிவை முதனிலைப்படுத்தி அறிவுறுத்தினான். அறிவாராய்ச்சி செய்யும்படி ஆற்றுப்படுத்தினான்.
“அறிவுடையார் எல்லாம் உடையார்”
என்பது ஒப்புநோக்கத்தக்கது. சாக்ரட்டீஸ் எழுதுகோல் ஆனாலும், அவனது சிந்தனையில் தோன்றிய சிந்தனை முத்துக்களை அவனுடன் இருந்த பிளேட்டோ அழகுறத் தொகுத்துத் தந்திருக்கிறான். சாக்ரட்டிஸ் உரையாடல்கள் மூலமே உயர்நெறியை யுணர்த்தியவன். வினாக்கள் மூலமே விடைகளைத் தந்தவன். சாக்ரட்டிஸும் கன்பூசியஸைப் போல உயிரினும் உயர்வாக ஒழுக்கத்தை மதிக்கக் கற்றுக்கொடுத்தான். சாக்ரட்டிஸ் மனித உலகத்தின் மனச்சாட்சிக்காகப் போராடினான். மனிதனின் சிந்தனை ஒருமைக்காகப் போராடினான். ஆயினும், அவனை அந்தக் காலச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. கன்பூசியஸ் தன் தலைமுறையிலேயே வெற்றி பெற்றார். சாக்ரட்டீஸ் அவன் தலைமுறையில் வெற்றி பெறவில்லை. உயிரைப் பணயமாகக் கொடுத்தான். ஆனால், மனித குலத்தின் அறிவு இயக்கம் உள்ளவரை சாக்ரட்டீஸின் பெயர் நினைவிலிருக்கும்.
திருவள்ளுவர்
திருவள்ளுவர், தமிழகம் முற்றாக நிலை தளர்ந்திருந்த பொழுது மறைநூல் செய்தாரென்று கூறமுடியாது. ஆயினும், திருவள்ளுவர் தோன்றிய காலம் தமிழகத்திற்கு ஒரு சோதனைக் காலமே. காதல் காமமாக உருமாறிப் பரத்தையர் ஒழுக்கம் பரவியிருந்தது. வீரம், சிறுகலகங்களாக உருமாறி ஒரு குலத்துள்ளோரே தமக்குள் ஒருவரையொருவர் அடுதலும் தொலைதலுமாக இருந்தனர். தமிழ் வழக்குக் கொவ்வாத அயல் வழக்குகள் ஊடுருவி அலைக்கழித்துக் கொண்டிருந்தன. இந்த நெருக்கடியான காலக் கட்டத்தில் திருவள்ளுவர் தோன்றினார். திருவள்ளுவர் திருக்குறளை இயற்றி, முறையே தனி மனிதன், குடும்பம், நாடு, அரசு ஆகியவைகளுக்கு அறநெறி காட்டி வழி நடத்தினார். திருவள்ளுவர் தந்த அறநெறி அவர் காலத்தில் ஓரளவு வெற்றி பெற்றது. ஆனாலும் முழுமையான வெற்றியை அது அடையவில்லை. திருவள்ளுவருக்குப் பிறகும் திருவள்ளுவர் நெறி இன்றுவரை முழுமையாக வெற்றி பெறவில்லை.
மார்க்ஸ் - லெனின்
சோவியத்து நாட்டில் லெனின், மாமுனிவர் மார்க்ஸ் தந்த மூலதனத் தத்துவக் கொள்கைகளுக்குச் செயல்முறைக் கோட்பாடுகளை வகுத்தான்; புரட்சிக்காகச் சிந்தித்தான்; சமுதாய மாற்றத்தைக் குறித்துப் பலரைச் சிந்திக்க வைத்தான். லெனின் அணியில் “கூட்டத்தில் கோவிந்தா” போட்டவர்கள் இல்லை. தன் அணியைச் சார்ந்தவர்களுக்குப் புரட்சித் தத்துவங்களைக் கற்றுக் கொடுத்தே அணிவகுத்து நடத்தினான். ஆதலால் புரட்சி எளிதாயிற்று; புதுயுகம் பிறந்தது.
பிரெஞ்சுப் புரட்சி - வால்டேர், ரூசோ
பிரெஞ்சு நாட்டின் புரட்சிக்குக் காரணமாக இருந்த வால்டேரும் ரூசோவும் சிறந்த சிந்தனையாளர்கள். அவர்களுடைய சிந்தனை புரட்சி நெருப்பைப் பற்ற வைத்தது. ஆனால் அந்த நெருப்பு தொடர்ந்து எரிவதற்குக் கோட்பாடுகள் இல்லாமல் போயின. மக்கள் புரட்சியில் ஈடுபட்டார்கள்; உணர்ச்சி வசப்பட்டே ஈடுபட்டார்கள். புரட்சி தோன்றியது. அது அன்றிருந்த ஆட்சியை மாற்றியது. ஆனால் புரட்சிக்குப் பின் தோன்றிய ஆட்சியின் முறை மாறவில்லை. அதாவது சர்வாதிகாரிகள் மாறினார்கள் சர்வாதிகாரம் மாறவில்லை என்பதுதான் வரலாறு உணர்த்தும் உண்மை. மார்க்ஸின் சிந்தனைக்குப் புரட்சிகரமான செயலுருவம் கொடுக்க லெனின் இருந்தான். அதனால் நிலையான மாற்றம் கிடைத்தது. வால்டேர், ரூசோ சிந்தனைகள் புரட்சி உருவம் பெற்றன. ஆனால் செயலுருவம் கொடுக்கப்பெறவில்லை. அதனால் புரட்சி வெடித்தது; ஆனால் புதுமைச் சமுதாயம் பிறக்கவில்லை.
புரட்சி விளக்கை அணைத்தனர்
கன்பூசியஸுக்குக் கிடைத்த வெற்றி திருவள்ளுவருக்குச் சமுதாயத்தில் கிடைக்கவில்லை; அரசியலில் கிடைக்கவில்லை. ஆனால், இலக்கிய உலகத்தில் திருவள்ளுவர் மிகவுயர்ந்த புகழைப் பெற்றார். சாக்ரட்டீஸுக்குக் கிடைத்த தோல்வி திருவள்ளுவருக்குக் கிடைக்கவில்லை. வால்டேர் ரூசோ போன்றவர்களின் சிந்தனைக் கொத்த புரட்சத் தன்மையுள்ள சிந்தனைகளைத் திருவள்ளுவர் தந்திருந்தாலும் இங்கும் புரட்சி வெடிக்கவில்லை, காரணம் திருவள்ளுவரின் புரட்சிச் சிந்தனையின் குறையன்று. பிரஞ்சு தேசத்திலிருந்தவர்கள் போன்ற கொடுங்கோலர்கள் தமிழ் நாட்டில் இருந்ததில்லை. குறைகளுடைய அரசர்கள் இருந்தனர். ஆனாலும் கொடுங்கோலர்கள் இருந்ததில்லை. மார்க்ஸின் மூலதனம், 'திருக்குறளுக்கு நெடுங் காலத்திற்குப் பின் தோன்றியது. மார்க்ஸ் ஒரு சிந்தனையாளன். கார்ல்மார்க்ஸின் சிந்தனைகளில் திருக்குறளின் கருத்து மூலங்கள் பதிந்துள்ளான. மார்க்ஸின் மூலதனம் எப்படிப் புதுமையும் போதுமையும் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க உதவியதோ அதுபோல் திருக்குறளும் பயன்பட்டிருக்கவேண்டும் அங்கனம் இயலாமற் போனதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முதற்காரணம் முன்னர்க் குறிப்பிட்டது போல் தமிழக மன்னர்கள் ஜார் மன்னர் அளவுக்குக் கொடுங்கோலர்களாக இல்லாமல் இருந்தமையே. எல்லாவற்றையும் பெறும் முழுமையான சமுதாயத்தை உருவாக்கத் தவறினாலும் அவர்கள் கொடுங்கோலர்களாக இருந்ததில்லை. அது மட்டுமன்று நீதிமான்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களை எதிர்த்துப்புரட்சி தோன்றக்கூடிய சூழல் இல்லாமற் போய்விட்டது. நலஞ்செய்யாத அரசுகளை நோக்கிப் புரட்சிகள் தோன்றாது. நலஞ்செயாதோடின்றித் தீங்கிழைக்கும் கொடுங்கோல் அரசுகளை நோக்கியே உலகில் புரட்சிகள் வெடித்துள்ளன. ஆதலால் திருக்குறள், புரட்சியைத் தோற்றுவிக்க இயலாமற் போயிற்று. மேலும், கார்ல்மார்க்ஸுக்குக் கிடைத்த மாணாக்கன் லெனின் ”மூலதனம்” என்ற தத்துவ நூலில் அடங்கிய கொள்கைகளுக்குக் கோட்பாடுகளைக் கண்டான்; செயலுருவம் தர முயன்றான்.காலமும் துணையாயிருந்தது; இடமும் அமைந்தது;புரட்சியும் தோன்றிற்று. முன்னர்க் குறிப்பிட்டதைப்போலத் திருவள்ளுவரின் சிந்தனைக்குக் காலமும் இடமும் துணையாக இல்லை: அது மட்டுமன்றித் திருவுள்ளுவர்க்குக் கிடைத்த மாணாக்கர்கள் அரசியல் சிந்தனையாளர்கள் அல்லர்; சமுதாயச் சிந்தனையாளர்களுமல்லர்; அவர்கள் இலக்கியச் சிந்தனையாளர்கள் சமயச் சிந்தனையாளர்கள் என்றே அமைந்துவிட்டார்கள். ஆதலால், அவர்கள் பதவுரையும் பொழிப்புரையும் எழுதினார்கள்; இலக்கணக் குறிப்புக்கள் எழுதினார்கள்; தெளிவாகச் சொன்னால் இலக்கியச் சிந்தனை என்ற பெயரால் திருவள்ளுவர் ஏற்றிவைத்த புரட்சி விளக்கை அணைத்தே விட்டார்கள். இன்னும் திருக்குறள் தந்த திருவள்ளுவர் வழிபாட்டுக்குத்தான், பயன்படுகின்றார். கவியரங்கம், பட்டிமன்றங்களுக்குத்தான் பயன்படுகிறார். இன்றுவரை திருவள்ளுவர் கண்ட அரசியல் சமுதாயக் கொள்கைகளுக்குச் செயலுருவம் தரத்தத்த கோட்பாடுகளை நினைந்து எழுத யாரும் முன்வாவில்லை. அது தமிழகத்தின் நல்லூழின்மையேயாம். இனிமேலாது வாழ்வியல் நூலாக விளங்கும் திருக்குறளுக்குச் செயலுருவம் தரமுயற்சிசெய்ய வேண்டும். அது காலந்தாழ்த்தாது உனடியாகக் கெய்ய வேண்டிய முதற்பணி. இந்த முயற்சி தொடங்கப்பெற்று முழுமையான வெற்றி பெற்றால் நமது சமயம் விளங்கும்; நமது சமுதாயம் உலகின் மற்றச் சமுதாயங்களோடு ஒத்து நிற்கும்-இல்லை, மற்றச் சமுதாயங்களை வென்று விளங்கும்.
பிறப்பும் - இறப்பும்
இனி, திருவுள்ளுவர் எப்படி முறையாக மனிதனை வளர்க்கிறார் என்பதைக் காணவேண்டும். நமது சமயத்தில் உயிர் உண்மை நிலையானது. உயிர் உடல்தாங்கி புலர்வரு தலையே பிறப்பு என்று குறிப்பிடுகின்றோம். மீண்டும் அந்த உலாவில் எய்த்துக் களைத்துழி உடலினைக் களைந்து புத்துடலைப் பெறுவதை இறப்பு-பிறப்பு என்று குறிப்பிடுகிறது நமது சமயம். உயிர்க்குப் பிறப்பு இறப்பு இல்லை; அது நிலையானது என்பதனைத் திருவள்ளுவர் ‘மன்னுயிர்’ என்பதன் மூலம் விளக்குகிறார். களைத்த உடலை விட்டுப் புது உடலைப் பெறுவதுதான் இறப்பு-பிறப்பு! புறநானூறு,
“சாதலும் புதுவன்றோ”[17] அதனையே திருவள்ளுவர்,
என்று கூறிவிளக்கும்
உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு[18]
என்று கூறி விளக்குகிறார். அன்றாட உடற்களைப்பு நீங்க உறங்குதல் வழி. ஆனாலும் அவ்வப்பொழுது உறங்கும் உறக்கத்தில் முழுமையாகக் களைப்பு நீங்கிவிடுவதில்லை. காலத்திற்குக் காலம் களைப்பு முதிர்ந்து உடலுக்கு முதுமையைத் தந்து, களைப்பு மிக்குழி அறவே உடலை உயிர் உதிர்த்து விடுதலே இறப்பு: அது புதிய உடலைப் பெறுதல் பிறப்பு. இதுவே நமது சமயக் கொள்கை. இங்ஙனம் சாதலும் பிறத்தலும் எல்லையின்றிச் சுற்றி வருமா? வராது. உயிர் நிறைநலம் பெற்றுழி அதற்குப் பிறப்பில்லை; இன்ப அன்பில் அமைதியாகத் தங்குகிறது. அதுவே இறைநிலை; உயிரின் இலட்சியம்.
அறியாமை
மனிதன், இயல்பில் குறையுடைய வனாயிருக்கின்றான். மனிதனுடைய குறைகளில் தலையாயது அறியாமை. அறியாமைதான் எல்லாக் குற்றங்களுக்கும் முதலாக இருப்பது. அறியாமை, மயக்கும்; பொருளல்லவற்றைப் பொருளென்று போற்றச் செய்யும்; துன்பத்தை இன்பமாகக் கருதச் செய்யும்; பெரியோரைப் பகைவராகக் கொள்ளச் செய்யும்; சிற்றினத்தாரை நட்பாகக் கொள்ளத்துரண்டும். அம்மம்ம! அறியாமை செய்யும் தீமையைப் பகைவனாற் கூடச் செய்ய இயலாது ஆதலால், திருவள்ளுவர் முதலில் மனிதனை அறியாமையிலிருந்து விலகுக என்று அறிவுறுத்துகிறார்.
பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு[19]
இது வள்ளுவர் வாய்மொழி.
புல்லறிவாண்மை
அறியாமையைக் கூட ஒரோவழி மன்னிக்கலாம். ஆனால் அறியாமையை அறிவு என்று நம்பி இறுமாத்தலாகிய புல்லறிவாண்மை மிகமிகக் கொடியது. அறியாமையுடையோர் திருந்த வாய்ப்புண்டு. காரணம் தாம் அறியாமை யுடையோம் என்று அவர்கள் அறிவதால். புல்லறிவாண்மை யுடையோன் திருந்துதல் அரிது. ஏன், திருந்தவே முடியாது. அவன் ‘அறிவுடையோம்’ என்ற இறுமாப்பால் ஏவவும் செய்யான்; அவனும் தேறான். அப்பரடிகள் கூறியதைப் போல் உலைப்பானையிலுள்ள இளஞ்சூட்டு நீரில் மகிழ்ந்து ஆடும் ஆமையைப் போல, அவன் மகிழ்ந்து ஆடுகின்றான்.[20] புல்லறிவாண்மை, அறியாமை நீக்கத்திற்கே தடையாகப் போய்விடும். புல்லறிவாண்மை அறிவின் வாயிலை அடைத்துவிடும். உலகமே திரண்டு கூறினாலும் அவன் ஒத்துக்கொள்ளமாட்டான். அவனை உலகத்துப் பேய் என்பார் திருவள்ளுவர். அறியாமை அதனை உடையவனுக்கு மட்டுமே தீமை செய்யும். புல்லறிவாண்மை பேயைப் போலச் சமுதாயத்திற்கே தீங்கு செய்யும். ஆதலால் புல்லறிவாண்மை முற்றாகக் கடியப்பெறுதல் வேண்டுமென்பது திருவள்ளுவர் கருதது.
கல்வி
அறியாமை அகன்று - புல்லறிவாண்மை போய் மனிதன் விளக்கமுற உதவி செய்யும் வாயில் கல்வியே. மனிதன், மனிதனாக விளங்கத் துணைசெய்யும் முதல் வாயில் கல்வி. அதனாலன்றோ அப்பரடிகள்,
கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னை[21]
-என்றும் திருமூலர்.
கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே[22]
என்றும் கூறிப்போந்தனர். ஞான நூல்களைக் கற்றலே “வேள்வி” என்று அறநூல்கள் கூறுகின்றன. திருவள்ளுவர் கல்வியை ஓர் இயக்கமாகவே வற்புறுத்துகிறார். “கற்க!” என்பது அவராணை. ஆம்;. உடல்நலத்துக்குரிய உணவு உண்பது மனித குலத்திற்கு வழக்கமாகிவிட்டது. ஆனால், உயிர் நலத்திற்குரிய நூல்களைக் கற்பது இன்னும் பலருக்கு வழக்கமாகவில்லை. உலக மானிடச் சமுதாயத்தில் கற்றவர் விழுக்காடு சற்றேறக்குறைய ஐம்பதேயாம். இந்த ஐம்பது விழுக்காடும்கூட, கற்கும் முறையைக் கற்றவர்களேயாம். கல்வியைக் கற்றவர்கள்-கற்றுக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு விழுக்காடு இருந்தாலே அரிது. மனிதன் ஓயாது கற்கவேண்டும்; ஒவ்வொருநாளும் கற்க வேண்டுமென்பதை,
என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு[23]
என்று வினவுகின்றார் திருவள்ளுவர்.
கசடறக் கற்க
கற்கும் ஆர்வம் தலைப்பட்டு முயற்சி தோன்றியவுடன், கற்பதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு நுட்பமான கலை, ஒரு மனிதனின் முன்னேற்றம் அவன் கற்பதற்குத் தேர்ந்தெடுக்கும் புத்தகத்திலேயே அடங்கியிருக்கிறது. இன்று வாழும் மானிடர் பலருக்கு இந்தக் கலை கைவந்ததில்லை. தாம் கற்பதற்குரிய நூலைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒருவர் தம்முடைய வாழ்க்கையில் அமைந்துள்ள மனக் குற்றங்களை அறிந்து கொள்ள வேண்டும். உடல் நோய்க்கு மூலிகைகள் மருந்து; மனக்குற்றத்திற்குக் கருத்துக்களே மருந்து. மனிதன் தன் மனக்குற்றங்களை அறிந்துகொண்டு அக்குற்றங்களை நீக்குதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மனக்குற்றம் நீங்குகிறவரை கற்கவேண்டும். அக் குற்றங்கள் நீங்கிய நிறை நிலையில் ஒரோவழியன்றி என்றும் நின்று ஒழுக வேண்டும். இது வள்ளுவர் காட்டும் வழி.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக[24]
என்பது எண்ணத்தக்கது.
செவிச் செல்வம்
கற்பதற்குரிய நூல்கள் பல்கிப் பெருகி வளர்ந்து கிடக்கின்றன. அவை முழுவதையும் தேர்ந்தெடுத்துக் கற்றுத் தெளிவதற்கு ஒரு மனிதனுக்குரிய வாழ்நாள் போதாது. ஆதலால், நல்ல நூல்களைக் கற்றலோடு கற்றோர் வாயிலாகக் கேட்பது, மேலும் துணை செய்யும் என்பது திருவள்ளுவர் கருத்து. அதுமட்டுமன்று, தம்மில் மூத்த சான்றோர், நல்ல நூல்களைக் கற்று, கற்ற கல்வியை வாழ்க்கையில் சோதனைப் படுத்தி ஒழுக்கமாக்கிக் கூறுவர். அங்கனம் கூறும் சான்றோரின் சொற்களைக் கேட்பதன் மூலம் எளிதில் வாழ்க்கையில் முன்னேறலாம். கற்கும் இடர்ப்பாடுகளைத் தவிர்க்கலாம்.
இழுக்க லுடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்[25]
என்பது வள்ளுவர் வாய்மொழி. ஆதலால் ஒரு மனிதன் முழுமையுறக் கற்கும் முயற்சி மட்டும் போதாது; நல்லவை கேட்கும் முயற்சியும் தேவை. நல்லவை கேட்க முனையாத செவிகளைத் திருவள்ளுவர், ‘தோட்கப் படாத செவி’[26] என்பார். “செவிகாள் கேண்மின்களோ”[27] என்று அப்பரடிகள் செவிகளை இரந்து வேண்டுவார். திருஞானசம்பந்தர் “கற்றல் கேட்டலுடையார் பெரியார்”[28] என்பார்.
எண்ணம்
கற்றலும் கேட்டலும் மனிதனின் வளர்ச்சிக்குத் துணை செய்யும் சிறப்புடைய பழக்கங்கள். ஆயினும் கற்ற - கேட்ட செய்திகளை எண்ணத்தில் தேக்கி உணர்வுகளாக மாற்ற வேண்டும். “எண்ணம் போல் வாழ்வு” என்பது பழமொழி. எண்ணம் ஆழமானதாக இருக்கவேண்டும். ஒப்புக்காக எண்ணுவது பயன்தராது. செயல்களின் வெற்றிக்கு எண்ணமே அடிப்படை எண்ணாமல் செய்யும் செயல் வெற்றியையும் தராது; பயனையும் தராது.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்[29]
என்பது திருக்குறள்.
அறிவு
கற்றாலும், கேட்டாலும், எண்ணினாலும் கூட ஒரு மனிதன் முழுமையான அறிவைப் பெற்று விடுவதில்லை. ஏன்? மேற்கூறிய அகநிலை முயற்சிகளால் அவன் அறிவின் தாழ்வாரத்திற்கே வந்து சேர்கிறான்; அவன் அறிவுடையவனாகி விடுவதில்லை. கற்ற கருத்து, செவி வழிக் கொண்ட சிந்தனை, எண்ணிய எண்ணம் இவையனைத்தும் அறிவாக உருப்பெற வாழ்க்கையிற் செயற்பாடு தேவை. உணவு செரிக்கப்பெற்றுச் செங்குருதியாக மாறி, வலுமையாகித் துணை செய்வதைப் போலக் கல்வி வாழ்க்கைப் பட்டறையில் செரிக்கப்பெற்று அறிவாகமாறி உணர்வாக உருப்பெற்று ஒழுக்கமாக வளர்ந்து துணை செய்ய வேண்டும். நீச்சல் பற்றிப் படிப்பது நீந்துகிற அறிவாகாது. மருத்துவ நூல்களைக் கற்பதால் பிணிகள் நீங்கா. கடவுளைப் பற்றிய நூல்களைக் கற்பது கடவுட்டன்மையைத் தந்து விடாது. அன்பினைப் பற்றிய படித்தல், ஒப்பித்தல் அன்பினைத் தந்து விடா. அவையனைத்தும் வாழ்க்கையில் சோதனைப்படுத்தப்பட வேண்டும்; நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதே அறிவு தோன்றும். உலகில் தோன்றிய உயர்ந்த சிந்தனை நூல்கள், அறநெறி நூல்கள் இலட்சக் கணக்கில் விற்பனையாகின்றன. அவற்றைப் படிப்பவர்களும் ஆயிரம் ஆயிரம் பேர். அவற்றிற்கு உரை கூறுவோர்-விளக்கம் கூறுவோர் பல நூறு பேர். ஆயினும் உலகத்தில் முழுமையான அறிவுடையோரைக் காண்டது அரிதாகிவிட்டது. நூல்களைக் கற்பவர்கள் அறிவுடையராக மாட்டார்கள். இன்னும் பச்சையாகச் சொன்னால் கற்காதவர்களைவிட - நூல்களைப் படிக்காதவர்களைவிடக் கற்றவர்களில் பலர் முட்டாள்களாக இருப்பார்கள். “பலகற்றும் கல்லார் அறிவிலாதார்?[30] என்பது வள்ளுவர் வாக்கு. ‘கற்ற நிர்மூடர்’ என்பார் தாயுமானார். நூல்கள் பலவற்றைக் கற்றாலும் அறிவு, அனுபவத்தின் வழியிலேயாம்.
நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்[31]
என்று கூறி வள்ளுவர் விளக்குகின்றார். நூல்கள் பலவற்றைக் கற்றாலும் அவர்தம் அனுபவத்திற்கு வந்து உண்மையில் அவருக்கு உரிமையுடையதாக மாறிய அறிவே வாழ்க்கையில் மிகுந்து நிற்கும்.
அறிவுடைமைக்கும் அறிவின்மைக்கும் என்ன அடையாளம்? அறிவுடைமைக்கும் அறியாமைக்குமுள்ள வேறுபாடு மிகப்பெரியது. ஆனால் உலகம் அதனை முற்றாக உணரவில்லை. சில செய்திகளைத் தெரிந்து கொள்வது அறிவுடைமையாகாது; பேசுதலும் எழுதுதலும் கூட அறிவுடைமை யாகாது. இவையெல்லாம் அறிவின் வாயில்கள். உண்மையான அறிவுடைமை துன்பத்தை மாற்றுங்கருவி. நேற்று அழுத மனிதன் இன்று அழாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நேற்றைய தோல்வி இன்று வெற்றியாக வேண்டும். நேற்றைய துன்பத்தை இன்று இன்பமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அங்ஙனம் செய்யப் பயன்படும் கருவியே ‘அறிவு’.
அறிவு அற்றம் காக்கும் கருவி[32]
அறிவுடையார் ஆவது அறிவார்[33]
என்பன திருவள்ளுவர் வாக்கு.
மனிதன், தன் அன்றாட வாழ்க்கையின் அனுபவங்களைப் படிப்பினையாக்கிக் கொள்ளவேண்டும். அவ்வழி அறிவினைப் பெறவேண்டும். மனிதனின் வாழ்நாள் ஓடிக் கொண்டேயிருப்பது. அதில் சென்ற காலம் நிகழ் காலத்திற்கு வித்திடுகிறது. நிகழ்காலம் நாளைய எதிர்காலத்திற்குத் தளம் அமைக்கிறது. இதுதான் உண்மையான வாழ்வியலுணர்வு. ஆனாலும் நேற்றைய வாழ்க்கையை இன்று நினைந்து மகிழ்தல் அல்லது கவலைப்படுதல் ஓரளவு மருந்தென வரவேற்கப்படலாம். அங்ஙனம் மகிழ்தலும் அழுதலுமே இன்றைய வாழ்க்கையாக மாறிவிடக் கூடாது. நாளைய வாழ்க்கையை எண்ணி எதிர்பார்த்து இன்றையச் செயல்களை வகுக்க வேண்டும். ஆனால், இப்படிச் செய்ய சில மத போதகர்கள் இடம் தருவதில்லை. ‘நாளை பற்றிக் கவலைப்படாதே! அது கடவுள் கையிலிருக்கிறது’ என்று சொல்லுகிறார்கள். ஆனால் நம்முடைய சமயம், அங்கனம் கூறுவதில்லை. திருவள்ளுவர்,
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்[34]
என்று கூறி விளக்குகிறார்.
சேக்கிழார்,
சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனியெதிர்
காலத்தின் சிறப்பும்[35]
என்று அருளியுள்ளார். ஆதலால், அறிவுடைய மனிதன் நாளைய வாழ்க்கைக்கு ஏற்றவாறு அறிந்து ஒழுகுதல் வேண்டும். அறிதோறறியாமை
அறிவு வளர்ந்து கொண்டேயிருப்பது. அதற்கோர் எல்லைக் கோடில்லை. அறிவு நிறைவாக வளர்ந்துழி பேரறிவாக மலரும். அதனை மாணிக்கவாசகர் “நின்னை அறியும் அறிவு” என்று பாராட்டுவார். அந்த உயர்ந்த அனுபவத்திற்குச் செல்லும் வரை அறிவு வளர்தற்குரியது. அதுவரையில் மனிதனிடத்தில் அறிவும் அறியாமையும் போட்டிபோடும். அறியாமை என்பது ஒன்றுமே அறியாததன்று. அறிவினிடத்தில் இருப்பதே அறியாமை. பலவற்றை அறிந்த மனிதன் இன்னும் அறியவேண்டியவை உள்ளனவே என்று உணர்வதே அறியாமை. அங்ஙனம் உணர்ந்தாலே அன்றாட வாழ்விற்குரிய அறிவைப் பெற முடியும்.
எவ்வ துறைவது உலகம் உலகத்தோ
டவ்வது உறைவது அறிவு[36]
என்பார், ஆதலின், “அறிதோறு அறியாமை”[37] உணர்ந்து, அறிவைப் பெறுதல் உயிர்ப்புள்ள மனிதனின் வாழ்க்கை முறை.
காலத்தின் அருமை
மனிதன், அவன் வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத அறிவுடைமையைப் பெற்று விட்டான். அவன் அறிவினைப் பெறவும் இவ்வையகத்தில் வாழவும் கால எல்லை உண்டு. இக்கால எல்லையை யாரும் வெற்றிகண்டதில்லை. கடவுள் நம்பிக்கையில்லாதவர்களும் கூட இந்தக் கால எல்லையை “The Determination of Law” என்று ஒத்துக் கொள்ளுகிறார்கள். ‘சாநாளும் வாழ்நாளும் யாரறிவார்’[38] என்பார் திருஞானசம்பந்தர். “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை யென்னும் பெருமை யுடைத்திவ் வுலகு”[39] என்பார் திருவள்ளுவர். ஆதலால் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வரையறுக்கப்பட்ட வாழ்நாள் எல்லைக்குள்ளாகவே முழுமையுறல் வேண்டும்; நிறைநலம் பெறுதல் வேண்டும். ஆதலால் அவன் காலத்தின் அருமை அறிந்து போற்றுதல் வேண்டும். இயற்கையளித்த கொடைகளில் தலையாயது காலம். மனிதன் விரும்பினாலும் விரும்பாது போனாலும் காலத்தின் முத்திரை அவனிடம் பதிந்தே தீருகிறது. மனிதனின் வாழ்நாள், வினாடி வினாடியாகக் கரைந்து ஒடுகிறது. வினாடிகளைக் காப்பாற்றிப் பயன் கொண்டால் தான், வாழ்நாளை முழுமையாகப் பயன்படுத்த முடியும். நமது சமயம் இறைவனைக் காலம் கடந்தவன் என்று கூறும். அதற்குப் பொருள், அவன் காலங்களைக் கடத்துகிறவன் என்பதன்று. “ஞாலமே விசும்பே இவை வந்துபோம் காலமே” என்று திருவாசகம் பேசும். அவனே காலமாக நிற்கின்றான். சேரமான் பெருமாள் நாயனார் பூசனையில், குறித்த காலத்தில் சிலம்பொலி காட்டியதும், காஞ்சியில் பல்லவ மன்னன் கட்டிய பெருங்கோயிலில் எழுந்தருள்வதற்குரிய நாளை மாற்றியதும், இறைவன் காலத்தைப் போற்றுகிறான்; குறித்த காலத்தில் நிகழ்வுகளைச் செய்கிறான் என்பதை உணர்த்துகின்றன. அதனால்தானே இறைவனின் நிகழ்வுகளாக இருக்கின்ற இயற்கை, ஓர் ஒழுங்கு, முறை பிறழாத நிகழ்ச்சி “Order and Constancy உளவாக அமைந்துள்ளது. அவன் காலங்கடந்தவன் என்பதன் பொருள், காலத்தினாலாய முதுமைத் தழும்புகள் - மூப்பின் அடையாளங்கள் அவனுக்கு இல்லை என்பதேயாம். ஆதலால், மனிதன் காலத்தைப் போற்றிப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதனாலேயே “நாளைப் பார்” என்று பழமொழி வழி ஆணை பிறந்தது; அதற்குப் பொருள் “நாளின் அருமைப் பாட்டினை அறிந்து பாதுகாத்துப் பயன் கொள்க” என்பதேயாம். அதற்கு மாறாகப் பலர் பஞ்சாங்கத்தைப் புரட்டுகின்றனர். நல்லநாள் பார்க்கின்றனர். எது நல்லநாள்? வாழ்க்கையின் நாள்கள் அனைத்தும் முத்து முத்தான நல்ல நாள்கள். முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய நாள்கள். இதனை மனிதன் மறந்துவிட்டுச் சில நாள்களைக் கழிக்கின்றான். இது வாழும் முறையன்று.
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே[40]
என்றார். நாளென் செயும் வினைதான் என் செய்யும்’[41] என்பது கந்தரலங்காரம். ஆதலால் மனிதனின் வெற்றிக்கு முதற்படி காலத்தின் அருமையறிந்து பயன்படுத்துதலே!
உயிரறுக்கும் வாள்!
திருவள்ளுவர் காலமறிதல் என்றே ஓர் அதிகாரம் வகுத்து ஓதுகிறார். நகைச்சுவையாகக் காலம் கழிந்தோடும் செய்தியை நிலையாமை அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்,
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாளது உணர்வார்ப் பெறின்[42]
என்றார். வாள் மரத்தினை ஒட்டு மொத்தமாக ஒரு நொடியில் அறுத்துவிடுவதில்லை. ஓர் இழுவைக்கு ஒரு நூல் அளவுதான் அறுபடும். அதுபோல ‘இன்று’ என்றும் ‘நாளை’ என்றும் ‘நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்’என்றும் நாள்களைக் கடத்துகின்றவர்கள் வாழ்வு, பயனற்றுப் பாழ்படும் என்பது வள்ளுவர் செய்யும் எச்சரிக்கையாகும். இங்ஙனம் எதிர்மறையாக எச்சரித்த திருவள்ளுவர் ‘பருவத்தோடு ஒட்ட ஒழுகல்’[43] என்றும் ‘கருவியால் காலம் அறிந்து செயல்[44] என்றும் கூறி வழி நடத்துகிறார். இறுதியாக, ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்’,[45] என்று வழி நடத்துகின்றார்.
இடமறிக
மனிதன் அறிவினைப் பெற்றாலும் காலமறிந்து கடமைகளை மேற்கொண்டாலும் தாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பயன்தருதற்குரிய இடமறிந்து முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். முயற்சியும் இடமும் வாய்ப்பாக அமையின் வலிமை இன்மையும் வலிமையாக மாறும், வெற்றிகளைத் தரும். ஆதலால் காலம் அறிதலோடு களங்கள் அறிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏவலர்
மனிதன் மேற்கொண்டுள்ள வாழ்க்கைப் பயணம் ஒரு நெடிய பயணம். இந்நெடிய பயணத்தைத் தனியே நடத்துதல் அரிது. எண்ணிய பணிகளை இனிதே முடித்தற்குரிய துணைவர்களை-ஏவலர்களைக் கருவியாகப் பெற்றிடுதல் வேண்டும். ஏவலர்கள் எளிதில் அமைவதில்லை.
யான்கண் டனையர்என் இளையரும்[46]
என்று புறநானூறு பேசும். அதாவது, கண்கள்வழிக் கருத்தறிந்து, கருதியதை முடிக்க வல்லவர்கள் ஏவலர்கள். இன்று அத்தகு ஏவலர்கள் எங்குக் கிடைக்கின்றனர். அப்பூதியடிகளுக்கு வாய்த்த ஏவலர் மிகச்சிறந்த ஏவலர். அப்பரடிகள் எழுப்பிய ஒரு வினாவுக்குத் திரும்ப அவர் வினாக் கேட்கவேண்டிய அவசியம். இல்லாத வகையில் முழுமையான விடை சொன்ன அந்த ஏவலரின் அருமை நினைந்து நினைந்து மகிழத்தக்கது. அத்தகு ஏவலர்கள் இன்று கிடைப்பதில்லை. ஏவலர்களைத் தேர்ந்தெடுத்தல் வாழ்க்கையில் மிகச்சிறந்த சாதனைகளுள் ஒன்று. அறத்தின் காரணமாகவோ பொருளின் காரணமாகவோ இன்பத்தின் காரணமாகவோ உயிர்க்கு வரும் துன்பத்தின் காரணமாகவோ தமையுடைய தலைவனுக்கு மாறாக- எதிராகச் செயற்பட விழையாதோரையே ஏவலராகத் தேர்ந்து கொள்ளவேண்டும். ஏவலர்க்கு அறம் தம் தலைவன் வழி நிற்றலேயாம். தம் தலைவன்மாட்டு அறமல்லாதன இருக்குமாயின் அவனிடத்திலேயே போராடி அறம் காணவேண்டும். நல்லுழின்மையால் அவனிடமே திருத்தம் காண இயலாவிடின் அவனோடு மடிதலே ஏவலர் மேற்கொள்ள வேண்டிய அறம். ஏவலரைத் தேர்ந்தெடுப்பது ஒரு நுண்ணிய கலை, இக்கலையில் தேர்ச்சி பெறாதவரிடம் ஏவலர் கூட்டம் கூட்டமாக இருப்பர். ஆனால், பணிகள் நிகழா. ஏவல் கொள்வோர் எப்போதும் இது நடைபெறவில்லையே; அது நடைபெறவில்லையே; என்று அங்கலாய்த்துக் கொள்வார். அடிக்கடி ஏவலரோடு முரண்படுவார். ஏவலர் முணுமுணுப்பர்; ஏவலர்களும் மனிதர்கள் தாமே! அவரிடம் குணங்களும் உண்டு; குற்றங்களும் உண்டு. ஏவல் கொள்வோர் ஏவலரிடம் உள்ள குற்றங்களை மறக்கவேண்டும். அவரிடமுள்ள குணங்களைக் கண்டு கொள்ளவேண்டும். அவ்வழி ஏவல் கொள்ள வேண்டும். இஃதொரு செப்பமான வாழ்க்கை முறை,
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்[47]
என்பார் திருவள்ளுவர். ஏவலரைத் தேர்ந்து தெளிந்து ஏற்றுக் கொள்ளவேண்டும். தெளிந்தபின் ஐயப்படுதல் அன்பினைக் கெடுக்கும்; உறவினை உருக்குலைக்கும். பணிகளைக் கெடுக்கும்; பகையை மூட்டும். ஆதலால் ஏவலரைத் தெளிந்தபின் ஐயம் கொள்ளுதல் கூடவே கூடாது.
தேரான் தெளிவும் தெளிந்தன்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்[48]
என்பார் திருவள்ளுவர்.
வலிமை பெருக்குக! அறிக!
மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தை இனிதே நிறைவேற்றி முடிக்க வேண்டுமானால் பிறர் வலிமையை ஆய்ந்தறிவதுடன் தன் வலிமையையும் பெருக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும். வலிமையில்லா வழி, வளம் குன்றும்; புகழ் பெறுதலரிது: இறை நிலையையும் எய்துதலரிது; ஆதலால் நாள்தோறும் தம் வலிமையறிந்து மேலும் மேலும் காலத்தின் தேவைக்குரிய அளவுக்கு வலிமையைப் பெருக்கி வளர்த்துக் கொள்ளவேண்டும். வலிமையில்லா வாழ்க்கை ‘நடலை வாழ்க்கை’. வலிமையில்லாதவருக்கு ஏமம் இல்லை; இன்பம் இல்லை. ஆதலின் பெறவேண்டிய வலியறிக. அவ்வலிமையைப் பெற்று உயர்க என்று மனிதனை வழி நடத்துகின்றார் வலியறிதல் என்ற அதிகாரத்தின் மூலம் திருவள்ளுவர்.
உள்ளம் உடைமை உடைமை
மனிதன் அறிவைப் பெற்றான்; காலத்தினை அறிந்து ஆராயும் இயல்பினைப் பெற்றான்; வலிமையையும் பெற்றிருக்கின்றான். ஆயினும் அவனை உந்திச் செலுத்தி வளர்க்கும் ஊக்கமில்லா வழி, உரிய பயன்வராது. ஊக்கமென்பது உள்ளத்தின் எழுச்சி; பள்ளம் நோக்கிப் பாய்ந்துவரும் புனல்போலப் பணிகளையே நோக்கி விரையும் உள்ளத்து எழுச்சி, இயல்பான வாய்ப்புக்களின்மை குறையல்ல. வாய்ப்புக்கள் வந்தமைவனல்ல. மனிதன் படைத்துக் கொள்பவை. வாய்ப்புக்களைப் படைத்து வழங்கும் அறிவறிந்த ஆள்வினை வேண்டுமென்றார் திருவள்ளுவர்.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்(து)
ஆள்வினை யின்மை பழி[49]
உலகத்தில் எதையிழந்தாலும் திரும்பப் பெறலாம்; ஆனால் ஊக்கத்தை இழந்த மனிதன் எதையும் பெற இயலாது. கடவுளாலே கூட அவனைக் காப்பாற்றமுடியாது. “உள்ளம் உடைமை உடைமை” என்பது வள்ளுவர் வாக்கு. அடுக்கிய உடைமைகளை உடைமையெனக் கொள்ளற்க! உடைமைகளைப் படைத்திடும் ஆற்றலுடைய உள்ளமே உடைமை. உள்ளத்தை இழந்த மனிதன் உயிரை இழந்த உடம்பு போல்வான். ஊக்கமிருப்பின் தெய்வத்தால் ஆகாதவைகளையும் கூடச் சாதிக்க முடியும். ஆதலால் வையகத்தின் வாழ்க்கையை வெற்றிகரமாக முடிக்கக் கருதும் மனிதன் ஊக்கத்தை உடைமையாகக் கொள்ள வேண்டும். அவனே ஊழை வெற்றி கொள்வான். ஊழிற்கு அடிமையாகும் கொள்கை நமது சமயத்தில் இல்லை. ஊழை மாற்றத்தானே இந்த வாழ்க்கை வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் ஊழைக் கண்டு அஞ்சற்க! ஊழின் வலிமை, முயற்சியின் முன் தூள் தூள் ஆகும், ஊழை, ஆள்வினையுடைமை வெற்றி பெறும். ஆதலால் நம்பிக்கையுடன், ஊக்கக் கிளர்ச்சியுடன் வாழ்க்கையை நடத்துக. இதுவே வள்ளுவர் ஆணை !
ஊழையும் உப்பக்கம் காண்பர்; உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்[50]
என்று தேற்றி வழி நடத்துகிறார்; ஊக்கம் தந்திடும் உரைகளைத் தந்துள்ளார். தொடர்ந்து செயற்படுக; துவளாதே; என்கிறார்.
மனிதன் பணிகளைத் தொடங்க வேண்டும். அங்ஙனம் பணிகளைத் தொடங்கிச் செய்வதன் மூலம் அவன் வாழும் உலகத்தை-சூழ்நிலையை இனியதாக அமைத்துக் கொள்கிறான்; அறிவை வளர்த்துக் கொள்கிறான். பணிகளின் வழி அவன் வாழ்தலே அவன் முழுமையெய்துதற்குரிய வழி. அதனாலன்றோ,
என் கடன் பணிசெய்து கிடப்பதே[51]
என்றார் அப்பரடிகள்.
இருவினையொப்பு
“பணி செய்து கிடப்பதே” என்ற அருள்வாக்கு எண்ணத்தக்கது. வாழ்வியல் ஒரு விந்தையான அமைப்பு. செயல் செய்வது, அதாவது வினைகளை இயற்றுவது தவிர்க்க முடியாத கடமை. ஆயினும், வினைவழி, இன்பமும், துன்பமும் நஞ்சு வட்டமாகச் சுழன்று வாராமல் தற்காப்பது அவசியம். அதற்கென்ன வழி? செயல்களைச் செய்ய வேண்டும். ஆனால் அதனுடைய விளைவுகளை - பலாபலன்களைத் தன் வயப்படுத்திக் கொள்ளக்கூடாது. தன்னயந்த சார்புணர்வுடன் நல்லதே செய்தாலும் வினை நீக்கத்திற்கு வழியில்லை. இன்பம் வந்துழி மகிழ்தலும் துன்பம் கண்டுழித் துயருறுதலும் நடுநிலை வழுவிய வாழ்வியல், அதனால் திருவள்ளுவர் “நன்றாங்காலும் மகிழற்க; அல்லாக் காலும் அமைந்து அழாதிருக்க; வேண்டுதல் வேண்டாமை என்ற கறங்கு வட்டாரத்தினின்று விலகி வாழ்க்கை விளையாட்டை நிகழ்த்துக. அவ்வழி, வினை நீங்கும்; துன்பம் நீங்கும்” என்றறிவுறுத்தியுள்ளார்,
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவது எவன்?[52]
என்பார்.
எடுத்த பணிகளில் இடையறவு படாமை
பணிகளைத் தொடர்ந்து செய்தல் வேண்டும். தொடங்கிய பணிகளை இடையில் நிறுத்துதல் நன்றன்று. அப்பழக்கம், பணிகளின் பயனைக் குறைக்கும்; அது மட்டுமன்று, துன்பத்தையும் தரும் பற்றி எரியும் வீட்டை ஒரு புறம் அனைத்துவிட்டு இன்னொரு புறம் அணைக்காமல் இருப்பதால் யாது பயன்? தீயினால் வீடு அழிந்துவிடும். ஒரு புறம் அணைத்ததன் முயற்சியும் பயனற்றுப் போகிறது. ஆதலால் பணிகளை இடையில் நிறுத்துதல் நம் வாழ்க்கைக்குரிய வழியன்று. பணிகள் துன்பத்தோடு தொடர்புடையனதாம். இனிய மக்கட் பேற்றுக்குக் கூட, தாய் செங்குருதி சிந்தத்தானே வேண்டியிருக்கிறது. ஆதலால், பணிகளை மேற் கொண்டு வாழ்தல் என்பது மலர்கள் பரப்பப்பட்ட பாதையன்று. ஆயினும் துன்பம் கண்டு துவளாது, சோர்வடையாது - இடுக்கண்களின் காரணமாக இடையில் நில்லாது பணிகளைத் தொடர்ந்து செய்தலே வாழ்வாங்கு வாழும்நெறி. திருஞானசம்பந்தர், “இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும்”[53] என்பார். அப்பரடிகளின் வாழ்க்கைப் பயணத்தில் விளைந்த இடுக்கண்கள் ஒன்றா? இரண்டா? இடுக்கண்கள் நிறைந்த அவருடைய பயணத்தை நாடு உள்ளவாறு அறியவில்லை. ஏன், இடுக்கண்களுக்கும் துன்பங்களுக்கும் அஞ்சுகின்ற மதத் தலைவர்கள் அவரைக் கடவுளாக்கி விட்டனர்; அது மட்டுமா? கற்சிலையாகவும் செய்து விட்டனர். அப்பரடிகளின் புரட்சியினால் சமுதாயம் மாற்ற மடையவில்லை. ஆனால் சமயப் புரோகிதர்களுக்கு அப்பரடிகள் பெயரால் - குருபூசையின் பெயரால் விலாப்புடைக்க உண்ணச் சோறு கிடைக்கிறது. உண்ட களைப்பு நீங்கப் பேச, பேச்சுமேடை கிடைக்கிறது; கதாகாலட்சேபம் நடக்கிறது. வயிறு குலுங்கச் சிரிப்பதால் உடலசையாது போனாலும் உணவு செரித்து விடுகிறது. இன்றையச் சமய உலகம் அப்பரடிகளின் கொள்கைகளைக் கல்லறையில் புதைத்து விட்டு அவருக்குச் சிலை எடுத்து, விழா எடுத்துச் செகத்தினை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கொடிகட்டி ஆண்ட பல்லவப் பேரரசை எதிர்த்து,
நாமர்க்கும் குடியல்லோம்[54]
என்று விடுதலை முழக்கம் செய்தவர் அப்பரடிகள். அந்த விடுதலை முழக்கத்திற்கு அவர் கொடுத்த விலை அம்மம்ம! நீற்றறையைக் கடந்து வென்றார். பண்ணொடு பாட்டுக் கலந்த வாழ்க்கையை, இயற்கையோடிசைந்த வாழ்க்கையை - காதலின்பம் நிறைந்த வாழ்க்கையைத் துன்பமாக்க முனைந்த சமணர்களை அவர் எதிர்த்துப் பெற்ற வெற்றி அம்மம்ம...! இன்றைய திருக்கோயில்கள் அந்த வெற்றியை வழங்காமலிருக்கலாம்; மடாலயங்கள் மறந்திடலாம்; ஆனால் மெள்ளத் தென்றலிலே மிதந்துவரும் இசை, அப்பரடிகளின் புகழை இசைக்கிறது. வசந்தத்திலே மலர்ந்து மணம் வீசும் மலர்களிலே மகிழ்ச்சி வெள்ளம், அந்த இயற்கை வெள்ளம் “சொல்லுக்கு வேந்தனாக” நிற்கும் அவர் புகழை வாழ்த்துகிறது. உலகெலாம் உடல் வேறாக - உயிர் ஒன்றிக் காதலித்து உயரின்ப நிலையில் வாழ்ந்திடும் காதலர்களின் இன்ப வெள்ளம் திருநாவுக்கரசரின் புகழைப் பாடிப் பரவுகிறது. இந்தச் சாதனைகளுக்கு அப்பரடிகள் பெற்ற இடுக்கண்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப்பல. ஆனாலும் அவர் இடுக்கண்களைக் கண்டுழி நிற்காமல் பணிகளைத் தொடர்ந்தார்; வெற்றியும் பெற்றார். வையகத்தார்க்கு இன்பம் தந்தார். அதுவே வாழும் வழியென்பது வள்ளுவர் தந்த பாடம்.
செய்க பொருளை
உயிர், நமது சமய நெறிப்படி துய்த்தலுக்குரியது. அதற்குத் துய்க்கும் வலிமை இயல்பானது. இறைநிலையிலும் கூட அது திருவருளைத் துய்க்கும் உரிமையுடையது. உலகில் வாழப் பிறந்த மனிதன், துய்த்தல் வேண்டும்; துய்ப்பதற்குரிய பொருள்களைப் பெறவேண்டும். துய்ப்பில்லாதவர் வாழ்க்கை, தூரில்லாத மரம் போலக் கெடும். அதனா லன்றோ “துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ”[55] என்றார் அப்பரடிகள். இம்மையே தரும் சோறும் கூறையும்"[56] என்பது சுந்தரர் வாக்கு “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை”[57] என்பது வள்ளுவர் வாய்மொழி. இங்குப் பொருள் என்பது அணிந்து அல்லது எண்ணிச் சேமித்து மகிழும் - முழுமையாகத் துய்த்தற்குப் பயன் தராத - தங்கம், வைரம், முத்து முதலியனவல்ல; இக்கால நாணயங்களுமல்ல. பொருள் என்பது உயிர்கள் முழுமையாகத் துய்த்து மகிழ்தற்குரிய பொருள்களேயாம்; உண்டு, தின்று மகிழ்தற்குரிய பொருள்கள் இல்லையானால் உயிர் உடலோடு கூடி வாழ்தலரிது. அதனாற்றானே “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்”[58] என்ற வழக்கு தோன்றிற்று. ஆதலால் உடற் பிணியும், அவ்வழி உயிர்க்குச் சோர்வும் வராது வாழ்ந்திட விரும்பும் மனிதன், பொருள்களைச் செய்து குவிக்க வேண்டும். உண்டு, தின்று துய்த்திடும் பொருள்கள் உடலுயிர்க் கூட்டு வாழ்க்கைக்கு இன்றியமையாதன. ஆனால், உணவுகளால் மட்டும் மனிதன் உயிர் வாழ்ந்து விடுவதில்லை. ஒரோ வழி வாழ்வது போலத் தோன்றினாலும் உடலில் சதைகள் வாழுமே தவிர உயிரியல்புகள் வாழ்வதில்லை.
அன்பு
உயிர் துய்த்துத் தளிர்த்து மகிழ்ந்து வாழ அன்பு தேவை. அன்பின் வழியல்லது உயிரில்லை; இருந்தாலும் இல்லை என்பதே திருவள்ளுவர் கருத்து.
அன்பின் வழியது உயிர்நிலை! அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு[59]
என்பார் திருவள்ளுவர்.
அன்பு, உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும். புலன்களில்-பொறிகளில் பொதுள வேண்டும். ஊற்றெழும் அன்பு, தடையின்றி மற்றவர்கள்பாற் பாயவேண்டும்; புயல் சுமந்த வான், மழையைப் பொழிந்தாலே அதற்கு விடுதலை; இன்பம்; வாழ்த்து கருவுற்ற தாய் ஈன்று புறந்தரலே அவளுக்கு விடுதலை, இன்பம்; தாய் என்ற பெயர்; பாராட்டு, பாதுகாப்பு: வாழ்த்துக்கள். அதுபோல் மனிதன் அன்புள்ளத்தைப் பெற்று மற்றவர்க்கும் காட்டுதல் மூலமே வாழ்வான். தன்னைப் பற்றிய கவலையினின்றும் விடுதலை பெறுவான். வாழ்வித்து வாழ்தலே மனிதனின் வெற்றிக்குரிய சுருக்கவழி. வையகம் உண்ணுதலே அவன் உயர்வதற்குரிய ஒரே வழி. வையகம் உண்ணாமல் உண்டால் அவன் சதை வளரலாம்; ஆனால் அவன் வளரமாட்டான். அவனைச் சுற்றிக் காக்கை கழுகுதான் வட்டமிடும். மனிதர்கள் வட்டமிடமாட்டார்கள். அவனுக்காக அவனழுதால் எவ்வளவு நாளைக்கு அழுவது? அவன் துன்பத்துக்கு அழுது முடிக்க அவன் கண்களுக்கு ஆற்றல் உண்டா? ஒரு போதும் இல்லை. அவனுடைய துன்பத்தைக் கண்டு அழ ஆயிரமாயிரம் கண்களை அவன் பெறவேண்டும். அவனுடைய துன்பத்தைத் துணித்து மாற்ற எண்ணில் கரங்கள் முன் வரவேண்டும். அது எப்பொழுது நிகழும்? இவன் மற்றவர் துன்பத்தை-மற்றவற்றின் துன்பத்தைத் தன் நோய் போல் எண்ணி அழும் பொழுது தான்; மாற்றத் துடிக்கும் பொழுதுதான். மனிதனே போதும், உனக்கு நீயே அழுது கொண்டது. அது வெறும் புலம்பல்; அதில் தன்னல வாடை வீசுகிறது; அன்பின் ஈரம் இல்லை; ஒரே வறட்சி மயம்! அழு; ஆனால் உனக்காக அழாதே; மற்றவர்களுக்காக அழக்கற்றுக்கொள். அதுவே அன்பின் தவம், வாடிய பயிரின் வாட்டமெலாம் கண்டு வாடி அழுதாரே, அந்த வள்ளலாரை நினைத்துக்கொள். அந்த உயர்ந்த அன்பை நீ எண்ணு; நெஞ்சத்தில் தேக்கு. அந்த அன்பே தவம். அந்த அன்பே சிவம்; அன்பும் சிவமும் இரண்டல்ல! ஒன்றேயாம். மனிதனைச் சிவமாக்குவது அன்பு என்ற ஒன்றேயாம்.
அன்பலால் பொருளும் இல்லை
ஐயன் ஐயாற னார்க்கே[60]
என்றார் அப்பரடிகள். இந்த அன்பு வையகத்தை ஆட்சி செலுத்த வேண்டும், வழி நடத்த வேண்டும் என்ற தணியாக் காதலினால் இன்று திருக்கோயில்கள் தோறும் எழுந்தருளியுள்ள இறைவன் - எல்லாமாக இருந்தருளும் இறைவன் திருவுருவங்களுக்குள் - கருவறைக்குள் அடைப்பித்துக் கொண்டான். ஏன்? உயிர்களிடத்து அன்பினை ஆரத்துய்க்க! உயிர்களுக்குத் தம் அருளை வழங்கித் துய்த்து வாழ்வித்திட! நம்பியாண்டார் நம்பியின் நிவேதனத்தைச் சுவைத்தவன் - கண்ணப்பர் மெள்ள வாயில் அதுக்கிச் சுவையுண்டாக்கிப் படைத்த புலால் உணவையும் விரும்பி வேட்டவன் - அரி வாட்டாயர் தந்த மாவடுவைக் கழனிகளின் வெடிப்பில் தங்கிச் சுவைத்த தயாபரன் இன்று ஏன் திருக்கோயிலில் உண்ணவில்லை? அன்று அவர்கள் படைத்தவைகளைவிட விலை மிகுதியுடைய பண்டங்களாய் இருந்தாலும் ஏன் உண்ணவில்லை? மறைவாகச் சுவைத்து உண்ணத் திரை இருந்தும் ஏன் சுவைக்கவில்லை? இறைவன் சுவைக்காதது ஏன்? என்று நினைந்து அழுவார் இல்லாது போயினர். அது ஒரு தவக்குறை. இறைவன் “தாயினும் நல்லான்'; தாயிற் சிறந்த தயாவுடையான். உலகத்தில் நடமாடும் குறைகளும் நிறைகளும் உடைய தாய் கூட, தான் ஈன்ற குழந்தை பசித்திருக்க உண்ணமாட்டாள். அங்ஙனம் இருக்க அண்ட மெலாம் பூத்தவளாக - பூத்தவண்ணம் காப்பவளாக விளங்கும் கடவுளாகிய தாய் “உலகத்தில் கோடானுகோடி உயிர்கள் உண்ணாமலிருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் உண்ணும்வரை உண்ணமாட்டேன்” என்று தவம் கிடக்கிறாள். அவள் தனக்குவமையில்லாத் தாய். ஆனாலும் கடவுளைப் பற்றிக் கவலை படாதவர்கள், கடவுளைப் பிழைப்புப் பொருளாக்கிக் கொண்டவர்கள் வழக்கம் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால் மனித வாழ்க்கைக்கு உயிர் நிலை அன்பேயாம். அன்பே துன்பத்திற்கு மாற்று. அன்பே இன்பத்திற்கு வித்து. அன்பே ஆக்கத்துக்கு வழி. அன்பில் இழப்பதும் ஆக்கமேயாம் இத்தகைய உயர்ந்த அன்பு நெறியில் மனிதனை வழி நடத்தி வளர்க்கிறார் வள்ளுவர். அன்பு நெறியே நமது சமயத்தின் உயரிய தவம்.
நட்பு
அன்பு பெற்றுத்தருவது நட்பு. காதலியின்றி வாழ்தல் இயலும், நட்பின்றி வாழ்தல் இயலாது. நமது கடவுளாகிய அம்மை அப்பனுக்கும் ஒரு தோழன் தேவைப்பட்டான். இருவரை மணந்து வாழ்ந்த ஆரூரருக்கும் நட்பு தேவைப்பட்டது. வள்ளுவர் காலத்து நட்பு என்ற சொல், ஆரூரர் காலத்தில் தோழன் என்ற புது உருப்பெற்றது. தன் தோள், தனக்கு உதவி செய்தலைப் போல உதவியாக இருப்பவன் தோழன். நட்பு, வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று. நல்ல நட்பைப் பெற்றுவிட்டால் செயற்கரியது என்று ஒன்று இல்லை என்பதனை,
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு[61]
என்பார் வள்ளுவர். நட்பு, நாம் செய்யும் பணிகளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. நல்லோர் நட்பில் பிரிவே இல்லை. “காதலிற் பிரிவு” பாடிய கவிஞர்கள் உண்டு; ஆனால் நட்பிற் பிரிவு பாடிய கவிஞர்கள் இல்லை. ஒரோவழி பிரிந்தது போலத் தோன்றினாலும் அது, பழக்கங்களின் இடையிடே தவிர, நட்புணர்வின் இடையீடு இல்லை. ஆரூரர்சிவபெருமான் நட்பில் இந்த உண்மை புலப்படுகிறது. நட்பு என்பது குற்றங்களைக் காணாதது; குணங்களையே நாடுவது. அது பிறைநிலாப் போல வளரும். பயிலுழிப் பயிலுழி இன்பம் தரும். இதுவே நட்பு. இன்று, நட்பு என்ற சொல், தரம் தாழ்ந்து கிடக்கிறது. ஏன், கெளரவமான இரவலர்கள் நட்பு என்ற பெயரைப் பூண்டொழுகுகிறார்கள். மனிதன் வாழ்க்கையில் முழுமையான வெற்றியைப் பெற நல்ல நட்பினைப் பெறவேண்டும். நல்ல நண்பன் குற்றங்களைக் காணாதவன்; அவனுக்குக் குற்றங்கள் தெரியும் ஆனால் குற்றங்களின் வழியே அவன் மனம் திரிபடையாது. அதே போழ்து குற்றங் களுக்கு இசைந்து முகமன் கூறி உடனின்று அழிக்கவுமாட்டான். ஏற்புழி வடுப்படா வண்ணம் குற்றங்களைத் திருத்துவான். மாணிக்கவாசகரின் “பையத் தாழுருவி” என்ற சொற்றொடர் நினைந்து நினைந்து இன்புறற்பாலது. இறை வழி பாட்டுநெறியில் தோழமை நெறியும் ஒன்று. நமது சமயம் அச்சத்தில் பிறந்ததன்று அன்பில் பிறந்தது; அறிவில் தோன்றியது; நன்றிப் பெருக்கில் பிறந்தது. ஆதலால் கடவுளிடத்து அச்சத்தை வளர்ப்பதில்லை-கடவுளிடத்துத் தோழமையைக் கொள்ளத் துாண்டி வழிநடத்துவது. கடவுளும் விரும்பும் நல்ல நட்பைத் தேடிப்பெறுக என்று வழி நடத்துகிறார் வள்ளுவர்.
இல்லறம்
மனிதன் என்னதான் அறிவைப் பெற்றாலும், அரிய நட்பினைப் பெற்றாலும் சில காலம் கடந்தபிறகு அவன், வாழ்க்கையில் ஒரு வெறுமையை உணர்கிறான். அவன் அன்புடையவனாகிப் பலர்க்கு அன்பினை வழங்குகிறான். அதேபொழுது தன்னிடம் அன்பு காட்டுகிறவர்களை எதிர் நோக்கியே இருக்கிறான். அங்கேதான் மனிதன் இல்லறத்தை நாடுகிறான் இல்லறம் உயர்ந்ததா? தாழ்ந்ததா? என்ற விவாதம் நம்முடைய சமயத்தில் இல்லை. நம்முடைய சமயம் இல்லற நெறியை ஏற்றுப் போற்றுகிறது. ஏன் இறைவனையே சிறந்த இல்லறத் தலைவனாகக் காட்டுகிறது நம்முடைய சமயம். நம்முடைய தொன்மைக்கால வழிபாட்டுத் திருமேனி, அம்மையப்பன் திருமேனியேயாம், அம்மையப்பன் திரு மேனியைத் “தொன்மைக் கோலம்” என்று திருவாசகம் போற்றுகிறது.
தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்கவளை யும்உடைய தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பி[62]
என்பது காண்க. திருமுறை ஆசிரியர்கள் அம்மையப்பனாகவே கடவுளைக் கண்டு வாழ்த்துகிறார்கள். திருவள்ளு வரும் “ஆதிபகவன்”[63] என்கிறார். ஆதலால் இல்லறம் தவமன்று என்று கருதுவது பிழை. இல்லறத்தில் துறவின் உட்கூறுகள் இல்லை என்று கூறுவதும் பிழை சிறுத்தொண்ட நாயனார் குடும்பத்தினரின் வாழ்க்கையில், இளையான் குடிமாற நாயனார் குடும்பத்தினரின் வாழ்க்கையில் துறவின் தோற்றங்கள் இல்லையா? விளைவுகள் இல்லையா? இளையான்குடிமாற நாயனார் குடும்பத்தில் விளைந்த அளவுக்குத் துறவு உணர்ச்சி, துறவிகளால் ஆட்சி செய்யப்பெறும் சமய நிறுவனங்களில் கூட இன்று இல்லையே. ஆதலால் இல்லறம் நல்லறமே. நன்றுடையானாக விளங்கும் நமது வழிபடும் தெய்வமாகிய சிவபெருமான் பெண்ணின் நல்லாளோடு பெருந்தகையாக இருந்தே உயிர்களைக் காப்பாற்றுகின்றான். இல்லறம் ஏற்க என்று மனிதனை வழி நடத்துகிறான். வாழ்க்கைத் துணை நலம்
“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை”[64] - என்பது வள்ளுவர் வாக்கு அறனெனப்பட்டதே என்ற தேற்றே காரத்தினால் இல்லறம் அறமே என்று ஐயத்துக்கு இடமின்றித் தெளிவாக்குகிறார். ஆயினும் இல்லறம் இருவர் சேர்ந்து செய்யும் அறம். அதில் ஒருமித்த அன்பில் பழி தோன்ற அனுமதிக்கக்கூடாது. ஒரோவழி அவர்தம் அன்பின் குற்றங்கள் தோன்றினாலும் அக்குற்றங்கள் அயலறியாவகையில் வாழ்தல்வேண்டும். மாறாத அன்பில் குற்றங்கள் குணமாக்கப்படுதல் வேண்டும். இதற்குத் திருநீலகண்ட நாயனார் வரலாறு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, கண்ணகியின் வரலாறு உயிரோட்டமான ஓர் ஒப்புமை. இல்லறத்தில் மனிதன் பெறும் துணை “சம்சாரம்” அன்று. அத்துணையை “வாழ்க்கைத் துணை நலம்” என்பார் வள்ளுவர். ஆம் அவள் அவனுடைய வாழ்க்கைக்கு ஒரு துணை. அதுமட்டுமல்லள்; அவள் மூலம் அவன் பெறும் நலனே அவளாக இருக்கிறான். வாழ்க்கைத் துணை நலம் என்ற பெயர் ஆழ்ந்த பொருள் உடையது.
தமிழகத்துக் கற்புக் கொள்கை உடலைக் கடந்தது. உயிரில் காண்டது. மறந்தும் பிறர் நெஞ்சு புகாத கற்பே கற்பு. பெண்ணின் கற்பு கணவனால் காப்பாற்ற இயலாத ஒன்று. ஆதலால் வாழ்க்கைத் துணை, தன் கற்பைத் தானே காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார். ஆனால் அவள் அவன் கற்பைக் காப்பாற்ற முடியும். அவள், தன்னுடைய தலைவ னுக்குப் பெட்புற ஒழுகின் அவன் நிச்சயமாகக் கற்புடையவனாக இருப்பான். அவளுக்கே தற்கொண்டானைப் பேணும் பொறுப்பைக் கொடுத்தார். தன் தலைவனுக்குக் கொடுத்த சொல்லையும் காத்துத், தன் தலைவன் கொடைப் பண்பின் காரணமாக மற்றவர்கட்கு வழங்கிய சொற்களையும் காத்து, முடிவாகக் குடும்பத்தின் நற்புகழையும் காப்பவள் வாழ்க்கைத் துணை நலம் ஆவாள். வினைமேற் செல்லும் தலைவன், வினையின்கண் பட்ட இடுக்கண்களால் ஒரோ வழிச் சோர்வடையலாம். ஆனால் வாழ்க்கைத் துணைநலம் சோர்வடையக் கூடாது. அவனுடைய தோல்விகளை வெற்றிகளின் படிகளாக்கவேண்டும். அவன் உள்ளத்துச் சோர்வுகளை அகற்றிச் சுறுசுறுப்பாக்கி விட வேண்டும். தலைமகனின் வருவாய்க்குத் தகுந்த வாழ்க்கையை மேற் கொள்ள வேண்டும். அவன் தரும் செல்வத்தைக் கொண்டு பல பேரறங்கள் செய்ய வேண்டும். அன்னை காமாட்சி நாழி அரிசி கொண்டு அறங்கள் பலவற்றைக் காஞ்சியில் செய்த தாகக் கூறும் வரலாற்றின் நுண்பொருள், வாழ்க்கைத்துணை நலமாக அமைந்திருப்பவர்கள் உணரத்தக்கது. இத்தகு வாழ்க்கைத் துணை நலத்தைப் பெற்றவன் சொர்க்கத்தின் வாயிலை அடைந்து விட்டான். இல்லை, அவனுடைய வாழ்க்கையில் சொர்க்கம் வந்து அமைந்துவிட்டது என்பது தான் சேக்கிழார் - வள்ளுவர் ஆகியோர் காட்டும் உண்மை.
காதல்
மனையறத்தில் வாழ்வோர் இயற்கையின் காரணமாக ஈருடலில் வாழ்கிறார்கள். ஆனால் திருவள்ளுவர் அவர்களுடைய வாழ்க்கை அமையவேண்டிய முறையை,
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையோடு எம்மிடை நட்பு[65]
என்று அழகுறக் கூறுகின்றார்.
குடும்பத் தலைவனாகிய தலைமகன், அவளைக் கண்ணின் பாவையாகக் கருதுகின்றான். அவள் அவனைத் தன் நெஞ்சத்தவராகக் கருதுகின்றாள். இந்தக் காதற் சிறப்பு குடும்பத் தலைவிக்கு அமையாவிடில், வழிபடும் அம்மையாகிய உமையே தக்கன் வேள்வியில் பெற்ற இழிநிலைமை எய்துவாள். அது வரலாறன்று! ஆயினும், வாழ்வோருக்கு உண்மையை உணர்த்த எழுந்த அறவுரை; ‘இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்க’ என்று மனிதனை வாழ்க்கைத் துணை நலத்துடன் சேர்ந்து இல்வாழ்க்கையில் அமர்த்துகிறார் வள்ளுவர்.
அறிவறிந்த மக்கட் பேறு
மனிதனை இல்வாழ்க்கையில் அமர்த்திய திருவள்ளுவர் விரைந்தோடிச் சென்று, தொட்டிலை வாங்கி வருகிறார்; ஆம்; வள்ளுவர் எதிர்பார்ப்பது மனித சமுதாயத்தைத் தொடர்ந்து வாழ்வித்தருளும் மக்கட்பேற்றை, அஃது இயற்கைதானே! அதற்கென்ன வள்ளுவரின் எதிர்பார்ப்பு? வள்ளுவர் மக்கட்பேற்றை மட்டுமா எதிர் பார்க்கிறார். தொட்டிலை வாங்கி நடு வீட்டில் வைத்த திருவள்ளுவர், மனையறம் மேற்கொண்டோரின் காதில் ஏதோ ஓதுகின்றார்; அங்ஙனம் காதில் ‘கிசுகிசு’வென ஓதியதும் எப்படியோ திருக்குறளில் இடம்பெற்றுவிட்டது. அவர்கள் செவிகளில் அவர் ஓதியது என்ன? கூடி வாழ்க, அதுவே நன்மக்கட் பேற்றுக்குரிய வழி என்றுதான் ஓதியிருக்கவேண்டும்.
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற[66]
அடேயப்பா! வள்ளுவர் பல இடங்களில் இப்படிச் சொல்லியிருக்கிறார். அதுதான் அவரியல்பு போலும் என்று கருதுதல் கூடாது. உண்மையிலேயே இதுவரையில் மனிதன் கடந்து வந்துள்ள வாழ்க்கையின் சாதனைகளையும் அவன் அடைந்துள்ள குணங்களையும் அவனுள்ளத்து இயல்பினையும் ஒளிக்காமல் மறைக்காமல் உருக்காட்டுவது அவனுடைய மக்கட்பேறேயாம். தகுதி வாய்ந்த மக்களாக இல்லாது போனால் அவனுடைய அறிவில் குற்றம் காண்பிக்கப்பெறும். அவனுடைய குணங்கள் பழிக்கப்பெறும். அதுமட்டுமன்று. அவன் குற்றமுடையவனாக இருந்து தந்தையாகாமல் இருந்திருப்பானால், ஒரு தலைமுறையோடு அக்குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பெறுகிறது. தகுதியில்லாத மக்களை ஈன்று புறந்தருதல் மூலம் அடுத்த தலைமுறைக்குத் துன்பச் சுமையினைத் தருபவனை வையகம் எப்படிப் போற்றும்? உலகத்தில் நல்லவன் என்ற பெயரைக்கூட எளிதில் பெற்று விடலாம். ஆனால் நல்ல தாய், நல்ல தந்தை என்ற பெயரை அவ்வளவு எளிதிற் பெற இயலாது. அவனுடைய இயல்புகளாலேயே அவன் நல்ல தந்தை என்று பாராட்டப் பெறுவதில்லை. அவனுடை மக்கட் பேற்றின் குணங்களைப் பொறுத்தே அவன் நல்ல தந்தையென்று பாராட்ட பெறுகிறான்.
மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்[67]
என்று திருக்குறள் பேசும். சேக்கிழார், அப்பூதியடிகள் வரலாற்றில் மூத்த திருநாவுக்கரசு வாயிலாக, “நல்ல தாய் தந்தை ஏவ நானிது செய்யப் பெற்றேன்”[68] என்று பாராட்டுவார். பெற்றோர், மகனை அறிவார்ந்த உணர்வில் பெற்றால் மட்டும் போதாது. மீண்டும் காலத்தின் சூழலால் கெட்டுவிடாமல், வள்ளுவர் அவனை வளர்த்தது போலத் தன் மகனை இவன் வளர்க்க வேண்டும். மகனும் தந்தையின் தகுதியறிந்து ஒழுகித் தந்தைக்குப் புகழைச் சேர்க்க வேண்டும்.
மனிதன் ஆற்ற வேண்டிய அறங்களும் பயனும்
இங்ஙனம் மனிதன் தனியே பிறந்து, வள்ளுவப் பேராசான் துணைகொண்டு குடும்பத் தலைவனாகி விட்டான். தனி மனிதனின் வாழ்க்கைப் பயணம் இந்த அளவோடு நிற்கவில்லை. அவன் சமுதாயத் தலைமையும் ஏற்கவேண்டும். அவனோடு வாழும் சமுதாயத்திற்கு அவன் தொண்டு செய்ய வேண்டும். ஒரு தலை சிறந்த மனிதன் வாழும் சமுதாயத்தில் கொலை நிகழக்கூடாது. கொல்லாமை ஒரு சிறந்த பேரறம். திருவள்ளுவரின் நெஞ்சம் கொல்லாமை அறத்தில் தோய்ந்திருந்தது.
ஒன்றாக நல்லது கொல்லாமை[69]
என்பார். பிறநெறியினர் வேள்வியின் பொருட்டுக் கொல் வதைக்கூட திருவள்ளுவர் மறுக்கின்றார்.
அவிசொரிந்து ஆயிரம் வேட்டவின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று[70]
என்பார். கொல்லாமை என்பதற்குத் திருவள்ளுவர் கண்ட கருத்தே புதிது. உலகில் யாதொரு மறையும் கூறாதது. அஃதென்ன? திருவள்ளுவர் கொல்லாமை அதிகாரத்தில்,
பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை[71]
என்பார். பொருளமைதியை நோக்கினால் இத்திருக்குறள் கொல்லாமை அதிகாரத்திற்கு இயைபுடையதன்று. ஈதல் ஒப்புரவறிதல் ஆகிய அதிகாரங்களில் கூறப்படும் பொருட் குறிப்பே இக்குறளிலும் கூறப்படுகிறது. அந்த அதிகாரங்களில் இந்தக் குறளை ஓதாமல் கொல்லாமை அதிகாரத்தில் வைத்தது ஏன்? வாழப் பிறந்த ஓருயிரை உணவளித்து வாழ்விக்காமல் சாகவிடுதலும் ஒருவகையில் கொலையே என்ற கருத்தில் இந்தத் திருக்குறள் கொல்லாமை அதிகாரத்தில் வைக்கப் பெற்றுள்ளது. பகுத்துண்ணும் பண்பு தழீய பழக்கம் பாரினில்-வையத்து மாந்தரிடத்தில் வராததினாலேயே திருக்கோயிலுள் எழுந்தருளியிருக்கும் இறைவன் உண்ண மறுத்திருக்கிறான். அவன் சந்நிதியில் இடப் பெற்றிருக்கும் திரை வஞ்சிக்கப்பட்ட மக்களைப் பாராதிருப்பதற்காக என்பதை அவன் திருவுள்ளம் அறியாதா என்ன? பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நெறியே பரமன் நெறி. அந்நெறி நின்று ஒழுகுவோரே ஒழுக்கத்தின் நெறி நின்றவராவர்.
மனிதன் தான் பிறந்த குடியை வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவனும் நிலையாக வாழ முடியும். அவனுடைய குடும்பமும் வாழும். எனவே மனிதனைச் சமூக மனிதனாக வள்ளுவர் மாற்றி வளர்க்கிறார். தனி மனிதனைச் சமூக மனிதனாக மாற்றும் பொழுது ஈதற் பண்பாட்டை எடுத்துக்காட்டுகின்றார்; ஒப்புரவறிதலை ஓதிக் காட்டுகின்றார். இவ்விரண்டு அறங்களும் சமுதாயத்திற்குத் தனி மனிதனால் செய்யப்பெறுபவை. மாறாக அவன் சமூகத்திலிருந்து புகழைப் பெறுகிறான். மனைவி, கணவனைப் பாராட்டுவது புகழாகாது. கணவன் மனைவியைப் பாராட்டுவது புகழாகாது. நண்பர்கள் பாராட்டுவது புகழாகாது. உண்மையான புகழ், பகைவர்களாலும் பாராட்டப் பெறுவதுதான். சூரபதுமன் செருக்களத்தில் அண்ணல் அறுமுகச் செவ்வேளைப் பாராட்டுகிறான்; போற்றித் துதிக்கிறான். இதுவே புகழ் தலையாய புகழ், பொதுவான அயலவரும் புகழலாம். சமுதாயம் தலைமகனைப் பாராட்டுவதுதான் புகழ். எனவே தனிமனிதனைச் சமுதாயத்தில் ஈடுபடுத்திச் சான்றாண்மை யுடையவனாக்கிப் பண்புடையவனாக்கிப் புகழுக்குரியவனாக்குகின்றார்.
அரசு
இவ்வளவும் தனி மனிதன் உடன்பாட்டு முறையில், தானே வளர்ந்த பயணம். கழனியில் வேளாண்மை செய்யத் தொடங்கும் பொழுது காவல் தேவையில்லை, பயிர் வளர்ந்த பிறகு காவல் தேவை. எனவே தனி மனிதனும் சமுதாயமும் இணைந்து வளரும் வழி, புலித்தோல் போர்த்த பெற்றங்களும் இடையில் தோன்றி விடுவதுண்டு. அத்தகைய வல்லுருவங்களிலிருந்து சமுதாயத்தைக் காப்பாற்ற வலிமையான காவல் தேவைப்படுகிறது. கண்ணோட்டமில்லாத காவல் தேவைப்படுகிறது. அந்தக் காலத்தில்தான் வள்ளுவர் மனிதனுக்கு அரசைப் படைத்துக் காவலாக்குகிறார். அக்காவல் காவலுக்காக ஏற்பட்டதன்று. காவற்காரர்களுக்காகவும் ஏற்பட்ட தன்று. இன்றைய நிலையில், ஏன் இடைக்காலத்திலும் கூட வரலாற்றிலும் கூட மக்களுக்காக ஏற்படுத்தப்பெற்ற காவல் தன்மையுடைய அரசுகள் காவல் தன்மையை இழந்து, மக்களுக்கே துன்பம் செய்பவைகளாக உருமாறி விட்டன. அதனால்தான் போலும் ஆள்வோர் ஆளப்படுவோருக்குக் காவல் செய்யத் தவறியதால் ஆள்வோர் தமக்குக் காவல் அமைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது, வள்ளுவர் வகுத்தத் தந்த அரசு குடிதழுவிய அரசு முறை செய்து காப்பாற்றும் நல்லரசு, ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்[72] என்ற பொது நெறியில் மக்களைக் காப்பாற்றுவதே அரசு.
துறவு
இங்ஙனம் நல்ல அரசு அமைந்துவிட்ட போதிலும் மனிதன் அவனிடம், ஏதோ ஒரு இல்லாமையை உணர்கிறான். தவம் செய்தவன்தான். ஆனால் மேலும் மெய்யுணர்வு ஆர்வம் அலை மோதுகிறது. ஆதலால் அவனுடைய தகைமை சான்ற மகனிடத்தில் உடைமைகளை ஒப்படைக்கின்றான். அப்பரடிகள் கூறியது போலத் துணையாய் நின்று துறப்பிக்கும் திருவருளை நினைந்து அவனும் அவளும் தனித்து வாழ்கின்றனர். உடல்களால் மட்டும் தனித்து அல்ல. உயிர்களால் தனித்து அல்ல. காதலின்பத்தை அருளின்பமாக மாற்றிப் பரபரப்பான உலகத்திலிருந்து விலகித் தனித்து வாழ்கின்றனர். இப்போது விழைவு இல்லை; விருப்பமில்லை. தாம் கடந்து வந்த காலத்தின் வாழ்க்கைப் பயணங்களைத் திறனாய்வு செய்கின்றனர். புலன்களைத் துய்மையாக்குகின்றனர்; அவ்வழிப் பொறிகளில் தூய்மை காக்கின்றனர்; தவம் செய்கின்றனர். இறைநெறி நிற்கின்றனர். தமிழின் நாகரிகத்தில் இங்கேயே துறவு மலர்கிறது.
காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே[73]
என்பது தமிழர் வாழ்வியல் நெறி.
வீடு
திருவள்ளுவர் கடவுளை வாழ்த்தி வாழும்படி வழி நடத்துகின்றார். திருவள்ளுவர் முதிர்ந்த ஞானி; சீவன் முத்தர்; திருவடி ஞானம் பெற்றவர். அதனால், திருவடிகளையே தொழத் தூண்டுகிறார். வழிபாட்டால் பொறிகள் தூய்மை பெற்று, மற்றவர் சுவைத்தற்குரிய சுவையினைப் பெற்று விளங்க வேண்டுமென்பது வள்ளுவர் நெறி.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.[74]
பொறிகளை “அவித்தல்” திருவள்ளுவர் கண்டுணர்த்திய செந்நெறி. திருவள்ளுவர் பொறிகளை அடக்கவோ அழிக்கவோ சொல்லாமல் அவித்தல் என்று கூறுவது நினைந்து நினைந்து இன்புறத்தக்கது. சுவைத்தற்குரியனவாகவும் ஆனால் இயல்பில் சுவையில்லாதனவாகவும் இருப்பனவற்றைச் சுவைத்தற்குரியவாறு பக்குவப்படுத்தும் செயல்முறை “அவித்தல்” நெல் அவித்தல்; கிழங்கு அவித்தல் ஆகிய சொல் வழக்குகள் ஒப்புநோக்கி எண்ணத்தக்கன. இயல்பாகத் தற்சார்புடைய வேண்டுதல் வேண்டாமை, அலைவழிப்பட்டுக் காமம், வெகுளி மயக்கங்களில் சிக்கி, ‘யான்’, ‘எனது’ என்ற செருக்கால் சுவை இழந்து, அசுரநிலையை அடையாமல் இறைவனுடைய திருவடிகளை நினைந்து நினைந்து பணிவுடைமையைப் பண்பாகக் கொண்டு, மகவெனப் பல்லுயிரையும் ஒக்கநோக்கிப், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழ்வோர் இறைவன் திருவடியை எளிதில் எய்துவர். இல்லை, அங்ஙனம் வாழ்வோர் மனத்தில் இறைவன் எளிதில் வந்து தங்குவான். அந்த நிலையே வீடு பேறு உடற் களைப்பு நீங்க, உறங்கி மகிழ, உலகியல் வீடு துணை செய்கிறது. அதுபோல் எல்லாப் பிறப்பும் பிறந்து எய்த்து இளைத்த உயிர்க்குத் தங்கி இன்புறும் வீடு இறைவன் திருவடியே. உலகியல் வாழ்க்கையில் சொந்த வீடில்லாதார் படும் அல்லல் எவ்வளவு? அதுபோலப் பல்வேறு பிறப்புக்களை அடைந்து துயருறும் இந்த உயிர், இன்ப அன்பினில் நிலையாகத் தங்கியிருக்கும் வீடு திருவடியே. இந்த வீடு பெறாதாரை இரக்கமுடன் நோக்குகிறார். “சின்னஞ்சிறு வீட்டில் ஐவரோடு கூட்டுக் குடித்தனம் செய்யும் உயிரை நோக்கி உயிருக்கு இன்னமும் புகுந்து நிலையாகத் தங்கியிருக்கும் வீடு கிடைக்கவில்லையோ” என்று கேட்கிறார்.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு[75]
என்பது குறள். இங்ஙனம் உயிர்கள் நிலையான இன்ப அன்பினில் திளைத்து மகிழும் திருவடிப் பேற்றினை உணர்த்திய திருக்குறள் மறை வாழ்க! வையம் வாழ்க!
கடவுள் வாழ்த்து
பிறவி, இன்பமே ஆனாலும் கடலேயாம். கடலில் குளித்தல் சிலபொழுது மகிழ்ச்சி. ஆனால் தொடர்ந்து கடலில் கிடத்தல் மகிழ்வைத் தராது. கடலிடைக் கிடப்பவர் கரையேறவே நினைப்பர். பிறவிக் கடலில் கிடந்திடும் நம்மை எடுத்து ஆளும் திருவடிகள், இறைவன் திருவடிகள். நம்மைக் கடலிலிருந்து எடுத்திடும் திருவடி, அறத்தின் திருவுருவம். அறத்தின் வடிவமாய் அமைந்துள்ள கடல் அவன். உவர்ப்புக் கடலில் உருக்குலைந்து கிடக்கும் நம்மை, உவப்புக் கடலுக்கு எடுத்தாளும் திருவடிகள். உவர்ப்புக் கடல் அலைமோதுகிறது, அவலத்தைத் தருகிறது; கவலையைத் தருகிறது. மனக் கவலையை மாற்றத் ‘தனக்குவமை யில்லாதான் தாளினை’ வாழ்த்திடுவோம்; அத்திருவடிகளை அணைந்து இன்புறுவோம். அத்திருவடிகளை நாம் சார்ந்திட இருவினையும் கடந்திட வேண்டும். நல்வினையும் துன்பமே, தீவினையும் துன்பமே. இவ்விரண்டுக்கும் வித்து புகழ் விரும்பல். இறைவனின் பொருள் சேர் புகழை விரும்பிப் போற்றினால் இருவினையும் அகலும். புகழையே துறந்தமையால் வேண்டுதலும் இல்லை வேண்டாமையும் இல்லை. இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். அவனைச் சார்ந்த நமக்கு யாண்டும் இடும்பை யில வேண்டுதலும் இன்மையால் புகழ் நாட்டமில்லை. அதனால் பொறிகள் தூய்மையாயின. அதனால் அத் தூயோன் திருவடிகள் மனத்தகத்தே வந்து மன்னி நின்றன. அவன் கருணையினால் உலகம் ஒரு முதலாகி நிற்கிறது. உலகம் வாழ்க! எல்லா உலகமுமாய் நிற்கும் இறைவன் வாழ்க! இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!
தொகுப்புரை
நமது சமயத்திற்கு-இந்து சமயத்திற்கு உரிய உண்மையான மறைநூல், திருக்குறளேயாம். திருக்குறள் நமது சமயத்தின் தனித் தன்மையையும் விளக்குகிறது, அதே போழ்து எல்லைகளற்ற பொதுமைக்கும் துணையாக நிற்கிறது. இதுபோன்ற ஒருமறை நூல் உலகத்தில் வேறு எந்தச் சமயத்திற்கும் கிடைத்ததில்லை. இனிமேலும் கிடைத்தற்கியலாது. இந்திய தத்துவ-நீதி நூல்களுள் மிகவும் விழுமியது திருக்குறள் என்று ஆல்பர்ட் சுவைட்சர் கூறியுள்ளார். உமாபதி சிவமும் ‘மெய்வைத்த சொல்’ என்று பாராட்டுகிறார். ஆதலால் நமது மறை திருக்குறளே!
மறை நூலுக்குரிய இயல்புகள் அனைத்தும் திருக்குறளுக்குப் பொருந்தியிருக்கின்றன. கடவுள், உயிர், உயிரைப் பற்றிய அறியாமை, உயிர்பெற வேண்டிய அறிவு வாழ்க்கைப் பயணம், இன்ப துன்பம், வீடுபேறு ஆகிய அனைத்தும் திருக்குறளில் பேசப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி சமய வாழ்வுக்குரிய உண்மைகளோடு மட்டுமன்றி உலகியல் நெறியும்-அரசியல் நெறி, பொருளியல் நெறி, படை நெறி ஆகியனவும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. மனித குலத்திற்குத் தேவையான உணவு, மருந்து ஆகியனவும் எடுத்தோதப் பெற்றுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தனி மனிதன் எவ்வண்ணம் வளர வேண்டுமென்பதை ஒரு சிறந்த நல்லாசிரியன் எடுத்துக் கூறுவதைப் போலப் படிமுறையில் நூல் அமைந்திருக்கிறது.
தனிமனிதன், கல்வி கேள்வி வழி அறிவு பெற்று, அவ்வழி அன்பு பெற்று, ஆள்வினை - ஆற்றல்பெற்று, செயற்கரும் செயல்கள் செய்து, நட்பினை நாடிப் பெற்று, வாழ்க்கைத் துணையடைந்து நன்மக்கட் பேற்றினைப் பெற்று அவனை முறையாக நன் மகனாக வளர்த்து நாட்டிற்கு அளிக்கச் செய்து தவம் - நோன்பு ஏற்கும் வரையில் திருக்குறள் அவனை அழைத்து வருகிறது. தனி மனிதனை அவன் நிலையில் வளர்த்துக் குடும்பத் தலைமகனாக வளர்த்து ஒப்புரவு நெறி கொண்ட சமுதாயத் தலைமகனாக வளர்த்து, அவன்மூலம் நல்லாட்சியமைத்து நாட்டுக்குப் பெருந்தொண்டு செய்கிறார் திருவள்ளுவர். திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். வாழ்க்கையில் மலர்ந்த மறை. அது வாழ்க்கையை வழி நடத்திச் செல்வது. திருக்குறள் மறைவழி வாழ்வோம்! வள்ளுவத்தின் வழி வையகத்தை வாழ்விப்போம்!
மீண்டும் அறக்கட்டளை கண்ட சொல்லின் செல்வர் பிள்ளை அவர்களை நன்றியுணர்வுடன் நினைவு கூர்கின்றோம். சொற்பொழிவுகளுக்குத் தலைமையேற்று நல்லுரை வழங்கி ஆர்வநெறியில் ஆற்றுப்படுத்திய பல்கலைக் கழகப் பேராசிரியர் “நமது நூலறி புலவர்” பாராட்டு தலுக்குரிய அன்பர் ந. சஞ்சீவி அவர்களுக்கு நன்றி; பாராட்டு; வாழ்த்துக்கள்.
வாய்ப்பினை வழங்கிய பல்கலைக் கழகத்தினருக்கு நன்றி.
மேற்கோள் விளக்கம்
↑ புறம்-34.
↑ நெஞ்சு விடு தூது, அடி-26,
↑ தொல்காப்பியம்-பாயிரம்
↑ தொல்காப்பியம்-பாயிரம் உரை
↑ நல்வழி.
↑ திருவாசகம்-சிவபுராணம் 26-31.
↑ தொல்காப்பியம், மரபியல், 28, 29, 30, 31, 32, 33,
↑ ஒளவையார் தனிப்பாடல்.
↑ திருநாவுக்கரசர், நாலாந்திருமுறை, 784,
↑ புறம், 29.
↑ திருக்குறள், 423.
↑ திருக்குறள், 278.
↑ திருக்குறள், 1071.
↑ திருக்குறள், 994.
↑ திருக்குறள், 131, 80.
↑ திருக்குறள், 430.
↑ புறம்-192.
↑ திருக்குறள்-339.
↑ திருக்குறள், 358.
↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 769.
↑ திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 839.
↑ திருமந்திரம், 299
↑ திருக்குறள், 397.
↑ திருக்குறள், 391.
↑ திருக்குறள், 415,
↑ திருக்குறள், 418.
↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 84.
↑ திருஞானசம்பந்தர், முதல் திருமுறை 2
↑ திருக்குறள், 666,
↑ திருக்குறள்-140.
↑ திருக்குறள், 373.
↑ திருக்குறள், 421.
↑ திருக்குறள், 427.
↑ திருக்குறள், 429,
↑ திருத்தொண்டர்புராணம், 2562.
↑ திருக்குறள், 426.
↑ திருக்குறள், 1110,
↑ திருஞானசம்பந்தர், மூன்றாந்திருமுறை, திருச்சாய்க்காட்டுப் பதிகம், சீகாமரப்பண் 3-ஆவது பாடல்.
↑ திருக்குறள், 336.
↑ திருஞானசம்பந்தர், கோளறு திருப்பதிகம், 1.
↑ கந்தரலங்காரம், 38.
↑ திருக்குறள், 334.
↑ திருக்குறள், 482.
↑ திருக்குறள், 483.
↑ திருக்குறள், 484.
↑ புறம் 191.
↑ திருக்குறள் 504
↑ திருக்குறள் 510
↑ திருக்குறள், 618
↑ திருக்குறள், 620.
↑ திருநாவுக்கரசர், ஐந்தாந்திருமுறை, 192.
↑ திருக்குறள், 379.
↑ திருஞான சம்பந்தர், மூன்றாந்திருமுறை, 4-ஆவது பதிகம், திருவாவடுதுறை, 1.
↑ திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 961.
↑ திருநாவுக்கரசர் - ஆறாந்திருமுறை-929,
↑ கந்தரர் - ஏழாந்திருமுறை-340.
↑ திருக்குறள் - 247.
↑ புறம்-18,
↑ திருக்குறள்-80
↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 399
↑ திருக்குறள், 781.
↑ திருவாசகம், திருக்கோத்தும்பி, 18,
↑ திருக்குறள், 1.
↑ திருக்குறள், 49.
↑ திருக்குறள், 1122.
↑ திருக்குறள், 81.
↑ திருக்குறள், 70.
↑ திருத்தொண்டர்புராணம், அப்பூதியடிகள், 24
↑ திருக்குறள், 323.
↑ திருக்குறள், 259.
↑ திருக்குறள், 322.
↑ திருக்குறள், 972.
↑ தொல்காப்பியம், கற்பியல், 51.
↑ திருக்குறள், 8.
↑ திருக்குறள் 340,
2
சைவ சித்தாந்தமும்
சமுதாய மேம்பாடும்
* * *
1. சைவ சித்தாந்த வரலாறு
மனித உலக வரலாற்றுப் படிமங்கள் வரிவடிவத்திலும், சிலை வடிவத்திலும் பெறத் தொடங்கிய காலம் தொட்டு, சமய இணைப்புகள் இருந்து வந்துள்ளன. வரலாற்றுப் போக்கில் சமய அடிப்படையில் நிகழ்ந்த நிகழ்வுகள் நிறைய உண்டு. அவற்றில் மனித உலக வளர்ச்சிக்கு ஆக்கம் தருவனவாக அமைந்த நிகழ்வுகள் பல.
ஒரோவழி, தடம் புரண்டு மனித உலகத்திற்கு விளைவித்த தீங்குகளும் உண்டு. ஆனால் தீங்குகள் கொள்கைகளால், கோட்பாடுகளால் விளைந்தவையல்ல. நடைமுறைப்படுத்திய வழிமுறைத் தவறுகளால் விளைந் தவையேயாம்.
இங்ஙனம், வரலாற்றில் நீங்கா இடம் பெற்றிருக்கின்ற இந்தச் சமய நெறி, எந்தக் காலத்தில் தோன்றியது? ஏன் தோன்றியது? என்ற வினாக்களுக்கு விடை காண்பதில்கூட இன்று உலக அரங்கில் ஒருமித்த கருத்து இல்லை.
மேற்றிசை நாட்டு அறிஞர்கள், “அச்சத்திலிருந்துதான் சமயம் பிறந்தது; கடவுட் கருத்துத் தோன்றியது” என்று கூறியுள்ளனர். அதாவது ஆதிமனிதன் கல்லில் இடித்துக் கொண்டான்; அவனுக்குத் துன்பம் ஏற்பட்டது. துன்பத்திற்கு அஞ்சியவன், துன்பத்திற்குக் காரணமாயிருந்த கல்லையே தொழத் தொடங்கிவிட்டான் என்று கூறியுள்ளனர். மேற்றிசை நாட்டைப் பொறுத்த வரையில் இக்கருத்து பொருத்தமானதாக இருக்கலாம். அதாவது ஐரோப்பிய சமய நாகரிகத்திற்கு அடித்தளம் அச்சம் பயம் என்று சொல்லலாம்.
ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய இனத்தைவிடச் சற்று வளர்ந்தவர்கள். இவர்கள் நிலம், நீர், தீ, வளி, விண் ஆகிய இயற்கைப் பூதங்களால் அவ்வப்பொழுது விளைந்த தீமைகன்ளைக்கண்டு அஞ்சி அவற்றையே ஆற்றல் வாய்ந்தவை எனவும் எண்ணித் தொழுதனர்.
இன்று மனித உலக வரலாறு ஐம்பூதங்களை வென்று விளங்கும் விஞ்ஞானத்தில் வளர்ந்து கொண்டிருப்பதால் இவ்வழிபாடு சிறுபிள்ளை விளையாட்டாகிவிடுகிறது.
அடுத்தது, திராவிடர் நாகரிகம் என்றும் தமிழர் நாகரிகம் என்றும் வரலாற்றறிஞர்களால் பேசப் பெறும் நாகரிகம். தமிழர், அச்சத்தின் காரணமாகவும் வழிபடவில்லை. பயத்தின் காரணமாகவும் வழிபடவில்லை. அவர்கள் தொன்மைக் காலத்திலேயே எந்த ஒன்றையும் அறிவியல் முறையில் அணுகும் உணர்வை இயல்பாகவே பெற்றிருந்தனனர். அவர்களுடைய சமய நெறி தோன்றியதற்குரிய களம், அறிவு, இன்பம், அமைதி அவாவும் நிலைகளேயாகும்.
தமிழினத்தின் சிந்தனையின் பயனாக, சிந்தனைத் தெளிவின் பயனாக, அறிவின் ஆக்கமாகத் தோன்றியதே சிவநெறி. மனிதர்குல வாழ்க்கையில் படைப்பின் நிறைவின்மையையும் அறிவு எல்லையைக் காண முடியாமையையும் கண்டுணர்ந்தபோது, எல்லை கடந்து நிலைக்கு ஏறி வளரும் நிலையில்தான் சிவநெறி தோன்றியது. அந்தப் படிகளைக் காணும் முயற்சியில் தோன்றியதுதான் விஞ்ஞானம். ஆதலால், சிவநெறியின் அடித்தளம் வாழ்க்கையின் படிப்பினைகளும் அறிவுமேயாம். அப்படியெனில் உலகின் அறிவியல் புதுமைகளை, அதுகண்ட புதிய உண்மைகளைச் சமய நெறிகள் ஏற்றுக் கொள்ளாது புறத்தே தள்ளியிருக்கின்றனவே! அங்ஙனம் புதிய உண்மைகளைக் கண்ட விஞ்ஞானிகளைச் சமய நெறியாளர்கள் துன்புறுத்தி யிருக்கிறார்களே! என்ற வினாக்கள் எழலாம்.
ஆம்! அந்த வரலாற்று உண்மைகளை நாம் மறுக்கவில்லை! இத்தகைய செய்திகள் மேற்றிசை நாட்டு வரலாறுகளில் உண்டு. அந்நாட்டு வரலாற்றிலும்கூட, சமயம், வாழ்க்கை நெறியாகத் தூய்மையுடன் விளங்கிய காலத்தில் நிகழ்ந்தவையல்ல. ஆனால், அங்ஙனம் சமய நெறியாளர்கள் விஞ்ஞானிகளைத் துன்புறுத்திய நிகழ்ச்சிகள் தமிழகத்தில் என்றும் நிகழ்ந்ததில்லை; புதிய உண்மைகளை மறுத்து அந்த விஞ்ஞானிகளைத் துன்புறுத்திய நிகழ்ச்சிகள் தமிழகத்தில் என்றும் நிகழ்ந்ததில்லை; புதிய உண்மைகளை மறுத்து அந்த விஞ்ஞானிகளைத் துன்புறுத்தியவர்கள் உண்மையான சமய நெறியாளர்கள் அல்லர்.
இத்தகைய துன்பம் தரும் நிகழ்ச்சிகள், சமயம் வாழ்க்கையிலிருந்து விலகி, இயக்கத் தன்மையிலிருந்து தேக்கத் தன்மைக்குத் தடம் புரண்டு ஆதிக்கத்தை மையமாகக் கொண்டிருந்த காலத்தில் நடந்தவையாகும். இங்ஙனம் சமய நெறிப் போர்வையில் நடமாடும் ஆதிக்க சக்திகள் மூலம், சமய நெறிக்கு விளைந்த ஊறுகள் பலப்பல. உண்மையான சமய நெறியாளர்கள் புதுமையை வரவேற்கவே செய்வர்.
முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!
(திருவாசகம், திருவெம்பாவை. 9)
என்ற மாணிக்கவாசகர் வாக்கும்,
தொன்மைய வாம்எனும் எவையும் நன்றாகா இன்று
தோன்றியநூல் எனும் எவையும் தீதாகா!
(சிவப்பிரகாசம்-12)
என்ற உமாபதிசிவம் வாக்கும் இதற்குச் சான்று.
உலகில் பல்வேறு சமயங்கள் தோன்றியுள்ளன. அவைகளுக்கிடையில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் முரண்பாடுகள் இருக்க வழியில்லை. வேறுபாடுகளும்கூட அந்தந்தச் சமயநெறிகள் தோன்றிய காலம், சூழ்நிலை, அனுபவம் இவைகளினால் ஏற்பட்ட தரவேறுபாடுகள்தாம்! சமயங்கள், நிறுவனங்களாக மாறியவுடன் வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி முரண்பாடுகளை உருவாக்கித் தம்முள் முரணி மோதிக் கொண்டு வந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. இந்தத் தீமையும்கூட சமயம், நெறியாக இல்லாமல் நிறுவனமாக மாறியதால் ஏற்பட்டதன் விளைவேயாகும்.
ஆனால், உண்மையான சமய ஆர்வலர்கள் ஒருமைப் பாட்டையே காண முயன்று வந்துள்ளனர். தாயுமானார்,
வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளே! நின் விளையாட் டல்லால்
மாறுபடும் கருத்தில்லை; முடிவில் மோன
வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா!
(தாயுமானவர், கல்லாலின்:25)
என்று கூறுவதால் அறியலாம்.
மனித குல வரலாற்றின் தொன்மையில் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடியேயாம். இது வரலாற்றறிஞர்கள் கண்டு கூறும் முடிபு. தமிழினத்தின் வரலாற்றுத் தொடக்கம் கி.மு. முப்பதாயிரத்திற்கும் அப்பால் செல்கிறது.
பல ஊழிகள் கண்ட வரலாறு தமிழர் வரலாறு. தென் கோடியில் தொன்மை நலம் சான்ற “தென்குமரிக் கண்ட நாகரிகமும்” வடகோடியில் “சிந்து வெளி நாகரிகமும்” தமிழ்ச் சாதி நாகரிகத்தின் தொன்மை நாகரிகங்களாகும். தமிழர் நாகரிகம் அனைத்துத் துறைகளிலும் செழித்து வளர்ந்து புகழ் பூத்ததாகும். அவர்கள் பன்னெடுங் காலத்திற்கு முன்பே சமய நெறியில் கால்கொண்டனர். அவர்களது சமயம் சிவநெறி யாகும். இச்சிவநெறி காலத்திற்குக்காலம் முறையாக வளர்ந்து மெய்கண்ட தேவர் காலத்தில் வடிவம் பெற்றது.
தென்குமரிக்கண்ட மக்கள், சிவன், சேயோன் என்ற திருப்பெயர்களில் சிவபெருமானை வழிபட்டு வந்திருக்கின்றனர். சிவன் ஒளிவடிவானவன். ஒளிவடிவிலும் உயிர்களின் அனுபவத்திற்கு ஏற்றவாறு பல்வேறு தரநிலைகளில் (ஒளிக்கற்றை, வெப்பநிலை) நின்று அருள்பவன். உலகியலை வெப்பஇயல் இயக்குவதைப் போல சிவமே நெருப்பை இயக்கும் பெரும் பொருளாக இருந்து இயக்கி வருகிறது.
சோதியே! சுடரே! சூழ்ஒளி விளக்கே!
(திருவாசகம், அருட்பத்து-1)
என்ற திருவாசகம், சிவம் என்ற பேரொளியின் படிநிலைகளை விளக்குவது. சிவத்தின்தொழில்-இயல்புகள் குறித்துப் பல திருமேனிகளில் சில வழிபாடுகள் நிகழ்த்தப் பெற்றன.
அவற்றுள் சிறப்புடையன ஐந்து. முதல்நிலை, “சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்” ஆக அடல்விடையூர்ந்து ஆட்கொண்டருளும் நிலை கொன்றை மாலையும் திரிசூலமும் கொண்டு விளங்கும் திருக்கோலம், இரண்டாவது படிவம். அம்மையப்பன், இந்த அம்மையப்பன் திருவுரு எல்லா உறுப்புகளும் முறையாக அமைந்து, அம்மையை இடப்பாகத்திற் கொண்டு விளங்கும் மங்கை பங்கன் திருமேனியாகப் போற்றப் பெற்றது. அறிவியலில் பொருளையும், பொருளின் ஆற்றலையும் தனியே பகுத்து ஆராயும் மரபு பிற்காலத்தே தோன்றியது. அம்மையப்பன் வழிபாடு அந்த அடிப்படையில் சங்க காலத்திலேயே தோன்றி வளர்ந்ததாகும். பாவாணர், “கடல் கொண்ட தென்குமரிக் கண்ட நாகரிக காலத்திலேயே அம்மையப்பன் வழிபாடு இருந்தது” என்று கூறுவர். (தமிழர் மதம்) சிவம், பொருள்; அம்மை அப்பொருளின் இயங்கும் ஆற்றல். இந்த அடிப்படையிலேயே அம்மையப்பன் வழிபாடு தோன்றியது. குணம் குணமல்ல அப்பனும்-அம்மையும் உண்டு என்று கூறுவோரும் உண்டு. திருமறை-திருக்கோவில்களில் அப்பன் அம்மை என்று போற்றப் பெறுகின்றனர்.
சங்ககால இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்ந்த, பாரதம் பாடிய பெருந்தேவனார், புறநானூறு, ஐங்குறுநூறு ஆகிய இலக்கியங்களுக்கு அம்மையப்பன் வழிபாட்டை உணர்த்தும் பாடல்களாகப் பாடிச் சேர்ந்துள்ளார். வரலாற்றுக்கு முந்திய காலத்திலும் தொடக்க காலத்திலும் பெண்மை பெருமதிப்புப் பெற்றிருந்தது. காலப் போக்கில் பெண்மை, தகுதி நிலைகளை இழந்த பொழுது அம்மையப்பன் வழிபாடு வற்புறுத்தப் பெற்றிருக்கலாம் என்று கருத முடிகிறது.
தமிழ் இலக்கியங்களானாலும் நூல்களானாலும் தனித்தமிழ் மரபில் தோன்றியவைகள், பெண்மையை இழித்துப் பேசியதில்லை. ‘வீடுபேற்றுக்கு மனையறம் தடையானது’ என்று ஒருபோதும் தமிழ்நெறி சாற்றியதில்லை. ஆதலால் அருவ நிலையில் வளங்கி வந்த சிவவழிபாடு உருவ வழிபாட்டுக்கு வந்தவுடன் முதல் நிலையில் இலிங்க வழிபாடாகவும் இரண்டாம் நிலையில் அம்மையப்பன் வழிபாடாகவும் மலர்ந்தது. இது,
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்
(புறம்; கடவுள் வாழ்த்து; 7-8)
என்ற புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தில் கூறப்படுகிறது.
நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே
(ஐங்குறுநூறு, கடவுள் வாழ்த்து)
என்ற ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்தில் அம்மையப்பன் வழிபாடு எடுத்துக் கூறப்படுகிறது. சிவனைச் செம்மை நிறத்தின் அடிப்படையிலும், அம்மையை நீலநிறத்தின் அடிப்படையிலும் விளக்குதல் ஆன்றோர் மரபு, “வில்லியம் ஜேம்ஸ்” என்ற ஓவியன் வெம்மையின் ஆற்றலை விளக்கச் சிவப்பு நிறத்தையும், தண்ணளியை - தண்ணருளை விளக்க நீல நிறத்தையும் பயன்படுத்தும்படி அறிவுரை கூறியுள்ளது நினைவு கூரத்தக்கது.
“சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்” என்ற திருப்பெயர் எண்ணுதற்குரியது. இந்த அம்மையப்பன் வழிபாடு தொன்மைக்காலத்திலேயே தோன்றிச் சிறந்தது என்பதை மாணிக்கவாசகர் தாம் அருளிய திருவாசகத்தில் விளக்கியுள்ளார்.
தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும்உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிந்துரதாய் கோத்தும்பீ
(திருவாசகம், திருக்கோத்தும்பி, 18)
என்பது திருவாசகம்.
இலிங்க வடிவ நிலையில் இறைவனின் ஆற்றலைக் குறிக்கும் அடித்தளத்திற்கு ஆவுடையாள், என்றும், மேல் நிற்கும் இலிங்கத்திற்கு ஆவுடையப்பன் என்றும் பெயர்கள் வழங்கப் பெற்றுள்ளன. இத்தத்துவம் “ஓம்” என்ற ஒலி வடிவிலும் பிள்ளையார் சுழியின் வரிவடிவத்திலும் அமைந்திருக்கிறது.
மூன்றாவது, ஆசிரியனாக இருந்து நன்னெறி உணர்ந்தும் திருக்கோலம். இதனை “ஆலமர் செல்வன்” (சிறு, பா 97, கலி, 819) என்றும், “ஆலமர் கடவுள்” (புறம் 198-9) என்றும் சங்க கால இலக்கியங்கள் பாராட்டும். வாழ்க்கையில் இயல்பாகச் சமய நெறி-முறைகள் அமையாது மனித உலகம் புறத்தே விலகிச் செல்லும் பொழுது நன்னெறி உணர்த்த அறிவர்கள்-ஞானிகள் தேவைப்படுவர்.
அதுபோலத் தமிழினம் நெறியல்லா நெறிதன்னை நாடிச் சென்ற பொழுது சிவபரம்பொருளே ஆசிரியனாக எழுந்தருளி நெறியுணர்த்தி வழி நடத்துகிறான் என்பது தமிழர் சமய மரபு. சிவநெறிக்கு இறைவனே முதல் ஆசிரியன். அவன் வழிபடும் பொருள் நிலையிலிருந்து இறங்கி, வழிகாட்டும் நிலைக்கு வந்த பிறகு, ஆசிரியன் நிலையில் வழிபடும் நிலையை எய்தினன். சங்க இலக்கியங்களில் சிவன் ஆலமர் செல்வனாக இருந்து அறமுணர்த்திய செய்தி கூறப்பெறுகிறது.
நான்காவது, உலகியல் இயக்கத்திற்கு உரியதாயிருக்கின்ற நிலம், நீர், தீ, வளி வெளி, கதிரவன், திங்கள் ஆதன் என்னும் எண் பொருள் வடிவினனாகவும் அவன் வழிபடப் பெற்றிருக்கிறான்.
ஐந்தாவது ஆடல்வல்லான் (நடராசன்) வழிபாடு. இவ்வுலகியக்கத்தை ஓயாது தனது ஆடல் மூலம் இயக்கிக் கொண்டிருப்பதாகக் கருதப்பெறும் திருமேனி இது. குமரி நாடிருந்த காலத்திலேயே குமரிக்கும் பனிமலைக்கும் நடுவணதாக நெஞ்சத்தமைப்பு மையமாகக் கருதி, தில்லையம்பலம் அமைத்து ஆடல்வல்லானைப் பாண்டியன் அமைத்தான் என்று ஒரு வரலாறு உண்டு.
சிந்துவெளி நாகரிக மக்கள் மூன்று கண்களையுடைய சிவபெருமானை வணங்கினர் என்பதும், சிவலிங்க வழிபாடு இருந்ததென்பதும் ஆங்கு அகழ்ந்தெடுக்கப் பெற்ற பொருள்கள் மூலம் புலனாகின்றன. “சிவவழிபாட்டின் மிகச் சிறந்த வழிபாடாகிய இலிங்கவழிபாடு வரலாற்றறிவுக்கும் அப்பாற்பட்ட பழைமையுடையது; கற்காலத்திற்கும் முந்தியது. இப்பொழுது உலகிற் காணப்படும் சமயங்கள் எல்லாவற்றிற்கும் அது முற்பட்டது” என்று சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சி அறிஞர் சர்ஜான், மார்ஷல் கூறுகிறார். இந்தச் “சிவவழிபாடு உலகம் முழுதும் பரவியிருந்தது; சிவவழிபாடு இங்கிலாந்து முதல் ஜப்பான் வரையில் பரவியிருந்தது” என்பார் எச். ஜி. வெல்ஸ்.
தமிழ் தொன்மையான மொழி, இலக்கிய நலம் சிறந்த மொழி, இலக்கண வளம் மிக்க மொழி, தமிழ் மொழியைப் பேசி வாழ்ந்த மக்கள் நாகரிகத்திற் சிறந்து வளர்ந்தவர்கள். உலகின் மற்ற நாகரிகங்களுக்கெல்லாம் தொட்டிலாக அமைந்தது தமிழர் நாகரிகமேயாம். இதற்குச் சான்றுகள் எங்கேயும் தேடி அலைய வேண்டியதில்லை.
தமிழர்த்ம் சிந்தனையிற் சிறந்து, வாழ்க்கையில் விளக்கமுற்று விளங்கிய கருத்துக்களை விளக்கும் இலக்கிய இலக்கணங்களே சான்று. இன்று நிலவும் தமிழ் நூல்களில் பழைமையானது தொல்காப்பியம். இது தோன்றிய காலம் கி.மு.3000க்கு முந்தியது என்று சிலரும் கி.மு.5000க்கு முந்தியதென்று சிலரும் கூறுவர். எப்படியாயினும் கிறித்து பிறப்பதற்கு முன்தோன்றிய மூத்த நூல் என்பது உறுதி.
தொல்காப்பியம் இலக்கண நூல். செழிப்பான இலக்கியங்கள் தோன்றிய பிறகுதான் இலக்கணம் தோன்றும் என்பது மொழிநூற் கருத்து தொல்காப்பியம் போன்றதொரு செப்பமான இலக்கண நூல் தோன்றுவதற்கு முன்பு இலக்கியம் சிறந்து விளங்கியிருக்க வேண்டும் என்பது ஒருதலை. தொல்காப்பியம் மொழிக்கு மட்டும் இலக்கணம் பேசவில்லை, மொழியைப் பேசும் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் செய்தது. இதுபோல் உலகில் வேறு எந்த மொழியிலும் மொழியைப் பேசும் மக்கள் வாழ்க்கைக்கு இலக்கண நூல் இலக்கணம் கூறப்பெறவில்லை. ஏனோ, தானோ என்று வாழ்வது வாழ்க்கையன்று. வையத்து வாழ்வாங்கு வாழ்வதே வாழ்க்கை. இந்த உணர்வில் ஓர் இனம் வளர்ந்திருக்குமானால் அந்த இனத்தின் தொன்மை மிகமிகப் பழமையானது என்பதை ஆராய அகழ்வாராய்ச்சிகள் தேவைப்படா.
தொல்காப்பியம் தோன்றிய பிறகும் வாழ்க்கை முழுமையுறாத நிலையில் மேலும் வளர்த்துச் செழுமைப்படுத்தத் திருக்குறள் தோன்றியது. தொல்காப்பியத்தில் சித்தாந்த சமயக் கருத்துக்கள் பயின்றுள்ளன.
நிலத்தைப் புரிந்து நிலத்திற்குரிய வழிபாட்டுப்பொருளை உணர்த்துகிறது.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
சொல்விய முறையாற் சொல்லவும் படுமே
(தொல். அகத்திணை, நூற்பா.5)
இந்நூற்பாவில் சேயோன் என்று குறிப்பிடப் பெறும் கடவுள் முருகனே என்பது பெரு வழக்கு. ஆனால் காலத்தின் பின்னணி, கருத்து வளர்ச்சிகளின் படிநிலைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு நோக்கும்பொழுது சிவ வழிபாட்டின் தொடர்ச்சியாக முருகன் வழிபாடு சங்க காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது பெறப்படும். சிவன் தந்தை பார்வதி தாய், முருகன்பிள்ளை என்ற கருத்துக்கள் பிற்காலத்திய பெளராணிகக் கருத்துக்கள். சேயோன் என்பதைச் சேய், சேயன், சேயான், என்று பகுத்துப் பொருள் கொண்டால் செந்நிறத்தான் என்று பொருள்படும்.
சேயோன் என்ற சொல்லுக்குச் சிவன் என்றும் பொருள் உண்டு. ஆதலால் “சேயோன் மேய மைவரை உலகமும்” என்பதற்குச் சிவபெருமான் உறையும் மலை நிலம் என்றே பொருள். ஆதலால், தொல்காப்பியத்தில் சிவநெறிக் குறிப்புக்கள் உண்டு. அதோடு, தொல்காப்பியத்தின் தமிழ் நெடுங்கணக்கு முறை வைப்பு சிவநெறிக் கருத்துக்களுக்கு அரண் செய்வனவாக உள்ளனன.
உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து என்ற இலக்கண வைப்புக்கள் சிவநெறியின் சீர்மைகளை விளக்கும் இயல்பின. இதுபற்றித் தத்துவத் தலைப்பில் பேசும் பொழுது ஆராயலாம். தொல்காப்பியத்தில் தெளிவாகச் சிவம் சைவம் என்ற சொற்கள் பயிலப்படவில்லையானாலும் சிவநெறியின் கருத்துக்கள் வந்துள்ளன. கந்தழி என்பது சிவ பெருமானைக் குறிக்கும் தன்மையுடைய சொல்லாகக் கருதப் பெறும். தொல்காப்பியத்தை ஒட்டித் தோன்றிய சங்க காலத்தில் மேலும் சிவநெறி வளர்ந்தது; ஆக்கம் பெற்றது. ஆயினும் சங்க காலத்திற்கூட அது வாழ்க்கையின் நியதியாக விளங்கியதேயன்றி வரையறுக்கப்பட்ட முழு நிலையை எய்தி விடவில்லை.
கடைச்சங்க காலத்திற்கு முந்தியவன் என்று கருதப்படும் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் கொற்றக்குடை முக்கட் செல்வர் நகர்வலம் வருவதற்குத் தாழ வேண்டும் என்று அறிவுறுத்தியதாகப் புறநானூற்றுப் பழம்பாடல் கூறுகிறது.
பணியியர் அத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே!
(புறம். 6: 17-18)
என்பதறிக முக்கட் செல்வர் என்பது சங்க காலத்தில் சிவன் பெற்ற பெயர். கதிரவன், திங்கள், தீ இம்முன்றும் மூன்று கண்களெனக் கூறுவர். ஆனால் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் சிவன் என்ற சொல் பயிலவில்லை. ஆனாலும் சிந்துவெளி நாகரிக காலம் தொட்டு, மெய் கண்டார் காலம் வரை தோன்றிய அனைத்து நூல்களிலும் சிவன் மூன்று கண்களையுடையவன் என்பது இடையறாது பயிலப்பட்டு வந்துள்ளது.
தமிழக வரலாற்றின் பொற்காலம் சங்ககாலமாகும். சங்க கால இலக்கியங்களில் சிவநெறிக் கருத்துக்கள் பரவிக் கிடக்கின்றன. சிவபெருமானின் செயல்முறைப் பண்பாட்டால் அமைந்த பிறிதொரு பெயர், “திருநீல கண்டம்”. அதாவது “நீலமணி மிடறு” என்பது. அமரர்களுக்கு வாழ்வளிப்பதற்காக நஞ்சு உண்டமையால் தோன்றியது “நீலமணி மிடறு” என்பது. இதனை நினைவு கூர்ந்து ஒளவையார் அதியமான் நெடுமானஞ்சியைப் பாராட்டும் பொழுது,
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன்போல
மன்னுக பெரும நீயே...
(புறம், 91: 5-7)
என்று பாடுகின்றார். மற்றும் சங்க கால இலக்கியங்கள் எல்லாவற்றிலுமே சிவநெறி ஏற்றிப் போற்றப் பெற்றுள்ளது.
காப்பியக் காலத்தில் இளங்கோவடிகள் சிவநெறியை ஏற்றிப் போற்றியுள்ளார். கவுந்தியடிகள் வாயிலாக, இளங்கோவடிகள் கூறும் கொள்கைகளை வைத்து, இளங்கோவடிகளைச் சமணர் என்று பலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் சமயமாயினும் அவர் அந்தச் சமய நெறியின் உயர் கொள்கைகளைத் தழுவுதல் வேண்டியும், சமயப் பொறை நோக்கியுமே கருத்துக்களைக் கூறியுள்ளார்.
அதனால் அவரது சமயமே சமணம் என்று துணிதல் ஏற்புடையதன்று. இளங்கோவடிகள், நிறைந்த சமயப் பொறையுடையவர். தெளிவாகச் சொன்னால் சமய நெறிகளைக் கடந்த பொதுமை நெறி மேற்கொண்டவர் என்றே பாராட்டத் தோன்றுகிறது. அவர் தம் நூலில் எந்தெந்தச் சமயங்களைப் பற்றிப் பேசுகிறாரோ அப்பொழுதெல்லாம் அந்தந்தச் சமய நெறியின் சிறப்பை, கொள்கைகளை உள்ள ஈடுபாட்டுடன் கூறுகிறார். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு அடிகள் பாடிய ஆய்ச்சியர் குரவை, ஆய்ச்சியர் குரவையைப் படிக்கும் பொழுது திருமால் நெறியில் தோய்ந்து ஆழ்வார்கள் இயற்றிய பிரபந்தங்களைப் படிக்கும் பொழுது என்ன உணர்ச்சியும் அனுபவமும் ஏற்படுகிறதோ அதே உணர்ச்சியும் அனுபவமும் ஏற்படுகிறது என்றால் மிகையாகாது.
மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணம்முழங்கப் பஞ்சவிர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராய ணாஎன்னா-நாவென்ன நாவே
(சிலப். ஆய்ச்சியர் குரவை-37)
என்ற பாடலையும்,
சென்றநாள் செல்லாத செங்கண்மால் எங்கள்மால்
என்றநாள் எந்நாளும் நாளாகும்-என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துகளன் வாய்
(நாலா: 2298)
என்ற பாடலையும் இணைத்துப் பார்த்தால் இந்த உண்மை புலப்படும். அதுபோலவே அவர் சொல்லும் முறையில் காணப்படும் குறிப்பின் அடிப்படையில் அடிகள் சிவநெறியைச் சார்ந்தவரென்று துணிய முடியும். ஆயினும் அது நமது நோக்கமன்று.
விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்
(சிலப். வேட்டுவ வரி-21)
என்று போற்றுகின்றார். சிலப்பதிகாரத்தில் நகரங்களை அணி செய்யும் திருக்கோயில்களைக் குறிப்பிடும் பொழுது சிவபிரான் திருக்கோயிலையே முதல் நிலையில் வைத்துக் கூறுகின்றார்.
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செய்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்...
(சிலப். இந்திரவிழவூரெடுத்த காதை 169-172)
என்றும்,
நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்
மேழிவலன் உயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
(சிலப் ஊர்காண் காதை : 7-10)
என்றும் கூறுதல் அறியத்தக்கது. சைவத்துக்கேயுரிய சிறப்பு “பிறவாயாக்கைப் பெரியோன்” என்பது. சைவ நெறியின் கடவுள் செத்துப் பிறக்கும் தொழிலுக்கு ஆட்படாதவன்; பிறவாதவன்; இறவாதவன்.
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வ மாகிஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்மற் றத்தெய்வங்கள்
வேதனைப்படும் இறக்கும் பிறக்குமேல் வினையும் செய்யும்
ஆதலால் இவையிலாதான் அறிந்தருள் செய்வ னன்றே
(சிவஞான சித்தியார், 115)
எல்லார் பிறப்பும் இறப்பும்இயற் பாவலர்தம்
சொல்லால் தெளிந்தேநம் சோணேசர்-இல்லில்
பிறந்தகதை யும்கேளேம் பேருலகில் வாழ்ந்துண்டு
இறந்தகதை யும்கேட்டி லேம்.
(அருணகிரியந்தாதி)
என்ற திருப்பாடல்களின் பொருள் அறிக. இந்தச் சிறப்பை இளங்கோவடிகள் எடுத்துப் பாராட்டுவதன் மூலம் அவருடைய சிவநெறிச் சார்பு அறியத்தக்கது.
மணிமேகலை ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்,
நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக
(மணவிழாவறை காதை : 54-55)
என்று சிவபிரான் திருக்கோயிலை முதன்மைப்படுத்திக் கூறுகிறார். -
அடுத்து, செங்குட்டுவன் வடபுலப் படையெடுப்புக்குப் புறப்படும்பொழுது, நெடுமாலின் திருச்சேடத்தைக் கொண்டு வந்து, நின்று சிலர் தொழ, சிவபெருமானது திரு வடிகளைத் தன் மணிமுடியின் மீது வைத்திருந்தமையால், அத் திருச்சேடத்தை வாங்கித் தனது புயத்தில், ஏற்றுக் கொண்டதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்நின்று ஏத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்குஅது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கினன்..............
(சிலப். கால்கோள் காதை 62-67)
இந்த முறை வைப்பு சிறப்புடைய மரபினை மையமாகக் கொண்டதன்றோ?
அடுத்து, தமிழகத்துச் சைவ நெறியின் பொற்காலம் எனப் போற்றக்கூடிய காலம், திருமுறைக் காலம். திருமுறைக் காலம் என்பது மிக நீண்ட காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு தொடக்க முதல் கி.பி.1150 வரையாகும். இந்த நூற்றாண்டு இடைவெளி, தமிழகத்தின் வரலாற்றைக் கிளர்ச்சித் தன்மையுடையதாக்கிய சமய எழுச்சிக் காலம். சமயப் பொறை கருதி, பல்வேறு சமய நெறியாளர்கள் தமிழ்நாட்டில் உலாவவும் வாழவும் அவர்களுடைய சமயக் கொள்கைகளை, பாராட்டியும் ஏற்புடையவற்றை ஏற்றுக் கொண்டுமே தமிழர்கள் வாழ்ந்தனர்.
ஆயினும் பெளத்த, சமண நெறியாளர்கள் சமயப் பொறையை இழந்து தர்க்கித்தல், சழக்கிடுதல், மதம் மாற்றுதல், தம் நெறி சாராதவரைத் துன்புறுத்தல் ஆகிய செயல்களை மேற்கொண்டு சைவ நெறியாளர்களுக்கும் ஊறுவிளைவித்தனர். தமிழர்கள் இயல்பில் சமயப்பொறை யுடையவர்களாக இருந்தனர். இதற்குச் சான்று, அப்பரடிகள் சைவத்திலிருந்து சமணத்திற்குச் சென்றபொழுது யாரும் தடுக்கவில்லை; கிளர்ச்சி செய்யவில்லை. ஆனால், சமணத்திலிருந்து சைவத்திற்கு அப்பரடிகள் திரும்பி வந்த பொழுது, சமணர்கள் மதம் மாறிய பல்லவ அரசனின் துணையுடன் அப்பருக்குத் தந்த தொல்லைகளே சான்று.
அதுபோலத்தான் மதம் மாறிய பாண்டிய அரசன் நெடுமாறன் துணையுடன் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்துக்குத் தீ வைத்ததுமாகும். திருஞானசம்பந்தரோடு பலமுனைகளில் வாதாடியது, பேராடியது ஆகியவற்றின் மூலம் இதனை அறிய முடிகிறது. இந்தச் சூழலில்தான் ஒரு சைவப்படை யெழுச்சியே நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சமயத் தொண்டர்கள் அப்பரடிகள், திருஞானசம்பந்தர் ஆகியோருடைய அடிச்சுவட்டில் தொண்டு செய்தனர் திருத்தொண்டுகள் இயற்றினர்.
இன்று நம்மிடையே வழக்கத்திலிருக்கும் சைவ நெறியின் பழக்கங்கள் எல்லாம் அவர்களால் காக்கப்பெற்று நமக்கு அளிக்கப் பெற்றவையேயாம். இதனை,
“சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும் சுந்தரனும்
சிற்கோல வாவூர்த் தேசிகனும்-முற்கோலி
வந்திலரேல் நீறெங்கே? மாமறைநூல் தானெங்கே?
எந்தைபிரான் அஞ்செழுத் தெங்கே!”
என்ற பழம்பாடல், வினாவால் விளக்குவது காண்க.
தமிழக அரசர்களில் பலர் சிவநெறியைச் சார்ந்தே ஒழுகி வந்துள்ளனர். ஒரு சிலர் திருமாலியத்தைச் சார்ந்திருந்தனர். ஆயினும், பெரும்பாலான அரசர்கள் தாம் எந்தச் சமயத்தை மேற்கொண்டொழுகினும் மற்றச் சமயங்களை மதித்து வந்துள்ளனர்.
பல்லவர்களில் ஓரிரு அரசர்கள் மட்டும் சமண சமயத்தைச் சார்ந்திருந்தனர். பல்லவர்களில் மகேந்திர பல்லவனும் பாண்டியர்களில் நெடுமாறனும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களும் கூட முறையே அப்பரடிகளாலும், திருஞானசம்பந்தராலும் முறையாகச் சைவத்துக்குத் திரும்பி அழைக்கப் பெற்றவர்கள். பழங்காலத் தமிழகப் பேரரசுகள் உள்நாட்டு அமைதிக்கு மக்களின் சமய நம்பிக்கைகளையே களமாகக் கொண்டு செயற்பட்டன.
பல்லவ அரசர்களால் சிவநெறி மிகச் சிறப்பாக வளர்ந்தது. ஆனாலும், தூய சிவநெறியாக வளராமல் செழுந்தமிழ் வழக்கில் ஊடுருவிக் கலக்க ஆவலுடன் துடித்த ஆரிய வேதத்திற்கு வாயிலமைத்துக் கொடுத்ததே பல்லவப் பேரரசுதான். களப்பிரர் ஆதிக்கம் (கி.பி.300-600) தமிழகத்தில் கால் கொண்டது. அவர்கள் மூலம் சமண, பெளத்த சமயங்கள் பரவின. ஆரிய வேதங்களும் பொய்ம்மை நிறைந்த புராணக் கதைகளும் தமிழ்நாட்டில் பரவின. ஆயினும் இந்த இடைக் காலத்தில்தான் கோச்செங்கணான், புகழ்ச்சோழர், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய அரசர்கள் திருக்கோயில்களை எடுப்பித்தும் பூசனைகள் செய்வித்தும் சிவநெறியை வளர்த்தனர்.
கி.பி. 600 முதல் 900 வரை ஆண்ட பல்லவர்கள் காலத்தில் பெரும்பாலும் சிவநெறியே வளர்ச்சி பெற்றது. இந்தக் காலத்தில் ஆண்ட பல்லவர்கள் தங்கள் அரசின் முத்திரையாகச் சிவநெறியின் இலச்சினையாகிய “நந்தி"யை அரசு முத்திரையாகக் கொண்டும், நாணயங்களில் முத்திரையாகப் பதித்தும் ஆட்சி செய்து வந்துள்ளனர். அக்காலப் பல்லவ அரசின், நாட்டுச்சமயமாகவே சிவநெறி இருந்திருக்கும் என்று கருத முடிகிறது. மகேந்திரவர்மன் காலத்தில் பல்லவ நாட்டில் அப்பரடிகளால் தோற்றுவிக்கப்பட்ட தூய சிவநெறி எழுச்சி பல நூற்றாண்டுகளுக்குப் பயன் தந்திருக்கிறது. அந்த எழுச்சியின் ஒளி வீச்சு, தமிழகம் முழுவதிலும் மூன்று பேரரசுகளிடையிலும், ஆட்சியிலும் பரவிப் பயன்தந்தது. மகேந்திரன் பல திருக்கோயில்களை எடுத்துத் திருப்பணி செய்துள்ளான். பல்லவ அரசருள் ஒருவனாகிய பரமேசுவரவர்மன் மாமல்லபுரத்துக் கணேசர் கோயிலில் ஒரு கல்வெட்டு வைத்துள்ளான். அக்கல்வெட்டில் “சிவனுக்கு மேல் தெய்வமில்லை; அவனே முழு முதற் கடவுள்; பிறப்பிலி, ஸ்ரீநிதி. சிவனை உள்ளன்புடன் வழிபடுபவன். சிவனை நினையாதவர் ஆறுமுறை சபிக்கப் பட்டவராவர்” என்று கூறுகிறது.
இராசசிம்மன் கட்டிய காஞ்சி கயிலாசநாதர் கோயில் பெரும் புகழ்பெற்றது. சுந்தரரால் பாராட்டப் பெற்ற காடவர் கோன் கழற்சிங்கனும் பல்லவனேயாவான். இவனை வரலாறு, மூன்றாம் நந்திவர்மன் என்று கூறும். இவன் காலத்தில் செந்தமிழும் சிவநெறியும் சிவத்தொண்டும் பெருகி வளர்ந்தன. பல்லவர்கள் காலத்தில் நாயன்மார்கள் பலர் இருந்திருக்கின்றனர். பொதுவாகச் சொன்னால் இந்தக் காலம் சைவ மறுமலர்ச்சிக் காலம்.
பல்லவ அரசர்களைப் போலவே சோழர்கள் காலத்திலும் சிவநெறி வளர்ந்தது. சோழர் காலத்தில்தான் வடபுல்த்தில் காஷ்மீரம், நேபாளம் முதலிய இடங்களில் திருத்த முற்ற சிவநெறி கால் கொண்டது. சோழ நாட்டில் பாய்ந்து வளப்படுத்தும் காவிரியாற்றங்கரையில் கறைக் கண்டனுக்குத் திருக்கோயில்களை எடுத்தும் சாதாரண நிலையிலிருந்த கோயில்களைக் கற்றளிக் கோயில்களாகப் புதுப்பித்தும் அழகுபடுத்திய பெருமை ஆதித்த சோழனைச் சாரும். சோழப் பேரரசை நிறுவிய முதலாம் இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலை எடுத்தான். இராசராசன் இத்திருக்கோயில் எடுத்ததோடு மட்டுமின்றிச் சிவநெறி வரலாற்றில் நிலையான இடம்பெறத் தக்கதாக திருமுறைகளைத் தொகுத்துத் தமிழ் உலகிற்குக் கொணர்ந்தான்.
பல்லவர் காலத்தில் சிவநெறியாளர் போல வேடங்கொண்டு ஊடுருவிய ஆரியவேத மரபினர், நமது திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரரும் அருளிச் செய்த தமிழ்மறைப் பாடல்களைக் கண்டு அஞ்சினர்.
தேவார ஆசிரியர் மூவரும் ஆரியவேத மரபினர் பரப்பிய-நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களை மறுத்து, உய்ர்ந்த சமய வாழ்க்கை நெறியினை நாடு முழுதும் நடந்து சென்று பரப்பினர். அவை நாட்டிலே நடமாடினால் ஆரிய வேதத்தின் கொள்கை இடம் பெறாது என்று அஞ்சிய ஆரியமரபினர் அவைகளை அரும்பாடுபட்டுத் திரட்டித் தொகுத்துத் தில்லைத் திருக்கோயில் அறைக்குள் போட்டுப் பூட்டிவிட்டனர்.
கறைப்பட்ட வாழ்க்கையும், சிறைப்பட்ட மன நிலையும் கொண்ட தமிழினத்தைச் சிறை மீட்கவந்த திருமுறைகள் சிறைப்படுத்தப்பட்டு விட்டன. தேவாரம் பாடிய மூவரும் வந்ததால்தான் திருமுறைகளை எடுத்துச் செல்ல முடியும் என்றார்கள். இதனை அறிந்த இராசராசன் தனது நுண்ணறிவினால் தேவாரம் பாடிய மூவரையும் சிலைவடிவில் கொண்டுவந்து திருமுறைகளை மீட்டான். தமிழர் நெறி இன்றும், என்றும் உயிர்ப்போடிருக்கத் திருமுறைகளைக் கண்டு தந்த இராசராசசோழன் புகழ், என்றும் நின்று நிலவும்.
தேவாரத்தில், இராசராசசோழனுக்கு நிறைந்த ஈடுபாடு. அதனால், தான் வழிபடும் இறைவனுக்குத் “தேவார தேவர்” என்று பெயர் சூட்டினான். தான் எடுப்பித்த தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் திருப்பதிகம் விண்ணப்பிப்பார் நாற்பத்தெண்மரையும், துணைக்கருவியாளர் இருவரையும் பரம்பரைப் பணியாளராக நியமித்தான். நாள்தோறும் “ஆடல்வல்லான்” மரக்காலால் அரண்மனைப் பண்டாரத்தில் முக்குறுணிநெல் தரவும் ஏற்பாடு செய்தான். அவ்வழி, அப்பெருமன்னன் திருமுறைகளைப் போற்றி வளர்த்த பெருமைக்குரியவனாகிறான்.
இராசராசசோழன் மகன் இராசேந்திர சோழன் தந்தையை விஞ்சிய சிறப்பில் கங்கைகொண்ட சோழிச்சரம் என்ற திருப்பெயரில் பெரிய சிவன்கோயில் எடுப்பித்தான்.
அடுத்து, சோழ அரசர்களில் நீள நினைந்து போற்றக் கூடிய பேரரசன், அநபாயன் என்று சிறப்புப் பெயர் பெற்ற இரண்டாம் குலோத்துங்கன்.
ஆரியம், பெளத்தம், சமணம் ஆகியவற்றின் ஊடுருவல்களால் சமயச் சடங்குகள் பெருகின; பெண்மையை இழிவுபடுத்தும் வறட்சித் தன்மையுடைய துறவு நெறி மலிந்தது; தமிழ்ச் சமுதாய வாழ்க்கையை நலிவடையச் செய்தது.
அந்தக் காலத்தில், “வாழ்க்கையே சமயம், பெண்மை பெருமைக்குரியது; மாந்தரில் சாதிப் பிரிவுகள் இல்லை; காதல் திருமணமே சிறந்தது; மனையற வாழ்க்கை மூலமே வீடுபேறு பெறலாம்; தொண்டு நெறியே உயர்ந்தது” என்ற கொள்கைகளை மேற்கொண்டு வாழ்ந்து காட்டிய அடியார்களின் வாழ்க்கையினைக் கூறுவதன் மூலம் தமிழின வரலாற்றுக்கு ஏற்பட இருந்த சரிவைத் தடுத்து நிறுத்தி, சேக்கிழார், பெரிய புராணம் இயற்றிடத் துணை நின்ற பெருமைக்குரிய மன்னன் அநபாயச் சோழனே.
சோழர் காலத்துத் திருக்கோயில்கள் திருக்கோயில்களாக மட்டுமல்லாமல் சமுதாயப் பணிமனைகளாகவும் விளங்கின என்பதும் நினைவிற் கொள்ளத்தக்கது.
பாண்டிய மன்னர்களிலும் பலர், சிவநெறியைச் சார்ந்து பணி செய்துள்ளனர். அவருள் மிகச் சிறந்தவன் வரகுண பாண்டியன் என்ற பேரரசன். பட்டினத்தடிகள் வரகுணபாண்டியனைப் ‘பெரிய அன்பின் வரகுண தேவரும்’ என்று பாராட்டுவார். திருவாசகம் தந்த மாணிக்கவாசகர், அரிமர்த்தன பாண்டியப் பேரரசனின் அமைச்சராக விளங்கினார் என்பதும் அறிந்து மகிழத்தக்கது.
தென்காசித் திருக்கோயிலை எடுப்பித்த அரிகேசரி பராக்கிரம பாண்டியன் சிவநெறியின் சீலத்திற்கும் பணிவிற்கும் புகழ் பெற்றவன். மாபெரும் கற்றளித் திருக்கோயிலாகிய தென்காசித் திருக்கோயிலை எடுப்பித்த பெரும் புகழுக்குரிய அரசன் அவன்.
சிவநெறியை, திருக்கோயிலை என்றென்றும் அழியாமல் காப்பாற்ற வேண்டுமென்ற ஆராக் காதலில் உந்தப் பெற்றுத் தமிழகத்தின் வருங்காலத் தலைமுறைக்கு எழுதி வைத்த கல்வெட்டு, காலத்தால் அழியாதது: கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்வது. கல்வெட்டைப் படித்து அனுபவியுங்கள் தமிழக வரலாற்றை, சிவநெறியின் சீர்மையை, திருக்கோயில்களை நன்றியுணர்வோடு காக்கும் பணியைத் தொடருங்கள்! இதோ கல்வெட்டு; படித்து உணர்ந்து செயலாற்றி மகிழுங்கள்.
அரிகே சரிமன் பராக்கிரம மாறன் அரன்அருளால்
வரிசேர் பொழிலணி தென்காசிக் கோயில் வகுத்துவலம்
புரிசேர் கடற்புவி போற்றவைத் தேன்அன்பு பூண்டிதனைத்
திரிசேர் விளக்கெனக் காப்பார்பொற் பாதம்என் சென்னியதே.
(தென்காசிக் கோயில் கல்வெட்டு)
பாண்டியப் பேரரசில் சோழர் குலத்தில் தோன்றிய மங்கையர்க்கரசியாரின் கணவனாக இருந்து சமணத்துக்குச் சென்று, பின் சிவநெறிக்கு மீண்டு, சிவநெறி வரலாற்றுக்குப் பெருநலம் சேர்த்தவன் நின்றசீர் நெடுமாறன். அவன் புகழ், ஞாலம் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.
நெடுமாறனின் வாழ்க்கைத்துணையாக நின்ற மங்கயைர்க்கரசியாரின் புகழ், பண்ணும் இசையும் பயிலும் காலம் வரையில், தமிழினம் இயற்கையோடிசைந்த வாழ்க்கை வாழும் காலம் வரையில், ஆணும் பெண்ணும் காதலிற் கலந்து வாழும் மனையறம், மண்ணில் நிலவும் வரையில் நிலைத்து நிற்கும்; அந்த மங்கையர்க்குத் தனியாசி, தமிழர்தம் இல்லங்களில் தெய்வமாக வழிபடப் பெறுவார்.
சேரமன்னர்களில் சிறந்து விளங்கிய பேராசர் சேரமான் பெருமாள் நாயனார். இவர் நாள்தோறும் வழுவாது சிவ பூசை செய்த மன்னர். அதுமட்டுமா? பூசையின் பயனை நாள்தோறும் பெருமான் ஏற்றுக் கொண்டு, அருள் செய்த பெரும் பேறுபெற்ற மன்னர், திருநீற்றுச் சாதனத்தை மேற்கொண்டவர்கள் யாராயினும் அவரை மதித்தவர் சிவபெருமானால் சுந்தரருக்குத் தோழராக்கப் பெற்ற அண்ணல், இங்ஙனம் சேர அரசர்களிலும் போாசர்கள் பலர் சிவநெறியில் நின்றொழுகிச் சைவத்தை வளர்த்து வந்துள்ளனர்.
இங்ஙனம் வளர்ந்து வந்த சிவநெறி, பெளத்த, சமண, மாயாவாத சமயங்களைச் சந்திக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. அப்பொழுது இலக்கியங்களில் பரவிக்கிடந்த சைவக் கருத்துக்களை மையமாகக் கொண்ட சைவ இலக்கண-சாத்திர நூல்கள் இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அது, காலத்தின் தேவையாக இருந்தது. இத் தேவையினைத் திருவருள் துணைகொண்டு மெய்கண்டதேவர் நிறைவு செய்தார்; “சிவஞான போதம்” என்ற அருமையான தத்துவ அளவை நூலை முதல் நூலாக ஆக்கித் தந்தார்.
சிவஞானபோத நூலுக்கு வழி நூலாகத் தோன்றிய, அருணந்தி சிவாசாரியார் இயற்றிய சிவஞான சித்தியார், மிக விரிவாகவும் தெளிவாகவும் சைவ சித்தாந்தச் செந்நெறியை எடுத்து விளக்குகிறது. இதனையொட்டிப் பன்னிரண்டு நூல்கள் தோன்றிச் சாத்திர வரிசையில், பதினான்கு சாத்திர நூல்களாக அமைந்துள்ளன. அவற்றுள் திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும், மெய்கண்டதேவருக்கு முன்பே செய்யப் பெற்றன என்று ஒரு கொள்கையும் உண்டு.
அந்தப் பதினான்கு சாத்திரங்களாவன:
1. சிவஞானபோதம் 8. திருஅருட்பயன்
2. சிவஞான சித்தியார் 9. வினாவெண்பா
3. இருபா இருபது 10. போற்றிப் பஃறொடை
4. உண்மை விளக்கம் 11. கொடிக்கவி
5. திருவுந்தியார் 12. நெஞ்சு விடு தூது
6. திருக்களிற்றுப்படியார் 13. உண்மைநெறி விளக்கம்
7. சிவப்பிரகாசம் 14. சங்கற்ப நிராகரணம்
சைவ சித்தாந்த சாத்திரக் காலம், வழி வழியாக வந்த சமய மரபுகளையும், தத்துவ மரபுகளையும் காப்பாற்றித் தந்தது; பிற சமய நெறிகளின் தத்துவங்கள் ஊடுருவிக் கலக்காமல் தடை செய்தது. அங்ஙனம் மெய்கண்டார் அருளிச் செய்த சிவஞான போதத்தில் இல்லாத செய்திகள்தமிழ் மரபுக்குப் புதியனவாய் அமைந்த செய்திகள் சில வழி நூல்களில் இடம் பெற்றுள்ளன என்பதை உய்த்துணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
சாத்திரக் காலத்தைத் தொடர்ந்து புராண காலம் தோன்றுகிறது. இந்தக் காலம் சைவத்திற்கு அவ்வளவு நல்ல காலமாக அமையவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக ஓரிரண்டு நல்ல புராணங்கள் தோன்றின. இங்கே மிகச் சிறந்த வரலாற்றுப் புராணமாகிய பெரிய புராணம் சாத்திர காலத்துக்கு முந்தியது என்பது குறிக்கத்தக்கது.
ஆயினும் பல புராணங்கள் இந்த நூற்றாண்டிலேயே செய்யப்பெற்றன. அவைகளில் ஏற்புடையன மிக மிகச் சிலவே. பல புராணங்கள் சிவநெறியை ஊடுருவிச் சிதைக்கும் நோக்கத்துடன் கூட செய்யப்பட்டனவோ என்று கருதத்தக்க அளவில் அமைந்துள்ளன. அவை பிற்காலத்தில் தோன்றிய பகுத்தறிவுவாதிகளுக்குப் பெருந்தீனியாகப் போய்விட்டன. அவைகளை உள்ளவாறறிந்து ஒதுக்குதல் இன்றுள்ள தலையாய கடமை.
சைவ சித்தாந்த சாத்திரக் காலத்தைத் தொடர்ந்து திருமடங்களின் காலம் தொடங்குகிறது. சமயாசாரியர்களாலும் சந்தானாசாரியர்களாலும் போற்றி வளர்க்கப் பெற்ற சமய நெறிகளை, நிலையான நிறுவனங்கள் அமைத்துத் தொடர்ந்து பேணி வளர்க்க வேண்டும்; சிவ ஞானத்தை மக்களுக்கு எடுத்துக் கூறி அந்நெறியில் அவர்களை வழிநடத்த வேண்டும்; சிவஞான நெறியில் நிற்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சைவத் திருமடங்கள் காணப் பெற்றன. சைவத் திருமடங்கள் பதினெட்டு என்ற வழக்கு உண்டு.
1 திருவாவடுதுறை ஆதீனம், 2. தருமபுர ஆதீனம், 3. காஞ்சிபுரம் ஆதீனம், 4. சூரியனார் கோவில் ஆதீனம், 5. செங்கோல் ஆதீனம், 6. ஆகமசிவப்பிரகாச ஆதீனம், 7. திருஞானசம்பந்தர் ஆதீனம், 8. திருவண்ணாமலை ஆதீனம், 9. நீலப்பாடி ஆதீனம், 10. தாயுமானசுவாமிகள் ஆதீனம் (அன்னப் பேட்டை, 11. சாரமா முனிவர் ஆதீனம், 12. திருச்சி சொர்க்கபுர ஆதீனம், 13. வேளா குறிச்சி ஆதீனம் (திருவாரூர்), 14. வள்ளலார் ஆதீனம், 15 இருளஞ்சேரி ஆதீனம், 16. வரணி ஆதீனம், 17 நாச்சியார் கோயில் ஆதீனம் (வேதாரண்யம்), 18 நிரம்பவழகிய தேசிகர் ஆதீனம் (குடந்தை).
- தொகையகராதி பக்.117.
இத்திருமடங்கள் எல்லாம் அவை தோன்றிய காலத்தில் அருள் ஞானப் பண்ணைகளாகத் தொண்டின் நிறுவனங்களாக விளங்கின. இன்றும் சில திருமடங்கள் விளங்குகின்றன. மேலும் இங்கும் அங்குமாக நாட்டில் பரவலாக நூற்றுக்கணக்கான திருமடங்கள் தோன்றிப் பணிகள் செய்தன என்று ஆங்காங்கு உள்ள திருக்கோயில்களின் கல்வெட்டுக்கள் எடுத்துக் கூறுகின்றன.
ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த பொழுது உடனிருந்த அடியார்கள் வழித் தோன்றி, இன்றும் நின்று நிலவும்-காலத்தால் மிகவும் மூத்த ஆதீனம் மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம். இத்திரு மடத்தில் வழிவழியாகச் சைவத்தின் நுண்பொருள்களை விளக்கும் சமய நூல்கள் செய்த முனிவர்கள் இருந்துள்ளனர்.
மதுரை ஆதீனத்தில் 291ஆவது மகாசந்நிதானமாக எழுந்தருளிய திருவருள் திரு. சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள் சிறந்த சைவ சித்தாந்த ஞானம் கைவரப் பெற்றவர்கள். செந்தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதவும் பேசவும் வல்லவர்கள். ஆவியுலகத்தொடு தொடர்பு கொள்ளுதல், பேசுதல் முதலிய துறைகளில் துறைபோய அனுபவமும் உடையவர்கள். இத்துறையில் அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ள புத்தகங்கள் கற்றுத் தெளிதற்குரியன.
தமிழகத்தின் சமய அரங்குகளில் இவர்கள் “செய் வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும்” என்ற சேக்கிழார் பாடலுக்கு ஆவியுலகக் கருத்தைக் கருவியாகக் கொண்டு விளக்கியருளும் பாங்கு பாராட்டு தலுக்குரியது.
இத்திருமடத்து ஞானபிடத்தின் வழித்தோன்றலாக, இளவரசாக எழுந்தருளியிருப்பவர்கள் திருவருள் திரு. அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள். செந்தமிழ் ஆர்வமும் திருத்தொண்டு நெறியில் நிற்கும் பண்பும் உடைய இவ்விளவரசு அவர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்.
சைவத் திருமடங்களில் திருக்கயிலாய பரம்பரை என்று வழங்கப் பெறும் ஆதீனங்களின் உபதேச பரம்பரை, கயிலையிலிருந்து தோன்றியதாகும். திருக்கயிலாய பரம்பரை, திருக்கயிலாயத்தின் அருள்வடிவாய் கல்லாலமர நிழலில் அமர்ந்து அதோ முகப்பரமனிடமிருந்து திருநந்தி தேவர் சிவஞான உபதேசம் பெற்றார். அக்குருபரம்பரையில் வந்த அகச்சந்தான தேவர்கள், 1. திருநந்திதேவர், 2. சனத்குமாரர், 3. சத்தியஞானதரிசனி, 4. பரஞ்சோதியார். புறச்சந்தான குரவர்கள் 1. மெய்கண்ட தேவர், 2. அருணந்திசிவம், 3. மறைஞான சம்பந்தர், 4. உமாபதி சிவம். இந்தச் சந்தான குரவர்களில் அருணந்தி சிவாச்சாரியாரின் 49. சீடர்களில் ஒருவராக விளங்கிய தெய்வசிகாமணி குருமூர்த்திகளின் ஞானப் பெருக்கில் தோன்றியது, திருவண்ணாமலை ஆதீனம். இன்று அது குன்றக்குடியைத் தலைமை இடமாகக் கொண்டு பணி செய்வதால் குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம் என்று அழைக்கப் பெறுகிறது. இத்திருமடம் சிவஞான சித்தியாருக்கு உரைகண்ட ஞானப்பிரகாச முனிவரைப் பெற்றது.
இவ்வுரையைச் சிவசமவாத உரை என்று கூறி மறுப்பாரும் உண்டு. பெரிய புராணத்திற்கு விரிவுரை கண்ட ஆறுமுகத் தம்பிரானைப் பெற்றது என்ற பெருமைக்குரியது. இத்திருமடத்தில் வழி வழி பல முனிவர்கள் பல அருள்ஞான நூல்களைச் செய்துள்ளனர்.
இன்றும் இந்தக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஒன்றும் வகையிலெல்லாம் பணி செய்து வருகிறது.
அடுத்து, நமசிவாய மூர்த்தியை ஞானாசிரியராகக் கொண்ட திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் ஆகும். நுண்ணிதின் அமைந்த சிவஞான போதத்தை எல்லாரும் கற்கும் வகையில் பேருரையாக்கித் தந்த மாதவச் சிவஞான முனிவர் இந்த ஆதீனத்தைச் சேர்ந்தவர் என்பது இந்த ஆதீனத்தின் பெருமைக்குச் சான்று.
திருவாவடுதுறை மடம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் எழுச்சிக்குத் துணையாக இருந்த மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதயர் முதலியவர்களுக்குக் களமாக அமைந்தது என்பதைத் தமிழுலகம் அறிந்து பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது. இத் திருமடத்தில் செந்தமிழ்ப் புலமையும் சிவஞானமும் கைவரப் பெற்றவர்கள் வழிவழியாக அருளாட்சி செய்து வருகின்றனர்.
இன்று இத்திருமடத்தின் ஞானத்தலைவராக எழுந் தருளியுள்ள மகாசந்நிதானம் திருவருள் திரு. அம்பலவான தேசிய பாரமாசார்ய சுவாமிகள். அவர்கள் நல்ல ஞான நூல்களை அச்சிட்டு வழங்கியும், சமய, இலக்கிய மாநாடுகளை நடத்தியும் செய்து வரும் பணிகள் பாராட்டுதலுக்குரியன.
சைவத் திருமடங்களில் சிறப்புடையதாக விளங்கி நின்று தொண்டு செய்து வருவது திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரம் ஆதீனமாகும்.
இத்திருமடம், முத்தி நிச்சயம் முதலான சாத்திர விளக்க நூல்களைச் செய்து பெருமை பெற்றது. இன்றும் சிறந்த சாத்திர, தோத்திர நூல்களை வெளியிட்டும், சைவ சாத்திரங்களைப் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களைக் கண்டும் சிறந்த முறையில் தொண்டு செய்து வருவது தருமபுரம் ஆதீனம் ஆகும்.
தருமபுர ஆதீனத்தில் இன்று 26ஆவது மகாசந்நிதானமாக எழுந்தருளியுள்ள திருவருள் திரு. சண்முகதேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகள் அவர்கள், சாத்திரங்களிலும் திருமுறைகளிலும் நிறைந்த ஞானமும் அந்நெறி முறைகளின் வழி அயர்விலாது அரன் தன்னை அருச்சிக்கும் ஆர்வமும், சிவஞானத்தின் இயல்பெனச் சிவஞான போதம் 12ஆவது சூத்திரம் சொல்லும் சிவப் பணிகள் அனைத்திலும் தோய்வும் ஈடுபாடும் கொண்டு சைவம் செழிக்க அருளாட்சி செய்து வருகிறார்கள்.
அடுத்து, சிறந்ததொரு திருமடமாக விளங்குவது திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம். இது தருமையின் ஞானப் பரம்பரை வழி வந்த, கொழிதமிழ்க் குமரகுருபர அடிகளால் தோற்றுவிக்கப் பெற்றது. இத்திருமடம், காசி முதல் இராமேச்சுரம் வரை இயற்றியுள்ள அறக்கட்டளைகள் பலப்பல. வடபுலத்து மக்கள் செந்தமிழையும் சிவநெறியையும் அறிந்து கொள்ளச்செய்த பெருமை இத்திருமடத்திற்கு உண்டு.
இன்று இத்திருமடத்தின் தலைவராக எழுந்தருளியுள்ள அருள் திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் செந்தமிழ் நூற்புலவராக, சிவஞானச் செல்வராக விளங்கிப் பணி செய்துவருவது பாராட்டுதலுக்குரியது. மேலும்,
1. காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம்
2. மயிலம் பொம்மபுர ஆதீனம்
3. பேரூர் அருள்திரு. சாந்தலிங்கர் திருமடம்.
4. கோவை சிரவணபுரம் கெளமார மடாலயம்.
5. கோவிலூர் ஆதீனம்.
6. திருவண்ணாமலை ஈசான்ய மடம்.
7. திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம்.
ஆகிய திருமடங்களும், மற்றும் பல திருமடங்களும் செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் சிறந்த முறையில் பணி செய்து வருகின்றன.
சைவ சித்தாந்தச் சமயத்திற்குத் தொன்மையான வரலாறு உண்டு; காலத்திற்குக் காலம் அது வளர்ந்து வந்திருக்கிறது. பல்வேறு புறத்தாக்குதல்களைக் கண்டு வெற்றி பெற்று விளக்கமுற்று வந்திருக்கிறது.
இன்று தமிழகத்தில் அணி செய்து நிற்கும் ஆயிரமாயிரம் ஆலயங்கள், சித்தாந்தச் செந்நெறியின் ஆன்ம அனுபவச் செயல் முறைக் கழகங்களாகத் தோன்றியவை. சித்தாந்தச் சைவம் தனித்தன்மையில் நின்று விளங்கிய வகையில் அது ஒளித்தன்மையுடையதாக விளக்கம் பெற்றிருந்தது.
பிற்காலத்தில் தோன்றிய புறச் சமயங்களைச் சந்திப்பதற்காக அகச் சமயங்களிடையே ஏற்படுத்தப் பெற்ற இணைப்புகளாக மட்டுமல்லாமல் கலப்பாகப் போய் விட்டதால் இந்தச் சமயமும் இன்று பகுத்தறிவு சர்ச்சைகளுக்குள்ளாகி நிற்கிறது.
அகச் சமயங்களுக்கிடையே கலப்பு ஏற்பட்டதோடு மட்டுமின்றி, அதனுடன் மாயாவாதக் கலப்பும் ஏற்பட்டது. இவ்வாறான கலப்பு நிலையில் “இந்து மதம்” என்ற பெயர் தோன்றியது. இந்தக் கலப்பினால் ஏற்பட்ட மயக்கங்கள் இன்று மலிந்துள்ளன. அதன் காரணமாகச் சித்தாந்தச் செந்நெறி இனம் கண்டு கொள்ள முடியாமல் கனித்தன்மையை இழந்திருக்கிறது. இன்றையச் சித்தாந்த செந்நெறியின் திருமடங்கள் இதுபற்றி எண்ணத் திருவுள்ளம், கொள்ள வேண்டும்.
சித்தாந்தச் செந்நெறியை அதன் தனித்தன்மையோடு பாதுகாக்க முன்வர வேண்டும். சித்தாந்தச் செந்நெறி, உலகப் பொது நெறியாவதற்குரிய தத்துவச் சிறப்புடையது; சமுதாய நோக்குடையது. அது, முன்னைப் பழைய நெறி; பின்னைப் புதுமைக்கும் ஈடுகொடுக்கும் பெரு நெறி. இத்தகு சிறப்பு வாய்ந்த சித்தாந்தச் செந்நெறி என்றும் நின்று நிலவுவதாகுக!
2. சைவ சித்தாந்தத் தத்துவம்
உயிர்த் தொகுதி பலப்பல. உயிர்களின் தோற்றத்திற்குப் பல நூறாயிரம் வாயில்கள். உயிர்களைத் தமிழர் ஐவகைப் படுத்தினர்; மரம் செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்பது தமிழர் கொள்கை; தொல்காப்பியர் காலத்துக் கொள்கை என்பதை மறவற்க இக்கொள்கையை உலகம் ஒப்புக் கொண்டது அண்மைக் காலத்தில்தான்! ஆனால் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, “மரம் செடிகளும் உயிருடையனவே; ஆயினும் இயக்கக் குறைவு உடையன” என்று கண்டுணர்த்தினார் தொல்காப்பியர்.
புல்லும் மரமும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. (தொல். மர.28-33)
இந்தப் படிமுறை, அறிவு வளர்ச்சிகளின்பாற்பட்டன.
ஆறறிவுடைய மானுடப் பிறவி அறிவியக்கத்தின் இன்றைய கடைசி எல்லை.
ஆனாலும், ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள நிலைகளில் உணர்ச்சிகள் இல்லை; செயல் இல்லை; காதல் இல்லை; பிறவியின் பயனாகிய வீடுபேறு இல்லை என்று கூறுதல் உண்மைக்கு மாறானது. இவையெல்லாம் மக்கட் பிறப்பல்லாத பிற உயிர்களுக்கு உண்டு. ஆனால், சில வரையறைகள் இல்லாமற் போகலாம்; செழுமையாக - விளக்கமாகத் தோன்றாமலிருக்கலாம். ஏன்? ஞானத்தின் பயனாகக் கிடைக்கக்கூடிய வீடுபேறுகளும் கூட, செடிகளும், பறவைகளும், விலங்குகளும் பெற்றுள்ளன. “முள்ளிச் செடிக்கு வீடுபேறு கொடுத்த வரலாறும்”, “கரிக்குருவிக்கு உபதேசித்த வரலாறும்”, “சிலந்தியும், யானையும் பூசித்து வீடுபேறுற்ற வரலாறும்” எண்ணத்தக்கன. அவைகளுக்குள்ள ஒரே குறை, செல்லுழிச் செல்வதோடு சூழ்நிலைகளை மாற்றி அமைத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாமையும், காரண காரியங்களை ஆராய்ந்து அனுபவத்திற்குக் கொண்டு வரும் தகுதியில்லாமையும் ஆகும். ஆனால் இவையெல்லாம் மானிடனுக்கு உண்டு.
மானிடர் சாதி, துன்பங்களைச் சந்தித்துச் சந்தித்துப் படிப்படியாக வளர்ந்து வருகின்றது. குறையிலிருந்து நிறையும், தீமையிலிருந்து நன்மையும், துன்பத்திலிருந்து இன்பமும் தோன்றுதல்தான் வளர்ச்சியின் படி முறை, இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளவை அறிவு அறியாமை என்பன. இந்த அறியாமை, அறிவிலிருந்தும் தோன்றுவதாகும். ஒன்றை, நன்றாயினும் தீயதாயினும் உள்ளவாறு அறிதல் அறிவு. அறிந்ததற்கேற்பத் தீமையிலிருந்து விலகி, நன்னெறியில் நிற்றல் ஒழுக்கம். அறிவு என்பது பயன்படும் ஆற்றலால் உடைமை போலக் கருதப் பெற்றாலும் அதுவும் ஒரு தொழிற் கருவியேயாம். இந்தப் படி முறை வளர்ச்சிகளில் மானிடச் சாதி தம் சீரான வாழ்க்கைக்கும், சிறப்புடைய வாழ்க்கைக்கும் கண்டதே சமயம்.
“சமயம்”, “மதம்” என்ற சொல் வழக்குகள் பழங்காலத்தில் இருந்ததில்லை. மணிமேகலை “சமயம்” என்ற சொல்லைக் கொண்டு வருகிறது. மதம் என்ற சொல்லை “மாணிக்கவாசகர்” எடுத்தாண்டுள்ளார். நன்னூலில் மதம் என்ற சொல் கொள்கை அடிப்படையில் எடுத்தாளப் பட்டுள்ளது. பின்னால் தோன்றிய கொள்கைகளில் பெரும் பாலானவை கடவுள், ஒழுக்கம் போன்றவைகளோடு மிகுதியும் சார்ந்திருந்ததால் இவைகளை மதம் என்ற சொல்லால் அழைப்பது பெருவழக்காயிற்று. பின், மதம் என்ற சொல்லில் உணர்த்தப் பெறும் பொருள் இறுக்கமான பிடிப்பு, வெறி ஆகியன மேவியதால் தூய இனிய சொல்லாகிய சமயத்திற்கு வந்தன. மதம், சமயம் என்ற இரண்டு சொற்களையுமே கூட நமது திருமுறை ஆசிரியர்களும் சாத்திர ஆசிரியர்களும் சிவநெறியைக் குறிக்கப் பெருவழக்காக எடுத்தாளாமையே சான்று. திருமுறை ஆசிரியர்கள், “திருநெறி”, “நன்னெறி”, “அருள்நெறி”, தவநெறி என்றே மிகுதியும் குறிக்கின்றனர். சமயத்திற்கு ஒரு குறிப்பிட்ட சொல் வழக்காகத் தமது சாத்திர நூலில் மெய்கண்டார் “நெறி” என்ற சொல்லையே கையாளுகிறார். அருணந்தி சிவம், சமயம் என்ற சொல்லைக் கையாளுகிறார். இனி, “சமயம்” என்ற சொல்லை நாம், சிவநெறி, சைவ சமயம் என்ற கருத்தில் கையாளலாம்.
உலகம் முழுதும் வாழ்ந்த மானிடர் சாதி தத்தம் வாழ்க்கைப் படிப்பினைகள் மூலம் சில வாழ்க்கை நியதிகளைக் கண்டுள்ளது; அறநெறிகளைக் கண்டு ஆற்றுப் படுத்தியுள்ளது; நிலவுலகத்தில் நீதி நின்று நிலவ முயன்று பணி செய்துள்ளது. இவை அனைத்தும் வாழ்க்கைப் படிப்பினைகளின் வழியே உருப்பெற்றன. மனித குலத்தை இன்ப நெறியில் ஆற்றுப்படுத்த வாழச்செய்ய அறமும், அறத்தினைச் சார்ந்த நீதியும் தேவை. இவையே இன்ப வாழ்க்கையின் மூலங்கள்; அடித்தளங்கள்; மனிதகுலத்தை அறநெறியில்-நீதி தழுவிய நிலையில் வாழும்படி வலியுறுத்தி நெறிப்படுத்த சமய நெறிகள் தோன்றின; அறந்தழுவிய வாழ்க்கையின் பயன்களை எடுத்துக் கூறின; அறநெறி பிறழ்ந்த வாழ்க்கையால் அடையும் அவலங்களையும் எடுத்துக்கூறி அச்சுறுத்தின; மனித குலத்தில் இயல்பாக அறநெறி பிறழ்ந்த வாழ்க்கைமுறை மேவிய பொழுது-கடவுள் பெயரால்-சொர்க்கம்-நரகம் என்ற முறையில்-முறை பிறழ்வைத் தடுத்து நிறுத்தி-அறநெறியில் நிலை நிறுத்த முயன்றபோது-சமயம் கால்கொண்டது. சமய நெறி தோன்றிய உடன் நல்ல பயன் கிடைத்தது. ஆனால் காலப் போக்கில், சமயநெறி சமுதாயத்தை அறநெறியில் - நீதிநெறியில் நிறுத்தும் ஆற்றலை இழந்தது. அதற்கு மிகுதியும் காரணம் மக்கள் தொகுதிகள் அல்ல. சமயநெறியை மையமாகக் கொண்டு வழிநடத்தத் தோன்றிய சமயம், சமய நிறுவனங்களின் வடிவம் பெற்றதுதான் காரணம். ஒரு இயக்கத்திற்கு, இருக்கும் ஆற்றல் நிறுவனங்களுக்கு இருத்தல் இயலாது; இருக்காது. சமயம் நிறுவனங்களான உடன் சமயத் தலைவர்கள்-அறநெறி புரோகிதர்கள் தோன்றி விடுவர். அவர்கள் மனித குலத்தை மையமாகக் கொண்டு சிந்திப்பதில்லை. தம் சமய நிறுவனம் தற்சார்பு ஆகிய சுழிகளில் சிக்கி அல்லற்படுவர்.
இங்கனம் சமய நெறி இயக்க நிலையில் இருந்து நிறுவனம் ஆகி முடம்பட்டுப்போன நிலையில் மனித குலத்தை நீதிநெறியில் நிறுத்த, சமய நெறி அறநெறியின் சாராத-தொடர்பில்லாத அறநெறியை, நீதியை வலியுறுத்தி நடைமுறைக்குக் கொண்டுவர அரசியல் தோன்றியது. அரசியலின் தொடக்க காலத்திலேயே, சென்ற கால நடைமுறைகளில் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக அறநெறி, நீதி ஆகியவற்றின் அவசியத்தை மிகுதியும் வற்புறுத்த எண்ணி, அறநெறியில் நிறுத்தும் முயற்சிகளை உறுதியாக எடுப்பதற்கு மாறாக நெறி பிறழின் தண்டனை வழங்குதல் என்ற முறையை வழியாகக் கொண்டது. இது கழுதைக்குப் பயந்து புலியிடத்தில் சிக்கியது போலாயிற்று. மாந்தர் நெறி பிறழ்ந்ததோடல்லாமல் அச்சத்திற்கும் ஆட்பட்டனர். அதன் விளைவாகக் காண்பதற்கும், அறிதற்கும் எல்லைகளுடைய அரசனிடத்திலிருந்து தப்ப மறைவாகத் தடம் பிறழ்ந்தனர். ஒட்டு மொத்தமாக வரலாற்றின் பயனை நோக்கில், அறநெறி, நீதிநெறி இவைகளிலிருந்து விலகிச் செல்லும் போக்கே வெற்றி பெற்றுள்ளது. சமய இயலும் அரசியற் சார்புடைய ஆட்சியிலும் போதிய பயனைத் தரவில்லை. இதற்குக் காரணம் சமய நடைமுறைகளில், அரசியல் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளேயாம்.
சமயநெறிகளின் படிமுறை வளர்ச்சிகளில் தோன்றிய குறைகளுக்குத் துணை போகாத நிறை நலம் சான்ற சமயத்தை, உலகு துணிவுடன் ஏற்றுக் கொள்ளவில்லை.
நாடு, இனங்களின் காரணமாகவும் பழக்கங்களை விடாப்பண்பின் காரணமாகவும் அறிவு ஆய்வில் ஆர்வமின்மையின் காரணமாகவும் சமய நெறியாளர்கள் கணக்கர்களாக மாறித் தத்தம் எல்லைக்குள் முரண்பட்டு மோதிக்கொண்டு உயர் சமய நெறியின் இயல்பையே கெடுத்து விட்டனர். உலகில் தோன்றிய சமயங்கள் எல்லாமே நன்னோக்கம் உடையனவே நோக்கத்தில் யாதொரு குறையுமில்லை. ஆனால், அனுபவங்கள் வேறுபடத்தானே செய்யும்! படிப்பினைகள் காரணமாகப் பெற்ற பாடத்தில் செறிவும், செறிவின்மையும் இல்லாமலா போகும். இவற்றை ஒப்பு நோக்கிக் காலத்திற்குக் காலம் உள்ள நெறியை, தேவையான புதுமையை எடுத்துக் கொள்வதற்குச் சமய நெறியாளர்கள் தயங்குகின்றனர். இத் தயக்கங்களின் காரணமாகவே உலகப் பொதுச் சமயம் தோன்றாது போய் விட்டது; உலகளாவிய மனித குலத்தை ஒருங்கிணைக்க முடியாமற் போய்விட்டது. இந்த இனிய பணியைச் சமய நெறியாளர்கள் ஏற்றுச் செய்யாமையின் காரணமாக வாழ்க்கையாகவே இருந்த சமயம், வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஒதுக்கப் பெற்றுவிட்டது. அதுவும் ஒரு சிறு விழுக்காட்டினருக்குத்தான். இன்றைய நடைமுறை உலகில் வளர்ந்துள்ள ஒழுக்கக் கேடுகள், காவல் தன்மைகள், பண்பாட்டுச் சிதைவுகள், போருணர்ச்சிகள் இவைகளை யெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டதால் நடைமுறை உலகத்திற்கும், சமயத்திற்கும் சம்பந்தமில்லை. உலகம் முழுதும், பெரும்பான்மையான மக்கள் வேறுவேறு பெயரில் கடவுளை நம்பி வழிபடத்தான் செய்கின்றனர். சர்ச்சுகளும் மசூதிகளும், திருக்கோயில்களும் உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன. அவைகளில் வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. ஆனால் மானிடச்சாதி பகைமை அரிப்பில் உள்ளீடு அழிந்துகொண்டே போகிறது. எங்கு பார்த்தாலும் உலகியலை மையமாகக் கொண்ட சாமர்த்திய விளையாட்டு! இந்தச் சாமர்த்திய உலகில், வேறு உலகைக் காட்டுவதாகச் சொல்லும் மதத் தலைவர்கள் கூட திறமையாகத்தான் ஈடுபடுகின்றனர். அவர்களிடத்திலும் கூட, விளையாட்டுக்கள் நிர்வாணமான விளம்பரப் போக்குகளாகக் காணப்படுகின்றன.
உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு சாரமற்றுப் போனால் வேறு எதனால் சாரம் ஏற்றப் பெறும்!
(புதிய ஏற்பாடு: லூக்காஸ் 14:34)
என்று விவிலியம் கூறும். இந்த இரங்கத்தக்க நிலைமைக்கு இன்றையச் சமய உலகு வந்திருக்கிறது. அன்பு கூர்ந்து சிந்தனை செய்மின் ! அண்டங்களை, கண்டங்களை இன்று சாலைகள் இணைத்து வெற்றி பெற்றுவிட்டன. ஆனால், மானிடச் சாதியின் நெஞ்சங்களை, நெறிகள் இணைத்து வெற்றி பெறவில்லை. நாடுகளைக் கடந்தும்கூட மானிட உலகத்தை இணைக்க வேண்டும். அதற்குச் சமயம் பயன்படுமானால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மானிட உலகத்தின் தேவைக்குச் சமயத் தத்துவங்களைச் செழிப்பூட்ட வேண்டியிருந்தால் பழையன கழித்துப் புதியன சேர்த்துச் செழிப்பூட்டப் பற்றும் பாசமும் தடையாக இருத்தல் கூடாது.
உலகச் சமயங்கள் அனைத்தும் போற்றுதலுக்குரியன. அச்சமயங்களைக் கண்ட தலைவர்களை நாம் உளமாரப் போற்றுகின்றோம். பிறப்பு-அவ்வழிப்பட்ட பழக்கம் காரணமாகச் சமயநெறிகளை ஏற்றுக்கொள்ளுதல் நன்றன்று ஏற்றுக் கொள்ளும் கொள்கை, நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும்; நல்லெண்ணத்திற்குரியதாக இருக்க வேண்டும்; மானிடச் சாதிக்கு நிலையான இன்ப வாழ்வை வழங்குவதாக இருக்க வேண்டும். இது நம் கொள்கை ஏற்புக்குரிய அடிப்படை அளவுகோல். இந் நிலையில் நின்று ஆராய்ந்தால் தமிழகத்தில் தோன்றிய சித்தாந்தச் சிவநெறி வளர்ந்த தத்துவச் செழுமையுடையது; வேறுபாடுகளைக் கடந்தது; சித்தாந்தச் செந்நெறி இன்னும் சமயநெறியாளர்களால் முழுமையாக ஆய்வு செய்யப் பெறவில்லை; அதனுடைய தெளிவான கொள்கை, கோட்பாடுகள் மக்களிடத்தில் விளக்கம் செய்யப் பெறவில்லை; ஏன்? அதுவே கலப்புகளின் காரணமாக மறைக்கப்பட்டுள்ளது. நடுநிலை நெஞ்சத்தோடு சித்தாந்தச் செந்நெறியை ஆராயுங்கள்! விவாதம் செய்யுங்கள்! தேர்ந்து தெளியுங்கள்! தெளிவான முடிவுகளைச் செயற்படுத்துங்கள்.
சித்தாந்தச் செந்நெறியை ஆராய்தறிந்துணர்ந்த மேனாட்டறிஞர்கள் அதைச் சிறப்பாகப் பாராட்டியுள்ளனர். டாக்டர் ஜி. யூ. போப் அவர்கள்,
“as the Choicest product of the Dravidian intellect.”
“This System possesses the merits of great antiquity; in the religious world it is heir to all that is most ancient in Southern India. It is a religion of the Tamil people by the side of which other every form is of Comperatively foreign origin. As a System of religious thought as an expression of faith and life, the Saiva Siddhants is by far the best that South India possesses; indeed it would not be rash to include the whole of India and to maintain that judged by its intrinsic merits, the Siddhants represents the high water mark of Indian thought and Indian life.” என்று பாராட்டியுள்ளார்.
இந்தச் சைவ சித்தாந்தச் செந்நெறியைத் தந்த முதல் நூலாகிய சிவஞானபோதத்திலிருந்து சில வழி நூல்கள் விலகிச் சென்றிருக்கின்றன; இது உண்மை. வழிநூலாசிரியர்கள் வாழ்ந்த காலத்தில் சமுதாய அமைப்பும், நடைமுறைகளும், அவர்களைப் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கின்றன. நெருக்கடியைத் தந்து-காலச் சூழ்நிலைக்கும் கட்டுப்பட்டுத் தள்ளியிருக்கின்றன. சமுதாய நெருக்கடிகள் அல்லது பழக்கக் கொடுமைகள், சிறந்த அறிஞர்களைக் கூட பாதிப்புக் குள்ளாக்கித் தம் வழி நிறுத்த முயன்று வெற்றி பெற்றதுண்டு. வரலாற்றில் இங்ஙனம் தோற்ற அறிஞர்களின் எண்ணிக்கை மிகுதி, வெற்றிபெற்றவர்கள் மிகமிகச் சிலரே. உண்மையின் பக்கத்திலேயே நின்று வழக்காடி-முரட்டுத் தனமாக உலகியலிற்குப் பலியானவர்கள் ஒரு சிலரேயாம்.
திருக்குறள், திருமுறைகள், மெய்கண்ட தேவர் அருளிச் செய்த சிவஞான போதம் ஆகியவை உண்மையின் பக்கமே நின்ற நூல்கள். காலத்தைவென்று விளங்கும் நூல்கள். சித்தாந்தச் செந்நெறி ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குப் பிறகு வளரவில்லை; தத்துவச் செழிப்பிலும் வளரவில்லை; தேக்கம்தான். ஏன்? உயிர்ப்புள்ள வாழ்வுக்கெல்லாம் உயிராக அந்நெறி நின்றோர், பிறழாது பிழைப்பு நடத்தியதால்தான் சைவ சமய நெறியாளர்கள் சிந்தனைப் போக்குக்கு எல்லை கட்டிக் கொண்டு-கோட்டை கட்டிக்கொண்டு பின் தோன்றிய சிந்தனைகளைப் புறக்கணித்து விட்டனர்; புறக் கணித்து வருகின்றனர். சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணத்தோடு திருமுறையுகம் முற்றுப் பெறுகிறது. உமாபதி சிவம் இயற்றிய சாத்திர நூல்களுடன் சித்தாந்த சாத்திர யுகம் முடிகிறது. இவைகளை விளக்குவனவாகப் பின்னே சில தோன்றியிருக்கின்றன. ஆனால் அவைகள் முன்னர்க் கூறியவற்றை, விளக்கும் பணியில் ஈடுபட்டனவே தவிர ஆய்வில் ஈடுபடவில்லை. இச்சமயநெறி தோன்றிய பின் உலக அரங்கில் தோன்றியுள்ள கிறித்துவம், இசுலாமியம் போன்ற சமயநெறிகளைச் சீர்தூக்கி ஆராய்ந்து அவற்றில் ஏற்பனவற்றை ஏற்கவோ, அவைகளுக்கு வழங்க வேண்டியவற்றை வழங்கவோ சித்தாந்தச் செந்நெறி இயக்கங்கள் முயற்சியெடுத்துக் கொள்ளவில்லை. ஏன்? பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாமுனிவன் கார்ல்மார்க்ஸ் மனித உலகத்திற்குச் சீரான வாழ்க்கையை வழங்க வேண்டுமென்ற விழுமிய நோக்கத்துடன் பொதுவுடைமைத் தத்துவத்தை, ஒரு புதிய வாழ்க்கை முறையை உலகத்திற்கு அறிமுகம் செய்துள்ளான். நம் சைவ சித்தாந்தச் சொற்பொழிவில், கடவுள் நம்பிக்கையில்லாத-"மதம் மக்கட்கு அபின்” என்று கூறிய கார்ல்மார்க்சை “மாமுனிவன்” என்று குறிப்பிடுகிறோமே என்ற வினா எழலாம். கார்ல்மாக்சை மாமுனிவர் என்று திரு.வி.க. குறிப்பிட்டுள்ளார். இன்று உலகியலில் மெய்ப் பொருளியலை ஆராய்ந்தறிந்து முடிவுக்கு வரவேண்டுமென்றால் மார்க்சீயத்தை ஆராயாமல் எடுக்கப்பெறும் மெய்ப்பொருள் பற்றிய முடிவுகள் குறையுடையனவேயாம். இந்த ஆய்வைச் சமயநெறியாளர்கள் நிகழ்த்த விரும்பாமல் மார்க்சீயத்தை நாத்திகம் என்று ஓதுக்குகின்றனர்; பயமுறுத்துகின்றனர்! அது பெரும்பிழை. மார்க்சீயத்தைச் சந்தித்துத் திறனாய்வு செய்து மார்க்சீயம் விரும்புகின்ற வேறுபாடற்ற சமுதாயத்தைச் சமயம் படைக்கும் என்ற தெளிவைத் தரவேண்டும். அருள்நந்தி சிவம், மார்க்சீயத்தில் முற்கால வடிவமாகிய உலகாயதத்தைத் திறனாய்வு செய்து மறுத்துள்ளார். ஆயினும், அது உலகாயத்தின் மறுப்புரையாக மட்டும் விளங்குகிறதே தவிர நடைமுறைக் குறைகள் நீக்கத்திற்குரிய விளக்கம்தரப் பெரிதும் முயலவில்லை.
இந்நிலையில் தமிழகத்தின் பழைய நாகரிகத்தின் தலைநகரமாகிய மதுரையில் நிலைபெற்றுள்ள ‘மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் திருக்குறள் நெறியில்-சிவ நெறியில் நாட்டுப்பணியில் ஈடுபட்டு, தம்மை அர்ப்பணித்துக் கொண்ட வ.உ.சி. புகழ் பரப்பும் ‘தமிழவேள்’ ஏ.பி.சி, வீரபாகு அமைத்த அறக்கட்டளையின் சார்பில் சித்தாந்தச் செந்நெறியைப் பற்றிப் பேசுகின்றோம். நம்முடைய பேச்சு சமய நெறியளார்களுக் கிடையில் சிந்தனையைத் தோற்றுவிக்குமானால், அறிவாராய்ச்சியைத் தொடங்கி வைக்குமானால் அதுவே நாம் விரும்பும் பயன். நம்முடைய பேச்சைகருத்தை மறுப்பின்றி ஏற்க வேண்டும் என்பது நமது நோக்கமன்று! விருப்பமுமன்று; ஆராய்ச்சி செய்யுங்கள். அதுவே போதும்-சார்பின்றி-பற்று-பாசமின்றி-அறிந்து உண்மையை நாடிக்காணவேண்டும் என்று விரும்பி ஆராயும் உலகம் - உண்மையைக் காணுதல் இயற்கை என்ற நம்பிக்கை நமக்கு மிகுதியும் உண்டு.
சித்தாந்தச் செந்நெறிக் கருத்துக்கள் முழுமையான நூல் வடிவம் பெற்றது மெய்கண்டார் காலத்தில் ஆனாலும், சித்தாந்தச் செந்நெறியின் கருத்துக்கள் தொன்மையானவை; பழைமையானவை. சித்தாந்தச் செந்நெறி, அறிவாராய்ச்சி அடிப்படையில் தோன்றி உள்ளார்ந்த அருளனுபவம் வழி செழித்து வளர்ந்த-நெறி. சித்தாந்தச் செந்நெறியின் முதலாசிரியன், “ஆலமலர் செல்வனே” யாம். “சித்தாந்தம்” என்ற சொல்லுக்கே “முடிந்த முடிபு” என்று பொருள். இனிமேல் கேள்விகள் கேட்க முடியாவண்ணம் சிந்தனையின் உச்சவரம்பை எட்டியது சித்தாந்தம் என்பர். அறிவியலாராய்ச்சிக்கு இங்ஙனம் கூறுதல் இயைபன்று. ஆயினும் சித்தாந்தச் செந்நெறி, கண்டு உணர்த்தியுள்ள முடிவினை மறுத்துப் புதிய முடிவுகளைக் காண்பார் யாரும் இதுவரையில் தோன்றவில்லை. சித்தாந்தச் செந்நெறியைச் சார்ந்தவர்களும்கூட பெயரளவில் வாழ்ந்தனரேயன்றி உள்ளார்ந்த அனுபவத்தில் ஈடுபடவில்லை. அதனால் புதுமைகள் தோன்ற வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
சமய நெறிக்கு எதிராகச் சிந்தித்தவர்களும்கூட பொதுவுடைமைக் கொள்கையாளர் உள்பட - சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை அணுகி ஆராய்ந்து மறுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் அளவுக்குச் சித்தாந்தத் செந்நெறியின் செயற்பாடும் இல்லை.
சித்தாந்தச் செந்நெறிக் கொள்கையின் அடிப்படை “உள்ளது போகாது, இல்லது வாராது” என்பது. இஃது அடிப்படையான வாய்பாடு. சித்தாந்த நெறியினர், “என்றும் உள் பொருள்களாக மூன்று உள” என்ற அடிப்படையில் ஆய்வைத் தொடங்குகின்றனர். அப்பொருள்கள் முறையே இறை, உயிர், தளை என்பன. இம்மூன்றும் படைக்கப் பட்டனவும் அல்ல; அழிவனவுமல்ல. இவை மூன்றும் என்றும் நிலையாக உள்ள பொருள்கள் என்பது சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கை, இந்த அடிப்படைக் கொள்கையின் மூலமாகவே சமய நெறி எதிர்ப்புக் கொள்கைகள் பல சரிந்து போகும். அவை எங்ஙனம் சரிகின்றன என்பதைப் பின்னால் விளக்குவோம்.
இம்மூன்றில் முதற் பொருள் இறை-கடவுள். சித்தாந்தச் செந்நெறி, கடவுளைச் “சிவம்” என்று பாராட்டும், சிவம் என்ற சொல்லின் அடிப்படையில் தோன்றிய “சைவம்” என்ற சொல் மணிமேகலை காலத்தில் தொடங்கி வழங்கி வருகிறது. அதன் பின்னெழுந்த இலக்கியங்களில் ‘சிவம்’ என்ற சொல் பெருவழக்காகப் பயிலப் பெற்றுள்ளது. சைவ சித்தாந்தத்தின் தத்துவத்தை உள்ளடக்கிய சொல் கடவுள் என்பது. கடவுள் என்ற சொல்லுக்குப் பொருள் “உலகத்தைக் கடந்தும், உள்ளி ருந்தும் இயக்குதல்-நடத்துதல்” என்பதாகும். கடத்தல் என்பது இடத்தைக் கடப்பது; காலத்தைக் கடப்பது; பொருளின் தன்மைகளைக் கடப்பது என்று பொருள் தரும்; கடவுள் எந்தப் பொருளின் எல்லையிலும், எந்த நாட்டின் எல்லையிலும் அடங்கியதல்ல. நாடுகளைக் கடந்து நாட்டின் எல்லைகளைக் கடந்தது கடவுள் என்பதனை:
தென்னா டுடைய சிவனே, போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி
(திருவாசகம் திருவெம்பாவை 164-165)
என்ற அருள் மொழியாலறிக.
அடுத்து, காலத்தைக் கடப்பதென்பதற்கு, காலம் தாழ்த்தல் என்பது பொருளன்று. அவர் தோன்றிய காலமும், மறையும் காலமும் இல்லை. அது மட்டுமன்று கால எல்லைகளுக்குபட்பட்டு நிற்றலுக்குரியவையாகிய பிறப்பு, மூப்பு, பிணி, மரணம் ஆகியவைகளும் அவர்க்கு இல்லை. இந்தக் குறிப்பினைக் காலனைக் காலால் கடிந்தான் அடியவர்க்காக!! என்ற வரலாற்றுக் குறிப்பால் உணர்க.
காலனைக் காலால் காய்ந்த கடவுள்
(அடங்கன்முறை 6580)
என்று அப்பரடிகள் போற்றுவார்.
மாணிக்கவாசகப் பெருமான், காலம் கடந்தவன் இறைவன் என்பதை இறைவனின் பழைமையை உணர்த்தும் பொழுதுகூட, கால எல்லையைச் சுட்டாமல்,
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே...
(திருவாசகம், திருவெம்பாவை. 163)
என்றும்,
மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யான்.....
(திருக்கோவை. 312)
என்றும் அருளிச் செய்தமை அறிக, மூன்றாவது, பொருள்களின் தன்மையைக் கடத்தல், அதாவது பொருள்களின் இயல்புகளில் அடங்காமல் அவற்றின் இயல்புகளையும் கடந்து நிற்றல். அதாவது வண்ணம், வடிவு அளவு, சுவை ஆகிய எல்லையினையும் கடந்து நிற்றல் என்பதாகும். இங்ஙனம் கடந்து நின்றாலும் அவ்வப்பொருளில் தன் நிலை கெடாமல் நின்றருளி இயக்குகின்றமையால் புறத்தேயும் உளன்; அகத்தேயும் உளன் என்ற வழக்குத் தோன்றியுள்ளது. இறைவன் பொருள்களைக் கடந்தே நின்றால் உலகுக்கும் உயிர்களுக்கும் பயனே இல்லாமற் போகும். பொருள்களின் எல்லைக்குள்ளும், தன்மைக்குள்ளும் உள்ளடங்கியே இருக்குமானாலும் புதுமையாகாது; சிறுமை தோன்றும், ஆக்கத்திற்கும் பயன்படாது. ஆதலால் எல்லாமாய் அல்லதுமாய் இறைவன் விளங்குகின்றான் என்று சித்தாந்தம் கூறுகின்றது. அதனாலன்றோ சித்தாந்தச் செந்நெறி இறைவனை எட்டுருவினன் என்று உணர்த்துகிறது. நிலம், நீர், தீ, வளி, வெளி, கதிரவன், திங்கள், ஆதன் இவற்றொடு எண் வகையாய்ப் புணர்ந்து நின்றான். இதனை மாணிக்கவாசகர்,
நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்
உலகேழ் எனத்திசை பத்துஎனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ
(திருவாசகம் திருத்தோணோக்கம். 5)
என்பார். சித்தாந்தச் செந்நெறி உணர்த்தும் கடவுள், சிவம். சிவம் என்பது வள்ளுவம் கூறிய கடவுள் வாழ்த்தில் உள்ளபடி,
“தனக்குவமை” இல்லாதவன் “எண்குணத்தான்”.
எண்குணத்தான் என்பது,
தன்வயத்தனாதல், தூயஉடம்பினனாதல், இயற்கை
உணர்வினனாதல், முற்றும் உணர்தல்,
இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை,
முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை
எனும் எண் குணங்களுடையவன் என்பதாகும்.
கடவுள் உண்மையை விளக்கப் புகும் மெய்கண்டார், “அவன், அவள், அது” என்ற நூற்பாவில், முத்தொழிற்படுதலால் இறைவன் உண்டு என்பதும், எந்த ஒன்று தொழிற் பட்டாலும், தொழிற்படுத்தும் ஒருவரை அவாவி நிற்கும் என்பதும் நியதி என்பதைச் சுட்டுகிறார். இந்நூல் வழி, சித்தாந்த சைவம், கடவுளை நம்புகின்ற சமய வரிசையில் நிற்கிறது.
அடுத்து சித்தாந்த சமயம் கடவுளுக்குச் சொல்லும் சிறப்பு அவன் பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை என்பது. சித்தாந்திகள் கடவுளின் அவதாரங்களுக்குக் கூட உடன் படுவதில்லை. இதனைத் திருவாசகம்,
தாயுமிலி தந்தையிலி தான் தனியன்
(திருச்சாழல்-3:2)
என்று பாராட்டும். சித்தாந்திகள் கொள்கைப்படி உலகிற்குத் தலைவன் கடவுள். ஆனால் செயற்கையாலன்று. இயற்கையின் வழி, நிறை நலம் நோக்க அவாவுதலின் காரணமாகச் சித்தாந்தச் செந்நெறியில் உயிர்களுக்குத் தலைவன் கடவுள். அவன் ஆண்டானும் கூட அங்ஙனம் அவன் தலைவனும் ஆண்டவனும் ஆதல் கூட உயிர்கள் விரும்பி ஆட்படுவதற்காகவே தவிர, நிர்ப்பந்தமாக அடிமை கொள்வதற்காக அல்ல. இதனை மாணிக்கவாசகர்,
ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே
(திருச்சதகம். 82)
என்பார். சித்தாந்தச் செந்நெறிகளின்படி கடவுள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படுவோன் அல்லன். ஆதலால் விருப்பு வெறுப்புகள் மிகுதியும் உடைய உலகியல் நிகழ்வுகள், உயிர்களின் நிகழ்வே தவிர கடவுளின் நிகழ்வுகள் அல்ல. அந்நிகழ்வுகள் அவனுக்குத் தெரியாதனவுமல்ல. சித்தாந்தச் செந்நெறியின் கடவுளாகிய சிவம் அறிவுருத்தன்மையது. சிவமாகிய அறிவுருவுக்குத் தொழிற்பாடு இல்லை. சிவம் தம்மையொத்த தமது எல்லைக்குள் அடங்கிய சக்தியின் மூலம் உலகைத் தொழிற்படுத்துகிறது. சிவம் அறிவுருச் சக்தி இயக்கம். இத்தத்துவத்தின் படிமுறை வளர்ச்சியில் தோன்றி யதே அம்மையப்பன் வழிபாடு. இதனைத் திருக்களிற்றுப் படியார்,
அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பார்-அம்மையப்பர்
எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்
(திருக்களிற்றுப்படியார் 1)
என்று கூறுவது அறிக. சிவம் சக்தியை, பண்பு-பண்பியாகச் சிலர் விளக்கம் கூறிக் குழப்புவர். அஃது உண்மையன்று. சிவமும் சக்தியும் இரு வேறு பொருள். ஆனால், சக்தி சிவத்தின் குறிப்பின் வழி இயங்கும் தன்மையது. அம்மையப்பர் இரு வேறு நிலையினர் என்பதை உணர்த்தத்தான் போலும், திருவாசகம்,
குவளைக் கண்ணிக் கூறன் காண்க
அவளும் தானும் உடனே காண்க
(திருவண்டப்பகுதி 64,65)
என்றும், திருஞானசம்பந்தர்,
பெண்ணின் நல்லா ளொடும் பெருந்தகை இருந்ததே!
(அடங்கன்முறை 3052)
என்றும் உணர்த்துவது அறிக. ஆனால், அம்மையும் அப்பனும் ஒருங்கிணைந்து உலகியல் தன்மை நோக்கி நிற்றலால் இருவராகக் கூறாமல், ஒருவராகவே போற்றும் தமிழ் மரபு தோன்றியது. இதனைக் குமரகுருபரர்,
ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருஒன் றால்அவ்
உருவையிஃது ஒருத்தன் என்கோ? ஒருத்தி என்கோ?
இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றுஓர்
இயற்சொல்இல தெனின்யான்மற் றென்சொல் கேனே
(சிதம்பரச் செய்யுட்கோவை-54)
என்கிறார்.
சித்தாந்தச் செந்நெறியில் இரண்டாவதாக வைத்தெண்ணப்படும் பொருள் உயிர் உயிரைப் பற்றிச் சித்தாந்தச் செந்நெறி கொண்டிருக்கும் கொள்கை, உலகியல் அமைப்பில் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்குத் துணையாக அமைகிறது. சித்தாந்தத்தின் அடிப்படையில் உயிர், என்றும் உள்பொருள். உயிர் யாராலும் படைக்கப்பட்டதன்று. உயிர்க்குத் தோற்றமும் இல்லை; அழிவும் இல்லை என்பன சைவ சித்தாந்தம் கொண்டுள்ள முடிவுகள். சித்தாந்தம் உயிரைப் பற்றிக் கொண்டுள்ள இம்முடிவினால் உயிர்களிடை நிலவும் குறை நிறைகளுக்கும், இன்ப துன்பங்களுக்கும், உயர்வு தாழ்வுகளுக்கும் கடவுள் பொறுப்பல்ல என்ற தெளிவு பிறக்கிறது. இத்தெளிவு மார்க்சியத்திற்கும் சித்தாந்தத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கிறது. மார்க்சியம் அல்லது மார்க்சியத்திற்கு முதல் நிலையிலிருந்த உலகாயதம், உயிரை உள்பொருளாக ஒத்துக்கொள்வதில்லை. “வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மூன்றையும் கலந்தால் ஒரு சிவப்பு தோன்றுவதைப் போல ஐம்பூதங்களின் கூட்டால் உடல் உற்பத்தியாகும் போது ஒரு சக்தி தோன்றுகிறது; உடலை இயக்கி உடல் அழியும் போது அச்சக்தியும் அழிந்து விடுகிறது” என்பது கருத்து.
இந்த உண்மையைக் கொஞ்சம் சிந்தித்தாலேகூடத் தவறு என உணர முடியும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் சடப்பொருள்கள். இவை எப்படிச் சேரும்? சேர்ப்பார் வேண்டாமா? அடுத்து வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு சேர்ந்தால் ஒரே மாதிரியான சிவப்பு தோன்றுவதில்லை. தரத்தில், அளவில் கூடுதல் குறைவான சிவப்பு தோன்றுதல் உண்டு. இந்தச் சேர்க்கை அளவாக இருக்கும் பொழுது இன்பமும், அளவு மிகும் பொழுது வாய் வெந்து புண்ணாவதும் உண்டு. ஆதலால், இந்த உவமை உயிரின்மையை மறுப்பதற்குப் பொருந்தாது! அடுத்து உயிரை மறுப்பவர்கள் புத்தர்கள். அவர்களுக்கு எல்லாமே சூன்ய மயம். சூன்யத்திலிருந்து எப்படி ஒன்று தோன்ற முடியும்; இயங்க முடியும். அடுத்து உயிரைப் பற்றிய கொள்கையில் இரண்டாம் கட்டத்தில் நிற்பார்கள் வேதாந்திகள். வேதாந்திகளிலும் ஏகான்மவாதிகள் குறிப்பிடத்தக்கவர்கள். உலகியல் வழக்கில் இவர்கள் “சுமார்த்தர்” என்று அழைக்கப்படுவர். இன்றைய ஜகத் இவ்வகையைச் சேர்ந்ததே! இவர்கள் ஆன்மாவை மறுப்பதில்லை. ஆன்மா ஒன்றே என்பர். சித்தாந்திகளின் கொள்கை ஆன்மா ஒன்றல்ல; பலப்பல; எண்ணில என்பது.
வேதாந்திகள், “ஒரோயொரு ஆன்மா உண்டு. அது பரமான்மா. அந்தப் பரமான்மாவே பல சீவான்மாக்களாக விரிவடைகிறது” என்பர். இவையெல்லாவற்றையும் மறுத்துச் சித்தாந்தச் செந்நெறி உயிரைப் பற்றிக் கொண்டுள்ள முடிவு அறிவுக் கிசைந்ததாக உள்ளது. சித்தாந்தச் செந்நெறிப்படி ஆன்மா என்றும் உள்ள பொருள். ஆன்மா ஒன்றல்ல. பலப் பல; ஆன்மாக்களின் தோற்றம் ஒன்றிலிருந்து ஒன்றல்ல. ஒரு ஆன்மா இன்னொரு ஆன்மாவில் தோற்றமளிக்காது. எல்லோருடலிலுமுள்ள ஒவ்வொரு ஆன்மாவும் உண்மையானது. இதனை,
எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தின் அழுந்தி
இருவினையின் தன்மைகளுக் கீடான யாக்கை
அண்ணலரு ளால்நண்ணி அவைஅவரா யதனால்
அலகில்நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால்
புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்ப்
புணரும்இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளால்
உள்நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம்
உற்றிடும்நற் பசுவருக்கம் எனஉரைப்பர் உணர்ந்தோர்.
(சிவப்பிரகாசம். 19)
என்ற சிவப்பிரகாசத் திருப்பாடலில் அறிக.
உயிர் அறிவுப்பொருள்; ஆயினும் உயிர்க்கு இயல்பாய் அமைந்த ஆணவ அழுக்கின் காரணமாக அறிவு விளக்க முறாது அறியாமையில் கட்டுண்டு கிடக்கிறது. உயிர் உண்டு என்று உடன்படுபவர்கூட, உயிரின் இலக்கணத்தை நிர்ணயிப்பதில் மாறுபடுகின்றார். சிலர், “உடலே உயிர்” என்கின்றனர். சிலர் “மனமே உயிர்” என்கின்றனர். “உயிர் ஆண்டவனால் படைக்கப்பட்டது” என்றும் சிலர் கூறுவர். சிவஞான போதம் இதனை, இரண்டு வார்த்தைகளில் மறுத்து விடை சொல்கிறது. ஒன்றை இல்லையென்று மறுக்க வேண்டியே அவசியமே உண்மையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது என்பது மெய்கண்டார் கருத்து.
“இலதென்றலின் உளது” (நூற்பா 3) என்பது சிவஞான போத மறுப்புரை. ஆன்மா இல்லையென முடிவு பண்ணும் அறிவு எதுவோ, அதுவே ஆன்மா என்று, சூன்யவாதிகள் கூற்றை நகைப்புக்கிடமாக்கி மறுக்கிறார் மெய்கண்டார். இது ஃபிரெஞ்சு தேசத்துத் தத்துவ ஞானி “டெகார்டே” ஆராய்ந்த முறையோடு ஒத்திருக்கிறது. டெகார்டேக்கு ஒரு நாள் ஒரு சந்தேகம் பிறந்தது. தானும், தான் காணும் பொருள்களும் பொய்யாய் இருக்கலாமோ என்பதுதான் அந்தச் சந்தேகம். அவன் அறிஞன் ஆனதால் சந்தேகத்தையே முடிவுகளாக்கிக் கொள்ளவில்லை. சந்தேகம் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியது. அவனுடைய நீண்ட ஆராய்ச்சியின் பயனாக,
“யாவுமே பொய்யான போதும் அவையாவும்
பொய்யெனச் சந்தேகிப்பவன் உண்மையாய்
இருத்தல் வேண்டும்”
என்றான். உடலே உயிர் என்ற கொள்கையையும் எளிதில் சொல்வழக்கில் கொண்டே சித்தாந்த சாத்திரம் மறுக்கும்.
“எனதுடல் என்றவின்”.
(நூற்பா 3)
என்பது சிவஞானபோதம், ‘எனது உடல்' என்பது வழக்கு. ஆன்மாக்கள், ஆண்டவனால் படைக்கப்பட்டன என்ற கொள்கை மிகவும் ஆபத்தானது. படைக்கப்பட்டன என்றால் அவற்றுக்கு நிலையான தன்மையில்லை; அவை அழியும் என்றாகும். அதுபோலவே படைக்கப்பட்டன என்றால் படைக்கப்பட்டன வற்றிற்கென்று தனியே அறிவும் குணமும் செயலும் இருத்தற்கில்லை.
படைப்பாளியின் அறிவும் குணங்களுமே படைக்கப் பட்டனவற்றின் அறிவும், குணமுமாக இருக்கும். ஆன்மா இறைவனால் படைக்கப்ப்டடது என்றால் ஏன் படைத்தான்? என்ற வினாவும் எழும். அடுத்து, ஆன்மாக்கள் பெறும் உடல்களில் உள்ள குறை நிறைகள். அறிவில் பெறும் தராதரங்கள் இவைகளை நோக்க ஏன் இப்படி வேறுபாடுகளோடு படைக்கிறான்? என்ற வினாவும், பின்னணியாக இறைவன், வெறுப்பு-விருப்புகளுடையான் என்ற முடிவுகளும் தோன்றும். இத்தகைய முடிவு சமய நெறியின் அடித்தளத்தையே அசைத்து விடும். இந்த இடர்ப்பாட்டைக் கருதித்தான் சித்தாந்தச் சமயம், ஆன்மாக்கள் படைக்கப்பட்டன அல்ல என்ற தெளிவான முடிவை எடுத்து உள்ளது. ஆன்மாக்களிடையில் ஏற்பட்டுள்ள குறை நிறைகளுக்கு அவ்வான்மாக்களை இயல்பாகவே பற்றி நிற்கும் ஆணவமும், அவ்வழி செயற்பட்ட ஆன்மாவின் செயல்களுமே காரணம். ஆன்மா என்பது முன்னர்க் கூறியது போல என்றும் உள்ளது; எங்கும் பரவியது. அறிவுடையது. இந்த ஆன்மாவை இயல்பாகவே ஆணவம் என்னும் அழுக்குப் பற்றி நிற்கிறது. இதற்கு மெய்கண்ட சாத்திரம் காட்டும் உவமை “செம்பிற் களிம்பு போல, நெல்லிற்கு உமி போல” என்பனவாகும். இதனை,
அல்லல்மிக உயிர்க்கிவைதான் அணைத்த தீசன்
அருவினைகள் அருந்துதற்கோ வினையோ அன்றிச்
சொல்லிவரு மாயையோ அணுவை முந்தச்
சூழ்ந்ததெனும் உரைமுதலோர் தொடக்கி லார்பால்
ஒல்லைவரு மெனின் உளதாம் உயிருண்டாவே
உளதுமலம் மலமுளதாய் ஒழிந்த வெல்லாம்
நெல்லின்முளை தவிடுமிபோல் அநாதியாக
நிறுத்திடுவர் இதுசைவம் நிகழ்த்து மாறே
(சிவப்பிரகாசம் 25)
என்று சிவப்பிரகாசம் கூறுகின்றது. ஆணவம், மாயை, கன்மம் ஆகியவற்றில் முளையைப் போன்றது எது? தவிட்டைப் போன்றது எது? உமியைப் போன்றது எது? என அறிந்தால் மேலும் விளக்கமுறும் முளையைப் போன்றது கன்மம்; தவிட்டைப் போன்றது மாயை, உமியைப் போன்றது ஆணவம், அரிசிதான் ஆன்மாவுக்கு உவமையாகிறது. நெல்லில் உள்ள முளைத்தல் சக்தி முளையைத் தோற்றுவித்தல்போல கன்ம மலம் உயிரினிடத்துச் சுக, துக்கங்களை முதற்காரணமாய் நின்று தோற்றுவிக்கும். தவிடு, முளைத்தற்கு அனுகூலம் செய்து துணை நிற்றல் போல மாயாமலம் சுகதுக்கம் தோன்றுதற்குத் துணைக் காரணமாய் அமைந்து, தன் காரியமாகிய கருவிகளையும் துய்ப்பனவுமாகிய பொருள்களையும் தோற்றுவித்து உயிரையும் அசைத்து நிற்கும். உமி, அம்முளை தோன்றுதற்கு நிமித்த காரணமாக இருத்தல் போல ஆணவ மலம் அச் சுக, துக்கத் தோற்றத்திற்கு நிமித்த காரணமாய் நின்று அவற்றை முறுகுவித்து உயிர் நுகருமாறு நிலை பெறுத்தும். ஆன்மாவின் சுக துக்கங்களுக்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் முதல், துணை, நிமித்தங்களாக அமைந்தன.
ஆணவம், மாயை இவற்றுக்கு விளக்கம் கிடைத்தது. கன்மம் என்றால் என்ன? கன்மம் என்ற சொல்லும் கர்மம் என்ற சொல்லும் ஒரு பொருட்சொற்கள். அதாவது வினை அல்லது செயல் என்பது பொருள். தத்துவ ஞான உலகம் செயலைப் பற்றிய துண்பொருள்களை விளக்குகிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் உண்டு; பலனும் உண்டு. அப்பலனை அனுபவித்தலும் ஒரு செயலாகும். செயல் மட்டுமின்றி செயல் செய்தற்கு முதல் நிலையாக இருக்கிற எண்ணம், செயலோடு தொடர்புடையதாக இருக்கிற சொல் ஆகியவையும் கன்மத்துள் அடங்கும். செய்யப் பெறும் செயல்களுக்குப் பலன் உண்டு. அச் செயல்களைச் செய்தவர்களையே அப்பலன்கள் சாரும். அச்செயல்களைச் செய்தாருக்கு அவ்வனுபவங்கள் உரிமையுடையன. அவை இன்பமாயினும், துன்பமாயினும், அவர்கள் அவற்றை அனுபவித்தே தீர வேண்டும். இதனைத் தருமைக் குரு ஞானசம்பந்தர்,
ஊட்டும் வினையிருந்தால் உன்னாணை உன்பதத்தைப்
பூட்டிப் பிடித்துப் புசிப்பிக்கும்-கேட்டுத்
திரியாதே வந்துதில்லைத் தெய்வமே என்றென்(று)
எரியாதே; நெஞ்சே இரு
என்றருளினார். இப்பயன்களில் சில, உடனே துய்ப்புக்கு வரும்; சில காலங்கடந்து வரும். ஏன்? காலங் கடந்து வருவானேன்? என்று சிலர் கேட்பர். உயிர்களின் துய்ப்பின் தகுதியைப் பொறுத்துக் கால நியதியின்கண் முறைப்படுத்தப் பெறுவதால் முன் பின்னாக வருகிறது! இப்பிறப்பில் தீமையே செய்வார் இன்புறுதலும், நன்மையே செய்வார் துன்புறுதலும் உடன் நிகழ்வுகளின் விளைவுகளன்று; இதனைப் பட்டினத்தார்,
என்செய லாவதி யாதொன்று மில்லை இனித்தெய்வமே
உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த ஊனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்று மில்லை பிறப்பதற்கு
முன்செய்த தீவினை யோவிங்ங னேவந்து மூண்டதுவே.
(திருப்பாடற்றிரட்டு - 22)
என்று குறிப்பிடுவார்.
வினை வழிப்பட்ட இன்ப துன்பங்களைத் துய்ப்பதற்காகவே உயிர்களுக்குக் கறங்கு போலப் பிறப்பும் இறப்பும் சுழன்று வருகின்றன. இங்ஙனம் கன்மம் காரணமாகப் பிறப்பும், பிறப்பின் காரணமாகக் கன்மமும் மாறி மாறி சங்கிலித் தொடர் போல வரும். அப்படியானால் உயிர்களின் முதற் பிறப்பும் கன்மத்தின்பாற் பட்டதுதானா? இல்லை, முதற் பிறப்பு அருட்கொடை. ஆனால், அப்பிறப்பில் உயிர் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகியதால் அவ்விருப்பு வெறுப்பு, கன்மமாகி மறுபடியும் பிறப்பு ஏற்படுகிறது. உயிரின் இயற்கை துய்த்தல், செயற்படுதலும், துய்த்தலும் கன்மமாகி விடுவதில்லை. செயலைச் செய்யும்பொழுது, எண்ணத்தில் ஏற்படும் விகாரமும், துய்க்கும் பொழுது ஏற்படும் விகார உணர்ச்சிகளும்தான் கன்மமாகின்றன.
எச்செயலைச் செய்யும் பொழுதும் திருவருள் சிந்தனையோடு செய்தல் மூலம், துய்க்கும் பொழுது ஆசையும் விகாரமுமின்றிக் கடப்பாடு என்று கருதித் துய்த்தால் கன்மம் சேராது; என்றும் வாழ்க்கைக் கணக்கு நேராக இருக்கும். சுந்தரர் வாழ்க்கை இத்தகையது. செய்யப் பெறும் கன்மங்களை-வினைகளைச் சித்தாந்தம் மூவகைப்படுத்தும்.
பழவினை (சஞ்சிதம்), நிகழ்வினை அல்லது துய்ப்பு வினை (பிராப்தம்), எதிர்வினை அல்லது வருவினை (ஆகாமியம்) என்பன அவை. பழவினை என்பது உயிர்களால் துய்க்கப் பெறாமல் எஞ்சி நிற்கும் வினை. துய்ப்புவினை அல்லது ஊழ்வினை என்பது இப்பிறப்பில் துய்ப்பதற்குரியது. இப்பிறப்பில் வினைகளைத் துய்க்கும் பொழுது விருப்பு வெறுப்புகளால் அலைக்கப்பட்டுத் தோன்றுவது எதிர்வினை (ஆகாமியம்).
வினையின் பயனை அனுபவித்தலும் முயற்சியும் முரண்பாடுடையனவல்ல. திருவருள் சிந்தனையோடு கூடிய முயற்சியின் முன்னால் வினைவலி நிற்காது. வினை வலிது என்று நினைந்து வாளாத் துன்புறுதல் நியதியன்று. அங்ஙனம் துன்புறும் பொழுது, மீண்டும் உயிர் வினைகளுக்கு ஆளாகும். ஆதலால், வினைவலியறிந்து, திருவருள் துணைகொண்டு அயர்விலா முயற்சிகளில் ஈடபட்டுப் பணிகளைப் பாங்குடன் செய்து, பயன்களைப் பற்றின்றி இறைவனையே அடைக்கலமாகக் கருதி வாழ்தல் வினை நீக்கத்திற்கு உரிய எளிய வழி.
தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணிசெய்து கிடப்பதே
(அடங்கன்முறை - 5420)
என்பதை அறிக.
இந்த ஆணவ மலத்தால் ஆன்மா கட்டுண்டு கிடப்பதனாலேயே பசு என்று பெயர் பெற்றது என்பர். ஆணவம், ஆன்மாவின் விரிவை, அறிவைக் கெடுத்து அறியாமையில் ஆழ்த்தும். இங்கு அறியாமை என்பது யாதொன்றையும் அறியாமலிருப்பதன்று. யாதொன்றையும் அறியாதிருத்தல் உயிரின் இயல்பன்று. ஒன்றைப் பிறிதொன்றாகப் பிறழ உணர்தலையே “அறியாமை” என்று சித்தாந்த சாத்திரம் உணர்த்துகிறது. ஒன்றைப் பிறிதொன்றாகப் பிறழ உணர்வதற்குக் காரணம், ஆணவத்தின் தொழிற்பாடே! ஆன்மா, என்றும் உளதாயினும், நிலையானதாயினும் அதனியல்பு ஏதாவதொன்றைச் சார்ந்து நிற்பது. ஆன்மா சார்ந்திருக்கக் கூடிய சார்புகள் இரண்டு. முதல் சார்பு இயல்பாயமைந்த ஆணவச் சார்பு. இரண்டாவது சார்பு, ஆன்மா மாயை வழி கிடைத்த கருவிகளைத் துணையாகக் கொண்டு ஆணவத்தின் இயல்பறிந்து அதன்வழிச் செல்லாமல் சிவசக்தியின் வழிச் சென்று இன்ப துன்ப உணர்வுகளைக் கடந்து சிவமாம் தன்மையைச் சார்தல். இதுவே உயிரின் இலட்சியம்-அதன் வாழ்க்கைப் பயணம். இந்தப் பயணம் இனிதே நிறை வேறினால் ஆன்மா இன்ப அன்பில் நிலைத்து நிற்கும்.
................. மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்து
ஏயும்அதே நிட்டையென் றான்எழிற் கச்சி ஏகம்பனே
(பட்டினத்தார். திருஏகம்பமாலை - 10)
என்பதை ஓர்க.
திருவள்ளுவர். இந்தச் சிறந்த சித்தாந்தக் கருத்தை இரண்டு குறள்கள் மூலம் விளக்குகிறார்.
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
(குறள்.359)
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு
(குறள். 452)
என்ற திருக்குறள்கள் ஒப்பு நோக்கத்தக்கன. ஆன்மா, இந்த இலட்சியப் பயணத்தில் அடையும் அவத்தை நிலைகள் மூன்று. மூன்று அவத்தைகளில் முதலாவது அவத்தை ஆணவ மலத்தோடு ஆன்மா கலந்திருத்தல், ஆணவத்தை இருள் என்றும், சிலர் உருவகம் செய்வர். வள்ளுவம் இருள் சேர் இருவினை என்று கூறும் ஆணவம் இருளோடு ஒத்திருப்பினும், இருளைவிட ஆணவம் கொடியது.
இருள் தன்னிடத்திலுள்ள பொருளை மறைக்கும்; தன்னை மறைக்காது. ஆனால் ஆணவம் தன் செயலையும் மறைக்கும்; தன்னையும் மறைத்துக் கொள்ளும். இருளில் கிடக்கும் ஒரு பொருள் நம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும். ஆனால் அப்பொருளை மறைத்திருக்கும் இருள் நமக்குத் தெரியவே செய்கிறது. ஆதலால் இருள் தன்னை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டும் ஆணவம் தன்னைக் காட்டாமலே மறைத்து நின்றும் தொழிற்படுகின்றன. அதனாலேயே நம்மில் பலர் ஆணவம் இன்னதெனத் தெரிந்து கொள்ளாமலே ஆணவ மயமாகி நிற்கின்றோம். ஆணவமே நமது குறைக்கு, அறியாமைக்குக் காரணம் என்று நாம் உணர்வதில்லை. ஆணவ மயக்கில் கிடக்கும் உயிர், விருப்பார்வங்களைக் கொள்வதில்லை, செயற்படுவதும் இல்லை. ஆன்மா தன் நிலையை இழந்து ஒடுங்கிக் கிடக்கும். இந்நிலை வரையில் ஆன்மா படும் அவத்தை கேவல அவத்தையாகும்.
ஆணவக் கூட்டின் பயனாக முடங்கிக் கிடந்த ஆன்மாவைக் கண்டு இரக்கப்பட்ட சிவம், ஆன்மாவை மூலையிலிருந்து முற்ற வெளிக்குக் கொண்டுவரத் திருவுள்ளம் பற்றியதாலேயே ஐந்தொழில் நிகழ்கிறது. சிவம், சக்தியின் மூலம் மாயையை இயக்கித் தொழிற்படுத்தி உயிர்கள் உடம்பையும், உலகையும் பெற உதவி செய்கின்றது. இஃது ஆன்மாவின் இரண்டாவது அவத்தை இந்த நிலையில் ஆன்மா மேலும் இரண்டு மலங்களோடு கூட்டுச் சேர்கிறது. அவ் இரண்டு மலங்களாவன: கன்மம், மாயை என்பன.
ஆன்மா உறையும் உடல், உலகம் ஆகியவற்றின் தோற்றத்திற்கும் ஒழுக்கத்திற்கும் மூலகாரணம் மாயை. ஆன்மா உடலோடு சேர்ந்த பின்தான் ஆன்மாவின் அறிவு, இயக்கம் பெறுகிறது. அறிவு இயக்கத்திற்குத் துணை செய்யும் மாயையை ஏன் மலம் என்று கூற வேண்டும்? மாயையிலிருந்துதான் உடலையும், உடற் கருவிகளாகிய அறி கருவிகளையும், செயற் கருவிகளையும் புலன்களையும் உயிர் பெறுகிறது; அவைகளின் மூலம் அறிவைப் பெறுகிறது. ஆனாலும் அந்த அறிவு, நிறை நலம் சான்றதன்று. ஆனாலும் அறிவு, இயக்கத்திற்குத் துணையாக இருப்பதால் அதை, (மாயையை) விளக்கு என்று உபசரித்தலும் சைவ சித்தாந்தத்தில் உண்டு. மாயை யென்பது ஒரு நுண்பொருள்; சடப் பொருள். மாயையைச் சிவசக்தி இயக்குவதால் உலகம் தோன்றுகிறது. கண் முதலியன ஞானேந்திரியங்கள்-அறிவுக் கருவிகளும் மனம், புத்தி முதலிய அகக் கருவிகளும், மாயையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆயினும் மாயை ஒன்றே. அது நிலையானது; வடிவமற்றது. உலகம் தோன்றும் வித்தும் மாயையே. அந்த மாயை அறிவற்றது; இயங்காப் பொருள்; எங்கும் பரந்திருப்பது, இறைவனுடைய தொழிலுக்குத் துணை நிற்பது. ஆயினும் உயிர்களை மயக்கவும் செய்யும்; இது மாயையின் இலக்கணம். சிலர் கூறுவது போல் மாயை இல் பொருளோ, பொய்த் தோற்றமோ அல்ல. மாயையின் இலக்கணத்தை,
நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர்
வித்துமாய் அசித்தா யெங்கும் வியாபியாய் விமல னுக்கோர்
சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமும் உயிர்க்காய்
வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யுமன்றே
(சித்தியார் - 143)
என்று சிவஞான சித்தியார் விளக்கும்.
மாயை பொய்மையாக இருக்குமானால் உலகம் தோன்றாது; ஆதலால் மாயையின் இருப்பு உணரப்படுகிறது இவ்வுலகத் தோற்றத்திற்கு மாயை முதற்காரணம்; இறைவன் நிமித்த காரணம்; அதனுடைய சக்தி துணைக்காரணம். சடப்பொருளாகிய மாயையை இறைவன் தனது அருட் சக்தியால் இயக்கக் கருவிகள், துய்ப்புப் பொருள்கள், தூய்மை வாயில்கள், தத்துவங்கள், அறிவு வாயில்கள் அனைத்தும் தோன்றி, அனைத்தையும் ஆன்மா அடைந்து வாழ்ந்து, வளர்ந்து எல்லையிலா இன்பநிலையை எய்துகிறது.
இம் மலங்களின் கூட்டு, ஆன்மாவின் துய்மைக்குத் துணை செய்வனவாகும். “அழுக்கு உடையை வெளுக்க உவர் மண்ணைச் சேர்க்கும் கூட்டைப் போன்றது இது” என்று சித்தாந்தம் கூறும். இந்நிலையைச் சகலாவத்தை என்று சாத்திரம் கூறும். இச் சகலாவத்தை நிலையே மானிட நிலை. உயிர்கள் சகலாவத்தையிலிருந்து கேவலாவத்தைக்கும் கூட மாறிச் செல்வதுமுண்டு. இங்ஙனம் மாறுவதெல்லாம் உயிர் இளைப்பாறுதல் பொருட்டேயாம். கேவலாவத்தையில் ஆன்மாவுக்கு அறிவு கிடையாது. சகலாவத்தையில் தனு, கரணங்களின் துணையினால் ஆன்மா, சிறிது அறிவு விளக்கம் பெறும். ஆனாலும் ஆன்மாவின் அறிவு நிறைதல் அறிவன்று. சகலாவத்தையில் ஆன்மாவின் அறிவு, நிலையற்ற பொருள்களை மட்டுமே அறிய முடியும். ஆதலால் இஃது அறிவன்று. இஃதொரு மயக்கநிலை! நிலையற்றனவற்றை நிலையாயின போலவும், துன்பங்களை இன்பம் போலவும், கருதி மயங்கி நிற்கும் நிலை. முன்னைய கேவலாவத்தை இருள்நிலை; இரண்டாவதாகிய சகலாவத்தை மருள்நிலை. அதாவது மயக்க நிலை. அறியாமையையும், அரைகுறை அறிவையும் நீங்கி, ஆன்மா நிறைநல அறிவைப் பெற வேண்டும். அந்நிலையை அடைய இறைவன் அருள் வேண்டும். இறைவன் அருள் பெறும் நிலையே அருள்நிலை. அல்லது சுத்தாவத்தை நிலை! ஆன்மாக்கள் இந்த மூன்று அவத்தை நிலைகளையும் அடையும் நடைமுறைக்கும் இறைவனின் ஐந்தொழில்களுக்கும், தொடர்பு உண்டு. இறைவனது அழித்தல் தொழிலால் ஆன்மா கேவலாவத்தை நிலையை அடைகின்றது. படைத்தல், காத்தல், மறைத்தல் ஆகிய முத்தொழில்களின் வழி, ஆன்மா சகலாவத்தைக்கு ஆளாகின்றது. ஐந்தாவது தொழிலாகிய அருளல் சுத்தாவத்தை நிலையை அடைவதற்குத் துணையாய் அமைகிறது. இங்குப் படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல் என்ற சொல்வழக்குகள் உணர்த்தும் பொருள் வேறு. இங்குப் படைத்தல் என்பது உயிர்களை, கன்மங்களைப் படைப்பதன்று. ஆன்மாக்கள் கருவி கரணங்கள் பெறத் துணைசெய்தலே படைத்தல். அங்ஙனமே காத்தல் என்பது அக்கருவி கரணங்களோடு ஆன்மா இசைந்து நின்று துய்க்குமாறு செய்தலேயாம். மறைத்தல் என்பது ஆன்மாவைப் பற்றி நிற்கும், கன்மத்தின் இயல்பினை மறைத்தல் என்பதேயாம். அழித்தல் என்பது ஆன்மாவிற்கு ஆணவக் கூட்டால் ஏற்பட்ட தீமையை அழித்தலேயாம். அருளல் என்பது ஆன்மாவின் ஆணவ ஆற்றலை ஒடுக்கி, அதனைச் சேட்டைகளினின்றும் விடுவிடுத்து, சிவத்தின் திருவருளில் தங்கச் செய்து, இன்ப அன்பினை ஆர்ந்து அனுபவிக்கச் செய்தலேயாகும். ஆன்மா, ஆணவத்தின் துன்பத் தொடக்கிலிருந்து விடுபட்டு இன்ப அன்பினை அடைய, சிவமே துணை நிற்கிறது. இந்தச் சிவத்தினைச் சாரும் வாழ்க்கை முறையே சைவ வாழ்க்கை.
இறைவனை, ஆன்மா அடைய, நான்கு நெறிகளைச் சைவம் காட்டுகிறது. அவை சரியை, கிரியை, ஞானம், யோகம் என்பன. இந்நான்கு நெறிகளின் வழி ஆன்மாக்கள் பத்திமையும், தொண்டும் மேற்கொண்டு வாழ்வதால் ஆன்மா உய்தி பெறுகிறது. இறைநெறியில் நின்று ஒழுகுதலால் செயல்களும் நிகழும்; செயல்களின் பயனும் உயிர்க்கு வாரா. இறை நெறி நின்று வாழ்பவர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாக மாட்டார்கள். இன்ப துன்ப உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். இதனால் ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் உயர் நிலையை ஆன்மா அடையும். இந்நிலையை ஆன்மா எய்துதலே இருள் நீங்கப் போகிறது. அழுக்கு அகலப் போகிறது. அறிவும் ஒளியும் ஆன்மாவிடத்தில் பிரகாசிக்கப் போகிறது என்பதன் அடையாளமாகும். இந்நிலையை “மலபரிபாகம்” என்று சாத்திரம் கூறும். ஆணவ மலமேயானாலும் அதை முரட்டுத் தனமாக அகற்ற முடியாது.
உடையைச் சார்ந்தது அழுக்கேயானாலும் அதையும் நனைத்து மெல்ல ஊற வைத்துத்தான் அகற்ற வேண்டும். நெல்லைச் சார்ந்துள்ள உமியை, நெல்லினின்றும் பிரித்து அரிசியைக் காண, நனைத்தலும், அவித்தலும் ஆகிய தொழில்கள் நிகழ்ந்து அரிசிக்கு ஊறு ஏற்படாவண்ணம் உமியை நீக்குவோம்.
உடைக்கு ஊறு நேராவண்ணம் நனைத்தலும், ஊற வைத்தலும் அழுக்கை நீக்கும். அதுபோல இறையின் கருணை ஆன்மாவுக்குத் துய்ப்பனவும், உய்ப்பனவும் நல்கி ஆணவத்திலிருந்து ஆன்மாவை எடுத்தாள்கிறது. இந்நிலையில் சிவத்தின் அருளாக நின்று தொழிற்படும் அருட்சக்தி ஆன்மாவிடத்தில் பதிகிறது. திருவருட்சக்தி பதிதலால் ஆன்மா ஞானத்தினைப் பெற்று அச்சக்தியின் வாயிலாக இறைவனைக் கண்டு மகிழ்கிறது. இறைவனும் எளிதில் வெளிப்பட்டு எடுத்தாள்வான்.
ஆன்மாவின் இலட்சியமாக இருப்பது வீடுபேறு. ஆணவத்திலிருந்தும், அவ்வழிப்பட்ட இன்ப துன்பங்களிலிருந்தும் விடுதலை தருவது வீடு. முத்தி நிலையை விளக்குவதிலும் சமயங்கள் மாறுபடும்; முத்தி நிலையில் இறைவனோடு ஆன்மா கலந்து மறைந்து போகிறது என்பார் சிலர். இது ஆன்மாவுக்கு அழிவில்லை என்ற கருத்தோடு மாறுபடும். அதுமட்டுமன்று. ஆன்மாவுக்கு இயல்பிலே அமைந்த உண்மையாகிய துய்ப்பு நிலையும் போகிறது. அதனால் ஏற்புடையதன்று. சித்தாந்த முத்தி என்பது நுட்பமானது. முத்தி நிலையிலும் ஆன்மாவும் உண்டு; சிவமும் உண்டு. அவை இரு வேறு பொருள்தாம்! ஆனால் ஆன்மா தன் தன்மையை இழந்து சிவமாம் தன்மையைச் சார்ந்து ஒன்று போலத் தோற்றமளிக்கிறது. எண்ணிக்கையால் இரண்டு. அனுபவத்தால் இரண்டு; தன்மையால் ஒன்று. முத்தி நிலையில் ஆன்மா அனுபவிக்கும் இன்பத்தை; மாணிக்க வாசகர்,
ஆனந்த வெள்ளத் தழுந்தும்ஓர் ஆருயிர் ஈருருக்கொண்(டு)
ஆனந்த வெள்ளத் திடைத்திளைத் தால்ஒக்கும்; அம்பலம்சேர்
ஆனந்த வெள்ளத்து அறைகழ லோன்அருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற் றாதுஇவ் அணிநலமே.
(திருக்கோவையார் - 307)
என்பர்.
மேலும் சித்தாந்த முத்தியினை இனிதே விளக்க தாள்+தலை என்னும் சொற்களின் புணர்ச்சி எடுத்துக் காட்டாகச் சித்தாந்த நூல் கூறும் தாள், என்கிற நிலை மொழியும் தலை என்கிற வருமொழியும் முதல் தகரமும் சேர்ந்து டகரமாகத் திரிந்து தாடலை என்று ஆகின்றது. “தாடலை” என்கிற இதனை, புணர்ந்து நிற்கும் நிலையில் இரு சொற்கள் என்று கொள்ளவும் முடியாது. ஒரு சொல் என்று கொள்ளவும் முடியாது. ஒரு நோக்கில் ஒரு சொல், பிறிதொரு நோக்கில் இரண்டு சொல். ஆன்மா கள்ணொளியோடு கூடி நின்று காணும் காட்சி போல ஆன்மா இறைவனோடு கலந்து நின்று துய்த்து மகிழ்கிறது.
இத்தகைய சிறந்த தவநெறி வாழ்க்கையை உயிர்கள் அடைய சிவமே உயிர்கள் மாட்டுக் கருணை கொண்டு குருவாக எழுந்தருளித் தீக்கைகள் செய்வித்து ஞானத்தை உணர்த்துகின்றது. சைவ சமய சித்தாந்தச் செந்நெறியில் வழிபடு பொருள்கள் மூன்று. முதலாவது குரு இரண்டாவது இலிங்கம்; மூன்றாவது அடியார் திருக்கூட்டம். இம்மூன்று வழிபாடுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையன. ஆசிரியன் உணர்த்தினாலன்றி உயிர் தன்னை அறியாது.
ஆதலால்தான், ஞானாசிரியன் மாணாக்கனுக்குச் சிவத்தினைக் கண்டு காட்டி வழிப்படுத்துகிறான். வழிபாட்டில் அகப்பூசை, புறப்பூசை என இரண்டு பூசை. அகப்பூசையே உயர்ந்தது. அப்பூசையின் அனுபவத்தை இடையீடின்றி அனுபவிக்கவும் பாதுகாத்துக் கொள்ளவும் துணை செய்வது புறப்பூசை. நாள்தோறும் இறைவனின் அருட்சின்னமாகிய சிவலிங்கத்தை வழிபடுதல் கடமை. சீவன் முத்தர்களாகிய சிவனடியார்களைத் தொழுதல்; அவர்களோடு இணைந்திருத்தல் முதலியன, பெற்ற சிவ ஞானத்தைப் பேணவும், பெருக வளர்த்துத் துய்க்கவும் துணை செய்யும். இதனைச் சிவஞான போதம்,
செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா
அம்மலங் கழிஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயமும் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரனெனப் படுமே
(நூற்பா - 12)
என்றருளிச் செய்துள்ளமை அறிக. இதே கருத்தை,
நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுள தோ
திருவேகம்பமாலை - 5
என்று பட்டினத்தார் விளக்குவதையும் அறிக. தருமைக் குரு ஞானசம்பந்தர்,
ஆசையறாய், பாசம்விடாய்; ஆனசிவபூசை பண்ணாய்
நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய்-சீச்சி
சினமே தவிராய்; திருமுறைகள் ஓதாய்
மனமே உனக்கென்ன வாய்,
என்று அருளிச் செய்ததையும் அறிக.
இத்தகைய சிறந்த சித்தாந்தச் செந்நெறி நம்பிக்கைக் குரியது; நல்லெண்ணத்திற்குரியது; இம்மைக்கும் பயன் தருவது. மறுமைக்கும் பயன் தருவதாம்!
3. சைவ சித்தாந்தமும் சமுதாய
மேம்பாடும்
மானிட வாழ்க்கை விபத்துக்களால் வந்ததன்று. மானிட வாழ்க்கை திட்டமிடப் பெற்ற குறிக்கோளுடையது; உயர் நோக்கமுடையது. மானிட வாழ்க்கை உறுப்புக்களாலாய வாழ்க்கை மட்டுமன்று; உணர்வுகளாலாய வாழ்க்கையுமாகும்.
உணர்வுகள், ஒழுக்க நெறிகளாகி உறவுகளை வளர்த்து உறுதிப்படுத்த வேண்டும். உறவார்ந்த மானிட வாழ்க்கையில் நயத்தக்க நாகரிகம் இடம் பெறுதல் வேண்டும். பண்பாடு நிலைபெற்று நிலையிலா உலகத்திற்கு நிலையான தன்மை நல்க வேண்டும். மானிட வாழ்க்கை முழுமையடைவது சான்றாண்மையிலேயாம். சான்றாண்மையே வாழ்க்கையின் இலக்காகிய தூய இன்ப அன்பினில் திளைத்தலைத் தரும்.
இன்ப அன்பை அடைவதற்குரிய வாயிலே வாழ்க்கை. உடல், உயிர் உணர்வு ஆகிய அனைத்திற்கும் நற்பயன்கள் கிடைக்குமாறு செயல்கள் செய்து வாழ்வதே வாழ்க்கை இவற்றுள் ஒன்றிற்குப் பயன் கிடைத்து, ஒன்றிற்குப் பயன் கிடைக்காது போனாலும் வாழ்க்கை வாழ்க்கையன்று; குறையுடைய வாழ்க்கையால் பயன் இல்லை. உடலின் திறம் வளர்ந்து உணர்வுகள் சிறந்து உயிர் சிறப்புறு நலம் பெற வாழ்தலே வாழ்வாங்கு வாழ்தல்.
மனித குலத்தை வாழ்வாங்கு வாழும் நெறியில் வழி நடத்தவே சமயங்கள் தோன்றின; முயன்றன. இத்துறையில் சமய நெறிகள் வெற்றிகள் பெற்று வாழ்வித்த, வரலாறுகளும் உண்டு; தோல்விகளை அடைந்ததும் உண்டுச்மயநெறிகளின் தோல்வியால் மானிட சாதி அடைந்த துன்பங்கள் அளப்பில் பொதுவாக,
தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்
என்ற பாரதியின் வாக்கு, சமயநெறிக்கும் பொருந்தும்,
மானிட வாழ்க்கையை அணுகுவதில் உலகச் சமயங்களிடையில் மாறுபாடுகள் உண்டு. “உயிரினத்தைக் கடவுளே படைத்தான்” என்று கூறும் சமயங்கள் உள. உயிரினத்தைக் கடவுளே படைத்தான் என்ற இக்கொள்கை ஆபத்தானது; அறிவியல் அறிவுக்கு, ஈடுகொடுக்க இயலாதது. கடவுள், நிறைநலம் உடையவன், பரிபூரணன்.
இறைவனால் படைக்கப்பெற்ற உயிரினங்களில் குறை ஏன்? என்ற வினாவிற்கு விடை காண்பது கடினம். அடுத்து, உயிரினத்தைக் கடவுளே படைத்தான் என்றால் குறை நிறைகளுக்கு அவனே பொறுப்பு என்றாகும். இதனால் பொறுப்புணர்வற்ற, சமுதாயம் தோன்றும்; கொலைகளும், தீமைகளும்-குறும்புகளும் வளரும்.
சில சமயநெறிகள் வாழ்க்கையைத் துன்பச் சுமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்நெறிகள் வாழ்க்கையில் துய்த்து மகிழ்தல் கூடாது; கடுத்துறவு நெறி நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இயற்கை யோடிசையாத இந்நெறிகளால் மறைவு ஒழுக்கமும், பொய்ம்மையும்தான் மிகுதியாகத் தோன்றின.
வாழ்க்கையைச் சைவ சித்தாந்தம் அணுகும் முறை அறிவுக்கு இசைந்தது; நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரியது; நடைமுறைக்கு இசைந்தது. வாழ்க்கையை வாழ்த்தி வரவேற்பது சித்தாந்தச் செந்நெறி. சைவ சித்தாந்த வாழ்க்கை முறை இயற்கையோடிசைந்தது.
உயிரினத்தில் இயல்பு, தனித்து வாழ்வதன்று. கூடி வாழ்தலே இயற்கையிலமைந்த வாழ்க்கைமுறை. “Man is a Social Animal” என்பது வழக்கு. மானிடச் சாதி, அன்பில், உணர்வில் கூடிவாழும் கூட்டமைப்பே சமுதாயம். கூடும் அன்பினில் கூடாமல், வெறும் பயனற்ற கூட்டத் தொகுதிக்குச் சமுதாயம் என்று பெயர் பொருந்தாது.
தனி மனிதர்கள் மாமழையின் சிறு துளிகளைப் போல விளங்கித் துளிகள் பல சேர்ந்து பேராறாக விளங்குதல் போலச் சமுதாய அமைப்பு, பேராற்றலும் தண்ணளியும் உடையதாக அமைய வேண்டும். அலைகடலின் தண்ணீர்ப் பரப்பில் கோடானு கோடி தண்ணீர்த்துளிகள்! அத்துளிகளின் கூட்டமைப்பால் கடல்நீர்ப் பெருக்கம்.
ஆனால் அக்கடல் நீர்ப் பெருக்கத்திலிருந்து ஒரு துளி பிரிந்து கரையில் விழுந்தால், அது அடுத்த வினாடியே வற்றி மறைந்து போகிறது. மானிடச் சமுதாயம் கடல் நீரைப் போலக் கூடிவாழ்தலை இலட்சியமாகக் கொள்ள வேண்டும். வேற்றுமைகளுக் கிடையிலும் ஒருமை காண வேண்டும் ஒத்த உணர்வுகளைப் பெற்றுக் கூடித் தொழில் செய்ய வேண்டும். வையம் உண்ண உண்ண வேண்டும்; வையம் உடுத்த உடுத்த வேண்டும்.
சமுதாயத்தின் கூட்டு வாழ்க்கை ஒப்புரவு நெறியாக மலர்தல் வேண்டும். ஆக்க வழியில் சேர்ந்து, வாழ்ந்து, வரலாற்றுக்கு வளம் சேர்த்துச் சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். “ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும்” என்ற உயர்கொள்கை, சமுதாய வாழ்க்கையின் உயிர் நிலையாகும்.
வாழ்க்கை அருமைப்பாடுடையது; பயன்பாடுடையது; சிறப்பினைத்தருவது; மனித வாழ்க்கையின் அனைத்துச் சிறப்புகளுக்கும் வாயிலா அமைவது. ஆனாலும் அது, இயல்பில் எந்தவொரு குணமும் இல்லாதது. மண்ணினைச் சேராத மாமழைத்துளிபோல, மனம், சாரும் பொருள்களுக்கேற்பவும், வாழும் சமுதாய அமைப்புக்கேற்பவும், கற்று அறியும் நூல்களுக்கு ஏற்பவும், கேட்டு அறியும் செய்திகளுக்கு ஏற்பவும், உற்று அறியும் உணர்வுகளுக்கு ஏற்பவும் சிறப்பை அல்லது சிறப்பின்மையை அடைகிறது.
மனம், உயிரை வளப்படுத்தும் தலைவாயில். மனத்தின் வாயிலாகத்தான் உயிர், சிறப்பினை அல்லது இழிவினை அடைகிறது. மனம் ஓயாது தொழிற்படும் இயல்பினது; உறக்கத்திற்கூட அது தொழிற்படும். அதன் தொழில் இயக்க விரைவுக்கு ஏற்றவாறு அதற்கு நன்னெறிகளை நற்பணிகளை வழங்காவிடில் அது சைத்தானாக மாறித் தொல்லை கொடுக்கும்.
மனத்தை நற்சிந்தனையில், நற்செயலில் பழக்கப்படுத்தி விட்டால் அதைவிடச் சிறந்த துணை வேறு இல்லை. மனத்தை நறுமணமிக்க மலர்ச் சோலையாகவும் ஆக்கலாம்; நரகமாகவும் ஆக்கலாம். இதற்கு ஆற்றலுடைய மனத்தை நெறிப்படுத்தி நினைப்பிக்கவே வழிபாட்டு முறைகள் தோன்றின.
நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமைப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே
(அடங்கன். 1908)
என்று வேண்டுகிறார் திருஞானசம்பந்தர்.
பேரறிவும் பேராற்றலும் உடைய இறைநெறியின் வழியில், வழிபடுதலே வழிபாடாகும் ஆனால் இன்று பலர், கடவுளுக்காக வழிபாடு என்று கருதுகின்றனர். உண்மை அதுவன்று. வழிபாடு, கடவுளை முன்னிலைப்படுத்திச் செய்யப் பெறுவதேயாம். ஆனால், பயன் கடவுளுக்கன்று.
கடவுள், வழிபாட்டை ஏற்றுக்கொண்டு வழிபாட்டின் பயன்களைக் கைம்மாறாகத் தருபவனும் அல்லன். வழிபாட்டு நெறிகளில் உயிர் நிற்றல் மூலம் அது பெறும் தகுதிகளே வழிபாட்டின் பயன்களாகின்றன. அத்தகுதிகள் அல்லது பயன்கள் தப்பாது வந்து சார்வதற்குத் துணை நிற்பது இறைவனின் நியதி.
மனம் அல்லது மனத்தின் செயற்பாட்டுக்குத் துணை நிற்கும் உறுப்புக்களாகிய சிந்தனை, புத்தி ஆகியன சிறந்த முறையில் தொழிற்பட, புலன்கள் துணை செய்கின்றன. உயிரைச் செழுமைப்படுத்தும் வாயில்கள் முறையே பொறிகள், புலன்கள், சித்தம், புத்தி, மனம் என்ற படிமுறையில் அமைந்துள்ளன. இவை தம்முள் ஒன்றுக் கொன்று முரண்படாமல் உயிரை நலப்படுத்தும் உயரிய நோக்கத்தொடு முரண்பாடின்றி நன்னெறியில் தொழிற்படும் பொழுது, உயிர் ஆக்கத்தினை எய்துகிறது; சிறப்புறுகிறது; இன்புறுகிறது. இவைகளுக்கிடையே ஒரோ வழி மாறுபாடுகள் ஏற்படும் பொழுது அவ்வாழ்க்கை குறையும் நிறையும் கலந்ததாக அமைந்து விடுகிறது. அங்ஙனம் நிகழாமல் தடுக்க ஒன்றினை ஒன்று உணர்த்திக் கொள்ளுதலும் உண்டு. அந்த உணர்வுகள் பயன்பட்டுத் திருத்தமுறுவதும் உண்டு; திருத்தமுறாமல் போவதும் உண்டு. இத்தகைய சிறந்த செயற் பாடுகளுக்குரிய வாழ்க்கை நெறியில் எப்பொழுதும் விழிப்புத் தேவை; நன்று எது? தீது ஏது? என்று பகுத்தாராய்ந்து எடுத்துக் கொள்ளும் பாங்கு தேவை.
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லையென் போர்க்கு இனனா கிலியர்
(புறம் - 29; 11-12)
என்பதறிக. உடலும் பொறிகளும் எப்பொழுதும் தற்சார்பு இயல்பின; சுகத்தை நாடும் இயல்பின; உயிர் நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல்கூடத் தொந்தரவு செய்வன. இவைகள் நன்மையைத் தீமையாகவும், தீமையை நன்மையாகவும்கூடக் காட்டும்; உணரச்செய்யும். அவைகளை யெல்லாம் நுண்ணிதின் ஆராய்ந்து தெளிந்து எவை உயிரின் நெடிய ஆக்கத்திற்குப் பயன்படுமோ அவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்துறையில் தெளிவு இல்லாது போனால் சிவத்தைக் காண்பது அரிது. தெளிவில்லாத வாழ்க்கையை அப்பரடிகள்,
“வளைத்துநின் றைவர்கள்வர் வந்தெனை நடுக்கம் செய்யத்
தளைத்துவைத் துலையை ஏற்றித் தழலெரி மடுத்தநீரில்
திளைத்துநின் றாடுநின்ற ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்துநின் றாடுகின்றேன் என்செய்வான் தோன்றி னேனே”
(அடங்கன்முறை நாலாம்திரு. பா.4927)
என்று அருமையாக விளக்குகிறார். உடலின் இதமான சுகத்தைக் கருதிப் பின்விளைவை அறியாமல் ஆமை மகிழ்ந்தாடுவதைப் போலப் பிணியும், மூப்பும், பகையும் அழிவும் சேர்க்கும் நன்னெறி சாரா உலகியலைப் பயன் எனக் கொள்ளுதல் கூடாது. அப்படிக் கொண்டால் வெப்ப நிலை மாற்றத்தால்-கொதி நிலையால் அழியும் ஆமையைப் போல அழிவதைத் தவிர வேறு வழியில்லை. இங்கு அழிவது என்பது நீங்காத துன்பத்தில் அழுந்தி அல்லலுறுவதேயாம். சிறந்த தெளிவுமிக்க வாழ்க்கையில் சிவனைக் காணலாம். அதில் சிந்தையே சிவமாக விளங்கிக் காட்சியளிக்கும்.
சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி
என்று அப்பரடிகள் அருளியுள்ளமை அறிக.
உயிர், அறியும் தன்மையது; அறிவாகவே மாறி விளங்கும் தன்மையது. ஆதலால் உயிர் சிந்தனை, கற்றல், தெளிதல் ஆகிய செயல்முறைகள் வாயிலாக நன்னெறியில் நிற்றற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும். வாழ்க்கைக்குக் கற்றலும் கேட்டலும் இன்றியமையாதன. நாள்தோறும் முறையாகக் கற்றல், கேட்டல் செயல் முறைகளில் ஈடுபடுவோர், பெருமைகள் பல பெற்று விளங்குவர்; பெரியோர் ஆவர். இதனைத் திருநெறிய தமிழ்,
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் -
(அடங்கன்முறை முதல் திரு.2)
என்று கூறுவதால் அறியலாம்.
“இறைவனைப் பூசித்தல் மட்டும் பூசையன்று. பேரறிவைத் தந்து சிவத்தைக் காட்டிடும் ஞான நூல்களை ஓதுதலும் பூசனையோடொக்கும்” என்று சிவஞான சித்தியார் செப்பும்.
ஞான நூல்தனை ஓதல், ஓதுவித்தல்
நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா
ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
(சிவஞானசித்தியார் : எட்டாம் சூத்.23)
என்பது திருப்பாடல். இங்ஙனம் கற்றல், கேட்டல் உடையோராகி ஞானநூல்களை ஓதும் வேள்வியில் ஈடுபட்டால், பொறி, புலன்களின் முக்குணம் மாறும்; ஆற்றல்களைக் குவிக்கும்; புலால் உடம்பினோடேயே சிவமாம் தன்மையை அடையலாம்.
சீவிக்கின்ற பெத்தநிலையில் (இருள்மல நிலையில்) அதாவது அறியாமையில் பிழைப்பு நடத்தும் நிலையில் உயிர், அறிவும் நலனும் பெற்றுச் சிவமாம் தன்மையை எய்தி விளங்கலாம்; கொடிய துன்பங்களையும் வெற்றிபெறலாம்; இயற்கைகளை வென்று ஆட்சி செய்யலாம். சமய ஆசிரியர்கள் இத்தகைய அரிய செயல்களைச் செய்திருக் கின்றனர். அவர்கள் தம் பொறி, புலன்களைச் சிவத்தினைச் சார்ந்திருக்கச் செய்ததால்தான் அந்த ஆற்றல் கைவரப் பெற்றார்கள். தோற்ற அளவில் சீவாத்மாக்களின் தோற்றத்திற்கும்-சிவஞானிகளின் தோற்றத்திற்கும் யாதொரு வேறு பாடும் தெரியாது. ஆனால் தன்மை வேறுபாடு உண்டு. இதனை,
பாலை, நெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்,
காலனையன் றேவிக் கராங்கொண்ட-பாலன்
மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம்
கரணம்பேர்ல் அல்லாமை காண்,
(திருக்களிற்றுப்படியார் - 12)
என்ற திருப்பாடலால் அறியலாம். ஆதலால் சமயம் சார்ந்த வாழ்க்கை முறையில் கற்றலும் கேட்டலும் முதற் கடமை.
உயிர்க் குலத்தை, ஊற்றாகி நின்று வளர்க்கும் ஆற்றலுடையது அன்பு; உயிர்க் குலத்தையும், விண்ணையும் மண்ணையும், இறைவனையும், உயிர்த் தொகுதியையும் இணைப்பது அன்பேயாம். அன்பு, ஆற்றல் மிக்கது; தூய்மையானது; தற்சார்பற்றது; தன்னலம் துறப்பது; பிறர்நலம் கருதுவது; பேணுவது. பிறர் நலம் கருதி- துன்பங் களையும், துயர்களையும் தாங்கிக் கொள்வது; தியாகங்களைச் செய்யத் தூண்டுவது. இந்த அன்பைத் துய்த்துத் துய்த்து மகிழ்வதன் மூலம் உயிர்க்குலம் தழைத்து வளர்கிறது. அதனாலன்றோ திருமந்திரம் “அன்பே சிவம்” என்று கூறியது. சிவமாகிய பரம்பொருளுக்கு உயிர்க் குலத்தின் அன்புதான் பொருள். இதனைத் திருநாவுக்கரசர்,
அன்பலால் பொருளுமில்லை ஐயன் ஐயாறனார்க்கே
(அடங்கன்முறை நாலாம் திரு - 4557)
என்று கூறியுள்ளார். “அன்பே அன்பே என்று அரற்றுவதில் அறிவழியும்”. அத்தகைய அன்பிலே திளைத்து நின்று வாழ்தலே சிறந்த சமய வாழ்க்கை. பத்திமை நிறைந்த வாழ்க்கை. அன்பினில் கரைந்துருகும் பத்தியால் உயிர்க் குலம் தழைத்து வளரும். அன்பின்றிச் செய்யும் சடங்குகள் பயன்தாரா. அன்பினால் தவறு செய்தாலும் நிறையாகும். அன்பில்லாமல் அறமே செய்தாலும் பாவமாகும்.
தரிப்பித்தலின் நீதரு மம்தரிப் பித்திடாமை
தெரிப்பிக்கும் அதன்மம்எனப் பெயர்செய்யு மால்எம்
பொருட்டுப்புரி பாவமும் புண்ணியமாக்கி எம்பால்
விருப்பற்றவர் செய்அற மும்மறமாக்கு விப்பாய்
(காஞ்சிப்புராணம் : பாடல் 77 தழுவக்குழைந்த படலம்)
என்று காஞ்சிப்புராணம் பேசும்.
திருக்களிற்றுப்படியார்,
அன்பேஎன் அன்பேஎன்று அன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும்-அன்பன்றித்
தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான்.
(திருக்களிற்றுப் – 55)
என்று பாடல் உணர்த்துகிறது.
சிவகோசரியார் இயற்றிய விதிமுறைப் பூசையினும் கண்ணப்பர் பூசை ஏன் சிறப்புற்றது? அன்பினால் அன்றோ! கண்ணப்பருக்கு முன்பு அன்பு உவமையாக இருந்தது. கண்ணப்பருக்குப் பிறகு கண்ணப்பர் அன்புக்கு உவமையாகி விட்டார். அதனாலன்றோ ஞானத்தின் திருவுருமாகிய ஞானசம்பந்தர் அன்பின் பிழம்பாகிய கண்ணப்பர் சந்நிதியில் “கும்பிட்ட பயன் காண்பார் போல” வீழ்ந்தெழுந்தார். இதனைச் சேச்கிழாரடிகள்,
தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுதுகொண்டே தடஞ்சிலா
தலசோப னத்தால் ஏறி
வாழ்ந்திமையோர் குழாம் நெருங்கு மணிநீள் வாயில்
மருங்கிறைஞ்சி உள்புகுந்து வளர்பொற் கோயில்
சூழ்ந்துவலங் கொண்டுஇறைவர் திருமுன்பு எய்தித் தொழுதுதலை
மேற்கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல் மெய்வேடர்
பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.
(திருத்தொண்டர் புராணம் பா. 2925)
ஆக ஞானத்தின்-பூசனையின் பயன் அன்பேயாதல் பெறப்படுகிறது. அறியாமையால் கொச்சைப்பட்ட ஆசைகளைச் சிலர் அன்பு என்பர்; அஃது அன்புபோலக் காட்டும். ஆனால் வணிக நோக்குடையது. அது அன்பேயன்று; இதனை அன்பு என்று கூறுவது பாவம். இது ஆசை. ஆசை நிர்வாணத் தன்மையுடையது; வெட்கம் அறியாதது. மற்றவர்களும் வாழவேண்டும் என்ற உணர்வு ஆசைக்கு இருக்காது; ஆசை தற்சார்பு நிலையிலேயே தொழிற்படும்; காரியத்திலே கண் வைக்கும். அதனாலன்றோ திருமூலர்,
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
(திருமந்திரம் - 2570)
என்று கூறினார். ஆசை மற்றவர்களைப் பற்றிக் கவலையே படாது. எங்கும் எதிலும் எப்போதும் ஆதாயம் தேடி அவலத்தை அணைத்துக் கொள்ளும் சிறுமைக் குணம் ஆசைக்கு உண்டு. ஆதலால் உயிரைத் தழைக்கச் செய்து வளர்க்கும் அன்பினையே உயிர்ப்பாகக் கொள்ள வேண்டும். “அன்பின் வழியது உயிர்நிலை” என்ற வள்ளுவம் வாழ்க்கையாக மலர்தல் வேண்டும்.
உயிர்க்கு நலம் தரும் அறிவும், அன்பும் இயங்கும் தன்மையன; இயக்கும் தன்மையன. இவையிரண்டும் தொழிற்படுத்தப்படுவதன் மூலம்தான் மேலும் மேலும் வளரும்; நிலையான வளர்ச்சி பெறும். உயிர்க்கு உறுதி பயக்கும். தொழிற்படுதல் உயிரின் இயற்கை.
சமயநெறியின் சீலம், உயிர் நலம் காக்கும் பாங்கு ஓயாது தொழிற்படுவதில்தான் இருக்கிறது. தற்சார்பு நிலையில் தொழிற்படுவது “தொழில்” ஆகும். சமயச்சார்பில் திருவருள் சிந்தனையுடன் உயிர்க்குலத் தொகுதி நலம் பெற வேண்டும் என்று செயற்படுதல் தொண்டு ஆகும். தொண்டு நெறி நிற்றலே உயிர்க்கு ஊதியம் பெறும் நெறி.
தொண்டலாது உயிர்க்கு ஊதியமில்லை
(அடங்கன்முறை பாட்டு)
என்பது அப்பரடிகள் வாக்கு. செய்யும் செயல்கள் உயிர்க்குப் பயன்தந்து விடுவனவல்ல. உயிர்க்குப் பயன்களைத் தந்து வாழ்விப்பது செய்யும் செயல்களின் நோக்கமேயாகும். தீய நோக்கத்தோடு-நற்செயல் செய்தாலும் தீமையே விளையும். இறைவன் மீது மலர்க்கணை தொடுத்த காமவேள் தண்டனையையும், மறவாது கல்லெறிந்த சாக்கிய நாயனார் இன்புறுதலையும் பெற்றமை இதற்குச் சான்று செயலுக்குரிய நோக்கமே முதன்மையானது. ஆதலால் நல்நோக்கத்தோடும், சிவசிந்தனையோடும் அயர்விலாது தொண்டு நெறியில் நின்று வாழ்தலே சமய வாழ்க்கை தொண்டு நெறியில் நின்று வாழ்தல் உயிரை வளர்க்கும்; பாதுகாக்கும். தொண்டின் நெறி, வாழும் சூழ்நிலையையும் இனியதாக அமைக்கும்.
உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.
(புறநானூறு - 182)
இது சிறந்த சமய வாழ்க்கையின் பயன் கூறும் பாட்டு. எந்த நாட்டில் மனிதகுலத்தினிடையில் அன்பும் ஆர்வமும் நட்பும் வளர்ந்து ஒப்புறவு நெறி கால் கொள்கிறதோ ஆங்குப் பணியும், தொண்டும் சிறப்புற்று விளங்கும். ஆங்கு மனித குலத்தை வருத்தும் பகையில்லை. பிணியில்லை; களவும் காவலும் இல்லை. ஓர் அருமையான கூட்டுச் சமுதாயம் நிலவும். ஆதலால் “திருநாவுக்கரசு வளர்திருத் தொண்டின் நெறி நிற்றல்” சமயநெறியாளர் கடமை.
உயிர் துய்க்கும் இயல்பினது. துய்த்தலில் பொருள்களைத் துய்த்தல், காதலைத் துய்த்தல் மட்டும் அடங்காது. பிறர் மகிழ்தலைக் கண்டு, தான் இன்புறுதலும், துய்த்தலுமேயாம். இதுவே சிறந்த துய்த்தல்.
உலகின்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்
என்ற குறள் அறிக உயிர்க்கு உய்யும் நெறி துய்த்தல் நெறியேயாம்.
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
என்ற அப்பரடிகளின் அருள்மொழி அறிக.
பொன்னும் மெய்ப்பொளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னைஎன் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன்என் றறியொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழனத் தணி
ஆரூரானை மறக்கலுமாமே
(அடங்கன்முறை ஏழாம் திருமுறை)
என்ற ஆரூரர் அருட்பாடலாலும் அறிக.
துய்ப்புக்குரிய பொருள்களைப் படைத்தலும், பலரோடு கூடித் துய்ப்பித்துத் துய்த்தலும் சிறந்த சமய வாழ்க்கை துய்த்தல் மட்டுமே நிகழும் வாழ்க்கை குறையுடையது. துய்ப்பித்துத் துய்த்தல் வாழ்க்கையே சிறப்புடைய வாழ்க்கை. துறவு என்பது, எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக அமைந்தது. பழந்தமிழர் வாழ்வுமுறை துறத்தல் வழித் துய்க்கும் வாழ்க்கையே. அதுவே சைவ வாழ்க்கை; திருத்தொண்டர் புராணத்தின் சாரம் இதுவே. “பொருள்கள் நிலையில்லாதன” என்பது, பொருள்கள் அழியும் என்ற கருத்தில் தோன்றியதன்று. பொருள்களுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு நீங்கும் என்பதே அதன் பொருள். பொருள்களைப் படைத்தலும் துய்த்தலும் சமய வாழ்வுக்குத் தடையன்று. உண்பதற்காக வாழ்ந்து கழுபிணி தேடிக் கொள்ளுதல் கூடாது. வாழ்வதற்காக உண்ண வேண்டும். முறையாக நற்குணங்களைத் தரக்கூடிய சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.
ஆதலால், உலகியல் துய்ப்புகளை உய்யும் நெறிகள் எனக்கொண்டு சிவ சிந்தனையோடு துய்ப்பித்தும் துய்த்தும் வாழ்தலும் ஒரு தவமேயாகும். துய்க்கும் பொருள்கள் எல்லாவற்றையும் சிவமாகவே கருதிப் போற்றியிருக்கிறார் அப்பரடிகள்.
அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஒரு ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ
துணையாய்என் செஞ்சம்து றப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.
(அடங்கன்முறை : ஆறாம் திரு. 1173)
சுந்தரர் வாழ்ந்த காதலின்ப வாழ்க்கை-துறவியரும் தொழும் வாழ்க்கையாயிற்று. எப்படி? சுந்தரரும் சேக்கிழாரும் கூறுமாறு அறிக.
ஆதலால், பொருள் நிலையில்லாதன என்று கருதிப் பொருள் நெறியை அலட்சியப்படுத்துதல் வாழும் நெறியன்று. அத்தகையதொரு மனப்போக்கு இந்தியாவில் வளர்ந்ததால் தான் இந்தியா ஏழை நாடாகியது. பற்றி நின்று படரும் கொம்புகள் அழியுமாயின் கொடியும் அழியத்தானே செய்யும். அதனாலன்றோ வறுமையை மாணிக்கவாசகர்,
நல்குரவென்னும் தொல்விடம்
(திருவாசகம் போற்றித் திரு.40)
என்று கூறுகின்றார். திருமந்திரமும்,
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே
(திருமந்திரம் 704)
என்று அழகுபடக் கூறுகிறது. பொருளை, பொருளுக்காக நெறியில்லாத நெறியில் ஈட்டுவது தவறு. பொருளை, பொருளின் பயன் கருதித் துய்ப்பித்துத் துய்க்க ஈட்டுதல் நெறி சார்ந்த வாழ்க்கை. இதுவே சைவ சித்தாந்தச் செந்நெறியின் சிறப்புடைய வாழ்க்கை. இங்ஙனம் துய்த்தலுமாகிய அறம் நிகழ, காதல் மனையறத்தைச் சிவநெறி ஏற்றுப் போற்றி நடத்துகிறது. தமிழர் சமயநெறியின் மனையறம் அன்பையே உயிர் நிலையாகக் கொண்டது.
............எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்தொரு மித்து-ஆதரவு
பட்டதே இன்பம்
(தனிப்பாடல் திரட்டு : ஒளவையார் - 105)
என்ற வாக்கு அறிக. அன்பும் இன்பமும் பிணைக்கும் ஆற்றலுடையவை. தமிழரின் சமயம் சார்ந்த வாழ்க்கை நெறியில் காதல் மணமே பெருவழக்காக இருந்தது. தமிழரின் வாழ்வியலில் இயல்பாக மலர்ந்த உள்ளங்கள் காதலிற் சேர்ந்து களித்து மகிழ்ந்தன. இதற்குத் தடையாகச்-சாதி பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் நின்றதில்லை.
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே
(குறுந்தொகை 40)
அயல்வழக்கு நுழைந்தபின் திருமணங்கள் நிகழ்வனவாக இல்லை; செய்து வைப்பனவாகி விட்டன. சுந்தரர் வரலாற்றில் திருமணங்களே நிகழ்ந்தன. திருமணம் காதல் திருமணமாக அமைந்தால் தான் சிறப்புடைய வாழ்க்கையாக அமையும். இங்ஙனம் சமயம் சார்ந்த வாழ்க்கையில் கால்கொள்ளும் குடும்பம், சமுதாயத்தை நோக்கி விரிவடைகிறது.
சமுதாயம் என்பது மொழி, சமயம் அடிப்படையில் பலர் கூடி ஒத்ததறிந்து வாழ்க்கையை நிகழ்த்தும் கூட்டு அமைப்பாகும். உயர்ந்த-சமுதாய அமைப்புத் தோன்றின் வானகம் வையகத்தில் தென்படும். சிவநெறி இயல்பிலேயே சமுதாயம் தழுவிய அமைப்புடையது. ஒருமை நலம் சிறந்த, சமுதாயம் தோன்றத் தடையாய் அமைவதில் பெருந்தடைகளாய் உள்ளவை, சாதி, குல, கோத்திர வேற்றுமைகளே. இந்தப் புன்மைகள் அயல் வழக்கின் வழியதாகவே தமிழ்நெறியில் ஊடுருவின.
தூய ஒரு குல நெறியாகிய சிவநெறியை இடையில் வந்து கலந்த அயல் வழக்குக் கெடுத்து விட்டது. வடபுலத்தில் வாழ்ந்த, ஆரிய வேதகாலத்தில் வாழ்ந்த அந்தணர்கள் செய்த உபநிடதத்தில்கூட சாதி வேற்றுமைகள் இருந்ததில்லை. ஆயினும் எப்படியோ அந்தத் தீமை, பரவி மனித உலகத்தை உள்ளீடழித்து உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது. சில தமிழ் நூல்களும்கூடச் சூழ்நிலையின் காரணமாக இந்தச் சாதி முறைகளை ஏற்றுக்கொண்டு பேசியுள்ளன. அவை வெறுத்து ஒதுக்கத்தக்கன.
உயிரியல் விஞ்ஞான அடிப்படையிலும் இயற்கை நியதிகளின்படியும், சித்தாந்தச் செந்நெறியின்படியும், திருமுறையின் நெறி வழியும் சாதி வேற்றுமைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கனவல்ல. ஒழுக்கத்தின் பாற்பட்ட வேற்றுமைகள் நிலவலாம். ஆனால், அயல்வழியின் மூலம் புகுந்து, வளர்ந்துள்ள சாதிமுறை பிறப்பின் பாற்பட்டது. இந்த வேற்றுமைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கனவல்ல. சித்தாந்தச் செந்நெறியின் ஞானாசிரியர் மெய்கண்டதேவர்,
“அவன், அவள், அது எனும் அவை மூவினைமையில்”
(சித்தாந்த சாத்திரம்: சிவஞானபோதம் - 1)
என்று மூவகைப்படுத்திப் பொதுமை நலம் கெழுமிய வகையில் அருளியுள்ளமை அறிக தனி உடைமை உணர்வு களும் அவ்வழிப்பட்ட ஆதிக்க உணர்வுகளும் தோன்றிய பிறகுதான், சாதிமுறைகள் தோன்றின. “பழைய வேதங்களிலும்கூட சாதிமுறைகள் இருந்ததாக இல்லை” என்று மறைமலையடிகள் நிலைநாட்டுவார். இருக்கு, யசுர், சாமம் ஆகிய வேதங்களில்கூட சாதிமுறைகளைக் குறிக்கும் சொற்கள் பயிலவில்லை.
வேதங்களின் சாரமாகத் தோன்றிய உபநிடதங்களிலும் கூட சாதி வேற்றுமைகள் இருந்தனவாகத் தெரியவில்லை. வேத உபநிடத கால முனிவர்கள் திருமணங்கள்கூட, சமுதாயத்தின் பல நிலைகளிலும் நிகழ்ந்திருக்கின்றனவே தவிரச் சாதிமுறைகள் பின்பற்றப் பெற்றனவாகத் தெரிய வில்லை. “கிருதயுகத்தின்கண் சாதிகள் ஏதுமே இல்லை” என்று வாயு புராணம் கூறும்.
“மாபாரதத்திலும் கூட ஒழுக்கத்தால் மிக்கவரே உயர்ந்தோர். தொல்காப்பியத்தில் பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தும் சாதிமுறைகள் இருந்ததில்லை. ஆனால், தொழில்முறைப் பாகுபாடு இருந்திருக்கிறது. தொல்காப்பியத்தை அடியொட்டித் தோன்றிய தமிழ் மறையாகிய திருக்குறளிலும் சாதி வேற்றுமை இல்லை.
பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் (திருக்குறள் 972)
என்பது திருக்குறள். அதனையொட்டித் தோன்றிய சமயத் திருமுறைகளும் சாதி வேற்றுமைகளைக் கடுமையாகக் கடிந்துள்ளன. மாணிக்கவாசகர்,
சாதி, குலம், பிறப்பு என்னும் சுழி (திருவாசகம் 5)
என்று கூறுவது அறிக. அப்பரடிகள்,
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்
(அடங்கன் முறை : ஐந்தாம் திரு - 582)
என்று சாதி வேற்றுமை மனப்பான்மையைக் கடுமையாகக் கண்டித்ததோடு உயிர்க்குலம் அனைத்தையும் சிவமெனக் கருதிப் போற்ற வேண்டும் என்று அருளியுள்ளமையும் அறிக. ஞானத்தின் திருவுருவாக, நான்மறையின் தனித் துணையாக, தமிழகத்தில் சைவத் தமிழ் ஞானப் புரட்சி செய்த திருஞானசம்பந்தர்,
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்அடியார்க்கு
இங்கேஎன்று அருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையும்
சங்கேயொத்து ஒளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே
(அடங்கன்முறை : இரண்டாம் திரு - 1900)
என்றருளிய பாடலும்
குலவ ராகக்குல மிலரு மாகக் குணம் புகழுங்கால்
உலகின் நல்லகதி பெறுவ ரேனும்மல ரூறுதேன்
புலவ மெல்லாம் வெறி கமழும் அந்தண் புகலுர்தனுள்
நிலவ மல்குசடை அடிகள் பாதம் நினைவார்களே
(அடங்கன்முறை : இரண்டாவது திரு - 27.19)
என்ற பாடலாலும் அறிக. பார்ப்பனக் குலத்தில் தோன்றிய திருஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணரோடு கொண்ட தோழமையை அறிந்து உணர்க. சுந்தரர் ஆதி சைவ குலத்தில் தோன்றி, ஷத்திரிய குலத்தினராகிய மன்னரால் வளர்க்கப் பெற்று, உருத்திர கணிகையர் குலத்தில் தோன்றிய பரவையாரையும், வேளாளர் குலத்தில் தோன்றிய சங்கிலி யாரையும் திருமணம் செய்து கொண்டமையையும் அறிக..
சேக்கிழார் தாம் இயற்றிய பெரிய புராணத்தில் வழக்கிலிருந்த குலங்களைக் குறிப்பிட்டுக் கூறினாரேனும் அக்குலங்களிடையில் வேறுபாடின்றிக் கலந்து பழகியதைத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், முருக நாயனார் மூவரும், முருகநாயனார் திருமடத்தில் உடனுறைந்து இருந்தனர் என்று கூறும் நெறியினையும் அறிக. திருவாரூரில் பலரோடு பழகியதால் ‘தீட்டு’ வந்துவிட்டது என்று கருதிய நமிநந்தி அடிகளுக்கு,
மேன்மை விளங்குந் திருவாரூர் வீதி விடங்கப் பெருமான்தாம்
ஞான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்தருளி
ஞானமறையோய் ஆரூரில் பிறந்தார்எல்லாம் நங்கணங்கள்
ஆன பரிசு காண்பாய் என்றருளிச் செய்தங்கு எதிர் அகன்றார்
(திருத்தொண்டர் புராணம் : நமிநந்தி - 27)
என்று இறைவர் இவ்வாறு உணர்த்திய ஒருகுல நெறியை ஓர்க: ஒழுகலாறாக்குக. இன்று சிவநெறி மக்கட் சமயமாக மலர்ந்து வளரவில்லை. ஏன்? சாதி வேற்றுமைகளின் கொடுமையே தடை. திருக்கோயில்களில் சாதி, திருமடங்களில் சாதி, எங்கும் சாதிகளைக் காப்பாற்றும் சிறுநெறிகளே ஆட்சி செய்கின்றன.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
இது பஜனை மடத்துப் பாட்டு, ஒழுகலாறோ சின்னஞ்சிறு வட்டத்தில். சாதிச் சக்திகளில் சிக்கிய சைவம் வெளியேற முடியாமல் தத்தளிக்கிறது.
ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய சமயத் தலைவர்களின் பின்னால், ஆயிரக் கணக்கில் அடியவர்கள் திரண்டனர். நாடு முழுதும் சைவப் படையெழுச்சி! எப்படி இயன்றது? அவர்கள் சாதி நெறிகளைக் கடந்து விளங்கினார்கள். “கங்கைவார் சடைக் கரந்தார்க்கு அன்பரெலாம் ஒருகுலம்” என்றனர். ஏன்? சந்தானாச்சாரியார்களிடத்திலும் கூட சாதி வேற்றுமைகள் இருந்ததில்லை. ஞானத்திற்கு ஏது சாதி?
சைவ வேளாளர் திருமரபில் தோன்றிய மெய்கண்ட தேவரை ஞானாசிரியராக ஆதிசைவர் மரபில் தோன்றிய அருணந்தி சிவாசாரியார் ஏற்றுக் கொண்டார். பெற்றான் சாம்பானுக்கு, உமாபதி சிவத்தின் மூலம் தீக்கை அளிக்கச் செய்து இன்ப அன்பினை இறைவன் வழங்கினான் என்றால் சித்தாந்தச் செந்நெறிக்குச் சாதி ஏது? குலம் ஏது? கோத்திரம் ஏது? சிவநெறி நிற்பவர் எல்லாம் நம்மவரே என்று பெரு நெறி பற்றி ஒழுகுதலே சித்தாந்தச் செந்நெறியின் சமுதாய வாழ்க்கை நெறி.
இன்று அடியார்களுக்குப் பஞ்சம். ‘கட்டளைகள்’ இல்லாது போனால் இருக்கும் ஒரு சிலரும் இருக்க மாட்டார்கள். சிவநெறியை நாடு கடந்து இனங்கடந்து உலகப் பொதுநெறியாக வளர்க்க இன்று தேவை ஆயிரம் ஆயிரம் அடியவர்கள். அடியார்களுக்குத் தடையாக இருக்கின்ற சாதிமுறைகளை நீக்கினாலொழிய சிவநெறி - சைவம் எந்த முகத்துடன் “மனிதர்காள் இங்கே வம்மின்” என்றழைக்க இயலும்?
மனித குலத்தை ஒரு குலமாகக் கருதாதபோது யாத்திரை ஏன்? பாதகாணிக்கைகளை வாங்கிக் குவிக்கவா? பிழைப்பின் பெயரால் பெட்டகங்களை நிரப்பிக் கொள்ளவா? ஊரார் செல்வத்தை அடித்து ஒரு குலத்தின் வயிற்றில் போடவா?
“உலகத்து வாழ்க்கை துன்பமானது; துன்பமானதாகத் தான் இருக்கும்” என்று கருதும் புன்மைநெறி சிவநெறிக்கு இருந்ததில்லை; துன்பம் துடைத்து வாழ்க்கையை இன்ப மயமாக்குதல் சிவநெறியின் கோட்பாடு
சிவநெறியின் கோட்பாடு பழந்தமிழர் காலந்தொட்டு வழிவழியாக வளர்ந்து வருகிறது. சங்க காலக் கவிஞர் “பக்குடுக்கை நன்கணியார்” ஓரில்லத்தில் காதல் களியாட்ட மகிழ்ச்சி, பிறிதோர் இல்லத்தில் இறப்பு வழிப்பட்ட துன்பம்! ஏன் இந்த வேறுபாடு? என்று கொதித்துக் கேட்கிறார். இப்பாடலில் பேசப்பெறும் இன்ப துன்பங்கள், சாதி வேற்றுமை, கற்றார், கல்லாதார், வளமுடையார், வறுமையுடையார் என்ற செயற்கை வேறுபாடுகளல்ல. ஊழி ஊழியாக இயற்கையில் நிகழ்ந்து வரும் வேறுபாடு. மரணத்தை வென்றார் யார்?
மரணத்தை வெல்ல முடியும் என்ற கருத்து இருக்கிறது. கதைகள் இருக்கின்றன. ஆனால் இன்னும் வெற்றி பெற முடியவில்லை. வளர்ந்து வரும் வாழ்நாளின் அளவைப் பார்த்தால் எதிர்காலத்தில் வெற்றி பெற்றாலும் பெறலாம்? ஆயினும் இன்று வரையில் சாதலும் பிறத்தலும் புதியனவல்ல என்று கூறியாங்குச் சுழற்சி முறையில் நடைபெறும் இயற்கை வழியினாலான துன்பத்தைக்கூட-மரணத்தைக்கூடக் கடிந்துள்ளார். இதே உணர்வைச் சுந்தரர் வரலாற்றில் அவிநாசியில் காண்கின்றோம்.
அவிநாசியில் ஒரு இல்லத்தில் குழந்தைக்கு நாண் மங்கல மகிழ்ச்சி! ஆரவாரம்! பிறிதோர் இல்லத்தில் குழந்தையை இழந்த துயரம், ஆரூரர், பெற்றோரை விட்டுப் பிரிந்த குழந்தையை மீட்டுப் பெற்றோரை மகிழ்வுறுத்தினார் என்பது பெரியபுராணம். ஆதலால் துன்பம் உலக இயற்கையன்று. இன்பமே உலகத்து இயற்கை என்று கருதி இன்புற்று வாழ்தல் சித்தாந்தச் செந்நெறியின் வாழ்க்கை முறை.
அடுத்து, சமுதாயத்தை நலிவுறச் செய்யும் சாதி வேற்றுமைகளைப் போலவே பொருளியல் ஏற்றத்தாழ்வுகளும் கொடுமையானவை. இன்று மானிடச் சாதியை- உடை யாரையும், இல்லாதாரையும் ஒருசேர வருத்துவது பொருளுடமை ஏற்றத் தாழ்வுகளேயாம். உடையாரைக் களவும் காவலும் வருத்துகின்றன. இல்லாதாரை வறுமை வருத்துகிறது; உடையார் இல்லார் வேற்றுமை, அவ்வழி கொடிய வறுமை முதலியன நிலையாகக் கால்கொள்ளு மானால் மனித மதிப்புகள் குறையும்; அறநெறியின் அடித் தளங்கள் ஆட்டம் கொடுக்கும்; சமய நெறியின் சீர்மைகள் சிதையும்; நரகத்தைத் தேடி வேறு எங்கும் போக வேண்டாம். இவ்வேற்றுமை களுக்கிடையில் மானிடர் வாழும் வாழ்க்கையே நரகமாகும்.
சிவநெறியின் சீலம் உயிரிரக்கத்தில் இருக்கிறது. யாதானும் ஒரு உயிர் துன்புறுவதைச் சிவநெறி தாங்காது. அதனாலன்றோ, குடிக்கு ஒரு ஆள் கொற்றாளாக அனுப்ப, மகவில்லாது கவலைப்பட்ட வந்திக்கு, ஆலவாய் அண்ணல் ஆளானார். நான்மாடக்கூடல் என்று பெயர் பெற்ற மதுரையில், அரச வீதியில் பன்றிக் குட்டிகள்-கண் திறவாக் குட்டிகள் தாய்ப் பன்றியை இழந்து பாலின்றிப் பரிதவித்தன. பரமாய சிவத்திற்குப் பன்றிக்குட்டிகளின் துயர் உறுத்திற்று. பாற்கடலை வழங்க முடியாது. நக்கிக் குடிக்கும் பருவம் வரவில்லை. அந்தணராக, சேவகனாக வந்து பால் வழங்கவும் முடியாது. உருவத்தைக் கண்டு அஞ்சும் குட்டி நிலையில், தாயையே அணையும் இயல்பின. ஆதலால் தாய்ப் பன்றியாய்த் தோன்றி முலை தந்து காப்பாற்றிய மூவாப்புகழ் சிவத்திற்கு உண்டு.
தந்தையடிக்க அழுத குழந்தைக்கு அம்மையைக் கொண்டு பாலூட்டச் செய்தான் திருத்தோணியப்பன். திருவிழிமிழலையில் பஞ்சம் வந்துள்ளபோது படிக்காசுகள் தந்தருளி அடியார்களைக் கொண்டு சோறிட்டான். பஞ்சத்தின் துன்பத்தை மாற்றினான். இவையெல்லாம் கருணையின் பெருக்கம்! கருணையின் காட்சி!
சிவநெறியில் நின்றொழுகிய நாயன்மார்கள்தாம் என்ன? காதலனை நச்சரவம் தீண்டப் பிரிந்து அழுத செட்டிப் பெண்ணுக்குக் காதலனை மீட்டுத் தந்து கடிமணம் செய்வித்தது ஞானசம்பந்தப் பெருமானின் அருட்செயல். சைவத்தில் உயிர்களின் துன்பத்தை நீக்கும் பணி அறம் என்று வற்புறுத்தப் பெற்றுள்ளது. ஏன்? திருமூலர் நடமாடும் மானிடர்களை-நடமாடும் கோயில்கள் என்று அறிமுகப் படுத்துகின்றார். ஆம், அவர்கள் “நடமாடும் கோயில்கள்”. அங்கும் இறைவன் உள்ஒளிந்து நிற்கின்றான். நாளை மறுநாள் விளங்கியும் தோன்றலாம். உடலிடம் கொண்டருளுதல் இறைவனின் அருட்செயலன்றோ! திருக்கோயிலைப் பட மாடும் கோயில் என்று பகர்கின்றார். படமாடும் கோயிலுக்கு ஈவது பரமனுக்கு ஆகாது என்று எதிர்மறையாகக் கூறுகின்றார். நடமாடும் கோயிலுக்கு ஈவது மக்களுக்கும் ஆம், பரமற்கும் ஆம், என்பது திருமூலர் செய்த சைவப் பொருளியல் புரட்சி, சிவநெறி பொருளியல் ஒப்புரவு நெறியை உணர்த்துகிறது.
அப்பரடிகள் பொருளுடைமை-தனி உடைமை நிலையுடையதன்று என்று கூறுகிறார். அப்பர் வாக்குப்படி பொருளை உடையவர் பொருளுக்குரியவர் அல்லர். அவர் ஒரு அறங்காவலர்; சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உரியவர். அதன் காரணமாக அச் சமுதாயத்திற்குரிய பயன்படும் பொருள் அவரிடத்தில் வைக்கப் பெற்றுள்ளது. அப்பொருள்பயன் அவர் துய்ப்பதற்கன்று. இல்லாதவர்க்குக் கொடுத்து மகிழ்வதற்கேயாம்.
இந்தத் தூயஉணர்வுடன் பெற்ற பொருள்களைப் பாதுகாத்து இல்லாதார்க்கு வழங்குபவர்களுக்குச் சிவனருள் கிடைக்கும். வழங்காது காத்து வைத்து வாழும் வன் கணாளர்க்கு நரகமே கிடைக்கும். இது அப்பரடிகளின் பொருளியல் கொள்கை.
இப்பொருளியல் கொள்கையைத் ‘தர்மகர்த்தாக் கொள்கை’ என்று பிற்காலத்தில் பொருளியலறிஞர்கள் கூறினர். அண்ணல் காந்தியடிகளும் இந்தக் கொள்கையை ஆதரித்தார். அப்பரடிகள் இந்தக் கொள்கையை வகுத்துக் கூறும் பாடல் இதோ,
இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும்வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்
பரப்நீர்க் கங்கைதன்னைப் படர்சடைப் பாகம்வைத்தார்
அரக்கனுக் கருளும்வைத்தார் ஐயன் ஐயாறனாரே”
- (அடங்கன்முறை நாலாந்திரு. - 454)
சிவநெறி, பொருளியல் ஏற்றத்தாழ்வுகளை மறுக்கிறது. உண்மையான சிவநெறியைச் சார்ந்த சமுதாயத்தில் பொருளியல் ஏற்றத் தாழ்வுகள் மறையும்; மறைய வேண்டும். அங்ஙனமின்றேல் மார்க்சீயம் வாழ்வியல் நெறியாக இடம் பெறுவதைத் தடுக்கும் சக்தி யாதும் இல்லை. உண்மை உணர்க.
மார்க்சீயத்திற்கும் சிவநெறிக்கும் தத்துவ இடைவெளி மிகக்குறைவு. இதனை மார்க்சீய நெறியோடு ஒத்திட்டுப் பார்க்கவேண்டும். சைவ சித்தாந்தத்தின்படி கடவுள் மனித உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் முழுப்பொறுப்பானவன் அல்லன். அவன் ஒரு இயக்குநன். அவன் ஒரு தேர்வாளன்; காட்சி மதிப்பீடுகளுக்குத் தகுந்தவாறு புள்ளிகள் வழங்குபவன். அவ்வளவுதான்.
இன்னும் கொஞ்சம் அயரா அன்பில் இறைவனை அணுகினால் அறிவிப்பான்; உணர்த்துவான் வழி நடத்துவான். நடந்து வாழவேண்டியது மானுடச் சாதியேதான். சிவநெறியின் பார்வையிற் கடவுள் ‘Creater’ம் அல்ல. ‘Electric life'ம் அல்ல. சிவம் ஒரு வழித்துணை. அறிவார்வலர்களுக்கு ஆசிரியன். அவன் எந்த உடைமைகள் விவகாரத்திலும் தலையிடுபவனல்லன். அவன் காரணங்களாக இருப்பவனே தவிர, காரியங்களாக இருக்க மாட்டான். அவன் உணர்வுகளாக நின்றருள் புரிவான்.
ஆதலால் சித்தாந்தச் செந்நெறி, ஏழை பணக்காரன் தன்மைக்கு, உயர்சாதி, இழிசாதி அமைப்புக்குத் துணை போகக்கூடியதன்று. சித்தாந்தச் சிவநெறி சார்ந்த சமுதாயம் எல்லாரும் எல்லாம் பெற்று வாழும் சமுதாயமேயாகும். அத்தகு சமுதாயத்தைக் காண்பதே, இன்றுள்ள முதல் கடமை.
இன்று சிவநெறிச் சமுதாயம் தனித்தன்மையுடையதாக இல்லை. சித்தாந்தச் செந்நெறி தனித்தன்மையுடன் விளங்க வேண்டும். அயல்வழி வந்த கலப்புக்களிலிருந்து விடுதலை பெறவேண்டும். சிவநெறி அனுபவத்திற்குப் பயன்படுவன திருக்கோயில்கள். திருக்கோயில்களில் தமிழ் முனிவர்களால் செய்யப்பெற்ற ஆகமங்கள் வழி, பூசனைகள் நடைபெற வேண்டும்.
“ஒருவர், சிவநெறியில் நிற்றற்குரிய தீக்கைகளை முறையே பெறாமல் சமயப் பணிகளில் ஈடுபடக் கூடாது” என்பது ஆகம விதி. ஆனால் தீக்கையின்றியே திருவமுது படைக்கும் பணியிலும், மந்திரங்கள் ஓதும் பணியிலும் இடம்பெற்றுச் செய்கின்றனர். சிலர் திருக்கோயில்களின் பூசகர்களாகக் கூட இடம் பெற்றிருக்கின்றனர். திருக்கோயில் இறைவன் திருமுன்பு சமய ஒழுக்கத்தால் ஒன்றுபட்ட எல்லாரும் உடனிருந்து உண்ணும் சிறந்த பழக்கம் தடைப்பட்டுப் போயிற்று.
சித்தாந்தச் செந்நெறியைச் சார்ந்த ஆதீனகர்த்தர்களின் சமயத் தலைமையைச் சுமார்த்தக் கலப்பின் மூலம் அடையத் துடிக்கிறார். தீக்கை பெறாத, ஐந்தெழுத்தை எண்ணாத, ஆகமங்களை நம்பாத-ஏற்றுக் கொள்ளாத சங்கராச்சாரி யாரிடம் சமய, விசேட நிர்வாண தீக்கைகள் பெற்று சிவாச்சாரியராகிப் பெருமானை அர்ச்சிக்கும் பேறு பெற்றவர்கள் “சான்றிதழ்” வாங்க வேண்டி இருக்கிறது.
ஆகமங்களின் வழியும் தமிழ்த் திருமறைகளின் வழியும் நமது திருக்கோயில்களில் பூசனைகளும் நடைமுறைகளும் அமைய வேண்டும். திருக்கோயில் வழிபாட்டில் கட்டணங்கள் விதித்து வாங்கும் பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் அத் திருக்கோயில் பெருமானை ஆன்ம நாயகனாக ஏற்று வழிபடுவோர் பட்டியல் தயாராக வேண்டும்.
தமிழர்-சித்தாந்தச் செந்நெறியைச் சார்ந்தவர்கள் சிவத்தை யாதானும் ஒரு பெயரில்-சிறப்பாக அவர்கள் ஊரில் எழுந்தருளியிருக்கும் பெருமானை ஆன்மநாயகனாக ஏற்றுக்கொள்வதைப் பழக்கப்படுத்த வேண்டும்; வழக்கப்படுத்த வேண்டும். இங்ஙனம் அந்தத் திருக்கோயில்களில் வழிபடுவோர் ஆண்டுதோறும் முறையாக வழங்கும் நன்கொடையிலிருந்தே திருக்கோயில்கள் பேணப்பெற வேண்டும். பூசனைகள் செய்விக்கப் பெறவேண்டும்.
வழிபடுவோர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோயில்களை மையமாகக் கொண்டே நடத்தப் பெற வேண்டும். அங்ஙனம் நடக்கும் நிகழ்வுகளுக்கும் காணிக்கைகள் வாங்கலாம்; வழிபடுவோரிலிருந்து தெரிவு செய்யப் பெற்ற ஒரு சிலர் கொண்ட குழுவைக் கொண்டே திருக்கோயில் ஆட்சிமுறை நடைபெற வேண்டும்.
திருக்கோயிலின் வழிபாட்டுச் சடங்குகள் எளிமை யானவையாக அமைய வேண்டும். இனிய தமிழிலும் அமைய வேண்டும். திருக்கோயில்களில், ஆகமங்களிலும் திருமுறை களிலும் தோய்த்த புலமையும், பழுத்த மனமும் கொண்ட சிவாசாரியர்கள் நியமனம் செய்யப் பெறுதல் வேண்டும். அவர்கள் மூர்த்திகளைத் தூய்மை செய்து, நாள்தோறும் பெருமானை வழிபடுவோர் வழிபட்டுய்ய எழுந்தருளச் செய்யும் செய்முறைகள் நிகழ்த்தி, வருகிற பக்தர்களுக்கு ஆச்சாரியனாக இருந்து, பெருமானைக் கண்டும் காட்டியும் வழிபாடு செய்து கொள்ளும் நெறியில் வழிபடுத்தியும் துணை செய்ய வேண்டும்.
தீக்கை பெற்று, அத்திருக்கோயிலில் வழிபடுவோர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு அவர்கள் தாமே பெருமானுக்குப் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்து கொள்ளும் உரிமை இருக்க வேண்டும். திருக்கோயிலின் சிவாசாரியர்கள் ஆசிரியப் பணியைத்தான் செய்ய வேண்டும்; புரோகிதர்களாக விளங்கக் கூடாது; தரகர் நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது.
எல்லாரும் திருக்கோயில் சென்று பெருமானை வழிபாடு செய்துகொள்ளும் உரிமை இருந்தது என்பதற்கு நமது திருக்கோயில் புராணங்களே சான்று. நண்டும், எறும்பும் பூசித்திருக்கும் போது மனிதன் பூசிக்கக் கூடாதா? கண்ணப்பர் வரலாறு எதைக் காட்டுகிறது?
கண்ணப்பர், காளத்தியண்ணலைத் தொழ யாதொரு தடையும் இருந்ததில்லையே! சிவாசாரியார் கூட, யார் வழிப்பட்டது என்று கவலைப்படவில்லை. அவருக்கு இருந்த கவலை, சந்நிதியில் கிடந்த புலால் துண்டுகள் பற்றியதுதான். ஆயினும் கண்ணப்பர் பூசனையே சிறந்தது என்று காளத்தியண்ணலே விடையெழுதிய பிறகும்கூட நாம் தகுதியுடைய எல்லாருக்கும் வழிபாட்டுரிமையை வழங்கவில்லை.
கண்ணப்பர் வரலாறு நிகழாத காசியில் எல்லாரும் வழிபடலாம். ஆனால் கண்ணப்பர் வரலாறு நிகழ்ந்த தென்புலத்தில் எல்லாரும் வழிபட முடியாது. அப்பரடிகள் அருளிச் செய்துள்ள ஐயாற்றுப் பதிகத்தில் எல்லாரும் போதொடு நீர் சுமந்து வரிசையாக நின்று ஒருவர் பின் ஒருவராக ஐயாறப்பனை வழிபட்டனர் என்ற செய்தி கிடைக்கின்றது.
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடுப டாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
(தேவா. நான். திரு. 3ஆம் பதிகம் பாடல்.1)
ஆதலால் திருக்கோயில் வழிபாட்டில் தகுதியும் உரிமையும் உடையவர் அனைவருக்கும் வழிபடும் உரிமை வேண்டும். இதைச் செய்தால்தான் சாதி வேற்றுமைகள் அகலும். பூசனையைச் செய்வதன் மூலம்தான் உயிர்க்கு அனுபவம் கிடைக்கும்.
தாமே வழிபாடு செய்து கொள்ள இயலாதாருக்கும் சிவாசாரியர்கள் செய்து தரலாம். அங்ஙனம் செய்யும் பொழுதும் திருமுறைத் தமிழிலேயே செய்யப் பெற வேண்டும். பக்தி என்பது உயிரின் அனுபவத்திற்குரியது. உயிரின் அனுபவம் தாய்மொழியில்தான் எளிதில் அமையும்.
சுமார்த்தக் கலப்பு, நமது சமயத்துக்கு ஏற்பட்ட பிறகு, தமிழ் வழிபாட்டு முறைகள் நின்று போயின. பழங்காலத்தில் தமிழோடு இசை பாடிதான், வழிபாடு செய்திருக்கின்றனர். சுமார்த்தருடைய கலப்பு ஏற்பட்ட பிறகு சமஸ்கிருதத்தில் சில புகழ்மொழிச் சொற்றொடர்களைத் தொகுத்துத் தூய்மையுடையதாகக் காட்டி அர்ச்சனைக்குப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அவைகளால் அர்ச்சனை செய்யத் தொடங்கிய பிறகுதான், கடவுளை இழிவுபடுத்துதற்குரிய சில செய்திகள் பகுத்தறிவாளர்களுக்குக் கிடைத்தன.
சித்தாந்தச் செந்நெறிக்கும், கோயில்களுக்கும் புறச் சமயங்களால் தாக்குதல் வந்த பொழுதெல்லாம் திருமுறைத் தமிழ்தான் காப்பாற்றியது. 'அஷ்டோத்திரமும்’, ‘சகஸ்ர நாமமும்' யாதும் செய்யவில்லை. ஆதலால், நமது சித்தாந்தச் செந்நெறியைக் காப்பாற்றித் தந்த திருமுறைப் பதிகங்களை ஓதி, மலர் சொரிந்து வழிபடும் வழக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அன்றுதான் திருக்கோயில்களில் பெருமான் பெருவிருப்புடன் எழுந்தருளி அருள் புரிவான். ஏன்? அவன் தமிழோடிசை கேட்கும் இச்சை கொண்டவன்.
இறைவன் தமிழிசைக்காக நாயன்மார்களுக்குப் பொற்காசுகள் தந்தவன்; பண் சுமந்த பாடல் கேட்க, கூலி கொண்டு மண் சுமந்து அடிபட்டுப் புண்மேனி சுமந்தவன். திருக்கோயில் வழிபாட்டுக்கு உரிமையுடையது திருமறைத் தமிழே. அதைச் சிவநெறியாளர்கள் உரிமையுடன் போற்றி ஒழுகுதல் வேண்டும்.
பழந்தமிழகத்தின் திருக்கோயில்கள் உடலையும் உயிரையும் ஒருங்கே வளர்க்கும் நிறுவனங்களாக விளங்கின. இம்மைக்கும் மறுமைக்கும் ஆக்கமளிப்பவையாக விளங்கின. காலப்போக்கில் அயல்வழக்கின் நுழைவின் காரணமாகவும் தற்சார்பு மிகுந்ததன் காரணமாகவும், அயர்ச்சியின் காரணமாகவும் இன்றையத் திருக்கோயில்கள் முழுமையான திருக்கோயில்களாக விளங்கவில்லை.
இன்று, எதையும் எங்கு நோக்கினும் அரசே பொறுப் பேற்று நடத்துகிறது. சமுதாயப் பொறுப்புணர்வு என்பது அறவே நீக்கப்பெற்றிருக்கிறது. இந்நிலை சமுதாயத்திற்குத் தற்சார்பான வளர்ச்சியை, வலிமையைத் தராது. பழங்காலத்தில் சமுதாயக் கூட்டுப் பொறுப்பு மிகுதியாக இருந்தது. திருக்கோயில்களில் இலக்கண இலக்கியங்கள் கற்பிக்கப் பெற்றன: நடத்தப் பெற்றன; மருத்துவமனைகள் இருந்தன. ஏன்? வழக்குகளைத் தீர்த்து வைக்கும் முறையீட்டு மன்றங்களும்கூடத் திருக்கோயில்தான் நடைபெற்றன.
சுந்தரர் சிவபெருமான் வழக்கைத் திருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோயிலிலிருந்த முறையீட்டு மன்றம் விசாரித்து நீதி வழங்கியது என்ற வரலாற்றை உணர்க. இதே நிலை மீண்டும் திரும்ப வருதல் வேண்டும்.
திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள கடவுளைத் தலைவனாகக் கொண்டு சிவநெறியைச் சார்ந்த சமுதாயம் கூடிவாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தச் சமுதாயத்திற்குத் தேவையான அனைத்துச் சமுதாயப் பணிகளையும் திருக்கோயில்கள் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டும். இங்ஙனம் செய்வதைச் சிலர் இன்று மறுக்கின்றனர்.
“திருக்கோயில் நிதியத்தைக் கடவுள் பூசனைக்குத்தான் பயன்படுத்த வேண்டும்; வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது” என்று கூக்குரலிடுபவர்கள் இருக்கிறார்கள். மேலும் “செல்வநிலை மிகுந்துள்ள கோயில்கள், செல்வ வசதிக்குறைவான திருக்கோயில்களின் திருப்பணிக்குச் செல வழிக்க வேண்டும்” என்று கூறுகிறார்கள். இது நூற்றுக்கு நூறு தமிழகத்தின் எல்லாத் திருக்கோயில்களையும் திருப்பணி செய்து திருவருளின் பொலிவோடு வைத்திருக்க வேண்டும். இதற்கு முதலிடம் கொடுக்கலாம். இதைச் செய்வது சமுதாயப் பணிகளுக்குத் தடையாக இருக்காது.
‘கடவுட் பணிக்கென வழங்கப்பெற்ற நிதியைக் கடவுட் பணிக்குத்தான் செலவழிக்க வேண்டும். இதுதான் சரியான அறநெறி. கடவுட் பணியும் மக்கட் பணியும் வேறு வேறு’ என்றெல்லாம் கூறுவர். இக்கருத்து மிகவும் தவறானது. சிவஞான மாபாடியும், இயற்றிய மாதவச் சிவஞான முனிவர் மக்கட் பணியையே கடவுட் பணியாக்கலாம் என்று கூறுகிறார். “மக்களை நோக்கிச் செய்யும் பசு புண்ணியங்களை, மக்களை மக்கள் என்று கருதாமல் கடவுளின் கருணையைப் பெறுதற்குரிய பாத்திரங்கள் என்று கருதிக் கடவுள் நினைப்போடு செய்யின் அது கடவுள் பணியேயாம்” என்று கூறியுள்ளமையை அறிக.
ஆதலால் நமது சிவநெறியைச் சார்ந்த சமுதாய அமைப்பைக் கோயிலைச் சார்ந்த குடிகளாகவும், குடிகளைச் சார்ந்த கோயிலாகவும் செழுமைப்படுத்தி வளர்ப்பதுதான் சமயம் தழுவிய சமுதாய அமைப்புக்குத் துணை செய்யும். இப்பணியில் நாம் வெற்றிபெறும் வரையில் தொடர்ந்து சிந்திக்க வேண்டும். ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்.
சிவநெறி அமைப்பில் அடுத்த பணிமனைகள்-சமய, நிறுவனங்கள்-திருமடங்களாகும். மானுடச் சாதி சமய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கும்பொழுது முதலில் தேவைப்படுவோர் ஞானாசிரியர்கள். ஞானாசிரியர்கள், மனிதர்களுக்குச் சமயக்கல்வியும் தத்துவ விசாரணையும் கற்றுக் கொடுத்துச் சமய வாழ்க்கையின் நுழைவுக்குரிய சடங்குகளாகிய தீக்கைகளைச் செய்வித்துச் சமய வாழ்க்கையில் ஆற்றுப்படுத்துவர். அப்பரடிகளுக்குத் திலகவதியார், “திருவாளன் திருநீறு” நல்கித் தீக்கை செய்வித்துத் திருவதிகைத் திருக்கோயிலுக்கு ஆற்றுப்படுத்திய அருமைப் பாட்டினை அறிக.
ஞானாசிரியர்களின் திருமடங்கள் மக்களைச் சமய வாழ்க்கைக்குப் பக்குவப்படுத்தும் பணியை ஏற்றுக் கொள்ளும் நிறுவனங்கள். அவை மக்களின் சமய அனுபவங்களைக் கண்காணித்து நெறிப்படுத்தி மேலும் மேலும் வளர்க்கும் பணிக்கும் பொறுப்பு உடையன, திருக்கோயில்கள் சமய அனுபவத்திற்குரியன. இந்நெறி முறையில் இணைந்த பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றால்தான் நமது சமுதாயம் சமய நெறியில் நின்றொழுக இயலும்.
இன்றைய நிலை என்ன? திருமடங்கள் மக்களுக்குத் தீக்கைகள் செய்விப்பதை மறந்துவிட்டன. இல்லை, கடமையல்ல என்று கூறி மறுக்கின்றன. ஏன்? ஒருபுறம் நிலவும் சாதிமுறைத் தடை, பிறிதொருபுறம் இல்லறம், துறவறம் தடை என்றெல்லாம் கூறுவர். இவை பொருளற்ற சமாதானங்கள். உண்மையான காரணம் அவற்றுக்கு ‘உயர் மனப்பான்மை’ வந்துவிட்டது. மக்களிடத்திலிருந்து ஒதுங்கி வாழ்வதுதான் சிறப்பு, பெருமை என்ற முடிவுக்கு வந்துவிட்டன.
இங்ஙனம் நிலைமைகள் மாறியதற்குக் காரணம் அவைகளின் செல்வச் செழிப்பும் அவ்வழி கால்கொண்ட சாதீய முறைகளுமேயாம். இவை இரண்டின் காரணமாக அவைகளைச் சார்ந்து பிழைப்பு நடத்துகின்றவர்கள் அவைகளின் திசைகளையே மாற்றிவிட்டனர். மேலும் ஒரு காரணம் தமிழர்களில் பெரும்பான்மையோர் உண்மையில் துறவை விரும்புவதில்லை. அஃது அவர்களின் நாகரிகமும் அன்று. அதனால் பரவலாகத் திருமடங்களுக்குத் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தூய பணிகளைச் செய்யத் தம் பிள்ளைகளை அனுப்புவதில்லை. அதனால் திருமடங்களில் துறவிகளின் எண்ணிக்கை எப்பொழுதுமே பல்கிப் பெருகியதில்லை. அதன் காரணமாகச் சில சமயங்ககளில் சந்தையில் மலிவாகக் கிடைத்த சிலர் துறவிகளாயினர்.
எனவே, செந்தமிழ் நூற்புலமைக்கும், சித்தாந்த ஞானத்திற்கும் உறைவிடமாக இருந்த திருமடங்கள் காலப்போக்கில் அந்தத் தகுதியை இழந்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பழமொழி வழங்கப்படுகிறது. வயது வந்த பிள்ளையை வைத்திருக்கிற சைவர்களைப் பார்த்துப் பிள்ளைகளை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டால், “இருக்கவே இருக்கு தண்ணீர் வண்டி, இல்லையென்றால் தம்பிரான் பதவி” என்று கூறுவார்களாம்.
அதாவது நெல்லை மாவட்டத்துச் சைவ வேளாளர்கள்-வளமுடைய சைவ வேளாளர்கள். அவர்கள் ஆற்றின் தண்ணீர் மட்டுமே குடிப்பர். வாய்ப்பில்லாத சைவ இளைஞர்கள் தண்ணீர் வண்டியில் தண்ணீர் எடுத்துச் சென்று கொடுக்கும் பணி செய்வர். இல்லையேல் தம்பிரான் பதவிக்குப் போவார்கள். தண்ணீர் வண்டி இழுப்புப் பணியையும் தம்பிரான் பணியையும் ஒன்றாக எண்ணும் நிலைமையை எண்ணி வேதனைப்படத்தான் வேண்டியிருக்கிறது.
இத்தகு நிலைமைகள் வளர்ந்ததன் காரணமாகத் தகுதி வாய்ந்தவர்கள் திருமடங்களுக்குத் துறவிகளாக வரும் வாய்ப்பு அருகிப்போயிற்று. தகுதியற்றவர்களாக வந்தாலும் அவர்களைத் தகுதியுடையவர்களாக ஆக்கும் சமயக் கல்வியை, ஞானத்தை வழங்கி அவர்கள் நிலையை உயர்த்தும் நிலையில் திருமடங்களின் பிற்காலத்திய நிலை இல்லாமல் போயிற்று.
ஒரு காலத்தில் திருமடங்களில் பணிவிடை செய்தவர்கள் கூட, சித்தாந்தச் செந்நெறிக் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள ஆர்வமுடையவர்களாக இருந்தனர். அவர்களுக்கு எளிதாக, உயர்வு தாழ்வு பாராட்டாது சமய ஞானத்தைக் கற்றுத்தருகிற இனிய எளிய மனப்போக்கு திருமடங்களின் தலைவர்களிடத்தில் இருந்தது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் மூன்றாவது மகாசந்நிதானமாக அமர்ந்திருந்த திருவருள்திரு. அம்பலவாண தேசிகசுவாமிகளிடத்தில் பூசைக்கு மலரெடுத்துத் தரும் பணிவிடை செய்த, “பணிவிடைக்கு”ச் சித்தாந்தத்தைக் கற்றுத் தர, பூப்பிள்ளை அட்டவணையென்று ஒரு சமய சாத்திர நூலே தோன்றியது. திருமடங்களில் பணிவிடை செய்தவர்களுக்குக் கூட அந்த அளவுக்குச் சித்தாந்தச் செந்நெறி ஆர்வம் இருந்தது.
திருமடங்களில் பணி செய்தவர்கள் தீக்கை பெற்றே இருந்தனர். பல பணியாளர், அலுவலர்கள் சிவபூசையே செய்திருக்கின்றனர். இன்றைய நிலை என்ன? திருமடங்களில் துறவிகள் எண்ணிக்கை பெருக வேண்டும். அவர்களுக்குக் கல்வியும் ஞானமும் வேண்டும் என்று திருவுள்ளம் பற்றிய தருமபுரம் ஆதீனத்தில் 25ஆவது மகாசந்நிதானமாக அருளாட்சி செய்த கயிலைக்குருமணி அவர்கள் செந்தமிழ்க் கல்லூரி கண்டு, திருமடத்தின் துறவிகளைத் தமிழ்த்துறையில் பயிற்றுவித்தார்கள். சித்தாந்த சாத்திர வகுப்புகளை நடத்தித் தத்துவப் பயிற்சியைக் கொடுத்தார்கள். அவர்களே வாய்ப்பு நேரிடும் பொழுதெல்லாம் சிறந்த உரையாடல்கள் மூலமும் ஞானசாத்திர உண்மைகளைப் புலப்படுத்தினார்கள்
திருமடங்களின் வரலாற்றில் மீண்டும் கற்றறிந்த துறவிகளைக் கொண்டு வரவும், பணிகளில் ஈடுபடுத்தவும் தருமபுர ஆதீனம் முன்வந்த வரலாற்று நிகழ்வு, ஒரு சமய மறுமலர்ச்சிக் காலம். இன்றைய இளைய தலைமுறை, இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்தச் சமய மறுமலர்ச்சியை எளிதில் மறக்காது.
பொதுவாக திருமடங்களின் பணிநிலைகள் மன நிறைவைத் தரத்தக்கன என்று கூறமுடியாது. புறச்சமயங்களின் வளர்ச்சியும், சமயச் சார்பற்ற அரசின் தோற்றமும் திருமடங்க்ளின் முன்னால் பல்வேறு பணிகளை வைத்துள்ளன; அறைகூவல்களை வைத்துள்ளன. அவைகளைச் சந்திக்கக் கூடிய சக்தியை நமது சைவத் திருமடங்கள் பெற்றாக வேண்டும். சைவத் திருமடங்கள் பொருள், வாய்ப்பு, பெருமை இவற்றின் காரணமாகத் தம்முள் முரணி நிற்கும் நிலை அறவே மாற வேண்டும்.
நமது ஒப்புயர்வற்ற சிவநெறியையும் சமுதாயத்தையும் காக்கத் தோன்றிய திருமடங்கள் தமக்குள்ளேயே முரணிக் கொண்டு முறையீட்டு மன்றங்களுக்குச் செல்வது வேதனையைத் தருகிறது. இந்த முரண்பாடுகளுக்குள்ள காரணங்கள் அற்பமானவைகள்.
நமது சைவத் திருமடங்கள் அவைகளின் நோக்கத்தை நிறைவேற்றவும், காலத்தின் தேவைக்கு, கொண்டு வந்து சேர்த்திருக்கும் பணிகளைச் செய்யவும் தம்முள் தனித்தனி நிறுவன உணர்வுகளைக் கடந்து, துறந்து ஒருமையுணர்வுடன் ஓரமைப்பாக உருப்பெற வேண்டும். பல நூற்றுக்கணக்கில் துறவிகளை-தொண்டர்களைத் தயார் செய்ய வேண்டும். முறையான பணிப் பங்கீடும், நிதிப் பங்கீடும் செய்து சிவநெறியைச் சார்ந்த மக்களை, கல்வியில், தரத்தில் ஞானத்தில் உயர்த்த வேண்டும்.
நமது திருமடங்களின் நிலையில், வலிமைக் குறைவுகள் அகநிலையிலும், புறநிலையிலும் வளர்ந்து புறத்தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்து அறநிலையச் சட்டம் அவர்களைப் படிப்படியாகக் கணக்குப் பிள்ளைகளாக்கிக் கொண்டு வருகிறது. திருமடங்களின் தலைவர்கள் தம்மைத் தாமே சிறந்த கூட்டமைப்புக்கும், நேரிய நிர்வாகத்திற்கும் தணிக்கைக்கும் மேற்பார்வைக்கும் தமக்குள்ளேயே விகார உணர்ச்சிகளின்றி ஏற்பாடுகள் செய்துகொண்டு நமக்கு நாமே ஆட்பட்டுக் கொள்கின்ற நிலை உருவாகுமானால் திருமடங்களின் வரலாற்றில் அரசின் தலையீடுகளைக் குறைக்க முடியும்.
விவிலிய சமயத்தில் அரசின் தலையீடு இல்லை. ஏன்? அது அத்தகைய கூட்டாட்சி முறையை மேற்கொண்டிருப்பதே காரணம். கிறித்துவத் துறவிகள் இடமாற்றங் களுக்கும் பணிமாற்றங்களுக்கும் உரியவர்கள். அவர்களிடத்தில் வரம்புகள் வரையறுக்கப்படாத வைப்புநிதியும் இல்லை. வரையறுக்கப்படாத அதிகாரங்களும் இல்லை.
தன்னிச்சைக்கும் சுதந்திரத்திற்கும் உள்ள வேறுபாட்டை நமது சமயத் தலைவர்கள் அருள்கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். தன்னிச்சைப் போக்கு கீழ்மையானது. யாருக்கும் கட்டுப்படாதது. ஏன்? தமக்குத் தாமே கூடமனசாட்சிக்குக் கூட கட்டுப்பட மாட்டார்கள்.
சுதந்திரம் என்பது துய்மையானது; உயர்ந்தது; சுதந்தர உணர்வுடையவர்கள், சொல்லும் உரிமையும் பெறுவார்கள் கேட்கும் கடமையும் பூண்பார்கள். ஆளவும் செய்வர்; ஆட்படவும் செய்வர். இத்தகு சுதந்திரம்தான் திருமடங்களுக்குத் தேவை.
தம் நெறி நிற்பார், நம்மையொத்த திருமடத்துத் தலைவர்களுடன் கலந்து பேசியும் சொல்வன சொல்லியும், கேட்பன கேட்டும் தக்காங்கு ஒத்ததறிந்து ஒழுகி, ஆளவும் ஆட்படவும் தம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டு, பணிப்பங்கீடுகள் செய்து முறையாகச் செயற்பட்டால்தான் “மேன்மைகொள் சைவ நீதி” உலகம் எல்லாம் விளங்கும். இதனை அவர்கள் செய்ய முன்வர வேண்டும். இல்லையெனில் சித்தாந்தச் செந்நெறியில் ஆர்வமுடையோர் இந்நிலை கொள்ளும் வழிவகை பற்றிச் சிந்திக்க வேண்டும்; செயற்பட வேண்டும்.
இந்தியா சமயச் சார்பற்ற ஒரு நாடு. இந்த நிலையை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கடந்த காலச் சமயத் தலைவர்களும் புரோகிதர்களும் கொண்டு வந்து விட்டனர். இந்த அவல நிலை உருவாகாமல் தடுக்க தோன்றிய புத்தர், குருநானக், பசவேசர், விவேகானந்தர், வள்ளலார் ஆகிய இந்திய சமயச் சிந்தனையாளர்களுடைய தூய சமுதாய நலம் பயக்கத்தக்க கருத்துக்களை இறுக்க நிலையடைந்த பழைய சமய நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன. இவைகளின் காரணமாக இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றாத, அயல் நிலங்களில் தோன்றி வளர்ந்து வந்த சமயநெறிகளை இந்திய மக்கள் அவாவி அடையும் நிலை தோன்றிவிட்டது.
இன்று இந்தியாவில் பல சமயத் தலைவர்கள் வாழ்கிறார்கள். இன்றையச் சூழ்நிலையில் இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடாக விளங்குவதும், இந்திய அரசு சமயச் சார்பற்ற அரசாக விளங்குவதும், தவிர்க்க முடியாதன. அதுவே நியாயமும் நீதியும் சார்ந்த முறையாகும். ஆதலால் இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடாக விளங்குவதை மனித மதிப்புகளை அறிந்தோரும், சமயக் காழ்ப்பு அற்றோரும், மனித குலத்தின் அமைதியை விழைவோரும் விரும்பி வரவேற்பது கடமை.
இந்திய நாட்டின் சூழலில் மத மாற்றங்களும், மத வெறிச் செயல்களைத் தூண்டும் பேச்சும், எழுத்தும் கட்டாயமாகத் தடைசெய்யப் பெற வேண்டும். வயது வந்தோர் தமது மதமாற்றத்திற்குரிய அவசியத்தை அல்லது விளக்கத்தை முறையாக ஒரு முறை மன்ற நடுவரிடம் எழுத்து மூலம் தெரிவித்துத் தக்க காரணங்கள் இருப்பின் இசைவு பெற்ற பிறகு மாறலாம் என்ற ஒழுக்க நடைமுறையைச் செயற்படுத்த வேண்டும்.
ஆட்டு மந்தைகளைப் போல மக்களை நினைத்து, ஆசைகளைத் தூண்டிவிட்டுத் தமது சமயத்தைச் சார்ந்த மக்கள் தொகையின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் இந்தியாவில் தமது சமய ஆதிக்கத்தை, அவ்வழி சாதி இன ஆதிக்கத்தை வளர்த்து நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு மதமாற்றங்கள் செய்ய எந்தச் சமய நிறுவனத்திற்கும் உரிமை இருத்தல் கூடாது. தொடர்ந்து இந்த மனப்போக்கை அனுமதித்தால் இந்தியாவின் புகழுக்குக் காரணமாய் அமைந்த சமயப்பொறை கெடும்; மீண்டும் உலக நாடுகளை வருத்தி வரலாற்றுக்குச் சீரழிவு செய்த சமயக் கலகங்கள் நிகழ வாய்ப்பளித்ததாகிவிடும்.
ஆதலால், உண்மையான சமய நம்பிக்கையுடைய ஒவ்வொருவரும் இன்றைய நிலையில் இந்தியாவைச் சமயச் சார்பற்ற நாடாக விளங்கச் செய்ய மனம் ஒப்பி முன்வர வேண்டும். மறைவாகக் கூட சமயப் பொறைக்கு எதிரான சிந்தனைகளை, செயல்களை யாரும் ஊக்குவிக்கக்கூடாது. அவரவர் தத்தம் சமயநெறியை மேற்கொண்டொழுதல், முறையாக வளர்த்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுதல் நல்லது.
ஒரு நாட்டின் நிலப்பரப்பில் பிறிதொரு நாடு ஆக்கிரமித்தல் எங்ஙனம் தவறு என்று “உலக நாடுகளின் பேரவை” விதிகள் இயற்றியுள்ளதோ அதுபோலச் சமய நெறிகளும் பிறிதொரு சமயத்தை மேவி அமுக்குவதில்லை; சமயக் கருத்துக்களில் கலப்படம் செய்வதில்லை என்ற நியாயத்திற்கு உடன்பட்டு வரவேண்டும்.
இன்று உலக நாடுகளின் அரசியல், ஆட்சி உரிமைகள், பொருளியல் காரணமாக நாடுகளிடையில் மோதல்கள் வராமல் தடுக்கும் பணி இதன் பணி வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் உதவி செய்கின்றன. இந்த உலக நாடுகள் பேரவையின் பணியால் பதட்டநிலை கட்டுப்படுத்தப் படுகிறது. அதுபோல உலகச் சமயங்களின் பேரவை சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். பல உறவுகளை வளர்க்க வேண்டும். காலப்போக்கில் உலகப் பொதுச் சமயம் காண வேண்டும். சமய நெறித் தலைவர்கள் இது பற்றிச் சிந்தனை செய்ய வேண்டும். உலகச் சமயப் பேரவை தோன்றின் மனித குலம் மேம்பாடுறும்.
இன்று உலகம் பதற்ற நிலையிருக்கிறது. ஒவ்வொரு நாளும் படைகளைப் பெருக்கி வளர்க்கிறது. சில விநாடிகளில் மனித உலகத்தை-உயிரினங்களை அழிக்கக்கூடிய அணு ஆயுதங்களைச் செய்து குவிக்கிறது. இந்த நிலையில் சமய நெறிகள் வாளாயிருக்குமாயின் சமய நெறிகளால் மனித குலத்திற்கு யாது பயன்? இங்ஙனம் சமய நெறிகள் தம்முள் ஒத்ததறிந்து செயற்படாமையின் காரணமாகவும் மனிதகுல மேம்பாட்டுக்குச் சமயநெறி முழுமையாகப் பயன்படாததன் காரணமாகவும் ஏமாற்றம் அடைந்த சிந்தனையாளர்கள் கடவுள் நம்பிக்கையில்லாத் வாழ்க்கை நெறிகளை, சமயம் சாராத வாழ்க்கை நெறிகளை, தத்துவங்களைக் கண்டு வருகின்றனர். இந்த அணிக்கு மார்க்சியம் தலைமையேற்றுப் பீடு நடைபோட்டு வருகிறது.
கிறித்துவ சர்ச்சுகளின் ஏகபோகத்தை-மக்கள் மன்றத்திலிருந்த தடையிலாச் செல்வாக்கை “புதுயுகப் புரட்சி” கண்ட சோவியத்துச் சமுதாயம் தடுத்து நிறுத்தி, சர்ச்சுகளிடமிருந்து மக்களைப் பிரிந்து எடுத்துச் சென்று புதிய வாழ்க்கை முறைக்கு ஆயத்தம் செய்கின்றது. இந்த வரலாற்று நிகழ்வு சரியானதா? தவறானதா? என்ற விவாதத்திற்கு நாம் இப்பொழுது வரவில்லை.
“கடவுள் நம்பிக்கையில்லாமல், சமயம் சார்ந்த சீலமில்லாமல், ஒரு பொதுமைச் சமுதாயத்தை அமைத்து மானுடச் சாதியை இன்பமாக வாழ வைக்க முடியும்” என்ற நம்பிக்கையை ஓரளவு மார்க்சியம் தந்துள்ளது. வரலாற்றுப் போக்கிலும் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. இது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை. ஆயினும், பொது வுடைமைச் சமுதாயத்தில் எல்லா நலங்களும் எய்திய பிறகும்கூட, ஏற்படும் மனிதக் குறைபாடுகளுக்கு என்ன மாற்று? என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை. உலகியல், பொருளியலைப் பொறுத்தவரையில் பொதுவுடைமைக் கொள்கை சரியானது என்றே நாம் கருதுகின்றோம்.
சிவநெறியில் உள்ள கடவுட் கொள்கை நீங்கிய பகுதி, பொதுவுடைமை என்று பெயர் பெற்றுள்ளது என்று கூறினாலும் தவறன்று. மார்க்சீயம், கடவுளால் உயிர்களும், உலகமும் படைக்கப்பட்டன என்ற கொள்கையுடைய சர்ச்சு மதத்தைச் சந்தித்தது. சைவசித்தாந்தம் சொல்லும் உயிர் நிலைக்கும் மார்க்சீயத்துக்கும் வேறுபாடு பெரிதன்று. மனிதனைவிட மேம்பட்ட ஒன்றை மார்க்சீயம் ஏற்பதில்லை. சைவ சித்தாந்தம் மனிதனை மேம்பாடுடையவனாகவே தான் காண்கிறது.
பல ஆண்டுகள் சோவியத் புரட்சித் தொண்டர் படையில் பணி செய்து பொதுவுடைமைத் தத்துவத்திற்கு ஒளிவிளக்காகத் திகழ்ந்து, பொதுவுடைமைத் தத்துவத்தைப் பொருத்தி, அழித்துவிட எண்ணிய நாசிசத்தை - பாசிசத்தை எதிர்த்து, வெற்றிவாகை சூடிய வீரன் “ஸ்டாலின்” வாழ்க்கையில் ஏற்பட்ட பின்விளைவுகள் என்ன? இரண்டாவது உலகப் பெரும்போரில் ஸ்டாலின் பெற்ற பெரு வெற்றிக்குப் பிறகு, ஸ்டாலின் தன்னிச்சைப் போக்காக நடந்து கொண்டார்.
பொதுவுடைமைக் கொள்கையின் இன்றியமையாத ஒழுக்க நெறிகளாகிய கூட்டுச் சிந்தனை, கூட்டுச்செயல் ஆகியவற்றினின்றும் முறை பிறழ்ந்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அவருடைய மரணத்திற்குப் பிறகுகூட உயர்தரக் கல்லறையிலிருந்து அவருடைய பிணம் பொதுவுடைமைக் கட்சியினாலேயே அகற்றப் பெற்றது. இந்த விளைவுகளை உற்றுநோக்கின் சைவசித்தாந்தம் கூறும் ஆணவம்-இல்லை என்று கூற யாருக்கு மனம் வரும்? உயிர் இயல்பில் ஆணவச் சேர்க்கையுடையது.
ஆணவம், உயிரைத் தன்னிச்சைப் போக்கிலும் அகங்கார வழியிலும் செலுத்தும்; அதன் காரணமாக உயிர் கீழ்மையுறும். சூழ்நிலைகளின் காரணமாக ஆணவம் தோற்றப்படாதிருந்தாலும், செயற்படாதிருந்தாலும் சூழ்நிலைகள் மாறும்பொழுது உயிரின் ஆணவ இயல்பு மேலிட்டுச் செயற்பாட்டுக்கு வரும். இதனை உணர்ந்து என்றும் உயிரை, உணர்வை கடவுள் என்ற தலைவனுக்கு ஆட்படுத்தி வைப்பது தற்காப்பாகும் என்ற சித்தாந்தச் செந்நெறியின் கருத்து ஆராய்தற்குரியது.
பொதுவுடைமைக்கொள்கையின் குறை-நிறைகளை ஏற்றுக் கொண்டு ஈடுகொடுத்துச் சமய நெறியை வளர்க்கச் சமயங்கள் முன்வரவில்லை. எனவே மனித குலத்தின் பொது நன்மை கருதியும் சமயப் பண்புகளைக் காக்கவும் “உலகச் சமயங்களின் ஒருங்கிணைப்பு நிறுவனம் காணவேண்டும். அது காலத்தின் தேவை. இத்தகு பொற்காலமே சித்தாந்தச் செந்நெறி படைக்கும் தகுதியுடையது. அந்தப் பொற் காலத்தை எதிர்பார்ப்போமாக!”
சைவ சித்தாந்தத்தில் வாழ்க்கை அருமையானது. சைவ சித்தாந்தத்தில் சாதிகள் இல்லை; சிறந்த மனையறம் போற்றப் பெறுகிறது. பொருளியல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்பே சைவ சித்தாந்தச் செந்நெறி! சைவ சித்தாந்தத்தின் தத்துவம் செயலுருக் கொள்ளுமானால் வையகம் இன்புறும்! இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க!
சிவ சிவ
3
சித்தாந்தச் செந்நெறி
* * *
தோற்றுவாய்
மனித வாழ்க்கை அரியது. ஆற்றல் மிக்கது. நுட்பமானது; ஆக்கத்தின் பாற்பட்டது; அறிவுடையது; சுதந்திரமுடையது. அதேபொழுது அறிவு, ஆற்றல், இன்பம் இவற்றின் எல்லை விரிவாகும் இயல்பினது. வாழ்தல், எளிதன்று. இன்று பலர் வாழவில்லை! பிழைப்பு நடத்துகின்றனர். வாழ்வாங்கு வாழ்தல் மனிதகுலத்தின் குறிக்கோளாகும். மனிதகுலம் வாழ்வாங்கு வாழும் பொழுதே வையகம் சிறக்கும். மனித வாழ்க்கை, அழுது புலம்புவதற்காக அமைந்ததன்று. வாழ்க்கை மகிழ்ச்சியுடையது; மகிழ்ச்சிக்குரியது. ஆனால் இன்று எங்குநோக்கினும் அவலம்! அமைதியின்மை! கரவாடும் வன்னெஞ்சங்கள்! பொக்கம்பேசிப் பொழுது போக்கும் புல்லறிவாண்மை! ஞானத்தில் நாட்டமில்லை! அன்பில் ஆர்வமில்லை! தொண்டுநெறி தொடர்வாரில்லை! ஆதலால் இன்ப உலகம்-இன்பப் பிறப்பு, துன்பமாகத் தோற்றமளிக்கிறது. திருவருள் வழங்கிய பரிசு தண்டனையாக உருமாற்றம் பெற்றுவிட்டது! சிறை நீக்கத்திற்குக் கிடைத்த வாழ்க்கை, சிறைச்சாலைகளைப் படைத்து முடக்கிக் கொண்டிருக்கிறது. விடுதலைக்காக வழங்கப்பெற்ற வாழ்க்கை, கொத்தடிமைத் தனத்திற்கு ஆளாகி விட்டது: இந்தக் கொடுமையை எண்ணுமின்! இந்தப் பொய்ம்மையை நிந்திக்கக் கற்றுக் கொண்மின் ! ஒன்றாக உயர்ந்துள்ள நன்மையை நாடுமின் வழிபாடு என்பதற்கு வழிநிற்றல் என்று பொருள் கொண்மின் வழிப்படுதலே வழிபாடு ஆயிற்று. வழிப்படுதலின்றி வழிபாடு பயன்தராது. நன்றுடையான்றன் நன்னெறியின் வழி நின்று செயற்படுதலே வழிபாடு! உழைத்து உய்யும் தொண்டுநெறி தொடர்தலே வாழ்க்கை! அந்நெறி நிற்க முயற்சிசெய்வோமாக!
மனித குலத்தின் தேவை சமயம்
மனித வாழ்க்கையில் சமயம், தேவையில் மலர்ந்த ஒன்று. உடலியல் வாழ்க்கை ஐம்பூதங்களைத் தேவையாக வுடையது. உடல், எப்பொழுதும் தனக்கு இன்பத்தையே எதிர்பார்க்கும் இயல்புடையது. ஆன்மா, இதற்கு எதிரியல்புடையது. ஆன்மா உயிர்ப்புள்ளதாக இருப்பின் பிறர் நலத்தையே நாடும். வளரும் ஆன்மாவில் மலர்ந்த தேவையின் விளைவே சமயம். சிற்றறிவின் தேக்கத்தைத் தெரிந்து பேரறிவாகிய ஞானத்தின் பாற்கொண்ட நாட்டமே சமய உணர்வு முகிழ்த்த இடம். சமயம் என்பது வளர்ந்த ஆன்மா தன்னுடைய வளர்ச்சியைப் பாதுகாத்துக்கொள்ளவும், மேலும் வளரவும், முழுமைப் படுத்திக்கொள்ளவும் துணையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறை; தன்னுணர்வினாலேயே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு; மனித உயிர்கள் மதிப்புக்களைக் கடந்தவை. அவைகளை ஆதரித்து ஆக்கம் தருவது முதற்கடமை. அங்கனம் ஆக்கம் தரத் தவறிவிட்டால் அன்பு ஊற்றுத் தோன்றாது; வறட்சி தலைகாட்டும்; வம்புகள் தோன்றி வையகம் துயருறும், சமயம் ஒரு முழுத்தத்துவம்; அது வளர்ச்சிக்குத் துணை செய்கிறது; பாதுகாப்புத் தருகிறது; துய்ப்ப்பும் வழங்குகிறது; வாழ்விக்கிறது. சென்ற காலத் தலைமுறை, சமயத்தை விடச் சிறந்த ஒரு கொடையை மனித உலகத்திற்கு வழங்கவில்லை! இனிமேலும் வழங்க முடியாது!
சமய நம்பிக்கை உண்மையைக் காட்டுகிறது. சமய நம்பிக்கையுடையோரின் அறிவு நேரடியாக இருக்கும். அவர்கள் சுற்றி வளைக்கமாட்டார்கள்! அவர்கள் அறிவில் எளிமையும், தழுவும் மனப்பாங்கும் பொதுளும் சமய நெறியில் நிற்காதவர்களின் அறிவு கூர்மையாக இருக்கலாம். அவர்கள் “கெட்டிக்காரர்களாகக்கூட இருக்கலாம். பெரியவர்கள் என்று பலர் சொல்லவும் சொல்லலாம். ஆனாலும் அங்கு உண்மை இல்லை; வெளிப்படையான எளிமையான கலந்துரையாடல் இல்லை; பரிவர்த்தனை இல்லை! அஃதோர் ஏகாதிபத்தியம்! ஏகாதிபத்தியம் ஆட்சியின் பேரால் இருந்தாலென்ன? சமய ஏகாதிபத்தியமாக இருந்தா லென்ன? அது தவறே! மனிதன் தன்னுடைய பழக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சீர்படுத்திக் கொள்ளச் சமயம் பயன்படுகிறது. மனித வாழ்க்கையின் தேவையாகத் தோன்றிய சமயநெறியில் இன்றைய உலகம் நிற்கவில்லை. ஆனால் சமயம் பற்றிய பேச்சு, ஆரவாரமான வழிபாடுகள் இவைகளுக்கு யாதொன்றும் குறைவில்லை. உண்மையான சமய நெறியை யாரும் குறை சொல்வதில்லை! சொன்னாலும் சொல்பவர்கள் பைத்தியக்காரர்களாக்கப்படு கின்றனர்: பைத்தியக்காரர்களாக ஆக்கப்பட்டாலும் பரவாயில்லை! சமுதாய எதிரிகளாகச் சித்திரிக்கப்படுகிறார்கள்!
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “சமுதாயம் வளர்ந்தால் சமயம் வளரும்”, “திருக்கோயிலில் எழுந்தருளி யுள்ள பெருமானைப் பூவும் புனலும் சொரிந்து எல்லாரும் வழிபடலாம்” என்ற சிந்தனைகளையே தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், நெருக்கடிக் காலத்தைப் பயன்படுத்தி ஒரு சமய இயக்கத்தையே முடக்கி விட்டனர். மறைமுகமான இந்து ஏகாதிபத்தியத்திற்குக் கால்கோள்செய்தனர். இலட்சக்கணக்கான மக்களிடத்தில் இயக்கத்தின் செய்தி சென்றிருந்தாலும், இயக்க இயங்கும் உயிர்ப்பில்லாத மக்களிடத்தில் தேக்கநிலை தெரிந்ததேயன்றி எதிர்த்தாக்குதலுணர்வு வரவில்லை. தமிழக வரலாற்றின் தொய்வுக்குக் காரணம் இதுவேதான். தூய்மையான உணவு, உடல் நலத்தைத் தரும். ஒன்றை நம்பும் தூய்மையான சிந்தனை, உயிர் எழுச்சியைச் தரும்.
எதிலும் கலப்படம் தீது. காற்றுப் கலப்படத்தைப் பற்றிப் பத்திபத்தியாக எழுதுகின்றனர். உணவுக் கலப்படத்திற்குத் தண்டனை வழங்கச் சட்டமே வந்து விட்டது. கருத்துக் கலப்படத்திற்கு ஏன் இன்னும் எதிர்ப்புத் தோன்றவில்லை? சிந்தனையில் நாட்டமின்மை, அறிவில் தெளிவின்மை, பிழைப்பு மனப்பான்மை ஆகியவற்றால் நமது சமுதாய உள்ளீடழிந்து விட்டது. மனித வாழ்க்கையை உயிர்ப் புள்ளதாக்கி முழுமையாக்கும் உணர்வின் தேவையிலேயே தோன்றியது சமயம். சமயம் கடவுளுக்காகத் தோன்றியதன்று; மனிதனுக்காகவே தோன்றியது. மனிதனின் தேவையில் மலர்ந்தது; கடவுளுக்கும் மனிதனுக்குமிடையேயுள்ள இடைவெளியை இட்டு நிரப்பத் தோன்றியது. கடவுளின் புகழ்பாடுவதற்காகத் தோன்றிய தல்ல சமயம். மனிதனின் புகழை வளர்க்கத் தோன்றியது. அதற்குக் கருவி, இறைவனின் புகழ் பாடுதல். சமயம் இருந்தும் அதனுடைய தேவை உணரப்படாமையின் காரணமாக, அந்தச் சமயநெறி மனித வாழ்க்கையை நிறைவாக்கும் பாங்கினை அறிய முடியாமையின் காரணமாக இன்றியமையாத் தேவையான ஒன்றைத் தேவையில்லை என்று சொல்கிற கருத்து உருவாகிவிட்டது. சமயம், இட்டு நிரப்ப முடியாத இடைவெளியாகி விட்டது. அந்த வெட்ட வெளியைச் சமயத் தொடர்பில்லாமலேயே பொதுவுடைமைத் தத்துவம் நிரப்பும் என்ற நம்பிக்கை தோன்றி வளர்ந்து வருகிறது. இதற்குக் காரணம் காரல்மார்க்சும் இங்கர்சாலுமல்லர்; தலைவர் பெரியாரும் அல்லர். மனித வாழ்க்கையின் இடைவெளிகளை இட்டு நிரப்பாமல் பொதுவில் ஆடுபவன் நீழலில் பொதுமையைக் காணாமல், தீமையை அகற்றாமல், நன்மையைச் சாதிக்காமல், துன்பத்தைத் துடைக்காமல், இன்பத்தைப் படைக்காமல் கிழடு தட்டிச் செயலிழந்து போன நமது சமய அமைப்புக்களின் குறையுடைய நடைமுறைகளே காரணம். மீண்டும் மனித குலத்தின் உயிர்ப்புள்ள தேவை சமயம் என்பதை உணரச் செய்தற்குரிய சிந்தனையில் ஈடுபடுங்கள்! சிந்தனைக்குச் செயலுருவம் வழங்குங்கள்!
சமயத்தின் இலக்கணம்
சமயம் என்பது ஒரு தத்துவம்; வாழ்க்கை முறை. சிந்தனைக்கு வரைமுறைகள் உண்டு. ஆனாலும் சிந்தனைக்கு வரம்பில்லை. உயர்ந்த சமயம் என்பது மனித வாழ்க்கையை மேம்பாடடையச் செய்வதை மையமாகக் கொண்டே விளங்கும். உணர்ந்த சயமம் மனிதனுக்கு அவனை அறிந்து கொள்ளச் செய்யவும், அவனிடமுள்ள குறைகளையும் அவ்வழி நிகழும் குற்றங்களையும் உணரச் செய்யவும் வேண்டும். குறைகள் வேறு; குற்றங்கள் வேறு. குறைகள் உயிர் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை முழுமையாகப் பெறாமை! அந்த வறுமையின் காரணமாக ஏற்படுவன குற்றங்கள்! குறைகளுடையாரிடத்தில் குற்றங்கள் இருக்கும். குற்றங்களிருப்பாரிடத்துக் குறைகளிருக்குமென்று உறுதியாகக் கூறமுடியாது. உயிரியல்பில் குறையில்லாதாரிடத்தும் ஒரோ வழி குற்றங்கள் நிகழும். அக்குற்றம் அவரிடமிருந்த குறையினால் விளைந்ததன்று. சமுதாயக் குறையினால், ஆட்சிக் குறையினால் தோன்றும் குற்றங்களும் உண்டு. உயிர்கள்தம் நிலையினை உணரச் செய்தலும் குறைகளினின்றும் நீங்கி நிறைகளைப் பெறத் தூண்டுதலும் சமயத்தின் முதல் இலக்கணம். இதுவே, சமயத்தின் தொடக்கம்.
உயிர்-ஓர் விளக்கம்
இந்த முதல் அடிப்படை இலக்கணம்கூட இன்றுள்ள நிலையில் பல சமயங்களுக்கு இல்லை. உயிர்களைக் கடவுள் படைத்தார் என்று சில சமயங்கள் கூறுகின்றன. உயிர்கள் கடவுளின் படைப்புப் பொருள்களானால், உயிர்களிடம் காணப்படும் குறைகளுக்கும் கடவுளே பொறுப்பேற்க வேண்டும். உயிர்கள் கடவுளின் படைப்பாகிவிட்டால் வளர்ச்சி ஏது? நிறை நோக்கிய பயணம் ஏது? குறிக்கோள் ஏது? நாட்டம் ஏது? வழிபாடுதான் எதற்கு? இஃதொரு விநோதமான நிலை. வேறு சிலர் ‘உயிர்களே கடவுளின் பிரதிபிம்பம்’ என்கின்றனர். அந்த வழியில் பார்த்தாலும் உயிர்களுக்குக் குறையிருக்க முடியாது. ஒரு வெல்லக் கட்டியில் உடைத்த இருபகுதியிலும் ஒரே சுவைதான் இருக்கும். ஒளியின் பிரதிபலிப்பு ஒளியுடையதாகத் தானிருக்கும். அப்படியானால் உயிர்களுக்குக் குறையிருக்க வழியில்லை. ஆதலால் உபதேசமும் தேவையில்லை! வழிபாடும் தேவையில்லை! இஃதொரு புதுரகமான பைத்திய உலகம்! இத்துறையில் செழுந்தமிழ் வழக்குச் செந்நெறியாகிய சித்தாந்தச் சிவநெறி ஐயத்திற்கிடமின்றி விளக்குகிறது: “உயிர், உள்பொருள், என்றும் உள்பொருள். உயிர்களுக்குத் தோற்றமும் இல்லை; அழிவும் இல்லை. உயிர் ஒன்றன்று; பலப்பல! உயிர் இயல்பாகக் குறையுடையது; அறியாமையில் பிடிப்புண்டது; ஆயினும் அறிவு பெறுதற்குரியது; சுதந்திரத் தன்மையுடையது. ஆனாலும் இருள்சேர் பிணைப்பில் சுதந்திரத்தை இழந்திருக்கிறது. உயிர் இன்பத் துய்ப்பிற்குரியது. ஆனாலும் துன்பத் தொடக்கில் அல்லலுறுகிறது” என்று உயிரின் இலக்கணத்தைக் கூறுவது குழப்பமில்லாதிருக்கிறது; நடைமுறை உண்மைகளுக்கு இசைந்திருக்கிறது.
உயிர், கடவுளின் பிரதிபிம்பம் அல்லது உயிர் கடவுளால் படைக்கப்பட்டது என்றால் ஆங்கு அறியாமைக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ தேவையுமில்லை; அவசியமுமில்லை. ஆனால் இத்தகைய சமயக் கொள்கையுடையார் அனைவரும் கற்கின்றனர்; அறிவு வேண்டுமென் கின்றனர். விகுதியில் அறிவில்லையென்றால் பகுதியும் ஐயப்பாட்டிற்குரியது என்ற சராசரி அறிவுகூட அவர்களுக்கு இல்லை! சித்தாந்தச் செந்நெறி, ‘உயிர் இயற்கையானது என்பதுபோலவே உயிரில் அறியாமையும், அறியாமைக்குக் காரணமாகிய ஆணவப்பிணைப்பும் இயற்கை’ என்று அறிவுக்குப் புலனாகும் வகையில் விளக்குகிறது மெய்கண்ட நூலாசிரியர்கள் உயிரின் அறியாமையைச் “செம்பிற் களிம்பு” என்று உவமித்து விளக்குவர். செம்பு, படைப்புப் பொருளன்று; இயற்கைப் பொருள், அதில் களிம்பும் யாரும் சேர்த்ததன்று; இயற்கையின் விளைவு! அதுபோலத்தான் உயிர்க்கு உற்ற ஆணவப்பிணைப்பு: செம்பின் பயன் தெரிவார் களிம்பினைத் தேய்த்துத் துய்மைப்படுத்துவர். அதுபோல் உயிர்களின் பயன் தெரிவானாகிய இறைவன், ஆணவப் பிணைப்பிலிருந்து உயிர்களை மீட்க அறிகருவிகளையும் உணர் கருவிகளையும் வழங்கிப் பிறப்பில் உய்த்து விளக்கமுறச் செய்கின்றான்.
செம்பு, விளக்கிய பொழுது களிம்பு போனது போலத் தோன்றும். தூய்மையின் முன்னே களிம்பு அடங்கிக் கிடந்ததே தவிர, அஃது அகன்றுவிடவில்லை. மீண்டும் தூய்மையின் ஆற்றல் குறையும் பொழுது களிம்பு வெளிப்பட்டுத் தோன்றும். அதுபோலவே ஆணவம் அறிவு மேம்படும்பொழுது அடங்கிக் கிடக்கும். அறிவு சோர்வடையும்பொழுது அற்றம் பார்த்துத் தலையெடுக்கும். ஆதலால் என்றும் ஆணவப் பிணைப்பின் அளவை உள்ளடக்கி வைத்திருக்கவேண்டுமானால் ஓயாத சிந்தனையும் குறைவில்லாத ஞானத்தில் நாட்டமும், ஆற்றல் மிக்க அன்பும் தொய்வேயில்லாத தொண்டின் நெறியும், இமைப்போதும் கூடச் சோர்வுற்று அயல்வழிச் செல்லாது தடுக்கப் பயிருக்கு வேலியென அடியார்களின் கூட்டுறவும் தேவையென விளக்கும் சித்தாந்தத் திறன் எங்கே?
கடவுள் இலக்கணம்
உலகம் இயங்குகிறது. இயங்கிக் கொண்டேயிருக்கிறது. ஓய்வின்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திற்கு இயைவாக நிற்கும் ஆற்றலே இறை. அவ்வாற்றல் குறை விலாதது; நிறைவுடையது; தற்சார்பில்லாதது; பொதுமைத் தன்மையது; பழமையானது; ஆனாலும் புதுமைப் பொலிவுடையது. அதுவே கடவுள்! கடவுள், விருப்புகளுக்கு அப்பாற்பட்டது; வெறுப்புகளுக்கு அப்பாற் பட்டது; எல்லை கடந்தது; தோற்றமில்லாதது; அழிவில்லாதது இயல்பியல் பேரறிவினது; பேராற்றலுடையது; அறத்தின் திருவுரு அன்பின் ஆக்கம்; அருளின் பொழிவு; தாயிற் சிறந்த தயாவுடையது; உயிர்களைத் தொடர்ந்து சுழன்று வருவது; உயிர்களை எடுத்தாள்வது; தூசு துடைப்பது; துன்பத்தைத் தொலைப்பது; வாழ்க்கையை வழங்குவது; இடையறாத இன்ப அன்பில் உயிர்கள் திளைக்கத் துணை செய்வது! இது சித்தாந்தச் செந்நெறி காட்டும் கடவுள் இலக்கணம். சித்தாந்தச் செந்நெறியில் கடவுள் இன்பத்திற்கே உரியவன்; இன்பத்தையே வழங்குபவன். அவன் பார்வையில் நரகமில்லை! ஏழை இல்லை-செல்வந்தன் இல்லை! ஓருலகம்! எங்கும் ஒருமை! எதிலும் இன்பம்! இதுவே அவன் ஆனந்தக் கூத்து.
சமயங்களிடையே சைவம்
சமயங்கள் அமைந்து கிடக்கின்ற நிலையினை நோக்கின் சித்தாந்தச் செந்நெறியே செந்நெறி; அதற்கு ஈடானதொரு சமயம் இதுவரையில் தோன்றவில்லை. இந்தச் சித்தாந்தச் செந்நெறியின் தெள்ளிய ஓடை சுமார்த்தக் கலப்பால் கலங்கியிருக்கிறது! கலக்கத்திலிருந்து தெளிவு காண்மின்! வேதாந்தத்தின் பயனாகவுள்ள சைவ சித்தாந்தப் பயன் கொண்மின் !
நாம் இங்ஙனம் கூறும்பொழுது மனிதகுல ஒருமைப் பாட்டுக்கு எதிராகச் சமய வேற்றுமைகளை வற்புறுத்திச் சிற்றெல்லைகளைப் படைப்பதாகச் சிலர் கூறக்கூடும்; அது முற்றாக ஒரு பொய்; நாம் என்றுமே மனிதகுல ஒருமைப்பாட்டை விரும்பி வந்திருக்கிறோம். அதுவே நமது இலக்கு. நமது ஆசிரியன்மார்களும்கூட இந்த மனிதகுல ஒருமைப் பாட்டை வற்புறுத்தியுள்ளனர். வேறுபாடுகளுக்கிடையில் ஒருமைப்பாட்டைக் காண வேண்டுமே தவிர ஒருமைப்பாடு என்ற பெயரில் தனித்தன்மைகளை இழந்து உறுதியற்ற கலப்படத்திற்கு ஆளாகக் கூடாது. அறிவியலானாலும் தத்துவங்களானாலும் அவை தகுதிப்பாடு மிகுந்த அனுபவங்களின் வழித்தோன்றியவை. அனுபவங்களின் காரணமாக வேறுபாடுகள் இருக்கலாம். இவ்வேறுபாடுகள் இயற்கையில் அமைந்தவை. ஆதிபத்திய நோக்கத்தோடு செயற்கையில் உருவாக்கப்பட்ட வேற்றுமைகளல்ல. உலக இயக்கத்திற்குக் காரணமாயிருக்கிற ஐம்பூதங்களிடையே வேறுபாடுகள் உள்ளன. அதனால் உலக இயக்கம் தடைப்பட வில்லையே! ஆதலால் சமயங்களிடையேயுள்ள வேறுபாடுகள் தவிர்க்க முடியாதன; வரவேற்கத் தக்கன. அந்தந்த அளவில் அனுபவிக்கத்தக்கன. அனுபவத்தின் வழி, மாறுதலுக்குரியது. இதனை அப்பரடிகள் “அறு வகைச் சமயத்து அவரவரைத் தேற்றுந்தகையன; தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே! ஏற்றுந் தகையன” என்று கூறி விளக்குகின்றார்.
மனிதகுல வரலாற்றுப்போக்கில் தோன்றிய சமயங்கள், பொதுவாக மனித குலத்தைக் கொடிய காட்டுமிராண்டித் தனத்திலிருந்து விலக்கிப் பையப்பைய இன்றுள்ள நாகரிகத் திற்கு அழைத்து வந்திருக்கின்றன. இன்று மனிதகுலத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிற அன்புணர்வும், உதவி செய்யும் பண்பும் சமயங்கள் அளித்த கொடைகளேயாம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் சமயமும் சமயத்தைச் சார்ந்த சமய நிறுவனங்களும் தமிழகத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் எண்ணற்ற பணிகளைச் செய்து வந்துள்ளன. அவை மொழியை வளர்த்துள்ளன; கலைகளை வளர்த்துள்ளன; மனிதர்களைக் கூடிவாழும் பண்புடையவர் களாக உருமாற்றம் செய்துள்ளன; இன்றைய நாகரிகம் மிக்க வளர்ச்சி வரலாற்றுப்போக்கில் சமயம் வழங்கிய கொடையேயாம்.
சைவத்தின் தொன்மையும் மேம்பாடும்
தமிழினம் காலத்தால் மூத்தஇனம்; கருத்தாலும் மூத்த இனம். உலகத்தின் மற்ற மனித இனங்கள் நாகரிகத்தில் அடியெடுத்து வைப்பதற்குமுன்பே நாகரிகத்தின் முதிர்ச்சியாகிய, சமயநெறியினில் தமிழினம் சிறந்து விளங்கியது. இற்றைக்கு 5300 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்தில் சமயத் தத்துவங்களும் கொள்கைகளும் பேசப்படுகின்றன. அதுவும் சித்தாந்தச் செந்நெறியின் அடிப்படையில் பேசப்பட்டுள்ளன. இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடத்தில் சிவபெருமான் வழிபாடு இருந்தது. சிவத்தைத் திருவுருவில் எழுந்தருளச் செய்து, திருக்கோயில் அமைத்து வழிபட்ட பெருமை தமிழருக்கே உரியது.
பணியியர் அத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே!
(புறம்-6)
என்ற புறநானூற்றுப்பாடல் இதற்குச் சான்று. தொன்மைமிக்க சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம். ஆங்கு முக்கட் செல்வர் வழிபாடு இருந்தமையை அகழ்வுப் பொருள்கள் அறிவுறுத்துகின்றன. எனவே தமிழர் சமயம் தொன்மையானது; அஃது அவர்கள் இன வழி வந்தது. அவர்களுடைய சமயநெறி எந்தவோர் இனத்தினிடமிருந்தும் பெற்றதன்று. அவர்களுடைய மறைகள் தமிழ்மறைகளேயாம். அவை தமிழ் முனிவர்களால் செய்யப் பெற்ற மறைகளேயாம். தமிழ் மறைகள் என்பன இறைவன் கல்லாலின் நீழலிலிருந்து நான்கு முனிவர்களுக்கும் அறம், பொருள், இன்பம் வீடு என்பன குறித்து அருளிச் செய்தவையாம். தமிழ்மறைகள் என்பன இன்று வழக்கிலுள்ள ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கமாட்டா. இதனைப் “பண்பொலி நான் மறை” “முத்தமிழ் நான் மறை” என்ற திருஞானசம்பந்தரின் திருவாக்கால் உணர்க!
சமய அனுபவம்
சமயநெறி என்பது ஒருவகை வாழ்க்கைமுறை என்பதை மீண்டும் நினைவிற்கொள்க! சமயம், உயிரின் அனுபவத்திற்குரியது. சமயம் என்பது எழுத்திலும் சொல்லிலும் நின்றுவிடுவதன்று; இவைகளைக் கடந்த அனுபவ நிலை. சமய அனுபவத்தின் வாயில்கள் அறிவு, அன்பு ஆகியனவாம்! அறிவு, ஞானத்தை நல்கும். அன்பு, தவத்தினைத் தரும், தொண்டிற் செலுத்தும். உயிர், ஒன்றாக இருக்கும் சிவத்தில் ஒன்றித் திளைத்துப் பெறும் அனுபவமே சிவானுபவம்! இவ்வனுபவத்தின் பயனாகப் பொருள்களின் போக்கு மடை மாறும்; தன்மை மாறும். முரண்பாடுகளும் விகாரங்களு முடையனவாயிருந்த பொறிகள், புலன்கள் “அன்பே ! அன்பே!” என்று நினைந்து அரற்றியதால் செழுமையுற்று இறைவனும் ஏனை அனைத்துயிர்களும் சுவைத்து மகிழுதற்குரியனவாக நயம்பட அமைந்த நிலையே சிவானுபவ நிலை. வழிபாடு என்பது, உயிர் சிவத்தோடு ஒன்றுதற்குச் செய்யும் முயற்சி. சிவத்தின் தன்மைகளை ஈர்த்துத் தன்னுரிமையாக்கிக்கொண்டு ஆவியோடு ஆக்கை புரைபுரை கனியச் செய்யும் செயற்பாடே வழிபாடு!
வழிபாடு கடவுளுக்காகச் செய்யப்படுவதன்று; கடவுளை முன்னிட்டுச் செய்யப்படுவது. அதன் பயன் கடவுளுக்கன்று; உயிர்களுக்கேயாம். சிவத்தை உள்ளத்தில் எழுந்தருளச் செய்து, உற்று நோக்கி அகத்தில் துளும்பியெழும் நிறையன்பால் முழுக்குச் செய்து, நிறையறிவால் அருச்சிப்பது ஞான வழிபாடு! இதனையே அகப்பூசையென்பர். திருக் கோயிற் பூசனையைவிட அகப்பூசையே உயர்ந்தது; சிவம் விரும்புவது எது என்பதைப் பூசலார் நாயனார் வரலாற்றின் மூலம் உணரமுடிகிறது. ஆனால் இன்று அகப்பூசை செய்வார் யார்? அந்த நுண்ணிய கலைஞானத்தைக் கற்றுத் தருவாரைக் கூடக் காணோம். நமது சமய அனுபவ உலகத்தில் ஒரு சூன்யம் தோன்றுகிறது. பக்தியியக்கம் ஞானத்தின் முயற்சியைத் தடுத்து விட்டதோ என்ற ஐயம் தோன்றுகிறது. சமய வாழ்க்கைக்குப் பக்தி தொடக்கத்தில் துணை செய்யலாம். ஆனால் ஆன்மாவின் ஈடேற்றத்திற்கு அது முழுமையாகத் துணை நிற்கமுடியாது. “ஞானத்தாலன்றி வீடுபேறில்லை” என்ற ஆன்றோர் வாக்கை எண்ணுக!
அகப்பூசை முதலியன இன்று எல்லாரும் நிகழ்த்துதற்குரியது. அதற்குரிய காலமும் இல்லை; கருத்தும் உருவாகவில்லை. ஆயினும் திருவாசகம் போன்ற ஞானநூல்களை ஓதுகின்ற ஞானவேள்வியையாவது நிகழ்த்துங்கள்! அட்டோத்திரத்தில் சிக்கி அல்லற்படுவதை விட, சகஸ்ர நாமத்தில் சிக்கிச் சங்கடப்படுவதைவிடத் திருவாசகத்தை ஓதி, ஊனும் உயிரும் கரைந்து திளைப்பது சிறந்த ஞான சாதனம். சமயம் அனுபவத்திற்கு வந்தாலொழிய ஆன்மா பயனுறாது.
ஞானம்
“அறிவே தெய்வம்!”, “அறிவே கடவுள்!” என்று புதுமைவாதிகள் சிலர் இன்று ஆரவாரம் செய்கின்றனர். ஆம்! அறிவே தெய்வம்! இது புதிய கொள்கையன்று. இது தமிழகத்தின் பழைய கொள்கை எது அறிவு: கற்பது அறிவா? அறிவுதான்! ஆனாலும் கற்பது அறிவின் வாயிலே தவிர அறிவே ஆகிவிடாது. அதுமட்டுமன்று. இன்று அறியாமையே அறிவு என்ற பெயரில் “ஆட்டம்” போடுகிறது. இந்த “அறி” வெல்லாம் கடவுளாகிவிடமுடியுமா? அறிவு வளர்தலுக்குரியது. “அறிதோ றறியாமை” என்பார் திருவள்ளுவர். அறிவின் முகட்டுக்கு மனிதகுலம் சென்றடைந்துவிட முடியாது. இவர்கள் ஏற ஏற அது உயர்ந்துகொண்டே போகும். விலகும் நோக்கமன்று; அல்லது விலக்கும் நோக்கமுமன்று. முயற்சி, எல்லை கடந்ததாக இருக்க வேண்டு மென்பதே திருவுள்ளம்! சராசரிக் குறைகளைக் கடந்த அறிவின் முதிர்ச்சியையே ஞானம் என்கிறோம். ஞானத்தின் அடையாளம் முதலில் தன்னிலையினை அறிதல்; குறைகளை ஓர்தல்; குற்றங்களை உணர்தல்; இவற்றினின்றும் விடுதலை பெற்று நிறைவைப் பெறவேண்டுமென்ற உயிர்த்துடிப்பு சிவத்தினிடத்தில் தணியாத ஈடுபாடு! தொழும்பாய் நின்று தொண்டு செய்யும் மனப்பாங்கு! ஓயாது மெய்வருந்தி உழைத்தல்; அவ்வழியில் வரும் துன்பங்களைத் துணுக்கின்றி ஏற்றுக்கொள்ளல்; தற்சார்பு நீங்குதல்; தற்சலுகையைத் துறத்தல். சிவம்-சிவத்தின் பருவுடலாக இருக்கின்ற உயிருலகம் இவற்றின் நலன்நாடிப் பணிகள் செய்தல்; துலாக்கோல் போல இன்பத்திலும் துன்பத்திலும் ஒத்த சிந்தனை பெறுதல்; திருவருளாற்றலையே பற்றி நின்று காண்டல்-செயற்படுதல்; ‘நான்’, ‘எனது’ என்ற இரண்டையும் கடந்த திருவடி ஞானத்தில் நிலைத்து நிற்றல். இவையே ஞானத்தின் அடையாளங்கள்! ஆங்கு அறிவில் தூய்மை! அன்பில் துய்மை! ஆற்றலில் தூய்மை! செய்வினையில் துய்மை! எல்லாம் தூய்மையாம்! ஆங்குப் பல அல்ல! ஒன்றே ஒன்று! அதுவே சிவம்! அவ்வழியே பருவுலகம்! துய்ப்பனவும் உய்ப்பனவும் கூட அவனேயாம்! அஃது ஒரே ஒருலகம்! ஆங்குப் பிரிவில்லை! பேதமில்லை! இதையே திருவள்ளுவர் “வாலறிவன்” என்றார். வாலறிவன் என்பது ஞானத்தின் மறுபெயர்: ஞானம் பெறுமின்! ஞானத்தால் தொழுமின் !
தொண்டு
சமயநெறியின் இரட்டை நாடிகளில் ஒன்று அன்பு; பிறிதொன்று தொண்டு. சமய ஞானத்தில் உண்மையிலேயே முதிர்ச்சியடைந்தவர்கள் தொண்டில் நாட்டம் காட்டுவர். அவர்கள் எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் காட்டுவர். எக்காரணம் கொண்டும் மனிதர்களை வேற்றுமைப்படுத்தி ஒதுக்கமாட்டார்கள். குலத்தில் பொல்லாரேனும் குணத்தில் பொல்லாரேனும் அவர்கள் மாட்டும் இரக்கம் காட்டுவர். அவர்கள் படும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதி உடன் மாற்ற முயலுவர். முன்னை வினையைக் காரணமாகக் காட்டியோ “ரேஷன் கார்டு கதை” சொல்லியோ மற்றவர்களை ஏமாற்றிவிட்டுத் தங்களுக்கு மட்டும் கட்டணங்கள் வசூலிக்கமாட்டார்கள்!
நமது திருமுறை வரிசை, ஞானத்தில் தொடங்கித் தொண்டில் நிறைவுறுகிறது. திருஞான சம்பந்தரின் தமிழ் ஞானத் தமிழ், சேக்கிழாரின் செந்தமிழ் தொண்டுத் தமிழ். ஞானம் தொண்டில் நிறைவுறும். ஞானத்தின் பயன் திருத்தொண்டு. திருத்தொண்டின் பயன் இன்ப அன்பு. “தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை” என்பார் அப்பரடிகள். ஆக, தொண்டு நிலையே வீடுபேறு என்றாற்போல ஆகிறது. பர சிவமும் தொண்டிற்குரிய தகுதிகளை வரிசையறிந்து வழங்கும் பேற்றினைப் பெரிய புராணத்திற் காண்கிறோம். அப்பரடிகளின் கைத்திருத் தொண்டுக்கு வாசியில்லாக் காசு வழங்கியமையை நினைவுகூர்க! தொண்டர்க்குத் தொண்ட ராதல் போல-ஆரூரர்க்குத் தோழராகிப் பல்வகைப் பணிகளைப் பாங்குடன் செய்தமையை மறப்பார் யார்? மறுப்பார்யார்? திருத்தொண்டு பல திறத்தது. வகையில் வேறுபாடின்றி வாயில்கள் ஒன்றேயாம்! விளையும் பயனும் ஒன்றே யாம்! ஒன்று இறைவனை முன்னிட்டுச் செய்யும் திருத் தொண்டு! பிறிதொன்று இறைவனின் கருணைக்குப் பாத்திரமாகும் உயிர்களின் நலம் நோக்கிச் செய்யும் திருத்தொண்டு! திருக்கோயிற் சார்பான திருத்தொண்டு இரண்டுக்கும் சார்புடையது.
கடவுளுக்குச் செய்யும் தொண்டுகளும்கூடப் பெயராலும் தோற்றத்தாலும் கடவுளுக்குச் செய்யும் தொண்டுகள் போலத் தோற்றமளிக்கின்றன. ஆனால் உண்மையில் அதுவன்று. தொண்டர்கள் உயிர்களின் நலம் நோக்கி இறைவனை வாழ்த்துகின்றனர். பரசிவத்திடம் பத்திமைகொள்வதால் நெஞ்சு நெகிழ்கிறது. நெக்கு உருகுகிறது. அதனால் மனமாசு அகலுகிறது; குற்றம் நீங்குகிறது; துன்பம் தொலைகிறது; தூய்மை வந்து சேர்கிறது; குணம் கூடுகிறது; இன்பம் வந்தமைகிறது. பத்திமைப் பாங்குடைய தொண்டிற்குள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி வாழ்த்துதல் அடங்குகிறது. அடுத்து, உயிர்களை நோக்கிச் செய்யும் தொண்டு. முற்றிய வைதீகத்தினர் சிலர் கடவுளுக்குச் செய்யும் தொண்டையே வற்புறுத்துவர். “உயிர்களுக்குச் செய்வதைப் பசு புண்ணியம் தானே, நல்வினைதானே, அது பந்தமும் போகமும் தரும்; வீடுபேற்றினைத் தராது” என்பர். இது முற்றிலும் பொருந்தாது.
நாம் உயிர்க்குத் தொண்டு செய்யும் பொழுது உயிர்களாக மட்டும் நினைத்துச் செய்வதில்லை; செய்யவும் கூடாது. “பாத்திரம் சிவமதென்று பணிய வேண்டும்” என்பார் அப்பரடிகள். உயிர்களுக்குத் தொண்டு செய்யும் பொழுது, உயிர்கள், இறைவனின் திருவருளுக்கு ஆளாக்கும் பாத்திரம் என்று செய்தால் அது பதிபுண்ணியமேயாம்” என்பது மாதவச் சிவஞான முனிவரின் வாக்கு ! நம்முடைய நால்வர் பெருமக்களும் நாள்தோறும் நாட்டில் திருத்தல யாத்திரை செய்து இறைவனைப் புகழ்ந்து பாடினர். அதேபொழுது இறைவனின் என்றும் அருமைக்குரிய உயிர்க்குலத்தின் துன்பங்களை துடைத்தும் தொண்டு செய்தனர். தமிழ்ச் சிந்தனை, துன்பத்திற்கு எதிரானது; பொதுமையைத் தழுவியது.
அப்பரடிகள் இறைவனைப் பற்றிப் பாடிய பதிகத்தில் “இரப்பவர்க்கு ஈய வைத்தார்” என்று பாடுகிறார். இங்கே இன்பப் பேறருளலும் நரகத் துன்பத்தைத் தருதலும் ஈதலை மையமாகக் கொண்டு நிகழ்கின்றன. ஒப்புரவு நெறியை வழங்குகின்றன. இன்று இந்நெறி நிற்பார் யார்? பிச்சை போடுதல் ஈதலாகாது. இதற்குத் திருவள்ளுவம் விளக்கம் கூறுகிறது, “இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்” என்று! அதனினும் உயர்ந்தது ஒப்புரவு ஈதற்பண்பு. உடையார்-இல்லார் என்ற வேற்றுமையில்லாது உரிமை யுடையார் ஒருவருக்குப் பொறுப்புடையார் வழங்குவதை யொத்தது. இப்பொழுது நம்மிடத்தில் பொருள் இல்லை. உடன் வந்துள்ள உதவியாளரிடம் பணம் இருக்கிறது. நாம் கேட்கும்பொழுது அவர் தருகிறார். அல்லது குறிப்பறிந்து தருகிறார். இங்கே ‘தருதல்’ எந்த மனநிலையில் நிகழ்கிறதோ அதே மனநிலையில் நிகழும் ஈதலேதான் அப்பரடிகள் கூறும் ஈதல்! ஆதலால், ஒப்புரவு என்பது இதனினும் உயர்ந்தது. அங்கே தருதல் இல்லை. அன்பிலும் அறவுணர்விலும் விளைந்த உரிமையால் - வழங்கப்பெற்ற உரிமையால் எடுத்துக்கொள்வது!
ஒப்புரவு அதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துக் காட்டும் உவமைகள் அனைத்தும் எடுத்துக்கொள்ளும் வினைத் தொடர்பாகவே அமைந்துள்ளன. ‘ஊருணி”, “பயன்மரம்”, “மருந்து மரம்” இனையனைத்திலும் நாம் மேவிச்சென்று எடுத்தே பயன்படுத்து கிறோம். அவை வழங்கிய கொடைக்கு மாறாக நாம் அவற்றைப் புகழ்ந்து நன்றி கூறுதலாகிய சடங்குகள் இல்லை. இத்தகைய சமுதாய ஒழுக்கம், சைவ ஒழுக்கம், தமிழுலகம் தந்த நன்னெறி, தமிழ்ச் சான்றோர் தந்த பொதுநெறி. இப்பொதுநெறி, வாழ்க்கையில் வெற்றி பெறுமானால் அழுக்காறு, அவா, வெகுளி ஆகிய தீமைகள் சுருங்கும்; பிணக்கும் குறையும்; பகை நீங்கும்; பண்பாடு தோன்றும்; வாழ்க்கை சிறக்கும். இத்துறையில் ஒவ்வொரு தனிமனிதனும் குடும்பத்தினரும், அறநிறுவனத்தினரும், சமுதாயத்தினரும் இயன்றவரை செயற்படுதல் வேண்டும். அப்பரடிகள் திருநாளன்று தம்முடைய உடைமையில்-உரிமையில் பிறிதொருவருக்கு உரிமையும் வளமும் வாழ்வும் வழங்க வேண்டும். இந்நெறிமுறை தூண்டுதலின்றியும் கட்டாயமின்றியும் இயல்பாக நடைபெறுதற்குரிய பக்குவத்தை நாம் பெறவேண்டும்.
சமய நிறுவனங்கள்
தமிழகத்தைப் பொறுத்தவரை சமய நிறுவனங்கள் மூவகையின. ஒன்று திருக்கோயில்கள், பிறிதொன்று திரு மடங்கள். மற்றொன்று சமுதாயத்தினர் சமய வளர்ச்சியில் ஆர்வங்காட்டித் தோற்றுவித்த அமைப்புகள். இந்த மூன்றும் சமய வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் இன்றியமையாதவை. இந்த நிறுவனங்களின் நோக்கம் நிறைவேற வேண்டுமானால், இம்மூன்றினிடையேயும் ஒருமைப்பாடும் ஒருங்கிணைப்பும் தேவை. நம்முடைய நல்லூழின்மையினால் இன்று இந்த ஒருங்கிணைப்பு இல்லை. ஒருசில அமைப்புகளுக்கு இருக்கின்றன. ஆனாலும் அந்த ஒருங்கிணைப்பு நிறைநலம் பெற்றனவாக அமையவில்லை. அருள்நெறித் திருக்கூட்டத் திற்குக் குன்றக்குடித் திருமடத்தோடு இணைப்பு இருக்கிறது. இந்து சமய மன்றங்களுக்குக் காஞ்சிபுரம் சங்கரர் மடத்தோடு இணைப்பு இருக்கிறது. சிறப்பாகச் செயல்பட்டு முடக்கப்பட்ட பேரவைக்குத் தமிழகத்தின் எல்லாத் திருமடங்களோடும் உறவிருந்தது. ஏன்? சமய அமைப்புகள் அனைத்துடனும் கூட உறவு இருந்தது. ஆனாலும் செழுந்தமிழ் வழக்கு வெற்றி பெற்றுவிடக் கூடாது, சமயத்துறையில் காஞ்சிபுரம் சங்கரர் மடத்துக்கு இருக்கும் ஆதிக்கம் நெகிழ்ந்து போதல்கூடாது என்ற குறிக்கோளுக்கு இரையான நெருக்கடி கால அரசு, நெறிமுறைகளுக்கு இசையாத வகையில் ஆட்சியைப் பயன்படுத்திப் பேரவையை முடக்கிவிட்டது. இன்றைய அரசு பேரவையின் பணிகளுக்குச் சாதகமாகவும் இல்லை; பாதகமாகவும் இல்லை. ஆனாலும் திருமடங்களின் அமைப்புத்தானே! அவர்களிடத்திலேயே பொறுப்பை ஒப்படைத்து அவர்களைச் செயற்படவிட வேண்டும் என்ற விருப்பம் நாம் வற்புறுத்தியும் கூட அரசுக்கு வராதது ஏன் என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்திற்குப் பேரவையைச் செயற்படுத்த அரசு முன்வர வேண்டும். அஃது ஒரு நல்ல அமைப்பு. தொடர்ந்து போராடி அந்த அமைப்பைப் பாதுகாத்து இயக்கினால் காலப் போக்கில் திருமடங்களும் மக்களும் ஒத்திசைந்த சமயப் பேரியக்கம் தோன்றும்.
திருக்கோயில்கள் நமது பண்பாட்டை வளர்க்கும் பண்ணைகள். நமது உணர்வுகளைத் தொட்டுத்திருத்திச் செழுமைப் படுத்தும் திருவருளின் ஊற்றுக்கண். நமது சமுதாயத்தின் வாழ்வியல் மையமாகத் திருக்கோயில்களே விளங்கின. ஆனால் இன்று, அவை சமுதாயத்தை விட்டு விலகிச் சமுதாயத் தொடர்பில்லாமல் தன்னிச்சையாகத் தனித்தியங்கும் நிறுவனங்களாகிவிட்டன. இதன் காரணமாகத் திருக்கோயில் ஆட்சி முறையில் வணிக மனப்பாங்கும், இலாப நோக்கும், தொழில் மனப்பான்மையும், அரசியல் கட்சிகளின் தலையீடும் தோன்றிவிட்டன. இன்றையச் சூழ்நிலையில் திருக்கோயில் உருவ அமைப்புகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் உணர்வுக்குத்தான் வழியில்லை. எந்தவொரு திருக்கோயிலும் எந்த நோக்கத்திற்காகத் தோற்று விக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற் கிசைந்தவாறு செயற்படவில்லை. தத்துவங்களின் செயல்முறைக் களங்களாக விளங்கிய திருக்கோயில்கள் இன்று தத்துவத்தையும் மறந்து விட்டன. செயல்களையும் மறந்துவிட்டன. சமுதாய ஈடேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு தொடங்கிய திருக்கோயில்கள், இன்று சமுதாயத்தை மறந்துவிட்ட தோடன்றிச் சமுதாயத்தைப் பிறிதின் கிழமையாக்கி அதனிடம் எந்தெந்தக் கட்டணம் வசூலிக்கலாம் என்று திட்டமிடத் தொடங்கிவிட்டன. சமநிலை காண வேண்டிய திருக்கோயில்கள் தரம் பிரித்து விட்டன. ஒருவருக்குத் திருக்கோயிலில் ஏகபோக மரியாதை மற்றொருவருக்குத் திருநீறுகூடக் கிடைப்பதில்லை. இந்த வேறுபாடு திருக்கோயில் தத்துவத்திற்கே முரணானது. எனவே சமய நம்பிக்கையும் தத்துவப் பிடிப்புமுடையவர்கள், நமது சமய நிறுவனங்களின் ஆட்சிமுறையை ஏற்கத் தக்கவாறு நாம் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்து சமய ஆட்சிக் கழகம் வேண்டும்
சமயச் சார்பற்ற அரசின் மேலாதிக்கத்திலிருந்து நமது சமய நிறுவனங்களை மீட்டுத் தன்னாதிக்கமுள்ள ஆட்சி முறை அமைப்புக்குக் கொண்டுவர வேண்டும். இந்த ஆட்சி முறையைப் பல்கலைக் கழக வடிவமைப்பில் அமைப்பது நல்லது. இந்து சமயம் என்ற பொதுப் பெயர் தோன்றி விட்டது. இங்கனம் தோன்றிய பொது அமைப்பில் நன்மைகளும் உண்டு; இழப்புக்களும் உண்டு. அவற்றை விரிவாக ஆராய்வது நிறைவான பயன்தராது. ஆனாலும் பொது அமைப்பு இந்து சமயம் என்ற பெயரில் அமையும். அதனுடைய ஆட்சிமுறைச் செயலமைப்பில் இந்து சமயத்தின் உறுப்புகளாக நிலவும் சைவம், வைணவம், கெளமாரம், சாக்தம், காணாபத்தியம், செளரம் ஆகியவற்றின் தனித்தன்மையைப் பேணிப்பாதுகாக்கும் வகையில் தனித் தனிக் குழுக்கள் அமைக்கப்பெற்று, அக்குழுக்களே அந்தத் துறையில் பொறுப்புக்களை ஏற்கும்படி செய்ய வேண்டும். இங்ஙனம் செய்வதால் பொதுத் தன்மைக்கும் ஊறில்லை; தனித் தன்மைக்கும் சிதைவில்லை; கலப்படமும் தவிர்க்கப்படும்; ஓர் ஊரும் ஒரு கடவுளைத் தொழும் மனப் பாங்கும் இல்லாத நாடோடிகளால் ஏற்படக்கூடும் நன்னெறிச் சிதைவிலிருந்து நம்முடைய சமயத்தைப் பாதுகாக்கலாம்.
இந்து சமய ஆட்சிக் கழகத்தின் செயலமைப்பில் ஆட்சிக்குழுவும் பேரவையும் அமையும். ஆட்சிக் குழுவில் திருமடங்களின் தலைவர்கள் அலுவல் அடிப்படையில் இடம்பெறுவர். துறைதோறும் சிறந்து விளங்கும் சமய அறிஞர்களை ஆட்சிக்குழு தம் உறுப்பினர்களாக நியமித்துக் கொள்ளும். சட்டமன்றம் பாராளுமன்றம் ஆகியன, நமது சமயத்தில் நம்பிக்கையுடையவர்கள் சிலரைப் பேராளர்களாகத் தேர்ந்தெடுத்து அனுப்பும். பேரவை, தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கின்ற சமய அமைப்புக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற பேராளர்களையும், இந்து சமய நம்பிக்கையுடைய பட்டதாரிப் பேராளர்களையும், இந்து சமய நம்பிக்கையுடைய வழக்கறிஞர் குழுவின் பேராளர்களையும் இந்து சமய நிறுவனங்களில் தொண்டு செய்வோர், அலுவல் செய்வோரின் பேராளர்களையும் கொண்டதாக அமைய வேண்டும். இஃது ஒரு சுருக்கமான உத்தேச வரையறை. இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநராக இந்திய நிர்வாகப் பணித் தேர்வில் (I.A.S) தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்த ஒருவரை அரசிடமிருந்து பெற்று ஆட்சிக்குழு நியமித்துக் கொள்ளும். ஆட்சிக் கழகத்தின் செயல்முறையைக் குறைந்தது ஐந்து பகுதிகளாக வகுத்து இயக்கலாம்.
1. பொது நிர்வாகம்.
அ) உடைமைகள் வளர்ச்சி
ஆ வருவாய்ப் பெருக்கம்
2. திருக்கோயில் நிர்வாகம்
அ) திருக்கோயில் நாட்பூசை
ஆ) திருவிழா
3. இந்து சமுதாய மேம்பாட்டுக்குரிய கல்வி, மருத்துவப்பணிகள்.
4. பிசாரம்-வெளியீடு
5. தணிக்கைப் பிரிவு
இவ்வைந்தும் தனித்தனி இயக்குநர்களால் செயற்படுத்தப்பெற வேண்டும். இந்த நிலை உருவாகும் பொழுது பெயரளவில் தனித்தனிக் கோயில், திருமடம் என்று கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நிதியைப் பொறுத்த வரையில் ஆட்சிக் குழு வகுக்கும் நிதியியல் முறைகள் கடைப்பிடிக்கப் பெற வேண்டும். அதாவது, ஒரு திருக்கோயிலில் நிறைய வருமானம் வருவதால் அங்கு ஆடம்பரச் செலவுகளும் இன்னொரு திருக்கோயிலில் வருவாயின்மையால் அங்குப் பூசனையில்லாதிருப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். திருமடங்களைப் பொறுத்தவரையில் அவைகளுடைய சமயப் பிரசார சமூகப் பணித்துறைக்குரிய நிதிகள் ஆட்சிக் கழகத்தில் மையப்படுத்தப்பட்டுத் திட்டமிட்டுச் செய்யப் பெறுதல் வேண்டும். இங்ஙனம் செய்வதன் மூலம் எந்த மடம் பெரிய மடம்? என்ற வினாவைச் சுற்றி வட்டமிட்டு வீணாகச் செலவாகும் செல்வமும் பாதுகாக்கப் பெறும், விளம்பரப் போட்டிகள் குறைந்து செயற் போட்டிகள் தோன்றிச் செயல் திறமும் கூடும். இந்தச் செய்திகள் கசப்பாக இருக்கலாம். ஆனால், நிகழவேண்டியவை என்பதை அன்பு கூர்ந்து மறந்து விடாதீர்கள். இந்த முறை, செயல்படும்போதுதான் திருக்கோயில், திருமடங்கள், மக்கள் என்ற ஒருங்கிணைப்புத் தோன்ற முடியும். இவ்வாறு சிந்தனை செய்ய ஒவ்வொருவரும் முயலுங்கள் ! கலந்து பேசுங்கள்! இதைப்பற்றிச் சிந்திக்க அறிஞர் குழுவை அமையுங்கள்! கருத்தரங்குகள் நடத்துங்கள்! ஆய்வறிக்கைகளைப் பெறுங்கள்! மாநாட்டை நடத்துங்கள்! இந்தச் சிந்தனையை-செய்தியை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம்! திருவருள் துணை செய்யும்.
வேண்டிய சீர்த்திருத்தம்
நம் சமயம் காலத்தால் தொன்மையானது. பழமைப் பண்பு மிக்கு விளங்குவது. ஆயினும் புதுமைப் பொலிவுடையது. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியதாய் - என்ற திருவாசகக் கருத்து நமது சமயத்திற்கும் பொருந்தும், நமது சமயநெறிக்குச் சீர்திருத்தங்கள் இப்போதைக்குத் தேவையில்லை. எதிர்காலத் தேவை பற்றிக் காலம் முடிவு செய்யட்டும். நமது சமயத்தத்துவங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் அனைத்தும் நம்பிக்கைக்குரியன. நல்லெண்ணத்திற் குரியன; நடைமுறைக்கிசைந்தன. அவற்றில் காலத்திற்கு ஒவ்வாத பழமை எதுவும் இல்லை. இன்றையச் சூழ்நிலையில் அவாவி நிற்கும் புதுமை எதுவுமில்லை. அந்த அளவு நமது சமயம் இன்றையக் கால எல்லை வரையில் தேவைகளை நிறைவு செய்யத் தக்கதாக முழுமையுற வளர்ந்திருக்கிறது. அதனாலன்றோ “சித்தாந்தம்” என்று பெயர் சூட்டினர்; “முடிந்த முடிவு” என்று பாராட்டினர்.
ஆனாலும் நம்முடைய சமய வாழ்க்கை நம் தத்துவங்களுக்கு இசைந்தவாறு அமையவில்லை. நம் மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் காட்டுகிற வழியில் இன்றையச் சமய வாழ்க்கை இல்லை. சமுதாய வாழ்க்கை அமைப்பு முறை இல்லை. இந்தக் குறையை நாம் உள்ளவாறு உணர்தல் வேண்டும். நாம் ஒன்றும் புதுப்புரட்சி செய்யவேண்டாம். அதற்கு நாம் தகுதியாகவுமில்லை. ஆனால் நம்முடைய திருமுறைகள் இதுதான் நெறி-சமயவாழ்க்கை முறை என்று உபதேசித்தும் நாயன்மார்கள் வாழ்ந்து காட்டியுமுள்ள நெறி முறைகளை நாம் பின்பற்ற வேண்டாமா? நாம் அந்நெறியிலிருந்து நெடுந்துாரம் விலகிச் சென்றிருந்தாலும் நம் தவறுகளைத் திருத்திக்கொண்டு, சீர்த்திருத்தம் செய்துகொண்டு திருமுறை நெறியில் நின்றொழுக வேண்டாமா? ஆதலால் சீர்திருத்தம் நமது சமயத்திற்கும் தேவையில்லை. நமது தத்துவங்களுக்கும் தேவையில்லை. நமது கொள்கைகளுக்குப் புதிய கொள்முதல் வேண்டாம். ஆனால் நமக்குச் சீர்திருத்தம் தேவை. நமது சமுதாய அமைப்பிற்குச் சீர்திருத்தம் தேவை. நமது சமுதாய நிறுவனங்களின் நடைமுறையில் சீர்திருத்தம் தேவை. இவற்றைப் பற்றி எண்ண வேண்டாமா? உண்மையைச் சாதிக்கும் முனைப்பு வேண்டாமா? அன்புகூர்ந்து இந்த நேரத்தில் சிந்தனை செய்யுங்கள்! எத்தனையோ சீர்திருத்தக் கருத்துக்கள் குறித்து எண்ண அலைகள் மோதுகின்றன. அவற்றில் ஒன்றுகூட நாம் புதிதாகக் கண்டவையல்ல. அவற்றுக்கு உண்மையில் உரியவர்கள் நாயன்மார்கள். சிறப்பாக அப்பரடிகள், சிவபெருமான், எம்.எல். பிள்ளை என்ற கா. சுப்பிரமணிய பிள்ளை, தமிழ்த்தந்தை திரு வி. க. தனித்தமிழ் மலை மறைமலையடிகள் முதலியோராவர். அவர்கள் அருளியவற்றை நாம் வழிமொழிகிறோம். அவ்வளவுதான்! பல சீர்திருத்தங்களை நினைவுக்குக் கொண்டுவர விருப்ப மிருந்தாலும் நாம் அவற்றை விடுத்துச் சில செய்திகளை மட்டுமே நால்வரின் அடிச்சுவட்டில் மாநாட்டின் நினைவிற்கும், மாநாடு வாயிலாக மக்கள் மன்றத்தின் நினைவிற்கும் கொண்டு வருகிறோம்.
ஒரு கடவுள் வழிபாடு
நமது நெறி, ஒரு கடவுளைத் தொழும் உயர்மாண் புடையது. “ஒன்றென்றிரு; தெய்வம் உண்டென்றிரு” என்பார் பட்டினத்து அடிகள். வைதீகர்களின் சாபம், அறுவகைச் சமய இணைப்பு ஆகியவை நம்முடைய சமுதாயத்தில் பலரை, ஒரு கடவுள் வழிபாட்டிலிருந்து நெடுந்தொலைவுக்கு இழுத்துச் சென்றுவிட்டன. இன்று பலர் எந்தவொரு மூர்த்தியையும் ஆன்மநாயகனாக ஏற்றுக் கொள்ளாமல் கிழமைக்கொரு சாமி, சந்தர்ப்பத்திற்கொரு சாமி என்று தொழுது ஏய்க்கும் அவலத்தை யார்தான் மறக்க முடியும்? நால்வர் காலத்தில் அம்மை வழிபாடும் இருக்கத்தான் செய்தது; திருமுருகன் வழிபாடும் இருக்கத்தான் செய்தது; விநாயகர் வழிபாடும் இருக்கத்தான் செய்தது; அருக்கன் வழிபாடும் இருக்கத்தான் செய்தது; நால்வர் பெருமக்கள், இவர்களைத் தனித்தனியே வழிபட வில்லை; பதிகம் அருளிச் செய்யவும் இல்லை. சைவர்கள் சிவத்தையே வழிபட்டனர்; ஆழ்வார்கள் திருமாலையே தொழுதனர். இதுதான் சமயசிலம். கடவுளை வழிபடும் துறையில் சிலர் சமரசம் கூறியிருக்கின்றனர். அந்தத் தவறான வழியில் “அரியும் சிவனும் ஒன்று. ஆதலால் யாரையும் வழிபடலாம்; இருவரையும் வழிபடலாம்” என்றெல்லாம் எடுத்துக் கூறி, சமுதாயம் பக்தி வழியில் வளர இயலாதபடி செய்துவருகின்றனர்.
சமரசம் என்பது தன்னுடையது மீது பற்றும் இன்னொருவருடையது மீது வெறுப்பும் இல்லாதிருப்பதுதான்! ஒரு நங்கை கொழுநன், கொழுந்தன் ஆகிய உறவுகளைப் பேணலாம். ஆனால் இருவரையும் கொழுநன் நிலையிலேயே சமரசமாக எண்ணிப் பார்க்க முடியுமா? அதாவது கொழுநனும் ஆடவன்தான்; கொழுந்தனும் ஆடவன்தான்; ஆதலால் இவனும் கணவனாக இருக்கலாம். அவனும் கணவனாக இருக்கலாம். இரண்டு பேருங்கூடக் கணவன்மார்களாக இருக்கலாம் என்று நினைப்பதே எத்துணைப் பைத்தியக்காரத்தனமானது. இப்படிப் பைத்தியக்காரரை வெளியில் நடமாட விடுவோமா? “இவரையும் தொழலாம்” என்று சொல்லும் பைத்தியக்காரரைக் கீழ்ப்பாக்கத்திற்கு உடனே அனுப்ப வேண்டாமா? .
கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல் லால்,நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின் இறைவா!
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாது எங்கள் உத்தமனே!
என்ற மணிவாசகர் மணிமொழியையும்,
நயவேன் பிறர்பொருளை நள்ளேன்கீ ழாரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்-வியவேன்
திருமாலை அல்லது தெய்வம்என்று ஏத்தேன்
வருமாறு நம்மேல் வினை
என்ற ஆழ்வார் திருப்பாடலையும் அன்புகூர்ந்து எண்ணுங்கள்! எந்தக் கடவுளின் திருமேனியைத் தொழுதாலும் எப்பெயரால் தொழுதாலும் இவைனைச் சென்றடையாதா? என்று சிலர் வினா எழுப்பக் கூடும்! இவர்கள் “யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்” என்ற சிவஞான சித்தியார் திருவாக்கைச் சான்றாகக் காட்டவும் கூடும். நாம் இந்தத் திருவாக்கின் உட்கருத்தை மறுக்கவில்லை. ஏன், மாணிக்க வாசகர் இன்னும் ஒரு படி மேலே சென்று பரந்தபொருளில் அருளிச் செய்துள்ளார். “தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்பர் அடிகள். நாம் சிவம் என்று வணங்கும் பரம் பொருளைத்தான் உலகத்தவர் வேறு வேறு பெயர்களில் வணங்குகின்றனர். அவன் உலகிற்கு இறைவன் என்றருளிய பொதுமை நினைந்து நினைந்து இன்புறத்தக்கது. சிவம் என்ற தனித்தன்மை, இறைவன் என்ற பொதுத்தன்மையில் வரவேற்கத்தக்கது. இத் தத்துவம் வையகத்திற்கு இன்பம் தரும். ஆதலால் எந்தப் பெயரால் இறைவனை வழிபட்டாலும் அஃது ஏற்புடையதே! நாம் அந்தக் கருத்தில் மாறுபாடு கொள்ளவில்லை. ஆனாலும் உயிர், குறிக்கொண்டு பன்னாள் அருச்சித்துப் பழக, வழிபாட்டைப் பழக்க வழக்கத்தில் உறுதிப்படுத்திக்கொள்ள ஓருருவும் ஒருநாமமும் தேவை. இந்நெறியில் உயிர்கள் நின்றால்தான் இறைவன் திருத்தாள்களைச் சிக்கெனப் பிடிக்க முடியும் தவத்திற்சிறக்க முடியும்; ஞானம் அடைய முடியும். நிலத்தின் பரப்பு அதிகமாக இருக்கலாம். நம் நிலைக்கேற்றவாறு எல்லை கட்டிக்கொள்ள வில்லையா? ஆற்றின் நீளம் கூடுதலாக இருக்கலாம். நம் தகுதிக்கேற்றவாறு துறையை அமைத்துக் கொள்ளவில்லையா? அதுபோல் இறைவன் ஓருருவம், ஒருநாமம் இல்லா ஆயிரம் நாமம் கொண்டவன்தான். ஆயினும் நாம் உய்திபெற ஒருகடவுள் வழிபாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்.
புனலும் பூவும் சொரிந்து வழிபடும் உரிமை
வழிபாடு என்பது உயிர்கள் தம் உய்தி நோக்கிச் செய்தல். வழிபாட்டில் அகக்கருவிகளும் புறக்கருவிகளும் ஈடுபட வேண்டும். வழிபாட்டில் நாம் ஒவ்வொருவரும் சிறக்கவேண்டுமானால் நாள்தோறும் தனித்திருந்து திருமுறைகள் காட்டிய நெறிமுறையில் அகப்பூசையும் புறப் பூசையும் செய்யவேண்டும். இங்ஙனம் செய்வோர் எண்ணிக்கை வரவரக் குறைந்துகொண்டே வருகிறது. தமிழகத்திலுள்ள ஆற்றங்கரைகளிலும் திருமடங்களிலும் இங்ஙனம் பூசை செய்வதற்கென்று அமைக்கப்பெற்ற மேடைகள் இன்று பயனற்றுக் கிடக்கின்றன. இங்ஙனம் ஒவ்வொருவரும் நாள்தோறும் முறையான சிவபூசை செய்ய இயலாது என்று கருதித்தான் போலும் திருக்கோயில் வழிபாட்டு முறையைக் கண்டனர். நாள்தோறும் எல்லாரும் முறையாக அகப்பூசை செய்தல் என்பது எளிதன்று. அத்துறையில் வல்லார் இன்று இருக்கிறார்களா என்பது ஐயத்திற்குரியது. அந்த அருமையான விஞ்ஞானக் கலையைக் கற்றுத் தருகின்ற சித்தர்கள் இன்று அருகிப்போயினர். ஆதலால் அகப்பூசை செய்வதிலுள்ள இடர்ப்பாட்டையும், காலத்தின் அருமையையும் கருதி, அகப்பூசை நெறியினின்று பெருமானைத் திருவுருவத்தில் எழுந்தருளச் செய்து நாம் எளிதாக வழிபடுவதற்கு ஏற்ற வகையில் தோன்றியதே திருக்கோயில் வழிபாடு என்று நாம் நம்புகின்றோம். அயல் வழிக் கருத்தைக் கேட்டு அலமருதல் நியாயமன்று. அவர்கள் அருச்சகர்களாக இல்லாமல் சிவாச்சாரியர்களாக இருந்து, கண்டு காட்டி வழிநடத்த வேண்டும் என்பதே நமது விருப்பம். இது நமது சமயத்தை வளர்ப்பதற்கும் சமுதாயத்தை ஒருங்கிணைப்பதற்கும் உரிய சாதனம்.
வழிபாட்டு மொழி
அடுத்து, வழிபாட்டுக்குரிய மொழி குறித்தது! இறைவன் மொழி, இனம், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்த பரம்பொருள். அவனுக்கு எல்லா மொழிகளும் உரிமையுடையன. மொழி வடிவம் பெறாத உயிரினத்தின் ஒலிக் குறிப்புகள் கூட இறைவனுக்கு மொழிகளேயாம். சேரமான் பெருமான் நாயனாருக்கு இதையறியும் திறனிருந்தது. அப்படியானால் எந்த மொழியில் வழிபட்டால் என்ன? என்று சிலர் வினா எழுப்பலாம். ஆம் உண்மைதான்! கடவுளைப் பொறுத்த வரையில் எந்த மொழியிலும் வழிபடலாம். தாய் எந்த உணவையும் உண்ணலாம். குழந்தையின் நலம் நோக்கும் தாய் குழந்தை நலத்திற்கேற்ற உணவை உண்ணவேண்டும். வழிபாடு செய்வது உயிர்கள் துய்மையுணர்வையும் இறைவன் அருளையும் நாடிப்பெறுவதற்குத்தான். உயிர்களுக்குரிய மொழி, தாய் மொழியேதான்! அதனால் தாய் மொழியில் நிகழ்த்தும் வழிபாடுதான் கனிவைத் தரும்; இறையருளைக் கூட்டுவிக்கும். அதிலும் நமது சமயம் தமிழிலேயே தோன்றித் தமிழை வளர்த்ததாகும். நமது சமய நெறி, பிறமொழியிலிருந்து வந்ததன்று. ஆதலால் தமிழ் மொழியில் வழிபாடு என்பது ஒரு “வழி பாட்டியக்கம்” என்பதை மறந்துவிடக் கூடாது.
சாதிகளற்ற சமுதாய அமைப்பு
நமது சமயம் தீண்டாமையினாலும் சாதி வேற்றுமைகளாலும் உள்ளீடழிந்து வருகிறது. இவ்விரண்டும் தீமைகளிலுமிருந்து முற்றாக நமது சமுதாயம் விடுதலை பெற்றால் தான் நமக்கு எதிர்காலமுண்டு. பிறப்பின் அடிப்படையில் தீண்டாமை, சாதி வேற்றுமைகள் பாராட்டுவது நியாயமுமன்று; நீதியுமன்று. அப்பரடிகள் முதலாக வள்ளலார் ஈறாகச் சாதிவேற்றுமைகளை எதிர்த்துப் போராடியும் நாம் இன்னும் சாதிகளைவிடத் தயாராக இல்லை. ‘சாதி வேற்றுமைகள் பாராட்டுதல் தீது’ என்பதை எடுத்துக்காட்டச் சிவபெருமான் திட்டமிட்டுச் சுந்தரர் திருமணங்களை நிகழ்த்தி வைத்திருந்தும் நாம் அதைப் பின்பற்ற மறுக்கிறோம். நம்மிடமுள்ள சாதி வேற்றுமைகள்தான் மத மாற்றங்களுக்குக் காரணம். அதுமட்டுமன்று கோடானுகோடி மக்களாகிய நாம் ஒருங்கிணைந்து வாழ முடியாமல் தடை செய்கிறது; வலிமையை இழக்கச் செய்கிறது. ஆதலால் சாதி வேற்றுமைகளை அறவே அகற்றுங்கள்! அதுவே இனி வரும் சிறப்பான எதிர்காலத்திற்குரிய பணி.
வறுமையுற்றோர்க்கு வாழ்வளித்தல்
உலகில் பல்வேறு சமயவழிப்பட்ட சமுதாயங்களுக்குள் நமது சமுதாயத்தில்தான் வறுமை அதிகம். “பொன் வேண்டேன்; பொருள் வேண்டேன்” என்று பாடிய மாணிக்கவாசகர்கூட நல்குரவைத் “தொல்விடம்” என்று சித்திரிக்கிறார். இந்தத் தொல்விடத்தின் தொடக்கில் இன்று அல்லலுறுவோர் எத்தனை பேர்? திசைநோக்கித் தொழும் திருவேடங் கொண்டு வயிற்றுக்கு இரந்து நிற்போர் எத்தனைபேர்? ‘திருக் கோயில் திருவிழா என்றால் பிச்சைக்காரர்களைத் தானே பார்க்கிறோம்! ஏன் இந்த அவலநிலை? நமது சமயம் மனிதாபிமானம் இல்லாததா? அல்லது நமது சமய நிறுவனங்களுக்குத்தான் உடைமையில்லையா? நாம் தான் ஏழையா? நாம் கடவுள் நம்பிக்கை, சடங்கு என்ற பேரில் இதை வற்றச் செய்து விட்டோம்.
படமாடக் கோயிற் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பற்கங் காகா
நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்கஃ தாமே.
என்று திருமூலர் காட்டிய திருநெறி, நம்முடைய சமயத்தில் நடைமுறையில் இல்லை.
நாம் கடவுளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம்! ஆனால் மனிதனுக்கு எதையும் செய்யத் தயாராக இல்லை. இந்த அவலநிலை மாறவேண்டும். கடவுளுக்கு எளிமையான முறையில் வழிபாடு செய்யவேண்டும். “யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை” என்ற பெரு நெறியும், உள்ளக் கோயில் வழிபாடும் பெருகி வளர வேண்டும். கடவுள் வழிபாட்டின்பேரால் காசுகளை வீணாக்குவது தேவையில்லாதது. சமய நிறுவனங்களின் பொருள்களும், சமுதாயத்தின் சேமிப்புப் பொருள்களும் நமது சமுதாயத்தின் மேம்பாட்டுக்குப் பயன்படும் வகையில் திட்டமிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு இனி ஒழுங்குபடுத்தப்பட்ட சமய இயக்கமும் முறைப் படுத்தப்பெற்ற சமய அறமும்தான் பாதுகாப்பளிக்கும் என்பதை நினைவிற் கொள்க!
சமயநெறியாளர் சிந்தனைக்கு
இன்றையச் சமுதாய அமைப்பு, வேற்றுமைகள் நிறைந்ததாக இருக்கிறது; பிணக்கும் பகையுமுடையதாக இருக்கிறது; உடையாரும் இல்லாருமாக மாறுபட்டு இயங்குகிறது. இவற்றின் காரணமாகச் சிக்கல்களும் ஏராளம்! இன்றையச் சமுதாயம் ஒட்டுமொத்தமாகச் சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கிறது. இந்தச் சிக்கல்கள் எதனால் தோன்றின? யாரால் தோன்றின? இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு எத்துறைக்கு இருக்கிறது? என்று வினவின் இன்றைக்கு உள்ளவாறு உணர்ந்து விடை சொல்வார் அரிது. ஒவ்வொரு துறையினரும் மற்ற துறையினர்மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளவே முயற்சி செய்வர். ஆனால் இந்த வினாவுக்குரிய விடையை ஐயத்துக்கிடமின்றி “Every political Question is becoming a social question, and every social question is becoming a religious question” என்று R.T. Ely என்பவர் கூறுகிறார். அதாவது இன்றைக்கு எந்தப் பிரச்சனையை எடுத்துக்கொண்டாலும் சமய நெறியாளர்கள் அது அரசியல் பிரச்சனை என்று கூறிவிடுகிறார்கள். அங்ஙனம் அவர்கள் கூறிவிடுகிறார்களே யன்றி, அந்தப் பிரச்சனையிலிருந்து, அவர்கள் முற்றும் ஒதுங்கி விடவுமில்லை. மறைமுகமாக மீண்டும் சமுதாயச் சிக்கல்களுக்குரிய செய்திகளைப் பேசத்தான் செய்கின்றனர்; வற்புறுத்தத் தான் செய்கின்றனர். அதற்கேற்றவாறு உவமைகளையும் அவர்கள் தேடிக் கண்டு பிடிக்கத்தான் செய்கின்றனர். உண்மையாகச் சொல்லப்போனால் அரசியல் என்பது ஒரு வேலி, ஒரு பாதுகாப்பு. அதுவும் சமயநெறிகள் வகுத்துக் காட்டிய வாழ்க்கை நியதிகள். நீதிநெறிகள் மக்கள் மன்றத்தில் நடைமுறைகள் மீறப்பட்டபொழுது-சமயம் மக்களுடைய உணர்வுகளின்மீது இருந்த பிடிப்பை இழந்த பொழுது எதிர்மறையால் ஒதுக்கும் வகையில் அதே நியதியை, நீதியைக் காப்பாற்றத்தான் அரசியல் தோன்றியது. இன்றையச் சமுதாயத்தின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை முறைபிறழ்ந்த நெறியல்லா நெறியினை நெறியெனக் காட்டும் நெறிப் பிறழ்வுகள்தாம் என்பதை நாம் உணர்ந்தேயாக வேண்டும்.
இத்துறையில் 'ஊழ்' முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. நாம் அதை மறுக்கவில்லை. ஆயினும் ஊழ் என்பது எது? அதன் எல்லை எது? எந்த வகைக் குற்றத்திற்கு ஊழைக் காரணம் காட்டுவது? என்றெல்லாம் ஆராய வேண்டாமா? அவர்கள் கூறுகிறபடி “எல்லாம் ஊழினாலேயே நடக்கிறது” என்று கொள்ளுங்கள்! தீயூழினால் அல்லற்படுவாருக்கு உதவி செய்யாது போனால் மற்றவர்தம் தீயூழ் எப்படி நல்லூழாக மாறும்? நல்லூழ் முதிர்ந்து எப்போது இருவினையொப்பாக உருப்பெறும்? தீயூழும் நல்லூழும் நோயும் மருந்தும்போல் - உடன்நிகழ்வன அல்லவா? இந்த விளக்கத்தை இப்போது சொல்லிக்கொண்டி ருக்கிறோமா? நடைமுறைப்படுத்துகிறோமோ? ஆதலால் சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் சமய நெறியாளர்கள் சிந்தனை செய்யவேண்டும். இத்துறையில் கச்சியப்ப சிவாசாரியார் அருளிய பாடல் ஒன்றை இங்கே நினைவுகூர்தல் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்: வான்மழை வழாது பெய்க;
மலிவளம் சுரக்க; மன்னன்
கோன்முறை அரசு செய்க;
குறைவிலாது உயிர்கள் வாழ்க;
நான்மறை அறங்கள் ஓங்க;
நற்றவம் வேள்வி மல்க!
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்.
இத் திருப்பாடல் சமுதாயத்தின் அனைத்துத் துறைகளையும் தழுவியதாக அமையவில்லையா? ஒன்றிலிருந்து ஒன்றாக விளைந்து சமயம்-நீதி என்ற பெருவாழ்வில் சென்று முடியவில்லையா? நாள்தோறும் இந்த வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பெறுகிறது. ஆனால், “குறைவிலாது உயிர்கள் வாழ்க” என்பதன் பொருள் நமது இதயத்தில் பதியவில்லை. வாழ்த்தினால் போதுமா? வாழ வைக்க வேண்டாமா? அன்பு - கூர்ந்து எண்ணுங்கள்! ஏன்? நமது திருஞானசம்பந்தர்,
வாழ்க அந்தணர்; வானவர் ஆனினம்;
வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்; அரன் நாமமே
சூழ்க; வையக மும்துயர் தீர்கவே!
என்று அருளிச் செய்த பாடலும் இதே குறிப்பினைத்தானே உணர்த்துகிறது! தீமைகள் அழிய வேண்டுமல்லவா? தீமைக்குக் காரணமாக இருக்கின்ற வேற்றுமை, பகை, வறுமை முதலியன அழியாமல் எங்ஙனம் தீமை ஆழும்: அன்பு கூர்ந்து இந்தப்பாடல்களுக்குச் செயலுருவம் கொடுக்கவும் வாழ்க்கையில் விளக்கம் காணவும் முயற்சிப்போமாக!
4
கொடியா? கொம்பா?
* * *
சமுதாய முன்னேற்றத்துக்கு மிகமிக உரியது சமயமா? அரசியலா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். முன்னேற்றம் அடையவேண்டும் - வாட்டுகிற வறுமையையும் - அல்லற் பாதையில் அழைத்துச் செல்லும் அறியாமையையும் அகற்றிப் புதுமைச் சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு அரசியலுக்கு இருக்கிறதா? அல்லது சமய நெறிக்கு இருக்கிறதா? என்பதே கேள்வி!
மனிதர்கள் மோட்சத்திற்குப் போகவேண்டும் என்ற பிரசாரத்திற்காக மட்டும் இது தரப்பெறவில்லை. வீடுபேறு மனிதனாக முயன்று பெறுவதல்ல. மனிதன் மனிதத் தன்மையோடு-அறவுணர்வோடு-அருளியல் சகிப்போடு கூடி வாழும்போது அவனுடைய வாழ்வு முழு நிலை எய்துகிறது. அதுபோது இறைவன் தகுதி நோக்கி அளிப்பது வீடு. மனிதனை மனிதனாக மதித்த அவனுடைய முன்னேற்றத்துக்கும் இம்மைக்கும் உதவுவது எது?
தலைப்பில் உள்ள மிகமிக என்ற சொற்களை ஆராய்ந்தால் கொடி தேவையா? கொம்பு தேவையா? என்பதல்ல கேள்வி? எது மிக மிக அவசியமானது? என்பதே விவாதத்துக்குரிய குறிப்பு என்பது பெறப்படும்.
“அரசியலா? சமயமா?” என்ற கேள்வி இன்றைய மக்கள் மன்றத்தின் கேள்வி.
அரசியல்வாதிகள் ‘சமயம் சமுதாயத்திற்கு முட்டுக் கட்டையாக இருக்கிறது-தடையாக இருக்கிறது’ என்று கூறுகின்றனர்.
அதே நிலையில் இன்றையச் சமயவாதிகள் பலர் சமுதாய உணர்வின்றி வாழ்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் அருள்நெறி இயக்கத்தினருக்கு உண்மை காணவேண்டும் என்ற உணர்வு எழுந்தது இயற்கையே.
சமயம் மனித இன வாழ்வுக்கு முட்டுக்கட்டை அல்ல; அது வாழ்வுக்குப்பயன்படுவது-வாழ்க்கையை வளப்படுத்துவது என்று உறுதியாக நாம் நம்புகிறோம்.
சமயம் என்ற பொதுத் தன்மையிலேயே இங்கு விவாதிக்கப் பெறுகிறது. சமய வேற்றுமைகளைக் கடந்த அருளியற் பண்பிலேயே சமயம் இங்கு பேசப்படுகிறது - தண்ணீர், வான் ஆகியவற்றின் பெயர் நாட்டுக்கு நாடு மொழியால் வேறுபட்டிருந்தாலும் அதன் இயல் ஒன்றாவது போல, சமயங்கள் பலவாறாகத் தோற்றமளித்தாலும் அவற்றின் அடிப்படைக் கொள்கை-தத்துவம் ஒன்றுதான்.
மதம் என்றாலே கொள்கை என்றுதான் பொருள். நன்னூலார் கருத்தும் இதுவே. “எழுவகை மதமே” என்று தொடங்கும் அவரது நூற்பாவே இதற்குச் சான்று. மனித சமுதாயம் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில் முதன் முதலில் உருவான கொள்கையே சமயம்தான். அதனாலேயே சிறப்பாக மதம் என்ற பெயர் சமயத்திற்கே உரியதாயிற்று.
அறிவிலே தெளிவைக் காட்டி-அன்பியலிலே ஆழ்த்தி -அகவாழ்வைத் தொட்டு-அகவாழ்வை வளர்க்கும் நெறியே சமய நெறி. அங்ஙனம் செயற்படாதன சமய நெறியே அல்ல. அகவாழ்வொடு இணையாத-பிணையாத சமயநெறி சோளக்கொல்லைப் பொம்மையைப் போன்றதேயாகும்.
யார் யாரணம்?
சமயத்தால் நாட்டில் பல சண்டைகள் ஏற்பட்டன என்று குற்றம் சாட்டினார்கள். சமயத்துறையில் மட்டுமா சண்டைகள் அரசியலிலும் சண்டைகள்தானே! வரலாற்றை உண்மையாக ஆராய்ந்தால் அவ்வப்பொழுது நிகழ்ந்த அரசியற் சண்டைகளே சமயச் சண்டைகள்போலப் பேசப் பெற்றுள்ளன. காரணம் மக்களிடையே சமய நம்பிக்கை சிறந்து விளங்கியதன் காரணமாகச் சண்டையிட்டவர்கள் மக்களிடம் ஆதரவைத் திரட்டுவதற்காகச் சமயச் சண்டை என்று சொல்லிக்கொண்டார்கள்.
சம்பந்தருக்கும் சமணர்கள் கழுவேற்றத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக அறிவிக்கிறோம்.
அங்கும் அரசியல் மோதலே! அடிப்படை அரசியலேயாம்! திருவருளே என்னத் திகழ்ந்த திருஞானசம்பந்தர் பொறுப்பல்லர் வழிவழியாகச் சிவநெறியில் நின்றொழுகிய மன்னனைச் சமணனாக ஆக்கிப் பாண்டிய நாட்டாட்சியைக் கைப்பற்றி ஆட்சிச் சமயமாகச் சமணநெறியை ஆக்கலாம் என்ற கருத்துடன் சமணர்கள் மன்னனைச் சமணனாக்கினார்கள். தன்னாட்டுக்கு உரிமை உடைய தனக்கு உரிமை உடைய சிவநெறியை விட்டுச் சமணநெறியைச் சார்ந்ததைத் திருஞானசம்பந்தரால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?
திருஞானசம்பந்தர் தமிழகத்தின் நாகரிகத்திற்காக- பண்பாட்டிற்காக உரிமைப் போராட்டம் நடத்தினார். அறியாதார் திருஞானசம்பந்தரை ஒரு சமயவாதியாக மட்டுமே பார்ப்பார்கள். அப்படியல்ல!
திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்திற்குக் கிடைத்த ஒப்பற்ற அருளாளர்; உள்ளுணர்வுகளையும் இயற்கை எழில்களையும் கவிதைகளாக்கித் தந்த கவிஞர். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய தமிழர்.
தமிழர் நாகரிகம் அகனைந்திணை ஒழுக்கத்தின்பாற்பட்டது. ஒருவனோடு-ஒருத்தி கூடி வாழ்கின்ற அறவாழ்வே தமிழர் வாழ்வு. இத்தகு வாழ்க்கைக்கு மாறுபட்ட பாலைவன வாழ்க்கையைத் தமிழகத்தில் நிலைநிறுத்தச் சமணர்கள் முயன்றனர். மேலும், தமிழ் இசைத் தமிழ் இறைவனை ஏழிசையாக- ஏழிசையின் பயனாகப் பார்ப்பவர்கள் தமிழர்கள். திருஞானசம்பந்தர் ஏழிசைத் தந்தையாக விளங்குகின்றார். “கானத்தின் எழுபிறப்பை” என்றார் சேக்கிழார் அடிகளும். சமணர்களோ பண்ணோடு இசைகேளாத நெறியைத் தமிழகத்தில் பரப்ப முயன்றனர்.
இயற்கை, இறைவனை அனுபவிக்கும் பள்ளிக்கூடம். “வண்ணமலரும் நீ”, “பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி” எனவரும் அருளாளர்களின் சிந்தனை நினைவில் கொள்ளத் தக்கது. திருஞானசம்பந்தர் தமது தேவாரப்பாடல்களில் இயற்கையின் எழிலோவியத்தைச் சித்திரமாக்கியுள்ளார். இங்ஙனம் தமிழர் தமிழ் நாகரிகத்திற்கு-அந்த நாகரிகத்தின் நிலைக்களனாக விளங்கும் சமயத்திற்குத் திருஞானசம்பந்தர் போராடினார். ஆனால் திருஞானசம்பந்தர் விவாதத்துறையில் வெற்றி பெறவே திருவுளம் கொண்டார். சமணர்களோ விவாதத்தில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இன்மையின் காரணமாக - கொல்லாமை நோன்பு கொண்டொழுக வேண்டிய சமணர்கள் பலாத்கார வழியில் திருஞான சம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்குத் தீயிட்டார்கள். தீயிட்டதின் பரிசைப் பெற்றார்கள்! இல்லை, பரிசைத் தாமே ஏற்றார்கள் என்பதே வழக்கு. இங்கனம் இருக்க அதை எப்படிச் சமயச்சண்டை என்று கருதுவது?
இங்கிலாந்தில் நடைபெற்ற ரோஜாப்பூச் சண்டைகளும் ஆதிபத்திய நோக்கத்தோடு சமயத்தின் பேரால் போட்டுக்கொண்டவைகளேயாம்.
ஒரு சாக்கடைக்குழி!
“மதம் எனும் பேய் பிடியாதிக்க வேண்டும்” என்று இராமலிங்க அடிகள் கூறியிருப்பது உண்மை. மதம் அனுபவத்துக்கு உரியது. ஆனால் சிலரைப் பேய்போல் பற்றிக்கொண்டு அவரையும் வாழவிடாமல்-மற்றவர்களையும் வாழவிடாமல் சண்டைகளை விளைவிப்பதைப் பார்த்துச் சொன்னாரே தவிர வேறு அல்ல. சமயநெறியின் பெயரால் மக்களிடையே வாழ்க்கைக்கு ஒத்துவராத பல கொள்கைகள் புகுந்து அவர்களை முன்னேற ஒட்டாது தடுத்து நிறுத்தின. அப்போலிக் கொள்கைகளை வெறுத்துப் பேசி அவர்களைத் திருத்தும் பொறுப்பை மேற்கொண்டார் இராமலிங்க அடிகளார்.
பணம் தேங்கிக்கிடக்கும் முதலாளித்துவம் ஒரு சாக்கடைக்குழி போன்றது. சாக்கடைக் குழியில் ஈயும் கொசுவும் தோன்றித் தொத்து நோய்களை வளர்க்கின்றன. அதுபோல முதலாளித்துவத்தைச் சுற்றிப் போலிகளும்- ஏமாற்றுக்காரர்களும்- காக்காய் பிடிப்பவர்களும்- உறிஞ்சி வாழும் சோம்பேறிகளும்- நன்றியறிதல் இல்லாதவர்களும்- மனித இனத்தின் பகைவர்களும் மொய்த்து வம்புவழக்கு என்ற தொத்து நோய்களை வளர்க்கிறார்கள். இத்தகைய முதலாளித்துவத்தால்தான் இடைக்காலச் சமயத்தில் கறை படிந்தது.
உண்மை இதே
முதலாளித்துவம் கடவுளையே விலைக்கு வாங்கும் அளவுக்குச் சக்தி படைத்தது. அது தன்னுடைய சுரண்டல் கொள்கைக்கு மதத்தை ஒரு கருவியாக ஆக்கிக்கொண்டது. அப்பொழுதுதான்.
புண்ணியத்தின் பயன் பணம்!
பாவத்தின் பயன் ஏழைமை.
என்ற தத்துவம் தோன்றியது. இதன் மூலம் பணக்காரன் மதத்தின் அங்கீகாரத்தோடு சுரண்ட முடிந்தது. ஏழைகளின் உரிமைக்குரல்-வாழ்வுரிமைக்குரல் அடைக்கப்பெற்றது. இக் கருத்தினை ஒட்டி எழுந்ததே, “மேலைத் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்” என்பது புண்ணியம் மிகமிக உயர்ந்தது- நிலையானது-திருவருள் இன்பத்தைப் பெறுவதற்குச் சாதகமாய் அமைவது. செல்வம் தாழ்ந்தது-நிலையில்லாதது. சிறந்த புண்ணியத்தின் பயனாக இழிந்த - தாழ்ந்த செல்வம் கிடைக்கிறது என்றால் அது பகுத்தறிவுக்கு விளங்கவில்லை! தொன்மைசான்ற சமய தத்துவத்திற்கும் இக்கொள்கைக்கும் இயைபில்லை.
புண்ணியத்தின் பயன் பணமுமல்ல!
பாவத்தின் பயன் ஏழைமையும் அல்ல!
புண்ணியத்தின் பயனாகச் சிறந்த சிந்தனை-குணம்-
பண்பியல்புகள் அமையும்!
பாவத்தின் பயன் இழிந்த குணம் அமையும்!
இடைக்காலத்தில் நடைமுறையில் இருந்த தவறான சமயத்தைச் சார்ந்த நடைமுறைகளை மையமாக வைத்தே காரல்மார்க்ஸ் மதத்தைப்பற்றி ஒரு முடிவு செய்துவிட்டார். காரல்மார்க்ஸ் பார்த்தது ரஸ்புடினுடைய சர்ச்சு மதத்தையே யாம்.
“சர்ச்சு மதம் வேறு - பைபிள் மதம் வேறு” என்று ஒரு ஆங்கிலச் சான்று உண்டு.
அதுபோலவே நம்முடைய நாட்டிலும் நடைமுறைச் சமயமும் தத்துவமும் வேறுபட்டிருக்கலாம். நாம் இங்கு காப்பாற்ற நினைப்பது மனிதனை மனிதனாக வாழவைக்கும் உண்மைச் சமயத்தையேயாகும்.
அரசியலில் சட்டம் இருப்பினும் தவறுகள் எப்படிக் குறையவில்லையோ, அதுபோலவே தூய சமய வாழ்வு மேற் கொண்டவர்களிடத்தும்கூடச் சூழ்நிலையின் காரணமாகத் தவறுகள் நிகழலாம்-நிகழக்கூடும். அவ்வப்போது சூழ்நிலையை மாற்றியமைத்துத் தவறுகளைத் திருத்தி மனித வாழ்வை ஆக்குவதே சமய நெறியின் கடமையாக இருக்கிறது.
வள்ளுவரைக் கேட்டால்...
வள்ளுவர், “மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி” என்றே சொல்லுகிறார். “சமயம் நோக்கி வாழும் குடி” என்று சொல்லவில்லை; ஆதலால் அரசியலே மிக மிக உரியது என்று கூறினார்.
திருவள்ளுவர் நூலின் முகப்பிலேயே முதல் அதிகாரத்திலேயே முதற் குறளிலேயே,
ஆதிபகவன் முதற்றே உலகு
என்றே தொடங்குகிறார். திருவள்ளுவர் சமுதாயத்தின் பல்வேறு கொள்கைகளைப் பல்வேறு அறங்களாகத் தனித்தனி அதிகாரங்களாகப் பிரித்துக் குறள் செய்துள்ளார். அந்த அந்த அதிகாரத்தில் அந்த அந்தக் கருத்தை வலியுறுத்துகிறார். கடவுள் வாழ்த்தில் இறைவனைச் சிறப்பித்துப் பேசுகிறார்; அரசியலில் அரசனைச் சிறப்பித்துப் பேசுகிறார். இதிலும்கூட ஆழமாகச் சிந்தித்தால், “மன்னவன் கோல்நோக்கி வாழும்” என்பதைவிட, “உலகிற்கு முதல் ஆதி பகவன்” என்பதே வலிமையுடையதாகத் தோற்றமளிக்கிறது. அரசனை அறவழி ஆற்றுப்படுத்தும் நோக்கத்தோடு,
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யானுயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே
என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் எழுந்தன. இப்பாட்டினால் அரசே முக்கியம்-சமயம் முக்கியம் அல்ல என்று முடிவுசெய்ய முடியாது. தட்டிக் கேட்க முடியுமா?
அரசு வளையும்போதும் அரசியல்வாதி ஒருவன் தட்டிக் கேட்கமாட்டான். கேட்டால் பட்டம்-பதவி-சிறப்புஉயர்வு கிடைக்காது.
அரசியல் சற்று வளையும்போது தட்டிக் கேட்கும் தன்மை-நெஞ்சுரம் அருளியல் ஒன்றினுக்கே உண்டு. இதற்குச் சான்று அப்பரடிகள் வரலாறு.
கொடிகட்டி ஆண்ட பல்லவ மன்னனையே எதிர்த்து நின்றார்; மன்னனை அண்டிவாழ்ந்தால் தானம் நிலம் மானியம் கிடைக்கும் எனக் கருதி வாழும் பிற்பட்ட சமயவாதியாக அவர் இல்லை.
பழுதிலாத் துறவுடன் வீடும் வேண்டா விறலின் விளங்கினார் அவர். தாமார்க்கும் குடியல்லாச் சங்கரனுக்கே ஆட்பட்ட அப்பரடிகளிடம் அரசியலைத் தட்டிக் கேட்கும் மாசிலாத் துறவு இருந்தது. தொண்டுள்ளம் இருந்தது. வளமிக்க அருளியல் அனுபவம் இருந்தது. எனவே ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்று வாழ முடிந்தது.
கணக்கு மூளை
சமயக்கணக்கர் மதிவழிச் செல்லாச் சான்றோன் என்று திருவள்ளுவரைச் சிலர் குறிப்பிடுவார்கள். உண்மைதான்! வள்ளுவர் சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாதவர்தான். எனினும் உண்மைச் சமயநெறியில் வாழ்ந்தவர்.
சமயக்கணக்கர் என்றுதானே கூறப்பட்டிருக்கிறது. கணக்குமூளை-கணக்கரிடம் ஈவு இரக்கம் இருக்காது - அனுபவம் இருக்காது-இருந்தால்- பணம் சேர்க்க முடியாது. அத்தகையோரைத்தான் “இவறிக்கூட்டுவான்” என்று பரிமேலழகர் குறிப்பிடுகின்றார்.
சமயக்கணக்கர்கள், தத்துவத்துக்கு - வாழ்வுக்கு உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்காது, உடலுக்கு-எலும்புக் கூட்டுக்கு முக்கியத்துவம் தருவார்கள்; தத்துவத்துக்கு முதலிடம் தராது சடங்குகளுக்கே முதலிடம் தருவார்கள். ஒத்த நோக்கில்லாத அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியாது; அனுபவம் கிடையாது; எனவே சமயக் கணக்கர் வேறு சமய நெறியாளர் வேறு. வள்ளுவர் சமய நெறியாளர் மதிவழிச் செல்பவரே தவிர சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாதவர் என்று கூறியது உண்மைதான்.
வேறு வேறா?
சமுதாயம் வேறு, தனி மனிதன் வேறு என்று கூறப் பெற்றது. இப்படியும் சிலர் கூறுகிறார்கள். தனிமனிதனும் சமுதாயமும் ஒன்றே என்ற கருத்தும் பலரிடத்தில் நிலவி வருகிறது. இத்துறையில் மக்கள் மன்றம் திட்டவட்டமான முடிவுக்கு இன்னும் வரவில்லை. நம்மைப் பொறுத்த வரையில் இரண்டும் ஒன்று என்றே கருதுகிறோம்.
வயிற்றுக்குள் உணவு போட்டாலும் அது செங்குருதியாக மாறி கை-கால்-தலை முதலியவற்றுக்கெல்லாம் ஓடிப் பாய்ந்து பயன் தருவதைக் காண்கிறோம். தனி மனிதன் தன் வாழ்வில் நல்லவனாக - ஒழுங்குடையவனாக - பண்பாடு உடையவனாக வாழ்ந்தால் அப்பண்பியல்புகள் அவனைச் சூழ்ந்திருக்கும் சமுதாயத்திலும் அமையும். இதனைத் திருவள்ளுவரும்,
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்(கு)
இனத்துள தாகும் அறிவு
என்று கூறி விளக்குகிறார்.
‘உன் நண்பன் பெயரைச்சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்ற பழமொழியும் இக்கருத்தினை வலியுறுத்துவதன்றோ! செழுந்தீயின் நடுவில் பச்சைப் பசுஞ்செடி ஒன்று பசுமையோடு வாழ இயலுமா? யோக்கியன் ஒருவன் கோடிக்கணக்கான தீயவர்களிடத்தில் அகப்பட்டால் அவன் யோக்கியனாகவே வாழமுடியுமா? கோடிக் கொருவராக வந்த வள்ளுவரை-இளங்கோவை-நாவரசரை எடுத்துக்காட்டுதல் பயனில்லை. சாதாரண மனிதரைப் பற்றியே சிந்திக்க வேண்டும்-பெரும்பான்மையான மக்களைப் பற்றியதாகவே நம் சிந்தனை அமையவேண்டும். அதுபோலவே அறநெறியும்-ஒழுக்க நெறியும் உருவாக வேண்டும். தனிமனித வாழ்வும் சமுதாய வாழ்வும் உடம்பும் உயிரும் போன்றது. தனிமனிதன் சமுதாயத்திலிருந்து தன்னை வேறுபடுத்தி எண்ணும்போதுதான் தன்னலம் இடம் பெறுகிறது. பொருளைப் பூட்டிக் காப்பவனாகிறான். தான் மட்டும் வாழ்வதையே பெரிதென எண்ணுகிறான். எனவே தனிமனிதனைச் சமுதாயத்தினின்றும் பிரிப்பதன் மூலம் தனிமனிதனுடைய தன்னலத்தை-ஆக்க உணர்ச்சியை வளர்க்கிறோம். தனிமனிதன்வேறு, சமுதாயம்வேறு அல்ல. உடலுக்கும் உயிருக்கும் உள்ளது போன்ற அமைப்பு தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் உள்ளது என்பே உண்மை.
தனிமனிதனைச் சமுதாய வாழ்வுக்கு அழைத்துச் செல்வது சமயம். ஆசைகள் இருக்கலாம். அது மனித இயற்கை! தன்னலம் பிறர் நலத்தின் மீது கை வைக்காதபடி தடுத்து நிறுத்தி ஒழுக்க நெறியைக் காட்டுவது சமயம்.
சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு
என்றார் வள்ளுவர்.
திருக்குறள் கூறும் அறிவு வெறும் அறிவல்ல. படிப்பு வேறு, அறிவு வேறு. குறிப்பிட்ட வரலாற்றுண்மைகளை கணித எண்களை-இலக்கணக்குறிப்புகளைத் திரும்பத் திரும்பப் படித்து மூளையில் ஏற்றிக்கொள்ளும் படிப்பல்ல கல்வி. கல்வி ஆழமானது, அகலமானது. கல்வி வாழ்க்கைக்குரியது. வையத்துள் வாழ்வாங்கு வாழும் வகையைக் கற்றுத் தருவது-அனுபவத்தைத் தருவது. சமுதாயத்தில் இருந்து பெறும் அனுபவ அறிவுதான் நிலைத்தது, உண்மையானது.
குறை எங்கே?
“மனிதன் அறிவைப் புத்தகங்களிலிருந்து பெறுவதை விட சமுதாயத்திலிருந்தே மிகுதியாகப் பெறுகிறான்” என்ற சிந்தனைத் தொடர் நினைவில் கொள்ளத்தக்கது.
இன்று ஏட்டில் உள்ளனவெல்லாம் அனுபவத்துக்கு வந்துவிட்டனவா? பொய் சொல்லக்கூடாது-திருடக்கூடாது என்பன போன்ற தத்துவங்கள் அரசியல் சமயம் இரண்டுக்கும் பொதுவானவை. இரண்டும் சேர்ந்தும் பொய்யாமையையும் திருடாமையையும் காப்பாற்ற முடியாமைக்குக் காரணம் என்ன? மனிதனிடத்தில்- அவனுடைய வாழ்வில் எங்கோ ஒருகுறை இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?
காயமே இதுபொய்யடா; காற்றடைத்த பையடா
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வப்
போக்கும் அதுவிளிந் தற்று”
என்பன போன்ற பொன்மொழிகளை ஏடுகளில் படிக்கிறோம். பலர் சொல்லக் கேட்கிறோம். ஆனால் அந்த மொழிகள் நடைமுறையில்-வாழ்க்கையின் அனுபவத்தில் இல்லை.
இன்றையச் சமுதாயம் அன்றாட வாழ்வில், நடை முறை ஒழுங்கை வைத்துக் கொள்ளாமைக்குக் காரணம் மனித இன வாழ்வில் ஏற்பட்டுள்ள சமுதாயக் கண்ணோட்ட மின்மையேயாகும்.
வீடு மட்டுமா!
சமயம் வீடு பேற்றுக்காக மட்டுமே எழுந்தது என்று கூறப்பெற்றது. அதுசரியல்ல. மனிதனுடைய வாழ்வில் கலந் துள்ளது-மனிதனை வாழ்வாங்கு வாழத் துாண்டுவது சமயம். ‘யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை’ என்று இறைவனைப் பூசிக்கச்சொன்ன திருமூலர் சமுதாயத்தை மறந்து விடவில்லை-தொடர்ந்து சமுதாய நலம் காணும் அறக் கொள்கைகளையும் கூறுகிறார்.
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே
“இம்மையே தரும் சோறும்கூறையும்” என்கிறார் சுந்தரர்! “தொழுகைத் துன்பம் துடைப்பாய் போற்றி” - என்கிறார் மாணிக்கவாசகர். ஆகவே வீடுபேறு பெறுவது மட்டும் சமய வாழ்க்கையின் குறிக்கோளல்ல. இறைவனாக நமக்கு அளிக்கும் பரிசு வீடு, பள்ளியில் ஏற்படுத்தும் பரிசைப் பெறுவதற்கு அறிவைப் பக்குவப்படுத்திக் கொள்வது போல, இறைவனளிக்கும் வீட்டினைப் பெறுவதற்கு நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளும் வாழ்க்கை முறையே சமயம்.
ஏகாதிபத்தியமா?
வாழ்த்தியவனுக்கு வீடுபேறு கொடுப்பதும் வாழ்த்தாதவனுக்கு வீடுபேறு தராததும் ஏகாதிபத்தியம் என்கிறார்கள்.
என்மீது அன்பு கொண்டு என்னை மேம்பட்டவனாக -மதிப்பிற்குரியவனாக எண்ணி என்னிடம் பக்தி செலுத்தும் ஒருவரிடம் நான் எப்படி அன்பு செலுத்தாமல் இருக்க முடியும்?
அவர்மீது மிகுந்த அன்பு செலுத்துவது இயற்கை தானே! ஆனால், அதே சமயத்தில் என்னோடு மாறுபட்ட - என்னோடு ஒத்துவராத-வேறொருவரிடம் அன்பு செலுத்தாது இருந்தால் அது தவறு! நான் மனித இனக் கண்ணோட்டத்துடன்-நாகரிகக் கண்ணோட்டத்துடன் என்பால் அன்பு செலுத்தாதவர்மீது அன்பு செலுத்தக் கற்றுக்கொடுத்தது நான் மேற்கொண்டொழுகும் சமய வாழ்வுதானே! மனித இன நாகரிகத்தை-கண்ணோட்டத்தை வகுத்துத்தருவது சமயம் தான.
வாழ்த்தியவர்கள் எல்லோருக்கும் வீடுபேறு கொடுத்ததாக வரலாறு இல்லை. இராவணன் சிறந்த சிவபக்தன்; நாள்தோறும் ஏழுகடலிலும் குளித்தெழுந்து இறைவனை ஏத்திய பக்தன்தான்! ஆனால் அறத்தின் பெயரால்-அறத்தின் முன்னிலையில் ஆண்டவனால் ஒதுக்கப்பட்டான்.
இதயமும் நாமும்!
அறம்வேறு! சமயம்வேறு அல்ல. கை, கால் எல்லாம் சேர்ந்ததுதான் உடம்பு. இவை இல்லாமல் உடம்பில்லை. இவை எல்லாம் உடலின் உறுப்புக்கள். இவை இல்லா விட்டாலும் ஒருவன் வாழ்ந்து விடலாம். இதயம் இல்லாமல் ஒருவன் வாழமுடியுமா? இதயம் வேறு நாம் வேறு அல்ல. நம் வாழ்வுக்கு இதயம்போல, சமயத்திற்கு அறம். ஆகவே சமயம் வேறு அறம் வேறல்ல. அறமே சமயம், சமயமே அறம்.
சண்டைகள் குறைய
சமயம் இல்லாத-மதம் இல்லாத உருசியா இன்று உலகில் சிறப்புடன் இருப்பதாகவும்-சமயம் வளர்க்கப்பெற்ற -மதக் கொள்கை மலிந்த காங்கோவில் கலகமே நடப்பதாகவும் கூறப்பெற்றது.
உருசியாவில் மதம் இல்லை என்பது பொய்! மதத்திற்கு அங்கு செல்வாக்கு இல்லாமலிருக்கலாம். காங்கோவிலும் அரசியல் இல்லாமல் இல்லை. காங்கோவில் சமயத்தின் வழிப்பட்ட அரசியல் இல்லை. சமயத்தின் வழிப்பட்ட அரசியல் என்றால் இளங்கோ தன் அண்ணனுக்கு நாட்டைக் கொடுத்துவிட்டு நாட்டு நன்மைக்காகத் துறந்தது போலநாட்டின் நலங்கருதி-மக்கள். நலங்கருதி விட்டுக்கொடுக்கும் ஒரு யோக்கியமான சமயத்தின் வழிபட்ட அரசியல் இல்லை. சமயம் ஆதிபத்தியக்காரர்கள் கையில் சிக்கி இருக்கிறது. என்னைக் கேட்டால் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஒரு “சமயவகுப்பு” நடத்தி, “நீ மனிதனாக வாழப் பிறந்திருக் கிறாய்” என்ற உண்மைச் சமயத்தின் அடிப்படைத் தத்துவத்தை அவர்கள் உணரும்படி செய்தால் அப்பொழுது நல்லன உண்டாகலாம். சண்டைகள் குறையும்! சமாதானம் பெருகும்!
உலகில் உள்ள அரசியல் எண்ணங்கள் அனைத்தையும் ஒன்றுபடுத்த முடியுமா?-சிந்திக்க வேண்டியதொன்று. உலகம் உள்ள வரையில்-சமுதாயத்தினிடம் சிந்திக்கும் ஆற்றல் உள்ள வரையில் சிந்தனையால் உலகை ஒன்றுபடுத்த முடியாது. உலகமனைத்துக்கும் ஒரே அரசியல்-சமயம்மொழி உருவாவது கடினம்-அருமையிலும் அருமை! ஆயினும் வேறுற்மைக்குள்ளும் ஒற்றுமை காணும் விழுமிய பண்பை வளர்க்க முடியுமா என்பதை ஆராயவேண்டும்.
“வேறுபடு சமயங்கள் புகுந்து பார்க்கில் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டல்லால் வேறில்லை” என்ற தாயுமானாரின் விழுமிய கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவர முயலவேண்டும். வேறுப்டக் கருதுவது வெறுப்பினால் அல்ல. சிந்தனை வளர்ச்சியின் கூறுகளும், சூழலுமே மாறுபாட்டுக்குக் காரணம் என்று உணரவேண்டும். அது மட்டுமின்றி வேறுபடக் கருதுவது வளர்ச்சிக்கும் தூண்டு கோலாக அமைகிறது. ஏன்? எதனால் என்ற கேள்விகளின் மூலமே தத்துவஞானம் வளர்ந்திருக்கிறது-அறிவியலும் வளர்ந்திருக்கிறது. மனிதகுலம் கருத்தைப் பரிமாறிக்கொண்டு வளர வேண்டுமென்பதே நமது கொள்கை.
கடிகாரமும் அரசியலும்
கடிகாரம் அரசியலைச் சார்ந்தது. எனவேதான் காலத்தைக் காட்டி, தான் காலங்கடத்துவதைக் குறிப்பிட்டு எச்சரிக்கிறது. மதம் காலம் கடந்தது என்று இராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்கள். மறுக்கவில்லை! உண்மைதான்! மதம் காலங்கடந்த தத்துவம்; காலத்துக்கு அப்பாற்பட்டது அகப்படாதது. ஆனால் ஒரு கடிகாரம் செய்வதற்குப் பயன்பட்ட அறிவில்-சிந்தனையில் மாறுபாடற்ற அருளியலின் தொடர்பு-மாறிலாத அன்பின் சாயல்-அருளியலின் சாயல் உண்டு. அன்பியலில்-அருளியலில் இறைவன் சாயல் இரண்டறக் கலந்திருக்கிறது. எனவே சிந்தனையால் அறிவால் கடிகாரத்தை ஒருவன் செய்தபோதிலும் அதற்கும் தூண்டுகோல் தெள்ளிய அறிவு. தெளிந்த அறிவு வேறு, அருளியல் வேறல்ல. தூய அறிவே உருவானவன் ‘இறைவன்’, ‘வாலறிவன்’ என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
நந்தியும் அறமும்
சிவன் கோயிலுக்குச் செல்கிறோம். உள்ளே நுழைவதற்குமுன் வழியில் நந்தியைக் காண்கிறோம்- வணங்குகிறோம்-நாம் மாட்டை வணங்குவதாகக் கூறுவர் ஒருசிலர்! உண்மையிலேயே அது மாடா என்ன? எந்த உருவத்துக்குப் பின்னும் ஒரு கருத்து உண்டு. அந்த நந்தி- காளை அறத்தின் வடிவம் அறத்தின் சின்னம்.
உழுத நோன்பகடு அழிதின் றாங்கு
என்று புறநானூற்றுப் புலவன் பேசுகிறான்.
போர்க்களம் சென்று மாற்றாரைப் பொருது வெற்றியுடன் விழுப்புண் தாங்கி வருகிறான் மன்னவன். போரில் அயராது போரிட்ட அனைவருக்கும் வாரி வழங்கி மகிழ்ந்தான். தான்மட்டும் உண்ணவில்லை-உண்பதற்கு ஒன்றும் இல்லை. ஒரு கோப்பை மது குடித்து மகிழ்கிறான். அத்தகைய மன்னனுக்குத்தான் எருதை உவமையாகக் கூறுகிறார் புலவர்.
கழனியை உழுவது காளை-எரு ஏற்றிவந்து கொட்டுவது காளை-கதிரடித்துத் தருவது காளை-வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதும் காளை! செந்நெல்லரிசியும் செங்கருப்பச்சாறும் கொண்டு பொங்கல் பொங்குகிறான் உழவன். வயிறார உண்டு மகிழ்கிறான். உண்ட களிப்பில் உழைத்த எருதையும் மறந்துவிட்டான். எருதுக்குத் தீனிபோட மறந்துவிட்டான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த எருது ஒன்று மெல்ல அம்மா என்று கத்தியது.
மற்றொரு எருது அதைப் பார்த்துச் சிரித்தது. ஆவிற்கு நீர் என்று இரப்பினும்..என்று சிந்திக்கிறது-சிந்தனை வழியே சிரிப்புப் பிறக்கிறது. கத்திய காளை விளக்கம் தருகிறது. “தீனிக்காகக் கத்தவில்லை, நான் என் பசிக்காகக் கத்த வில்லை! இன்று வைக்கோலையாவது சிறிது தின்று வாழ்ந்தால்தானே அடுத்த ஆண்டும் நம் தலைவனுக்கு உழுது கொடுக்க முடியும்” என்றது. அத்தகு பண்பியல்வழி வாழும் காளைதான் கோயில் முகப்பில் படுத்துக் கிடக்கிறது. நீ கோயிலுக்குள் நுழையும்போது, “ஐயா! தேங்காய் இருக்கிறதா? பழம் இருக்கிறதா? சூடம் வெற்றிலைப் பாக்கு இருக்கிறதா? தமிழில் அருச்சனை செய்யப் போகிறாயா? இல்லை, வழக்கம்போல் வடமொழியில் அருச்சனை செய்யப் போகிறாயா? என்று அந்த எருது கேட்கவில்லை! ‘நீ என்னுடைய பண்பாட்டைப் பெற்றாயா? என்னுடைய பண்பாட்டிற்கு உரியவன் ஆனாயா? என்று கேட்கிறது. அந்தக் காளைதான்-அறத்தின் வடிவம்தான் திருக் கோயிலின் முகப்பில் படுத்துக்கிடக்கிறது.
அறமும் ஒழுக்கமும் காலத்துக்குக் காலம் மாறுபடும். சமுதாயம் வளரவளர வேறுபடும். ஆனால் ஒற்றுமை மட்டும் மாறுபடுவதில்லை. அதுதான் பிறருக்குத் தீமை செய்யாமல் வாழ்வது என்பது. இந்த அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்துகொண்டால் அறமே சமயம்-சமயமே அறம் என்ற கருத்து விளங்கும். இரண்டும் வெவ்வேறல்ல என்று கொள்ளலாம். திருக்குறளும் ‘அறவாழி அந்தணன்’ என்று வாழ்த்துகிறது.
மிக்க கொளல்
ஆத்திகர்கள் எல்லாம் யோக்கியர்கள் அல்ல என்று கூறினார்கள். அப்படியானால் அரசியலில் இருப்பவர்கள் எல்லோரும் யோக்கியர்களா? ‘அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. ஆகவே குறைபாடு எங்கும் உண்டு-எத்துறையிலும் உண்டுயார் மாட்டும் உண்டு. அதனாலன்றோ தமிழ்மறை,
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்-
என்று வரையறுத்துக் கூறுகிறது.
“அரசியலில் உள்ளவர்களைக் காட்டிலும் சமயத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் யோக்கியராக இல்லாது போனா லும்கூட, யோக்கியர்களாக இருக்க ஆசைப்படுகிறார்கள்” என்ற உரை சிந்திக்கத்தக்கது.
Hendry the Clink என்ற அறிஞன் ‘சமயத்துக்குத் திரும்புதல்’ The Return To Religion என்று ஒரு நூல் எழுதியுள்ளான். அதில் “கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடையே கலந்திருந்து அவர்களுடைய வாழ்வில் காணும் குறைகளையும் நிறைகளையும் தனித்தனியே குறித்து வைத்துக் கொண்டேன்; கடவுள் நம்பிக்கையுடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவோரின் வாழ்வில் கலந்து அவர்களுடைய வாழ்வில் காணும் குறைகளையும் நிறைகளையும் தனித் தனியே குறித்து வைத்துக்கொண்டேன். ஒத்துப் பார்த்ததில் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் தவறு செய்யப் பயப்படுகிறார்கள்” என்று கூறுகின்றான். சமயத்துடன் தொடர்பு கொண்டவன் தவறு செய்யப்பயப்படுகிறான். மறுமையின் அச்சம்-மறுபிறப்பின் துன்பம் காரணமாகத் தவறு செய்ய அஞ்சுகிறான். ஒரு நீண்ட சாலையில் செல்பவனுக்கு இங்கே பாலம் இருக்கிறது-இங்கே திருப்பம் இருக்கிறது-இங்கே பாதை வளைந்து செல்கிறது என்று அறிவித்து வழி நடத்தும் அறிவிப்புப் பலகைபோல-மனித வாழ்வில் அழுக்காறுஅவா வெகுளி முதலிய குற்றங்களைக் காட்டி - அவற்றிலிருந்து விலகி நல்வழியில் செல்ல ஆற்றுப்படுத்துவதே சமய நெறி.
வாழ்வா? தாழ்வா?
கோயிலில் வேலை செய்பவருக்குச் சோறு கிடைக்கிறது. எனவே அங்கு பொதுநலம் பேணப்படுகிறது என்று சமயச்சார்பினர் கூறுகின்றனர். இன்றைய உலகம் விழித்துக் கொண்டது. இனிமேலும் போலிச் சமயக் கொள்கைகளைக் காட்டி உலகை ஏமாற்ற முடியாது. மனிதனை மனிதனாக பெருமையோடு-பேராண்மையோடு வாழ்வதற்குக் கற்றுத் தரும் உண்மைச் சமயமே எதிர்காலத்தில் நிலைத்து நிற்க முடியும்! கோயிலில் சோறு வழங்குவது பொதுப் பணியாகும் என்று கூறி ஏமாற்ற முடியாது. பெருமையோடு வாழப்பிறந்த மனிதனைப் பிச்சைக்காரனாக்கிவிட்ட கொடுமையை மறைக்க முடியாது. 1952-ல் பிச்சைக்காரனாக இருந்தவன் 1962-லும் பிச்சைக்காரனாகவே இருக்கிறான். அவனுடைய வாழ்வு வளரவில்லை; வளம் பெறவில்லை. வாழப் பிறந்தவர்களைப் பிச்சைக்காரர்களாக்கி மகிழ்வது மகேசுவரனுக்குப் பிடிக்காத ஒன்று என்பதை உணர்த்த விரும்புகிறோம்.
தமிழ்நாட்டில் அறிவுக்குப் பஞ்சமில்லை. ஆண்மைக்குப் பஞ்சமில்லை. திறமைக்குப் பஞ்சமில்லை எனினும் முன்னேற வேண்டுமென்ற ஆர்வம் கிடையாது-அக்கறை இல்லை. நாள்தோறும்-நாழிகை தோறும்-மேனாட்டு நாகரிகம் புதுப் புதுக் கோலத்தில் நம் வாழ்வில் கலக்கிறது. ஆனால், மனிதனை மனிதனாக வாழ வைக்கும் பண்பு வளரவில்லை-மனித சமுதாயத்திற்குத் தொண்டு செய்யும் நாகரிகம் இடம் பெறவில்லை.
பைபிளின் சமயத்தைக் குடிசைகள்தோறும் தூக்கிச் சென்று பரப்புகிறார்களே! அதுபோல திருவாசகத்தைக் குடிசைகள்தோறும் தூக்கிச் சென்று “சிவநெறியை” வளர்க்க வேண்டும் என்ற விழுமிய விருப்பம் தோன்றவில்லை.
ஆணவம் குறைய வேண்டும். அதற்குத் தொண்டுள்ளம் வேண்டும். திருத்தொண்டின் வழிநிற்றலே அருளியலுக்கு ஆக்கம்; அழியும் உடலுக்கு ஊதியம் பொருள்; உயிருக்கு ஊதியம் தொண்டு. “தொண்டல்லாது உயிர்க்கு ஊதியம் இல்லை” என்றார் நாவுக்கரசர்.
துறவு என்றால் உலகத்தைத் துறப்பதல்ல-தன்னலத் துறவே துறவு. தன்னலம் வேண்டாம் என்று கூறவில்லை - கூறவும் முடியாது. தன்னலம் இருக்கட்டும்; ஆனால், வேலி அமைத்துக்கொள். அது பிறர் நலத்தில் கைவைக்காத அளவுக்கு இருக்கட்டும். இல்லையென்று கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாது கொடு. இறைவன் திருவருள் பாலிப்பார்.
இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும்வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்
என்று கூறுகிறார் நாவரசர். இரப்பவர்க்குக் கொடுக்கவே திருவருள் பொருள் தந்தது. அப்படி ஈத்து உவந்து வாழ்பவர்க்கே திருவருளும் உண்டு. கொடுத்து வாழாதவனுக்கு நரகத் துன்பமே உரியது. இது திருமுறைக் கருத்து. இத்தகு சமுதாய நலம் பேணும் சமய நெறிக்குப் பொதுவுடமை யாளரும் மாறாக இருக்க முடியாது. சமுதாய முன்னேற்றத் துக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?
நம்முடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக சமய நெறி இல்லை. சமயத்தின் பேரால் உலவும் பிற்போக்குக் கொள்கைகளே, முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன. இன்ப துன்பங்களை உணர்வைத் தொடும் வண்ணம் காட்டும் சமுதாயத்தில் ஈடுபடாதவர்கள் கோயிலில் இருக்கும் ஆண்டவன் சிலையில் ஈடுபாடு கொள்ள முடியுமா? அதனால்தான் தொண்டின் வழிப்பட்ட சமய வாழ்வே சிறக்க முடியும் என்று காட்டினார் சேக்கிழார் பெருமான்.
திருஞானசம்பந்தர் மூன்றாண்டிலேயே திருவருள் கைவரப் பெற்றவர். ஞானத்தின் திருவுருவாய்த் திகழ்ந்த அவர் திருவீழிமிழலையில் நிகழ்ந்த பஞ்சநிலை தீர்க்கத் தொண்டு செய்யவில்லையா? குழந்தையை இழந்து வாடியவர்களின் துன்பம் கண்டு உருகிக் குழந்தையை மீட்டுத் தரவில்லையா சுந்தரர்?
ஞானசம்பந்தர்-நாவுக்கரசர்-சுந்தரர் ஆகிய நம் சமயப் பெரியோரின் ஞான அனுபவம் உலகியலை மீறியதாக இல்லை என்பதை வரலாறு அறிந்தோர் உணர்வர். உலகைப் பகைமையிலிருந்து-சுரண்டலிலிருந்து வறுமையிலிருந்து காக்க-உலக ரீதியில் வலிமையுள்ள பொதுத் தத்துவம் தேவை; அத்தகு வலிமை பெற்ற தத்துவம் சமயத் தத்துவமேயாம். “உயிர்களிடத்தன்பிலார் ஈசனுக்கன்பிலார்” என்ற கருத்து உலகின் எல்லாச் சமயங்களுக்கும் பொது.
உலகத்தை ஒருமைப்பாட்டு நெறியில் அமைக்க ஒரே தலைமை உணர்வு தேவை. உலகியல் தலைவர்களை, குறுகிய நாட்டுப்பற்று-இனப்பற்று-மொழிப்பற்று-சமயப் பற்று ஆட்கொண்டிருக்கும். உலகத் தலைவன் விருப்பு வெறுப்பு அற்றவனாக-வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனாக சாதிச் சழக்கற்றவனாக-பொதுவானவனாக இருக்க வேண்டும். அவன் இறைவன் ஒருவனே!
அரசியலால் மனிதனைப் பக்குவப்படுத்த முடியாதா என்ற வினா எழலாம். சிறந்த அறிவுடன் செய்யப்பெற்ற அரசியல் சட்டத்தில்கூட கொலை செய்வது குற்றம் கொலை செய்யத் தூண்டுவது குற்றம்-கொலைக்கு உடந்தையாக இருப்பது குற்றம் என்றுதான் உள்ளதே தவிரக் கொலை செய்ய நினைப்பது குற்றம் என்று இருக்கிறதா?-இல்லை, இருக்கவும் முடியாது. நிகழ்ச்சிக்குரிய நினைப்பைக் குற்றமாக்க சட்டத்தால் முடியவில்லை! சட்டத்தின் நிலை அது!
ஆனால், சமயநீதி ஆழமானது - சிந்தனையோடு கூடியது - சிந்தனையைத் திருத்துவது - அகவாழ்வைத் திருத்துவது நினைப்போடு தொடர்புடையது - நினைப்பைத் திருத்தி வாழ்வது நிறைவாழ்வு என முழங்குவது சமய நெறி! செயலைத் திருத்துவது அரசியல்; சிந்தனையைத் திருத்துவது சமயம். சிந்தனையைத் திருத்தும் உண்மைச் சமயம்-சமுதாய வாழ்வில் உரிய இடம் பெறுமானால் - செயலைத் திருத்தும் அரசியலின் பொறுப்புக் குறையும்.
>நேராக மானிடர் பிறரைக் கொல்ல நினையாமல்
வாழ்ந்திட்டால் மாந்தர் ஏர் கட்டி உழுதல் வேண்டா
காரானநிலத்தைப் போய்த் திருத்தல் வேண்டா;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா!
சீரான மழையுண்டு சிவன் செத்தாலன்றி மண்மேல் செழுமையுண்டு
என்பது கவிஞன் பாரதியின் வாக்கு.
கவிஞன் தெளிவான-உறுதியான பாதையைக் காட்டுகிறான். நாமனைவரும் இன்பமாக வாழ உணவு தேவைஅந்த உணவைத் தடையின்றிப் பெறுவதற்குரிய வழி என்ன?
காடுவெட்டி நிலம் திருத்திக் கழனிகள் காண்பதா? கழனிகளுக்கு நீர்பாய்ச்சச் சண்டை போட்டுக்கொள்வதா? இவை தேவையான முயற்சிகளேயாம்! ஆனாலும் இம் முயற்சிகளே போதுமானவை யல்ல-வசையிலா வண்பயன் குன்றும்! எப்பொழுது? - ஏன்?-இசையிலா மக்களை நிலமகள் தாங்கும்பொழுது-என்று தமிழ்மறை பேசுகிறது.
மற்றொருவரைக்கொல்ல நினையாமல் மக்கள் வாழுங்காலத்தில் இயற்கை உணவளிக்கும் என்கிறான் பாரதி. “கொல்லாமல்” என்று கூறாமல்-"கொல்ல நினையாமல்” என்று நினைப்பொடு தொடர்புபடுத்திக் கவிஞன் கூறுவது சிந்தனைக்குரிய ஒன்று.
விவாதத்துக்குரிய தலைப்பு சமுதாய முன்னேற்றத்துக்கு மிகமிக உரியது சமயமா? அரசியலா? என்பது. தலைப்பு இரண்டும் தேவை என்பதை வற்புறுத்துகிறது. ஆனால், எது முதலிடம் பெறுவது என்பதே கேள்வி: இன்றையச் சமுதாயத்தில் அரசியலே முழுக்க முழுக்க முதலிடம் பெற்றுவருகிறது. எங்கும் அரசியல் எண்ணங்கள்! எங்கும் அரசியல் அரங்கங்கள். அருளியல் வழிபட்ட எண்ணங்கள் அருகிக்கொண்டே வருகின்றன. இப்போக்கு சமுதாயத்துக்கு நலம் பயப்பதல்ல.
சமுதாயத்தில் முன்னிடம் - முதலிடம் பெற வேண்டியது சமயமே ஆகும். சமய வழிப்பட்ட சமுதாயத்தை நிலை நின்று காக்க அரசியல் வேண்டும். தோட்டத்தில் அவரை பயிர் செய்ய வேண்டும் என்று சொன்னால் நில முழுதும்-வித்திட்டு செடி முளைத்துக் கொடிவிட்ட பின் கொழுகொம்பு நட்டு வளர்ப்பதே முறை. மனநலம் திருத்தி அருள் என்னும் வித்திட்டு அறம் என்ற செடி கண்டு சமுதாய ஒப்புரவு வழிப்பட்ட சமயம் என்ற கொடி கண்டபிறகே அரசியல் என்ற கொம்பு தேவை.
கொம்பில்லாமலும் கொடி காய்க்கலாம். ஆனால் நிறைய இருக்காது. ஆனால் கொடி இன்றிக் கொம்பு மட்டும் இருந்தால் காய்ப்பு இல்லை. அதுபோல அரசியல் இன்றிச் சமயம் இருக்க முடியும். ஆனால், முழுநிறைவான சமுதாயம் இருக்காது. சமயம் இன்றி அரசியல் இருக்காது-இருந்தால் சமுதாயம் காலப்போக்கில் கரைந்து போகும்.
ஆதலால் கொடி நிலையில் சமுதாயத்தை வளர்த்துக் கொம்பு நிலையில் அரசியலை வளர்க்க வேண்டும்.
கொடியும் தேவை கொம்பும் தேவை
கொடி முன்வருவது-கொம்பு பின்வருவது
கொடி சமயம், கொம்பு அரசியல்.
சமுதாய முன்னேற்றத்துக்கு மிகமிக உரியது சமயம்.
சமுதாய முன்னேற்றத்துக்கு மிக உரியது அரசியல்!
5
அருளியலும் அறிவியலும்
* * *
அறிவியற் கலை வட்டத்தில் வளர்கின்ற சமுதாயத்தில் சமயம் வளருமா என்பது போன்ற எண்ணங்கள்-ஐயங்கள் எழுவது தவிர்க்க முடியாத ஒன்று என்று கருதுகிறேன். அப்படி எழுகின்ற ஐயங்களைப் பார்த்து எனக்கு வருத்தமோ வேறு விதமான எண்ணங்களோ உருவாவதில்லை. காலத்தின் தேவை, காலத்தின் விளைவு இவைதாம். இந்த மாதிரியான் எண்ணக்குவியல்கள்! ஆனாலும், வளர்கின்ற விஞ்ஞான உலகம் என்றால் என்ன? சமயம் என்றால் என்ன? இவற்றைத் தனித்தனியே அதனதன் முழு அமைப்பு, அதனுடைய முழு இலட்சிய வடிவு இவைகளை யெல்லாம் தெளிவாகப் புரிந்து கொண்டேமானால், இந்தக் குழப்பமே ஏற்படாது என்று கருதுகிறவர்களிலே நானும் ஒருவன்.
எதிலுமே மேலெழுந்தவாரியாக ஏற்படுகிற அரை குறை எண்ணங்களும், அரைகுறை அறிவும் அரைகுறை அனுபவமும்தான், “இது தேவையா? அது தேவையா? என்ற போராட்ட எண்ணங்களை எழுப்பி விடுகின்றனவே தவிர, எங்கெங்கு பூரணம் இருக்கிறதோ அங்கெல்லாம் தேவை. தேவையில்லை என்ற பேச்சு எழுவதே கிடையாது. அறிவியல் ஆனாலும் சரி, அருளியல் ஆனாலும் சரி, எங்கெல்லாம் பூரணத்துவம் இல்லையோ, எங்கெல்லாம் நிறைவு இல்லையோ எங்கெல்லாம் தெளிவு இல்லையோ, எங்கெல்லாம் உறுதியில்லையோ, அங்கேயெல்லாம் இப்படிப்பட்ட கேள்விகள் எழுப்பப் பெறுவது இயற்கையினும் இயற்கை.
என்னைப் பொறுத்தவரையில் விஞ்ஞானம், அல்லது சமயம். (அதை மெஞ்ஞானம் என்று சொல்லி விடலாம்) விஞ்ஞானம் மெஞ்ஞானம் இரண்டையும் ‘அறிவியல்’ ‘அருளியல்’ என்று சொல்லலாம்.
அருளியலும் அறிவியலும் ஒரே பாதையை நோக்கிச் செல்லுகின்ற பயணந்தான் என்று கருதுகிறவர்களிலே நானும் ஒருவன். நான் மட்டுமல்ல- உலகத்திலே சிறந்த மேதைகள் என்று கருதப்பெறுகின்ற விஞ்ஞானப் பேராசிரியர்களில் பலர் இந்தக் கருத்தைத் தெளிவாகச் சொல்லுகிறார்கள். சிறப்பாக இந்நூற்றாண்டிலே வாழ்ந்த-நாம் மறக்க முடியாத ஒரு மாபெரும் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன். அந்த மேதை ஓரிடத்தில் சொல்லுகின்றான்: “உயர்ந்த அழகை, உயர்ந்த தன்மையை உயர்ந்த அனுபவத்திற் பார்க்கின்ற ஒன்றைப் பார்க்கின்றபோது ரசிக்காமல் அல்லது பாராட்டாமல், அதிலே நின்று நிலைபெற்று அனுபவிக்காமல் இருப்பது மனிதனால் முடியாத காரியம், அப்படி மனிதன் அதில் ஈடுபட்டு நின்று அனுபவிக்காமற் போனானேயானால் அவனது காது செவிடுபட்டது என்று பொருள்; அவனுடைய கண்கள் குருடாகி விட்டன என்று பொருள்; அவன் நடமாடித் திரிந்தாலும் பிணமாகி விட்டான் என்று பொருள்” என்று சொல்லுகின்றான்.
வானத்தினுடைய அற்புதமான கோலத்தைப் பார்க்கிறோம். நல்ல மலைச் சூழலிலே, உயர்ந்து கிடக்கின்ற மலையின் உச்சியிலே வெண்பஞ்சு எனக் கிடக்கின்ற மேகச்சுழலைப் பார்க்கின்றோம். பார்க்கின்றபோது கவிஞன் காட்டாத கற்பனை, ஓவியன் தீட்டாத கற்பனை, சிற்பி செதுக்காத கற்பனை ஒரு வண்ணமிகு காட்சியாகத் தோற்றமளிக்கிறது. இந்த வண்ணமிகு காட்சியைப் பார்க்கிற போது எங்கோ நெஞ்சு தொடுகிறது. எங்கோ நெஞ்சு ஓர் அனுபவத்தில் ஈடுபடுகிறது. அந்த ஈடுபாட்டனுபவம் இருக்கிறதே அதை அனுபவிப்பது மனிதனுடைய பிறப்புரிமைகளில் ஒன்று. அதை அனுபவிக்கின்ற மனிதன் விஞ்ஞானி ஆனாலும் சரி, மெய்ஞ்ஞானியானாலும் சரி ஒன்றையே அனுபவிக்கிறான். ஒரே அனுபவத்தில் பேசுகின்றான். அந்த அனுபவத்திற்கு நானும் பாத்தியப்பட்டவன் என்று ஐன்ஸ்டீன் தெளிவாகச் சொல்லுகின்றான். அந்த எண்ணங் களையெல்லாம் நினைவாக வைத்துப் பார்க்கின்றபோது விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் இரண்டும் ஒரே பாதையில் போகின்றன என்பதற்கு இன்னும் தெளிவு சொல்ல வேண்டும். அல்லது இறுதி வடிவம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால், வாழ்க்கைப் பிரயாணம் ஒரு நூறு மைல் என்று வைத்துக் கொண்டால் 99வது மைல் வரை போகின்றவனுக்கு விஞ்ஞானி என்று பெயர்-அறிவியல் மேதை என்று பெயர். 100-வது மைலையும் கடந்திருக்கின்ற மனிதனுக்கு அருளியல் மேதை என்று பெயர்.
பொருளியலை ஆராய்கின்றவன் பொருளியலிலே இருக்கின்ற கூறுகளை ஆராய்கின்றவன்; பொருளியலின் ஒரு பகுதியை ஆராய்கின்றவன்; பொருளின் முழுத்தன்மையைக் கண்டதுமில்லை. காண்பதுமில்லை, காட்டியதுமில்லை. பொருளியலில் முழுத் தகுதியையும் பொருளியலின் கூறுபாடுகளையும் கலந்து உள் உணர்வுகளையும் உள் தொடர்புகளையும் ஆராய்ந்து பார்க்கின்ற ஒரு மாமேதையாக மெய்ஞ்ஞானி திகழ்கின்றான். இன்னும் சாதாரண உதாரணம் காட்டிச் சொல்ல வேண்டும் என்றால் பொருளியல் அல்லது தாவர இயல் வல்லுநர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு தாவர இயல் வல்லுநன் மலரைப் பார்க்கின்றான். மலரைப் பார்க்கின்றபொழுது ஆராய்கின்றான். அதை அக இதழ் என்று பிரிக்கின்றான். புற இதழ் என்று பிரிக்கின்றான். கேசரம் என்று பிரிக்கின்றான். பலவேறாக அதைப் பிரித்து ஆராய்ந்துகொண்டே போகின்றான். அதிலே இருக்கின்ற அமைப்புகளை எல்லாம் பார்த்து, மனத்திற்கு இருக்கின்ற கூட்டு அமைப்புகளை யெல்லாம் ஆராய்கின்றான். ஆனால், மெய்ஞ்ஞானி எண்ண பண்ணுகின்றான்? அந்த மணத்திற்குக் காரணமாக அடிப்படையாக-ஆதாரமாக இருக்கின்ற ஒன்றைப்பற்றி நெஞ்சத்தாலே ஆராய்கின்றான்-உணர்கின்றான்-அதற்கு மெய்ஞ்ஞானம் என்று பெயர். பொருளை ஆராய்கின்றவன் பொருளின் அடிப்படைக்குக் காரணமாக ஏன்? எதனால்” என்று கேள்வி கேட்டுக்கொண்டு, அதற்குக் காரணமாக இருக்கின்ற ஒன்றைப்பற்றி-ஒரு பேரறிவை நினைக்கின்றவன் சிறந்த மெஞ்ஞானியாக வளர்கின்றான் என்பதுதான் பொருள். இதை பிளேட்டோ இவ்வளவு தெளிவாகச் சொல்லாது போனாலும் கூட அவனுடைய இலக்கியங்களிலே இருக்கின்ற சில சான்றுகள் நமக்குச் சில விளக்கங்கள் தருகின்றன. அவன் தெளிவாக ஓரிடத்தில் குறிப்பிடுகின்றான். உலகியல் கலை உலகத்திலே அசல்கலை, நகல் கலை என்று இரண்டு உண்டு என்று கூறி அந்த அசல் கலைக்கும் நகல் கலைக்கும் இடையே இருக்கின்ற வேற்றுமையைப் பகுத்துக் காட்டுகின்றான். அப்படிப் பகுத்துக் காட்டுகின்ற பொழுது அசல் கலைக்கு மணம் இருக்கிறது-உயிர்த்தன்மை இருக்கிறது - இயற்கையிலேயே கவர்ச்சி செய்கின்ற சக்தி இருக்கின்றது - எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் உயிர்த்தன்மை இருக்கிறது என்கிறான். செடிகளிலே பூத்துக் குலுங்குகின்ற மணமிக்க மலர்களை மனிதன் பார்க்கின்றான். மனிதனுக்கு எப்பொழுதுமே ஒரு விருப்பம் உண்டு. எதைப் பார்த்தும் நகல் எடுப்பதிலே அவனுக்கு அலாதியான விருப்பம். நாம் இந்த அறிவியல் துறையில் வளர்ந்திருப்பதற்குக் காரணம் ஒன்றைப் பார்த்து அல்லது ஒன்றைக் கேட்டு அதன் வழியிலே நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற விருப்பமிகுதிதான். ஒவ்வொன்றாகப் புதிய சாதனங்களைக் கண்டு பிடித்துக் கொண்டே போகின்றோம்.
நகல் எடுப்பது என்று சொன்னால் தவறில்லை. அந்த நகல் எடுக்கின்ற விருப்பத்திலே செடிகளில் பூத்துக் குலுங்கி மணம் தருகின்றனவாயிக்கின்ற மலர்களைப் பார்த்து நகல் எடுக்கின்றான் மனிதன். வண்ணத்தால், வடிவத்தால், தோற்றப் பொலிவால் நகல் எடுத்துவிட்டான். ஆனால் மணம் கொடுக்க முடியாமல் தோல்வி அடைந்து விட்டான். தேங்காய் போல, பலாப்பழம்போல, வாழைத்தாறுபோலக் களி மண்ணாலே வண்ணமாகச் செய்கின்ற காட்சிகளைப் பார்க்கிறோம். வண்ணத்திலே, தோற்றத்திலே, வடிவத்திலே எங்ஙனம் அது தேங்காய்போல, பலாப்பழம்போல, வாழைத் தாறுபோலத் தோற்றமளித்தாலும் அதற்குச் சுவை கொடுக்க முடியாமல் தோல்வியடைந்ததைப் பார்க்கின்றோம். அதை விட மிகச் சுவையாக-உங்களுக்கு நேரடியாகத் தெரிந்து ஒரு சான்று. நகரத்திலே துணிக்கடைகளின் முகப்பிலே தீபாவளி நெருங்க நெருங்க, நம்மைவிட அழகான சிலைகள் வியாபார விளம்பரத்திற்காக நிறுத்தப்பெறும். கொஞ்சங்கூடக் குறைவில்லாத் திருமேனிகள். நாம் விரும்பியபடி நம்முடைய அமைப்பு இல்லை. நாம் கருப்பாக இருக்கிறோமே என்று பலர் வருத்தப்பட்டும் கொள்ளுகின்றார்கள். உயரம் போதவில்லையே என்று சிலர் வருத்தப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் அந்த உருவங்கள் இருக்கின்றனவே, அவை அழகாக, ஒழுங்காக கச்சிதமாகத் தீட்டப் பெற்றிருக்கின்றன. ஆனாலும் உயிர் கொடுக்கப்பெறவில்லை. அதைத்தான் பிளேட்டோ சொல்லுகிறான். முடிக்கின்ற பொழுது, எங்கெல்லாம் மனிதன் மணம் கொடுக்க முடியாமல் தோல்வியுறுகின்றானோ, எங்கேயெல்லாம் மனிதன் சுவை கொடுக்க முடியாமல் தோல்வியடை கின்றானோ, எங்கேயெல்லாம் மனிதன் உயிர்த்தன்மை கொடுக்க முடியாமல் தோல்வியுறுகின்றானோ அங்கேயெல்லாம் இவற்றைக் கொடுக்கின்ற ஒரு பேருண்மையைப் பார்க்கிறோம்- பேராற்றலைப் பார்க்கின்றோம்-அழிவில்லாத சக்தியைப் பார்க்கின்றோம் என்கின்றான். ஆக, விஞ்ஞானி கூட மெய்ஞ்ஞானத் துறைக்குப் போகப் பயின்று கொண்டிருக்கின்றான், இயற்கைப் பூஞ்சோலையிலே வாழ்க்கை என்ற உலகத்திலே.
அறிவியலிலே அவன் புகுந்து, ஆழ்ந்த அனுபவங்களைக்கண்டு, ஆழ்கடலிலே குளித்து முத்தெடுத்தால் அந்த முத்தை அணியாக உபயோகப் படுத்துவதுதான் முறை. வாழ்க்கை என்ற அனுபவத்திலே-அறிவியல் கடலிலே ஆழக் குளித்து முத்தெடுப்பதுபோல, அறிவியல் உண்மைகளைக் காண்கின்றார்கள். அந்த அறிவியலை அணியாகவாழ்க்கைக்கு ஆபரணமாகக் கொண்டு, மேலும் உள்ள இலட்சியத்திற்குப் போகின்றார்களே தவிர, வாழ்வதுநிரந்தரமாக வாழ்வது- நிலைபேறாக வாழ்வது என்ற இலட்சியத்திற்குப் போவதில்லை.
எனவே, விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் என்ற இரண்டையும் பார்க்கின்றபொழுது நமக்கு அவை வேறுவேறாகத் தோன்றவில்லை. அதையே சிறந்த பேரறிஞர்களுள் ஓர் அறிஞன் சொல்லுகின்றான் “இரட்டைச் சகோதரிகள்” (Twin sisters) என்று. இரட்டைச் சகோதரிகளாகப் பிறக்கின்றன அருளியலும் அறிவியலும் இரண்டு சகோதரிகளுள் ஒருவரைக்கொருவர் வேற்றுமை கிடையாது என்று சொல்லுகின்றான். இரண்டு பேரும் மண்ணுக்கும் விண்ணுக்கும், விண்ணுக்கும் மண்ணுக்கும் இணைப்பூட்டுகின்றார்கள்-வலு ஊட்டுகிறார்கள்-உறவுண் டாக்குகிறார்கள் என்றெல்லாம் சொல்லுகின்றான்.
மண்ணகத்திற்கும் விண்ணத்திற்கும் நிறைய வேற்றுமை இருக்கின்றது. விண்ணகம் இன்பப் பொலியுடையதாக வளமுடையதாக இருக்கின்றது. மண்ணகத்திற்கும் விண்ணகத்திற்கும் இணைப்புண்டாக்குகிறான். பாரதியும் அந்தக் கனவைக் கண்டான். “மண்ணகத்தை விண்ணகமாக்க வேண்டும்” என்று சொல்லுகின்றான். எனவே விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமுமாகச் சேர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும் இணைப்புண்டாக்குகின்றன - உறவுண்டாக்குகின்றன. அப்படி உறவுண்டாக்குவதன் மூலமாக நமது நாட்டை நம்முடைய மக்களைச் செழுமைப் படுத்துகின்றன. உள்ளத்தால் செழுமைப் படுத்துகின்றன - பொருளால் செழுமைப் படுத்துகின்றன; உள்ளத்துச் செழுமை பொருட் செழுமையாக வரமுடியும். பொருட்செழுமையால் உள்ளத்துச் செழுமை மலரமுடியும். பொருளியல் செழுமைக்கும் உலகியல் செழுமைக்கும் விஞ்ஞானமும் துணையாக நின்று வளர்கிறது. எனவே இதனை “இரட்டைச் சகோதரிகள்” என்று தெளிவாகச் சொல்லுகின்றான்.
எப்படி வானவில்லிலே பல வண்ணங்கள் இருந்தாலும் கூட, அந்த வண்ணங்களிலே ஒன்றுக்கொன்று நெருங்கிய உறவு இருக்கிறதோ-நெருங்கிய பிணைப்பு இருக்கின்றதோ அதுபோல விஞ்ஞானத்திற்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் ஆழமான அனுபவத்திலே நிறையப் பிணைப்பு இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அதுமட்டுமல்ல, இன்னொரு உண்மையும் நமக்குத் தெரிய வேண்டும். இதுவரை விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில், நாட்டு வழக்காயினும் சரி, உலக வழக்காயினும் சரி விஞ்ஞானி படைப்புக் கர்த்தாவாக வழக்குக் கிடையாது. கண்டுபிடித்தான், கண்டுபிடித்தான் என்றுதான் சொல்லுவார்கள். கண்டுபிடித்தல் என்று சொல்லுகின்றபொழுதே எங்கோ இருக்கின்ற ஒன்றை இயற்கையிலேயே உருவாக்கப்பட்டுப் படைப்பிலே அதிசயமாகப் பரந்து கிடக்கின்ற ஒன்றைக் கண்டுபிடிப்பது என்றுதான் சொல்லுவார்கள், கண்டு பிடித்தல் என்று சொல்லுகின்றபொழுதே எங்கோ இருக்கின்ற ஒன்றை இயற்கையிலேயே உருவாக்கப்பட்டுப் படைப்பிலே அதிசயமாகப் பரந்து கிடக்கின்ற ஒன்றைக் கண்டுபிடிப்பது என்றுதான் பொருளே தவிர, அவன் படைப்புக் கர்த்தாவாக வந்ததில்லை. விஞ்ஞானி நேற்றும் படைப்புக் கர்த்தாவாக இருந்ததில்லை. இன்றும் இல்லை. நாளையும் வருவான் என்பது ஐயப்பாடுதான். எனவே விஞ்ஞானம் என்பது கண்டுபிடிப்பது என்று சொன்னால் கண்டுபிடித்தவனுக்கும் ஏற்கெனவே வைத்தவனுக்கும் எவ்வளவு உறவு இருக்கிறதோ அவ்வளவு உறவு இருக்கிறது அறிவியலுக்கும் அருளியலுக்கும் என்று சொல்கிறார்கள். அதுமாத்திரமல்ல. விஞ்ஞானத் திறனுடைய முழுமுறை வைப்பு இருக்கிறதே அந்த முறை அமைப்புப்படி பார்த்ததால், அது நாடு முழுவதும் வையகம் முழுவதும் முழுமையாகக் காட்டுவதில்லை. உங்களுக்குத் தெரியும். ஐம்பது ஆண்டு அறிவியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் நாளுக்குநாள் நாழிகைக்கு நாழிகை மாறுபட்டுக் கொண்டே வந்திருக்கிற உண்மை. வளர்ந்த அறிவியலாக-பரிபூரணத்துவம் பெற்ற அறிவியலாக நாம் ஒன்றைக் கருத முடியவில்லை. அணுயுகத்திலே வாழ்கிறோம். அணுவைப்பற்றி நிறையப் பேசுகின்றோம்.
17-ஆம் நூற்றாண்டு என்று நினைக்கிறேன். அந்த நூற்றாண்டுக் கடைசியில் அதாவது 18ஆம் நூற்றாண்டிலே அணு என்றால் உடைக்க முடியாதது, பிளக்க முடியாதது என்றெல்லாம் விஞ்ஞானிகள் சொன்னார்கள். அதையும் நாம் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் அடுத்த நூற்றாண்டின் கடைசியில் அணுவை உடைக்க முடியும். கோடிக்கணக்கான துகள்களாக உடைக்க முடியும். ஒரு குண்டூசியின் முனையிலே கோடிக்கணக்கான அணுக்கள் இருக்கின்றன என்றெல்லாம் சொன்னார்கள். ஆக அறிவியல் துறை முடிவுகள் இருக்கின்றனவே அவை பூரணமாக வளர்ந்து விடவில்லை. எங்கோ வளர்ந்து கொண்டிருக்கின்றன. அறிவியலின் இலட்சிய எல்லை-அதனுடைய இலட்சியக் கோடு இன்னும் நம்முடைய கைகளுக்கும் அறிவிற்கும் மூளைக்கும் அனுபவத்துக்கும் எட்டாமல் தூரத்திலே இருக்கிறது என்று தெரிவதனாலேயே அந்தப் பேரறிவை “உயர்ந்த அறிவு” (Wisdom) என்று சொல்கிறார்கள். அந்த உயர்ந்த அறிவு இருக்கிறதே அதைத்தான் இறைவன் அல்லது அருளியல் சார்ந்த தலைவன் என்று வாழ்த்துகின்றோம். அதையேதான் திருவள்ளுவரும் கூடத் தெளிவாக உறுதியாக இடம் நோக்கிச் சொன்னாரோ, அல்லது வருங்காலத் தலைமுறைக்குச் சொல்லி வைத்தாரோ, தெரியவில்லை. இறைவனைப் பற்றிச் சொல்லுகிறபொழுது ‘வாளறிவன்’ என்று சொல்லுகின்றார். அறிவாலே தேடக்கூடிய தலைவன், அறிவுக்கெல்லாம் அப்பாற்பட்ட அறிஞனாக இருக்கின்ற தலைவன். அங்கே அறிவு தூய்மையாக இருக்கிறது. ஆக்கமாக இருக்கிறது. எழுச்சியாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக. எனவே அறிவியலை எல்லைக்கோடாக வைத்துக் கொண்டு இதுசரி இதுதவறு என்று முடிவு செய்ய முடியாது. எனவே அறிவு வளர்ந்து கொண்டே போகிறது. நேற்றைய அறிவைவிட இன்றைய அறிவு வளர்ந்திருக்கிறது. இன்றைய அறிவைவிட நாளைய அறிவு நிச்சயமாக வளரப் போகின்றது. நேற்றைய அறிவும் இன்றைய அறிவும் முரண்படுகிறது. இன்றைய அறிவும் நாளைய அறிவும் முரண்படப் போகிறது. அப்படி முரண்படுவதற்குக் காரணம் தம்முடைய வளர்ச்சி, அப்படி வளர்ந்து கொண்டே இருக்கிற அறிவைப் பார்க்கின்றபொழுது ஒரு பெரிய ஏணியிலே இரண்டு படியைத் தாண்டி விட்டால் இன்னும் இருபத்திரண்டு படிகள் உள்ளன என்பது எப்படி உண்மையோ அப்படியே இந்த அறிவியலுலகத்திற்கு அப்பாற்பட்ட-இன்னும் வளர்ந்த முழுமையுடைய-முழுத் தன்மையுடைய அறிவியல் ஒன்று இருக்கிறது என்பது உண்மை.
இறைவனுக்கு ஞானம் என்று ஒரு பொருள் உண்டு. ஞானத்தின் வடிவாக இருக்கிறான் என்று சொல்வார்கள். ஞானம் என்பது அறிவு என்பதனுடைய மறு பொருள்தான். அறிவியல் உலகியலில் ஒட்டியிருக்கும் பொழுது அறிவு என்று சொல்லலாம். அது அருளியலைச் சேர்ந்து பழுத்து முறையாக வளர்கின்றபொழுது ஞானம் என்று சொல்கிறோம். அறிவினாலே ஓரோர் சமயம் அல்லல் வர முடியும்; அறிவு சில சமயங்களிலே மறக்கத் துாண்டும். அறிவு சில சமயங்களிலே அகங்காரத்தைத் தூண்டும். ஆனால், அருளியல் சார்ந்த ஞானம் இருக்கிறதே அது அடக்கத்தைத் தரும், பண்பைத் தரும்; அன்பைத் தரும், ஆக்கத்தைத் தரும். இதனாலேயே இந்த அறிவுக்கும் அந்த அறிவுக்கும் வேற்றுமைப்படுத்த வேண்டுமென்பதற்காக இங்கே அறிவு என்று சொன்னார்கள்; அங்கே ஞானம் என்று சொன்னார்கள். அந்த உயர்ந்த ஞானத்தின் வடிவமாக இருக்கின்ற இறைவன்னப் பார்க்கின்ற பொழுது அனுபவத்துக்குக் கொண்டு வருகிற சாதகமாகப் பார்க்கிறோம். இன்னும் தெளிவாகத் தமிழ்நாட்டினோடு சமய நெறியை வைத்துப் பார்த்தால் விஞ்ஞானம் மெய்ஞ்ஞானத்தினுடைய இன்றியமையாத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. சிலர் விஞ்ஞானத்தைப் பழித்து அது வளர்வதனாலேயே ஏதோ ஒரு பெரிய கேடு நாட்டுக்கு வந்துவிட்டதாகச் சொல்வார்கள். அந்த முறை தப்பு. மெய்ஞ்ஞானத்தினுடைய வளர்ச்சிக்கு அறிவியல் அல்லது விஞ்ஞானத்தினுடைய வளர்ச்சியும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபொழுது இறைவன் இந்த உயிர்களுடைய அனுபவத்துக்காக நிறைந்த அனுபவப் பொருள்களை நிறைந்த உணர்வு உடைமைகளை எல்லாம் உலகத்திலே நிறையக் கொடுத்து வைத்திருக்கிறான். அப்படிக் கொடுத்து வைத்ததையெல்லாம், அறிவுக்கூடமாக இருந்தமையால் நாம் பூரணமாக அனுபவிக்க முடியவில்லை. இப்பொழுது இறைவனுடைய படைப்பிலே இருக்கின்ற அதிசயங்களை அற்புதங்களை, ரகசியங்களையெல்லாம் நாமே அறிந்து, உணர்ந்து அனுபவிக்கிற சக்திகளெல்லாம் வருவது இருக்கிறதே அது நம்முடைய தலைவனுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி. ஆம், இறைவன் நமக்காகவே செய்ததால் இந்த அதிசயங்களை-அற்புதங்களையெல்லாம் நீண்ட நாட்கள் கண்ணிருந்தும் குருடராக, காதிருந்தும் செவிடாாக அனுபவிக்காத நிலைமையிலிருந்து மாறி நாம் அதற்கு நம்மை முழுவதையும் உரிமையாக்கிக் கொண்டு, நாம் அவற்றை அனுபவிப்பதனாலே மெய்ஞ்ஞானம் வளாகிறதே தவிர அங்கே ஒரு கேடு வருவது போலில்லை. எனவே விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் என்று பார்க்கிறபொழுது எனக்கு விஞ்ஞானத்தினுடைய படிகளிலே விஞ்ஞானத்தினுடைய வளர்ச்சியிலே, விஞ்ஞானத்தினுடைய நிழலிலே உண்மையான அருளியல் வளர்கிறது-அப்பொழுது அருளியல்கூட முழுத்தன்மை பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தெளிவாகச் சொல்லப்போனால் விஞ்ஞானத்தினுடைய தளர்ச்சியிலே கொஞ்சம் அருளியல் தடுமாற்றம் அடைவது போலத் தோன்றும். ஆனால் அது எப்பொழுது என்று சொல்ல வேண்டும். நம்பிக்கையின் மீது மாத்திரம் கட்டப்பட்ட சமயம் அல்லது சில சடங்குகள், சில முறைகள் இவற்றாலே மாத்திரம் உயிர்விட்டுக் கொண்டிருக்கிற சமயமாய் இருக்குமானால்-அறிவோடும் அனுபவத்தோடும் ஒத்துவராத சமயமாய் இருக்குமானால் அது வாழாது; செத்துக் கூடப்போய்விடும் என்று தெளிவாகச் சொல்ல ஆசைப்படுகிறேன். நீங்கள் சமயம் என்பதை எது என்று கருதுகிறீர்கள் என்பதை நோக்க வேண்டும். சமயம் என்றால் ஒரு பரிபூரண வாழ்வு என்று பெயர். மனிதனுடைய உள்ளத்தைத் தொட்டு அவனைப் பக்குவப்படுத்தி அவனைச் செழுமையுடைய மனிதனாக்கி அவனை அன்பு மனிதனாக-அறமனிதனாக-மனிதரில் தேவனாக ஆக்குகின்ற உயர்ந்த பண்பாட்டிற்குத்தான் சமய வாழ்வு என்று பெயர். அந்தச் சமய வாழ்வு எந்தக் காலத்திலும் மனிதனுக்குத் தேவைப்படும். அவன் மிக உயர்ந்த வானவெளியிலே பறக்கின்ற காலத்திலே கூட, செவ்வாய் மண்டலத்திற்குத் தேடிப்பார்க்கின்ற பொழுது அமைதி தேவைப்படுகின்றது. உடம்பு மாளிகையிலே தூங்கினாலும், உடம்பு வான ஊர்தியிலே தூங்கினாலும் அவனடைய மனம் மட்டும் எங்கோ அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. அழுது கொண்டிருக்கிறது. அவலப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி அழுகின்ற-அவலப்படுகின்ற-அலைந்து திரிகின்ற ஆன்மாவிற்கு அந்த ஒரு அமைதி-ஒரு சூழல் வேண்டும் என்று சொன்னால் வளர்ந்து வருகின்ற அறிவியல் உச்சத்தினுடைய ஆபத்திலே அவனுக்கு அமைதியான சமயம் தேவைப்படுகிறது. மலை ஏற, ஏற, மலை உச்சி ஏற ஏற அவனை நோக்கி ஒரு அச்சம் உருவாவதை நீங்கள் பார்க்கிறீர்கள். வானவெளியிலே ஊர்ந்து போகப் போகப் பழக்கப்பட்டவனாயிருந்தாலும் சரி, ஏதோ ஒரு அச்சம் அவனைச் சூழ்கிறது. அவன் அதைத் தன்னைத்தானே சமாளித்துக் கொள்கிறான். அப்படி வருகின்ற காலத்திலே எல்லாம் அவனுக்குச் சேமமான அமைதியான குடியிருப் பதற்குரிய சூழ்நிலை வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். எனவே நல்ல விஞ்ஞானக் கட்டத்தினுடைய உச்சத்திலே வளர்கின்ற பொழுதுகூட அவனுக்கு அருளியலின் துணை அவசியம் தேவைப்படுகிறது. அப்படிச் சமயம் என்று பார்க்கின்றபொழுது வெறும் சடங்குகளை அல்லது நம்பிக்கைகளை நீ நம்பு என்று சொல்லுகிற சமயம் இருக்கிறதே அது ஒரு காலத்தில் வாழாமற்போனால் போகலாம். அல்லது கதைகளை, புராணங்களை நம்பிக் கொண்டு வாழ்கின்ற சமயம் இருக்கிறதே வேண்டுமானால் நசித்துப் போகலாம். அதிலிருந்து நம்பிக்கை வீணாகப் போகலாம். அதைச் சொல்லப் போனால் ஆங்கிலத்திலே சொல்ல வேண்டும் என்று சொன்னால் அந்த வைதிகச் சமயத்துக்கு அல்லது அந்தச் சடங்குச் சமயத்துக்கு (Orthodox Religion) என்று சொல்வார்கள். அது செத்துத்தான் போகும். அது நீண்ட நாட்கள் உயிர் வாழ்வது என்பது முடியாத காரியம். ஆனால், அதே காலத்தில் அறிவோடும் அனுபவத்தோடும் உலகியலோடும், மனோதத்துவத்தோடும் தொடர்பு கொண்ட மனப்பக்குவ ரீதியாக இருக்கின்ற ஆன்மநெறி இருக்கிறதே- உயிரியல் நெறி இருக்கிறதே அது வாழத்தான் செய்யும். அது வாழ வேண்டிய அவசியம் அவைகளுக்குத் தானாக வந்துவிடும். திரும்ப விஞ்ஞானிகள் அந்தத் திசை நோக்கிப் போவார்கள். எனவே, உங்களுக்குத் தெரியும் தொட்டதெல்லாம் பொன்னான கதை, கேள்விப் பட்டிருப்பீர்கள். இளம் பிளையாகப் படிக்கின்றபொழுது ஒரு மனிதனுக்குப் பொன்னிலே பொருளிலே ஆசை நிறைய இருந்தது. இறைவனைப் பார்த்து வரங்கேட்டான் தனக்குத் தொட்ட தெல்லாம் பொன்னாக வேண்டுமென்று. மனிதனுடைய ஆசைக்கு எல்லை கிடையாது; கங்கு கிடையாது; கரை கிடையாது. அந்த ஆசையினாலே தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று கேட்ட பிறகு இறைவனும் அந்த வரத்தைக் கொடுத்தான். அவன் எல்லாவற்றையும் தொட்டான். கதவு ஜன்னல் எல்லாவற்றையும் தொட்டு முடித்த பிறகு எல்லாம் தங்கமயமாகி விட்டது. பன்னிரண்டு மணி ஆயிற்று. வயிற்றுப்பசி வந்தது. இலையிலே சோற்றைப் போட்டுத் தொட்டான். அதுவும் தங்கமாயிற்று. அவனுக்கு ஆத்திரமாக வந்தது. இல்லை வருத்தப்பட்டான்; இரக்கப் பட்டான்; கழிவிரக்கம் கொண்டான். ‘அப்பா ! இறைவா! எனக்குப் பொன் வேண்டாம்; என்னுடைய அனுபவத்தைக் கொடு; எனக்கு அனுபவித்தல் போதும். கஞ்சியானாலும் கூழானாலும் நான் அனுபவித்து வாழ்ந்தால் போதும்’ என்று திரும்பக் கேட்டான் என்ற வரலாற்றைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோல, அறிவியலின் உச்சகட்டத்திற்குப் போன பிறகு அவனுடைய ஆன்மார்ந்த அனுபவத்திற்கு உயிரியலில் தோய்ந்த அனுபவத்திற்கு அப்பொழுது இடையூறுகள் வரும்; அவர்கள் சமயத்தை நோக்கி வெகு வேகமாக வருவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி வெகுவேகமாக வருகின்ற பொழுது பண்பட்ட பரிபூரணத்துவமுடைய, மனிதனுடைய வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகின்ற சமயம் என்றால் அதற்குத் தெளிவான பொருள்வேண்டும்-தெளிவான விளக்கம் வேண்டும். இது தான் சமயம் என்று சொல்லிக் கொண்டு சில சடங்குகளை, சில நடைமுறைகளை மாத்திரம் சமயம் என்று காப்பாற்றிக் கொண்டு போவோமானால் அந்தச் சமயங்கள் அறிவியல் வளர்கின்றபொழுது ஆட்டங் கொடுக்கத்தான் செய்யும்; வாழமுடியாமற் போனலும் போகலாம். ஆனால் அறிவியலோடும் அனுபவத்தோடும் ஒத்து வருகின்ற சமயம், வாழ்க்கையினுடைய எண்ணங்களோடும் சிந்தனைகளோடும் இணைப்புக் கொண்டிருக்கிற சமயம் நிச்சயமாக வாழும் என்கிற நம்பிக்கை நமக்கு அதிகமாக இருக்க வேண்டும். அதுமாத்திரமல்ல அந்தச் சமயவாழ்வினுடைய மறு முயற்சிகளைப் பார்க்கிறோம். உயர்ந்த உலக அனுபவம் இருக்கிறதே அதற்கு நம்முடைய சமய அனுபவம் துணையாக நிற்கிறது. எங்கே பார்த்தாலும் மனிதனுடைய உயிர்களுக்கு அனுபவம் இன்றியமையாத ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம். எதை நோக்கிப் போனாலும் அவன், அதை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அந்த அனுபவத்துக்குத் துணையாக-தூண்டுகோலாக இருக்கின்ற அருளியல் உணர்ச்சி இருக்கின்றதே அதனுடைய தன்னறிவை - தன்னறிவு என்று சொல்கிறபொழுது நான் குறிப்பிடுகிறேன் உயிரியல் அறிவைத் தருவது, உயிரியல் அறிவும் ஒரு விஞ்ஞானம் போல. எப்படி தாவரத்தைப் பயிலுவது ஒரு தாவர அறிவியலாகத் தெரிகிறதோ, எப்படி நிலநூல் வரலாற்றை நிலநூல் தன்மையைப் படிப்பது ஒரு அறிவியலாக இருக்கிறதோ அதுபோல உயிரியலைப் பற்றி அறிந்து கொள்வதும் உயிரைப் பற்றி ஆராய்வதும் உயிரைப் முடிவுகளைக் காண்பதும் உயிரியல். அறிவியலை நாம் முழுதும் உணர்ந்து கொண்டோமானால் அந்த உயிரினுடைய தத்துவங்களை-எண்ணச் சேர்க்கைளைத் தெரிந்து கொள்வோமானால் எப்பொழுது நமக்குத் தேவைப்படுகின்ற அறிவியல் உணர்வு இருக்கிறதே அதைவிட அருளியல் உணர்வு மிக இன்றியமையாத ஒன்று என்ற கருத்து நம்மில் ஆழமாகப் பதியமுடியும். அந்த உயிரியல் அறிவின்மை காரணமாகத்தான்-உயிரைப்பற்றிய தெளிவான கருத்தும் கொள்கையும் தன்மையின் காரணமாகத்தான் பலருக்குச் சமய வாழ்விலே நம்பிக்கை குறைவதும் ஐயமிருப்பதும் காரணமாக இருக்கிறது. அதைவிட உயிரியல் சம்பந்தமாக நமக்குச் சில அறிவுகள்-சில எண்ணங்கள்-சில கோப்புகள் இருக்குமானால் சில கொள்கை வரம்பு இருக்குமானால் இந்த அறிவு நம்மை உயர்ந்த அருளியல் வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றது. அப்படி அழைத்துச் செல்கின்ற பொழுது ஏற்படுகின்ற சமய அனுபவம் இருக்கிறதே அந்த சமய அனுபவத்துக்கு எடுத்துக் காட்டாக ஒன்றே ஒன்று சொல்ல முடியும். உயர்ந்த அனுபவ விஞ்ஞானி இருக்கின்றான். இரண்டு பேருக்கும் தாயுமானவருடைய பாட்டு ஒன்றைச் சொன்னால் என்னுடைய கருத்து முற்றுப் பெற்றதாகும் என்று கருதுகிறேன். தாயுமானவர், நாம் முன்னே சொன்னதுபோல செடியிலே பூத்து நின்ற ஒரு மணமிக்க மலரைப் பார்த்தார். பார்த்தவுடனேயே ‘பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப் பனிமல ரெடுக்க நண்ணேன்’ என்று பாடிப்பரவி, வாழ்த்திவிட்டார். அது மெய்ஞ்ஞானியினுடைய நிலை. அந்த பூவைப் பறித்து அதை வாழ்க்கைக்குப் பயன்படுத்தி அனுபவத்துக்குக் கொண்டு வருகின்ற முயற்சியிலேயே மனித அறிவியல் மேதைகள் தலைப்படுகிறார்கள். இரண்டு பேருக்கும் அனுபவம் இருந்தது. அதைப் பறித்துத் தனக்குரிமையாக்கிக் கொள்வதன் மூலம் அறிவியல் மேதைகளுக்கு அனுபவம் இருக்கிறது. பார்க்காமலேயே அந்தப் பூவினுடைய தன்மையை பூவினுடைய மாட்சியை, பூவினுடைய அடக்கத்தை பூவினுடைய ஆட்சியை, பூவினுடைய எல்லாவிதமான எடுப்புக்களையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்கின்ற மாட்சிமை தாயுமானவர்க்கிருந்தது. தனக்குப் பறித்து உரிமையாக்கிக் கொள்கின்றவர்கள் அறிவியலாராக இருக்கிறார்கள். தனக்குரிமையாக்கிக் கொண்டு அறிவியலை அனுபவிக்கின்றவர்கள் அறிவின் மேதைகளாக இருக்கிறார்கள். தாயுமானவர் போன்றவர்கள் தமக்கு அதை உரிமையாக்கிக் கொள்ளாமலேயே அதைத் தாம் உணர்வதின் மூலமாக அந்தப் பொருளைப் பார்த்துச் சிந்தித்து உணர்வதின் மூலமாக தமக்கு உரிமையாக ஆக்கிக் கொள்வதற்கு மெய்ஞ்ஞானம் அல்லது அருளியல் என்று பெயர்.
...செடியிலே மலர் இருந்தபடியே, அதைப் பார்த்தபடியே பார்த்து இருந்தபடியே இருந்து, சொன்னபடி சொல்லி என்று சொல்லுவார்கள். அதுபோலச் செடிகளில் மலர் இருந்தபொழுதே இருந்தபடியே பார்த்து அந்த மலரை-மலரின் மாட்சிமையைத் தனக்குரிமையாக்கிக் கொண்ட பெருமை தாயுமானவர்க்கிருந்தது. அறிவியல் மேதைகளுக்கு அப்படி இருக்க முடியாது. அதைப் பறித்துத் தன்னுடைய வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்து உரிமையாக்கிக் கொள்வார்கள். இவர்கள் அனுபவிப்பார்கள்: அவர்கள் உணர்வார்கள். இவர்கள் அனுபவத்திற்குக் கொண்டு வருவார்கள். இந்த இணைப்புகளை வைத்துப் பார்க்கின்றபொழுதும் நமக்குச் சமயஅறிவு, விஞ்ஞான அறிவு இரண்டும் முரண்பாடாக இல்லை என்று தோன்றுகிறது. இன்னும் தெளிவாக, சில பேரறிஞர்கள் சொல்லுகிறார்கள். நகைச்சுவையாகச் சொல்லுகிறார்கள். விஞ்ஞானமும் சமயமும் முரண்படுகிறது என்று சொல்கிறவர்கள் விஞ்ஞானத்திலே மிக மிக இளைஞர்களாக இருப்பார்கள். அல்லது சமயத்திலே ஒன்றும் தெரியாத முட்டாள்களாக இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். விஞ்ஞானமும், சமயமும், அறிவியலும், அருளியலும் ஒன்றோ டொன்று முரண்படுகிறது என்று சொன்னால் அப்படிச் சொல்கிறவர்கள், அறிவியல் துறையிலே வளராத இளைஞர்களாக, இன்னும்-இப்பொழுதுதான் அறிவியலைப் படிக்கின்றவர்களாக, அறிவியலில் உச்சகட்டத்தை அடையாதவர்களாக இருப்பார்கள். அல்லது, சமயத் துறையிலே இருப்பவர்கள் அவற்றில் பூரணத் தெளிவில்லாதவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட இரண்டு பேரும்தான் அறிவியலும் சமயமும் முரண்படுகிறது என்று சொல்லுவார்கள். அப்படி இல்லாதவர்கள், தேர்ந்தவர்கள், தெரிந்தவர்கள், தெளிவான அறிவுடைய இரண்டும் ஒரே திசையை நோக்கிப் போகின்றன என்றே சொல்லுவர்.
* * *
ஒரு பொருளைப் பார்க்கின்றபொழுது, பொருளின் வேறாக நின்று அனுபவிப்பது ஒரு முறை; பொருளோடு சேர்ந்து பொருளோடு ஒன்றியிருந்து அனுபவிப்பது ஒரு முறை. விஞ்ஞானி-அறிவியல் மேதை பொருளோடு வேறாக நின்று, பொருளுக்கு வெளியே நின்று பொருளைப் பார்த்துப் பார்த்து, ஆராய்ந்து ஆராய்ந்து பொருளோடு தன்னுடைய வாழ்க்கையை இணைத்துக் கொள்கிறான். ஆனால், மெஞ்ஞானிகள்-அருளியல் மேதைகள் பொருளோடு ஒன்றி, பொருளே தாமாக ஆகி அப்பொருளின் அனுபவங்களையெல்லாம் - மாட்சிமைகளையெல்லாம் தமக்கு உரிமையாக்கிக் கொள்கின்ற காட்சிகளைப் பார்க்கிறோம். இந்த நுணுக்கமான வேற்றுமைகளை எல்லாம் பார்க்கும்பொழுது இந்த இருவரும் கிட்டத்தட்ட ஒரே பாதையிலே போகிறவர்கள்தான். இவர்களும் கூட அனுபவிக்கிறார்கள்; அறிகிறார்கள்; ஆராய்கிறார்கள். அவர்களும் பொருளை ஆராய்கிறார்கள்; அறிகிறார்கள். ஆனால், இரண்டு பேருக்கும் ஒரே ஒரு வேற்றுமை. அங்கே தன்னமைப்பு ஆக வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இந்த எண்ணங்களையெல்லாம் மையமாக வைத்துப் பார்க்கின்ற பொழுது கடவுள் நம்பிக்கையினாலே விஞ்ஞான வளர்ச்சி கெடுவதில்லை என்றும் விஞ்ஞான வளர்ச்சி கடவுள் நம்பிக்கைக்கு அரண் செய்கிறது என்றும் சொல்கிறார்கள். நல்ல உயர்ந்த விஞ்ஞானம், உயர்ந்த அறிவியல் சமய உணர்ச்சிக்கு அரண் செய்து கொண்டே போகிறது. சமய உணர்ச்சிக்கு அரண் செய்வதன் மூலம்தான் விஞ்ஞானத்துக்குப் பெருமையும், மாட்சிமையும், இருக்கிறது - விஞ்ஞானத்தினுடைய வளர்ச்சியைக்கூடப் பாராட்ட முடிகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். என்னைக் கேட்டால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இன்னும் அதிகமான சமய நம்பிக்கையும், சமய வழிபாடும், சமய உணர்வும், பெருகுவதற்கு வாய்ப்பிருக்கிறது. சமய, விஞ்ஞான வளர்ச்சி வளர வளர அதனுடைய உலகியல் தேவைகள் நிறைவு செய்யப்படும். இப்பொழுது உலகியல் தேவைகளுக்கே போராடிக் கொண்டிருந்த காலத்திலே, வாழ்கிறோம். நம்முடைய வாழ்க்கைத் தேவைகளான சோற்றுக்கும் துணிக்கும் போராடிக் கொண்டிருக்கிற கேவலமான காலத்திலே-அவைகளை இன்னும் நிறைவு செய்ய முடியாத காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்ல விஞ்ஞானக் கலை வளருமானால், அதன் மூலமாக உலகியல் தேவைகள் நிறைவு செய்யப் பெற்று விடும்.
உலகில் தேவைகளை நிறைவு செய்த பிறகு அதனுடைய முயற்சிக்கு, அதனுடைய போராட்டத்துக்கு, அதனுடைய ஆக்க ரீதியான எண்ணங்களுக்கு, சிந்தனைகளுக்கு, வேறு பற்றுக்கோடே இருக்க முடியாது. அந்த உயர்வு கடவுளிடத்திலே அவர்கள் எண்ணுகின்ற எண்ணம் போக்கெல்லாம் வரும்.
இன்றைக்கு இந்தக் தொடக்கக்காலத்திலே அறிவியலும் வளர்கிறது. அருளியலும் வளர்கின்றது. இரண்டுக்கு மிடையே கொஞ்சம் மோதுதல் இருப்பதற்குக் காரணம், நம்முடைய தேவைகள் போதவில்லை. நம்முடைய தேவைகள் எல்லாம் நிறைவு செய்யப்பட்வில்லை. அங்கே செல்ல வேண்டும்-இங்கே செல்ல வேண்டும் என்ற ஆசையிலே உந்து வண்டியாகப் பறந்து கொண்டிருப்பதனாலேதான் நமக்கு இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலக் கட்டத்திலே இந்த அறிவியல் முறையாக-ஒழுங்காக வளர்க்கப்படுமானால்-ஆதிபத்திய உணர்ச்சிகளுக்கு உரிமையாக்கப்படாமல் வளர்க்கப் பெறுமானால் நிச்சயமாக ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாக இந்த உலகத்தின் தேவைகள் நிறைவு செய்யப்பெறும்.
அப்பொழுது சோற்றுக்காக முயற்சிப்பது என்கிற வார்த்தையே இல்லாமற் போய்விடும். துணிகளுக்காக முயற்சிப்பது என்கிற வார்த்தையே இல்லாமற் போய்விடும். சோறு துணிக்காக மக்கள் முயல்கிறார்கள் என்கிற காலக்கட்டம் போய், அது எல்லாம் நிறைவேறிய பிறகு அவன் சோம்பேறியாக இருக்க முடியாது. ‘பொறிகளுக்குத் தேவையானவை கிடைத்த பிறகு புலன்களை நோக்கி மனிதன் பாய்கிறான்’ என்பது ஞானிகளின் அனுபவ சித்தாந்தம். அவனுடைய கைகள், கால்கள் அவனுடைய தேவைகள் நிறைவு செய்யப் பெற்ற பிறகு வேறு திசையிலே பொறிகளும், புலன்களும் திரும்பப் பெறுகின்றன. எப்படி எப்படி ஆற்றுவெள்ளம் தேவைப்பட்ட அளவிற்குத் தேக்கிய பிறகு வேறு திசையிலே திருப்பப் பெறுகிறதோ அதுபோல, மனிதனுடைய உயிரியல் அநுபவம் இருக்கிறதே அது ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்திற்கு-குறிப்பிட்ட எல்லைக் கோட்டுக்கு வந்த பிறகு-அவனுடைய அனுபவங்கள், உலகியல் அனுபவங்கள் நிறைவு செய்யப்பெற்ற பிறகு வேறு திசையிலே திருப்பிவிடப் பெறுகிறது. அப்படித் திருப்பி விடுகிற காலம் வருகிறபொழுது 17-ஆம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டிலே இருந்த அறிவு வெள்ளப் ரட்சியைவிட, ஒரு சிறந்த புரட்சி உண்டானால் கூட நாம் ஆச்சரியப்படத்தக்க தில்லை. காரணம் மனிதனுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் இந்த உலகியலைச் செழுமைப் படுத்துவதிலேயே இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவைகள் முடிந்த பிறகு அவன் அருளியல் வெள்ளத்திலே-அருள் ஞானத்திலே-பொருளுக்குப் பொருளாக-பொருளின் உள்ளீடாக-பொருள் ஆற்றலாக இருக்கின்ற உயர்ந்த தன்மைகளை ஆராய்கின்ற ஆராய்ச்சிக்கும் போய்விடுவான். அப்பொழுது அருளியல் வழிப்பட்ட உயர்ந்த சமுதாயம்-உயர்ந்த அறிவியல் உலகம் மலரும்.
அறிவியல் இருக்கிறதே அது ஒழுங்காய், முறையாய் வளர வேண்டுமானால் அதற்கு அருளியல் என்ற வேலி தேவைப்படுகிறது. அறிவியல் வளர்கிறது. மனிதனுடைய அனுபவத்துக்காகத்தான் அறிவியல் வளர்கிறது. இறைவன் மனித உலகத்துக்குக் கொடுத்த அற்புதமான சொத்து, இந்த அறிவுலகம். அற்புதமான சொத்து இந்த மனித ஆற்றல். இந்த அறிவாற்றல்-இந்த மனித ஆற்றல் ஒருவரையொருவர் பழி வாங்குவதற்குப் பயன்படாமல் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று சொன்னால் அங்கே அருளியல் என்ற வேலி தேவைப்படுவது ஒன்றாகிறது. எனவே விஞ்ஞான உலகத்தில் விஞ்ஞானம் முந்தி மோதிக் கொண்டு போகின்ற பொழுதுகூட இடறி விழும். விடாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அருவியல் வேலியை அவனே அமைத்துக் கொள்கின்ற ஒரு சூழல் வரத்தான் போகிறது. அதேபோல அருளியலுலகம் இருக்கிறதே, அது தன்னடைய தேவைகளை - தன்னைச் சார்ந்து வருகின்ற மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத காலத்திலே அந்த நிறைவு செய்வதற்குத் துணையாக அறிவியலைப் பயன்படுத்துகின்ற சூழ்நிலை வரவே போகிறது. எனவே மீண்டும் திருப்பித் திருப்பிச் சொன்னால் ஒரே ஒரு வார்த்தைதான் வருகின்றது. அகங்கை, புறங்கை போல மனித வாழ்வுக்கு அறிவியலும் அருளியலும், ஒரு காசின் இருபுறமும் போல. அகங்கை வேண்டுமா? புறங்கை வேண்டுமா? அகங்கை வாழ்ந்தால் புறங்கை வாழுமா? புறங்கை வாழ்ந்தால் அகங்கை வாழுமா? அல்லது காசில் பூ வாழ்ந்தால் தலை வாழுமா? தலை வாழ்ந்தால் பூ வாழுமா? என்று கேட்கப் பெறுகிற கேள்விகள் எப்படிச் சிறுபிள்ளைத் தனமான கேள்விகளாக இருக்கின்றனவோ அதுபோலவே வளர்கின்ற விஞ்ஞானத்தில் சமயம் வாழுமா? என்று கேட்கின்ற வேள்வி என்று நான் கருதுகிறேன். எனவே உயர்ந்த விஞ்ஞானிகள், உயர்ந்த கவிஞர்கள், உயர்ந்த இலட்சியவாதிகள் எனக்குப் பிறகு பேசுகின்ற பொழுது நன்றாக நெஞ்சிலே ஈரம் பிறக்கிறது - கசிவு பிறக்கிறது. மனிதன் அதிசயிக்கின்ற காட்சிகளைப் பார்த்து-அனுபவிக்கின்ற உயர்ந்த எண்ணங்களைப் பார்த்து -அவன் பாடுகின்ற பாடல்களும், கவிதைகளும், காண்கின்ற காட்சிகளும் அறிவியல் வடிப்புக்களும் ஆயிரம் ஆயிரமாகப் பரவிக் கிடக்கின்றன. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியில் சிசரோ என்ற பேரறிஞன் வாழ்ந்தான். அவனை ‘அரசியல் ஞானி’ என்று உலகம் பாராட்டுகிறது. அந்தப் பேரறிஞன் சொல்கிறான்; இந்த உலகத்தில் வியத்தகு அமைப்புக்களிலே-வியத்தகு நிகழ்ச்சிகளிலே எத்தனையோ அதிசயங்கள் விரிந்து கிடக்கின்றன. மாற்றுதற்கரிய எத்தனையோ பெரிய நிகழ்ச்சிகள்-அற்புதங்கள் நிகழ்கின்றன. இவைகளுக்கெல்லாம் யார் காரணமாக இருக்கக்கூடும்? என்ற வினாவை எழுப்பிக் கொண்டு, ‘நிச்சயமாக மனிதனில்லை’ என்று சொல்கின்றான். மனிதனுக்கு நினைப்பும் வருகிறது. மறதியும் வருகிறது. எனவே மனிதனுக்குச் சோர்வும் வருகிறது, தளர்ச்சியும் வருகிறது. மனிதன் ஒரு நாள் உறங்குகிறான். ஒருநாள் ஓடுகிறான். அவனிடத்திலே ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை இடையாது. ஆனால், உலகத்தின் அமைப்பிலே- உலகத்தின் நிகழ்ச்சிகளிலே-வியத்தகு தோற்றங்களிலே ஓர் ஒழுங்கு இருக்கிறது. முறைபிறழாத நிகழ்ச்சி இருக்கிறது. எனவே யார் இவற்றையெல்லாம் கண்காணித்துப் பார்ப்பது என்று கேட்கிறான். அவன் அந்த ஒழுங்கு முறை பிறழாத நிகழ்ச்சிக்கு நல்ல ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தி (Order and consistency) என்று சொல்கிறான். ஓர் ஒழுங்கு இருக்கிறது; ஒருமுறை பிறழாத நிகழ்ச்சி இருக்கிறது. நம்முடைய காலிலே-கைகளிலே-கொடுக்கப்படுகின்ற காரியங்களிலே பல ஒழுங்கு தவறிப்போகும். நம் கைகளால் நாம் செய்கின்ற நம்முடைய அறிவு பொறி புலன்களாலே செய்கின்ற காரியங்களிலே-உயர்ந்த கடவுள் நம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும் உடையவர்களாக நடித்துக் கொண்டிருந்தவர்களிடத்திலே செய்யப்படுகின்ற காரியங்களிலே கூட பல சமயங்களில் ஒழுங்கு தவறுகின்ற-முறை பிறழ்கின்ற காட்சியைப் பார்க்கிறோம். ஆனால், உலகத்தின் அமைப்பிலே நடைமுறைகளிலே ஒரு அற்புதமான சக்தி இருக்கிறது. அது ஒரு ஒழுங்கும் ஒரு முறை பிறழாத நிகழ்ச்சியுமாக இருந்து கொண்டிருக்கிறது. இவற்றை எல்லாம் முறைப்படி இயக்கும் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அந்தச் சக்திக்கு என்ன பெயர் என்று சொல்ல எனக்குத் தெரியவில்லை. என்னுடைய அறிவு அந்த அளவுக்கு வளரவில்லை என்று கையை விரிக்கிறான். அந்த மாதிரி நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். அவனுடைய படைப்பிலே உயிருள்ள பொருள்களுமிருக்கின்றன. ஆனால் மனிதனுடைய படைப்பிலே உயிரற்ற பொருள்கள் இருக்கின்றன வென்று “நூலன்” என்ற பேராசிரியன் சொல்கிறான். இப்படி நூற்றுக்கணக்கான சான்றுகளை-மேற்கோள்களைக் குவிக்க முடியும். இந்த உலகத்தில் விஞ்ஞானிகள் கூட குறிப்பிட்ட காலக்கட்டம் போகிறபொழுது கையை விரிக்கிறார்கள். நுணுக்கத்திலே நுணுக்கமாகப் பார்க்கிறபொழுது இந்த அழகு கைபுனைந்தியற்ற முடியாதது-இந்த வண்ணம் சிற்பியால் தீட்ட முடியாதது-இந்த அமைப்பை மனிதனால் செய்ய முடியாது. அப்படியானால் யார் செய்தது என்று பார்க்கின்றபொழுது என்னுடைய அறிவால் சொல்ல முடியாத-என்னுடைய அனுபவத்தால் எட்டிப் பிடிக்க முடியாத ஏதோ ஒரு சக்தி-ஏதோ ஒரு அறிவாற்றல் இருப்பதை உணர்கிறேன். அதை உணர்ந்து அந்த வழியிலே தொடர்ந்து முயன்று கொண்டிருப்பவனுக்குத்தான் விஞ்ஞான அறிவியல் மேதை என்று பெயர். இலட்சியக் கோடு ஒன்று இருக்கிறது. இலட்சியப் பேரறிவு ஒன்றிருக்கிறது. ஒரு பேராற்றல் இருக்கிறது.
அருளியல் என்ற நீரோடை - ஆற்றோடை உடனாகவே சென்று கொண்டிருந்தால்தான் இந்த அறிவியல் உலகம் அமைதியாக-சமாதானமாக வாழமுடியும். அப்படிப் பார்க் கின்றபொழுது அறிவியலும், அருளியலும் ஒன்றாக இணைந்து வாழவேண்டியவைகள், மதியும் அதனுடைய ஒளியும்போல, கதிரவனும் கதிரொளியும்போல ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவைகள். ஒன்று வளர்ந்தால் ஒன்று வீழும் என்றோ, அல்லது ஒன்று வீழ்ந்தால் ஒன்று வளருமென்றோ கருதுவது தவறு. அறிவியல் வளர்ந்தால் அருளியல் தளரும் என்று சொல்கிறவர்கள் விஞ்ஞானத்தில் இளைஞர்கள். அறிவியல் வளர்ந்தால் அருளியல் பொய்யாகி விடுமென்று அஞ்சுகிறவர்கள் சமயத் துறையில் மூடநம்பிக்கை உடையவர்கள். இரண்டு பேருமே நாட்டுக்கு நல்லன செய்கிறவர்களல்லர். சமயத்துறையில் தெளிவும், உறுதியும், அனுபவமும் இருக்குமானால் உலகத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. சந்திர மண்டலத்துக்குப் போய் வந்திருக்கிறான் என்று சொன்னால், சந்திரனைத் தேவதையாக்கி அதற்கு இருபத்தேழு மனைவியரைக் கட்டிவைத்துப் படித்துக் கொண்டிருக்கிறோமே அந்தக் கதை வேண்டுமானால் நம்பிக்கையில்லாமற் போகலாம்-அந்தக் கட்டுக்கதை வேண்டுமானால் நமக்கு நம்பிக்கை தராமற் போகலாம். ஆனாலும், சந்திர மண்டலத்தைப் பற்றிய அறிவு அல்லது சந்திரனுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு பேரறிவு, ஒரு பேராற்றலிருக்கிறதே அதைப் பற்றிய நம்பிக்கை விட்டுப் போக முடியாது. அவைகள் நாம் பாமரராக இருந்த காலத்திலே அறிவு வளர்ச்சி பக்குவப்படாத காலத்திலே- கதைகளாக, கற்பனையாகச் சொல்லிக்கொண்டு வந்தவைகள். அந்தப் பெரிய கற்பனைக் காட்டைக் கனவு கண்டான். அவற்றைப் பலவாறாக, பல சொற்களாகச் சொல்லி வைத்தான், கதைகளாக, வடிவங்களாக. அவற்றிலே உண்மை பிறந்துவிட்டால் காடு அழிந்து போகிறது. ஒரு சந்தன மரம் என்று சொன்னால் பெரிய காட்டைத் தெரிவித்துப் பேசுகிறோம். பேசுவதைப் பார்க்கிறோம். பல மொழி வார்த்தைகளை இடையிடையே போட்டுப் பேசுவார்கள்-ஆனாலும், அந்த வழிப்பட்ட பொருள் உணர்ச்சி அவர்களுக்கு இருக்காது-பொருளின் வழிப்பட்ட பயன் உணர்ச்சி இருக்காது-நமக்குப் புரியாத மொழியை நாம் எப்படியோ பயின்றுகொண்டு அல்லது மனப்பாடம் செய்துகொண்டு சொல்வதுபோல உணர்வுக்குப் படாமல், அறிவுக்குப் படாமல், (அறிவுக்குப் படாமல் என்று சொல்லக்கூடாது. அறிவுக்குப் பலமொழிகள் படுவதுண்டு. உணர்வுக்குத்தான் வருவதில்லை. எனவே) உணர்வுக்குப் படாமல் சொல்லுகின்ற சொற்களைப் போல அறிவியல் இருக்கிறதே அது உணர்வுக்கு வராத அறிவியல் இருக்கிறதே போல என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட எண்ணங் களையெல்லாம் நினைவிலே வைத்துக்கொண்டு பார்க்கின்ற பொழுது அகங்கையும் புறங்கையும் போல, நீரும் தண்மையும் போல, மலரும் மணமும் போல அறிவியலும் அருளியலும் இணைந்து வாழும் பிணைந்து வாழும்; அவைகளுக்குள் ஒன்றுக்கொன்று முரண்பாடே வராது.
வளர்ந்த அறிவியல் மேதைகள், அருளியலைக்கண்டு வாழ்த்துகிறார்கள். அருளியலிலே வளர்ந்த மேதைகள், அனுபவத்திற்கு உரியனவாயிருக்கின்ற விஞ்ஞானத்தைக் கண்டு வாழ்த்துகிறார்கள். இணைத்தும் பிணைத்தும் வாழ்வதிலேதான் அமைதியும், சமாதானமும் ஆக்கமும் இருக்கிறது. அங்கேயே ஆன்மாவிற்குச் சாந்தியும் ஏற்படுகிறது. ஆறுதலும் ஏற்படுகிறது.
6
தமிழும் சமயமும் சமுதாயமும்
* * *
(மலேசியச் சொற்பொழிவுகள்)
1. சமயமும் வழிபாடும்
போற்றுதலுக்கும் பாராட்டதலுக்கு முரிய தலைவர் அவர்களே! பெரியோர்களே! நண்பர்களே! நாம் அனைவரும் கூடிக் கலந்து பேசவும், பேசி மகிழவும் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி; வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள்.
நாம் நன்கு நீராடின பிறகு கூடினால்கூட நாம் இந்த அரங்கத்தில் வெப்பம் இருப்பதை உணருகிறோம். இந்த அரங்கத்தில் வெப்பம் இருப்பதைப் போலவே உலக அரங்கத்திலும் வெப்பம் இருப்பதை மறந்துவிடக் கூடாது. உலகில் எங்கு பார்த்தாலும் பதற்ற நிலை. மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு, கொன்று குவிக்கின்ற காட்சிகள்; இவைகளையெல்லாம், ஆன்மீகத் துறையில், சமயத்துறையில் நம்பிக்கை உடையவர்கள், கூர்மையாகச் சிந்தித்துப் பார்த்து இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்து அந்தக் காரணத்தையே மாற்றினால்தான் ஆன்மீக உலகம் வெற்றி பெற முடியும்.
பொதுவாக விஞ்ஞான உலகம்-அறிவியல் உலகம் பூத பெளதிகத்தால் ஆன உலகத்தை நெருக்கிக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. காலையில் பனிரெண்டரை மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்த நான் மாலை 6.00 மணிக்கு மலேசிய நாட்டில் வாழ்கின்ற தமிழர்களோடு பேசுகின்ற அளவுக்கு, அறிவியல் விரைந்து நம்மை இணைத்துக் கொண்டிருக்கிறது. உலகில் எல்லா அண்டங்களையும், கண்டங்களையும் இணைக்கின்ற சாலைகள் உருவாகிவிட்டன. வான்வெளிச் சாலைகள் கூடத் தோன்றி, கண்ணுக்கு அப்பாற்பட்ட அண்டங்களையும் கண்டங்களையும் கூட இணைக்கின்ற அளவுக்கு இன்றைக்கு அறிவியல் வெற்றி பெற்றுக் கொண்டு வருகிறது. அதே நேரத்தில் நிலங்கள் நெருங்கி வருவதைப் போல, நிலத்தில் வாழ்கின்ற மக்கள் தமக்குள் நெருங்கி வருகிறார்களா? அவர்களுடைய இதயங்கள் இணைக்கப்படுகின்றனவா? இந்த உலக நெருக்கத்திற்குப் பயன்பட வேண்டிய ஆன்மீக அன்பு வளர்ந்திருக்கிறதா? என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். உலகம் நெருங்கி வரவர நாம் ஏதோ இதயத்தால் பிரிந்து செல்வதைப் போலத் தோன்றகிறது. இந்த உணர்வு நிலையில் நான் உங்களைச் சந்திக்கிறேன். என்னுடைய நெடிய வாழ்க்கையின் இலட்சியக் குறிக்கோளில் ஒன்று, நிச்சயமாக உலகத்திற்கு மனிதன் அமைதியாக வாழத்தான் வந்தான்; கடவுள் இந்த உலகத்தை மனிதனுக்கு ஒரு பெரிய கொடையாகத்தான் கொடுத்தான்; இந்த இனிய உலகத்தில் இனிமையாக வாழ்ந்து, தன்னை வளர்த்துக் கொண்டு, தன்னை உய்வுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான், இறையவனுடைய திருவுள்ளம்.
சிலபேர் மிகவும் அவசரப்படுகிறார்கள், “மோட்சத்திற்கு - சொர்க்கத்திற்குப் போய்விட்டால் தேவலாம்” என்று. நான் அதற்கு வேடிக்கையாகப் பதில் சொன்னேன்: ‘கடவுள் இப்பொழுது என்னிடத்தில் ஒரு செய்தி அனுப்பியிருக்கிறார்; அதுவும் இரகசியமாகச் சொல்லி இருக்கிறார். சொர்க்கத்தைப் பூட்டி, மடியில் சாவியை வைத்துக் கொண்டிருக்கிறாராம் என்று. உடனே ஏன் என்று கேட்டார்கள். “உலகத்தைச் சொர்க்கமாக்குவதற்காக நான் மனிதனை அனுப்பினேன். அவன் அங்கேயே அதை நரகமாக்கி விட்டான். அவன் இங்கேயும் சீக்கிரமாக வந்து விட்டால், இதையும் நரகமாக்கி விடுவானோ என்று பயந்து நான் சொர்க்கத்தைப் பூட்டி வைத்திருக்கிறேன். உலகம் சொர்க்கமாகிற பொழுது இந்தச் சொர்க்கமும் திறக்கப்படும் என்று கடவுள் சொன்னார்” என்றேன். ஆக எங்கும் அமைதி, எங்கும் சகோதரத்துவ உணர்ச்சி நமக்குத் தேவை. வாழ்க்கையில் சமய உணர்ச்சி என்பதே மனிதனுடைய ஆன்மாவைத் தரப்படுத்துவதும், தகுதிப்படுத்துவதும்தான். கரடு முரடாகவும், முரட்டுத்தனமாகவும், மற்றவர்களுக்கு இசைவில்லாமலும், இயைபில்லாமலும் பழகுகிற பழக்கத்தைப் பண்படுத்திப் பக்குவப்படுத்துகிற ஒரு வாழ்க்கை முறைக்குத்தான் சமயம் என்று பெயர். அதற்கு ஓர் எளிய உதாரணம் நான் அடிக்கடி சொல்வதுண்டு. நம்மில் பெரும்பாலோர் அரிசிச் சோறு சாப்பிடுபவர்கள். ஆனால் எந்த நாட்டுக்கழனியிலும் எனக்குத் தெரிந்து சோறாகவே விளைந்த்தில்லை. நெல்லாகத்தான் விளைகிறது. ஆனால், மனிதன் முயன்று அதைச் சோறாக்கி வெற்றி பெற்றுவிட்டான். கடவுளைக் காண்பதில் எவ்வளவு பேர் வெற்றி பெற்று விட்டார்கள் என்றால், விடை மிகவும் சுருக்கமாக இருக்கும்.
ஆனால் நெல்லைச் சோறாக்குவதில் எவ்வளவு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்றால், அதில் எல்லோருமே வெற்றிபெற்று விட்டார்கள். நெல் அறுவடை செய்தபொழுது ஈரமாக இருக்கும். உண்பதற்குரிய தகுதி அதற்கு இன்னும் வரவில்லை. அந்த நெல்லை நன்றாக ஈரம் போகக் காயப் போட்டுக் களஞ்சியத்தில் கொண்டு வந்து வைப்பார்கள். ஒரு பத்து விழுக்காடு சுவை வரும். ஆனாலும் தின்னமுடியாது. அதற்குப் பிறகு நீண்ட நாள் கழித்து, அதைச் சோறாக்கித் தின்னமுற்படுகிறபொழுது, அந்த நெல்லை மீண்டும் தண்ணீரில் நனைப்பார்கள். முன்பு எந்த ஈரத்தை நீக்க முயன்று காயப் போட்டார்க்ளோ, அதே தண்ணீரில் மீண்டும் முயன்று நனைத்து நன்றாக அவிப்பார்கள். அவித்த பிறகும் மீண்டும் ஒரு முறை காயப் போடுவார்கள். மிக நல்ல காய்ச்சலாகக் காயப்போட்டு நான்கு நெல்லை எடுத்து வீட்டுத்தாய், தேய்த்து அரிசியை வாயிலே போட்டுக் ‘கடுக்’ என்று சத்தம் கேட்டால் அரைக்கலாம் என்பார். அரைத்து அரிசியாகக் கொண்டு வந்த பின்பும், சோறாக வில்லை; தின்ன முடியாது. பெரும் பசிக்காரன்தான் போகிற பொழுது வருகிறபொழுது கொஞ்சம் அரிசி எடுத்துத் தின்பான். அது சோறாக வேண்டும் என்று சொன்னால், மீண்டும் தண்ணீரிலே போட வேண்டி இருக்கிறது. ஓடாத ஆடாத, பாடாத அகங்காரமில்லாத நெல்லைச் சோறாக்குவதற்கே மூன்று தரம் நனைத்து, மூன்று தரம் காயப்போட வேண்டியிருக்கிறது என்று சொன்னால், ஆட்டம், பாட்டம் அத்தனையும் போடுகிற மனிதனைச் சும்மாவா பக்குவப்படுத்த முடியும்? இவனையும் ஏதாவது ஒன்றில் நனைத்து, ஏதாவது ஒன்றில் காயப் போட்டால் சுமாராகத் தேறுவான். இவனை எதிலே நனையப் போடுவது? எதிலே காயப் போடுவது? இது ஒரு சிக்கல்.
பல பேர் கங்கையிலே நனைகிறார்கள்; வெயிலிலே காய்கிறார்கள். சில பேர் குமரிக் கடலிலே நனைகிறார்கள்; வெயிலிலே காய்கிறார்கள். இந்த நனைதலாலும், காய்தலாலும் உடலுக்குத் தான் ஏதோ சுறுசுறுப்புக் கிடைக்கிறதே தவிர, உள் உணர்விலே ஒன்றும் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆறு மாதம் காசிக்கப் போய்த் தங்கிக் கங்கையில் குளித்து விட்டு வருகிறவன், ஊருக்கு வந்தவுடன் முதலில் கேட்கிறான், நம்முடைய எதிரி என்ன ஆனான்? என்று. அவன் ஒன்றையும் எதையும் மறந்ததாகவும் தெரியவில்லை; மறுத்ததாகவும் தெரியவில்லை. அவனுடைய உணர்ச்சிப் பாங்கில் எந்த மாற்றமும் இல்லை. அவனை எதிலே நனைப்பது? எதிலே காயப்போடுவது: கங்கையிலே நனைவதினாலே மட்டுமே பயனில்லை; கடல்களிலே நனைவதினாலே மட்டுமே பயனில்லை? என்று அப்பர் அடிகளே-ஏழாம் நூற்றாண்டிலே பாடுகிறார்.
இதற்கும் நான் ஒரு சிறிய உதாரணம் சொல்வதுண்டு. தஞ்சைத் தரணியிலே பிறந்து வளர்ந்தவர்களுக்குத் தெரியும். ஆடித்திங்களில் இரண்டு கரையையும் தொட்டுக் கொண்டு புதுப்புனல் பொன்னி, நுங்கும் நுரையுமாகப் பூவும் புனலுமாக ஓடிக் கொண்டிருப்பாள். இளைஞர்கள் ஓடியாடி, நீந்தி விளையாடுவார்கள். வெள்ளம் வேகமாக இருக்கிற பொழுது, ஒரு நாள் நான் குளித்துக் கொண்டிருந்த பொழுது, காவிரித் தாயைப் பார்த்து, இவ்வளவு வேகமாக ஓடுகிறாயே! என்ன குடி முழுகிப் போய்விட்டது. கொஞ்சம் மெதுவாகத் தான் போனால் என்ன? என்று கேட்டேன். உடனே காவிரி எனக்குச் சொன்ன விடை:
‘தம்பி நாளை மறுநாள் ஆடி அமாவாசை வருகிறது. இந்த ஊர் உலகத்தில் இருக்கிற மனிதர்கள் பாவத்தைச் செய்துவிட்டு, அதைக் கழுவ என்னிடத்திலே வந்து விடுவார்கள். அவர்கள் வருவதற்குள்ளாகத் தப்பித்துக் கொள்ளலாம் என்று ஓடுகிறேன் என்று சொன்னது. ஆக, கங்கையும் காவிரியும் மனிதனைக் கண்டு பயப்படுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆதலால், அதிலே நனைவது என்பது அவ்வளவு பெரிய காரியமல்ல. நனைவதினால் தவறில்லை. ஆனால், நனைகின்ற பொழுது எந்த உணர்ச்சி வேண்டும்? கங்கையில் குளிக்கின்ற பொழுதோ காவிரியில் குளிக்கின்ற பொழுதோ, எங்கோ நெடுந்துரத்திற்கு அப்பால் இருக்கின்ற வான்மழை, மண்ணைத் தீண்டி மனித உலகத்திற்கு வாழ்வளிக்கின்ற நோக்கத்தில், அது நீர்த் திவலைகளாக மாறி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுபோல என்னுடைய வாழ்க்கை பயன்பட வேண்டும் என்று கருதிக் குளித்தால் தவறில்லை.
அப்படிக் கருதிக் குளிக்காவிட்டால் அதிலே கிடக்கின்ற மீனைப்போல, நண்டைப் போலக் குளித்துவிட்டு வருவதாக ஆகும். மோட்சத்திற்குக் கங்கையிலே, காவிரியிலே குளிப்பதனால் மட்டும்தான் போகமுடியும் என்று சொன்னால், அதிலே கிடக்கிற நத்தைக்கும் நண்டுக்கும் கூட அது கிடைத்திருக்க வேண்டும். அவைகளுக்குப் பகுத்தறிவு இல்லை; சிந்திக்க முடியாது; சிந்திக்கின்ற திறன் கிடையாது.
எனவே மனிதன் அவற்றில் நீராடுகிற பொழுது, எங்கோ உயரத்தில் வானுயர் மலையில் தோன்றுகிற கங்கை, பல ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, கீழே இறங்கி, மண்ணுலகம் முழுதும் பரவி ஓடி, இருகரையிலும் வாழ்கின்ற மக்களுக்கு வாழ்வளிக்கின்ற பாங்கைப் பார்த்து, அதே போல என்னுடைய வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைத்துக் குளித்தால் கங்கையில் குளிப்பதும் பயன் தரும்; காவிரியில் குளிப்பதும் பயன் தரும். அஃது இல்லையானால், அதில் பயனில்லை. எனவே, மனித உள்ளங்களை எல்லாம் அன்பிலே நனைத்து, தொண்டினால் வருகின்ற துன்பத்திலே காயப் போட்டால், மனிதனும் கொஞ்சம் தேறுவான். ஆக மனித உள்ளங்களையெல்லாம் அன்பிலே நனைக்க வேண்டும். அவனுடைய வாழ்க்கையில் துன்பம் கூடாது.
ஆனால், துன்பத்தை வரவழைத்துக் கொண்டவனாக இருந்தால் வாழ்த்தலாம்; பாராட்டலாம். இருந்தது; கொடுத்துவிட்டு ஏழையானான். மற்றவர்களுக்காக வாழ்விழந்தான் என்றால் தவறில்லை. ஒரு சிறந்த வாழ்க்கை என்று சொன்னால் ஒரு நல்ல வீணை வாசிப்பதைப் போல. ஒருவர் மிக அழகாக வீணையை மீட்டினால், அதை மீட்டுகின்றவர்களுக்கும் பெருமை, வீணைக்கும் பெருமை. அந்த வீணை இசையைக் கேட்டு மகிழ்கிறவர்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சி. அதேபோல ஒரு வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஓர் ஆன்மீக வாழ்க்கை-சமய வாழ்க்கை-ஒரு கடவுள் நம்பிக்கை உடைய வாழ்க்கை என்று சொன்னால், அந்த வாழ்க்கை வீணை வாசிப்பதைப் போன்ற வாழ்க்கையாக அமைய வேண்டும். அந்த வாழ்க்கையை மற்றவர்கள் பார்த்தால் மகிழ வேண்டும்.
இயற்கையாக, மனிதனுக்கு மற்றவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால் மகிழ்ச்சி வராது. காரணம், அவன் அழுக்காறோடு கூடப் பிறந்தவன். அவனுக்கு ஒன்று இல்லை என்று கூடக் கவலைப்படமாட்டான்; மற்றவர்க்கு வந்திருக்கிறதே? அதனால் எனக்கு வேண்டும் என்று கவலைப்படுவான். அவனுக்கு எப்பொழுதும் மற்றவரைப் பற்றித்தான் கவலையே தவிர, அவனைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. சின்னப் பையன் கூடச் சொல்லுவான். அடுத்த வீட்டுக்காரன் வைத்திருக்கிறான்; அதனால் வேண்டும் என்று சொல்லுவான். ஆகையால் நம்முடைய ஆவல்கள் பெரும்பாலும் நம்முடைய தேவையை நோக்கித் தோன்றுவன அல்ல. மற்றவர்கள் பெற்றிருக்கிறார்களே, அதுபோல நமக்கு வேண்டும் என்று அழுக்காற்றுப் போக்கில் தோன்றுகின்ற பாவனை கூட எனலாம். சில பேர் இப்போது அதற்குக் கூடச் சமாதானம் சொல்லத் தொடங்கி யிருக்கிறார்கள். அது நல்லதன்று. நல்ல காரியங்கள் செய்வதில், கல்வியில், புகழில் இதிலெல்லாம் சிறிது பொறாமை இருந்தால் தவறில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதாகக் கேள்வி. ஆனால் அது அவ்வளவு நல்லதன்று எந்தத் துறையில் இருந்தாலும் அழுக்காறு அழுக்காறுதான். அழுக்காறு என்று சொன்னால் அழுக்கு வழி என்று பொருள். எண்பது மதிப்பெண் வாங்கியிருக்கிற ஒரு மாணவனைப் பார்த்து, இருபது விழுக்காடு வாங்கியிருக்கிற மாணவன் பொறாமைபட்டால், இருபது மதிப்பெண்ணை எண்பது மதிப்பெண்ணாக ஆக்க முயற்சிக்க மாட்டான். அழுக்காறு உடையவனாக இருந்தால் அதற்காக அவன் என்ன செய்கிறான் என்றால், எண்பது விழுக்காடு வாங்கினவனுடைய தகுதிக் குறைவை என்னவென்று கண்டு பிடித்துச் சொல்லலாம் என்று ஆசைப்படுவான். எனக்குத் தெரியாதா? அவன் எண்பது விழுக்காடு வாங்கியது எப்படி என்று? அந்த ஆசிரியர் வீட்டு வாயிற்படியிலேயே பணத்தை வைத்துக் கொண்டு காத்துக்கிடந்தான். நான் அப்படியில்லை என்று அவன் மற்றவர்களுடைய தகுதிக்குக் குறை கற்பிக்க முயற்சிப்பானே யன்றி, அவன் தகுதியுடையவனாக முயற்சிக்கமாட்டான். எனவே எந்தக் கோணத்திலும், எந்த வகையிலும், அழுக்காறு தீதுதான்.
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் இல்லை
என்பார் திருவள்ளுவர். எனவே அழுக்காற்றின் வழியில் இல்லாமல், நாம் மற்றவர்கள் மகிழ்வதற்காகவே மகிழ்வது, மற்றவர்கள் வாழ்வதற்காகவே நாம் வாழ்வது, என்ற உயர்ந்த பண்பாட்டை நம்முடைய ஆன்மீக உலகம், சமய உலகம் சாதித்தாக வேண்டும். இருபதாம் நூற்றாண்டு, எந்த நூற்றாண்டையும் விட நம்முடைய ஆன்மீக உலகத்திற்கு, சமய உலகத்திற்கு ஒரு பெரிய அறை கூவல். பழைய காலத்திலாவது சில பொருள்களை மட்டும் அழிக்கின்ற குண்டுகளைக் கண்டு பிடித்தான். இப்பொழுது விஞ்ஞானத்தினுடைய உச்சிக் கொம்புக்குப் போய் விட்டார்கள்.
>நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்
என்பதைப்போல, இப்பொழுது அண்மையில் கண்டுபிடித்திருக்கிற குண்டு, கட்டடங்களை அழிக்காது; தோட்டங் தோட்டங்களை அழிக்காது; நிலங்களை அழிக்காது; காடுகளை அழிக்காது. பொருள்களை எல்லாம் அப்படியே பத்திரமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களை மட்டுமே அழிக்கும். உடைமைகள் தோற்றமே மனிதனுக் காகத்தான். கடவுள் இந்த உலகத்தில் பொன்னையும், பொருளையும், போகத்தையும், பழத்திடை சுவையினையும், கனிகளையும், சோலைகளையும் நமக்கு அமைத்துக் கொடுத்தது, இந்த உயிர்கள் தம்முள் மகிழ்ந்து வாழட்டும்; மகிழ்ந்து வாழ்வதின் மூலம் தங்களை உயர்த்திக் கொள்ளட்டும் என்றுதான். ஆனால், இன்றைக்கு நிலைமை, மனிதனைவிட உடைமைகள் மிகப் பெரிய செல்வாக்கு உடையனவாகி விட்டன. மிகப் பெரிய விநோதம், பணத்தை மனிதன்தான் படைக்கின்றான்; பொருளையும் மனிதன்தான் படைக்கிறான். அதற்குப் பெயரும் இவன்தான் சூட்டுகிறான். அதற்கு விலை மதிப்பும் இவன்தான் நிர்ணயிக்கின்றான். ஆனால், துர்ப்பாக்கியவசமாக அவற்றிற்கு எல்லாம் செய்த பின்பும் இவனே அவற்றுக்கு அடிமையாகவும் நிற்கின்றான்.
“பொருளுக்காக நான்” என்று கருதுகிறானே தவிர, ‘வாழ்க்கைக்குப் பொருள்’ என்று அவன் கருதவில்லை. பொருளுடைமையின் காரணமாகவே சில காரியங்கள் நிகழ்கின்றன. அதற்காகவே சண்டைகள், அதற்காகவே போட்டிகள் தோன்றுகின்ற பொழுது, ஆன்மீகத் தரம் வீழ்ந்து விடுகிறது. பொருளுடைமை தவிர்க்க முடியாதது. ஆனால் அது, துய்த்து, மகிழ்ந்து, வாழ்வதற்குத் தானே தவிர, பூட்டுக் கடைகளுக்குள்ளே போய்ச் சிக்க வேண்டும் என்பதற்காக வன்று. உலகத்தில் இப்பொழுது எங்கு பார்த்தாலும் மிகவும் செல்வாக்குப் பெற்ற கருவி, சிறைகள்; எங்கு பார்த்தாலும் பூட்டுக்கள், பூட்டுகள் இல்லாத கோயில்களைக் கூடக் காண முடியவில்லை.
ஒரு காலத்தில் நாம் கடிதத் தலைப்பில் சிவமயம் என்று எழுதுவது உண்டு. இப்பொழுது சிறைமயம் என்று எழுதினால்கூட தவறில்லைபோல் தெரிகிறது. ஒன்று, சிறைச்சாலையின் சாவிகள் காவலர்கள் கையிலே இருக்கின்றன. நம்முடைய மனைகள், மடங்களின் சாவிகள், இன்றைக்கு நாம் நியமித்த காவலர்கள் கையிலே இருக்கின்றன. ‘பத்திரமாகப் பூட்டிக் கொள்’ என்று சொல்லாமல் படுத்துத்தூங்க யாரும் போக முடிவதில்லை. இந்த அளவுக்கு மனித உலகத்தினுடைய நாகரிகம் ஏன். குறைந்தது என்று கேட்டுப் பார்த்தால், வாழ்க்கையில் எதற்கு முதன்மை கொடுக்க வேண்டுமோ, அதற்கு முதன்மை கொடுக்காமல், வாழ்க்கைக்குக் கருவிகளாக, சாதனங்களாக இருப்பவைகளுக்கு அதிக முதன்மை கொடுத்திருக்கிறோம் என்பது புரியும். எல்லாவற்றிற்கும் மேலாக விலை மதிக்க முடியாதது நம்முடைய உயிர். உயிர்களினுடைய தரமும், தகுதியும் உயர வேண்டும். அது உயர்வதற்குத்தான் வழிபாட்டையே நாம் செய்கிறோம். கடவுள் வழிபாடு என்பதின் பொருளே கூட, கடவுளின் வழி நிற்றல் என்பதுதான். வழிபடுதல் என்று சொன்னால் வழிப்படுதல் என்று பொருள். கடவுளுக்கு என்று சில வழிகள் இருக்கின்றன. என்ன வழிகள்? அவன் குறைவில்லாதவனாக இருக்கின்றான்; குற்றங்கள் இல்லாதவனாக இருக்கின்றான்; நிறை உடையவனாக இருக்கின்றான்.
வாழ்க்கைப் பயணம் என்பது எதற்காக? குறை உடையவர்கள், தங்களை நிறை உடையவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள மேற்கொள்கின்ற பயணத்திற்கு வாழ்க்கைப் பயணம் என்று பெயர். ஏதோ ஒரு குறை இருக்கிறது. அந்தக் குறையை நிறை உடையதாக மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறோம். உடல் குறையுடையவர்கள் மருத்துவமனைக்குச் செல்கின்றார்கள்; உணவுக் குறை உடையவர்கள் போதிய உணவு எங்கே கிடைக்கும் என்று தேடுகிறார்கள்; அறிவுக் குறையுடையவர்கள் அறிவு எங்கே கிடைக்கும் என்று தேடுகிறார்கள்; சில பேர் எது நிலையான குறை என்று தெரிந்துகொண்டு, மற்ற குறைகளைப் பற்றிக் கவலைப்படாமல், நிலையான குறை ஒன்றை மாற்ற முயற்சிக்கிறார்கள். தனித் தனியே பொருள், தனித்தனியே பணம், தனித்தனியே காசு இவைகளைத் தேடுவதைவிட, ஆன்மாவினுடைய, உயிரினுடைய தரத்தைக் கூட்டுவதன் மூலம் அனைத்தும் கிடைக்கும். காரணம், ஆன்மா தரப்படுகிறது என்று சொன்னால், அதற்குரிய ஆற்றல் தரப்படுகிறது.
பொறிவாயில் ஐந்தவித்தான்
என்பார் திருவள்ளுவர். ‘அவித்தான்’ என்று சொன்னவுடன் சிலபேர் அதை அழிக்கவே முயற்சி செய்கிறார்கள். சிலபேர் சாப்பிடுவதே இல்லை; காரணம், நோன்பு இருக்கிறேன் என்று சொல்லுவார்கள். சிலபேர் நன்றாகத் தூங்குவதே இல்லை. காரணம், நான் கண் விழித்துச் சாமி கும்பிடுகிறேன் என்பார்கள். இப்படி வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி என்னென்னவோ தண்டனைகளை எல்லாம் அனுபவிக்கிறார்கள். ஆனால் தண்டனைகளை அனுபவிப்பதன் மூலம் இறைவனை நாம் மகிழ்விக்க முடியாது. நெறியில்லா நெறி தன்னை நாம் நம்பக்கூடாது. ‘விரதங்கள் எல்லாம் மாண்ட மனத்தான் கண்டாய்’ என்பார்கள். ‘பொறிவாயில் ஐந்து அவித்தான்’ என்று சொன்னால் இந்த மெய், வாய், கண், மூக்குச் செவிகளை ஒன்றும் துய்க்காமல், மகிழாமல் அழிப்பது என்று பொருள் இல்லை. இங்கு அவித்தல் என்ற சொல், பக்குவப்படுத்துதல், என்றுதான் பொருள்படும். நெல் அவித்தல், கிழங்கு அவித்தல் என்பார்கள். இந்த நாட்டிலே செல்வாக்கான பலகாரம்-இடியாப்பம் அவித்தல் என்று சொல்வார்கள். எனவே, அவித்தல் என்று சொன் னால் உண்பதற்குரிய முறையிலே பக்குவப்படுத்துதல் என்பதுதான் பொருளே தவிர, அந்த மெய், வாய், கண், மூக்கு, செவிகளை அழித்து விடுவது அல்ல. சிலபேர் சிலவற்றைக் கேட்பதே இல்லை. ஆனால், சில சந்தர்ப்பத்திலே இவர்கள் சொல்வதையும் அவர்கள் காதுகள் கேட்பதும் இல்லை. இன்றைக்கு இருக்கிற விநோதமான போக்கு-நாம் ஊரெல்லாம் கட்டியாள முயன்றாலும், நம்முடைய மெய், வாய், கண், மூக்கு, செவிகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா என்பதே புரியவில்லை. பலருக்கு அவர்களுடைய கட்டுப்பாட்டின் மீதே இல்லை. ‘ஏனப்பா! திரைப்படத்திற்குப் போனாய்? என்று கேட்டால் அவன் சொல்லுகிறான். நான் போவதாகப் போகவில்லை. எனக்கு எண்ணமும் இல்லை, சுவரொட்டியைப் பார்த்தேன். போய்விட்டேன்’ என்று சொல்லுகிறான். அப்படி என்றால், கண் இவனை இழுத்துக் கொண்டு போகிறதே தவிர, கண்ணுக்கு ஆணையிடுகிற அளவுக்கு இவனுடைய தரம் உயரவில்லை. பார்க்காததைப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று சொன்னால், விழித்த கண்ணோடு இருந்தால் கூடப் பார்க்காமல் இருக்க வேண்டும், கண்களைப் பார்த்தால் விழிப்பாக இருக்க வேண்டும். ஏனய்யா, பார்த்தாயா? என்றால் ‘நான் பார்க்கவில்லையே!’ என்னுமளவு கட்டுப்பாடு வேண்டும். விழித்துக் கொண்டிருந்தாயே என்று கேட்டால், நான் பார்க்காததைப் பார்க்குமாறு என் அறிவுப்புலன் கண்ணோடு ஒத்துழைக்காது என்று சொல்ல வேண்டும். அதேபோல், நெருக்கமாக இரண்டு பேர் உட்கார்ந்திருப்பார்கள். பக்கத்தில் ஒருவர் பேசிக்கொண்டே இருப்பார். அடுத்து அமர்ந்துள்ள நான் கேட்காமலே இருக்க வேண்டும். ஒரு நூறு அடி இல்லை. இருபதடி இல்லை, ஐந்தடிக்கு உள்ளேதான், பேசுகிற ஒலி செவிப்புலனுக்கு வருகிற எல்லைக்குள்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் நினைத்தால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்காமல் இருக்க முடியும். என்னுடைய அறிவுப் புலனைச் செவியோடு சேர்த்து என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும் என்று ஊக்கம் இல்லாது போனால், அவர்கள் பேசுவது எனக்குத் தொல்லையாகவும் இருக்காது; கேட்கவும் முடியாது. ஆனால், இன்றைக்கு நாம் அப்படி இல்லை. மற்றவர்கள் பேசுகின்ற துரத்திற்கு அதிகம் விலகி இருந்தால் கூட, என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் அக்கறை கூட வந்திருக்கிறது. பாரதிதாசன் மிக அருமையாகச் சொன்னான். ‘இந்த மயிலுக்குக் கழுத்தை நீட்டி வைத்திருப்பதைப்போல, மனிதர்களுக்குக் கழுத்தை அதிகம் நீட்டி வைக்கவில்லை. அதிலும், குறிப்பாகத் தமிழகப் பெண்களுக்குக் கழுத்து நீளமாகவே இல்லை; குறுகலாக வைக்கப்பட்டிருக்கிறது. ‘ஏன்’ என்று கேட்டுவிட்டுப் பதில் சொல்லுகின்றான். ‘ஏற்கனவே அடுத்த வீட்டில் என்ன நிகழ்கிறது என்பதுதான், இவர்களுக்கு உள்ள கவலை. இதில் கழுத்து வேறு நீளமாக வைத்து விட்டால், இங்கு இருந்தபடியே அடுத்து வீட்டுக்குள் தலையை விட்டுவிடுவார்கள்; பார்ப்பதற்கு” என்று சொன்னான். ஆக நமக்கு, நாம் யார் என்பதில் அக்கறை இல்லை. மாணிக்கவாசகர் போன்றவர்கள், நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் யார்? என்று ஆய்வு செய்தார்கள். அவர்கள் நான் யார்? என்று கேட்க ஆசைப்பட்டார்கள். இப்பொழுது இவன் நான் யார்?’ என்று கேட்டுக் கொள்ள ஆசைப்படாமல் நீ யார்? நீ யார்?’ என்று கேட்டுக்கொண்டி ருக்கிறான். சமயத்தில் நான் யார்? என்று கேட்டால் உடனே அச்சடித்த அட்டை கொடுக்கிறார்கள். அதிலே முகவரி இருக்கிறது. ஆனால் அது அஞ்சலக முகவரியே தவிர, அந்த ஆளினுடைய சொந்த முகவரி அல்ல. அப்படியென்றால் என்னவென்று உங்களுக்குப் புரிந்துஇருக்கும் என்று நினைக்கிறேன். கொடுத்த அட்டையில் இருக்கிறதே, அது அஞ்சலக முகவரியே தவிர சொந்த முகவரி இல்லை. அஞ்சலக முகவரி வேறு; சொந்த முகவரி வேறு. அஞ்சலக முகவரி என்பது இன்னின்ன இடம்; இன்னின்ன ஊர் என்பது. இந்த ஆள் மனிதராக இருக்கிறாரா? மிருகமாக இருக்கிறாரா? கழுதையாக இருக்கிறாரா? நாயாக இருக்கிறாரா என்பது தெரியாது. அவருக்கு என்ன குணம் இருக்கிறது என்பது தெரியாது. இராமலிங்க அடிகள் திருவொற்றியூரிலே திண்ணையிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். பலர் போகிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள். இது கிரேக்க நாட்டினுடைய சிந்தனையோடு ஒத்து வருகின்ற நம்முடைய நாட்டு இராமலிங்க அடிகளினுடைய சிந்தனை, போகிறவர்களில் நிறையப் பேரை அதோ பார் மாடு போகிறது; மிருகம் போகிறது; அது இது என்று சொன்னார்.
இதோ ஒரு மனிதனும் போகிறான் என்று சொன்னார். இந்த மனிதனும் போகிறான் என்றால், உருவத்தால் ஒத்திருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்லர். நிரம்பப் பேருக்கு மூக்கு விழி எல்லாம் ஒற்றுமையாக இருக்கும். நம் பாட்டிக்குக் கூடக் குழந்தை பிறந்தவுடன் மிகவும் மகிழ்ச்சி, ‘மூக்கும் முழியும் நன்றாக இருக்கிறது’ என்று சொல்வார்கள். இந்த மூக்கும் விழியும் நிறையப் பேருக்கு நன்றாக இருக்கும். ‘உறுப் பொத்தல்’ என்று சொல்வார்கள். ஆனால் உணர்வுகள் எப்படி இருக்கின்றன. அவர்கள் மற்றவர்கள் வாழ்வதிலே என்ன அக்கறை காட்டுகிறார்கள். ‘நான் யார்?’ என்று சொல்லுகின்ற பொழுது, என்னுடைய குணம் என்ன? என்னுடைய நிறை என்ன? தகுதி என்ன? என்பதுதான் அங்கே பொருள். என்னுடைய உள்ளம் எதை விரும்புகிறது? என்னுடைய ஞானம் எது? என்னுடைய அறிவு எது? இந்த அறிவு என்பது இருக்கிறதே மிகவம் தூய்மையான அறிவு, அறிவா? அன்பா? என்று பட்டிமன்றம் போட்டால் நிரம்பப் பேர் அன்புக்குத் தீர்ப்புச் சொல்வார்கள். ஆனால், என்னைக் கேட்டால் அன்பைவிட, அறிவுதான் உயர்ந்தது என்பேன். அறிவில்லாத அன்பு நிலைத்து நிற்காது.
விலங்குகளுக்கு அன்பு இருக்கிறது. ஒரு நாய், குட்டி போட்டவுடனே மிகவும் அன்பாக வளர்க்கிறது. ஓர் ஆறு மாதம் கழித்து அந்தக் குட்டிக்கு வயது வந்த பிறகு, காலத்தின் வேற்றுமை காரணமாக இந்த நாயும் அந்த நாயும் சண்டை போட்டுக் கொள்கின்றன. விலங்குகளிலே கூடப் பார்க்கலாம். ஒரு பசு, கன்று ஈனுகிறது. இரண்டு ஆண்டு கழித்து அந்தப் பசுவுக்கும், கன்றுக்கும் தாய்-மகன் உறவு இருக்காது. திரும்பவும் முட்டிக்கொள்ளும். சில சமயத்தில் உறவுகள் கூடக் கொள்ளும். ஆதலாலே, விலங்குகளுக்குக் காலத்தைக் கடந்து காட்டுகிற அன்பு, காலத்தை வென்று காட்டுகிற அன்பு, இவைகளெல்லாம் கிடையாது.
மனிதனுக்கும் கூட இப்பொழுது காலத்தை வென்று இருக்கிற அன்பு இருக்கிறதா? கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. மனிதன் என்று சொன்னால் அவனுடைய அன்பு காலத்தை வென்றதாக இருக்க வேண்டும்; எல்லைகளைக் கடந்ததாக இருக்க வேண்டும்; வரையறைகளைக் கடந்ததாக இருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாது போனால், இவனும் கூட விலங்குகளைப் போலத் தாழ்ந்தவன்தான். சுற்றத்தார் என்பதற்காக ஒரு பற்று, சுற்றத்தார் இல்லை என்பதற்காக ஓர் அன்பு இருக்குமானால் எல்லைகளைக் கடந்த அன்பு இல்லை. எங்கே அறிவும் நன்றாக வேலை செய்கிறதோ, அங்கே சூழ்நிலைகளைக் கடந்தும் அன்பு காட்டுவார்கள். தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள், ஒரு முப்பது ஆண்டுகள் சேர்ந்தாற்போல் அன்பு உடையவர்களாக இருந்தால், தெய்வம்போல் கும்பிடலாம் போல் தெரிகிறது. இருபத்தைந்து ஆண்டுகள், முப்பது ஆண்டுகள் பழகி, வளர்ந்து, இரண்டு பேரும் ஒரு சேர வாழ்ந்து, அதற்குப் பிறகு கொஞ்சம் கூட முனைமுறியாமல், இருப்பார்களானால் அவர்களைத் தெய்வம்போல நாம் பாராட்டலாம். நாட்டில் அறுபதுக்கு அறுபது மணிவிழாச் செய்வார்கள். தம்பதிகள், திருமணமாகி ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்து குழந்தைகள் உண்டாகி, பேரன் பேத்திகள் உண்டாகி, யாதொரு குறையும் இல்லாமல் வாழ்ந்தால்- இப்படி வாழ்வது அருமை என்பதால், இப்படி அறுபது ஆண்டுகள் வாழ்ந்தால், அவர்களுக்கு மறு திருமணம் செய்கிறார்கள். மணிவிழாக் கொண்டாடுகிறார்கள். நான் அது போலவே சொல்வதுண்டு. இருபத்தைந்து ஆண்டுகள், ஐம்பது ஆண்டுகள், அறுபது ஆண்டுகள், யாராவது நட்புத்துறையில், உறவுத் துறையில் வெற்றி பெற்றிருந்தால், அவர்களுக்கும் கூட அது போல விழா நடத்தலாம். காரணம், நமக்கு அப்படி நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பண்பாடு குறைவு. அதனால்தான் திருவள்ளுவர்.
அன்பின் வழியது உயிர்நிலை
என்று சொன்னார். எனவே நான் யார்? என் உள்ளம் யார்? என்கிற பொழுது, மனிதர்கள் அறியாமையிலேயே இருக்கிறார்கள். அறியாமை என்றால் சில பேர் ஒன்றும் தெரியாமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றும் தெரியாமை என்பது அறியாமை அல்ல. அறியாமை என்பது ஒன்றைப் பிறிதொன்றாகப் புரிந்து கொள்ளுதல். செய்தி நிறையத் தெரியும், விசய ஞானம் நிறைய இருக்கும். அவர் ஒன்றும் தெரியாதவர் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அவரைப் போலக் குழப்பமான மனம் யாருக்கும் இருக்க முடியாது. தெளிவு இருக்க வேண்டும்.
சிந்தையுள் தெளிவுமாகி, தெளிவினுள் சிவமுமாகி
என்பார் நம்முடைய அப்பரடிகள். தெளிவு தேவை. தெளிவில்லாத குழப்பமான, இதுவோ அதுவோ என்ற ஐயப்பாடுகள், குழம்பிய மனத்தில் இருக்கும். தெளிவான ஒன்றுக்குத்தான் அறிவு என்று பெயர். நமக்கு எது சரியானது என்று புரிந்து கொள்ளுகின்ற முயற்சி இருக்காது. தவறானதைச் சரியென்றும், நன்மையைத் தீமை என்றும், தீமையை நன்மை என்றும், இன்பத்தைத் துன்பமென்றும், துன்பத்தை இன்பமென்றுமாக, முறை பிறழ உணர்கின்றோமே, அதற்குப் பெயர்தான் அறியாமை. இதற்குத் தெளிவாக ஒரு சிறு உவமை சொன்னால் நன்றாக விளங்கும். சில ஊர்களிலே, சில கிராமப் புறங்களிலே ஆமையை அவித்துச் சாப்பிடுகிற மக்கள் இருக்கிறார்கள். உணவுப் பஞ்சத்தின் காரணமாக இப்பொழுது எதைச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடுவது இல்லை என்ற வரையறை நீங்கிக் கொண்டு வருகிறது. எனவே, இந்த ஆமையை அவித்துச் சாப்பிடுகிற மக்கள், ஆமையைப் பிடித்துக் கொண்டு வந்து, உலைப்பானையிலே போட்டு, அடுப்பிலே விறகு வைத்துத் தீ மூட்டினார்கள். பச்சைத் தண்ணீரிலே கிடந்து மரத்துப் போன ஆமைக்கு, இளம் சூடு, சிறிது வெது வெதுவென்று இருந்தது. உடனே அதற்கு மகிழ்ச்சி. ‘அடஅட! இளஞ்சூடு எவ்வளவு இனிமையாக இருக்கிறது. இதுபோல வெதுவெதுவென்று எங்கும் இல்லையே’ என்று சொல்லி அந்தப் பானை நீரிலே விளையாட ஆரம்பித்தது. ‘உலையை ஏற்றித் தழல் எரி மடுத்த நீரில் திளைத்து நின்று ஆடுகின்ற ஆமைபோல்’ என்பார். மிகவும் மகிழ்ச்சி. இந்த இளம் சூட்டிற்கு ஈடு இணை ஏது? ஒன்றை மறந்துவிடக் கூடாது. அடுப்பு எரிந்துகொண்டே இருக்கிறது. எட்டு மணிக்கு எரியத் தொடங்கிய அடுப்பு, எரிந்து கொண்டே இருந்தால், இளம் சூடு என்ன ஆகும்? கொதி நிலையாக மாறுகிறது. கொதி நிலையாக மாறுகிற பொழுது, அந்த ஆமை அழிந்து போகிறது.
அதேபோல, எது நிலையான நன்மை தரும், எது நெடிய பயன் தரும் என்று அறிந்து கொள்ள முடியாமல், இந்தத் தற்காலிகமான வெற்றிகள், இன்பங்கள் இவைகளிலேயே மயங்கி, அதிலேயே மூழ்கி, கடைசியிலே அதுவே நம்மை அழிக்கின்ற அளவுக்கு அழித்துக் கொள்கிறோம். அதனால்தான் ‘உலையை ஏற்றித் தழல் எரி மடுத்த நீரில் நின்றாடுநின்ற ஆமைபோல் தெளிவில்லாதவன்’ என்று சொன்னார். ஆக, சிந்தையுள் தெளிவுமாக, தெளிவினுள் சிவமுமாக இருக்கின்ற பரம்பொருளை நாம் நினைக்கின்ற பொழுது, நம்முடைய அறிவு இன்னும் தெளிவுடையது ஆகின்றது. சில பேர் தீமையைத் தாமே செய்து கொள்ளுகிறார்கள். ஆனால், யார் மீதாவது பழிபோடுகிறார்கள். இந்த மனிதன் மிகவும் கெட்டிக்காரன்; எதற்கும் சமாதானம் சொல்வதில் இவனைவிடக் கெட்டிக்காரன் யாருமிலர். அதுவும் நம்முடைய சமூகத்தில் சமாதான நிபுணர்கள் அதிகம். சமாதான நிபுணர்கள் என்றால் சண்டைபோட்டுக் கொண்டு சமாதானம் செய்பவர்கள் என்று இல்லை. கீழே விழுந்து விட்டால் அதற்கொரு சமாதானம். ஏதாவது சொல்லித் தன்னுடைய குறைகளை நிறைகளாக மாற்றுபவர்களுடைய எண்ணிக்கை மிகுதி. எனவே, தெளிவாக நம்முடைய அப்பரடிகள் சொல்லும்போது சொல்லுகிறார். ‘அவனைப் பற்றியே அவனுக்குத் தெரியாதே’ என்று. யானை மிகப்பெரிய யானை. அந்த யானைக்குத் தன் உடல் முழுதும் தெரிந்து கொள்ளுகின்ற சக்தி உண்டா? இல்லை பார்வையே இப்படித்தான். அதற்குத் தன் முதுகு, வால், எப்படி இருக்கின்றன: வயிறு எப்படி இருக்கிறது என்று தெரியாது; பார்க்க முடியாது. அதுபோல், சிலபேர் இருக்கிறார்கள். அவனைப் பற்றியே அவனுக்குத் தெரியாது கேட்டாலும் பெயர் ஊர் சொல்லுவானே தவிர, வேறு ஒன்றும் தெரியாது. சரி, தனக்கு மேலே ஒரு தலைவன், கடவுள் இருக்கிறானே, தெரியுமோ? தெரியாது. யானைக்கு மேலே யானைப்பாகன் ஒருவன் இருந்து யானையைச் செலுத்துகிறானே, யானைக்குத் தெரியாது. அதுபோல, தனக்கு மேலே ஒரு தலைவன் இருக்கிறான்; கடவுள் இருக்கிறான் என்பதும், இவனுக்குத் தெரியாது. மிஞ்சினால் இல்லையென்று சொன்னாலும் சொல்லி விட்டுப் போய் விடுவான். அதற்கு ஏன், என்ன காரணம் என்று கேட்டால் பார்த்தால் தானே நம்பலாம் என்கிறான். கண்ணால் பார்க்க வேண்டும். அது ஓர் ஆசை. கண்ணால் பார்க்க முடியாது போனால் கருத்து என்று ஒன்று இல்லையா?
பகுத்தறிவாளர் உலகத்திற்குக் கண்ணைவிட முக்கியமானது, சிந்தனையும் கருத்தும்தான். விலங்குகளுக்கு மட்டும்தான் கண் முக்கியமான கருவி. நமக்குக் கண்ணை விடக் கூடக் கருத்தும், சிந்தனையும் மிகப் பெரிய கருவிகள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நம் நாட்டில் பாரதி வாழ்ந்தான். இப்பொழுது பாரதி நூற்றாண்டு விழாக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அந்த நூற்றாண்டு விழாக் காணும் பாரதி என்ற கவிஞன், பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே சந்திரனுக்குச் செல்ல முடியும் என்ற கருத்தைப் பாடினான். ‘சந்திர மண்டலத்து இயல்கண்டு தெளிவோம்’ என்று சொன்னான். அன்றைக்கு அவன் சந்திரனைப் பார்த்ததில்லை; அவன் பாடுகின்றபொழுது, சந்திரனுக்குச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை கூடக் கால் கொள்ளவில்லை.
அன்றைக்குக் கிரகணம் என்றெல்லாம் சொல்லிச் சாமியைக் கும்பிட்டுக் கொண்டிருந்தோம். அவனுக்குப் பிறகுதான் சந்திரனுக்குச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை தோன்றியிருக்கிறது. அதுவும் தமிழகத்தில் தோன்றாமல், அமெரிக்க மண்ணிலும், சோவியத் மண்ணிலும் தோன்றி இருக்கிறது. எப்பொழுதுமே சிந்தனைக்கும், கருத்துக்கும்தான் தமிழன் சொந்தக்காரன். அவற்றைச் செயல்படுத்துவதை யெல்லாம், யாராவது அயல் நாட்டுக்காரர்கள் எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். காரணம், இவனுக்குப் பாட்டு, பதவுரை, பொழிப்புரை சொல்வதிலே காலமெல்லாம் கழிந்துவிடும். ஆகவே, எதையெடுத்தாலும் பதவுரை, பொழிப்புரை, விமர்சனங்கள், இவைகளிலேயே இவனுடைய ஆயுட் காலமெல்லாம் கழிவதன் காரணமாக, பாரதி, ‘சந்திர மண்டலத்து இயல்கண்டு தெளிவோம்’ என்று பாடினாலும் கூட, பாரதியின் பேரன் பேத்திகள் அந்த முயற்சியைச் செய்வதற்கப் பதிலாகச் சோவியத் மண்ணிலும், அமெரிக்க மண்ணிலும் அந்த முயற்சியைச் செய்த பின்பு நாமும் அந்த முயற்சியைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் முதல் வரிசையில் இல்லை என்பதை மறந்து விடக் கூடாது. கடவுளை நம்புவது என்பது வெறும் கண்களால் பார்ப்பது மட்டுமல்ல.
மனித வரலாறு நெடிய வரலாறு, மனிதனுடைய அறிவுக்கும், ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட கண்டங்கள் இருக்கின்றன; இவைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிந்த பிறகுதான் சொல்லமுடியும். இன்றைக்கும் கடவுள் உண்டா, இல்லையா என்று விவாதிப்பது வீண் வியர்த்தமான பொழுதுபோக்கே தவிர, அது எந்தப் பயனையும் தராது. அதுபோல, கடவுளை நம்புவது கூட, ஏதோ பயந்து கடவுள் தண்டனை கொடுத்து விடுவார் என்பதற்கு அல்ல. நான் தெளிவாகச் சொல்லுகிறேன்; கடவுளிடத்திலே எனக்குப் பயமும் கிடையாது. இன்னும் தெளிவாகச் சொல்லுகிறேன். கடவுளிடத்திலே யாசகம் கேட்கிறவ்னும் அல்லன். சிலபேர் கடவுளிடத்திலே யாசகம் கேட்பதற்கே போகின்றனர் அவர் திரும்ப நம்மைப் பார்த்து, ஏண்டா? ஏற்கனவே நிறையக் கொடுத்திருக்கிறேனே! அதையெல்லாம் உபயோகப்படுத்தினாயா? அதையெல்லாம் உபயோகிக்காமல் துருப்பிடிக்க வைத்துவிட்டு இங்கு ஏன் மீண்டும் வந்து கேட்கிறாய் என்று! கேட்டாலும் கேட்பார். மாணிக்க வாசகரே தம்முடைய திருவாசகத்தில்,
என்னால் அறியாப்
பதந்தந்தாய் யான்
அஃதறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றும்
குறைவில்லை
என்று சொன்னார்.
அவன், கங்கையெனக் காவிரியெனச் சுரக்கின்ற அறிவூற்றுக்கள், மின்னாற்றலை விட மிகச் சிறந்த ஆற்றல், உடலிடை வாழ்கின்ற பல்வேறு அமைப்புகள், இவ்வளவையும் நமக்கு வழங்கிய பிறகும் கூட, பிச்சைக்காரனாக அவனுடைய சந்நிதியில் போய் மனிதன் நிற்கிறான். அது இந்த நாட்டுக்கு நல்லதல்ல. எனவே, அவனுடைய அமைப்புப்படி, குறிக்கோள்படி, மனிதன் தன்னுடைய தலைவனை உணர்ந்து, அவனால் இந்த உலகம் இயங்குகிறது; அவன் எனக்குத் துய்ப்பனவும், உய்ப்பனவும் வழங்கி இருக்கின்றான் என்று நன்றியறிதலோடு மட்டுமல்ல. அவனுடைய குறைவற நிற்கின்ற அறிவை, ஆற்றலை இந்த உயிர் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கடவுளை வழிபாடு செய்தாலும் கூட, அந்த வழிபாட்டின் பலன் கடவுளுக்குப் போய்ச் சேருவதில்லை. வழிபாட்டின் பயன் உயிர்களுக்குத்தான் சேர வேண்டும். அது நியதி! அதுதான் குறிக்கோள். கரும்பலகையில் எழுதினால்கூட, கரும்பலகையில் எழுத வேண்டும் என்பது நோக்கமல்ல. கரும்பலகையில் எழுதுவதின் நோக்கம், என்னுடைய சிந்தனையில் எழுதிக் கொள்ள வேண்டும் என்பதுதான். அதே போல இறைவனை முன்னிட்டு வழிபாடு செய்தாலும், அந்த வழிபாட்டின் பயன் இந்த உயிர்களை வந்து அடைய வேண்டும். அவனை அறிவுடையோன், ஞானமுடையோன், பேரறிவுடையோன் என்று தொழுவதன் மூலமாக, இந்த உயிர் பேரறிவுடையதாக விளங்க வேண்டும். இறைவனுடைய குணங்களும், நிறைகளும், அவனுடைய அருள் நலங்களும், உயிரில் வந்து தங்குதலுக்குத்தான் வழிபாடு என்று பெயர். அதற்குத் தான் அந்த நெறியில் நிற்றல் என்று பெயர்.
அந்த யானை தன்னுடைய தலைவனையும் தெரிந்து கொள்ளாது. அதுபோல இவனும் தெரிந்து கொள்வதில்லை. யானையை எங்காவது கட்டினால் போதும், உடனே தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும். அதேபோல, ஒவ்வொரு மனிதனும் நாள்தோறும், தனக்கு எண்ணத் தொலையாத தீங்குகளைச் செய்து கொள்ளுகிறான். அவன் சற்று நேரம் ஓர் இடத்தில் தனியே அமர்ந்து விட்டால் அவனுடைய மனம் படுகிறபாடு எந்த எல்லையிலும் நிற்காமல், எங்கோ சுற்றுகிறது. அது சுவர், வேலி, நாடு என்று எல்லாம் ஏறி இறங்கி எங்கோ சுற்றுகிறது. அது விவஸ்தையே இல்லாத ஒன்றாக இருக்கிறது. அதனால்தான், இந்த மனம் என்ற ஒன்று இருக்கிறதே, அதை மனிதன் தன்னுடைய கட்டுப்பாட்டின் உள்ளே கொண்டு வரவேண்டும்.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு
என்றார் திருவள்ளுவர்.
அறிவுக்கு இலக்கணம் என்னவென்று சொன்னால், எங்கோ செல்கின்ற மனப்புலனைத் தலையிலே குட்டி, ‘அங்கே எங்கு போகிறாய்? இங்கே வா? என்று நல்லவற்றிலே செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்துகின்ற மனப்பாங்கு நமக்கு நிறைய இருக்க வேண்டும். தனக்குத் தானே துன்பத்தைச் செய்து கொள்ளுவதைப் போல ஒவ்வொரு மனிதனும் செய்து கொள்ளுகிறான். போகிறபோது சொல்லுவான், கல் இடித்துவிட்டது என்பான். வாயிற்படி இடித்து விட்டது என்பான். அது இடிக்கவும் இடிக்காது; அதற்கு நகருகின்ற சக்தியும் கிடையாது. இவன் கவனக் குறைவாகப் போய் இடித்துக் கொண்டு பழியை அதன்மேல் போடுவான். இவன் எதாவது கவனக் குறைவாக, தரக்குறைவாக வாழ்ந்து விட்டு, ஏண்டா? இப்படிச் செய்தாய்’ என்று கேட்டால், யாராவது இராமசாமி, கோவிந்தசாமி இவர்கள் மேல் பழியைப் போடுவான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தீங்குசெய்ய முடியாது. தீங்கு செய்கிற மனிதன் இருந்தாலும், உன்னுடைய ஆன்ம வலிமை சரியாக இருக்குமானால் நீ வலிமையும் ஆற்றம் உடையவனாக இருப்பாயானால் உன்னுடைய பகைவனும்கூட உனக்கு ஒன்றும் தீங்குசெய்ய முடியாது. வெளியே பூத பெளதிக உலகத்தில் பனி இருந்தாலும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்குமானால், வெளியே இருக்கின்ற பனி, அவனுக்கு மூக்குச் சளியை உண்டாக்கி விடாது. இவன் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தால், வெளியே பனி என்று போர்த்துக் கொள்ளுவான். இவன் எங்கே போனாலும், உடலைத் தெம்பும் திராணியுமாக வைத்துக் கொண்டிருந்தால், குளிர் தேசத்திலே கூட, இவன் கம்பளியில்லாமல் வாழ முடியும். அது உடலை வைத்துக் கொண்டிருப்பதைப் பொறுத்தது. இப்பொழுது கொஞ்ச நாளாக உடலைப் பேணுதல் என்பது அவ்வளவு தேவையற்றதாக இருக்கிறது. ‘இது ஒரு கட்டைதானே, எங்கேயோ போகப் போகிறது’ என்றெல்லாம் சொல்லி இழிவுபடுத்துகிறார்கள். நம்முடைய திருமூலர் போன்ற ஆசிரியர்கள் ‘உடம்மை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்’ என்று சொன்னார்கள். உடலைக் கருவியாகக் கொண்டுதான் ஆன்மா, ஞானம் பெறுகிறது. எழுதுவதற்கும், படிப்பதற்கும், நூல்புத்தகம் தேவைப்படுவதைப் போல, நம்முடைய ஆன்மா ஞானத்தைப் பெறுவதற்கு நம்முடைய உடற்கருவி இன்றியமையாத தேவை. எனவே, துன்பத்தை வரவழைத்துக் கொள்ளக் வடாது. அதற்கும் மேலாக யானை தன்னைக் கட்டுகிற சங்கிலியை, தன்னுடைய மாவுத்தனிடத்தில் தானே எடுத்துக் கொடுக்கும். கட்டு என்று எடுத்துக் கொடுக்கும். அதேபோல, சில மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே சில கட்டுக்களைப் போட்டுக் கொள்ளுவார்கள். காரணம், அவர்களுக்கு விரிந்த உலகத்தில் நடக்கப் பழக்கமில்லை. விருப்பமில்லை. விரிந்த உலகத்தினோடு அவர்கள் பழக முயற்சி செய்ய வேண்டும். நிறையப் பேருக்கு, நிறையப் பெருமை ‘பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள்’ என்று எனக்குத் தெரியாது என்று சொல்வதில். அவன் அவ்வளவு தூரம் சிறுத்துப் போவதிலே பெருமை காண்கிறான். உதாரணத்துக்கு ஒன்று சொல்லலாம். பரந்த நீர்ப்பரப்பில் தூசுகள் அதிகம் கிடந்தால்கூடப் பார்க்காமல் நாம் குடிப்போம். சில பேர் கையில் கைக்குட்டையை வைத்துக் கொண்டு கூடக் குடித்து விடுவார்கள். ஆனால் சின்ன அண்டாத் தண்ணீரில் தூசு கிடந்தால் கொட்டிவிடுவார்கள். சின்னக் குவளையிலே நீர் இருந்தால், கண்ணுக்குத் தெரியும்; கொட்டிவிடுவார்கள். எல்லை சுருங்கச் சுருங்க மனிதனுக்குக் குற்றங்கள் பெரிதாகத் தெரியும். எல்லை-பரப்பளவு கூடக் கூட, மனித உலகத்தோடு நம்முடைய தொடர்பு கூடக் கூட, குறைகள் எல்லாம் நிறைகளாகத் தெரியும். மனிதரிடத்திலே குறைகளைவிட, நிறைகளை அதிகம் காணப் பழக வேண்டுமென்பது, மாணிக்கவாசகருடைய யானை உவமை. யானை தன்னையே கட்ட சங்கிலி எடுத்துக் கொடுக்கிறது. இதேபோல, மனிதன் தன்னையே துன்பத்திற்கு ஆளாக்கிக் கொண்டும், தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலும் உள்ளான். தன்னுடைய தலைவனைப் பற்றித் தெரிந்து, அவன் தனக்குவமை இல்லத தலைவன் என்பதைப் புரிந்து கொண்டு, அவனை ஒன்றியிருந்து நினைக்க வேண்டும்.
வழிபாட்டினுடைய முக்கியமான நோக்கம் அந்த உயிர் அதிலே கலக்க வேண்டும். ஒன்றிலே ஒன்று ஊறினால்தான் அதன் சுவையை அந்தப் பொருள் எடுத்துக் கொள்ளும். அது சர்க்கரையில் ஊறினாலும் சரி. உப்பிலே ஊறினாலும் சரி, அதில் ஊற வேண்டும். அதே போல, இறை வழிபாட்டில் நாம் இதயத்தோடு கலக்க வேண்டும்; அதனால் தான் நாம் அடிக்கடி தமிழில் வழிபாடு வேண்டும். தமிழில் அர்ச்சனை வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். அது ஒன்றும் மொழிப் பிரச்சனை அல்ல. இன்ன மொழியில்தான் நடைபெற வேண்டும் என்ற வரையறை செய்வது நம்முடைய நோக்கம் அல்ல. தமிழில் அர்ச்சனை செய்தால் எதிரே இருக்கின்ற மக்கள் மகிழ்ந்து கேட்பார்கள். செவிப்புலன் வாயிலாகச் செய்திகள் போய்ச் சேருகின்றன. அந்த இறைக் குணங்களைச் சிந்திப்பார்கள். அவற்றோடு ஒன்றுவார்கள்; உணர்வார்கள்; அந்தக் குணங்கள் அவர்களுக்குச் சொந்தமாகும். அது தமிழில் வழிபடுவதால் ஏற்படும் ஒரு பயன் என்பதை மறந்து விடக்கூடாது. அதற்கு ஒரு சின்ன உதாரணம் சொன்னால் கூட நன்றாகப் புரியும் என்று எண்ணுகிறேன். பயணியர் மாளிகையிலே ஒரு சுவர்க் கடிகாரம் இருக்கிறது. இரவு பன்னிரண்டு மணிக்கு அந்தப் பயணியர் மாளிகைக்குப் போய்ச் சேருகிறேன். கடிகாரம் ஓடிக் கொண்டிருக்கிறது. எனக்கு ஓசை கேட்டது. மணி பன்னிரண்டு என்று! சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, திரும்பப் பயணம் செய்யலாம் என்று எழுந்து பார்க்கிறேன். முள் பன்னிரண்டிலேயே நிற்கிறது. ஆனால், பெண்டுவம் ஓடி ஆடி ஓசை செய்கிறது. ஓடுவதையும் கண்ணால் பார்க்கிறேன். ஆனால் முள் பன்னிரண்டிலேயே இருக்கிறதே என்று காவற்காரரை அழைத்து என்ன அய்யா’ என்று கேட்டால், கொஞ்ச நாளாக இந்தக் கடிகாாம் ஓடுதுங்க, ஆனால் முன் நகரவில்லை என்று சொன்னா அதேபோல நாட்டில் வழிபாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன: வாழ்க்கை நெறிகளிலே மட்டும் நகர்த்தத் தவறி விடுகிறோம். காரணம், நம்முடைய இதயத்தில் அதனுடைய உணர்வுகள் பதிவதில்லை.
எனவே, தாய்மொழியில் அர்ச்சனை செய்தால், ‘அப்பன் நீ, அம்மை நீ’ என்று சொல்லுகிறபொழுது நம்மை அறியாமல் கடவுளை நம்முடைய வாழ்வுப் பொருளாகக் காண்கிறோம். கடவுளை நம்முடைய வாழ்த்துப் பொருளாக மட்டுமின்றி, வாழ்வுப் பொருளாகவும் காண்கின்ற ஒரு பண்பாடு வளர்கின்றது. அப்பனாக இருக்கிறான்; அம்மையாக இருக்கிறான்: அன்புடைய மாமனாக இருக்கிறான்; மாமியாக இருக்கிறான். ஓரூராக இருக்கின்றான்; சுற்றமாக இருக்கின்றான்; பொன்னாக இருக்கிறான். மணியாக இருக்கின்றான்; முத்தாக இருக்கிறான். என்று சொல்லுகிற பொழுது, மனிதனுக்கு வாழ்க்கை நிகழ்வுகளோடு அந்த உணர்வு நகர்த்தப்படுகிறது. அப்பொழுதுதான் வழிபாட்டினுடைய பயன் அவனுக்குத் தித்திக்கிறது. தான் செய்கிற வழிபாடு எந்த மொழியில் செய்தாலும் கடவுளுக்குப் போய்ச் சேரும். கடவுளுக்கு மொழி வேறுபாடு இல்லை.
ஆனால் நமக்குத் தேவை நம்முடைய இதயம் அழ வேண்டும். நம்முடைய உயிர் அழ வேண்டும். மனிதனுடைய இருதயம் ஊமையாக இருந்தாலன்றி, கடவுள் செவிடாக இருப்பதில்லை என்று சொல்லுவார்கள். நம்முடைய இதயத்தில் ஊமைத் தன்மை இல்லாமல் இறைவனை நோக்கி அழக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு நமக்கு அழுவதற்கு உரிய மொழி தாய்மொழிதான். எவ்வளவுதான் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தாலும், சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தாலும், எவ்வளவுதான் பிறமொழிகளிலே மேம்பட்ட அறிவு பெற்றிருந்தாலும், அவனுக்கு ஒரு விபத்து என்று அழுகிறபோது, அவனுக்குத் தாய்மொழி துணை செய்வதைப் போல, எந்த மொழியும் துணை செய்யாது. இதற்கும், காதல் செய்வதற்கும் தாய்மொழியைத் தவிர வேறு மொழி துணையே இல்லை. மொழி வேறுபாடு இருந்தாலும் காதல் தோன்றுகிறது என்று சொல்லலாம். அது காதலாக இருந்தாலும் கனிவாக, பழக்க வழக்கமாக உருப்பெறுவது சிறிது கடினம் என இருக்கும். அப்புறம் இவர் அந்த மொழியைக் கற்றக் கொடுக்கும் ஆசிரியராக மாறி, பக்குவப்படுத்திக் கொண்டு வர வேண்டும்.
எனவே, ‘யானும் பொய்; என் நெஞ்சும் பொய்; என் அன்பும் பொய்; ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ என்று சொன்னார்கள். அழுவதற்கு உரிய முயற்சி, அதுவும் அன்பு அழுகை, ஆர்வ அழுகை; பேரறிவு, பேராற்றலை நோக்கி அழுகிற அழுகை! இந்த அழுகை என்பது அவலத்தின் பாற்பட்ட அழுகை அல்ல. மண்ணிலே இருக்கிற சின்னஞ்சிறு கொடிகள், விண்ணிலே இருக்கின்ற கதிரவனோடு உறவுகொண்டு, அந்தக் கதிரவனின் ஆற்றலைக் கொண்டு வளர வேண்டும் என்று துடிப்பதைப் போல, கங்கு கரையற்றவனாக, எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவனாக, வானாக, மண்ணாக, வளியாக, ஒளியாக, ஊனாக, உயிராக, இன்மையுமாய், உண்மையுமாகப் பரந்து நிற்கின்ற பரம் பொருளினுடைய ஆற்றலைப் பெறுவதற்காக, அவனுடைய துணையைப் பெறுவதற்காக, உயிர்கள் துடிக்கின்ற துடிப்புக்குப் பெயர் வழிபாடு. அது உயிர்த் துடிப்பாக இருக்க வேண்டும். அந்த உயிர்த் துடிப்புடைய வழிபாடு என்றைக்கு நிகழ்கிறதோ, அன்றைக்கு எந்த மனிதனும் கடவுளைக் காண முடியும். அதற்கு ஒன்றும் வரையறை கிடையாது; எல்லை கிடையாது.
அந்த உயிர்த் துடிப்புள்ள வழிபாடு நம் நாட்டில் பரவினால் உயிர்த் துடிப்புள்ள வழிபாடு வந்து விட்டால், எல்லா உயிரும் மகவென ஒக்கப் பார்க்கின்ற, பெருந் தன்மையான வாழ்க்கை வந்து விடும். எல்லா உலகத்திற்கும் தலைவனாக இருக்கின்றவன் கடவுள் என்ற பரந்த மனப்பான்மை கருக்கொள்ளும். அப்பொழுது உலகம் நெருங்கும். நிச்சயமாகச் சொன்னால், அரசுகளால், பொருளியல் முயற்சிகளால், விஞ்ஞானத்தால், உலகத்தை அன்பு வழியாக இணைக்க முடியாது போனாலும், சிறந்த ஆன்மீகம் உலகத்தை இணைக்கும். உலகத்தை இணைத்து, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற புதிய சமுதாயத்தை உருவாக்கும். இதைத்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, ‘தென்னாடுடைய சிவனாக இருக்கின்றவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாக’ இருக்கின்றான் என்று சொன்னார்கள். எந்நாட்டவர்க்கும் இறைவனாக இருக்கின்ற அந்தப் பரம்பொருளை நினைந்து, நினைந்து, நனைந்து நனைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து உணர்ந்து உணர்ந்து வழிபடுகிற வாழ்க்கையை நீங்கள் பெற வேண்டும்.
வழிபாடு என்பது இறைவனுடைய நெறியில் நிற்றல், வழிப்படுதல் என்பதை மறந்து விடக் கூடாது. குறைவிலாமையும் நீங்கள் பெற வேண்டும். பெறுதற்குரிய முயற்சியில் வழிபாட்டுநெறி நிற்க வேண்டும். அதற்குத் தாய்மொழி வழிபாட்டுநெறி நிறையத் துணை செய்யும். ஆன்மாவினுடைய தரத்தை உயர்த்திக் கொள்வதுதான் வழிபாட்டினுடைய நோக்கம். இந்த ஆன்மாவினுடைய தரத்தை உயர்த்திக் கொள்கின்ற பொழுது, நம்முடைய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களையும் தன்னுடைய ஆளுகைக்கு உட்படுத்தி, எதைப் பார்க்க வேண்டுமோ அதைப் பார்க்கச் செய்து, எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கேட்கச் செய்து, தன்னுடைய ஐம்புலன்களையும், ஐம்பொறிகளையும், உள்ளே ஆற்றலைச் சேர்க்கின்ற மடைகளாக வைக்க வேண்டும். ஒரு பொழுதும் போக்கு மடைகளாக அவற்றை மாற்றக்கூடாது. வாழ்க்கையிலே உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவிற்கு அறிவையும், ஆற்றலையும், அருளார்ந்த அனுபவத்தையும் சேர்க்கின்ற மடைகள்தான். உள்ளே கொண்டு வந்து குவிக்கின்ற மடைகள்தான், நம்முடைய மெய், வாய், கண், மூக்கு, செவிகள் ஆகும். இவை பல சமயங்களில் தரமற்ற வாழ்க்கையின் காரணமாக மனித ஆற்றலைப் புறத்தே விடுகின்ற மடைகளாக மாறி, உடலை என்புக் கூடுகளாக மாற்றிக் கொண்டு வருகின்றன. இந்தப் பொறிகள், புலன்களை நாம் அழுக்கு உடையனவாக இல்லாமல், அழுக்காறு உடையனவாக இல்லாமல், ஆக்கத்தின் பாற்பட்டதாகச் செய்கின்ற முயற்சி வேண்டும். யானை போன்று வாழ்வதைவிட, அதற்குரிய நுட்பப் புலன்களை நாம் பெற வேண்டும்.
அன்பு உயர்ந்தது என்று உலகத்தில் சொல்லப் பட்டாலும்; அறிவு மிக உயர்ந்தது. காரணம், அதுதான் காலத்தை வென்று நிற்பது; எல்லைகளைக் கடந்து நிற்பது, எப்பொழுதும் அன்பு காட்டுவதற்குத் துணையாக நிற்பது என்பதையும் நினைவூட்டி, நம்முடைய வாழ்க்கையில் தகுதியில்லாதவற்றைக் கண்டு மயங்கி நிற்பதற்குப் பதிலாக, தகுதியுடையன எவை என்று கண்டு அவற்றைப் போற்றி வாழ்கின்ற வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும். சிறந்த வாழ்க்கை என்பது நல்லதோர் வீணை எடுத்து மீட்டுவதைப் போல, நல்ல வீணை மீட்டுவதன் மூலம் எல்லோருக்கும் மகிழ்ச்சி. எல்லோரும் கேட்டு மகிழ்வார்கள், சமயவாழ்க்கை என்பது, வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவது. எப்படி நெல்லை நனைத்தும், காயப்போட்டும் பக்குவப் படுத்துகிறோமோ, அதேபோல, உயிர்களை அன்பிலே நனைத்துத் தொண்டினால் வருகின்ற துன்பத்தில் காயப் போட்டு, வாழ்க்கையைத் தரப்படுத்துங்கள்; தகுதிப் படுத்துங்கள்.
உலகம் இன்று விஞ்ஞானத்தால் இணைக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆன்மீக உலகத்தால், சமய உலகத்தால், மனித உலகத்தினுடைய இதயங்கள் இணைக்கப் படாமையின் காரணமாக, நீர்வாயுக்குண்டு என்ற அழிவு உலகத்தினுடைய உச்ச கட்டத்தில் வந்து நிற்கின்றது. அழிவு வாயிலிலிருந்து, மனித உலகத்தைக் காப்பாற்ற வேண்டியது ஆன்மீகத்தின் பொறுப்பு. சமயத்தின் பொறுப்பு. உலகம் அழிந்துபடாமல் கடவுளின் நெறியில் படைக்கவும், காக்கவும், காப்பாற்றவும் நாம் முயற்சிக்க வேண்டும். அந்த அழிவற்ற ஆற்றலை-சக்தியை நாம் ஒன்றியிருந்து வழிபாடு செய்வதன் மூலம், தமிழில் வழிபாடு செய்வதன் மூலம் நாம் பெற்று, நம்முடைய தரத்தையும், தகுதியையும் உயர்த்தி, உலகத்தை அமைதியாக வாழ்விப்போம் என்று கூறி, வாழ்த்தி விடைபெற ஆசைப்படுகிறோம்.
2. தமிழும், சமயமும், சமுதாயமும்
அன்புக்கும் பாராட்டுதலுக்கும் உரிய அருமை நண்பர் சண்முகவேல் அவர்களே! பெரியோர்களே! நண்பர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! இரண்டாவது சுற்றாக, கடல் கடந்து வாழ்கின்ற உங்களைப் பார்க்கவும், கலந்து பேசிப் பழகவும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், துணை செய்த திருவருளுக்கும், அந்தத் திருவருளுக்குக் கருவியாக நின்ற மகாமாரியம்மன் கோயிலைச் சேர்ந்த ஆலய நிர்வாகிகளுக்கும் ஏனையோருக்கும் என்னுடைய நன்றி, பாராட்டு! வாழ்த்துக்கள்!
பேரவையின் செயலாளர் அருமைக்குரிய நண்பர் பெருமாள் அவர்கள், பல நல்ல செய்திகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். நான் இப்பொழுது அந்தச் செய்தியில் நுழைய விரும்பவில்லை. கடைசியில், முடிக்கிறபொழுது நேரமிருந்தால், காலமிருந்தால், அதைத் தொடலாம் என்று நினைக்கிறேன். ஆனால், அவருடைய பேச்சிலிருந்து சில தலைப்புகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். காரணம், சில தலைப்புகளைத் தொடர்ந்து விளக்கினால், சில ஒளி பொருந்திய செய்திகள் நமக்குக் கிடைக்க முடியும் என்ற நம்பிக்கை பொதுவாக, என்னுடைய நல்லூழோ அல்லது எப்படியோ, எனக்குத் தெரியாது, என்னைப் பாராட்டுகிறவர்களிலேயே சில எதிரிகள் இருப்பார்கள். அவர்களுடைய நோக்கம் என்னைப் பாராட்ட வேண்டும் என்பதுதான். ஆனால், அந்தப் பாராட்டுரைகள் மற்றவர்களுக்கு, அதாவது என்னுடைய எதிர்ப்பாளர்களுக்கும் தீனியாக அமையும். நண்பர் பெருமாள் அவர்கள் அந்தத் திருப்பணியை இன்றைக்குச் செய்திருக்கிறார்கள். அதுவும் நண்பர் சண்முகவேல் அவர்கள்-அவருடைய வீட்டில் வைத்துச் சொன்ன பிறகும் கூட-அதை அவர்கள் செய்திருக்கிறார்கள்.
சென்ற தடவை நான் இங்கே வந்தபொழுது, தமிழுக்கு வித்திட்டுப் போனேன்; தமிழுக்காக வந்தேன் என்று சொன்னார்கள். தான் சென்ற தடவையும் மலேசியா வந்த பொழுது, சமயத்திற்காக வந்தேன்; சமய அமைப்புகள் அப்பொழுது யாதொன்றும் இல்லை. இப்பொழுது அந்தச் சமய அமைப்புகள் எல்லாம் தோன்றிச் சமயம் செழித்து வளர்கிறது. நான் சென்றமுறை வந்த பொழுது இல்லாத திருமுறை இயக்கங்கள் வலிமை பெற்று வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, பல்வேறு நல்ல சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. சென்ற தடவை பல நகரங்களில் என்னுடைய கருத்துக்கு உடன்பாடு இல்லதவர்கள், என்னை வினாக்கள் கேட்டுத் திக்குமுக்காட வைத்தனர். பல இடங்களில் அந்த வினாக்களுக்கெல்லாம் பதில் சொல்லிப் போனேன். நண்பர் சண்முகவேல் அவர்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், இப்பொழுது வினாக்கள் கேட்பவர்கள் எல்லாம் நான் என்ன சொல்லுகிறேன் என்று கேட்கிற அளவுக்கு, மனம் மாறி இருக்கிறார்கள்; வளர்த்திருக்கிறார்கள். இது நாட்டினுடைய வளர்ச்சிக்கும் ஒருவருடைய தொண்டுக்கும் அடையாளமாக இருப்பது. நான் தமிழுக்காக வந்தேன் என்று சொன்னால், அடிகளார் தமிழுக்காகத்தான் பாடுபடுவார், சமயம் அவருக்கு இரண்டாந்தரந்தான் என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள். ஆகையினால் அப்படியொரு, மனப் போக்கை உண்டாக்கி விடக்கூடாது.
தமிழ் உயர்ந்ததாக இருக்கிறது என்பதற்காகத்தான் தமிழை நாம் நேசிக்கிறோம். தமிழ் என்னுடைய தாய் மொழியாக இருக்கிற ஒரே காரணத்திற்காக, தெரிந்தோ, தெரியாமலோ அல்லது விபத்தின் காரணமாகவோ, தமிழ் மொழி பேசுகிற ஒரு குடும்பத்தில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற ஒரு குடும்பத்தில் பிறந்துவிட்டேன் என்பதற்காக நான் தமிழை நேசிக்கவில்லை.
அப்படி ஒரு குறுகிய நோக்கமும் அதற்குக் காரணம் அல்ல. பொதுவாக உலகில் பல மொழிகள் உண்டு. எல்லா மொழிகளும் மக்களிடத்தில் கருத்தை வளர்க்கவும், கருத்துப் பரிமாற்றங்களைச் செய்யவும்தான் தோன்றின; ஆனால், உலகத்தில் தோன்றிய பல்வேறு மொழிகளை விட, தமிழ் பல துறைகளில் உயர்ந்ததாக இருக்கிறது; செழுமை வாய்ந்ததாக இருக்கிறது. அதற்கு இருக்கிற நீதித் தன்மையும், அறநெறித் தன்மையும் உலகில் இருக்கிற வேறு எந்த மொழிக்கும் வாய்க்கவில்லை என்பதுதான் நான் தமிழை நேசிப்பதற்கு உரிய மிகுதியான காரணம் என்று கூற ஆசைப்படுகிறேன். அது என் தாய் மொழியாக இருப்பது என்பது ஒரு காரணம். அதற்கு ஓர் இருபத்தைந்து விழுக்காடுதான் மதிப்பெண் கொடுக்கலாம். அது என்னுடைய தாய்மொழியாக இருப்பதின் காரணமாக எளிதாகப் பேச, எளிதாக நினைக்க, எளிதாகச் சிந்திக்கத் துணை செய்கிறது என்பதற்கு ஓர் இருபத்தைந்து விழுக்காடு கொடுக்கலாம். ஆனாலும், ஐம்பது விழுக்காடு நான் தமிழினிடத்திலே பற்றாளனாக இருப்பதற்குக் காரணம், தமிழ்மொழி வளர்ந்த முறை தமிழ் வளர்த்த நாகரிகம், தமிழ் வளர்த்த மரபு, தமிழ் வளர்த்த சிறந்த பண்பாடுதான் காரணம். தெளிவாகச் சொன்னால், ஆல்பர்ட் சுவைட்சர் என்ற ஆங்கிலப் பேரறிஞன், ‘உலகில் இருக்கிற நீதி இலக்கியங்களிலேயே, தமிழில் இருக்கிற திருக்குறளைப் போல ஒரு நீதி இலக்கியம், வேறு எந்த மொழியிலும் உலகத்தில் நான் பார்த்ததே இல்லை’ என்று சொன்னான். ஆக, என்னுடைய அன்னைத் தமிழ் வெறும் மொழியாக மட்டும் வளரவில்லை; வெறும் சொற்குவியலாக மட்டும் வளரவில்லை; சொல்லும் பொருளுமாக, பொருளின் பயனுமாக நடமாடுகின்ற ஒரு பெரிய நாகரிகப் பெட்டகம் என்பதுதான் தமிழ்ப் பற்றுக்குக் காரணமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
எதிர்பாராத காரணமாகச் சில சமயப் பற்றாளர்கள் தமிழுக்கு எதிர்த் திசையில் இருப்பதின் காரணமாகவே, தமிழுக்கும் சமயத்திற்கும் தொடர்பில்லை என்று யாரும் கருதிவிடக் கூடாது. தெளிவாகச் சேக்கிழார் சொல்லுகிறார். திருஞானசம்பந்தருடைய வரலாற்றைப் பாடுகிறார் பெரிய புராணத்தில்! மதுரை நகரத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளியிருக்கிறார். அயல் சமயத்தோடு போர் நிகழப் போகிறது. தம்முடைய சமயத்தையும், தம்நாட்டுப் பண்பையும் நிலை நாட்ட வேண்டிய பொறுப்பு திருஞான சம்பந்தருக்கு வந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சேக்கிழார் விவரிக்கிற பொழுது, 'செழுந்தமிழ் வழக்கு, அயல் வழக்கின் துறைவெல்ல' என்று சொன்னார். ஆக, சைவம் என்று சொல்லாமல், சித்தாந்தச் சமயம் என்று சொல்லாமல், இந்து சமயம் என்று சொல்லாமல், 'செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கின் துறை வெல்ல' என்று சேக்கிழார் வருணிக்கின்றார். ஆக, சைவம் என்று சொன்னாலும், சமயம் என்று சொன்னாலும் அது ஒரு செழுந்தமிழ் வழக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அது 'செழுந்தமிழ் வழக்காக' ஒரு காலத்தில் இருந்தது.
திசையனைத்தின் பெருமையெலாம்
தென்றிசையே வென்றேற
வேண்டும் என்றும் சேக்கிழார் பாடுகிறார். அந்தத் துறையில் தமிழை நேசிக்கிறோம் என்று, சொன்னால், ஏதோ நூற்றுக்குச் சில விழுக்காடு தமிழ்ப் பற்றாளர்கள் சமயப் பற்றாளர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களைக் கூட அறிஞர் அண்ணா அவர்களைக் கூட தமிழ் மந்திரம் திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம், 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்ற கருத்து, கொள்கை, கோட்பாடு, ஈர்த்துத் தன்னிடத்திலே ஆட்படுத்தியதால், அவர்கள் மீண்டும் தமிழகத்தில்-மக்கள் மன்றத்தில், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையை வைத்தார்கள். அவர் பிறந்து வளர்ந்த பாசறை ‘கடவுள் இல்லை’ என்று சொல்லுகின்ற பாசறை. அது நெடிய காலத்திற்குத் தமிழகத்திற்கு எந்த அளவுக்கு ஒத்துவரும், என்ற நம்பிக்கை அண்ணா அவர்கட்குக் குறைவாக இருந்து அதன் காரணமாக, அதிலிருந்து வந்த பொழுது ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பது நம்முடைய ஆன்றோர் கொள்கை, இந்த நெறியை நாம் பின்பற்ற வேண்டும் என்று தெளிவாகவும், துணிவாகவும் தம்முடைய தம்பிகளுக்கு அவர் வைத்தார் என்று சொன்னால், அந்த நெறியைக் கூடத் தந்தது செழுந்தமிழ் வழக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, தமிழைச் சொல்ல வந்தேன் என்று சொன்னால் அதனோடு சமயம் என்பதையும் சேர்த்து நண்பர் பெருமாள் அவர்கள் சொல்லியிருந்தால் கொஞ்சம் பாதுகாப்பாக இருந்திருக்கும். எனவே, செழுந்தமிழ் வழக்கு என்று சொன்னால், அது ஒரு சைவம், அது ஒரு சமயம் என்று பொருள்.
உலகிலேயே இன்றைக்கும். கூட எடுத்துக் கொண்டாலும் உலகப் பொதுமொழி என்று பேசப்படுகிற ஆங்கிலமானாலும் சரி, மொழிக்கு இலக்கணம் உண்டு; சொல்லுக்கு இலக்கணம் உண்டு. ஆனால் மனிதர்கள் வாழுகிற நெறிக்கு இலக்கணம் உலகத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லை. இங்குதான் தொல்காப்பியன் முதன்முதலாக வாழ்க்கைக்கும் இலக்கணம் செய்தான். வாழ்க்கைக்கு இலக்கணம் கண்ட அதுவும் இன்றல்ல, நேற்றல்ல-மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு இலக்கணம் கண்ட பெருமை, நம்முடைய தமிழுக்கு உண்டு என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும் என்பது என்னுடைய விழைவும், விருப்பமும் கூட ஆக, ஒருவனும் ஒருத்தியுமாக மனையில் கூடி வாழ்கின்ற வாழ்க்கைக்கு, அகத்திணை என்றும், அவர்களே சமூகத்தில் கொள்கின்ற உறவுகளுக்கும், பொருள் செயல் வகைக்கும், செருக்களங்களுக்கும், ஆட்சிக்கும் அரசியலுக்குமாகப் ‘புறத்திணை’ என்றும், இரண்டு இயல் இலக்கணங்களை நம்முடைய நாடு கண்டது. தொல்காப்பியர் காலந்தொட்டு நம்முடைய மொழி வளர்ந்த மொழி. தொல்காப்பியம் இலக்கணம் என்பதை மறந்துவிடக் கூடாது. உலகில் சாதாரணமாக, மொழி வரலாற்று அறிஞர்கள் சொல்வார்கள். இலக்கியத்திற்கு இலக்கணம் செய்வார்களே தவிர, இலக்கணத்திற்கு இலக்கியம் செய்கிற பழக்கம் இல்லை என்று. ஆக, இலக்கணம் தோன்றுவதற்கு முன்பு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு ‘செழுந்தமிழ்’ இலக்கிய மரபு தமிழில் தோன்றி மலர்ந்திருக்க வேண்டும்.
தமிழனுடைய வரலாற்றுத் தொன்மை மிகப் பன்னெடும் நாட்களுக்கு அப்பால் செல்கின்றது. கடல் கொண்ட, குமரி நாட்டில், மதுரை நகரத்தைப் போன்ற மிகப் பெரிய திருக்கோயில் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதல் தமிழ்ச் சங்கமே இன்றைக்கிருக்கும் மதுரையில் இருந்ததன்று. முதல் தமிழ்ச் சங்கம் கடல் கொண்ட தென்குமரி நாட்டில் நடந்தது. அந்தத் தென்குமரி நாட்டில் பல்யாகாசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் ஒருவன் ஆண்டிருக்கிறான். அவன் வேறு யாருக்கும் தாழாதவன்; எந்த அரசுக்கும் தாழாதவன் ஆனால், சங்கச் சான்றோர்கள்-முது தமிழ்ப் புலவர்கள் அவனுடைய குடையைப் பார்த்து, ‘யாருக்கும் உன்னுடைய குடை தாழாது போனாலும், முக்கட் செல்வன் நகர்வலம் செயற்கு உன்னுடைய குடை தாழ்க’ என்று சொன்னார்கள். ஆக, எங்கும் தாழாத கொற்றக்-குடைகள்-வெற்றிக் குடைகள், எங்கும் தாழாது இருக்கின்ற முக்கட் செல்வனாகிய சிவபிரான் திருக்கோயில் முன்னாலே தாழ்ந்தன என்று சங்க இலக்கியம் பேசுகிறது. எனவே, தமிழர் வாழ்வோடு ஒட்டி வளர்ந்தது சமயம் தமிழோடு வளர்ந்து நின்றது சமயம் என்பதைத் தயவு செய்து மறந்து விடக் கூடாது. ஆகவே என்றைக்குத் தமிழிலிருந்து சமயத்தைப் பிரிக்கிறோமோ, அல்லது சமயத்திலிருந்து தமிழைப் பிரிக்கிறோமோ, அன்றைக்கு இரண்டுக்கும் அதில் விபத்து ஏற்படும் என்பதை நான் உணர ஆசைப்படுகிறேன்; உணர்த்தவும் ஆசைப்படுகிறேன்.
மொழி வாயில் என்பதே ஒரு நாகரிகத்தை ஊட்டுவதற்காக, வளர்ப்பதற்காகத்தானே தவிர, மொழி ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்காக மட்டுமன்று. இந்தத் துறையில், தமிழ் இலக்கியத்திலே நான் வரிசைப்படுத்திக் கொண்டு போனால், ஏராளமான சான்றுகளை என்னால் சொல்ல முடியும் ஒளவைப் பாட்டியார் இருக்கிறார். சாவா மருந்தாகிய நெல்லிக்கனி கிடைத்தது அதியமானுக்கு! இன்றைக்கு யாருக்குத்தான் சாகப் பிரியம். நிறையப் பேர் இன்றைக்குச் ‘சாக வேண்டாம்’ என்ற நினைத்தாலும் சாவு வருகிறது. சிலபேர் செத்துப் போக வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்; சாவு வரமாட்டேன் என்கிறது என்பர். சில பேர் பொய்ம்மையாகச் சொல்லுகிறார்கள், செத்துப் போனால் தேவலாம் என்று. ஆனால், அதியமானுக்கு ஒரு நெல்லிக் கனி கிடைத்தது. சாவைத் தடுக்கும் நெல்லிக்கனி, அதை உண்டால் பன்னெடுங்காலம் வாழலாம் என்று சொல்லுகிறார்கள். ஆனால், மண்ணை ஆளுகின்ற ஓர் அரசன் வாழ்வதைவிட, மாத்தமிழை ஆளுகின்ற ஒரு கவிதை மூதாட்டி-ஒளவைப் பாட்டியார் வாழ்வது, நாட்டிற்கு நலன் தரும் என்ற நம்பிக்கையால், ஒளவைப் பாட்டிக்குக் கனியினுடைய இரகசியத்தைத் தெரிவிக்காமலேயே அதியமான் கொடுத்து விடுகிறான். அவள் வாங்கி உண்கிறாள். அதற்குப் பிறகு இந்தக் கனி உண்டவர்கள் நெடுநாள் வாழ்வார்கள் என்று சொல்லுகிறான் அதியமான். ஆக, ஒரு மண்ணை ஆளுகின்ற அரசன், தான் வாழ்வதைவிட, மாத்தமிழை வாழ்விக்கிற ஒரு கவிதைச் செல்வி, கவிதை அரசி, வாழ்வது பெரிது என்ற கருத்தில் கனியைக் கொடுக்கிறான். உடனே அம்மையார் பாடுகிறார்கள். எவ்வளவு அருமையான கற்பனை வளம் என்று பாருங்கள்.
நம்முடைய சிவபெருமானுக்குத் ‘திருநீலகண்டர்’ என்று ஒரு பெயர் உண்டு. இந்தக் கண்டம் கருத்திருக்கும். கருத்த கண்டத்திற்கும் ‘கருமைக் கண்டம்’ என்று திருமூலர் பெயர் சொல்வார். நம்முடைய நாட்டில் மட்டுமல்ல; மனித உலகத்தில் மட்டுமல்ல; தேவர் உலகத்திலே கூட தலைவர் நாற்காலிகளுக்குப் போட்டி அதிகம். அதற்கு ஏராளமான கீழறுப்பு வேலைகள்; மேலறுப்பு வேலைகள், சூழ்ச்சிகள், தந்திரங்கள். இவைகள் தேவர்களிடத்தில் இருந்து நாம் கற்றக் கொண்டவையா? அல்லது மனிதர்களிடத்தில் இருந்து தேவர்கள் கற்றுக் கொண்டவையா? எனக்குத் தெரியாது. மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். எனவே இந்தப் போட்டிகள் அங்கு மிகுதியாக ஏற்பட்டு, எல்லா நாற்காலிகளும், எல்லா மரியாதைகளும், சிவபெருமானுக்கே போகிறது என்று கவலைப்பட்ட தேவர்கள் உண்டு. எனவே, ஒரு காலத்தில் இதற்கு ஒருசோதனைக் காலம் வந்தது. தலைவர்களுக்கு வருகிற சோதனை என்னவென்று நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு வருகிற சோதனையெல்லாம், இடர்ப்பாடுகள் வருகிற பொழுது தலைமையில் நிற்கப் பிரியப்படுகிறார்களா என்பதுதான். தொல்லைகள் வருகிற பொழுது தன்னுடைய தலையைக் கொடுத்தும் அந்தத் தொல்லைகளிலிருந்து இந்தச் சமுதாயத்தைக் காப்பாற்ற விரும்புகிறார்களா என்பதுதான் தலைவனுக்குரிய சோதனை; வேறு ஒன்றும் இல்லை.
அசுரர்களும், அமரர்களுமாகச் சேர்ந்து பாற்கடலைக் கடைகிறார்கள். கடைகிறபொழுது முதன் முதலில் நஞ்சு தோன்றுகிறது. நஞ்சு தோன்றியவுடனே அமரர்கள் மொத்தமாக ஓடுகிறார்கள். நாற்காலியை விரும்பி வந்து உட்கார்ந்தவர்கள் வேள்விகளை விரும்பி வந்து அவிப் பொருளை வாங்கியவர்கள், இப்பொழுது இருந்த இடம் தெரியாமல் ஓடுகிறார்கள். எல்லாருமாகச் சேர்ந்து சிவபெருமானிடம் ஓடி ‘ஐயோ ஆல கால நஞ்சு வந்து விட்டது’ என்று அலறுகிறார்கள். பெருமான் பார்த்தார். சிரித்த முகத்தோடு இந்த அமரர்கள் அசுரர்கள் வாழட்டும் என்ற பெருமிதத்தோடு, அந்த நஞ்சை வாரி உண்கிறார். வாழ்க்கைத் துணை நலமாக அமைகிறவளின் கடமை தன்னுடைய கணவன், துணைவன் சாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது; எந்தவிதமான சோதனைகள் இருந்தாலும் அவள் தொடர்ச்சியாகத் தன் தலைவனுடன் இருக்க வேண்டும்; நிழல் போல இருக்க வேண்டும். இது நம்முடைய பெரிய புராண வரலாற்றில் மட்டுமன்றி, இறைவன் இறைவி வரலாற்றிலும் பார்க்கிறோம். உண்ட நஞ்சு தொண்டைக்குள் இறங்குகின்ற நேரத்தில், உமையம்மை ஓடி வந்து, கழுத்தைப் பிடிக்கிறாள். பிடித்ததின் காரணமாக நஞ்சு அங்கே தங்கி விட்டது. அது நீலகண்டம் ஆயிற்று கருத்த கண்டம் ஆயிற்று கருணைக் கண்டம் ஆயிற்று. உடனே அமுதம் தோன்றியது. சிவபெருமான் எங்கே? என்று தேடிப் பார்ப்போரையே காணோம். தெளிவாகச் சொன்னால் சிவபெருமானை மறந்து கூடப் போய்விட்டார்கள் போல் தெரிகிறது. அமுதம் தோன்றியவுடன் எல்லாரும் ஓடிப் போய் அமுதத்தை உண்ண ஆரம்பித்தார்கள்; குடிக்க ஆரம்பித்தார்கள்.
இளங்கோவடிகள் இந்த அருமையான கற்பனையை நினைத்து நினைத்து மகிழ்ந்து பாடுகிறார்.
விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும் உண்ணாத
நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய்
என்கிறார். சாவா மருந்தைச் சாப்பிட்டவர்கள் எல்லாம் செத்துப் போனார்கள். சாவதற்கே உரிய நஞ்சைக் குடித்தும் நீ வாழ்கிறாய் என்று சொன்னால் அது இறைவன் என்கிற ஒரு காரணத்தினால் மட்டும் இல்லை. இறைவனுக்கு இருக்கின்ற சில குணங்கள், சில இயல்புகள்தான் காரணம். தாம் வாழ்வதைவிட மற்றவர்கள் வாழ்வது பெரிது என்று நினைக்க வேண்டும். அப்படி வாழ்கிற வாழ்க்கைதான் பெரிய வாழ்க்கை. அதே மாதிரி சாதனையை மனிதனும் முயன்றால் செய்ய முடியும்.
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்
என்பது திருக்குறள்.
எதிரே ஒருவர் இருக்கிறார். நட்டவன் போல இருக்கிறார். நண்பர் போல இருக்கிறார். பழகினவராக இருக்கிறார்; அவரே கொண்டு வந்து நஞ்சை வைக்கிறார். அது நஞ்சு என்றும் தெரிகிறது. திருவள்ளுவரைப் பார்த்து, “இவர் நஞ்சை வைத்திருக்கிறாரே! அதுவும் என்னோடு பல காலம் பழகிய நண்பர் பெருமாள் வைத்திருக்கிறாரே! ஒருங்கிணைப்புச் செயலாளர் வைத்திருக்கிறாரே, குடிக்கலாமா? வேண்டாமா?” என்று திருவள்ளுவரைக் கேட்டால், ‘குடி’ என்று சொல்லுகிறார். ‘நீ நஞ்சைக் குடி, நீ நிச்சயமாகச் சாகாமல் வாழ்வாய்’ என்று சொன்னார். என்ன? என்று கேட்டால் விளக்கம் சொல்லுகிறார். உலக நாடுகளிலே கிரேக்க நாட்டிலே அறிவு தோன்றியது. ‘அறிவினாலே சிந்தித்துப் பார்’ என்று சொன்னான் கிரேக்க அறிஞன். ‘எதையும் கண்மூடித் தனமாகச் செய்யாதே. அறிவினால் ஆய்ந்து செய்’ என்று சொன்ன ஒரே குற்றத்திற்காக அன்றைக்கிருந்த முட்டாள் உலகம், அந்த அறிஞனுக்கு உலக மேதைக்கு நஞ்சைக் கொடுத்துச் சாகடித்தது. அவன் பெயர் சாக்கரடீஸ் - கேள்விப்பட்டிருப்பீர்கள். அவனுக்கு நஞ்சு கொடுத்தபொழுது, அவன் நஞ்சை வாங்கிக் குடித்தான். தைரியமாகக் குடித்தான்; பண்பாட்டோடு குடித்தான்; ஆனால் செத்துப் போனான். ஆனால், தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டில் அப்படி ஒரு ஞானத் தலைமகனுக்கு நஞ்சு கொடுத்தது அந்த நாடு. ஏழாம் நூற்றாண்டில் இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தில் ஒரு ஞாயிற்றொளி நடமாடியது. அந்த ஞாயிற்றொளி நடமாட்டத்தினால், அந்த நாடு முதுகெலும்பு பெற்றது என்று கூடச் சொல்லலாம். வீறு தமிழ் அந்த நாட்டில் நடைபோட்டது.
நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை
என்றார். ஒரு பெரிய அருள்ஞான முழக்கத்தை அந்த உருவம் செய்தது. அவர் பெயர் அப்பரடிகள். அவருக்கும் அந்தக் காலச் சமுதாயம் நஞ்சைக் கொடுத்தது. ஆனால், அப்பரடிகள் நஞ்சைக் குடித்தார்; மகிழ்ச்சியோடு குடித்தார். தயவுசெய்து மறந்து விடாதீர்கள்; சாக்கரடீஸ் செத்தது போல அப்பரடிகள் சாகவில்லை. காரணம், சாக்கரடீஸ் தோன்றிய நாட்டில் நஞ்சு குடித்தும் வாழ்வதற்குரிய கலையைக் கற்றுக் கொடுக்கிற வள்ளுவர் தோன்றவில்லை. தமிழ் நாட்டில் திருவள்ளுவர் தோன்றியிருந்தார்; நஞ்சைக் குடித்தும் வாழ முடியும் என்ற ஒரு நயத்தக்க நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்திருந்தார். அந்த வழியில் அப்பரடிகள் குடித்தார். என்ன கலையோடு, என்ன உணர்வோடு நஞ்சு குடித்தால் வாழலாம் என்று சொன்னால், நஞ்சு வைத்திருக்கிறார் இந்தப் பெருமாள் என்பது நான் அறிந்து கொண்டு விட்டேன்; அது நஞ்சு என்பதைத் தெரிந்து கொண்டு விட்டேன். தெரிந்தும், பெருமாளுக்கு நான் அறிந்தது தெரியாமல் அதை நான் குடிக்க வேண்டும். அது நஞ்சு என்று தெரிந்து கொண்டு விட்டேன் என்று சொன்னால், உடனே மனதில் தோன்றுகிற எண்ணம். முகத்தில் படரும் ஒருவித மரண பயம் முகத்தில் தோன்றி, மரண பீதி என்னைப் பிடித்து ஆட்டும். அப்படி ஆட்டுவதைப் பார்த்துப் பெருமாள் ‘ஐயோ! நாம் நஞ்சு வைத்திருக்கிறோம்’ என்ற செய்தியைத் தெரிந்து கொண்டு விட்டாரே, இந்தச் செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லிவிட்டால் என்ன ஆகுமோ? சண்முகவேல் என்ன செய்வாரோ, என்றெல்லாம் எண்ணிப் பார்க்கும்படி இல்லாமல் யாதொன்றும் இல்லாததுபோல, நல்ல தூய்மையான பாலை வைத்திருப்பதைப் போல, நினைந்து, மகிழ்ந்து குடித்தால், நீ சாவாய் என்று சொல்ல மாட்டேன்; வாழ்வாய் என்ற பொருளில் ‘பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர்’ என்று சொன்னார்.
காரைக்கால் அம்மையார் அதைத்தான் சொல்வார்,
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்
என்று. ஆரம்ப காலம் தொட்டு நம்முடைய நெஞ்சு நல்லதல்லாததை நினைக்காமல் நம்முடைய நெஞ்சு நன்மை! நன்மை! நன்மை! என்று நின்னத்திருக்குமானால், நம்முடைய செங்குருதி தூய்மையாக இருக்கும். அந்தத் துாய்மையான இரத்தம் யாருடைய உடலில் ஒடுகிறதோ, அந்தத் தூய்மையான இரத்தத்தினால் நஞ்சை எடுத்துத் தின்று சீரணித்துவிட முடியும். யாருடைய உள்ளம் நன்று என்று நினைக்காமல் தீமைகளையும் சூதுகளையும், பிணக்கையும், பகைமைகளையும் வேற்றுமைகளையும், நினைக்கிறதோ, அவருடைய உடம்பில் ஓடும் இரத்தம், கெட்டுக் குட்டிச்சுவராகி, அது சாக்கடையைப் போல ஆகிவிடுகிறது. யாருடைய உடம்பில் தூய்மையான இரத்தம் ஓட வில்லையோ, அங்கே நோயும் இருக்கிறது. யாருடைய உடம்பில் தூய்மையான இரத்தம் இல்லையோ, அந்த உடம்பின் நஞ்சு சேர்ந்தால், அந்த உடம்பைக் கொல்கிறது. எங்கே தூய்மையான செங்குருதி ஓடுகிறதோ, அந்தச் செங்குருதி, உலகத்தின் எல்லாத் தீமைகளையும் எடுத்துச் சீரணிக்கிற சக்தி உடையது என்பது வள்ளுவர் கொள்கை; கோட்பாடு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய நாட்டில் ஒளவைப் பாட்டியார் பார்க்கிறார். இந்த இறைவன் இருக்கின்றானே திருநீலகண்டன், மற்றவர் நஞ்சு குடிக்க முடியாமல் தவித்தபொழுது நஞ்சைக் குடித்தான். மற்றவர்களுக்கெல்லாம் அமுதத்தைக் கொடுத்தான்; எனக்கு என்ன தோன்றுகிறது என்று சொன்னால்,
நீ நீலமணி மிடற்றொருவன் போல
மன்னுக! பெரும நீயே
அந்தத் திருநீலகண்டன் எப்படிச் சாகாமல் வாழ்கின்றானோ, அதேபோல நீயும் சாகாமல் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறாள். இது சங்ககாலப் பாட்டு, புறநானூற்றுப் பாட்டு, நல்ல தமிழ்ப் பாட்டு என்பதை மறந்து விடக் கூடாது. இப்படி ஏராளமான சான்றுகள் உண்டு நம்முடைய தமிழ், சமயத்தோடுவளர்ந்தது என்பதற்கு. எனவே சமயம், தமிழை வளர்த்தது; தமிழ் சமயத்தை வளர்த்தது.
அதனால்தான் ஏழாம் நூற்றாண்டில் நம்முடைய சிவ பெருமானே வழிவழியாகத் தமிழ் கேட்கிற மரபுக்கு மாறாக வழி வழியாகத் தமிழ் கேட்கிற ஆவலுக்கு மாறாக, பிற மொழிகளின் நுழைவுகளை அவர் நினைத்து சகித்துக் கொள்ள முடியாமல், நாளும் இன்னிசையால், தமிழ் கேட்கும் இச்சையால், காசு நித்தம் நல்கினார். பெருமான் தமிழோடு இசை கேட்கும் இச்சையால், காசு நித்தம் கொடுத்தார் என்று சொன்னால், இறைவனே காசு கொடுத்துத் தமிழ் இசை கேட்க வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது என்று சொன்னால், அன்றைக்குத் தமிழுக்கு மாறான, தமிழ்நெறிக்கு மாறான, தமிழ் இயலுக்கு மாறான ஒரு சமய ஊடுருவல், தமிழகத்தில் நிகழ்ந்திருக்கிறது. திருஞானசம்பந்தருடைய தேவாரம், சுந்தரருடைய தேவாரத்தைப் படித்தால் வரலாற்றுக் குறிப்புகள் நமக்குத் தெளிவாகின்றன. எந்த ஊரில் இருந்து சொல்கிறார்? எந்த ஊரில் கிளிகள் வேதங்கள் சொல்லுமோ, எந்த ஊரில் கிளிகள் மரங்களில் இருந்தவாறு வேதங்களைச் சொல்லி முழங்குமோ, அந்த ஊரில் இருக்கும் இறைவன், 'தமிழோடு இசை கேட்கும் இச்சையால், காசு நித்தம் நல்கினார்' என்று சொன்னார்.
அது மட்டுமன்று. பல்வேறு இடங்கள்; செல்வியர் அருமையான திருவாசகப் பாட்டு, இறைவணக்கமாகப் பாடினார்கள்.
பண்சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
என்ற பாடலைப் பாடினார்கள். இறைவன் மண்புகுகிறான்; மண் சுமக்கிறான். இந்த நாட்டிலே இருக்கிற சமுதாய அமைப்பைப் பார்க்க வேண்டும். சமயமும், சமுதாயமும் ஏதோ நாம் சேர்த்து வைக்கின்ற பொருள்கள் அல்ல. நம்முடைய பழந்தமிழகத்தில் சமயம் வேறு, சமுதாயம் வேறன்று. தமிழ் வேறு, சமயம் வேறன்று.
வைகை ஆற்றிலே பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீட்டிற்கு ஓர் ஆள் அடைக்க வர வேண்டும். ஏழைப் பிட்டு வாணிச்சி ஒருத்தி இருக்கிறாள். பிட்டு விற்று வயிறு வளர்க்கிறாள். அவளுக்கு வீட்டிலே பிள்ளை இல்லை; ஆண் மகன் இல்லை; கூலிக்கு ஆள்பிடிக்கக் காசு இல்லை; அழுகிறாள்; புலம்புகிறாள். எனவே, தனி ஒருத்தியாக அரசனுடைய ஆணைக்கு ஆள் அனுப்ப முடியாமல் ஒரு பெண் வருந்தினாள் என்பதற்காக, மாணிக்கவாசகருடைய வருத்தத்தையும் இந்தப் பிட்டு வாணிச்சியினுடைய வருத்தத்தையும் ஒரு சேர நீக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இறைவனே மண்ணுக்கு வருகிறான்; மண்ணைச் சுமக்கிறான். பிட்டுத் தின்கிறான்; வேலையைச் சரியாகச் செய்யாதது போல் நடிக்கிறான். சிலர் நாடகத்தில் சில குறிப்புகளை நாம் உணர வேண்டும். தாய், குழந்தையிடம் ஒளிந்து காட்டுகிறாள் என்றால், குழந்தையிடம் இருந்து ஒளிய வேண்டும் என்பது தாய்க்கு நோக்கம் இல்லை. தேடுவதன் மூலம் மூளை வளர்கிறதா என்று பார்க்கிறாள். தெருவிலே விளையாடுகின்ற குழந்தையைப் போக்குக் காட்டி விட்டுத் தாய் ஓடி ஒளிந்து கொள்வாள். குழந்தைக்குத் தாயைத் தேடுகின்ற முனைப்பு இருக்கிறதா? பற்று இருக்கிறதா? அதைத் தேடுகிற கூர்மையான புத்திசாலித்தனம் இருக்கிறதா? இவற்றை யெல்லாம் சோதனை செய்வதற்காகத் தாய் விளையாடுகிறாளே தவிர வேறு அல்ல. குழந்தை அழுகிறது என்று சொன்னால் இதோ பார்! இந்தப் பாவித் தாய் குழந்தையினிடத்து கூட வெளிப்படையாக இல்லாமல், ஒளிந்து விளையாடுகிறாளே என்று சொல்லக்கூடாது. அதுபோல ஒளிந்து விளையாடுவது என்பதும் இறைவனுடைய கருணைகளில் ஒன்று. எனவே அவன் வேலை சரியாகச் செய்யாதது போல் நடிக்கிறான். நம்மில் பலர் அப்படி நடிக்கிறோம். நாம் நம்முடைய கடமைகளைச் சரியாகச் செய்யாமல், வாழ்க்கையின் நியதிகளை ஒழுங்காகப் பின்பற்றாமல், நமக்கென்று நியமிக்கப்பட்ட கடமைகளை முறையாகச் செய்யாமல், நாம் சமூகத்தை ஏமாற்றுகிறோம். எனவே யார் கடமையை ஒழுங்காகச் செய்யவில்லையோ, அவர்களை அரசு ஒறுக்கும் என்கிற ஒரு பண்பாட்டை, நியதியை உலகுக்கு உணர்த்துவதற்காக இறைவன் கடமைகளைச் சரியாகச் செய்யாதவன் போலக் காட்டுகிறான். அரசன் அடிக்கிறான்; இறைவன் புண் சுமக்கிறான். பண் சுமந்த பாடலுக்காக என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய காட்சி! அதில் என்ன நடந்தது என்று பாருங்கள்! நாம் என்ன வரலாற்றையா பின்பற்றுகிறோம். நாயன்மார்களையா பின்பற்றுகிறோம்! சிவபெருமானையா பின்பற்றுகிறோம்!
கடவுளை வழிபடுதல் என்று சொன்னால், கடவுள் எதை விரும்புகிறாரோ, நாமும் அந்த நெறியில் நிற்றல் என்பதுதான் நியதி. அதற்குப் பொருள், வழிப்படுதல் என்பதுதான்! இந்த வழியே சென்றால், நிறைய உதவிகளைப் பெறலாம். எந்த வழியை? இறைவன் எந்த வழியைக் காட்டினானோ, அந்த வழியை! இறைவன் நமக்கு என்ன வழி காட்டினான்? பிட்டும் தின்றான். மண்ணும் சுமந்தான். இன்றைக்கு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? பிட்டு மட்டுமே தின்று கொண்டிருக்கிறோம். மண் சுமப்பதற்கு யாருமே வருவதில்லை.
தமிழ்நாட்டுத் திருக்கோயில்களிலே பல திருக்குளங்கள் தூர்ந்து போயின; பல திருக்குளங்கள் இடிந்து கொண்டிருக் கின்றன. ஆண்டுக்கு ஒரு நாள் எல்லா சைவ அடியார்களும் மண் சுமக்க ஆரம்பித்தால், ஒரு திருக்குளத்தில் கூடப் பச்சைப் பாசி இருக்காது; வழுக்காது. அன்றைக்குச் சுந்தரர் பாடினார்.
வழுக்கி விழினும் நின்றிருப்பெயர் அல்லால்
மறுவார்த்தை அறியேன்
என்று. இந்த வழுக்கல் என்பது சமுதாய வழக்கல். ஒழுக்கத் தவறுகள். ஒழுகத் தவறுதல். ஆனால், இன்றைக்கு என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ‘வழுக்கி வீழினும்’ என்று சொன்னால், பாசியில் வழுக்கி விழுந்தாலும், ‘நின் திருப்பெயர் அல்லால் மறுவார்த்தை அறியேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் பண்சுமந்த பாடல் பரிசுபெற என்று வருகிற பொழுதும், நண்பர்களுக்குத் தெரியும். சகோதரிகளுக்குத் தெரியும்-பண் என்பது தமிழுக்கே உரிய இசை என்பது. பண் என்ற சொல் தமிழுக்கு உரிய மரபு. தமிழ் இசைக்கு உரிய மரபு. செட்டி நாட்டரசர், தமிழ் இசை மேடைகளில் இருந்து மறைத்ததை, தமிழக இசை அரங்குகளில் பதிவு செய்து கொண்டு வந்தார்.
நாம் அதுபோலத் தமிழ்நாட்டிலே இறைவனுக்குத் தமிழிலே வழிபாடு செய்ய வேண்டும். இங்குத் தமிழிலே வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்வதினால், சமசுகிரதம் வேண்டாம் என்று சொல்வது நம்முடைய நோக்கம் அல்ல; குறிக்கோளும் அல்ல. அல்லது வேறு எந்த மொழியும் கூடாது என்பதும் நோக்கம் அல்ல. நாம் என்ன பைத்தியக்காரர்களா? மாணிக்கவாசகர் அருளிச் செய்தது நமக்குத் தெரியவில்லையா?
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
என்றார். எல்லா நாடுகளிலும் இருக்கின்ற மக்களுக்கு அவன்தான் தலைவன். அவன்தான் கடவுள், யார் யார் எந்தெந்த மொழியில் பேசுகிறார்களோ, அவரவர்களுக்கு அதுதான் கடவுளோடு பேசுகிறமொழி. நமக்குக் கடவுளுக்கு எந்த மொழி தெரியும் என்பது பிரச்சனையல்ல; நாம் எந்த மொழியில் கடவுளுடன் பேச முடியும் என்பதுதான் பிரச்சனை. கடவுள் அனைத்து மொழிகளுக்கும் சொந்தக்காரன்; அனைத்து மொழிகளையும் உணர்ந்தவன்; தெளிந்தவன்; தெரிந்தவன். அவனே எல்லா மொழிகளாகவும் இருக்கிறான். எனவே அவனுக்கு எந்த மொழி என்பது சிக்கல் அல்ல. நமக்கு எந்த மொழியில் சொன்னால் கடவுள் எளிதாகக் கிட்டுவான்? நாம் அழவேண்டும், நாம் கசிந்துருக வேண்டும். நம்முடைய நெஞ்சு என்ற புலன் உழப் பெற வேண்டும். நம்முடைய இதயப் புலன்கள் உழப்பெற வேண்டும். அதற்கு எந்தச் சொல், எந்தமொழி இசைந்தது? என்பதுதான் பேச்சு. இதைப் பத்தாம் நூற்றாண்டிலேயே சுந்தரர் வரலாற்றில் காணலாம். அங்கேயும் சொல்கிறேன். அயல்மொழி வழக்கு நுழைந்திருக்கிறது என்பதை அயல்மொழி வழக்கைக் காட்டி, 'அர்ச்சனை பாட்டே ஆகும்' என்று சுந்தரர் வாழ்க்கையிலே சிவபெருமான் கூறுகிறார். ஆக, 'அர்ச்சனை பாட்டே ஆகும்' என்று சொல்லுகிறவர் 'தூமறை பாடும் வாயார்' என்று சொன்னார் சேக்கிழார் பெருமான். ஆக மறைகள் இருக்கின்றன. அந்த மறைகள் எவையாயினும் இருக்கட்டும். ஆனால், என்னுடைய நெஞ்சு பக்குவமடைகிற மாதிரி, உறுதியடைகிற மாதிரி, நல்ல தமிழில் பாடுக என்று சொன்னார். நான் இவ்வளவு செய்திகளும், தமிழில் கொண்டு வந்தார் என்று நண்பர் பெருமாள் அவர்கள் சொன்னதற்கு விளக்கம் சொன்னேன். தமிழ்வேறு சமயம் வேறல்ல, இரண்டும் ஒன்று தான். தமிழிலிருந்து சைவத்தைப் பிரிக்காதீர்கள், சமயத்தைப் பிரிக்காதீர்கள். அதேபோலச் சமயத்திலிருந்தும் தமிழைப் பிரிக்காதீர்கள். சமயத்திலிருந்து தமிழைப் பிரித்து விட்டால், நமமுடைய நெஞ்சுப் புலன்களை உழ முடியாது. நம்முடைய நால்வர், தமிழிலேதான் சிறந்த முயற்சிகளைச் செய்திருக் கிறார்கள்.
நாளும் இன்னிசையால் தமிழ்
பரப்பும் ஞானசம்பந்தன்
என்று பாடுகிறார் சுந்தரர். ஆக, நாளும் இன்னிசையால் திருஞானசம்பந்தர் ஒன்றும் தமிழ் பரப்புவதற்காக வரவில்லை. அவர் பரப்பியது சைவம்தான்; சைவ நன்னெறி தான். திருநெறிய தமிழில்தான் ஓதினார். ஆனாலும் கூட, சுந்தரருடைய எண்ணத்திலே என்ன தோன்றுகிறது என்று சொன்னால்,
நாளும் இன்னிசையால் தமிழ்
பரப்பும் ஞானசம்பந்தன்
என்று சொன்னார். திருஞானசம்பந்தர் பரப்பியது தமிழ்நெறி, திருநெறி; அன்றைக்குத் தமிழகத்தில் ஊடுருவி நின்ற பிற மொழிக் கொள்கை, தமிழுக்கும், தமிழர் வாழ்வியலுக்கும் உடன்படாத கொள்கை. தமிழ் இசையை மறுத்த நெறி; இயற்கையோடிசைந்த வாழ்க்கையை வேண்டாமென மறுத்த நெறி; மனையறத்தோடு கூடிய வாழ்க்கையை வேண்டாமென மறுத்த நெறி. இப்படிப் பல்வேறு புறத்தூய்மை யில்லாத, பண்பாடு இல்லாத நெறிகளை மறுக்க வேண்டிய சூழ்நிலையில்தான், திருஞானசம்பந்தர் இதைச் செய்தார்.
தமிழும் சைவமும், தமிழும் சமயமும் இணைக்க முடியாதவைகள் என்று இங்கே கூறினார்கள். இவைகள் பிரிக்க முடியாதவைகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதேபோல்தான் நான் மீண்டும் நினைப்பூட்டுகிறேன். சமயமும், சமுதாயமும் என்பது நாமாகச் செய்யக்கூடிய முயற்சிகள் அல்ல. இடைக்காலத்திலே மறந்துபோன ஒன்றை நான் நினைவுபடுத்துகிறேன். அவ்வளவுதான். பழங்காலத்தில் கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொன்னார்கள். கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொன்னால், அங்குக் கடவுளைத் தொழ முடியாது என்பது மட்டுமல்ல; உன்னுடைய வாழ்க்கைக்கு உத்தரவாதம் இருக்காது; பாதுகாப்பு இருக்காது; நியாயம் கிடைக்காது; நீதி கிடைக்காது; எனவே, கோயிலைச் சார்ந்து வாழ் என்பதுதான். இது இன்று நேற்றுத் தோன்றிய பழக்கமல்ல. பல்லாயிரம் ஆண்டுக் காலத்துப் பழக்கம். இதனைச் சேக்கிழாருடைய பெரிய புராணத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் நாம் பரக்கக் காணமுடிகிறது.
அதற்குச் சில சான்றுகள் சொல்லுகிறேன். இப்பொழுது சாதாரணமாக ஒருவனுக்குத் திருமணம் ஆக வேண்டும். வயது வந்த இளைஞனாக இருக்கின்றான். அவனுக்கு வீட்டிலே திருமணம் செய்து வைக்கின்ற முனைப்பைக் காணோம். பெற்றோர் ஒரு மாதிரியாகக் காலம் கடத்துகிறார்கள். பையனுக்கோ வயது வந்துவிட்டது. காதல் உணர்வு வந்துவிட்டது. இப்பொழுது என்ன செய்வார்கள்? எங்கேயாவது கடை வீதிகளிலே புறத்திலே போய்ச் சுற்றுவார்கள். ஆனால், சுந்தரர் போன்ற இளம் தலைமுறையைச் சார்ந்தவர்கள், சிவபெருமானிடத்தே போகிறார்கள்; திருக்கோயிலுக்குச் செல்லுகிறார்கள். அங்கே போய்ச் சிவபெருமானிடத்தும் கேட்கிறார்கள். ‘எனக்குத் திருமணம் செய்து வை’ என்று. திருமணம் செய்து வை என்று கூட இறைவனிடத்திலே கேட்கக் கூடிய ஓர் உரிமை நம்முடைய சமயத்திலே இருந்தது. சமூகத்தைச் சேர்ந்த மனப்பக்குவம் பக்தர்களுக்கு இருந்தது என்பதை மறந்து விடக்கூடாது.
அது மட்டுமா? திருமணம் ஆகிவிட்டது. மனைவிக்கும் அவனுக்கும் பிணக்கு ஏற்பட்டு விட்டது. தகராறு வந்து விட்டது. கேட்டால் எந்தக் காலத்திலும் பெண்கள் அடக்கமாக இருப்பார்கள். அவர்கள் ஒரு திருமணத்திலேயே மிகப் பெரிய மன நிறைவை அடைவார்கள். வாழ்நாள் முழுவதும் அந்தக் கணவனுக்கே தொண்டு செய்தால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், ஆடவர்கள் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. பல ஆடவர்கள் கொம்பு மாறுகிற பழக்கம் உடையவர்கள். கொஞ்சம் வெளியேயும் புறத்தேயும் சுற்றி வருவார்கள். கோவலன் வாழ்க்கையைப் பார்க்கிறோம். பல்வேறு வாழ்க்கையைப் பார்க்கிறோம். அதேபோல சுந்தரருக்கும் கூட இரண்டாவது திருமண ஆசை வந்து விடுகிறது. அவர் திருவொற்றியூருக்குப் போகிற போது அங்கே ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விழைவு தோன்றுகிறது. ஆனால், தயவு செய்து மறந்து விடாதீர்கள். முதல் திருமணம் செய்வித்த சிவபெருமான் மூலமாகவே இந்தத் திருமணத்தையும் செய்து கொள்கிறார். இப்பொழுதெல்லாம் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டுமென்று சொன்னால், முதல் திருமணம் செய்து வைத்த சண்முகவேலுக்குத் தெரியாமல், தாமாகப் போய்க் கோலாலம்பூரில் பதிவு செய்து கொண்டு வந்து விடுவார்கள். சிவபெருமானைப் பொறுத்த வரையில் சுந்தரர் அப்படிச் செய்யவில்லை. சிவபெருமானிடமே போகிறார். அந்தக் காலத்திய சமூக வழக்கத்தில், இரண்டு தடவை திருமணம் செய்து கொள்வது தவறில்லை என்ற நாகரிகம் இருந்தது. பரவையின்பால் சிபபெருமானுக்கு இருக்கிற ஈடுபாடும் குறைவல்ல. என்ன செய்வது? அவருடைய தலைவிதியே என்று திருமணம் செய்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. சுந்தரருடைய பழைய மனைவிதானே! சங்கிலியாரையும் போய்ச் சமாதானம் செய்து திருமணம் செய்து வைக்கிறார். இந்தத் திருமணம் செய்து வைக்கிறபொழுது, என்ன அருமையான வாழ்வியல் இருக்கிறது என்று செய்து வைக்கிறார்கள்? இப்பொழுது ஒருவர் இல்லாதபோது, ஒருவருக்காக நாம் பரிந்து பேசப் போனால், யாருக்காகப் பரிந்து பேசுகிறோமோ, அவர்களைத் தரந்தாழ்த்திப் பேசுவது நம்முடைய போக்கில் ஒன்று. ‘என்ன செய்வது? வந்து தொலைத்தான்! நானும் வந்து சேர்ந்திருக்கிறேன். உனக்காக இல்லையென்றாலும் அவனுக்காக இல்லையென்றாலும், எனக்காகவாவது வந்து பேசு என்று சொல்லுவார்கள். இப்படியெல்லாம் தரம் தாழ்த்திச் சொல்லுவது என்பது பழக்கம்! ஆனால், சுந்தரரை நம்முடைய சிவபெருமான் சங்கிலியாருக்கு அறிமுகப்படுத்துகிற பொழுது,
சாரும் தவத்துச் சங்கிலிகேள்
சாலஎன்பால் அன்புடையான்
மேருவரையின் மேம்பட்ட தவத்தான்...
என்கிறார். ஏனென்றால் சங்கிலியாருக்கு இரண்டாந் தடவையாகத் திருமணத்திற்கு வந்திருக்கிறார் என்ற கவலை வந்துவிடக் கூடாது. அவரைப் பற்றி, சுந்தரரைப் பற்றித் தரக்குறைவாக நினைத்துவிடக் கூடாது என்ற கவலையின் காரணமாக ‘மேருமலையின் மேம்பட்ட தவத்தான்! சால என்பக்கம் அன்புடையான்’ என்று சங்கிலியாருக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்படி அறிமுகப்படுத்துவது என்பது ஒரு நல்ல கலை. யாரையும் மனங்குளிரப்பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். அது வளர்கின்ற பயிருக்கு மழைபோல! பாராட்டுவதன் மூலமாகக் கூடச் சில தீமைகளைத் தவிர்க்கலாம். நமக்கு அதில் தரித்திரம் காட்டுகிற பொழுது தான் சில சிக்கல்கள் தோன்றுகின்றன. ஒருவனுக்குப் புகழ், ஒருவனுக்கு இல்லையென்று சொன்னால் அதைத் தாங்க முடியாமல் சமூகம் தவிக்கிறது. இதனால்தான் ‘மேரு மலையில் மேம்பட்ட தவத்தான்; சால என்பக்கம் அன்புடையான்’ என்கிறார். அம்மையாரும் ஒப்புக் கொள்கிறார்கள். திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. சிவபெருமானுக்குச் சில சமயம் கிண்டல், கேலி இவைகளெல்லாம் செய்யத் தோன்றும். ஏனென்றால் வாழ்க்கையோடு இசைந்த சமயம் நமது சமயம். சமயத்தைக் கொண்டு போய் எங்காவது கருவறையிலும், கைலாயத்திலும் வைத்துவிட்டு, சுவைத்து, இரசித்து, வாழத் தெரியாமல் கிடந்து தொல்லைப் பட்டுக் கொண்டிருக்கிறோம். அவர் போய் மெள்ள என்ன சொல்லுகிறார்? சங்கிலியாரிடமும் போய் மெள்ளக் காதைக் கடித்து, ‘அவன் திருவாரூர்மேல் கொஞ்சம் கிறுக்கும், பைத்தியமும் உடையவன். திடீரென்று திருவாரூருக்குப் போனாலும் போய் விடுவான். எனவே நீ போய்த் திருவொற்றியூரை விட்டுப் போவதில்லை என்று சத்தியம் வாங்கிக் கொள்’ என்று சொல்லி விட்டார். இந்த அம்மையாரிடம் சுந்தரர் போகிறார். இந்த அம்மையார் சத்தியம் கேட்கிறார்கள். சுந்தரருக்கும் தர்ம சங்கடம்; அரைச் சங்கடமாகப் போய் விட்டது. திருவாரூருக்குப் போகாமல் இருக்க முடியாது. சங்கிலியாருடன் திருமணம் ஆக வேண்டும். ஆதலால் என்ன செய்கிறார்? ‘சரி’ என்று ஒப்புக் கொள்கிறார்.
நம்முடைய மாசுகளுக்குக் கூட, கடவுளிடத்திலே ஒளிக்காமல் பேசினால் நன்மை கிடைக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, ‘சங்கிலியார் என்னிடம் சத்தியம் கேட்டிருக்கிறாள். நானும் ஒத்துக் கொண்டேன். ஆனால், உன் முன்னால் சத்தியம் செய்து கொடுத்து விட்டு மீறுவது என்றால், என்னவோ போலச் சங்கடமாக இருக்கிறது. அவளோ நல்ல பக்திமான். உன் முன்னால்தான் சத்தியம் கேட்பாள். நான் சத்தியம் செய்கிற நேரத்தில், சிறிது கோயிலை விட்டு வெளியே வந்துவிடு’, என்று கேட்கிறார். எவ்வளவு சுதந்தரமான ஒரு பக்தி இருக்கிறது என்று பாருங்கள்! இதைப் படிக்கும் போது நமக்கு அழுகையும் வருகிறது; இரக்கமும் வருகிறது. கோயிலைவிட்டு வெளியில் வந்து அந்த மரத்தடியில் நின்று கொள். சத்தியம் செய்தபின் கோயிலுக்குள் போய்விடு’ என்று சொல்லுகிறார். சிவபெருமானுக்குச் சுந்தரருடைய வார்த்தைகளைத் தட்ட முடியவில்லை. சரி என்று ஒப்புக் கொண்டார். அந்த அம்மை யாரை “ஏமாற்றுவது போல் ஆகிவிடக் கூடாதே! அங்கே போய்ச் சொல்லிக் கொடுத்து விடுகிறார். ‘இந்தச் சின்ன விசயத்திற்குக் கோவிலுக்குள் சத்தியம் வேண்டாம்; இந்த மரத்தடியிலே செய்தால் போதும் என்று கேள்’ என்று கூறுகிறார்.
இவ்வாறு நமது குறைகளுக்கும், நிறைகளுக்கும் ஈடு கொடுத்து நின்ற ஒரு சமயம், இன்றைக்கு வெறும் சடங்குச் சமயமாக, வாழ்க்கையோடு இசைந்து வராத, ஒத்துவராத, வாழ்க்கையாகவே ஆக்க முடியாத ஒரு சமயமாக இருக்கிறதே என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அப்புறம், சுந்தரர் சத்தியம் செய்கிறார்; மரத்தடியில் சத்தியம் செய்கிறார்; பிறகு கண் போகிறது; கண்ணைப் பறித்து விடுகிறார் சத்தியத்திற்காக! அப்பொழுது என்ன திட்டுத் திட்டுகிறார்? நாம் வீட்டிலே குறும்பாக இருக்கிற குழந்தையைப் பார்த்து ‘என்ன சனியனே!’ என்று சொல்லுகிற மாதிரி, கடவுளிடத்துப் போய், ‘மகத்தில் புக்கதோர் சனியெனக்கு ஆனாய்!’ என்று கூறுகிறார். சிவபெருமான் இவ்வாறு பேசவும் உரிமை கொடுத்தார்; வாழ்த்தவும் உரிமை கொடுத்தார்; வேலை வாங்கவும் செய்தார்; வேலை செய்யவும் செய்தார். அதுதான் நம்முடைய சமயம்; நம்முடைய சமுதாயம் நாம் ஒன்றும் சமயத்தைக் கொண்டு போய்ச் சமுதாயத்தோடு செயற்கை முறையில் இணைக்க ஆசைப்படவில்லை. அப்படி ஒரு காலத்தில் இருந்தது. பொன் வேண்டுமா? கேட்டார்! சாப்பாடு! நல்ல நெய் போட்ட கறியோடு கூடிய சாப்பாடு வேண்டும் என்று கேட்டார்! கடவுளை வாழ்க்கைப் பொருளாகப் பார்த்த, கடவுளை வாழ்த்துப் பொருளாகப் பார்த்த வாழ்க்கையின் ஊனும், உயிரும், உடலும், உணர்வும் ஒன்றாக இருந்த சமயத்தை நான் பார்க்கிறேன்.
இன்னும் உருக்கமான ஓர் இடம்! திருக்கச்சூர் என்ற ஊருக்குப் போகிறார் சுந்தரர்! நல்ல பன்னிரண்டு மணி வெயில்! பசி! யாரிடத்திலும் பிச்சை கேட்டுப் பழக்க மில்லாதவர். கோயிலுக்கே போகிறார். ஆனால், திருக்கச் சூரிலே இருக்கிற இறைவன் இவருக்கு முன்னாலேயே வந்து காத்துக் கொண்டிருக்கிறான். பசிக்கிறதா? என்று கேட்கிறார். ‘சரி! நல்ல வெயிலாக இருக்கிறது! சிறிது உட்கார்ந்திரு! ஓய்வெடு! நான் போய் உனக்குச் சாப்பாடு கொண்டு வருகிறேன்’ என்று சொல்லி விட்டுச் சிவபெருமான் சாப்பாடு எடுக்கப் போகிறார். நான் சில சமுதாய உண்மைகளையும் இந்த வரலாற்றைப் பார்க்கிற பொழுது பார்ப்பது உண்டு. அது சிலருக்குப் பிடிக்காது போனாலும் அன்பு கூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள். திருக்கச்சூர்க் கோயில் இறைவன்தானே! அவனுக்குக் கோயிலில் சாப்பாடு இல்லையா? ஒரு கட்டி எடுத்துக் கொடுக்கக் கூடாதா? ஆக, திருக்கச்சூர்க் கோயிலிலே இருக்கிற இறைவனுக்கு திருக்கச்சூர்க் கோயிலிலே சோறு கிடைக்கவில்லை சுந்தரருக்குக் கொடுக்க, என்று சொன்னால், அப்பொழுதே இந்தப் பூட்டு, சாவி, அறங்காவலர் முறையெல்லாம் வந்து, கடவுள் உரிமைகள் இரண்டாந்தரமாக மாறி, மனிதர்களுடைய உரிமைகள் மேலோங்கி விட்டதாகத் தெரிகிறது. எனவே, கோயிலிலே அவருக்குச் சோறு கிடைக்கவில்லை. அதனால் தெருவில் இறங்கிப் பிச்சை எடுக்கப் போகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். இன்னொரு மாதிரியும் நினைப்பதுண்டு. இப்பொழுது நாம், கடவுள் எழுந்தருளியிருக்கிற திருக் கோயில்களிலே இருக்கிற மூர்த்திகளை, நிறையப் பேர் இன்றைக்குச் சிலைகளாகத் தான் பார்க்கிறோம்; உருவங் களாகத்தான் பார்க்கிறோம். நம்மை ஆளும் தெய்வம் எழுந்தருளி இருப்பதாக நம்மில் பலருக்கு நினைவே வருவதில்லை. மனிதன் அங்கு அட்டகாசம் செய்கிறான்; மனிதனுக்கு மரியாதைகள், சிலருக்கு ஏகபோகமான மரியாதைகள்; இறைவனுடைய சன்னிதியில் எல்லா மனிதர்களும் அடக்கம் உடையவர்களாக, அமைதி உடையவர்களாக, இருக்க வேண்டும். அந்த இடத்திலே கூட மனிதர்களுக்கிடையில் சமரசமும், சமாதானமும் வராது போனால், வேறு எங்கேதான் வருவது?
நான் கூட அடிக்கடி நினைப்பதுண்டு. இந்தக் கடவுளுக்குக் கண்ணப்ப நாயனாருக்குப் பிறகு நன்றாக, சுவையான உண்வைச் சமைத்துக் கொடுத்தவர் யாருமே இலர் போலும். கண்ணப்பர் நன்றாக, கவனமாகச் சமைத்துக் கொடுத்தார். நம் வீட்டில் கூட சுவாமிக்குப் படைக்கின்ற அன்றைக்கு, சுவைத்து விட்டுப் படைக்க நமக்கு மனம் வராது. அது உப்பில்லாத வடையாக இருந்தாலும் வைத்துப் படைத்து விட்டுப் பிறகு நாம் உட்கார்ந்து சாப்பிடும்போது, ‘அய்யய்யோ! உப்பு சேர்க்க மறந்து விட்டோமே! என்று சொல்லி, திரும்பவும் உப்பு சேர்த்துச் சாப்பிடுவோமே தவிர, கடவுளுக்கு உப்பில்லாதவைதான் கிடைத்திருக்கும். ஆனால், கண்ணப்பர் என்ன செய்தார்? அவர் புலால் தின்கிறவர், அவர் புலாலைப் பதமாகச் சுடுகிறார்; தேனில் நனைக்கிறார்; வாயில் போட்டு அதுக்குகிறார்; சுவை பார்க்கிறார்; சுவையை அனுபவிக்கவில்லை. அந்த இடத்தை நாம் மிகவும் கூர்மையாகப் பார்க்க வேண்டும். சுவை பார்க்கிறார்; சுவையை அனுபவிக்கவில்லை. சுவையை அனுபவித்து விட்டால் எச்சில்! சுவை இருக்கிறதா என்று உணருகிறார்; உடனே துப்புகிறார் இலையில்! கடவுளிடத்துப் போய், நான் மிகவும் நன்றாகச் சமைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். இதுபோல உனக்குக் கிடைத்தே இருக்காது. இந்தா, சாப்பிடு’ என்கிறார்.
ஆனால், இங்கே திருக்கச்சூரிலே இருக்கிற இறைவன், கோயிலிலே சாதம் எடுக்காமல், வெளியில் போவதற்குக் காரணம். நம்முடைய நாட்டுக் கோயில்களிலே கடவுளுக்குச் சுவையான பண்டங்களைப் படைப்பது என்பதை மறந்து விட்டோம். எங்கேயாவது தமிழ்நாட்டுக் கோயில்களில் பார்த்தால், ஒரு பட்டைச் சோறு. பாவம்! அது ஏமாளிப் பட்ட சோறு என்று அர்த்தம். சுந்தரரோ, சொகுசான பிள்ளை. நெய்யுடன் சோறு கேட்பான். நாம்தான் தினமும் இந்தப் பட்டைச் சோற்றைச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம். சுந்தரருக்கு இது ஒத்து வராது. திருக்கச்சூரிலே வீடுகள் இருக்கின்றன. தங்களுடைய கணவனுக்குமாக, குடும்பத்திற்குமாகச் சுவையான சமையலைச் செய்து வைத்திருப்பார்கள் பெண்கள்! அதில் நான்கு வீடுகளில் போய் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தால், சுந்தரருக்குத் திருப்தியாக இருக்கும் என்று போனரோ என்று தெரியவில்லை! ஆக, பசிப்பதற்குச் சோறு! ஆழ்வார் ஒருவர் பாடினார். ‘உண்கின்ற சோறும், பருகுகின்ற நீரும், தின்கின்ற வெற்றிலை, பாக்கும் ஆனாய்’ என்று சொன்னார். கடவுளை அவர் அனுபவித்த முறை அப்படி! இதிலே சமயம், சமுதாயம் என்பதைத் தயவு செய்து பிரிக்காதீர்கள். வாழ்க்கையே சமயமாக வேண்டும்; சமயமே வாழ்க்கையாக இருக்கவேண்டும்.
சுந்தரர் அவிநாசிக்குச் செல்கிறார். நான் திருமணம் என்று சுந்தரர் திருமணத்தைச் சொன்னேன். இன்னொரு திருமணமும் இருக்கிறது எவ்வளவு சமூக நெளிவுகள் இருக்கின்றன நம்முடைய மதத்திற்கு என்று தெரியும். திருமருகல் என்ற ஊரிலே ஒரு திருமணம் நிகழ்ந்தது. திருமருகல் என்பது தஞ்சை மாவட்டத்திலே உள்ள ஒரு திருத்தலம். திருமருகலுக்குப் பக்கத்தில் ஏழெட்டுக்கல் தொலைவில் ஒரு வணிகச் செட்டி குடும்பம். இந்தச் செட்டி வீட்டில் ஏழு பெண்கள். இந்தப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடிய முறை உடைய மாமன் ஒருவன். இந்த மாமன் இங்கேயே பெண் கேட்கிறான். ஆனால், மாமனுக்குக் கொஞ்சம் வசதிக் குறைச்சல். இப்பொழுது பெண் கொடுக்கவோ, பெண் வாங்கவோ, பெரும்பாலும் வசதியைத் தான் பொதுவாகப் பார்க்கிறோம். பழைய காலத்தில் குலம் அறிந்து கோத்திரம் அறிந்து கொடு என்பார்கள். இப்பொழுது அதெல்லாம் முடிவதில்லை. அதுவும் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்த வரையில், பெண்களிடத்திலே பணம் வாங்குகிற அளவுக்கு ஆண்கள் இளைத்து விட்டார்கள். இப்பொழுது அவர்களுக்கெல்லாம் ஆண்மையும் வலிமையும் மிகக்குறைவாகப் போய், பெண்களிடத்திலே பணம் கேட்கிறார்கள். இந்த மாமனுக்குப் பெண் கொடுக்காமலே மாறி, மாறி வேறு வேறு இடங்களிலே வணிகன் தன் மகள்களை அடுத்தடுத்துத் திருமணம் செய்து கொடுத்து விடுகிறான். இவனும் அங்கேயே எப்படியாவது, ஒரு பெண் கூடக் கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருக்கிறான், கடைசிப் பெண்தான் மிச்சம். அப்பொழுதும் தகப்பனிடத்தில் மாமனுக்குக் கொடுக்கும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அந்தப் பெண்ணுக்கு இரக்கமான குணம்! நம்முடைய மாமன். நம்முடைய வீட்டிலேயே பெண் எடுக்க வேண்டும் என்று காத்திருக்கிறான். நம்முடைய தந்தையோ மோசடி செய்கிறார். நாம் அந்த மாமனுக்கு வாழ்க்கைப் படாது போனால், அவனுடைய வாழ்க்கை கெட்டுப் போகும் என்று எண்ணி, தன்னுடைய பெற்றோரை மீறி, தன்னுடைய மாமனுக்கு ஆள் அனுப்பி, நாம் இருவருமாகச் சேர்ந்து எங்கேயாவது போய்த் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று சொல்லி விடுகிறான். மாமனுக்கு மிக்க மகிழ்ச்சி.
இருவரும் பெற்றோருக்கும் தெரியாமல் புறப்பட்டு விடுகிறார்கள்; திருமருகல் என்ற திருத்தலத்துக்கு வருகிறார்கள். திருத்தலத்திற்கு வந்து திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்ற முடிவோடு அவர்கள் வருகிறார்கள். இரவாகி விடுகிறது. திருமருகல் கோயில் சாத்தியாகி விட்டது. இருவரும் எங்கோ ஒரு மடத்தில் படுக்கிறார்கள். நெடுந்துாரம் நடந்து வந்த களைப்பில் கடுமையாகத் தூங்கி விடுகிறார்கள். நல்ல-நச்சுப் பாம்பு ஒன்று இரவில் அவனைக் கடித்து விடுகிறது. காலையில் எழுந்து பார்க்கிறாள். தான் திருமணம் செய்ய இருந்த தலைவன்-தலைமகன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறாள். பெற்றோரை இழந்து வந்தாயிற்று. கைப்பிடிக்க இருந்த கணவன் இறந்து போனான். இரண்டு பேரும் தனியே வந்திருந்தாலும், திருமணம் ஆகவில்லை என்ற ஒரே காரணத்தினால் உடற்சார்பு இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்; தூங்கியிருக்கிறார்கள். எனவே, ‘நான் கணவன் என்ற உரிமையோடு, உன்னைத் தீண்டிக் கூட அழ மாட்டாமல் செய்து விட்டாயே, என்று அழுகிறாள். திருஞானசம்பந்தர் வருகிறார்.
தஞ்சை மாவட்டத்தில் பயணம் செய்பவர்களுக்குத் தெரியும். ஊர் எல்லையிலேயே கோயில்கள் வரவேற்கும். விண்ணளந்து காட்டி வினை மறைக்கும் கோயில்கள் ஏராளம்! ஆனால் அந்தத் திருக்கோயில் நம்முடைய திருஞான சம்பந்தரை ஈர்த்ததைவிட, அழுகிற குரல் அதிகம் ஈர்த்திருக்கிறது. எங்கே அழுகிறார்கள்? ஏன் அழுகிறார்கள்? என்று பதைத்து ஓடுகிறார்; விரைந்து ஓடுகிறார். அங்கே ஒரு பெண் அழுது கொண்டிருக்கிறாள். ஒரு பிணம் கிடக்கிறது. இவர் வருகின்றார்; உடனே இவரும் அழுகிறார்.
அவருடைய அழுகையின் காரணமாக இறை வனுடைய கருணையினால் அவன் எழுந்து நிற்கிறான். திருமணத்தைச் செய்து முடிக்கிறார்; அவர்கள் முகத்திலே மகிழ்ச்சியைப் பார்க்கிறார். அதற்குப் பிறகுதான் இறைவுனை வணங்கச் செல்லுகிறார். இப்படியோர் உயிர்ப்புள்ள சமயம் நம்முடைய நாட்டிலே இருந்தது என்பதை இன்றைக்கு நாம் மறந்து விட்டோம். சமயத்தையும், சமுதாயத்தையும் யாரோ புதிதாகச் செயற்கையாகப் படைக்க நினைப்பதாக நினைத்து விடக் கூடாது. அது பழைய காலத்தினுடைய தொன்மையான வழக்கம்.
நம்முடைய நாட்டில் சுந்தரருக்கும், சிவபெரு மானுக்கும் இடையில் ஒரு வழக்கு வந்தது. இந்த வழக்கை எங்கே போய்ச் சொன்னார்கள்? (Privy Counsil) தனி ஆலாசனை சபைக்கா? போனார்கள்? உயர்நீதிமன்றத்து (High_Court)க்கா போனார்கள்? இப்பொழுது தமிழ்நாட்டிலே கோயில்களும், மடங்களும் கூட (High Court)க்குப் போய்க் கொண்டிருக்கின்றன. சுவாமிகள் கோர்ட்டுக்குப் போகிறார்கள். எந்த யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதற்கு: ‘இசுமாயில்’ நீதிபதியாக இருக்கும் நீதிமன்றத்துக்குப் போகிறார்கள். ஆனால் நம்முடைய பழைய சமயத்தில், பழைய சமுதாயத்தில் கோயிலிலே இருந்த முறை மன்றத்தில், சிவபெருமானும், சுந்தரரும் சமபாத்திரமாய் இருந்து வழக்கு நடத்தினார்கள். ஆக, வழக்குத் தீர்க்கின்ற அளவுக்குக் கூட நம்முடைய கோயில்கள் சமூக மன்றங்களாக இருந்தன. எனவே சமயமும் சமுதாயமும் ஒன்றுதான். பழைய காலத்தில், கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னது அந்தப் பொருளில்தான். சாதாரண பன்றி பட்டினியாகக் கிடந்தாலும், தாய்ப் பன்றியாக வந்து பாலூட்டி வளர்த்தான் நம்முடைய இறைவன் என்பது வரலாறு, அவைகளையெல்லாம் நாம் பொய்யாக்கக் கூடாது; புனைந்துரையாக்கக் கூடாது.
இன்றைக்கு நான் தெளிவாகவும் உறுதியாகவும் சொல்லுகிறேன். என்றைக்குப் புராணங்கள் அல்லது தத்துவங்கள் மீண்டும் மீண்டும் வாழ்க்கையில் செயற்பாடாக வரவில்லையோ, என்றைக்கு அவற்றிற்குச் செயல் உருவங்கள் வரவில்லையோ, அன்றைக்கு அவற்றைப் பொய்ம்மை என்று சொல்லுகின்ற ஒரு வட்டம் தோன்றத்தான் தோன்றும். அதைப் பொய்ம்மை என்று சொல்லுகிறவர்கள் மீது நமக்கு வருகின்ற கோபத்தைவிட, அவை என் உண்மையாக நடைமுறைக்கு வரவில்லை; அவைகள் ஏன் நம்முடைய சமுதாயத்தை ஈர்த்துப் பிணைத்துக் காப்பாற்றவில்லை? இன்றைக்கு ஏன் ஏராளமான பேர் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள் என நினைக்க வேண்டும். ஆண்டுதோறும் திருக்கோயிலிலே திருமணம் என்று சொன்னால் அது எதற்காக? இறைவனுக்கா திருக்கல்யாணம்? திருமணம் செய்து வைப்பது நம்முடைய வாழ்க்கையின் நோக்கமாக இருக்கட்டும். இறைவன் வழங்கிய ஐம்பொறிகளுக்கு நீ துணையாக இரு. அவன் ஒரு வகையில் படைக்கிறான். நீயும் ஒரு வகையில் படைத்துக் காப்பாற்று, என்ற தத்துவங்களின் அடிப்படையில்தான் இந்த வரலாறுகள் தோன்றுகின்றன.
எனவேதான் புராணங்கள் பொய் என்று சொல்லுகிறவர்களைப் பற்றியோ, கடவுள் இல்லை என்று சொல்லுகிற வர்களைப் பற்றியோ நான் அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. காரணம், அவர்களைவிடக் கடவுள் இருக்கின்றார் என்ற தத்துவத்தை நம்புகிறவன். நடமாடுகின்ற உயிர் வர்க்கத்தின், அழுகின்ற கண்ணீரை மாற்றி, துன்பத்தை மாற்றி, தொல்லைகளை மாற்றி, சமூகத்தை ஒருமைப் பாடுடையதாக மாற்றி எந்த மனிதன் இந்த மண்ணுலகத்திலே, விண்ணுலகைப் படைக்கின்றானோ, அவன் தான் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புகிறவனாக இருக்கிறான். நான், ஒன்று இருக்கிறது என்று நம்பினால் போதாது. நான், அந்த நம்பிக்கையினுடைய மனச்சாட்சியாக இருக்க வேண்டும். அது என்னுடைய உணர்வாகவும் அறிவாகவும் இருக்க வேண்டும். அதுவே என்னுடைய ஒழுகலாறாகவும் இருக்க வேண்டும். எங்கேயும் கடவுள் இருக்கிறார். கருத்து வேற்றுமையைப் பற்றிக் கூட சண்முகவேல் சொன்னார். அது சாதாரணமான காரியம். ஆளுக்கொரு நெஞ்சும், ஆளுக்கொரு தலையும், ஆளுக்கொரு குரலும் கொடுத் திருக்கிறபொழுது, கருத்து வேற்றுமை கொள்வது என்பது ஒரு சாதாரணமான காரியம். ஆனால், கருத்து வேற்றுமையைக் காழ்ப்பாக மாற்றுவதுதான் மிகக் கொடுமையான செயல். வேறுபட்ட சுவைகளினாலே உலகம் மகிழ்ச்சியாக இருக்கிறது! ஒரே நிறம், ஒரே சுவை; ஒரே உப்பு; ஒரே புளி, ஒரே மிளகாய் என்றால், சுவை எப்படித் தோன்ற முடியும்! எனவே கருத்து வேற்றுமை என்பது தவிர்க்க முடியாதது-அது இயற்கை ஆனால், எங்கே கருத்து வேறுமைகள் விவாதத்துக்கு உரியனவாக இல்லாமல், ஆய்வுக்கு உரியனவாக இல்லாமல் அல்லது தெளிவுக்கு உரியனவாக இல்லாமல், அவற்றில் எதோ கட்சி கட்டிக் கொள்வதற்காக, காழ்ப்பாக ஆக்குகிற பொழுதுதான், சமூகம் முறை பிறழ்ந்து போகிறது; தடம் புரண்டு போகிறது. எனவே, வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமை காணுதல் என்பது நம்முடைய நாட்டினுடைய விழுமிய நாகரிகம். வேற்றுமை இல்லாத ஓர் உலகியல் கிடையாது. பால் வேறுபாடு; சுவை வேறுபாடு; இராக வேறுபாடு அத்தனையும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இந்த வேறுபாடுகளுக்கிடையே நான் ஒருமைப்பாட்டைக் காணத் தான் விரும்புகிறேன்.
எல்லாக் கருத்துக்களும் எல்லாருக்கும் உடன்பாடு உடையனவாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நான் இந்தச் சமூகத்தைப் பார்க்கின்ற பார்வை, இந்தச் சமயத்தைப் பார்க்கின்ற பார்வை, பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், என்னுடைய கருத்தில் எது உடன்பாடு உடையது? அதைச் சொல்லுங்கள்! அல்லது எல்லாமே உடன்பாடு உடையன அல்லவா? எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால், எது உடன்பாடு உடையது? எது உடன்பாடில்லை? என்பதை எனக்குப் புரியும்படியாகச் சொன்னால், என்னுடைய அறிவிலே தெளிவூட்டினால், நான் யாருடைய கருத்தையும் ஏற்றுக்கொள்ளச் சித்தமாக இருக்கிறேன் என்று நான் சொல்வதுண்டு. எனவேதான், கருத்து வேற்றுமையாளர் களிடத்திலே கூட எனக்கு நட்பு, உறவு, இருக்கிறது. நான் என்னுடைய கருத்தை எங்கேயும் தெளிவாக்க முடியும் என்று நம்புகிறேன். எனக்குச் சில பிடிவாதமான மரபுகள் இருக்கின்றன; நடைமுறைகள் இருக்கின்றன; இந்தப் பிடிப்புகளிலிருந்து யாரும் என்னை எளிதாக அசைக்க முடியாது என்ற நம்பிக்கை எனக்கு மிகுதியாக இருக்கின்றது.
சமயம், சமுதாயம் என்ற இரு சொல்லைப் போட்டார் பெருமாள். தமிழ் என்ற ஒரு சொல்லைப் போட்டார். இந்த இரண்டுக்கும் நான் இவ்வளவு விளக்கம் சொல்ல வேண்டிய ஒரு நிலையை உருவாக்கி விட்டார். சமயமும், சமுதாயமும் பிரிக்க முடியாதவைகள், மீண்டும் நான் தமிழ்நாட்டில் இருக்கின்ற அனுபவத்தை வைத்தும், கடல் கடந்த நாடுகளில் நமது சமுதாயம் இருக்கின்ற அனுபவத்தை வைத்தும், நான் தெளிவாகச் சொல்ல ஆசைப்படுகிறேன். மீண்டும் கோயில்களை மையமாக வைத்து நம்முடைய குடிமக்களை இணையுங்கள்! கோயில்களைச் சார்ந்து வாழ்கின்ற வாழ்க்கை முறைகளை உண்டாக்குங்கள்! கோயில்களைச் சார்ந்து ஒரு சமூக மேம்பாட்டு நிதியை உண்டாக்குங்கள். உங்கள் சமூகத்தில் மிகவும் பலவீனமானவர்களுக்கு உதவ, அந்த நிதியைப் பயன்படுத்துங்கள்! நம்முடைய கோயில்தான் இன்றைக்கும் வழிபடுவோர் பட்டியல் இல்லாத ஒரு கோயிலாக இருக்கிறது. இன்றைக்குச் சில சமயங்களில் தமிழ்நாட்டில் மதமாற்றப் பிரச்சனைகள் வருகின்ற பொழுது, நாம் போகிற பொழுது, நம்மை வெட்கித் தலைகுனியச் செய்யும் நிலையாக ‘அவன்’ யாருக்குச் சொந்தக்காரன் என்று பட்டியல் கூட இல்லாமல் இருக்கிறது. அவன் இந்தக் கோயிலுக்குச் சொந்தக்காரன் என்று சொல்ல வேண்டாமா? அதனால்தான், திருநாவுக்கரசர் பெண்ணாகடத்திற்குச் செல்லும் பொழுது, நான் உன்னுடைய அடியான் என்பதை உலகுக்கு அறிவிக்குமாறு, என்னுண்டைய தோள்பட்டையில் இடபச் சின்னத்தைக் குறி என்று சொன்னார்; அதைப் பொறிக்கச் சொன்னார். இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், இந்த மலேசிய நாட்டிலே தோட்டத் தொழிலாளர்களாக ஆயிரக்கணக்கான பேர் வாழ்கிறார்கள். அவர்கள் நம்மவர்கள் என்பதற்கு என்ன அடையாளம் இருக்கிறது? என்ன சான்று இருக்கிறது? ஏதோ இயற்கையாக வளர்கின்ற காடுகளைப் போல அவரவர்கள் எப்படியோ தங்கள் சமயத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். அது நம்முடைய நல்லூழ்.
ஆனாலும் இன்றைக்கு உலகத்தில் பிரளயம் போலப் பல்வேறு அச்சுறுத்தல்கள் வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் கோயில்களைச் சார்ந்த குடிகள், குடிகளைச் சார்ந்த கோயில்கள் என்கிற நடைமுறைகளை உருவாக்கி, எல்லாரும் வழிபாடு செய்வதைக் கோயிலில் பதிவு செய்து, ஆண்டுக் கட்டணங்கள் ஏற்படுத்தி, திருக்கோயிலிலே பாக்கு வைத்து திருக்கோயிலிலே மாலைகள் வாங்கித் திருமணம் செய்ய வேண்டும். இந்தக் கோயிலைச் சார்ந்து பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். இரண்டு இந்து சகோதரர்கள் தங்களுக்குள் பிரச்சனைகள் இருக்குமானால், கோயிலில் வைத்துப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். கோயிலைச் சார்ந்தோர் வெளியே முறையீட்டு மன்றங்களுக்குப் போகக் கூடாது என்கிற நடைமுறைகளை-பழக்கங்களை உருவாக்க வேண்டும் என்பதை நான் சொல்லவில்லை-சுந்தரர் செய்து காட்டியிருக்கிறார்; சிவபெருமான் செய்து காட்டி இருக்கிறார்.
அதேபோல, கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்திருக்கிறார்கள்; பேசாமல் வாழ்ந்திருக்கிறார்கள்; ஆனால், பேசாமல் வாழ்ந்தார்கள் என்றால் சண்டை போடவில்லை. அந்தக் காலத்தில் கணவன், மனைவிக்கு இடையில் கருத்துப் பிணக்கு என்று சொன்னால், பக்கத்து வீட்டுக்குக் கூடத் தெரியாமல் வாழ்ந்திருக்கிறார். பேச்சுதான் இருக்காது; உறவுதான் இருக்காதே தவிர, வாழ்க்கை சுகமாகப் போய்க் கொண்டே இருக்கும். அப்படி ஒரு குடும்பம் வாழ்ந்தது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அது திருநீலகண்டருடைய வீடு, கணவனுக்கும், மனைவிக்கும் பிணக்கு. குமரனும் குமரியுமாக இருந்த காலத்தில் பிணக்கு. கிழவனும், கிழவியுமாகிற வரையில் பிணக்குத் தீரவில்லை. ஆனால், கணவனும் மனைவியும் பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று என்னுடைய வழிபடு தெய்வம் கவலைப்பட்டு, இறங்கி, அவர்கள் இரண்டு பேரையும் சமாதானம் செய்து வைக்கக் கூட மண்ணுக்கு வந்தான் என்று சொன்னால், நீங்கள்தான் உலகத்தில் தேர்ந்த சமயத்தினராக இருக்க வேண்டியவர்கள். உங்களுக்குப் பின்னாலே வந்தவர்கள், மிசினெறிகளாக மாறி, சமூக சேவை நிறுவனங்களாக மாறி, இன்றைக்குச் சோறும், கல்வியும், மருந்தும் கொடுப்பவர்களாக உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்கள். நம்முடைய சமயம் கடவுளை எவ்வளவு தூரம் போற்றியதோ, அவ்வளவு தூரம் கடவுள் கொள்கையைப் போற்றாமல், கடவுள் நெறிகளைப் போற்றாமல், கடவுள் செய்த தொண்டுகளைப் போற்றாமல், நாம் இருந்ததின் பயனாக நம்முடைய சமயத்தில் புதிய நபர்களைக் காணவே காணோம்.
பழைய அடியார் சிலபேர் இருக்கிறார்களாம். மாணிக்கவாசகர் சொல்கிறார். புத்தடியார் சில பேர் வந்திருக்கிறார்களாம். இந்தப் பழைய அடியார் மிகவும் திமிருவார்கள். ‘இவன் நேற்றைக்குத்தான் வந்திருக்கிறான். திருநீறு பூசிக் கொண்டு; இவனை எப்படி உள்ளே சேர்ப்பது?’ என்று சொல்லுவார்கள். ‘பாங்குடையீர்! பழ அடியீர்! புத்தடியோம்! புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ!’ என்கிறார். இந்தப் பழைய அடியார்கள் என்று சொன்னால், எப்போதுமே அவர்களுக்கு மமதை இருக்கும்போல் தெரிகிறது. அடியார் என்று சொன்னாலே, ‘அடிபணிந்து செல்பவர்கள்’ என்பதுதான் பொருள்.
தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம்
சமயம் சாரும் ஊழ் பெறலரிது
என்பர். தலைநிமிர்ந்து சுந்தரர் நடந்தபொழுது, அடியார்க் கடியேன்! அடியார்க்கடியேன்; அடியார்க்கடியேன்! என்று தோப்புக்கரணம் போட வைத்தார் சிவபெருமான். ஆனாலும், இன்னும் நம்முடைய நாட்டில் அந்தப் பழவடியார் என்ற போக்கு இருக்கத்தான் செய்கிறது. புத்தடியார்கள் யாராவது வந்தால் எற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இன்னொன்று சொல்ல ஆசைப்படுகிறேன்; இந்த நாட்டில் இருந்தாலும் சரி, எந்த நாட்டில் இருந்தாலும் சரி, பழ அடியார்கள் யாராவது இருந்தால், அவர்களை ஒத்த பழ அடியார்களாக என்னை ஏற்றுக் கொள்ளாது போனாலும், புத்தடியாராகவாவது ஏற்றுக்கொள்ளுங்கள்! அதிலே என்ன பொல்லாங்கு வந்துவிட்டது என்று கேட்கத் தோன்றுகிறது. இந்தச் சூழ்நிலையில் சமயமும், சமுதாயமும் வேறு அல்ல.
கடைசியாக, முடிவாக நான் சொல்லக்கூடிய செய்தி! கடவுளைப் பிரார்த்திப்பது, வழிபாடு செய்வது, தியானிப்பது, எல்லாவற்றிற்குமே நோக்கம். இறைவனுடைய சக்தியை நாம் பெற வேண்டும் என்பதுதான். நான் வழிபடுவதினாலே, கடவுளுக்கு ஒன்று கிடைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மின்சாரத்தோடு நம்முடைய வீட்டு மின்கம்பி (ஒயர்) தொடர்பு கொள்வதன் மூலமாக, மின்சாரத்திற்குப் பயன் இல்லை; நமக்குத்தான் மின்சாரம் கிடைக்கிறது. அதேபோல, கடவுள் என்ற பரம்பொருளை, குறைவிலா நிறைவாக, கோதிலா அமுதாக, நன்றுடையானாக, தீயதில்லாதானாக, இன்பனாக, துன்பம் இல்லாதவனாக இருக்கின்ற பரம்பொருளை, அளவு கடந்த பேரறிவும் பேராற்றலும் உடையவனாக இருக்கின்ற பரம்பொருளை நினைந்து, நினைந்து, நனைந்து, நனைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, உணர்வதின் மூலம், அந்த ஆற்றலை, சக்தியை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் பெற்று, நம்முடைய பொறிகள், புலன்கள் வாயிலாக, இந்த உலகத்திற்குப் பயன்படுத்திப் பீடுடன் வாழ்தல், பெருமையுடன் வாழ்தல், பலரோடு சேர்ந்து வாழ்தல், குடும்பத்தைக் கோயிலாக்கல், வீதியைக் கோயிலாக்கல், சமுதாயத்தையே கோயில் ஆக்கல்- பொதுவுடைமை ஆக்குதல் ஆகிய உயர்நெறிகள் நாட்டிலே மலர வேண்டும் என்பதற்காகத்தான் வழிபாடு செய்கிறோம். எனவே இறைவனை நினைத்து வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய குறைகளில் இருந்து விடுதலை பெறுங்கள்: நிறைவுகளைப் பெறுங்கள்; அளவு கடந்த ஆற்றலை சக்தியைப் பெறுங்கள். அந்த ஆற்றலும், சக்தியும் உங்களையும், உங்களைச் சார்ந்தவர்களையும் வாழ்விக்கப் பயன்பட வேண்டும் என்ற குறிக்கோளோடு இறைவனைப் பிராத்தனை செய்யுங்கள்.
நீங்கள் செய்கிற பிரார்த்தனையினால் அல்லது காணிக்கையினால், அல்லது தேங்காயினால், இறைவனுக்கு யாதொரு பலனும் கிடைக்கப் போவதில்லை. நீங்கள் பெற்றுக் கொள்வது என்ன? அதுதான் முக்கியமான செய்தி. உங்களுடைய வாழ்க்கையை மேலும் புதுமை உடையதாக, மேலும் ஆற்றல் உடையதாக, எதையும் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் உடையதாக, ஆக்கிக் கொள்கிற ஆற்றலை, பேரறிவை, அருளார்ந்த சக்தியை, பேருள்ளத்தை, பெருங்கருணையைப் பெற்றுச் சிறப்போடு வாழ வேண்டும்; அதற்குப் பிரார்த்தனை பயன்பட வேண்டும். அதுவும் அன்னையின் சந்நிதியிலே வழிபாடு செய்கிறீர்கள். அன்னை வழிபாடு, ஆற்றல் வழிபாடு என்று சொல்லுவார்கள். அந்த ஆற்றலை மிகுதியாகப் பெற்று நீங்கள் உங்கள் வீட்டையும், வீதியையும், நாட்டையும், உலக மனித சமுதாயத்தையுமே வாழ்விக்கிற அளவுக்குப் பேறும், கருணையும் உடையவர்களாக. அருளும், திருவும் உடையவர்களாக விளங்க வேண்டும் என்று நான் வாழ்த்தி, நீண்ட நெடிய நேரம் பல்வேறு செய்திகளைச் சொல்லி இருக்கிறேன். நான், சாதாரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசுவது என்பது வழக்கமில்லை. ஆனால், இன்றைக்கு மிகுதியாகவே பேசி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
இன்றைய நாள் என்னுடைய பேச்சினுடைய சாரமாக நினைவூட்டிய செய்திகள்! தமிழ் வேறு சமயம் வேறல்ல. ஒரு மொழி உயர்ந்ததாக இருப்பது அதனுடைய இலக்கியத்தினால் மட்டும் அல்ல. இலக்கியம் உணர்த்துகிற அறநெறி; வாழ்க்கை நெறி; செழுமையான அறப்பண்பாடுகள்; இவைகளைப் பொருத்துத்தான் அந்த மொழி சிறந்து நிற்கிறது. தமிழ் சிறந்தது என்பதினாலேதான், தமிழை நாம் பாராட்டுகிறோம். நான் தமிழ் மொழியைத் தாய்மொழியாக உடையவன். தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தேன்; என்னுடைய தாய் தமிழில் பேசினாள் என்பதற்காக மட்டும் நான் தமிழ்ப்பற்றாளனாக இல்லை. என்னுடைய தமிழ், உலகு புகழ்கின்ற திருவள்ளுவரைத் தந்திருக்கின்றது; அரசியல் நீதி பெறுக என்று கூறிய இளங்கோவடிகள் பாடிய சிலப்பதிகாரத்தைத் தந்திருக்கிறது; எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளை மண்ணிலே நடமாடச் செய்து, மானிடனுக்குச் சொந்தமாக்கி, மானிடனுக்கு உரிமையாக்கி, அவனையும் வைகையாற்றங் கரையில் நிற்க வைத்து, பண் சுமந்த பாடலுக்காக மண் சுமக்க வைத்து, திருவாரூர்த் தெருவிலே ஒருவனுக்குத் திருமணம் செய்வதற்காக நடக்க வைத்தது. இந்த நாட்டில் தமிழ் செய்த சாதனையை உலகத்தில் வேறு எந்த மொழியும் செய்ததில்லை. எல்லாச் சமயங்களும் போய்த் தட்டு; கதவு திறக்கப்படும்’ என்று சொல்லியது. என்னுடைய மொழி கடவுளை மண்ணிலே நடமாட விட்டு என் வீட்டுக் கதவைத் தட்டி என்னை எழுப்பி, என்னோடு பேசி உறவு கொண்ட ஒரு மொழி என்பதை நான் உணர்கிறேன். எனவே தமிழும் சைவமும் தமிழும் சமயமும் பிரிக்க முடியாதவை. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்திலிருந்து திருக்கோயில் எடுத்தலும், திருக்கோயில் வழிபாடு செய்தலும், நம்முடைய பழைய மரபு என்பதை மறந்துவிடக் கூடாது. சாவா மருந்தாகிய நெல்லிக்கனி கொடுத்த அதியமானையே ‘நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும! நீயே’ என்று வாழ்த்தினார்கள். திருநீலகண்டராக இருப்பதும், நஞ்சை உண்டு கண்டத்தில் அடக்கியதும், கருணைக் கண்டம் என்பதை மறந்து விடாதீர்கள்; நாம் மற்றவர்கள் வாழ்வதற்காக எந்தத் துன்பத்தையும் ஏற்றுக் கொள்ளலாம்.
நாம் வாழ்வது ஒரு பெரிய காரியம்தான். ஆனால், மற்றவர்களை அழிக்காமல், மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல் வாழ்வது என்பதுதான் மிகப் பெரிய காரியம்! எனவே, அமரர்கள் வாழ்வதற்காக அவர்கள் நஞ்சினால் சாகாமல் இருப்பதற்காக, தான் நஞ்சை உண்டு, வாழ்விக்கிற அமுதத்தை அமரர்களுக்குக்கொடுத்தான். அந்தக் கருணைக் கண்டம் இறைவனுடைய கண்டம். அதைத் தமிழ் நெறி பேசுகிறது. எனவே தமிழ்நெறி சாகாத நெறி. சாகாத அறநெறியை வற்புறுத்துகிற நெறி என்பதை நினைவூட்டி இந்தத் தமிழ்நெறி சமுதாய நெறியைத் தழுவி நின்றது ‘செழுந்தமிழ் வழக்கு’ என்று சேக்கிழார் பாராட்டினார்.
பிற்காலத்தில் ‘அயல் மொழி’ ஊடுருவலால், தமிழ் பைய மறக்கத் தலைப்பட்டது. தமிழகத்தில் இறைவனுடைய திருக்கோயில்களிலே தமிழ்நெறி தலை தடுமாறியது. தமிழிலே இறைவனுக்கு வழிபாடு செய்தால் செல்லுமா? செல்லாதா? என்ற நிலை உருவாகியது. அப்பொழுது சிவபெருமானே தமிழ் அர்ச்சனை இயக்கத்தை தமிழ் வழிபாட்டைத் தொடங்கி இருக்கிறார். குன்றக்குடி அடிகளார் தொடங்கி வைத்தார் என்று யாராவது சொன்னால் அல்லது அவர்தான் தமிழ் அர்ச்சனைக்குக் கர்த்தா என்று சொன்னால், அதைவிட முழுப் பொய் வேறொன்றும் இருக்க முடியாது. சுந்தரர் வரலாற்றில் சிவபெருமான்தான் முதன் முதல் தமிழ் அர்ச்சனை இயக்கத்தைத் தொடங்கி, ‘அர்ச்சனை பாட்டேயாகும்; ஆதலால், மண் மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக’ என்று சொன்னார்.
நாளும் இன்னிசையால் தமிழ்
பரப்பும் ஞானசம்பந்தன்
என்று சொன்னார். தமிழை வளர்த்தால் சைவம் வளரும்; சைவம் வளர்ந்தால் தமிழ் வளரும். இது நம்முடைய நாட்டு மரபு நால்வர் இந்த நெறியைப் போற்றி வளர்த்தார்கள். எனவே தமிழ் நம்முடைய உயிர் என்று சொன்னால், உயிரின் உயிர்ப்பாக இருப்பது சமயம் என்பதைச் சொல்லி, இரண்டும் இணைந்தவை; பிரிக்க முடியாதவை என்பதை நினைவூட்டுகிறேன்.
அடுத்து சமயம், சமுதாயம் என்பது கூட ஒன்றாகக் கிடந்த ஒன்று. குளம் வேறு, தண்ணீர் வேறு அல்ல; குடம் வேறு, தண்ணீர் வேறு அல்ல; உயிர் வேறு; உடல் வேறு அல்ல. எனவே சமயமும், சமுதாயமும் இணைந்த ஒன்று. தனி மனிதர்களை இணைப்பது குடும்பம் முதல்நிலையில், அடுத்த இடமாக-இணைப்பதில் பொது இடமாகக் கோயில் தான் இருந்தது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்; என்று சொன்னார்கள்; கடவுள் வழிபாட்டிற்காக மட்டும் அல்ல; கோயிலைச் சார்ந்து வாழ்கின்ற மனிதனுக்கு உத்தரவாதம் இருக்கும். பாதுகாப்பு இருக்கும்; அறம் இருக்கும்; அன்பு இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் சொன்னார்கள். பழைய முறையை ஒட்டியே கோயிலைச் சார்ந்து வாழ்கின்ற பழக்கம் நமக்கு வர வேண்டும். கோயில்களில் எல்லாம் அங்கு வருகிறவர்களின் பட்டியலைப் பதிவு செய்ய வேண்டும். ‘இந்த ஆள் காணோம்’ என்று சொன்னால், இந்த மகா மாரியம்மன் கோவிலைச் சார்ந்தவர் என்று போய் உரிமை கொண்டாட வேண்டும். மனிதனுக்கு உரிமை கொண்டாடுங்கள். இன்றைக்குத் தங்கத்திற்கும், வெள்ளிக்கும், அர்ச்சனைக் காணிக்கைக்கும், காணிக்கும், பூமிக்கும் உரிமை கொண்டாடுகிறோம். இவைகளை விட்டு நாம் மனிதர்களை உரிமை கொண்டாடி, இவன் அழுதால் அவன் அழுவான்; இவன் சிரித்தால், அவன் சிரிப்பான் என்ற புதுநெறியை, பொதுநெறியை மீண்டும் சமுதாயத்திலே கொண்டு வரவேண்டும்.
எனவே திருமணம் செய்து வைத்தது கோயில்; நண்பனாக இருந்து பாதுகாத்தது கோயில்; கணவனும் மனைவியும் சண்டை போட்டிருந்தால் சேர்த்து வைத்தது கோயில்; இறந்தவர்களை எழுப்பியது கோயில்; சமாதானம் செய்து வைத்தது கோயில்; இன்னும் என்ன பாக்கி சமுதாயத்தில்! என்று எண்ணிப் பாருங்கள். எனவே நம்முடைய சமயமும் சமுதாயமும் இணைந்த ஒன்று. அந்த உயர்ந்த சமுதாய நெறியை மீண்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! மீண்டும் மலேசியா நாட்டைப் பொறுத்த வரையில் ஆலயங்களின் ஒருங்கிணைப்புப் பேரவை மூலம் கோயில் தவறாமல் மதக் குருக்கள்மார்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொருவரையும் தொடர்ந்து சென்று பாதுகாக்க வேண்டும். ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்பர். இது மற்றவர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து ஊட்டுகிற அறிவு நினைந்து என்ன தேவை என்பது அல்ல ‘நினைந்து’ நாம் நம்முடைய சமூகத்தினுடைய தேவைகள் என்ன என்பதை அறிந்து செய்ய வேண்டும் என்பது. ‘பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்பதில் ‘சாலப் பரிந்து’ என்பதற்கு என்ன பொருள்? இப்பொழுது கூட சிலபேர் உதவி செய்வார்கள். ஏழை என்ற நோக்கத்தோடு செய்வார்கள்! கேட்டு விட்டான் என்பதற்காகச் செய்வார்கள். ‘தரித்திரம் பிடித்த பயல்’ என்று சொல்லிக் கொண்டே செய்வார்கள். அது அல்ல! மிக அன்போடும் பரிவோடும், வாங்குகிறவனும் சிவனின் பாத்திரம் என்று கருதிக் கொடுக்க வேண்டும். “பாத்திரம் சிவமதென்று பணிதிர்” என்பார் அப்பரடிகள். அந்தப் பாங்கோடு நடமாடுங் கோயில் என்ற பாங்கோடு கொடுக்க வேண்டும். என்பதைப் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து, பாவியேனுடைய ஊனினை உருக்கி என்பர். இந்தப் பாவியேனுடைய ஊனினை உருக்கி என்றால் சிலபேர் கொடுக்கப் பிரியப் படுவார்கள். ‘குடிகாரப் பயல்! இவனுக்கா கொடுப்பது என்பார்கள். குடிகாரப் பயனாக இருந்தாலும் நீ கொடுத்து, அணைத்து, வைத்து, உட்கார்ந்து பேசி, மனம் மாற்றித்தான் செய்ய வேண்டும்! அவனை என்றைக்குத்தான் குடிகாரனாக இல்லாமல் மாற்றுவது? இதில் தாயாக நிற்பவள் பாவி’ என்று பார்க்கமாட்டாள். தகப்பன் சில சமயம் அப்படிப் பார்த்து விடுவான்; தெருவாயிற்படி வழியாக விரட்டி விடுவான். ஆனால் கொல்லைவாயிற்படி வழியாக வரச் சொல்லித் தாய் சோற்றைப் போட்டு விடுவாள். காரணம், தாய் அன்பு தலையாய அன்பு.
ஆதலால், ‘பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி’ என்றால் பாவத்தன்மைகளை மாற்றி, அறிவை நல்கி, உள்ளொளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து, புறம்புறம் திரிந்த செல்வமே!’ என்றார். சிலபேர் சில புத்திசாலிகளிடம் கொடுத்தோம் என்றால், அவர் நீண்ட நாட்களுக்குப் பாதுகாத்து வைத்திருக்கிறாரா என்று பின்பற்ற வேண்டும். இப்பொழுது நானும் இருபத்தேழு ஆண்டுகள் கழித்துத் தான் வந்திருக்கிறேன். தொடர்ந்து பின்பற்ற முடியவில்லை.
மாணிக்கவாசகர் சொல்கிறார். 'புறம்புறம் திரிந்த செல்வமே' என்று. அது என்ன? ஒருவருக்கு ஒன்றைச் செய்தால் தொடர்ந்து அதைப் பின்பற்றி அனுபவிக்கிறாரா? என்று பார்க்க வேண்டும். தேவைக்குரிய குணங்கள் அமைந்த சமயம் நம்முடைய சமயம். இந்துப் பேரவை; ஆலயங்களின் ஒருங்கிணைப்புப் பேரவை. இந்த நாட்டில் இருக்கின்ற சமய அமைப்புகள் எல்லாம். உயர்ந்த நோக்கம் ஒன்றிற்காகத் தியாகம் செய்து, இந்த நாட்டில் எதிர்காலத்தில் நம்முடைய மேன்மைகொள் சைவநீதி நின்று விளங்க வேண்டும். அந்தப் பொறுப்பை நண்பர் கோடிவேல் அவர்கள் எடுத்து முடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்; எண்ணுங்கள்; சிந்தனை செய்யுங்கள்; வழிபாடு செய்யுங்கள்; அதன் மூலம் அளவு கடந்த ஆற்றலைப் பெற்று, உங்கள் பொறிகள் புலன்கள் வாயில்களிலே தேக்கி, வீட்டையும் வீதியையும் காப்பாற்றுங்கள்; வாழுங்கள்; வாழ்வியுங்கள் என்று கேட்டுக் கொண்டு வாழ்த்தி விடைபெற ஆசைப்படுகிறேன்.
7
ஈழத்துச் சொற்பொழிவுகள்
* * *
மாத்தளையில்
ஆன்மாக்களுக்கு ஆசையதிகம். மனிதர்களுக்கிருக்கும் ஆசையை அளவிட்டு உரைக்கவியலாது. ஆசையை அழித்து விடுதல் என்பதில் நமக்கு நம்பிக்கையில்லை. எந்த மனிதனுக்கும் ஏதாவதொன்றிலே ஆசையிருக்கத்தான் செய்யும். எல்லாச் செல்வங்களையுமேற்று-உண்டு- உடுத்து-உறங்கி வாழ விரும்புகின்றனர் சிலர்; செல்வாக்குப் பெருக்கால் சிறந்த பதவிகளைப் பெற்று வாழ ஆவல் கொள்கின்றனர் சிலர்; நாட்டை ஆளும் பேற்றினைப் பெற்று நனிசிறந்த தலைவர்களாக வாழ விரும்புகின்றனர் பலர். இவ்வாறு ஒவ்வொரு வகையான ஆசைகளுடன் மனித இனம் அலைந்து கொண்டிருக்கிறது.
நாமுங்கூட நல்ல அருள்நெறி வாழ்வு வாழ்ந்து அறச் செல்வர்களாகத் திகழ்பவர்களைக் காண ஆசைப்படுகின்றோம். ஆசையைப் பொறுத்தமட்டில் நாம் கைக்கொள்ள வேண்டியது ஒன்றேயொன்று-அதுதான் எல்லை. எதற்கும் ஒரு வேலி-எல்லை-வரையறை தேவைப்படுவது போலவே ஆசைக்கும் ஓர் எல்லை-வரையறை அவசியம் வேண்டும். மனிதனின் ஆசையுணர்வு அளவுக்கு அதிகமாக-எல்லை கடந்து செல்கிறபோது ஆபத்து நேருகின்றது. ஒரு வரையறையுடன் எந்த உயிருக்கும் இன்னலற்ற முறையில்-நன்மை பயக்கும் வகையில் ஆசை உருவெடுத்தால் அது போற்றப் பட வேண்டியதே.
மனிதனைக் குரங்குக்கு ஒப்பிடுவார்கள். இப்போதைய மனிதர்களில் சிலரைக் குரங்கோடு ஒப்பிடவும் முடிவதில்லை. இப்போதையச் சில மனிதர்களை விட குரங்கு எவ்வளவோ உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறதெனலாம். குரங்கினது இயல்பு வெள்ளிடைமலை. கொம்பு விட்டுக் கொம்பு தாவுவது அதன் இயல்பான செயல். அஃது ஒரு கொம்பை விட்டு மறு கொம்புக்குத் தாவும்போது முன்பு பிடித்த கொம்பை விட்டு விட்டுத்தான் தாவுகிறது. ஆனால், அளவு கடந்த ஆசை வழிப்பட்ட மனிதனோ ஒன்றை விட்டு ஒன்றைப் பற்ற முயல்வதில்லை. எல்லாவற்றையும் ஒரு சேரப் பற்றி நிற்க விரும்புகின்றான். இந்த எல்லை கடந்த-வரம்பு மீறிய ஆசைப்பெருக்கினாலேதான் அவன் பல அல்லல்களுக்குள்ளாக வேண்டியிருக்கிறது.
அருமையான ஓர் ஆங்கிலக் கதையுண்டு: பொன்னிலே ஆசை கொண்டவன், தான் தொட்டதெல்லாம் பொன்னாக விரும்பி இறைவனிடத்திலே வரம் வேண்டித் தவமிருந்தான். துன்பங்கள் பலவற்றைத் தாங்கித் தவமிருந்ததால் இறைவன் எழுந்தருளினார். “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டருளினார். “யான் தொட்டதெல்லாம் பொன்னாக அருள்பாலிக்க வேண்டும்” என்று பக்தியுடன் விண்ணப்பம் செய்தான். இறைவன் அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றி மறைந்தருளினார்.
வரம்பெற்ற நேரம் தொடங்கி வகை வகையான பொருட்களைத் தொட்டுத் தொட்டு அவைகளைப் பொன்னாக்கினான். பொன்குவியல் நிறைய நிறைய அவனது பூரிப்பு அளவு கடந்து அவனது உடலையே பூரிக்க வைத்தது. மகிழ்ச்சிப் பெருக்கு அவனைப் புது மனிதனாக்கியது. பசியெடுத்தது. உணவுக்குப் பக்கத்திலே போய் உணவைத் தொட்டான். அவ்வுணவும் பொன்னாகியது-பசி அவனை வாட்டி வதைக்கக் கவலை தலைகாட்டியது. சாப்பிட முடியாத நிலை வந்துவிட்டதை எண்ணி எண்ணி ஏங்கினான். இந்த வருத்தத்தோடு வேறொரு பெருவருத்தமும் காத்திருந்தது. பக்கத்தில் நின்ற தன் பிள்ளையையும் தொட்டான். அதுவும் பொன்னாகியது. ஆசைவெறியால் ஆண்டவனிடம் கேட்டுப் பெற்ற வரம். வயிற்றுக்குள் சோற்றையே அனுப்ப முடியாமற் செய்து விட்டதை நினைத்து “ஆண்டவனே! வயிற்றுக்குணவு கிடைத்தாலே போதுமானது” என அரற்றினான். ஆகவே ஆசைக்குக் கட்டுப்பாடு தேவை.
ஆசையை ஒழித்துவிடு என்பதைக் காட்டிலும் ஆசைக்கு எல்லை வகுத்துக்கொள் என்பது சாலச் சிறந்தது. ஏனெனில் ஆசை மனிதனைப் பொறுத்தமட்டில் ஒழிக்க முடியாதவொன்று. ஒரு சில நன்மைக்காக ஒரு சிலர் ஆசையுணர்வுக்குத் தடை விதிக்கலாம். பொதுப்படையாகச் சமுதாய வாழ்வில் ஆசையை அழிக்க முயல்வது முடியாத காரியம்-வரையறை செய்து கொண்டு வாழ்தலே இயலும்.
அன்பை-அறத்தைப் பேணி வாழ நாம் ஆசைப்பட வேண்டும். அறஞ்செய்வதற்காகவே வாழ்கிறோம் என்ற நினைப்போடு-அறமற்றவைகளை அறவே தள்ளி இன்பத் தமிழ் நாட்டினுடைய இணையற்ற பண்பினைக் காக்க ஆசை கொள்ள வேண்டும்.
‘அறத்தால் வருவதே இன்பம்’ என்ற கோட்பாட்டுக்குத் தலை சாய்த்து வாழ்ந்ததனாலேதான் பழந்தமிழகம் பாரில் உயர்ந்து பண்புவழிச் சிறந்திருந்தது. அகத்திலே அன்பை வளர்க்கவும் அறத்தைப் பேணவும் சமயச் சார்புடைய வாழ்வு தேவை. மனித வாழ்வுக்கு ஒரு கொள்கை-ஓர் ஒழுங்கு வேண்டும். அத்தேவைகளைச் சமய வாழ்வினாலே பெறமுடியும். ஒரு மனிதனுக்கு நல்ல கொள்கைப் பற்றும், ஒழுக்கமும் வாய்த்தவுடன் பிறர் நலம் பேணுகின்ற மனப்பண்பு உண்டாகும்; அந்த மனப்பண்பு பிறர்க்குத் துன்பம் கொடுக்காமல் வாழ்வதோடு பிறர்தருந் துன்பத்தைப் பொறுக்கும் பெற்றியையும் நல்குகின்றது.
தமிழரின் சமயப்பண்பு தன்னிகளில்லாதது; தலையாயது. அது பாவம் செய்யாதே என்று போதிக்காமல் பாவம் செய்ய நினைக்காதே என்கிறது. அது போலவே கொலை செய்ய நினைக்காதே, திருட நினைக்காதே என்கிறது. கொலை செய்தால்-திருடினால் பாவம் என்றும் சொல்லலாம். அவற்றை மனத்தில் நினைத்தாலே பாவம் என்று கூறுகிறது. இதிலிருந்து தமிழருடைய சமயநெறி சமுதாயத்தில் அன்பையும் அறத்தையும் உருவாக்க உழைத்திருக்கிற தென்பது புலனாகிறது. ஆன்மீக ஈடேற்றத்துக்குத் தமிழர் சமயம் தலைசிறந்த வழிகளைக் காட்டியிருக்கிறது. வழி வகைகளைக் காட்டியதோடமையாது, அவ்வழிப்பட்டு வாழ்ந்து வளமான நிலையையும் பெற்றிருக்கிறது. புறவாழ்வின் சிறப்புக்கு அகவாழ்வின் துணை இன்றியமையாததென்பதை உணர்ந்து உணர்த்திய சமயம் தமிழர் சமயம். அகப்புரட்சியின் பயனாகவே புறவாழ்வைத் தூய்மையுடையதாக ஆக்க முடியு மென்று எண்ணிச் செயல்பட்ட பண்பு பாராட்டி மகிழ்தற்குரியது.
சில வீடுகளிலே வெளிச்சுவர்களுக்கு வெள்ளையடித்து உட்சுவர்களைப் புறக்கணிக்கிறார்கள். வெளிச்சுவர், பார்ப்பவர்களின் பார்வையை ஈர்க்குமேயொழிய அவ்வீட்டில் வாழ்பவர்களுக்குப் பயன் தராது. உட்சுவர் துய்மையற்று இருந்தால் வீட்டிலுள்ளவர்களின் நல்வாழ்வு பாழ்பட்டுப் போகும். ஆகவே உட்சுவரின் துய்மையைக் கவனித்த பின்பே வெளிச்சுவரைத் துய்மையாக்க முனைய வேண்டும். மனித வாழ்விலுங்கூட அகவாழ்வைப் பற்றிய சிந்தனைக்குப் பின்பே புறவாழ்வைப் பற்றிய எண்ணம் எழவேண்டும். அதுவே மனித மரபு-தமிழ் மரபு. புறப் புரட்சியின் வெற்றிக்கு அகப்புரட்சி துணைசெய்யும். மணிவாசகர் போன்ற அனுபூதி மான்கள் அகத்துறைப் புரட்சியையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து உயர்ந்தார்கள்.
எனவே, ஆசைக்கு வரையறை வகுத்து, அன்பும், அறனும் கொண்ட வாழ்வு வாழ்ந்து, புறவாழ்வின் தூய்மைக்கு இன்றியமையாத அகவாழ்வை-ஆன்மீக வாழ்வைத் தூய்மையாக்கித் துன்பம் கண்டவிடத்துத் துடித்து-உடுக்கை இழந்தவன் கைபோல விரைந்து வேண்டியது செய்து என்றும் எல்லா உயிர்களிடத்தும் பற்று வைத்து வாழவாழ்த்தி விடை பெறுகின்றோம். வணக்கம்.
நாவலப்பிட்டியில் - 1
அன்புக்கும் பாராட்டுக்குமுரிய அவைத் தலைவர் அவர்களே! அறிஞர் பெருமக்களே! பெரியோர்களே! தாய்மார்களே! நண்பர்களே ! நடமாடுந் தெய்வங்கள் கோவில் கொண்டிருக்கும் இந்நாவலப்பிட்டியிலே படமாடுந் தெய்வத்திற்கான திருமுறை விழாவிலே கலந்து கொள்ள நேர்ந்தமைக்குப் பெருமகிழ்வும் பூரிப்பும் அடைகிறோம். வரலாற்று வழியிலே கண்ணோட்டத்தைச் செலுத்துகின்ற போது, காலத்தால்- கருத்தால்-நாகரிக முதிர்ச்சியால் மூத்த பழமையுடைய இனமாக மிளிர்கிறது நமது தமிழினம். அத்தகைய இனத்தின் தனிச்சொத்துக்களாக, உலக இனங்களின் நலனில் நாட்டம் கொண்ட தத்துவங்களாக ஒளிர்கின்றன திருமுறைகள். திருமுறைகளைப் பயில்வதனாலே சமய அறிவு பெறுவதோடு, காலப்போக்கில் சமய உணர்வை-அனுபவத்தை நாம் பெறுகிறோம்; வாழ்க்கையில் இன்பத்தை அடைய அவாவுறும் நாம் திருமுறை நெறிகளால் பேரின்பப் பேற்றினையும் அடைகின்றோம். கடவுளை எங்கோ துரத்தில் வைத்து வணங்கிய நிலைமாறி மிகமிக அண்மையில் எம்பிரானை அழைக்க, காண வாழ்த்த வணங்கத் திருமுறைகள் வாய்ப்பளிக்கின்றன.
திருமுறைக் கடலிலே ஆழக் குளிக்கின்ற போது, சமுதாய நன்மைக்காக-மனித இன மேம்பாட்டிற்காகப் பாடுபட்டுழைக்க வேண்டுமென்ற வேட்கையுண்டாகின்றது. நாடு உய்யவந்த நாவுக்கரசரது திருவார் தேவாரத் திருப்பதிகங்களினாலே தீதற்ற திறமையும் திண்மையும் நிரம்பி, உள்ள உறுதியையும், பிறர்க்காக உழைத்துப் பேரின்பமடையும் மனோ பாவத்தையும் பெறமுடிகிறது. மனிதகுல வாழ்வுக்கும் வளத்துக்கும் அயராது சிந்தித்த சிந்தனைச் செம்மல்களில்- பேராசிரியர்களில் அப்பரடிகளும் ஒருவர். நமது கருத்துப்படி அப்பரடிகள் தொண்ணுறு விழுக்காடு சமுதாய மலர்ச்சிக்காகப் பாடுபட்டிருக்கிறார்.
தமிழ்ச் சமூகத்தின் மொழிவழி நாகரிகத்தையும் அவர் பேணிக்காக்கப் பெருந் தொண்டாற்றியமை மறக்க முடியாதது. சமணத்தின் நுழைவினால் சைவசமயமும் தமிழும் குன்றக் குற்றுயிராகிக் காலப்போக்கில் மறைந்தொழிய ஏதுவாகுமெனக் கருதியே, சமணர்களால் உண்டான இன்னல்களை எல்லாம் எதிர்த்துப் போராடினார்; இசையைத் துய்க்கத் தெரியாத-அனுபவிக்கத் தெரியாத அன்றையச் சமணர்கள், மலரை மணக்காதே என்பது போல் இசையைப் பொழியாதே என்பதுபோல் இசையைச் சுவைக் காதே எனத் தடை போட்டார்கள். தடைவரினும் படை வரினும் தளராது தன்னம்பிக்கையால் - உளவலிமையால் இன்னிசை பொழிந்து இசைத்தமிழ் வளர்த்தார் அப்பரடிகள்.
பிறர் நலம் பேணுகின்ற உள்ளத்தினரான அப்பரடிகள் அல்லும் பகலும் அறவாழி அந்தணன் தாளை இறைஞ்சி இறைஞ்சி அவனது ஆன்மாக்களிடத்து அன்பு காட்டி அரும்பாடுபட்டார்.
தொண்டலாது உயிர்க்கு ஊதியமில்லை
என்கடன் பணி செய்து கிடப்பதே!
என்பன போன்ற வரிகள் அப்பரடிகளின் தொண்டுள்ளத்தைத் தெளிவாக்கி நிற்பன. திருமுறைப் பாசுரங்களிலே என்னைப் பிணித்து உருக வைத்தவை மணிவாசகரின் திருவாசக மழையும், திருநாவுக்கரசரது தேவாரத் திருவமுத மழையுமேயாம். நாள்தோறும் நேரங்கிடைக்கின்ற போதெல்லாம் அப்பருடன் அருண்மணி வாசகருடன், பொழுதைப் போக்குவதில் பேரின்பமடைகின்றேன்.
பலர் இறைவனைக் காட்சிப் பொருளாக - கோயிற் பொருளாக-கற்பனைப் பொருளாகக் காண்கின்றனர். ஆனால் திருமுறைச் செல்வர்களோ கருத்துப் பொருளாக அனுபவப் பொருளாக-வாழ்வுப் பொருளாகக் கண்டார்கள். நமக்கும் அப்படியே காட்டுகின்றார்கள். புலன்வழித் தொண்டினால் கடவுள் நெறிகாட்டிப் பொறிவழித் தொண்டினால் மக்கள் சேவையின் மாண்பினை உணர வைத்திருக்கிறார்கள். நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தரின் தீந்தமிழ்க் கவிகள் கருத்தைக் கரைய வைத்துச் சமயச்சார்புடைய சிந்தனைக்கு வித்திடுகின்றன; ஆளுடைய பிள்ளை அருளிய எளிய இனிய தமிழ்ப் பனுவல்கள் அருள்வாழ்வுக்கு நம்மை யாற்றுப்படுத்து கின்றன. குறிக்கோளில்லாது கெட்டொழியும் நமக்கு நல்லதொரு கொள்கைப் பற்றை-இலட்சியத்தை- குறிக்கோளைத் திருமுறைகள் கொடுக்கின்றன; தமிழ் நெடுங் கணக்கிலேயுள்ள உயிரெழுத்துக்கள் பன்னிரண்டினைப் போல் பழமைவாய்ந்த நீண்ட சமயவரலாற்றிலே பன்னிரு திருமுறைகளும் உயிர்போன்றவைகளாகத் திகழ்கின்றன.
துன்பங்களை இன்பங்கள் எனக்கருதும் அறியாமையினால் மனிதன் அல்லலுறுகின்றான்; வீதியிலே நடக்கின்றான்; ஏதோ சில எண்ணங்களினால் தன்னையும் தான் நடந்து செல்கின்ற சாலையையுமே மறக்கின்றான்; வழி பார்த்து நடக்காமையினால் கல்லில் மோதுகின்றான்; காலில் புண்ணுண்டாகி விடுகின்றது “காலில் என்ன கட்டுப் போட்டிருக்கிறாயே!” என்று யாராவது கேட்டால் “கல் இடித்துவிட்டது” என்று கூறித் தன்குற்றத்தைக் கல்லின் மேல் சுமத்திவிடுகின்றான். அதுபோலத்தான் உயிர்கள் அறியாமை யினாலே பலப்பல அல்லல்களுக்கு ஆளாகின்றன.
நங்கை ஒருத்தி ஆமைக்கறி சமைக்கிறாள். அடுப்பிலே தீ மூட்டி ஆமை போட்ட உலையை ஏற்றுகிறாள்! சற்றுச் சூடானதும் ஆமையைப் பக்குவப்படுத்த எண்ணுகின்றாள். உலையிலே சிறுகுடு ஏறியதும் உள்ளிருந்த ஆமையின் உள்ளம் இன்பம் அடைகின்றது. சதா காலமும் குளிர்நீரிலே வாழ்ந்த ஆமைக்கு இளஞ்சூடு இதங்கொடுக்கின்றது, இன்பமளிக்கிறது. உலைப்பானைக்குள் மகிழ்ந்து ஓடியாடித் திளைக்கிறது. அறியாமையின் கொடுமையை அந்த ஆமை சிறிது நேரத்தில் அனுபவிக்கத்தான் போகிறது. இளஞ்சூடு கடுஞ்சூடானதும் இந்த உலகத்தையே இழக்கப் போகிறோமோ என்று உணரும் ஆற்றல் அதற்கு அப்பொழுது இல்லை. காரணம்? அந்த ஆமையின் அறியாமையே! அது போலவேதான் உயிரினங்கள் அனைத்தின் உள்ளமும் உணர்வும் இருக்கின்றன.
வாழ்க்கை என்ற அடுப்பு - அனுபவம் என்ற பானை- ஆர்வம் என்ற தண்ணீர் உயிராகிய ஆமை; ஆசையென்ற தீ எரிகிறது. உலகியல் இன்பமாகிய இளஞ்சூடு உயிரை இதப்படுத்துகிறது. பாவம்! அறிவிலே தெளிவில்லாததால் உயிர் அல்லற்படுகிறது. இத்துன்பத்தினின்று நீங்கி எல்லையில்லா இன்பம் பெற உதவும் சமயக் கோட்பாட்டின் தலையாய தொகுப்பே திருமுறைகள்.
திருமுறைகளிலுள்ள பாடல்கள் தெய்வமணங்கமழும் செய்யுட்களாகவும், தீந்தமிழ்ச் சுவை சொட்டும் தெய்வீகக் கனிகளாகவும் திகழ்கின்றன. பத்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய நமது நாயன்மார்களின் பாடல்கள், பரமன்பதம் நாடுவதற்கும், பரமன் விரும்பும் செயல்களைச் செய்வதற்கும் தூண்டுகோல்களாய்த் தோன்றுகின்றன. நாளுக்கு நாள் நாழிகைக்கு நாழிகை-அவகாசங் கிடைக்கும் போதெல்லாம் திருமுறைகளைப் படித்து அனுபவித்தால் இனிய பரிபூரண் ஆனந்தத்தில் திளைக்க முடியும் என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. நெஞ்சைத்திறந்து நேசத்தைப் பெருக்கி அகத்தில் ஊற்றெடுக்கும் அன்பினை வெளிக் கொணர்ந்து அறமானவைகளைச் செய்து அருட் செல்வர்களாக வாழவைப்பவை திருமுறைகள். இறையருளால் இன்னல் களைந்து இன்பமடைந்து இறும்பூதடையச் செய்வதோடு சிவனைப் பற்றியும் சிவனருள் ஆர்ந்த செல்வர்களைப் பற்றியும் - சிவத்தலங்களைப் பற்றியும் தெளியத் திருமுறைகள் உதவுகின்றன.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் சைவப் பெருமக்களுக்கு வாய்த்த தெய்வத்தமிழ் வேதமாகும். இறைவன் எல்லா உலகத்திலும் இருப்பவன்; அவனுக்குத் தென்னாட்டிலே அருமையான செல்லப் பெயருண்டு. அதுதான் சிவன் என்பது. “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்ட வர்க்கு மிறைவா போற்றி” என்கின்றார் மணிவாசகர். தென்னாட்டிலே சிவனாகக் கருதப்படுகின்ற நமது கடவுள் நாம் வாழ நமக்கு இடையூறாய் இருப்பவைகளைத் தானே எடுத்துக்கொண்டார். இதிலிருந்து இறைவனின் தாய்மை நிலையை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். பாம்பும் புலித்தோலும் பார்க்குமிடத்து எவர்க்கும் தேவையற்றவை. அவற்றினை அவரே எடுத்துக் கொண்டார். குழந்தையின் நன்மையையும் வளர்ச்சியையும் குறிக்கொண்டு காக்கும் ஒர் உத்தமமான தாய் பத்தியமாக இருப்பது போலவே ஆன்மாக்களைப் பொறுத்தவரை அண்ட சராசரம் அனைத்தையும் ஈன்று புறந்தரும் அன்னையாக ஆண்டவன் இருக்கின்றான். “தாயிற் சிறந்த தயாவான தத்துவனாகவும்”, “பால் நினைந்தூட்டுந் தாயினுஞ்சாலப் பரிவுடையவனாகவும்” இருப்பதை அனுபவத்திலே கண்டு மணிவாசகர் பாடியருளினார்.
இத்தகைய இறையின் இயல்புகளைத் தெளிவாக்கி உலகுக்கு ஒளிபரப்ப எழுந்த சாதனங்களே திருமுறைகள் ஐம்புலவேடர்களின் இயல்புகளைக் குறைத்து-மறைத்து மாண்பார் நிலைக்கு மாந்தரை உயர்த்த உதவுவன நமது சைவத்திருமுறைகள் என்று அழுத்தமாகக் கூறி வாழ்த்தி விடைபெற ஆசைப்படுகின்றோம்.
நாவலப்பிட்டியில் - 2
அடியார்கள் பலர் வாழ்ந்தார்கள். அற்புதங்கள் பல புரிந்தார்கள். வேதம் பாடும் இறைவனை இன்தமிழ்ப் பாக்களால் ஏவல் கொண்டார்கள். இதயங்கலந்த உறவும் இன்னிசைப் பொழிந்த மெய்யடியார்களின் மேன்மைக்கு உதவி புரிந்தன. சைவ நன்மக்களின் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் ஏனைய இனத்தவர்க்கும், மதத்தவர்க்கும் நமது அடியார்கள் பயன்பட்டிருக்கிறார்கள். அவர்களது சிந்தனை ஆழியினின்றும் எடுக்கப்பெற்ற தத்துவமுத்துக்கள், நம்மை வாழவைப்பதுடன் வாழ்க்கை இன்னதுதான் என்று காட்டியும் நிற்கின்றன.
நமது நாயன்மார் வரலாற்றில் சுந்தரர் வரலாறு நாம் அறிந்திருக்கவேண்டிய ஒன்றாகும். இல்லறத்தில் வாழ்ந்து இன்னல்களுக்கு இலக்காகி இறைவனடி சேர்ந்த வரலாறு; அது தமிழர்களின் கருத்துடன் கலந்து நிற்கத்தக்கது. துன்பத்தின் போது சோர்ந்து வாழ்க்கையில் விரக்தி கொள்பவர்களைத் தட்டியெழுப்பி, வாழ்க்கையில் பிடிப்பை உண்டாக்கவல்லது சுந்தரர் வரலாறு.
சுந்தரர் வாழ்க்கைக்கடலில் ஆழக்குளித்து முத்தெடுத்தவர். அவரது காலம் கருத்துக்காலம் - கருத்தாளரை மதித்து நடந்த நாகரிகக்காலம். வழிவழியாக அந்த விழுமிய நாகரிகம் காப்பாற்றப்படாதது வருத்தத்தைத் தருகிறது. ஈன்று புறந்தருதலில் நம் தலைவர்கள் பின் நிற்கவில்லை. நாம்தான் பேணிக்காக்கத் தவறிவிட்டோம். தவற்றினை உணர்ந்து தக்கபடி செயல்பட்டால் இனியாவது நல்லகாலம் பிறக்கலாம். வையத்துள் வாழ்வாங்கு வாழ வள்ளுவர் தந்த கருத்தினை நல்லபடி நடைமுறைக்குக் கொண்டுவர நாம் இன்னும் அதிக கவனம் எடுக்கவில்லை.
நம்மிடையே இருக்கும் கருத்துக்களைப்பற்றிச் சிந்திக்காமல் இறக்குமதிக் கருத்துக்களில் எண்ணத்தைத் திருப்பி விட்டிருக்கிறோம். வீட்டுத் தோட்டத்திலே கத்தரிக்காய் காய்த்துக் குலுங்கிக் கிடப்பதைக் கவனியாது - சந்தைக்குப் போகும் நிலைமைக்கு நாம் வந்திருக்கிறோம். சுந்தரர் காலம் வீட்டிலே காய்த்த கத்தரிக்காயைச் சமைத் துண்டகாலம். விரிந்த மனப்பான்மையோடு மற்றையோர் கருத்துக்களைப் பாராட்டி நம் கருத்தை வளர்க்க நாம் முனைய வேண்டும். நம்நாட்டு நயத்தக்க நாகரிகத்தின் சிறப்பினுக்கு, நமது கருத்துக்கள் பரவிய முறையினை எடுத்துக்காட்டலாம். மற்றைய நாடுகள் இரத்தம் சிந்தியே கருத்துக்களை வளர்த்தன - பரப்பின. தென்னாட்டிலே அப்படியில்லை. கருத்து வழிப்போராட்டம் அதிகம் இருந்தது போலவே கனிவும் அவற்றுடன் இழையோடிருந்தது.
புத்திக் கூர்மையும், தூய நோக்கமும் கொண்டவர்களது ஊக்கத்தினாலேயே புரட்சிகள் உண்டாகின்றன. கருத்துவழிப் புரட்சிக்கு நமது சமயக் குரவர்கள் பலகாலமும் முயன்றிருக்கிறார்கள். மணிவாசகர் இறைவனைக் காதலியாகவும் தன்னைக் காதலனாகவும் உருவகப்படுத்திக் கருத்துப் புரட்சி செய்தார். இப்படியே, ஆண்டவனை அப்பனாக, அம்மையாக, மாமனாக, மாமியாக, உருவகித்துப் புரட்சி செய்திருக்கிறார்கள். நமது சுந்தரரின் நிலை தனியானது. அவர் இறைவனைத் தோழனாக்கினார். மனம் விட்டுப்பேச நண்பன் தேவை. எல்லா நண்பர்களிடத்தும் மனம் விட்டுப் பேசுதல் என்பது முடியாத காரியம். சிலர் புறத்தால்-முகத்தால் நண்பர்களாகவும், அகத்தால் பகைவர்களாகவுமே இருப்பார்கள். எவருக்கும் உயிர்க்குயிராக ஒரு நண்பன்தான் இருப்பான். இந்த விதிக்கு விலக்காக ஒருசிலர் இருக்கலாம்; ஆனால் எல்லாரும் இருக்க இயலாது; இருக்கவும் முடியாது. வாழ்க்கை அனுபவத்தில் உண்டாகும் அந்தரங்கங்களையும் அவலங்களையும் மனம்விட்டு உயிர்த் தோழனிடம் நாம் சொல்லுவது போலவே, சுந்தரர் இறைவனைத் தன் உயிர்த் தோழனாக்கித் தன் இன்னல்களை மனம்விட்டுச் சொன்னார்.
தோழமைக்கு இந்த இருபதாம் நூற்றாண்டில் அதிக சக்தி உண்டு. மேடையிலே நின்று அவையைப் பார்த்து, அன்பர்களே! பெரியோர்களே! என்றோ சகோதர சகோதரிகளே! என்றோ, சீமான்களே! செல்வர்களே! என்றோ விளித்தால் அவ்வளவு வரவேற்புக் கிடைப்பதில்லை. தோழர்களே! என்றவுடன் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி ஆரவாரத்தையும் கையொலியையும் காணமுடிகிறது. இத்தகைய சக்திவாய்ந்த தோழமை சுந்தரர் காலத்திலேயே, அதுவும் ஆண்டவ னிடத்திலேயே உண்டாகிய தொன்றாகும்.
சுந்தரர் உள்ளத்தால் ஞானி; உடலால் உலகியலார், சுந்தரரின் வாழ்க்கை நகைச்சுவை நிரம்பியது. இரண்டு மனைவியரை மணந்தார். ஆற்றில் போட்டுக் குளத்தில் எடுத்தார். கலப்புத் திருமணம் செய்து சமுதாய வேறுபாடுகளை ஒழித்தார். ஒருவனிடத்தில் மட்டுமே கடன்பட்டார். அதுவும் தன் தோழனான ஆண்டவனிடத்திலேயே தேவைகளை வேண்டிப்பெற்றார். இப்படிப் பலப்பல உண்டு.
“தம்பிரான் தோழன்” என்ற பெருமையும் பெருநலமும் எய்திச் சைவப் பெருமக்கள்வாழ வழிகண்டார் சுந்தரர். மாழை ஒண்கண் பரவையாரைத் திருவாரூரில் மணந்தார். குண்டையூர்கிழார் அன்பின் வேண்டுகோளால் ஊர் நிறைந்த நெல்லைத் தந்தவனைக் கொண்டே திருவாரூரில் தருவித்தார். இங்கு இறைவனை ஏவல்கொண்ட தன்மையை நினைக்குந் தோறும் “ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே!” என்ற அடியை எண்ணுந்தோறும் உள்ளம் உருகுகின்றது. செங்கல்லைச் செழும் பொன்னாக்கினார். அருள் நெறியை மறந்து, ஆன்ம ஆக்கத்தைத் துறந்து பொருள் நெறிப் போரில் போய்க் கொண்டிருக்கும் நமக்கு இச்செய்திகள் வியப்பைத்தான் தரும். ஆனால் சுந்தரரது அருட்பாக்களை - அவர் சிவனை வேண்டிப்பாடும் கசிவை உணர்ந்தோமானால் அவரது பாசுரங்களுக்கு மிகப்பெரு வலிமை இருந்தது-இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வோம்.
திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து “பிரியேன்” என்று சத்தியம் செய்தார். ஆயினும் திருவாரூர் இறைவனிடம் காதல் மீதுர அச்சத்தியத்தை மறந்தார். ஆம்! மன்றுளாடியைப் பாடவேண்டி மறந்தார். ஊர் எல்லை தாண்டியதும் கண்களை இழந்தார். இங்கேதான் சுந்தரரின் செந்தமிழ் உச்சநிலையை அடைகிறது. “மூன்று கண்ணுடையாய் என்கண் கொள்வது நீதியோ?” என்று கேட்டார். “மகத்திற் புக்கதோர் சனியெனக்கானாய்” என்று ஏசினார். “வாழ்ந்தும் போதிரே” என்று திட்டினார். இறைவன் கண்கொடுக்காமல் இருக்கமுடியுமா?
ஊடலுற்ற பரவையார்பால் மூவருமறியா முக்கண்ணனைத் தூதுவிட்டார். இதனால் கலிக்காமரின் பகையைப் பெற்றார்."இறைவனால் சந்து செய்து வைக்கப்பட்டார். திருப்புக்கொளியூர் அவினாசியிடம் முடியாத ஒன்றை முடிப்பித்தார். முதலை உண்ட பாலனை அழைப்பித்தார். அரன் அடிசேர்ந்தார் பிறர் போன்றாரல்லர். இவ்வுடலுடனேயே வெள்ளை யானையில் வேண்டிய நண்பர் உடன்வர வெள்ளியங்கிரியை அடைந்தார்.
சுந்தரர் பெருமையைச் சொல்லமுடியாது. இறைவனின் திருவாயால் “மேருவரையின் மேம்பட்ட தவத்தான்” என்று புகழப்பட்டார். கல்வியில் மேம்பட்ட சுந்தரர் எல்லாவற்றுள்ளும் இனிய கடவுளை, “கற்ற கல்வியினும் இனியான்” என்றும், “பண்ணிடைத்தமிழ் ஒப்பாய்” என்றும் வாழ்த்தினார். என்னே அவர் செந்தமிழ் ஆர்வம்! அவர் ஆராய்ச்சித் திறம் இக்கால வரலாற்று ஆராய்ச்சியாளரையும் பிரமிக்கச் செய்கின்றது.
சுந்தரரது காலம் சமயத்துக்கு மதிப்பளித்த நல்ல காலம்; ஆனால் சமயத் தொண்டர்கள் நலிந்து வாடிய காலம். இன்றோ சமயத் தொண்டர்கள் நன்றாகத்தான் இருக்கிறோம். ஆனால் சமயத்துக்குத்தான் நல்லநிலை இல்லை. சூழ்நிலை இப்படி மாறியது வருந்தத்தக்கது. சூழலைமாற்ற-உருவாக்க மனிதனால் முடியும். ஆகவே, பொன்கேட்டு, பெண்கேட்டு, கண்கேட்ட சுந்தரரின் காலத்துச் சமயநிலையை உண்டாக்க நாம் உழைப்போம் என வேண்டி-வாழ்த்தி விடை பெறுகிறோம்.
பதுளையில்
இந்த உலகிலே எதையும் இழக்கலாம் - மறக்கலாம். ஆனால் தாய்மொழியை இழக்க இயலாது; மறக்க முடியாது. தன் சொந்த மொழியை இழந்து மறந்து பிறமொழிப் பற்றுக் கொண்டு வாழ்தல் பொய்க்காலில் நடப்பதற்குச் சமமாகும். எந்த இனமும் தத்தம் மொழியைப் பேச - பேண முன்வருவது போலவே தமிழர்களாகிய நாமும் முன் வரவேண்டும். தமிழ் உணர்வுகொண்டு, தமிழ்ச்சிந்தனையால் தமிழ் நாகரிகம் காக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும், எல்லாக் கட்டத்திலும் தமிழ் வாழ்வு வாழ விருப்பங்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் தமிழ்வழி நல்லோர்களாய், தண்டமிழ்ச் சிறார்களாய்ச் சிறக்கமுடியும்.
தமிழையே பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டு வாழ்ந்ததனாலேதான் அன்றையத் தமிழின் தகைமை சான்ற தன்னிகரில்லாத வாழ்வு வாழ முடிந்தது. தமிழ், வாழவும் வாழ வைக்கவும் போதிக்கும் ஒரு செம்மொழி. உறவாடி மகிழவே மொழி உதவுகிறது. உணர்ச்சிகளை வாயாலே காட்டுவதுடன் கண்ணாலும் முகத்தாலும் காட்டிவிடலாம். ஆனால் உணர்ச்சியைச் செம்மைப்படுத்தி உறவாட உதவும் கருவியாக நமது மொழி கருதப்பட்டது.
இன்றைய நிலையில் கலப்பு வந்துவிட்டது. சந்தேகமும் சலனமும் இக்கலப்பால் தலைகாட்டுகின்றன. இறைவனிடத்தில் உறவாடக்கூடக் குறிப்பிட்ட ஒரு மொழிதான் வேண்டுமென்று வலியுறுத்துபவர்களை இன்று காண்கிறோம். எல்லாம் வல்ல - எல்லாம் அறிந்த எம்பெருமான் குறித்த ஒரு மொழி மட்டுமே தெரிந்தவராக இருக்கமாட்டார். தேவமொழியாக ஒரே மொழியை விரும்பி, அம்மொழிவழித் தொடர்புகளுக்குத்தான் செவிசாய்ப்பவராக இறைவன் இருப்பாரா? சுரண்டலும் சுயநலமும் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், கடவுளின் பெயரால் சிலர் செய்த கண்மூடித்தனமான பொய்ப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது. கடவுளை எங்கோ ஓரிடத்தில் வைத்து, எவரோ ஒருவரைத் துணைக்குக் கூப்பிட்டு, வழிபாடு நடத்தாத காலத்தில் குறிப்பான சில சடங்குகளும் குறித்த ஒரு மொழியும்தான் கடவுள் நெறி காண உதவும் என்ற கோட்பாடு வளரவில்லை. தமிழர், முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் முதல்வனை வழுத்தினார்கள்; வாழ்த்தினார்கள். அந்த வாழ்த்துதலுக்கு இறைவனின் இசைவும் இருந்தது. அத்தகைய இசைவினை இப்போதும் பெறலாம். பெறவும் முடியும்.
நல்லவர்களை உருவாக்கும் பண்ணைகளான தேவாலயங்களில் தாய்மொழியில் வழிபாடு இன்றியமையாத ஒன்றாகும். இதயதாபங்களை அடக்கி-அழித்து இனிய நிலையை உருவாக்க, தாய்மொழியால், எந்தையும் தாயுமான மங்கைபங்கனைப் போற்றிப் புகழவேண்டும். “வடமொழியும் தென் தமிழும் ஆனான் கண்டாய்” என்ற தத்துவம் இப்பொழுது நடைமுறையில் அதிகமாக இல்லாதது வருத்தத்தைத் தருகிறது. இறைவன் தமிழ் மொழியில் எவ்வளவு பற்று வைத்திருந்தான் என்பது வரலாற்று மூலமாகவே கண்டு மகிழக்கூடியதாய் இருக்கிறது.
வேதம் ஓதி விழிநீர் பெருக்குவதைப் போலவே திருமுறைகளை ஓதியும் விழிநீர் பெருக்கலாம். திருமுறைச் செல்வர்களில் ஒருவரான மணிவாசகப் பெருமான் “நானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்று அரற்றி அழுது அருளார் அமுதம் பெற்றார். அழுவதற்கு உள்ளம் உருகவேண்டும்; உணர்ச்சி கசிய வேண்டும். அவைகளின் நெகிழ்ச்சிக்குத் தாய்மொழிதான் உதவும். எந்த மொழி வல்லுநனும் தன்னையொட்டிய சிந்தனையைத் தன் சொந்த மொழியிலேதான் சிந்திக்கிறான். அதைப் போல் நம்மைச் சார்ந்த வழிபாட்டுச் சிந்தனையும்-சிந்தனை வெளிப்பாடும் நமது தாய்மொழியிலிருந்தால் நலம் பயக்கும்.
தமிழருக்குச் சொந்தமான சில தகைமை இருப்பது போல, இறைவனிடத்தில் சொந்த மொழிவழித் தொடர்பும் இருக்க வேண்டும். இப்படிக் கூறுவதால் எம்மை வேற்று மொழி வெறுப்பாளர் என்று எண்ண வேண்டாம். மொழித் தொடர்பினால் - காலத்தால் மூத்த சமய குரவர்கள் சிறப்புற வாழ்ந்தது போல நாமும் வாழவேண்டுமென்ற விருப்பு நமக்கு உண்டாக வேண்டும். வேற்று மொழியை ஆதரித்து நமது மொழியைப் போற்ற வேண்டும். வடமொழியில் வேதம் என்பதை நாம் மறை என்று தமிழ் ஆக்குகிறோம். வேதம் என்பது வேய்தல் அதாவது மூடுதல் எனப்படும் ஆணவத்தை மூடிமறைக்க வேதங்கள் உதவுகின்றன. நமது தமிழ் மொழியில் முகிழ்த்த வேதமாகத் திருக்குறளைக் கருதுகிறோம். அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய உறுதிப்பொருள்களைத் தர எழுந்த வேதம் குறள். தமிழில் பெரும் பெரும் வேதங்கள் உருவாகி இருந்திருக்கலாம். ஆனால் கடல் கோள்களினாலும் பூகம்பங்களினாலும் அழிந்து மறைந்திருக்கலாம். இப்பொழுது நமக்கு உதவுவன திருமுறைச் செல்வங்களே. இச்செல்வங்கள் கூட மூடிமறைக்கப்பட்டிருந்தன. சிலர் தம் ஆதிக்க வாழ்வு - ஆட்டங் கண்டு விடுமென்றஞ்சித் திருமுறைகளை மறைத்துப்பூட்டினர். சிதம்பரத்திலே மறைத்திருந்த திருமுறைகள் ஆண்டவனின் விண்ணொலியாற் பெறப்பட்டன. அவற்றை நம்பியாண்டார்நம்பி தெரிந்து தமிழுலகுக்கு அளித்தார். அத்திருமுறைகள் மறைக்கப்பட்டதோடு மறைந்தொழிந்திருந்தால் இப்பொழுதிருக்கும் நமது நிலை என்னவாக இருக்கும்? தத்துவப் பெருக்கால் தம்மை உயர்ந்தவர்களாக எண்ணி இறும்பூதடையும் சிலர் நம்மை எப்படி இழித்துரைப்பார்கள்.
“கல்லைப் பிசைந்து கனியாக்கி” என்பதுபோல-நம் நெஞ்சக் கனகல்லை நெகிழவைக்கத் தாய்மொழி வழிபாடு உதவுகிறது. வழிபாட்டிற்குக் காதல், கனிவு, கசிவு தேவை. சிந்தனைவழியாகவே காதல், கசிவு, கனிவு போன்றவை பிறக்கும். காதலும் கசிவும் உண்டாகிவிட்டால் கோவிலிலே வக்கீல் வைத்து வணங்கவேண்டிய முறை தேவைப்படாது. யான் எனது என்ற செருக்கழித்து, சமுதாயத்துக்கு நலம் பயக்கத் தெய்வ வணக்கம் பயன்படவேண்டும். இமயத்திலே, பொதிகையிலே ஊற்றெடுக்கும் தண்ணீர் எங்கும் பரவி விரவி ஓடிப்பயனளிக்கிறது. ஆனால் மனிதனின் இதயமலையிலே ஊற்றெடுக்கும் சிவமயம் கோவிலோடும் பூசையறை யோடும் நின்றுவிடுகிறது. வெளியில் வந்தவுடன் ‘என் மயம்’ ஆகிறது. எவ்வுயிர்க்கும் ஈசனுக்கும் தமக்கும் அன்புள்ளவர்களாக ஆக்கும் பெற்றி வழிபாட்டுக்கு உண்டு.
எனவே, இனத்தை ஒத்த மொழியிற் பிடிப்பும்- பாசமும் இருத்தல் வேண்டும். ஆண்டவனிடத்தில் சொந்த மொழி வழித்தொடர்பே அத்தகைய பலனைத் தருகிறது. இறைவன் பல வழிகளில் தமிழை அனுபவித்துச் சுவைத்திருக்கிறான். காசு கொடுத்தும், தூது நடந்தும் கன்னித் தமிழ் கேட்டதாக வரலாறு பேசுகிறது.
வடமொழியும் செந்தமிழும் வழக்கிழக்க வேண்டியவை யென்றால் வடமொழிக்குக் கொடுக்கப் பட்டதுபோல நம் தமிழுக்கும் இடங்கொடுக்கப் பட்டதா? இல்லையே! தமிழுக்கு இடங்கொடுக்கப்படாவிடில் தமிழர்களாகிய நாம் இடந்தேடி இன்பமடைய வேண்டாமா?
சுரண்டல்களினாலும் - சுயநலத்தினாலும் தமிழின் பின்தங்கியநிலை இப்பொழுது சமயத்துறையில் அருக ஆரம்பித்து விட்டது. இந்நிலை நல்லதொரு மாற்றத்தினை உருவாக்கி உண்மை நெறி உலகெல்லாம் பரவ உதவும் எனக் கருதி வாழ்த்தி விடை பெறுகிறோம்.
பொகந்தலாவையில்
தலைமுறை தலைமுறைகளாக நாடுவிட்டு நாடுவந்து உழைக்கிறீர்கள். ஆனால் உழைப்பின் பயனை அனுபவிப்பதாகக் காணோம். உடலை வருத்தி வெய்யிலும், மழையும் துன்புறுத்த மலைக்கு மலை தாவித் தேயிலை எடுக்கிறீர்கள். காலை முதல் மாலை வரை அவதியுறுகிறீர்கள். துன்பம் காலப்போக்கில் களிப்பையும் சுகத்தையும் கொடுக்கும் என்பர். ஆனால் உங்களைப் பொறுத்தவரை மருந்துக்குக் கூட மகிழ்ச்சியைக் காணோம்.
நூற்றியிருபத்தைந்து ஆண்டுகளாக இலங்கைவாழ் மக்களின் பொருளாதார வளத்துக்கும், வனப்புக்கும் உங்களது உழைப்புப் பயன்பட்டதையும்-இப்போது பயன் விளைவிப்பதையும் நினைக்க நினைக்க நெஞ்சம் பூரிப்படைகிறது. உங்களை நீங்கள் உயர்த்தாத நிலைபற்றி இங்கு கவலையோடு திரு. வெள்ளையன் கசிந்துரைத்த வார்த்தைகள் எம்மைத் துணுக்குறச் செய்தன. உழைப்பிருக்கும் இடத்திலிருந்து இகழ்ந்தொதுக்குதலும் பிறர்க்குதவா மனப்பான்மையும் அகலவேண்டும். வீணான முயற்சிகளும் வீண் செலவுகளும் வாழ்க்கையில் விரக்தியைத் தரக்கூடியன. பீடிகள் சாராயம் போன்றவற்றில் உள்ள அதிக ஈடுபாடு உங்கள் வாழ்க்கையை நாசம் செய்வதாகவும் அறிந்தேன். மனத்திற்கு அமைதிதேடி மதுப்பழக்கத்தை மேற்கொள்கிறீர்கள் போலும். குடி குடலைக் கெடுத்துக் குணத்தை அழிக்கும். நரம்பைத் தளர்த்தி உடம்பை வாட்டும். மரணப்பாதையில் மயானத்திற்கு அனுப்பிவிடும். இவ்வெளிப்படை உண்மை விளங்கியும் கூட நீங்கள் அவ்வழிச் செல்வது அல்லலைத் தருகின்றது.
கடவுளின் பெயராலும் உங்கள் கட்குடிப் பழக்கம் வழக்கிலிருப்பதாகக் கேள்வியுற்று வருந்துகிறேன். நல்லன. வற்றை நாடி வாழத்தான் நமக்குக் கடவுள் வழிபாடு இருக்கிறதே தவிர, தீயவற்றைத் தேடித்திரிந்து பெறுவதற்காக அல்ல. வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லாமைக்குச் சிந்தனையற்ற போக்குத்தான் காரணம். வாழ்வில் சிந்தனையில்லாது போனால் வரும்பொருள் சேராது-வளமும் பெருமையும் கிட்டா. நாளும் உழைத்ததைச் சேமித்து நல் வாழ்வுவாழ ஆசைப்படவேண்டும். பாடுபட்டு உழைத்து அதற்குரிய பயனை அனுபவியாமற் போனால், அது மனிதத் தன்மையாகுமா? உங்களது வாழ்க்கைக்கு-நல்வாழ்வுக்கு வழி சொல்லக்கூடிய பெரியாரை உங்களிடத்திலே தேடிப்பிடித்து -அவர் சொல்லும் அனுபவ உண்மைகளுக்குச் செவிசாய்த்து நீங்கள் வாழவேண்டும். வாழ்க்கைத் துணையில்லாது. போனால் வாழும் இல்லறம் சிறக்காது என்பார்கள். இல்லாள் இல்லாத இல்லம் இடுகாட்டுக்கு ஒப்பாகும் என்பது நம்மவர் வழக்கு. இதுபோல் நல்ல அறிவுக்கு-நற்சிந்தனைக்கு நாம் பெரியாரைத் துணைக்கொள்ளவேண்டும். ‘பெரியாரைத் துணைககோடல்’ என வள்ளுவரே ஓர் அதிகாரம் வகுத்திருக்கிறார். நல்லவர்களாகிய பெரியவர்களின் துணை நாம் சிந்தித்து வாழவும், சிரித்து மகிழவும் அடிகோலும்! அவர்களின் துணையற்ற நிலை தீமையை உண்டாக்கும்; “பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்” என்கிறது தமிழ் மறை. உங்களுக்கு முன்னேற ஆசை இருக்கிறது. ஒரு முறையான - நெறியான ஒழுங்கில்லை. உங்களிடையே நீங்கள் நல்லவர்களெனக்கருதிப் பின்பற்றும் பெரியார்கள் நன் முறையைக்காட்டினால் அவ்வழிச் சென்று அவனியில் உயர முயலவேண்டும். பெரியவர்கள், வழியை - முறையைக் காட்ட முடியுமேதவிர வேறெதுவும் செய்யமுடியாது. குதிரையை நீர்குடிப்பதற்காகக் குளத்துக்குக் கொண்டு செல்லலாம்; நீர் குடிக்கவேண்டியது குதிரையேதான். கொண்டு செல்பவரல்ல.
தொழிலாளர் என்ற முறையிலே ஒற்றுமையாக-ஒரு குலமாக இருத்தல் வேண்டும். தொழில் இனங்களிடையே பிரிவும்-பிளவும் இருந்தால் காலப்போக்கில் கசப்பு முற்றிக் கைகலப்பிலும்- பெருங்கலவரத்திலும் முடியும். உழைப்பவர்கள் அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருந்தால் இன்னல்கள் இடுக்கண்கள் ஏற்படும்பொழுது ஓடிச் சென்று உதவமுடியும் - உதவிகளைப் பெறமுடியும். தொழிலாளர்களது கட்டுக் கோப்பிலே-திட்டமானதொரு முயற்சியால் பெட்டி பெட்டியாகப் பணம் சேர்க்கலாம். பலருக்கு உதவலாம். கட்டுக் கோப்பு இல்லையேல் நல்ல திட்டமும் இருக்காது. பெட்டியில் பணமும் நிரம்பாது, அவற்றுக்குப் பதிலாக வீட்டில் கடன் இருக்கும்-கவலையிருக்கும் - அழகாக அலங்காரமாக உடையணிந்து உலாவமுடியாது. போனால் மழையில் நனைந்து, வெய்யிலில் காய்ந்து என்ன பயன்! நல்ல குறிக்கோளோடு ஒன்றி வாழவேண்டும். “ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு” என்றும் “கூடிவாழ்ந்தால் கோடி நன்மை” என்றும் எண்ணி அதற்கேற்ற முறையில் வாழ்வை அமைக்க வேண்டும்.
தொழிலாளர்கள் பிளவுபட்டுப் பலப்பல சங்கடங்களை உண்டாக்குவது பயன்தராது. பிரிவும்-பிளவும் நன்மையைத் தருவதில்லை. இதனாலேதான் வள்ளுவர் பல்குழு கூடாதென்கிறார். தொழிலாளியின் நலனைப் பேணக்கூடிய- மனக்கவலை பொருளற்ற துன்பம் போன்றவைகளை அகற்றக்கூடிய ஒரு மாபெரும் சங்கத்தை உண்டாக்க வேண்டும். உலகியலிலே-அதுவும் இன்றைய நிலையில் பொருள்தான் மிகமுக்கியமானது. வேராடினால் மரம் வளராது; பூத்துக் காய்த்துக் கனி தராது. அதுபோலவே பல நன்மைகளுக்கும் பொருட்சேமிப்பு அவசியம் வேண்டும். பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை யென்பதைப் போலவே பொருளற்ற சங்கத்துக்கும் வாழ்வில்லை; வளர்ச்சியில்லை. பொருளாதார வளம் உண்டாகிவிட்டால் வறுமையில் செம்மையோடு வாழ்க்கையில் நேர்மையாக வாழ வழி பிறக்கும். ஆன்மீகச் செழுமையும் அரும்பி வளரும். ஆகவே கட்டுக்கோப்பான ஒற்றுமையும், உழைப்பும், சேமிப்பும், நேர்மையும், செம்மையும் உங்களிடத்தே உருவாக வேண்டும். அத்தகைய நிலைக்கு ஆண்டவனது துணையும் அவசியமானது.
உங்களின் கட்டுக்கோப்பில் சாதியோ, மொழியோ, மதமோ குறுக்கிடக்கூடாது. அவை தலைகாட்டினால் கட்டுக் கோப்புக் குட்டிச் சுவராகிவிடும். நாமெல்லாரும் மனிதர்கள்; ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள்; நமக்கெல்லாம் தாயும் தந்தையுமான அம்மையப்பன் தலைவனாக இருந்து அருள் சுரக்கிறான். அவனது அருள் மழை நம் எல்லாருக்கும் சொந்தமானது. எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கவே நம்மை ஆண்டவன் மனிதராகப் படைத்திருக்கிறான். பிறவிகளில் மனிதப் பிறவி உயர்ந்தது. “அரிது அரிது மானிடராதல் அரிது” என்று அவ்வைப் பிராட்டியும், “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்று அப்பரடிகளும் சொல்லியிருக்கிறார்கள். இவற்றை எண்ணி ஒற்றுமையைப் பேணவேண்டும். ஒற்றுமை உணர்வை உண்டாக்கக் கல்வியறிவு அவசியமானது. கல்வியில்லாத வாழ்வு காட்டு வாழ்வாகும். மற்றெல்லாச் செல்வங்களையும் விட, கல்விச்செல்வமே உயர்ந்ததென உயர்த்திப் பேசப்படுகிறது. “கேடில் விழுச் செல்வம் கல்வி” என்கிறார் வள்ளுவர். கல்வி இல்லையேல் சிந்திக்க இயலாது. சிறக்க இயலாது. கல்வி கற்கப் போதிய வசதி உங்களிடத்தில் இல்லாதது குறைதான். அக்குறையை நீக்கத் தோட்ட முதலாளிகள் முனையவேண்டும். அவர்கள் தொழிலாளிகளின் குழந்தைச் செல்வங்களைக் கல்விச் செல்வங்களாக்கினால் பொருட் செல்வத்தோடு புகழ்ச் செல்வமும் வந்தடையும்.
தொழிலாளர்களும் தமது குழந்தைகளைப் படிப்பிக்க ஆசைப்படவேண்டும். பட்டங்கள் பலபெற்றுப் பாரில் சிறக்க முடியாவிட்டாலும் பண்பாக வாழப் பழக - வாழ வைக்கப் பழகக் கல்வி மிக அவசியம் தேவையானதென்பதை ஒவ்வொரு பெற்றோரும், உணரவேண்டும். படித்தும் முட்டாள்களாகத் திரியும் இந்தக் காலத்தில் படிக்காதும் போனால் என்ன ஆகும்.
படிப்பு பக்குவத்தைத் தருவதோடு பல்லுயிர்களோடு அன்பாக வாழவும் தூண்டுகிறது. நகரமும் நாடும் படிப்பு விஷயத்தில் போட்டி போடுகின்றன; நகரத்தைத் தோற்கடிக்கக் கிராமமும் கிராமத்தைத் தோற்கடிக்க நகரமும் போட்டி போடுகின்றன. இந்நிலையில் கெட்ட சிந்தனைகளைத் தோற்கடித்து நல்ல சிந்தனைகளை வளர்க்க உங்கள் குழந்தைகளுக்குக் கல்வி இன்றியமையாதது. சாப்பிடாமல் உயிர்வாழ முடியாததென்பதைப்போல் படிப்பில்லாமல் உயரமுடியாது. வேட்டி கட்டிக்கொள்வது தனிமனிதனின் மானத்தைக் காப்பதற்கு மட்டுமல்ல; சமுதாய ஒழுக்கத்துக்கும் பயன்படுகிறது. அதுபோலவே கல்வி தனிமனிதனின் நலத்துக்கு மட்டுமல்ல - சமுதாய வளர்ச்சிக்கும் பயன்படுகின்றது. வாழ்க்கையில் துணிவை - தன்னம்பிக்கையைப் பெற உங்கள் பிள்ளைகளைப் படிப்பிக்குமாறு வேண்டுகின்றேன்.
இனி, கடவுளைப் பற்றிய எண்ணம் தொழிலாளர்களுக்கு எங்கும் எப்பொழுதும் வேண்டும். வேலைக்குச் செல்வதால் கடவுளை வணங்க நேரமற்ற நிலை உங்களுக்கு உண்டென்பதை நான் உணராமலில்லை. தேயிலைக் கொழுந்தைக் கொய்யும் பொழுதும், கூடையில் போடும் பொழுதும் கடவுளை நினைக்கலாம்-வணங்கலாம். கூடையில் கொழுந்தைப் போடும் பொழுது. முருகா! முருகா! என்று சொல்லிப் போட்டால் அது முருகனுக்கு லட்சார்ச்சனையாகிவிடும். மலையின் உச்சியிலே கொழுந்து கொய்யும் உங்களுக்கு ஏறுமயிலேறி மலைதோறும் மகிழ்வுடன் உலாவரும் முருகக் கடவுளின் கருணைகிட்டும்.
ஆகவே! தொழிலாளர்கள் கட்டுக்கோப்புடன் ஒற்றுமையாக - ஒரு குலமாக வாழ்ந்து, கல்விச் செல்வத்தையும் பொருட் செல்வத்தையும் பெற்று, சிறப்புடன் திகழ்ந்து கவலையற்ற, நேர்மையும் செம்மையும் நிரம்பிய நிலையுடன், குடி கெடுக்கும் செயல்களைத் தள்ளி - திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து, யாவரும் தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ வாழ்த்தி விடைபெறுகிறோம்.
அட்டனில்
கலைகள் கருத்தைக் கவர்வன; களிப்பைத் தருவன. கருத்தற்ற கலைப் படைப்புக்கள் கால வெள்ளத்தை எதிர்த்து நீந்தி நின்று வாழ இயலாதவை. கருத்து, கற்றறிந்தோர் உள்ளத்திலே தேங்கி நின்று தேசிய உணர்ச்சிக்கும் சமுதாய உயர்வுக்கும் உதவக்கூடியது; காலத்தால் மூத்த நமது இனம் கருத்திலே நாட்டம் கொண்டதாலேதான் கருத்தரங்கங்களில் ஏறி நின்று ஏற்றம் பெற்றது; கருத்துவழி வாழ்வு வாழ்ந்து மகிழ்ந்தது; கருத்துக்களிலே நல்லனவும் தீயனவும் உண்டு. கருத்து என்ற பேரில் உண்டாகும் எல்லாமே வாழ்வுக்கு உகந்தனவாக இருந்ததில்லை - இருப்பதுமில்லை. இருக்கவும் முடியாது.
இயல் இசை நாடகம் போன்ற கலைகள் தமிழனைப் பொறுத்த மட்டில் மகிழ்வை ஊட்டியதோடு-வாழ்வையும் காட்டின. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற உண்மையைத் தமிழர்களின் கலைகள் எடுத்தியம்பின. இதனாலே கலைவழிக் கலாசாரம் முகிழ்த்து, அன்பும் அறனும் பண்பும் பணிவும் மலர்ந்தன. கருத்து வழிப்பட்ட வாழ்வு அரும்பி மலர்ந்து மணம்வீசக் கலைகள் பயன்படவேண்டும். இசை நாடகம் போன்றவற்றை அழகுக் கலைகள் என்கிறோம். அழகுக் கலைகள் ஆழ்ந்தகன்ற நுண்ணறிவை ஆக்கவேண்டும். இறந்த காலத்தைப் பற்றிய அறிவையும் நிகழ்காலத்தை யொட்டிய கருத்தையும் வருங்காலத்தைப் பற்றிய திட்டத்தையும் தமிழ்க் கலைகள் எடுத்துச் சொல்லவேண்டும். கல்லூரிகளிலே கற்கும் சிறார்களின் நற்சிந்தனைக்கும்-நல்ல முன்னேற்றத்திற்கும் கல்லூரி விழாக்களில் இடம் பெறும் கலைநிகழ்ச்சிகள் உதவவேண்டும். பருவம் அறிந்து, பக்குவம் தெரிந்து கலை நிகழ்ச்சிகளின் மூலம் நற்கருத்துக்களைத் தூவி விடவேண்டும். இன்றைய நிலையிலே பள்ளிகளின் மூலமாகப் போதிக்க முடியாத நற்கருத்துக்களை மாணவர்க்குக் கலைகளின் வழியே போதித்து விடலாம். இப்போது கலைகளை அனுபவித்துப் போற்றும் சூழ்நிலை இளைஞர்களிடத்திலே உருவாகி யுள்ளது. அந்த நல்ல நிலையைப் பயன்படுத்தி நயத்தக்க கருத்துக்களைக் கலைகள் மூலம் கற்பிக்க வேண்டும்.
“கற்றிலனாயினுங் கேட்க” என்றார் வள்ளுவர். அதைப் போல் படிப்பிலனாயினும் பார்க்க எனலாம். இளைஞர்கள் நடிப்பு நடனம் போன்றவைகளைப் பார்த்து அனுபவிக்க விரும்புவது போல் அவைகளினூடாக வரும் கருத்துக்களையும் கேட்க வேண்டும். கேள்வியறிவு பேரறிவைத் தரவல்லது. பார்த்துப் பெறுமனுபவங்கள் பாரிற் சிறக்க வழிசெய்யும்; புத்தகத்தையே தொடாத-படிக்காத சில பாமரமக்கள் கேள்வியறிவினாலும் வாழ்க்கையனுபவத்தாலும் உயர்வதைப் பார்க்கிறோம். கல்வியாற் பெற்ற உண்மைகளோடு காட்சியாலும் கேள்விகளாலும் பெறும் கருத்துக்களும் உலகியல் வாழ்க்கைக்கு உறுதுணையாய் நின்று உதவக் கூடியன; கலைகள் காட்டும் கருத்துக்களிலே கழிப்பதைக் கழித்துக் கொள்வதைக் கொள்ள வேண்டும். உலகப் பெரியார் சொன்னதைப் போல் குணம் நாடிக் குற்றம் கொள்ள வேண்டும். வாழ்வுக்குப்பயன் அளிக்காத வாழ்வையே அழிக்கக்கூடிய சில கருத்துக்கள் சுவையுடன் வெளிப்படுத்தப் படுவதால் இளைஞர்களை அவை ஈர்த்து விடுகின்றன. கள்ளமோ களங்கமோ இல்லாத வெள்ளை உள்ளங்கள் அக்கருத்து வழிச்சென்று வாழ்வின் பயனை அனுபவிக்காது அல்லலுறுகின்றன. பிஞ்சு நெஞ்சங்களை நற்கருத்துக்கள் பிணிக்க வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஈதல், இசை படவாழ்தல், இன்னர்செய்தார்க்கு நன்னயம்செய்தல், காலத்தினாற் செய்யும் உதவி, அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ், அறனெனப்பட்டதே வாழ்வு, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் போன்ற வேண்டப்படும் கருத்துக்கள் கலைகளின்மூலம் புகுத்தப்படவேண்டும்.
நல்லெண்ணமும், நல்லுறவும் நற்சிந்தனையும் நாடு முழுவதும் பரவிப் பெருகக் கலைகள் பயன்படவேண்டும். அறிவைத் தேடிக் கொள்ளாதவர்கள் வாழமுடியாது அவதிப் படுகிறார்கள். அதிகம் படித்தவர்கள் திக்கு முக்காடுகிறார்கள். நடுத்தரப் பிரிவினர் இரண்டுங் கெட்ட நிலையில் இன்னலுறுகின்றார்கள். இவர்களுக்கெல்லாம் அறிவை, நிம்மதியை, சலனமற்ற நிலையைக் கலைகள் காட்ட வேண்டும். நாட்டிலே நாடகமேடைகளிலே மட்டும் கலையும் கலையைச் சார்ந்த கருத்துக்களும் மின்னி முழங்கிவிட்டாற் போதாது. வீடுகள் தோறும் கலையின் விளக்கம், என்று கவிஞன் பாரதி கூறியது போல் கலைகள் இல்லங்கள் தோறும் எழுந்தருளி இருள் நீக்கி ஒளிபரவவேண்டும். நமது நாட்டிலே நம்மிடையே கலைப்பெருக்கத்திற்குக் குறைவில்லை. பெருக்கமிருக்கிறதே தவிர பெருக்கத்தை யொட்டிய பலனைக்காணோம். நமக்குள் ஒருநல்ல மனப்பான்மை யுண்டு; அது எதையும் பாராட்டுதல். வீணை வித்துவானை, நடிப்புச் செல்வனை-பாடலாசிரியனை-இசை விற்பன்னனைப் பாராட்டி மகிழ்வதில் நமக்கு ஒரு தனிவிருப்பு. பாராட்டி மகிழ்வதோடு பயன்களையும் விளைவிக்கவேண்டும். கலைகள் வெறும் பாராட்டுகளோடு நின்றால் வாழ்வுக்குப் பயன்படாத வீண்பொழுது போக்காய் முடியும். நம்மிடையே சந்தேகமும் கள்ளத்தனமும் இப்போது உருவாகியிருக்கின்றன. பொருள் உள்ளவனிடத்திலே இல்லாதவன் களவாய்க் கவர்ந்து செல்ல நினைக்கின்றான். பொருள் உள்ளவன் நல்லவனைக் கூடச் சந்தேகித்துத் தற்காப்புத் தேடிப் பொருட்காப்புச் செய்கின்றான். முன்பெல்லாம் பனி, மழை, வெய்யில் போன்றவற்றிற்கும் விலங்குகள் போன்றவற்றிற்கும் தப்பித்துக்கொள்ளவே தற்காப்புத்தேடி வீடுகளைக் கட்டினார்கள். இன்று பக்கத்து விட்டானைப் பகைவனாக்கி அவனை நம்பாமல் திருடனாக்கி அயோக்கியனாக்கி அவனிடம் இருந்து நம்மை நாம் காப்பாற்றவே வீடுகளை எழுப்புகிறோம். களவு காவல் என்ற தத்துவ அடிப்படையில் வீடுகளைக் கட்டுகிறோம்.
இந்த நிலை மாறவேண்டும். மாற்றத்தைக் கலைகள் போதிக்க வேண்டும். மனித வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் வேண்டிய நல்லுணர்வுகளைக் கலைகள் காட்ட வேண்டும். உழைத்துப் பிழைத்து முன்னேற வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும். பாடுபடுபவன் உழைப்பவன் நல்லபடி வாழ-அதிக ஆசையற்றுப் போதுமென்ற மனத்துடன் பொதுமை வாழ்வில் அக்கறை கொள்ள மனிதனை ஆற்றுப்படுத்தி ஆவன செய்ய வேண்டும். கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்று நொந்த, நைந்த மனோபாவத்துடன் தூங்கும் ஏழையை விழிக்கவைக்க வேண்டும். சமுதாய விழிப்பிற்கும்-அகத் துறைப் புரட்சிக்கும். கலைகள் தொண்டாற்றி வெற்றிபெற வேண்டும்.
கடவுள் நம்பிக்கையில் ஊறிய-தெய்வக் கொள்கையைப் பாராட்டுகிற மனித சமுதாயத்தை உண்டாக்கி - சமவாய்ப்புச் சமுதாயத்தில் நாட்டம் கொண்டவர்களை வாழ்த்தவும் கலைகள் வழி வகுக்க வேண்டும். முதலாளி தொழிலாளிகளுக்கிடையே இருக்கிற வேற்றுமைகளை அழித்தொழித்து அருள் வெள்ளம் பெருக்கெடுத்தோடுமாறு செய்ய வேண்டும். இறைவன் ஒருவனே நமக்கெல்லாம் முதலாளி. நாம் எல்லோரும் அவனது தொழிலாளிகள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அரும்பி மலர வேண்டும். தாய் மொழிப் பற்றும் தாய்மொழி நாகரிகமும் தாய்மொழி வழிபாடும் எங்கும் எல்லோரிடத்திலும் பரவ வேண்டும். மனிதர்களிடையே ஏழை என்றும் அடிமை என்றும் எவருமில்லை ஜாதியில் என்ற மனோதத்துவம் தேவை. மனிதர்களிடையே பாமர மனிதர்கள் இருப்பது நமக்கு இழிவைத் தருகிறது; மரங்களிலே கூட பாமரங்கள் இல்லை. தென்னையிலோ, பனையிலோ, பலாவிலோ பாமரர்கள் உண்டா? ஆனால் நம்மிடையே எத்தனை வகைப்பட்ட பாமரர்களை உண்டாக்கி இருக்கிறோம்.
எனவே கலைகள் கருத்தைக் கொண்டனவாக - கருத்தை இருத்தி இன்ப அன்பு வாழ்வுக்கு அடிகோலுவனவாக இருக்கவேண்டும். மனித மனங்களைத் தவிர ஏனைய உயிர்களின் உள்ளங்களைப் பிணிக்கும் ஆற்றல் கலைகளுக்கு உண்டு. குறிப்பாக ஆனாயநாயனாரின் வரலாறு இசைமூலம் மிருக இனத்தையும், பறவையினங்களையும் ஈர்த்திழுத் தமையைக் காட்டி நிற்கிறது. ஆகவே கருத்தைப் பிணிக்கும் கலைகள் நயத்தக்க கருத்துக்களைப் பரவச் செய்யப் பயன்படவேண்டும்; கலைஞர்களும் தேவையானவற்றைக் காட்ட வேண்டும்; போதிக்கவேண்டும். மக்கள் விரும்புவதைக் காட்டக்கூடாது. மக்களுக்கு எது தேவையோ அதைக்காட்ட வேண்டும்! வாழ்க்கை ஒரு நாடகம்; நாம் எல்லாம் நடிகர்கள். நடிகர்களிடத்திலே நல்லுணர்ச்சி உண்டென்றால்தான் நாடகம் சிறக்க வழியுண்டு; நல்லுணர்ச்சியோடு நற்சிந்தனை யாளரைப் படைக்கக் கலைகள் உதவ வேண்டுமெனக்கேட்டு வாழ்த்தி விடைபெறுகிறோம்.
கொழும்பிலே!
இந்த நூற்றாண்டிலே நமது சமயத்தைப்பற்றிய சிந்தனை அருகிவருகிறது. வாழ்வுப் பிரச்சனைகளாலும் வேறுசில சூழ்நிலைகளாலும் கடவுள் நெறி பற்றிய எண்ணம் குறைந்து வருகின்றது. சிவநெறித் தத்துவத்தின் வழி வாழ்தல் என்பதும், சைவசமயக் கொள்கைவழித் தொண்டு என்பதும் இப்போது மாறிக் குழம்பிக்கிடக்கின்றன. இது ஒருவிதக் கலப்பாலும்-கலப்பினாலுண்டான சபலத்தாலும் வெள்ளத்தால் அள்ளுண்டு போவதைப் போன்றநிலை எப்படியோ வந்து புகுந்துவிட்டது. நான் பிறமத எழுத்தாளனல்லன். ஆனால் நமக்கென ஒருகால் தேவை - ஒரு நெறி தேவை என்பவன். கலப்பு என்பது சுயத்துவத்தை அழிக்கவல்லது. உலகியல் நாகரிகங்களின் வரலாற்றிலே ஒன்றையொன்று கெளவி விழுங்கிய செய்திகளைப் படிக்கிறோம். மற்றையக் கொள்கைகளை - நெறிகளைப் பாராட்டுவதோடு, நமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வலுப்படுத்த உழைக்கவேண்டும்.
சைவசமய வளர்ச்சிபற்றி “வரைபடம்” (Graph) படம் போட்டுப்பார்த்தால் நிலைமை பளிச்செனப் புலப்படும். இந்நிலைமாற - மாற்றப்பட நாம் தீவிரமாக முனைய வேண்டும். பன்னெடுங் காலமாகக் கழிபேருவகையுடன் நல்வாழ்வுச் சூழலை உருவாக்கி உதவிய சைவநெறி பற்றிய எண்ணமும் செயலும் நம்மிடையே தோன்றி வளர வேண்டும். மனிதனின் வாழ்வை மலரச்செய்யவும் - மணம் பரப்பச் செய்யவுந்தான் மதங்கள் உதவுகின்றன. வெறும் சடங்குகள், உபதேசங்கள், போதனைகள் போன்றவற்றோடு மதம் நின்றுவிடக்கூடாது. அச்சம், ஆத்திரம், புகைச்சல், பொறாமை போன்றவை இன்றைய மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இத்தகு இழிந்த மனப்பான்மையை ஒழிக்க மதம் உதவவேண்டும். உயிர்த்தொண்டுக்கு - உலகத் தொண்டுக்கு ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் பெரும் பொறுப்பு சமயத்துக்கு உண்டு.
அச்சமும் ஆத்திரமும் போன்றே ஐயமும் சஞ்சலமும் குழப்பமும் மனித மனங்களில் குடிகொண்டிருக்கின்றன. சந்தேகத்தை மாற்றச் சைவத்தை ஒட்டிய சில முடிவுகள் உதவுகின்றன. சைவசித்தாந்தமென்பது ஒரு சிவநெறித் தத்துவம். முடிந்த முடியான கொள்கையைக் கொண்டது. சிவத்திரு ஆறுமுகநாவலர் அவர்கள் “சைவ சித்தாந்தமே சித்தாந்தம்; மற்றவையெல்லாம் பூர்வபக்கங்கள்” என்றார். சிந்தை செல்லுமிடமெல்லாம் சென்று முடிந்த முடிபைக் காண்பது சித்தாந்தம், சைவசித்தாந்தக்காரர்கள் மனிதகுலச் சஞ்சலங்களை அகற்றுவதோடு - நாத்திகத்தைத் தர்க்கமுறையில் வெல்லலாம்; வெல்ல முடியும். குழப்பமே தெளிவுக்கு அடிப்படை இப்போது சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சில ஒரு குழப்ப நிலையை உண்டாக்கியிருக்கின்றன். இனித்தெளிவு வரலாம்; வெல்ல முடியும். குழப்பமே தெளிவுக்கு அடிப்படை. இப்போது சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சில ஒரு குழப்ப நிலையை உண்டாக்கியிருக்கின்றன. இனித்தெளிவு வரலாம்; கட்டாயம் வந்தே தீரும்.
“சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி” என்றார் அப்பரடிகள். தெளிவிலே சிவநெறி ஊறிச் செம்மை நலங்கள் காணும் நாள் அதிக தூரத்திலில்லை. என்றும் நம்மை அவன் ஆட்டுவிக்கிறான்; நாம் ஆடுகிறோம் - அடக்குவிக்க நாம் அடங்குகிறோம். அனாதி காலம் தொட்டே அனாதியான ஆன்மா ஆண்டவனிடத்தில் அடிமைப்பட்டி ருக்கிறதென்பதைத் தாயுமானவர் அழகுறச் சொல்கின்றார்.
‘இரும்புநேர் வஞ்சகக் கள்வனா னாலும்உனை
இடைவிட்டு நின்ற துண்டோ
என்றுநீ அன்றுநான் உன்னடிமை யல்லவோ
ஏதேனும் அறியா வெறுந்
துரும்பனேன் என்னினும். கைவிடுதல் நீதியோ’
என்கிறார். நமக்கு வரும் இன்பதுன்பங்களுக்கு அவனே பொறுப்பாளி. இந்த விடை மிகமிக ஆழமான குளத்துநீரில் ஒரு திவலை. கற்கண்டில் ஒருதுண்டு. நானே கடவுள் - நானே பிரமம் என்றால் பொருந்துமா? “குறைவிலா நிறைவே கோதிலா அமுதே” என்கிறது திருவாசகம். பரிபூரண நிறைவுக்குப் பெயர் கடவுள். அப்படியானால் அவனின் பிரதிபிம்பமான நாம் ஏன் நிறைவற்றுத் தொல்லைப் படுகிறோம்? இறைவனின் குழந்தைகளாக, இறைவனின் அடியார்களாக நம்மை நாம் எண்ணிக்கொள்ள வேண்டும். நமது சைவநெறி வாழ்வைத் தழுவியது; வாழ்வோடு இணைந்து பிணைந்தது. நிறைவான குடும்பவாழ்வே சித்தாந்தச் சிவநெறி வாழ்வாகும்.
சேக்கிழார் பெருமான் சிவநெறித் தொண்டர்களைப் பற்றி நிறையச் சொல்லியுள்ளார். பூசலார் நாயனார் மனத்திலே கோவிலெடுத்து மகேசனைக்கண்டார். கோவிலுக்குப் போக வசதியில்லாதவர்கள் வாய்ப்பில்லாதவர்கள் மானசீகமாக இறைவனை வழிபடலாம். திருக்கேதீஸ்வரப் பதிகம்பாடிப் பாலாவியின் கரைமேல் ஆண்டவனை அகத்திலே காணலாம். நாவுக்கரசர் உழவாரத்தொண்டால் கடவுளைக்கண்டார். திருக்குறிப்புத் தொண்டர் மெய்யடியார்க்குத் துணி துவைத்துக் கொடுத்துப் பரமன்பதம் அடைந்தார். நாமெல்லாம் நாயன்மார்களின் குருபூசை களைக் கொண்டாடுகிறோமே தவிர அக்கொண்டாட்ட நாளில் தேவையானவற்றைச் செய்வதில்லை.
கண்ணப்பநாயனார் குருபூசையில், கண்பார்வை குறைந்தவர்களுக்குக் கண்ணாடி வாங்கி வழங்கும் வழக்கம் மேற்கொள்ளப்பட்டால் எவ்வளவு நன்மைபெருகும். நாம் கைக்கொள்ளவேண்டியது நால்வரின் நெறி. நால்வரின் இயக்கம் சமுதாய இயக்கம். நால்வரின் வழிச்சென்றால் நம்மிடையே ஒரு ஒழுங்கு உண்டாகும். நமது மதம் இப்போது ஒழுங்கில்லாமற் கிடக்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட மதமாக நமது மதம் மிளிர வேண்டும். வெள்ளையன் தனது மதமான கிறித்தவத்தைத் தவிர்ந்த ஏனைய மதங்களை ஒன்றாக்கி இந்துமதம் என அதற்குப் பெயரிட்டான். இதனால் சில தனித் தன்மைகள் கெட்டுவிட்டன. கலப்பு ஒருபோதும் தனித் தன்மைகளைக் காப்பாற்ற உதவாது. மற்றைய மதங்களிடையே உள்ள ஒழுங்கு நம்மிடையே இல்லை. பன்னிரண்டு இலட்சம் இந்துக்களும் ஒன்றானால் ஒருநல்ல விழுமிய ஒழுங்கு உண்டாகலாம். அப்பொழுதுதான் மேன்மைகொள் சைவநீதி உலகமெல்லாம் விளங்க வழியுண்டாகும்.
நாம் மதம் மாறியதைப் போன்று வேறுயாராவது மாறி யிருக்கிறார்களா? நம்மிடையே எண்ணத்தொலையாத எத்தனையோ பேர் மதம் மாறியிருக்கிறார்கள். நம்முடைய மதத்துக்கு வேறு மதத்தவர்கள் வந்ததுண்டா? நம்மைப் பொறுத்த அளவில் மதமாற்றம் சர்வசாதாரணமாகி விட்டது. இந்நிலைமாற சைவத்தமிழுலகம் பாடுபடவேண்டும். சிவநெறி பரப்பும் மடங்கள் ஆன்மாவுக்குத் தலைவனான ஆன்மநாயகனை வழுத்துவதோடு நின்றுவிடுவதற்கில்லை. திருமடங்கள் திருத்தொண்டால் சிவநேயச்செல்வர்களை உருவாக்கவே எழுந்தவை. எந்நாளும் சமயப்பிரச்சாரம் செய்து சித்தாந்த சிவவழி நிற்கவே அவை உதவுகின்றன. மனித குலத்துக்கு மாண்புறு தத்துவங்களைப் போதிக்கவே சைவமடங்களை நம்முன்னோர்கள் உண்டாக்கினார்கள். ஆனால் அவர்களது எண்ணம் சிலகாலம் சிதைவுற்றுப் பிறழ்ந்ததை மறுப்பதற்கில்லை. இப்பொழுது இந்நிலை மாறிவருகிறது. கைலாயத்து உச்சியுள்ள காளத்தியானைக் கண்ணிலே கண்டு மற்றவர்களுக்குக் காட்டச் சைவப் பெரியார்கள் முன்வரவேண்டும். இதனாலேதான் சைவ சமயத்துக்கு முழுநேர ஊழியர்கள் தேவை என்கிறேன். இறைவனைக் கைலாச வாசியாகவே சிலர் கருதுகிறார்கள். வான் பழித்து மண் புகுந்து மனிதரை ஆட்கொள்பவன் நம்பெருமான். ஆண்டவனை எட்டவைத்து எண்ணும் நிலை மாறவேண்டும். மண்ணிலே விண்ணைக்கண்டு விண்ணகத்து வித்தகனை நெஞ்சத்தில் அமர்த்தவேண்டும். தட்டினால் தான் திறக்கப்படும். கேட்டால்தான் கொடுக்கப்படும் என்று தமது சைவநெறி சொல்லவில்லை வேண்டப்படுவதை அறிந்து வேண்டிய முழுதும் தருபவன் இறைவன்.
ஆகவே! நால்வர் நடந்து நடந்து வளர்த்த நமது நெறி நாலாபக்கமும்பரவி விரவவேண்டும்; ஓர் ஒழுங்குமுறையான கட்டுக்கோப்பு நமக்குத்தேவை. கலப்பு, ஒழுங்கினை உண்டாக்க இடையூறாயிருக்கும். மற்றைய மதங்களிலுள்ள ஒழுங்கினை நமது மதத்தில் காண நாம் விரும்பவேண்டும். மதம் மாறும் நிலையை நம்மிடையேயிருந்து விலக்க வேண்டும் எனக்கூறி வாழ்த்தி, விடைபெறுகிறோம்.
குனுகலோயாவில்
உங்களது அன்புக்கும் பாராட்டிற்கும் முதற்கண் என் அகங்கனிந்த வாழ்த்து. கண்ணுக்கும், செவிக்கும் விருந்தளிக்கக் கூடிய அழகிய இயற்கைச் சூழலில் வாழும் உங்கள் முன் நிற்பது மகிழ்வைத் தருகின்றது. மனிதப் பிறப்பின் மாண்புறு நிலையை நயக்கத்தக்க நல்ல வழியில் அனுபவித்து உயரப் பழகிக் கொள்ளவேண்டும். மனிதன் வேகமாக உழலுகிறான். சுழலுகிறான், ஆனால் ஏன்? எதற்காக உழலுகிறோம்? என்று அவன் சிந்திப்பதில்லை. குறிப்பாகத் தமிழர்களாகிய நமக்குக் கேள்விகேட்பதென்பதே கசப்பாயிருக்கிறது. எதையும் துருவித்துருவி நுணுக்கமாகவும் ஆழமாகவும் ஆராய்ந்ததினாலேதான் தத்துவாசிரியர்களும் பெரும் பேராசிரியர்களும் தோன்றினார்கள். மனிதச் சுழற்சி ஒருவிதத் தூய்மையைத் தருகிறது. அனுபவ உண்மைகள் அகத்தினை அலசித் துய்மையாக்கித் துலங்கவைக்கின்றன.
கடலிலே உள்ள தண்ணீர் சூரிய வெப்பத்தினால் வான் நோக்கிச் சென்று, மீண்டும் மழையாகி மலைவழியே வருகிறது. மனிதனின் உள்ளப்பாங்கில் உப்புத்தன்மை நிறைய உண்டு. உப்புத் தன்மை சுழற்சி அனுபவத்தால் அற்றுப் போகிறது.
தங்கத்திற்கு எவ்வளவோ மதிப்புண்டு. அதையொட்டிய வரலாறோ பெரிது. நிலத்திலே தோன்றி வளர்ந்து நமது கைக்கு வந்து பலவழிகளிலும் பக்குவமாகிப் பயன் படுத்தப்படுகிறது. நம்முள்ளே உள்ள ஆன்மா தங்கத்துக்குச் சமமானது. ஆனால் அது நிறைந்த பல அழுக்குகளால் பின்னப்பட்டுக் கிடக்கிறது. அழுக்கை அகற்றி ஆன்மாவை நல்வழிப்படுத்த ஆன்மநேயத் தொண்டுகளிலும் சிந்தனைகளிலும் நாம் ஈடுபடவேண்டும். அழுக்கை அகற்றவே ஆண்டவன் நம்மை இங்கு அனுப்பினான். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், நன்றாகக் குளித்துவிட்டு வாருங்கள் என்று நல்ல நீர்த்தேக்கத்தைக் காட்டி விட்டிருக்கிறான். நாம் நீர்த்தேக்கத்தைப் பற்றி நினைத்துப் பாராமல் அதனருகே நாற்றம் எடுத்துக்கிடக்கும் சேற்றினை வாரிப் பூசிக்கொண்டிருக்கிறோம். உடலுக்கு நலம் தேவை என்பது மறுக்க முடியாதது. உடல் நலத்தோடு உள்நலத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
உடலைத் தூய்மையாக்கப் பலவகையான சோப்புக்களை உபயோகிக்கின்றோம். ஆனால் உள்ளத்தூய்மைக்கு எந்தச் சோப்பையும் நாம் தேடுவதில்லை. உள்ளத்தின் அழுக்கினைப் போக்க வல்ல சோப்பை ஆண்டவனிடத்திலே தான் நாம் சென்று பெற வேண்டும். தேவாரம் திருவாசகம் போன்றவற்றைப் பணமாகக் கொடுக்க எம்பெருமான் நம் உள்ளங்களைத் தாமாகவே கழுவிச்சுத்தமாக்கி விடுவர். எல்லாருக்கும் எல்லாச் செல்வங்களையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ விருப்பமுண்டு. ஆனால் முயற்சி செய்து முன்னேற முடியாத சோம்பல், உயரவிடாமல் தடுக்கிறது. முயற்சியின்றியே எல்லாம் வரவேண்டும் என்று கருதும் மனப்பான்மை மறையவேண்டும். உழைப்பில் ஊக்கமும், சேமிப்பில் நாட்டமும் செலவில் சிக்கனமும் தேவை. உழைப்பைக் குறைத்துச் செலவைப் பெருக்குவதுதான் இன்றையநிலை. உழைப்பின் வழியால் வரும் வருவாய் சிறிதானாலும் செலவின் வழி விரிவாக இல்லாவிட்டால் தீங்கில்லை என்கின்றார் வள்ளுவர்.
ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை
என்பது அவரது குறள், மலரும், செடிகொடிகளும் பார்ப்பதற்கு அழகைத் தருவது போல, மனிதர்களும் அழகைத் தர வேண்டும். அத்தோடு நறுமணம் கமழுஞ் சூழலையும் உண்டாக்கவேண்டும். எல்லாருக்கும் பயன்படத்தக்க வாழ்வினை வாழவேண்டும். இடுக்கண் வரும் பொழுது சிரித்துப் பொறுத்தலும், துன்பங்கண்ட விடத்துத் துடித்துத் தோள்கொடுத்துத் துணை செய்வதும் மனித வாழ்வின் மாண்புறு தத்துவங்கள். நம்மைப் படைத்தவனிடத்திலே ஒரு வஞ்சனையும் கிடையாது-அவன் பொதுவானவன். காற்றும் நிலவும் சூரியனும் எதுவும் கேட்காது-பலன் கருதாது பயன் தருவது போல இறைவனும் எதுவும் விரும்பாது அருள் சுரக்கிறான். ஆண்டவனின் அருள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை நாம் அறிந்து அதனைப் பெற்றுப் பலனை அனுபவிக்க வேண்டும்.
நன்னீர்ப் பெருக்கை அணைகட்டி நல்லமுறையில் வாய்க்கால் வழிச் செலுத்திப் பயிர்த்தொழிலுக்குப் பயன்படுத்திக் கொள்வதைப் போன்று அருள்நீர்ப் பெருக்கைப் பாய்ச்சி அப்பயிருக்கு ஆக்கமளிக்க வேண்டும். பயிர்த் தொழிலில் மிக மிகக் கவனமாய் இருப்பது அவசியம். களைகளைக் களைந்து, யானை போன்ற மிருகங்களிடமிருந்து காத்து-நாற்று நட்டால்தான் நெற்பயிர் வளர்ந்து வீட்டுக்கு வந்து, பசியைப் போக்கும். அகப் பரப்பில் ஆன்மீகப்பயிரை அருள் நீரால் வளர்த்து ஐம்புல வேடர்களின் முற்றுகைகளிலிருந்தும் காத்து, ஆன்மநேயர்களாக வேண்டும்.
மூளை விரிவதைவிட இதயம் விரிய வேண்டும். இதய விரிவு “இன்பமே துன்பமில்லை” என எண்ணி ஆன்மீகப் பயிர் வளர்க்க உதவும். இன்பத்தைக் குறைவிலாது அள்ளித் தரும் இறைவன் நமது அழுக்குகளை வாங்குவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறான். ஆண்டவனது பிச்சாடன மூர்த்திக் கோலம் நிகரில்லா உண்மையை வெளிப்படுத்துகிறது. ஆன்மாக்களின் நன்மைக்கும், நல்வாழ்வுக்கும் இடையூறாயிருக்கும் எல்லாவற்றையும் பிச்சை கேட்பதைப்போல் கெஞ்சிக் கேட்டுப் பெறுகிறான். அவனது கெஞ்சும் நிலையைப் பெற அவன் திருவடிகளில் ஆழக்குளிக்க வேண்டும். நீராடல் உடல்நலம் தருவதுபோலவே திருவடிக் குளிப்பு ஆன்மநலம் நல்கும். ஆன்மநேயத்திற்கு அன்பே அடிப்படை அன்பில்லாமல் ஆன்மீகப் பயிர் வளராது. என்னதான் படாத பாடுபட்டாலும் அகப்பரப்பிலே அன்பு விதையைத் தூவாவிடில் என்னபயன்? கடவுள் நம்பிக்கை என்றவிதை அன்பை உருவாக்க உதவுகிறது. அன்பு விதை அருள் என்னும் குழந்தையை ஈன்று புறந்தருகிறது. அறம் இன்பத்தைத் தருகிறது.
பலனைப்பெற அதற்கு மூலகாரணமானது எதுவோ அது பயன்படுத்தப்பட வேண்டும் ஓர் ஊரிலே இரு சகோதரர்கள் இருந்தார்கள்; இருவரும் விவசாயிகள். ஒருவன் விவசாயத்துறையிலே பாடுபட்டுப் பயனடைந்தான். மற்றவனோ பாடுபட்டான். ஆனால் பயனைப் பெறவில்லை. பயன் கிட்டாததால் ஒருவித வெறுப்பு அவனிடத்தே அரும்பியது. வாழ்வில் வெறுப்புக் கொண்டவன் போல் நின்றான். அவனருகே ஒரு பெரியவர் அணுகி வேளாண்மை பற்றி விசாரித்தார். அப்பொழுதுதான் அவன் வேதனைக்கு வித்தான வேடிக்கை வெளியான்து. ‘உழுதாயா? பரம்படித் தாயா? உரம் போட்டாயா!’ என்றெல்லாம் பெரியவர் கேட்டார். “ஆம். ஆம்” என்றே அவன் பதில் சொன்னான். பெரியவருக்கு ஐயம் எழுந்தது! உடனே “விதை போட்டாயா?” என்று கேட்டார். விவசாயி விழித்தான்.
இரத்தத்தை வியர்வையாக்கி காலை முதல் மாலை வரை உடலை வருத்திப் பாடுபட்டவன் விதைபோட மறந்து விட்டான். வேளாண்மை பயன்படுமா? விதை இல்லாது எங்காவது விளைச்சல் இருக்குமா? அதுபோல. வாழ்வின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் கடவுள் நம்பிக்கை என்ற விதை வேண்டும். கடவுள் நம்பிக்கை அற்ற வாழ்வு விதைக்காத வேளாண்மைக்காரனின் நிலைக்குச் சமமானது.
நியாயத்தை, அன்பை, அருளைப் போதிக்கவே கடவுள் நம்பிக்கையும், சமயச் சார்பும் தேவைப்படுகின்றன. வாழ்க்கைக்குத் தேவையுள்ள பொருள்களான உணவு உடை உறையுள் போன்றவற்றை முயற்சியால் பெறுவது போலவே, இம்மைக்கும் மறுமைக்கும் முக்கியமாக வேண்டப்படும் கடவுள் அருளை முயன்று பெறவேண்டும். அருள் வெள்ளத்தால் அகத்துய்மை உண்டாகும். சிலரது மனங்களிலே சிங்கம், புலி, கரடி போன்றவைகள் வாழ்கின்றன. அவைகளை விரட்டி, ஆண்டவனின் அருள் வெள்ளம் பெருக்க வேண்டும். புறத்தூய்மைக்கு, பொருள் இன்றியமையாதது போல அகத்துாய்மைக்கு அருள் இன்றியமையாதது இதனை நாம் கருத்தில் கொண்டு கடவுளை வழிபடும் மனப்பழக்கத்தினை உண்டாக்கவேண்டும்.
கடவுளை எப்படி வணங்குவது? இது ஒரு பிரச்சனை. வழிபாட்டிற்குச் சிந்தனை தேவை. சிந்தனையை ஒரு நிலைப்படுத்த ஒரு சாதனம் வேண்டும். அச்சாதனமே தெய்வ உருவங்கள். உருவ வழிபாட்டின் சிறப்பால் உள்ளுறு சோதியைக் காணமுடியும். தெய்வ உருவங்கள் கற்களிலே செதுக்கப்படுகின்றன. கல்லைக் கலையாக்கி கடவுளைக் கண்டு வணங்கியவர்கள் நாம். நான் பேசிக் கொண்டிருப்பதைப் பெரிதாக்கி உங்கள் காதுகளில் செலுத்துகிறதே இந்த ஒலி பெருக்கி, இதன் ஆரம்பநிலை வெறும் இரும்புதான். வெறும் இரும்பு தட்டி நிமிர்த்திப் பயனுள்ளதாக்கப் பட்டிருக்கிறது. அதுபோல் வெறும் கல், சிற்பியின் சிந்தனைச் சிறப்பாலும்-கற்பனை வளத்தாலும்-கலைத்துடிப்பாலும் கடவுட்கோலம் எடுத்திருக்கிறது. கடவுள் உருவங்களைக் கடவுளாக எண்ணும்நிலை வளர வேண்டும்.
செவிடனுக்குக் காது கேட்பதில்லை. அதைப்போல் நெஞ்சம் செவிடாக இருப்பவனுக்கு இறைப்பற்று ஏற்படுவதில்லை. நெஞ்சச் செவிடு நீங்க நெஞ்சத்தால் விரிந்தவர்கள் உதவவேண்டும்.
இறைவனை வழிபடும் முறையிலே உயிர்ப்பலி மிகவும் கொடுமையானது. உயிர்ப்பலியை ஆண்டவன் விரும்புவதாக எண்ணக்கூடாது. தனது உயிர்களை வருத்தி அழிக்க ஆண்டவன் விரும்புவதில்லை. சிலர் இறைப்பற்று என்றுகூறி, ஆடு, கோழிகளைப் பலியிடுகிறார்கள். அது தவறு. இத்தகைய பாதகச் செயல் பரமன் சந்நிதானத்தில் நடவாது தடுக்கப்பட வேண்டும். பாரம்பரியமாக இருந்துவந்த வழக்கம் என்பதால் உயிர்ப்பலியைத் தடுக்கச் சிலர் மறுக்கிறார்கள். அறிவு விரியாத அந்தக்காலத்து விவகாரங்கள் அனைத்தும் அறிவு விரிந்த-நாகரிகம் வளர்ந்த இந்தக் காலத்தில் நடைபெறுவது நல்லதல்ல.
நமது காலிலே ஒரு ஆணி குத்தினால் “ஆ” என்று அலறித் துடிக்கிறோம்! ஆட்டை வெட்டும் பொழுது அது என்ன பாடுபடும். ஆன்மாக்களுக்கு அருள்சுரக்கும் ஆண்டவன் அதைப் பொறுப்பானா?
எனவே, மனித வாழ்வின் குறிக்கோள் உணர்ந்து ஆன்ம சுத்தியுடன் அருளியல் வாழ்வு வாழ்ந்து பயனடைய முன்வர வேண்டும். இந்தப் பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்க கருணைக்கடலான, இறைவனின் ‘தாள்’ என்னும் தெப்பத்தில் ஏறிக்கொள்ளவேண்டும். “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்” என்கிறார் வள்ளுவர்.
உருவங்களைக் கடவுளாகவே கருதி வழிபட வேண்டும். இறைவனிட்ம் உள்ளம் ஒன்றி நிற்க, கடவுளைக் காட்டும் உருவம் உண்மையான கடவுளாகக் காணப்படும். கடவுட் கொள்கை உயிர்ப் பலியை வெறுக்கிறது. எல்லா உயிர்களுக்கும் தந்தையான மங்கைபங்கன் சில உயிர்களை வதைத்துப் பலியிடுதலைப் பொறுக்கமாட்டான். பலியிடும் பழக்கம் ஒழிந்து மறையச் சைவ உலகம் தீவிரமாக முனைதல் வேண்டும் என்று கூறி வாழ்த்தி விடை பெறுகிறோம்.
மணிபல்லவத்தில் (நயினாதீவு)
இன்று அறிவியலார் மின்னல் வேகத்தில் முன்னேறிச் செல்கிறார்கள், புதியன கண்டு - அவற்றிற்கு அளவுகடந்த வரவேற்பளிக்கின்றார்கள். பழமையை வெறுக்கின்றார்கள். இன்றைய உலகம், புதுமையுமற்று - பழமையுமற்று இரண்டுங் கெட்ட நிலையிலே நிற்கிறது. மேலை நாட்டில் புதியன வளர்ந்து வருகின்றன. ஐன்ஸ்டீன் கருத்து பைபிளை விலக்கிச் செல்கின்றது. பைபிள் புதியவற்றிற்கு மாறுபட்டபோதும் உயிர் வாழ்கின்றது; அதன் பழமை பாராட்டப்படுகின்றது. நம்மவர் புதியன கண்டு நமது பழைய சமயச் செய்திகளை, நையாண்டி செய்கிறார்கள். நம்மிடையே பழமை வளர வில்லை; சடங்குகளே வளர்கின்றன. அவற்றின் பலன் நம்மைக் கிட்டுவதில்லை. ‘முள் நகராத மணிப்பொறிபோலச் சமயச் சடங்குகள் நடைபெறுகின்றன. பெண்டுலம் ஆடினாலன்றோ முள் நகரும். நெஞ்சைத் தொட்டாலன்றோ சமயச் சடங்குகளால் பலன் விளையும்.’ ஆலயமணிகள் நெஞ்சை அசைத்து விடவேண்டும். சோற்றால் செங்குருதியை ஆக்குவதுபோலக் கோயில் சடங்குகளால் இளைஞர் உள்ளங்களை அசைத்து விடவேண்டும். பொருளாதார மேடுபள்ளங்கள் சமயத்தை வெறுக்கச் செய்கின்றன. சமயம் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு ஆலயங்களிலே சிறைப்பட்டுக் கிடக்கின்றது. பொருள்வளங் கொழிக்கும் நாடுகள் புண்ணிய பூமிகளா? அங்குப் பிறந்திருப்போர் அத்துணை பேரும் புண்ணியவான்களா? அங்குள்ள மக்கள் மற்றவர்களின் அல்லலைப் போக்கிப் பொருளாதாரத்தைச் சமப்படுத் தலைக் கண்ணாரக் காண்கின்றோம்.
சட்டம் புறத்தே நடைமுறையைக் சீர்ப்படுத்த உதவுமேயன்றி மனத்தை மாற்றாது. சட்டத்தால் மனத்தை மாற்ற இயலாது. நீதியாலேதான் மனமாற்றத்தைச் செய்யமுடியும். சமய வாழ்வு பெற்று, இல்லார்க்கு இரங்கித் தொண்டு புரிந்து வாழ்ந்தால் இம்மையே சோறும் கூறையும் பெறலாம். கோயிலிலே அன்பின் அடிப்படையில் சடங்குகள் நடந்து உள்ளங்களைத் தொடவேண்டும். ஆண்டவனின் திருக்கோலக் காட்சியைக்கண்டு கசிந்து கண்ணீர் மல்கவேண்டும். இவ்வாறு ஆலயங்களில்லாவிடில் அவற்றை விட்டு, உள்ளம் கவரும் கடலையும் - மலையையும் கைதொழுவோம், “மூரி முழங்கொலி நீரானான் கண்டாய்” என அப்பரடிகள் தேவாரம் இதற்கு வழி வகுத்துத் தருகிறது.
எறும்பு, ஈ, யானை, எந்த ஆகமப்படி பூசை புரிந்தன. வழிபாடு நமக்காகவே நடைபெறுகின்றது. நாம் உய்தி பெறவே இறை வழிபாடு எழுந்தது. “வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்” என மணிவாசகர் இதனை வற்புறுத்துகிறார். காற்றை நாம் சுவாசிப்பதனால் காற்றுக்கு என்னபயன்? நாம்தான் பயன் பெறுகிறோம்? சோற்றை நாம் உண்பதால் சோற்றுக்கு என்னபயன்? நாம் தான் பயனடைகிறோம். இவற்றைப்போலவே கடவுளை வணங்குவதால் நாமே பயன் பெறுகின்றோம். உயர்ந்த எண்ணத்தால் வரும் பரம்பரையே குலமாகும். இக்குலத்தை நாம் விரும்புகின்றோம். அதைக்கூட உயர் நிலைப்பட்டோர் கை விடுவர். ஆதலால் எண்ணம் உயர்ந்ததாகவும் தூயதாகவும் இருப்பதற்குக் கடவுள் வழிச் செல்லல் இன்றியமையாதது.
மனிதகுலம் சுதந்திரமாகச் சுற்றிச் சுழன்று திரிய ஆசைப்படுவதில் வியப்பில்லை. எல்லா இனத்தவருடனும் இணைந்து - பிணைந்து வாழ்வதிலும், உரையாடுவதிலும் உவகை கொள்கிறது மனித இனம். இந்தச் சுதந்திர நோக்குக்கும் முட்டுக் கட்டையாக - தடையாக எது குறுக்கிடுகிறதோ அதை அகற்றி அழிக்கவேண்டுமென்ற வேட்கை உண்டா கின்றது. மனித மேம்பாட்டுக்கும், சமுதாய உயர்வுக்கும் உகந்த சில கருத்துக்களையும் நடை முறைகளையும் யாராவது தடுத்தார்களானால் அத்தடையை நீக்க முயற்சிப்பது தன் கடமையென மனிதன் காலப்போக்கில் உணர்ந்து வந்திருக்கிறான். அத்தகைய உணர்ச்சியின் உந்தல்தான் சுதந்திரப் பற்றை அவனுக்குக் கொடுத்திருக்கிறது. தமிழினம் சுதந்திரத்தைப் பேணிக்காப்பதில் முன்னின்று உழைத்திருக்கிறது. விரிந்த - விசாலமான மனப்பான்மை தமிழினத்துக்கு இருந்தது போலவே, சுதந்திரம் காக்கும் உணர்வும் இருந்தது. நீங்கள் வாழும் ஊர் எவ்விடத்திலுள்ளது? என்று அன்று கேட்டால் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பதில்தான் வரும். அவ்வளவு தூரத்துக்கு அகன்ற நெஞ்சு அப்போதிருந்தது. தன்னைப்போல் பிறரை நேசித்து, தன் நாட்டைப்போலப் பிறநாட்டையும் எண்ணி எல்லாரும் ஒரு குலம், எல்லாரும் ஓர் இனம் என்றபடி வாழ்தல்தான் தலையாய வாழ்வு என்று கருதியவர்கள் அன்றையத் தமிழர்கள்.
அன்றையத் தமிழர் பெரியோரைப் பேணினர் - சுற்றத்தைத் தழுவினர். இரந்தவர்க்கு ஈந்தனர். இன்னல் கண்டவிடத்து இரங்கினர். எல்லாவற்றுக்கும் சிகரமாகத் தமக்கு மேலான சக்திக்கு மதிப்பளித்து மதச்சார்புடைய மகிழ்ச்சி வாழ்வு வாழ்ந்தனர். கடவுள் நம்பிக்கையும், மதச் சார்பும் மனிதனுக்கு இன்றியமையாதனவென்று கருதி வாழ்ந்த்னர் உள்ளத்தூய்மைக்கும், உயர்ந்த வாழ்வுக்கும் உவகை நிலைக்கும் உள்ளுறுசோதியை, உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை நம்பினர். நலம் பெற்றனர். யாருக்கும் அஞ்சாத நெஞ்சுரம், மதத்தைச் சார்ந்த மக்களுக்கு இருந்தது. தலைபோகின்ற நிலைவந்தாலும் கடவுளைத் தவிர வேறெவர்க்கும் தலைகுனியாத தருக்கு அப்போதிருந்தது. நாங்கள் எவருக்கும் குடிமக்களல்லர். எங்களை எமனும் எதுவும் செய்துவிடமுடியாது; நரகத்துக்கு நாம் செல்லப் போவதில்லை. எந்தத் துன்பமும் மக்களை எட்டிப்பாராது. இதனாலே நாம் இன்புற்றுச் செம்மாந்து உலவுவோம்; பிணி துன்பம் இல்லாத பேரின்பவாழ்வு எங்களுடையது. நாங்கள். ஒரேயொருவருக்குத்தான் பணிந்தவர்கள். அவரும் தமக்கு மேலாக யாராவது ஒருவரை வைத்திருப்பவரல்லர்-அவர் எவருக்கும் குடிமகன் அல்லர்; அவருக்கே எமது பணிவு என்றுமுண்டு என்றார் அப்பரடிகள். “நாமார்க்கும் குடியல்லோம்” என்பதே அத்திருப்பாடல்.
அப்பரது சுதந்திர தாகமும் உரிமை மனப்பான்மையும் ஓர்ந்து உணரத்தக்கவை. சுதந்திர தாகத்தை அப்பர் வெளிப்படுத்திய முறையினை நாம் மறந்துவிடலாகாது. அப்பரடிகளின் அசைக்கமுடியாத கடவுள் நம்பிக்கைதான் பல்லவ மன்னனின் கட்டளையைத் துச்சமென எண்ண வைத்தது. கடவுள் நம்பிக்கையுடைய சமயசீலர்கள் எதற்கும் பயந்து விடுவதில்லை. அவர்களின் சமயச்சார்புடைய வாழ்வு அவர்களை அல்லலுக்குள் ஆழ்த்துவதுமில்லை என்பதை அப்பர் திருவாக்கால் நாமறிகிறோம். சுதந்திர உணர்ச்சிக்கு வித்துான்றிய முதல் வித்தகரே. அப்பரடிகள்தான். அவரை அடியொற்றித்தான் ஏனைய கவிஞர்கள் சுதந்திர உணர்ச்சிக்குக் கவிதையால் உதவினார்கள். நமது தலைமுறை யிற்றோன்றிய பாரதிகூட அப்பரது அடிச்சுவட்டைப் பின்பற்றியமை பாராட்டி மகிழத்தக்கது.
“பூமியில் எவர்க்குமினி யடிமைசெய்யோம். பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று பாடியமை பாரதியின் புலமை வெளிப்பாட்டைக் காட்டுவதோடு அப்பரடிகளின் அருட்பாடலையும் நினைவூட்டி நிற்கிறது.
ஓரினமாக ஒன்றி வாழ்ந்த வாழ்வில் எப்படியோ சாதி முறை நுழைந்து விட்டது. இச் சாதீய நுழைவு சிலர் வாழவும், பலர் விழவும், சிலர் பெருக்கவும், பலர் வாடவும், சிலர் சிரிக்கவும், பலர் அழவும், உதவிசெய்தது. தெளிவாகச் சொன்னால் சிலருடைய வளமான வாழ்வுக்குச் சாதி உறு துணையாய்-ஊன்றுகோலாய் உதவியது. பிரித்து வைத்து இன்பம் கண்டவர்களும், தள்ளிவைத்துச் சுகம் அனுபவித்தவர்களும் சாதீய நெருப்புக்கு நெய்வார்த்தவர்கள். இந்தச் சாதீய நெருப்பானது சமயத்தின் தலையாய தத்துவங்களையும் மாசு படுத்திவிட்டது. நமது சைவசமயத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும் இச்சாதீய நெருப்பால் தகிக்கப்பட்டு விட்டன. ஆண்டவனின் குழந்தைகள் ஆண்டவனின் விருப்பத்திற்கு விரோதமாகத் தள்ளியும், விலக்கியும் வைக்கப் பட்டார்கள். இதனால் நமது சமயத்திற்குத் தளர்ச்சியும், வீழ்ச்சியும் வரலாயின. இவற்றையெல்லாம் நல்லபடி சீராக்கி உயர்ந்ததொரு தொண்டினை உருவாக்குதல் சைவ உலகத்தினர் கடன் எனக்காட்டி - வாழ்த்தி-விடைபெற ஆசைப்படுகின்றோம்.
நீர் கொழும்பில்
உயிரினம் இன்பத்தை நாடி ஏங்குகிறது. வெறும் சிற்றின்பங்களை அனுபவித்து இன்பப்படுவதில் நிறைவு பெறுகின்றது. இன்பம் என்று கருதி அனுபவிக்கும் சிலவற்றால் துன்பம் நேரிடுவதுமுண்டு. எதிர்வரும் துன்பத்தைப் பற்றி எண்ணிப்பார்க்க உயிரினங்கள் நினைப்பதில்லை. எண்ணாமல் செயல் நடைபெறுகின்றது. சிற்றின்ப வேட்கை பெருந்துயரில் கொண்டுபோய் நிறுத்துகின்றது. மனிதன் மற்றெல்லா உயிரினங்களிலும் பார்க்க உயர்ந்தவனாக மதிக்கப்படுகிறான். உடைமையைப் பொறுத்தே உணர்ச்சியுள்ளது. பணப் பெருக்குடையவர்களும், கல்விச் சிறப்புடையவர்களும் செல்வாக்குச் சிறப்புடையவர்களும் பதவியுயர் வுடையவர்களும் உயர்த்திப் பேசப்படுவதை நாம் உலகியலில் காணமுடிகிறது.
பொதுவாக-மனித இனம் சிறப்பாக மதிக்கப்படுவதற்கு அதன் சித்தனா சக்திதான் காரணம். பகுத்தறிந்து, பண்புடன் வாழத் தெரிந்த இனம் மனித இனம். தீயதை விலக்கி நல்லதை நாடி, அறத்தைப் போற்றி, மறத்தைக் கடிந்து, அன்பை நாடி, வன்பை அழித்து, அறிவைப் பேணி மடமையை ஒழித்துதுன்பம் நீக்கி-இன்பமளித்து வாழ மனிதனுக்கு நெறிகாட்டுவது அவனது சிந்தனைச் சிறப்புத்தான்.
சிந்தனைச் சிறப்புமிக்க மனிதகுலத்தில் பண்டு முதலே கற்றோரும், மற்றோரும் போற்றுமளவுக்கு வாழ்ந்து, வாழ்க்கை நெறிகண்ட இனம் நமது தமிழினம். மனிதன் கண்ட கண்ட படி புலனைச் செலுத்திச் சீரழிந்து கொண்டிருந்த காலத்தில் வாழ்வைப் பற்றிச் சிந்தித்து கொண்டிருந்த காலத்தில் வாழ்வைப் பற்றிச் சிந்தித்துச் சிறப்பு மிகுந்த தத்துவங்களை வாரி வழங்கிய இனம் தமிழினம். காலத்தாலும் கருத்தாலும் மூத்த உலக வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் புனிதமான ஒருநிலையைப்பெற்ற பெரும்பேறு நமக்கு உண்டு. ஆனால் இத்தகு தகைமையை நினைந்து நினைந்து இறும்பூதடைவதில் காலத்தைப் போக்கியதாலேதான் இன்றுள்ள இழிநிலை நமக்கு வந்துள்ளது. முந்தையத் தமிழன் வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்தான்; இன்றுள்ள நாம் வாழச் சிந்திக்கின்றோம். எப்படியாவது வாழ்ந்து இந்த வாழ்க்கையை முடித்து விடுவோம் என்று நினைக்கிறோமே தவிர எப்படி வாழவேண்டும் என்று நினைக்கின்றோமில்லை. குறிக்கோள்களோடும், கொள்கைகளோடும் வாழ்வை வரையறுத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ எண்ணுகிறோம் இல்லை. இவ்வாறு எண்ணிய இனத்தின் வழித் தோன்றல்கள்-எப்படியாவது வாழ எண்ணாது வாழ முனைவது வருத்தத்தைத் தருகிறது. எண்ணிச் சிந்தித்து, வாழும் சமுதாயத்தை உருவாக்க நாம் அவாவுற வேண்டும். நமது மொழிவழி வந்த நாகரிகத்தைப் பேணிக்காக்க நாம் விரும்புதல் வரவேண்டும். பேரின்ப நிலைபெற உழைக்கும் உயர்ந்த உள்ளங்களை உருவாக்க வேண்டும். எங்கும் எல்லா உயிர்களிடத்தும் எப்போதும் அன்பு செலுத்தி, அறத்தால் வருவதே இன்பம் என்று கருதி அருள் வாழ்வு வாழவேண்டும்.
எங்கும் அன்பைச் செலுத்த மனத்திற்குப் பக்குவம் வேண்டும். மனோபக்குவம் இல்லாது அன்பைச் செலுத்துவ தென்பது முடியாத காரியம். அப்படி அன்பு செலுத்துவதாக இருந்தாலும் அது வெறும் நடிப்பாகவே முடியும். நிறைந்த நடிப்பு வாழ்க்கை வாழ்வதிலும் குறைந்த நல்ல வாழ்க்கை வாழ்வது சிறப்பு. மனத்தைப் பக்குவப்படுத்துவதற்கு மனத்தில் உள்ள குழப்பங்கள் குறையவேண்டும். சினம் பொறாமை பொச்சரிப்பு சந்தேகம் சபலம் முதலியன நீங்கத் தொடங்கினால் மனோபாவத்திற்கு வேண்டிய அடித்தளம் அரும்ப ஆரம்பிக்கும். மனோபக்குவ அடித்தளத்தைப் பெற ஒரேயொருவழிதான் உண்டு. அதுவே வழிபாடு. வழிபாடு மனத்தை நல்வழியில் ஆற்றுப்படுத்த எழுந்த சாதனம். இலட்சியமற்று இங்குமங்கும் அலைந்தலைந்து அல்லலுறும் ஆன்மாவை உருக்கிக் கசிய வைத்து நன்னெறிப்பட வைக்கும் பேராற்றல் வழிபாட்டிற்குண்டு.
இறைவழிபாடு இன்பங்கள் எல்லாவற்றிற்கும் மேலான இன்பத்தை-பேரின்பத்தை நல்குகின்றது. கவலை தோய்ந்த கருத்தைக் களிப்படைய வைக்கிறது. பைத்திய நிலையை பக்குவப்படுத்திப் பயனடையச் செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாகச் சிரித்து வாழவும், கொடுத்து மகிழவும் போதிக்கிறது. சிரிப்பதற்காக மனிதன் பல துறைகளை நாடியோடித் திரிகிறான். நாடகத்திலும் திரைப்படத்திலும் கால்கடுக்க நின்று ஒன்றேகால் ரூபாய்க்கு டிக்கட் வாங்கிச் சிரிப்பை அனுபவிக்கிறான். சினிமாவிலே டணால் தங்கவேலுவின், சிரிப்பை - இராதாவின் சிரிப்பைக் கண்டு ஆனந்திக்க மழையிலும் வெய்யிலிலும் நின்று உழல்பவர்கள் எத்தனைபேர்! காசில்லாமல், செலவில்லாமல் கருத்தைக் கனிய வைத்துச் சிரிப்பிலாழ்த்திப் பேரின்பத்தை நல்கும் வழிபாட்டு நெறியினைப் பின்பற்ற மனிதராகிய நாம் நினைக்கவேண்டும்.
உலகியலிலே சிரிப்பதற்கு எவ்வளவோ நிகழ்ச்சிகள் உண்டு. நாள்தோறும் நடைபெறும் சம்பவங்கள் நம்மைக் கைகொட்டி நகையாட வைக்கின்றன. நம்மிற்சிலர் உலகத்தைப் பார்த்துச் சிரிக்கத் தெரியாதிருக்கிறோம். தலைசிறந்த தத்துவப் பேராசிரியர்கள் உலக வாழ்க்கையிலிருந்தே சிரிப்புக் கிடமானவைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் காட்டிய சிரிப்புக்கிடமான நிகழ்ச்சிகள் சிந்தனைக்கும் விருந்தளிக்கின்றன. வாழ்வைப் பார்த்து - வாழ்க்கையைப் பார்த்துச் சிந்தித்த வள்ளுவப் பெருந்தகை ஒரு தத்துவக் குயில். அவரொரு நிகழ்ச்சியை நமக்குக் காட்டி நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்வதைப் பாருங்கள்.
ஒரு கடைவீதியிலே ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கிறான். தேநீர்கடை ஒன்று குறுக்கிடுகிறது. வைத்திருந்த பணத்துக்கு ஏதோ பலகாரம் வாங்குகிறான். வழிநெடுக அதைக் கொறித்துத் தின்றுகொண்டே போகிறான். இடையிலே வள்ளுவர் எதிர்ப்படுகிறார். அவர் அவனை மறித்து “தம்பீ! உனக்கு உயிர் இருக்கிறதா?” என்று கேட்டார். அவன் திகைத்து-வெலவெலத்து-வேர்த்துக் கொட்ட விழித்தபடி நின்றான். சற்று நேரம் பொறுத்து “என்ன ஐயா கேள்வி இது? நான் நடக்கிறேன். மூச்சு விடுகிறேன். முறுக்குத் தின்கிறேன். என்னைப் பார்த்து-உனக்கு உயிர் உண்டா? என்று கேட்கிறீர்களே” என்றான். “சரியப்பா நீ அந்தக் கடையிலே முறுக்கு வாங்கியபொழுது, இரண்டு வேளையாகச் சாப்பிடாமல் வாடி வதங்கிய நிலையில் நின்றானே ஓர் ஏழை! நின்றதோடல்லாமல் பசிக்கிறது என்றும் கெஞ்சிக் கேட்டானே! நீ வைத்திருந்த முறுக்கில் பாதித் துண்டையாவது கொடுத்திருக்கக் கூடாதா? நீ அப்படிக் கொடுக்காது வந்ததுதான் என்னைச் சந்தேகிக்க வைத்தது” என்றார் வள்ளுவர். இதிலுள்ள நகைச் சுவையையும் பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பண்பையும் நாம் நினைத்து நினைத்துச் சிரிப்பதோடு சிந்திக்கவும் வேண்டும்.
நமது “சிந்தனை அருளார்ந்த சிந்தனையாக - அன்பு வழிச் சிந்தனையாக மிளிர வேண்டும். அப்பொழுதுதான் நமது அகத்திலேயுள்ள ஆத்திரம் கொதிப்புப் போன்றவை அடங்கி-ஆன்மீக வாழ்வுபெற வழி ஏற்படும். அகத்தின் ஆத்திரமும், பொறாமை எரிச்சல் போன்ற தீய உணர்வுகளும் களையப்படவேண்டும். உலையிலே வெந்து கொண்டிருக்கும் அரிசி பொங்கினால், ஒரு கரண்டி மூலம் கிண்டிக் கிளறி விட்டால் அவ்வரிசி நன்றாக நின்று வேகும். இன்றேல் அரிசி வேக உதவும் நீர் வெளியாவதோடு, சோறாக்க உதவிய நெருப்பையும் அணைத்துவிடும். அதே போல மனிதனின் ஆத்திர உணர்ச்சி பொங்கி வராதபடி தடுக்கப்படல் வேண்டும். இன்றேல் ஆத்திரத்தால் அறிவு மங்க-செயலாற்றத் தகுந்த ஆற்றலும் அழிந்து-காரிய சாதனைக்குரிய அடிப்படைச் சூழலும் கெட்டுவிடும்.
ஆகவே! இனங்களில் உயர்ந்து சிறந்து போற்றுதலுக் குள்ளாகியிருக்கும் மனித இனம் எண்ணிச் சிந்தித்து அருளார்ந்த வாழ்வுவாழ வேட்கை கொள்ளவேண்டும். அன்பு வாழ்வுக்கும் அறவாழ்வுக்கும் வழிவகுத்துத்தர வழிபாடு சாலச் சிறந்தது. வழிபாட்டின் மூலம் அமைதியையும் பேரின்பப் பேற்றையும் பெற்று மனிதரில் மாணிக்கங்களாகத் திகழமுடியும். உலக உத்தமர் காந்தியடிகள்கூட வழிபாட்டினாலும் வழிபாட்டை ஒட்டிய சிந்தனைகளினாலும் சிறப்புற்றார்.
உலகியலில் சிந்தனைக்கு வித்திடக் கூடிய சிரிப்புகளை அனுபவித்து ஆன்ம நேயத் தொண்டுகளைச் செய்ய முனைய வேண்டும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பு நம் தமிழினத்துக்குப் பழமையானது. அது தொன்றுதொட்டு வழி வழி வந்த ஒரு தன்னிகரற்ற தத்துவம். அந்தத் தத்துவத்துக்கு மதிப்பளித்து, என்றும் அன்பாய் இன்பமாய் வாழ வாழ்த்தி விடைபெறுகிறோம். வணக்கம்.
யாழ்ப்பாணத்தில்
சமய வரலாறுகளைப் பலர் பலவிதமாகப் பார்க்கிறார்கள். வாழ்வுக்கு நெறியைக் காட்ட வேண்டிய சமய அமைப்புகள் தளர்ந்ததாலும், சோம்பியதாலும் ஒருவித மயக்கம் உண்டாகியிருக்கிறது. ஆண்டவன் அருள் பாடும் இன்றைய ஆத்திகர்கள் சிலரிடமிருந்து சமயத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டம் வந்திருக்கிறது. சமயத்தைப் பற்றிய ஐயப்பாடு நமது சமுதாயத்தில் எப்படி எழுந்தது என்பதைச் சிந்திக்க வேண்டும். சமயச் சார்புடைய புராணங்கள் எத்தகைய நோக்கத்தோடு தோன்றின என்பதையும் எண்ண வேண்டும். இத்தகைய சிந்தனைகளினாலும், எண்ணங்களினாலும் முடிவான கருத்தொன்று பிறக்க வழியுண்டு. அந்த முடிவான கருத்தின் வழி சமயச் சார்புடைய சமுதாயத்தைப் படைக்க உழைக்க வேண்டும்.
சமுதாயப் பசியை, நாட்டுச் சிக்கல்களை எண்ணிய படியே புராணங்களை அணுக வேண்டும். நாம் பெரிய புராணத்தை அத்தகைய எண்ணங்களோடுதான் பார்க்கிறோம். பெரிய புராண அடிகளை ஆழச் சிந்தித்தால் மனித விடுதலைப் போராட்டம் நன்கு புலனாகும், மண்ணகத்தை விண்ணகமாக்க எழுந்த காவியமே திருத்தொண்டர் புராணம். அரசியல் வரலாற்றையும், சமுதாய வரலாற்றையும் நாம் அதில் காணமுடிகிறது. மனிதவாழ்வின் எல்லாத் துறைகளையும், அலசி ஆராய்ந்து செய்திகளை வெளியிட்ட வாழ்வு நூல் பெரிய புராணம். பெருமான், அர்ச்சனை பூசைகளை ஏற்றுக் கொண்டிருப்பவர் அல்லர். அவர் அடியார்க்கு வேலையாளானவர். தூதுவரானவர். இரவோடு இரவாகத் தன் தோழனுக்காக ஒரு பெண்ணிடம் தூதுசென்றிருக்கிறார். இத்தகைய செய்திகள் பெரிய புராணம் வாழ்க்கையை ஒட்டியது-வாழ்வோடு பிணைந்தது என்பதைக் காட்டி நிற்கின்றன.
மனித இனத்தை வறுமையினின்றும் மீட்டு ஈடிலா இன்ப வாழ்வு வாழ வழிகாட்ட வேண்டுமென்ற ஒப்பில்லா உயர்ந்த எண்ணத்தைப் பெரிய புராணம் தருகின்றது. “வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பி” என்கின்றது சித்தியார். வறுமை வாழ்வைச் சிதைத்து, மாற்றம் செய்கின்றது. வறுமையால் வரும் சிறுமையை விலக்கவேண்டும். மன்றுளார் அடியார் வரலாறான பெரிய புராணம் உணர்ச்சி, குரோதம், ஆத்திரம் போன்றவைகளை விலக்கி விட்டுப் படிக்க வேண்டிய ஒரு தெய்வ நூல். செழுமையான நிலத்தில்தான் பயிர் நன்றாகச் செழித்து வளரும்; உள்ளத்தின் செழுமையில்தான் உண்மைத் தத்துவங்களின் வளர்ச்சி தங்கிக் கிடக்கின்றது.
மன்றுளார் அடியார்கள் பொது மக்களுக்கு உரியவர்கள்: பொது வாழ்வைப் பற்றிச் சிந்தித்தவர்கள்; எப்பொழுதும் எம் பெருமானை எண்ணியபடி எவர்க்கும் இன்னல் களைபவர்கள்; மன்றத்து மக்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கவே தாங்கள் பிறந்திருப்பதாக எண்ணிச் செயல்பட்டவர்கள். இறைவனின் திருவடிகளே செல்வம் எண்றெண்ணி வாழ்ந்தவர்கள். கேடும் ஆக்கமும் கெட்ட திருவினால் அவர்கள் நன்மையையும் தீமையும் ஒன்றாகவே-ஒரே தன்மை உடையனவாகவே கருதினார்கள்; ஓட்டையும் செம்பொன்னையும் ஒக்கவே நோக்கினார்கள்; வீடும் வேண்டாது, கூடும் அன்பினிற் கும்பிடுதலாகிய ஒரு செயல் கிடைத்தால் போதுமானது என்று அவர்களது நெஞ்சங்கள் ஏங்கின! ஆனந்த நடனமாடும் ஆண்டவனது குனித்த புருவத்தையும் பனித்த சடையையும் பவளமேனியையும் அம்மேனியில் திருநீறு அணிந்த காட்சியையும் பாதம் தூக்கி ஆடும் அற்புத அழகையும் காணவே-மானிடப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே என்றார்கள். இறைவனை எட்டத்தில் வைத்து ஏதோ வாழ்வோடு பிணைப்பில்லாத வாழ்த்துப் பொருளாக்கிக் கோவில்களிலும் குருக்கள்மாரின் சமீபத்திலும்தான் கடவுளை வணங்க வேண்டுமென்று கருதுகிற சமுதாயத்துக்கு நல்லதொரு விருப்புணர்வை நமது நாயன்மார்கள் கொடுக்கிறார்கள். பொன்னும் மெய்ப்பொருளும் தந்து போகமும் திருவும் புணர்ப்பவராக நமது கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் நம்மவர்களிடையே தோன்ற மன்றுளார் அடியார் பாடுபட்டுழைத்தார்கள். அவர்களது வாழ்க்கை முறையிலேயே-தொண்டு தெய்வத் தன்மை வாய்ந்தது என்றும்-தொண்டலாது உயிர்க்கு ஊதியம் இல்லை என்றும் நாம் அறியக்கூடியவையாயிருக்கின்றன.
தமிழர் வாழ்வு இசையோடு இணைந்தது. ஏழிசையாக அவ்விசைகளின் பயனாக இறைவனைக் கண்டவர்கள் தமிழர்கள். இயற்கையை வருணித்து அதன்வழி ஆண்டவனைக் கண்டு வணங்கிய இனமும் தமிழினந்தான். இத்தகைய தமிழ் நிலை சமணர்களது குறுக்கீட்டால் பிறழக் கூடாதெனக் கருதியே, ஞானசம்பந்தர் தமிழர் நாகரிகம் காக்கப் புறப்பட்டார். தமிழர் நாகரிகம் பேணப்பட வேண்டியே சம்பந்தர் சணர்களோடு வாதிட்டார்-வென்றார். இந்த வாதத்தைச் சமயச் சண்டையாக எண்ணி விடுதல் கூடாது. சண்டைவேறு பாதுகாக்க எடுக்கும் முயற்சி வேறு. இயற்கையோடியைந்த வாழ்வைத் தொல்காப்பியம் கூறுகின்றது. தமிழர்கள் வாழ்வு இயற்கையோடியைந்தது. இந்த இயற்கை வாழ்வைச் சமணர்கள் மாற்றியமைக்க எத்தனித்தனர். அப்போதுதான் அப்பரும் சம்பந்தரும் ஒரு நிலைமை மாற்றத்தைக் கொணர விழைந்தனர். பண்ணோடு இசை கேளாத சமணர்களின் போக்கை மாற்றியமைக்கும் பொறுப்பு சம்பந்தருக்குக் கிடைத்தது. சமணர்கள் மலரிடை மணம் நுகரார் என்றனர். அப்பரும் சம்பந்தரும் இதற்கொரு மாற்றத்தைத் தேட வேண்டியிருந்தது. சம்பந்தர் தாம் பாடும் தேவாரங்களில் இயற்கையைப்பற்றி எடுத்தியம்பினார். மேல்நாட்டுக் கவிஞர்தான் இயற்கையை வர்ணித்துப் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள் எனக் கருதுபவர்கள் சம்பந்தர் திருப்பாடல்களை ஒரு முறை படித்து இன்புறுவார்களாக.
சமண-புத்த சமயத்தவர்கள் பெண்மைக்கு மதிப்பளிக்காதவர்கள்-தெளிவாகச் சொன்னால் பெண்ணினத்தை வெறுத்தவர்கள். இந்நிலையிலேதான் ஞானசம்பந்தர் பெண்ணினத்தைப் போற்ற முற்பட்டு இறைவனைப் பெண்ணோடு தொடர்புபடுத்திப்பாடினார். முதலில் பாடியருளிய தேவாரத்திலேயே “தோடுடைய செவியன்” எனப் பாடியிருக்கிறார். “பெண்ணினல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே!” என்றார். மாதொரு பாகனாக நமது மகேஸ் வரனைக்காட்டிப் பெண்ணைப் பெருமைக் குரியவளாக்கினார், சம்பந்தர்.
சமுதாயம் கோவில்தொண்டைப் புறக்கணித்த போது சேக்கிழார் கோவில் தொண்டை வலியுறுத்திப் பாடினார். மனையில் வாழ்ந்த மாதர்களைப் பாடினார். திருவருளை ஏற்று மனை வாழ்வு வாழ வேண்டுமென்பதைக் காட்டவே சுந்தரர் மனைவாழ்வை வாழ்ந்து காட்டினார். சமணத்தைத் தடுத்துத் தமிழ் நாகரிகத்தைக் காத்த மங்கையர்க் கரசியாரை 'மங்கையர்க்குத் தனியரசி எங்கள் குலதெய்வம்' எனத் தொழுகிறார். வேறெவரையும் சேக்கிழார் பெருமான் தெய்வம் என விளம்பவில்லை. மங்கையர்க்கரசியையே கூறியுள்ளார். இவ்வாறாக மன்றுளார் அடியார் பெருமையினைப் பெரிய புராணம் பேசுகிறது. அன்று சமணர்கள் செயலைச் சம்பந்தர் தடுத்திராது போனால் இன்று நாமெல்லாமே கையில் கமண்டலம் ஏந்துபவர்களாய் இருந்திருப்போம்; நமது நாகரிகத்தைக் காப்பாற்றிய நல்லவர்களை நமது குலதெய்வங்களாக நாம் போற்ற வேண்டும்.
வேதம், ஆகமம் போன்றவற்றை ஆராய இப்பொழுது அவகாசம் இல்லை. காலவெள்ளம் ஓடுகிற ஓட்டத்தைப் பார்க்கிற பொழுது, நிம்மதியுடன் இருந்து நீண்ட நேரம் அவற்றை ஆராய முடிவதில்லை. ஆதலால் நம் நாயன்மார்கள் காட்டும் வழிச் சென்று சிறப்புறுவோம்.
அன்பினாலே அம்மையப்பனை அணுகி அணைத்துக் கொள்வோம். கண்ணப்பர்கூட மோகமாய் ஓடிச் சென்று தழுவி மோந்து கொண்டார். சாக்கிய நாயனார் எறிந்த கல்லைக் கூட இறைவன் ஏற்று அருள்புரிந்தார். திருப்பனந்தாளிலே தடாதகைப்பிராட்டியார் கொண்டு சென்ற மாலையை இறைவன் குனிந்து ஏற்றுக்கொண்டார். குங்குலியக்கலயநாயனார் குங்குலியத்தூபம் போட்டார். இவைகளிலிருந்து அன்பின் நெகிழ்ச்சியே ஆண்டவனுக்கு வேண்டப்படுகிறது என்பதை உணரமுடிகிறது. வழிபாட்டிற்குச் சாதி தடையாய் இருக்கக்கூடாது. பசித்தவன் சோறு பெற்றுப் பசி நீங்கி மகிழ்ச்சி நிறைவு கொள்ள வேண்டும். அதுபோலவே கோவிலுக்கு வருகிறவர்களும் அருள் வெள்ளத்தைப் பருகி, ஆன்மதாகம் நீங்கி நிறைவுபெற வேண்டும். அதற்கு மொழிச் சுவரோ, இனச்சுவரோ, சாதிச் சுவரோ தடையாயிருக்கக் கூடாது. அப்பர் சுவாமிகள் கூட “போதோடு நீர் சுமந்தேந்திப் புகுவார்; அவர் பின் புகுவேன்” என்கின்றார். அங்கு சாதியைப் பற்றிய சாயலே இல்லை. சாதி, குலம், பிறப்பு என்னும் சழக்குகளை அறுத்தெறிந்து ஆண்டவன் சந்நிதானத்தில் எல்லோரும் சமமம் என்ற உணர்வினை உண்டாக்க வேண்டும். அவ்வுணர்வினை உண்டாக்கச் சைவர்களாகிய நாம் சமுதாயத்தில் இறங்கி உழைக்க வேண்டும்.
நல்லனவற்றை நினைப்பதிலும் சொல்வதிலும் பார்க்க அவற்றை நடைமுறையில் கொண்டுவர முயற்சிப்பதே மேலானது; அகத்திலே உள்ள தூய்மையும், அன்புப் பெருக்குமே ஆண்டவன் வழிபாட்டிற்கு உகந்தன. இக் காலத்தில் புறத் துய்மையோடு நிறைகொள்கிறார்கள். நீறு பூசி உருத்திராக்கம் தரிப்பவர்கள் சிலரின் பக்கத்தில் நெருங்கினால் துர்நாற்றம் அடிக்கிறது. அகத்திலே தூய்மை இல்லாது, அன்பு இல்லாது திருநீற்றின் வெண்மை போன்ற உள்ளமில்லாது புறத்தை மட்டும் அலங்கரிப்பதில் என்ன பயன்?
நமது சமயம் புனிதத்தோடு தொடர்புடையது. அகமும் புறமும் ஒரு சேரப் புனிதமடையாத தன்மையாலேதான் நமது சமயத்தவர் எண்ணிக்கை நாளடைவிற் குறைகிறது. காந்தத்தோடு கலந்திருக்கும் இரும்பும் காந்தமாகிறது. மின்சாரத்தைத் தொட்ட கம்பியிலே மின்சாரம் ஏறுகிறது. அது போலவே நாமும் இறைவனைத் தொட்டால், நினைத்தால் அவன் அருள்கிட்டும். இறைவன் உருத்தெரியாக் காலத்தே உட்புகுந்து மன்னி இருக்கின்றான். வண்டுகள் மொட்டை ஊதி மலர வைக்கின்றன. அதுபோலவே அடியார்களது இதய மொட்டுக்களை ஊதி மலர வைக்கவேண்டும். திருமடங்கள் அடியார்களது மனமொட்டு மலருமாறு ஊதவும் ஓதவும் வேண்டும். கோவில் என்ற தாய், ஆன்மா என்ற குழந்தைக்கும் தெய்வ மணம் கமழச் செய்ய வேண்டும். வேலி பெரிதல்ல. பயிர்தான் பெரிது; வரப்புப் பெரிதல்ல; பயிர் தான் பெரிது.
ஆகவே, ஆவியோடாக்கை புரை புரை கனிய எம்பெருமானை நாம் வழிபடவேண்டும். நாம் ஆண்டவனை நோக்கிக் கைதொழுதால் அவன் நமது தொழுகையை அறிந்து அருள் பாலிப்பான். திருமுறைக்காலத்துச் சைவ சமய நிலையை உருவாக்கப் பெரியபுராணம் ஒன்றே போதும். நமது சமயவாழ்வோ, சமய அனுபவமோ சேக்கிழார் அளவுக்கு இல்லை. சேக்கிழார் சுந்தரர் வாழ்வை உலக நடைமுறைப்படுத்தினார். இன்று கண்ணப்பர் காலமில்லை. ஆதலால் கண் தேவைப்படாது. தேவைப்படினும் கண்வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். கண்ணப்பர் குருபூசை நாளன்று கண்பார்வை இழந்தவர்களுக்குக் கண்ணாடி வாங்கிக்கொடுக்கலாம். இயற்பகை நாயனார் குரு பூசையின் போது வசதி இல்லாமையினாலே திருமணமாகாதிருக்கும் ஏழைகள் நாலுபேருக்குக் கோவிலிலே திருமணம் செய்து வைத்தாற் போதும் திருக்குறிப்புத் தொண்டர் திருநாளில் ஏழைக்கு உணவுப் பாத்திரம் கொடுக்கலாம்; ஏழை பணக்காரர் என்ற பாகுபாட்டினை மாற்றவேண்டும். பிட்டுக்கு மண் சுமந்தான் என்பதை, மண்சுமந்தான் பிட்டுக்கு என்று மாற்ற வேண்டும். இக்காலத்தவர் பிட்டுக்கு மண்சுமந்த கதையைப் படித்துவிட்டுப் பிட்டை உண்கிறார்களே யொழிய மண்சுமத்தலை நினைப்பதில்லை. எனவே தொண்டை முன்னும் உண்டியைப் பின்னுமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இன்று கிணறு தோண்டல் வீதி அமைத்தல் ஆகிய சிரமமான முயற்சிகளை நாம் மேற்கொள்ளலாம். சுவாமியை வீதிவலமாக எழுந்தருளச் செய்து, கொண்டுபோய் வைத்துப் பிட்டினைத் திருமுன் நிவேதித்துச் சிரமதானத்தின் பின்பு புனிதமான பிரசாதமாக உண்ணலாம். கற்பனைக்கு அப்பாலான வாழ்க்கை அனுபவந்தான் பெரிய புராணம். வான் முகில் வழாதுபெய்து, நீர் வளம்பெருகி, மலிவளம் சுரந்து அரசு அருள்நெறி வழிப்பட்டு இயங்கி, யாதொரு குறையுமின்றி உயிர்கள் வாழ்தலே சாலச் சிறந்ததாகும் எனக்கூறி வாழ்த்தி விடைபெறுகின்றோம். வணக்கம்.
* * *